உறவுகள்
“என் பேரு லீனா. எங்க வீட்டுல இன்னைக்கு கல்யாணம். எங்கக்கா இளவரசிக்கும் மாமா பீட்டருக்கும். ஐயோ, கல்யாணத்துக்கு முன்னாலயே மாமான்னு கூப்பிடவேண்டாமுன்னு அம்மா சொல்லியிருக்கு. பட்டுப் பாவாட சட்டையெல்லாம் போட்டுட்டு அழகாயிருக்கேன்ல? எல்லா கல்யாண வீட்டுக்கும் போகும்போதும் நம்ம வீட்டுல எப்ப இப்டி வரும்னு நெனைப்பேன். இப்ப எங்க வீட்லயே கல்யாணம் எவ்வளவு ஜாலி தெரியுமா. நாந்தான் வாசல்ல நின்னு பன்னீர் தெளிக்கணும்னு சண்ட போட்டு கேட்டு வாங்கிகிட்டேன். கற்கண்டு, எடுத்துக்குங்க.”
“அங்க என்னடி வேடிக்க? ஓ நீங்களா.. தமிழ், நீ போயி அக்காவப் பாரு. ஒன்னக் காணோமேன்னு தேடுனா. நீ இதெல்லாம் பாக்கவேண்டாமின்னு சொன்னேனே கேட்டியா?
ஹலோ.. நீங்க இருக்குறத மறந்துட்டேன். என் பேரு சங்கீதா. கல்யாணப் பொண்ணோட அம்மா. இன்னைக்கு அவள் மனசுக்குப் பிடிச்சபடி, காதலிச்ச மாப்பிள்ளையையே கல்யாணம் பண்ணிக்கப் போறா. எவ்வளவு சந்தோஷம். என் பொண்ணு ஒருத்திக்கு கல்யாணம்.
இந்தக் குடும்ப விவகாரதுல அவர் தலையிடுறதில்ல. அவர் வியாபாரத்தப் பாக்கவே நேரமில்லன்னு நொந்துக்குவார். இவ கல்யாணத்தப் பத்திக் கூட எல்லாம் முடிவு பண்ணப்புறந்தான் அவருக்குச் சொன்னேன். முடிவு பண்ண என்ன இருக்குது? ரெண்டுபேரும் ஒண்ணா வேல பாக்குறாங்க. ஒரே ப்ராஜெக்ட்ல. இவ லீடர். இந்தக் காதல் விவகாரத்தையெல்லாம் அவகிட்டையே கேளுங்க எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு. கல்யாணவீட்டுல வேலைக்காப் பஞ்சம். ஏய் இளவரசி, இவங்களுக்கு ஒன்னோட காதல் கதைய கொஞ்சம் சொல்லேன்.”
“அதுவா? நான் லீட் பண்ணுற ப்ராஜெக்ட்ல இவர அசைன் பண்ணாங்க. ஐ.டிக்கு இவர் புதுசு. அதனால அடிக்கடி சந்தேகம் கேட்பாரு. பல நேரம் திட்டு வாங்குவாரு. கிராமத்துலேர்ந்து வந்தவர்னால இங்லீஷ் அவ்வளவா வராது. இத வச்சி எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க. நான் அவருக்குத் தனி அட்டென்ஷன் தர ஆரம்பிச்சேன். அப்புறம் ப்ராஜெக்ட்ல புரளி கிளம்பிடிச்சு. எங்க ரெண்டுபேரையும் சேத்துவச்சு ஈ மெயிலெல்லாம் ஓடுச்சு. நான் எதையுமே கண்டுக்கல ஆனா இவர் என்கிட்ட பேச ஹெசிட்டேட் பண்ணினாரு. அவரோட வெகுளித்தனமும், கத்துக்கணும் முன்னேறணுங்க்ற ஆர்வமும் என்ன அட்ராக்ட் பண்ணிடுச்சு. அப்புறம் என்ன, புரளியெல்லாம் உண்மையாயிடுச்சு. வீட்டுல, கிராமமாச்சேன்னு யோசிச்சாங்க. நாங்க ஐ.டி ல வேலபாக்குறோம் கிராமத்துக்கு எங்கே போய் செட்டிலாகப்போறோம்னு அம்மாகிட்ட சொல்லி எப்படியோ சம்மதம் வாங்கிட்டேன். அதோ வர்றாறே கிச்சு மாமா அவர்தான் எனக்கு பர்ஸ்ட்லேர்ந்தே சப்போர்ட்.”
“என்னடி கல்யாணப் பொண்ணு இவாகிட்ட நம்மளப்பத்தி என்ன கத விடறே?”
“இந்த கல்யாணம் உங்களாலத்தான் நடக்குதுன்னு சொன்னேன்.”
“நமஸ்க்காரம். நான் கிச்சு. கிச்சுன்னா கிருஷ்ணமூர்த்தி. பொண்ணுக்கு மாமா மொற வேணும். செத்த ஒக்காந்து பேசலாமா? இவ பீட்டர் அம்பிய விரும்புறாங்கிறத யார்கிட்டயுமே சொல்லல்லை. நாங்களும் பொண்ணுக்கு வயசாயிடுத்தேன்னு வரன் தேட ஆரம்பிச்சுட்டோம். ஒரு வரன் ரெம்ப பக்கத்துல வந்துட்டா. இத முடிச்சுரலாம்னு நானும் சங்கீதாவும் முடிவு பண்னிட்டு திரும்பும்போது இவா ரெண்டுபேரும் பைக்குல போயிட்டுருந்ததப் பாத்துட்டோம். யார் அந்த அம்பின்னு காசுவலாத்தான் விசாரிச்சா . அப்புறம்தான் இவ உண்மையச் சொன்னா. சங்கீதாவுக்கு கோபம் வந்துடுத்து.’ ஏண்டி, இவ்வளவு நாளா நாங்க வரன் பார்த்துக்கிட்டிருக்கச்சே நந்திமாதிரி இருந்துண்டு இப்போ இப்படி சொல்றயேன்னு சத்தம் போட்டா’. நாந்தான் அவள சமாதானப் படுத்துனேன், மட்டுமில்ல பையன் ஆத்துக்குப் போயி நானும் பொண்ணோட இன்னொரு மாமாவும் சம்மந்தப் பேசிட்டு வந்தோம். பொண்ணுக்கு மாமாமட்டுமில்லாம புரோகிதராவும் இந்தக் கல்யாணத்த நடத்திண்டிருக்கேன். அந்தா இருக்கார் பாருங்கோ காதர் பாய் அவர்தான் நான் சொன்ன இன்னொரு மாமா. அவர்கிட்ட கேளுங்க மீதி கதைய.”
“வாங்க… காதர், பொதுவா பாய்னுதான் எல்லாரும் கூப்புடுவாங்க. பொண்ணுக்கு மாமா. எல்லா கதையுமே சொல்லியிருப்பங்களே. நான் சொல்றதுக்கு ஒண்ணுமில்ல. இந்துப் பெண்ண ஒரு கிறித்தவனுக்கு கட்டிவைக்கிறோமேன்னு யோசிச்சாங்க. அட நம்ம குடும்பத்தில எதுக்கு சாதி மதமெல்லாம் பாத்துகிட்டுன்னு நானும் ஐயரும் எல்லார் வாயையும் மூடிட்டோம். அவரவர் மார்க்கம் அவரவர்க்கு.
நாங்க பாத்து வளந்த பொண்ணு. அவ சந்தோஷந்தான் எங்க சந்தோசமும். அல்லா அவளுக்கு ஒரு கொறையும் வைக்கமாட்டார். இங்க பொண்ணுக்கு தாத்தா, பாட்டி அத்த மாம, சித்தி சித்தப்பான்னு எல்லா மதத்துலேந்தும் இருக்காங்க எங்க குடும்பம் அப்படி. காலம் மாறிகிட்டே வருது பிறக்கும்போது ஒரு குழந்தையா, ஆடைகூட இல்லாத மனுசனாத்தானே பெறக்குறோம். மதமெல்லாம் நம்மள கட்டுப்படுத்த வந்த ஒரு வேலி. யாருக்கு எப்படி வேணுமோ அப்படி போட்டுக்கலாம் அந்த வேலிய. ரெம்ப பேசிட்டேனோ. வாங்க தாலி கட்டு நடக்கப் போகுது மிஸ் பண்ணிடப் போறோம்.”
“ஹெலோ அகெய்ன். நல்லபடியா கல்யாணம் முடிஞ்சு இதோ எங்க வீட்ட விட்டு கிளம்பப்போறேன். சின்ன வயசுலேர்ந்தே இங்க அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தைன்னு பல உறவுகளோட வாழ்ந்துட்டு அவங்களப் பிரிஞ்சு போறது எவ்வளவு கஷ்ட்டம். இந்த அத்தனை உறவுகளுக்கும் சேர்த்து அன்பு செய்ய என் கணவரால முடியுமா. தெரியல?
கல்யாணம் ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறவிதான். எப்படி ஒரு வீட்டுல திடீர்னு ஒரு நாள் போயி அந்த வீட்டு மனுஷியா வாழமுடியும்? பல சந்தேகங்கள மனசுல சுமந்துட்டுத்தான் இதோ கார்ல கிளம்பிட்டேன்.
அங்க பாருங்க என் சொந்தக்காரங்க எல்லார் கண்ணுலையும் கண்ணீர். காதர் மாமா கூட கலங்குவார்னு நான் எதிர்பாக்கல.
கார் கிளம்பிடிச்சு. சோகமான கையசைவுகளோட என் புதுப் பயணம் துவங்குது. ‘ஜீவன் ஆதரவற்றோர் இல்லம்’ போர்டு தொங்குது பாருங்க, ஊருக்குப் பொனதும் அம்மாவுக்குப் போன் பண்ணி அந்த ஆதரவற்றோர்ங்கிற வார்த்தைய அழிச்சுட்டு வெறும் ‘ஜீவன் இல்லம்னு’ வைக்கச்சொல்லணும். என்ன சொல்றீங்க?”
Popularity: 4% [?]
Print This Post
இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப
RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....
August 7th, 2006 at 10:48 pm
விறு விறுப்பா உங்களுக்கே உரிய நடையில சொல்லியிருக்கிங்க சிரில்
August 7th, 2006 at 11:09 pm
“என்னப்பா இது… டிபிகல் பாலசந்தர் டைப் கதையா இருக்கே”ன்னு யோசிச்சிகிட்டே வந்தேன்..
கடைசில பஞ்ச் கொடுத்துட்டீங்க… நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்..
August 7th, 2006 at 11:10 pm
நன்றி ‘எண்ணம் எனது’ (நல்லபுனை பெயருங்க’)
நன்றி.
August 7th, 2006 at 11:13 pm
நன்றி பொன்ஸ்…
பா சந்தர் டைப்பா..? அவ்வளவு பெசமாவா இருந்துச்சு..
‘நெ’தான் ‘பொ’வக் கெடுத்துச்சாம்
August 8th, 2006 at 12:07 am
சூப்பர் சிறில்..நல்லா இருக்கு…
வாழ்த்துக்கள்..
August 8th, 2006 at 12:48 am
//கல்யாணம் ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறவிதான். எப்படி ஒரு வீட்டுல திடீர்னு ஒரு நாள் போயி அந்த வீட்டு மனுஷியா வாழமுடியும்? பல சந்தேகங்கள மனசுல சுமந்துட்டுத்தான் இதோ கார்ல கிளம்பிட்டேன்.//
நல்லா சொல்லியிருக்கிங்க சிறில் … போட்டிக்காகவா ? வெற்றிபெற வாழ்த்துக்கள் … உங்களுக்கும் சேர்த்து ஓட்டு போட்டு விடுகிறேன்
August 8th, 2006 at 1:20 am
சிறில்,
மொதல்லே ‘கையைக் கொடுங்க’
வாழ்த்து(க்)கள்.
நெசமாவே நல்லா இருக்கு.
August 8th, 2006 at 1:32 am
நன்றி கப்பி பய.
August 8th, 2006 at 1:33 am
கோவி. கண்ணன்..
ஓட்டுக்கு நன்றி.. அப்படியே போயி, குடம், வேட்டி, ப்ரு கிலோ பருப்பெல்லாம் வாங்கிடுங்க.
:))
August 8th, 2006 at 1:36 am
துளசி டீச்சர்,
நீங்க பாஸ் பண்ணிட்டீங்கண்ணா போதுமே..வெற்றி கிடைச்சுடுச்சே.
August 8th, 2006 at 1:53 am
//ஓட்டுக்கு நன்றி.. அப்படியே போயி, குடம், வேட்டி, ப்ரு கிலோ பருப்பெல்லாம் வாங்கிடுங்க.//
ஹி ஹி ! வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி கிடையாதா ?

August 8th, 2006 at 2:00 am
கண்ணன்,
வுட்டா ரெண்டு ஏக்கர் நெலமும் கேட்பீங்போல?ஊ
August 8th, 2006 at 2:03 am
மனித உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவை அழகுற வடித்திருக்கிறீர்கள்!
இந்தக் கற்பனைக்கே முதல் பரிசை துக்கிக் கொடுக்க வேண்டும்!
என் வாக்கும் நிச்சயம் உண்டு!
மனமார்ந்த வாழ்த்துகள்!
August 8th, 2006 at 2:12 am
நன்றி எஸ்.கே.
August 8th, 2006 at 8:36 am
நடை ரொம்ப நல்லா இருந்தது. முடிவும் நல்லா தான் இருந்தது இதில் மதம் எல்லாம் எங்க வந்ததுன்னு தான் கொஞ்சம் குழப்பம். ஆனா ரொம்ப நல்லா இருந்தது போட்டிக்கு வாழ்த்துக்கள்.
August 8th, 2006 at 9:08 am
பார்ட்னர் கலக்கல்ஸ் பார்ட்னர்.. வெற்றி பெற் மனமார்ந்த வாழ்த்துக்கள்
August 8th, 2006 at 11:44 am
// குமரன் எண்ணம் said…
நடை ரொம்ப நல்லா இருந்தது. முடிவும் நல்லா தான் இருந்தது இதில் மதம் எல்லாம் எங்க வந்ததுன்னு தான் கொஞ்சம் குழப்பம். ஆனா ரொம்ப நல்லா இருந்தது போட்டிக்கு வாழ்த்துக்கள்.//
ஆமா. யோசிச்சுப் பாத்தா மதம் பற்றி எழுதியிருக்கவேண்டாம்தான். ஆனா அப்படி இல்லன்னா ந்திர்பார்ப்பில்லாம என்ன சொல்ல வர்றாருண்றமாதிரி ஆயிருக்குமோன்னு நினைக்கிறேன்.
வாழ்த்துக்கும் மறுமொழிக்கும் நன்றி.
August 8th, 2006 at 8:57 pm
உண்மையிலேயே பாலச்சந்தர் சீரியல் பார்க்கிற மாதிரி இருந்தது. கதாபாத்திரங்களே கதா பாத்திரதையும் சொல்லி கதையையும் நகர்த்துவது அவர்கிட்ட மட்டுந்தான் பார்க்க முடியும்… ரொம்ப நல்லா இருக்கு…
August 8th, 2006 at 9:14 pm
நன்றி உதயக் குமார்..
நீங்க சொல்றது பாராட்டு .. பொன்ஸ் சொல்றது பாராட்டு இல்ல
கடைசி நேரத்துலதான் பாத்திரங்கள் கத சொல்றமாதிரி மாத்தினேன்.
–கார் கிளம்பியது. பின்னே ஆதரவற்றோர் இல்லம் அறிவுப்புப் பலகை தூரமாய்ச் சென்று மறைந்தது — இது பொலமுடிக்கலாம்னு நெனச்சேன் அப்புறம் இப்படி பண்ணிட்டேன்.
August 16th, 2006 at 9:52 am
கதையை அழகாக நகர்த்தி கடைசியில் அருமையாகவும் முடித்து விட்டீர்கள்…
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
August 16th, 2006 at 1:57 pm
நன்றி அருட்பெருங்கோ..