மான்ஸ்டர் – சிறுகதை

“இராவணனுக்கு பத்து தலையாம். பாக்கவே பயங்கரமா இருப்பானாம்.” துளசி பாட்டி பேத்திக்குக் கதை சொல்லிக்கொண்டிருந்தாள்.

தூங்கும்போது மட்டுமே கதை கேட்பாள் பேத்தி அனு. அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த குழந்தை. ‘பெட் டைம்’ கதைகள் கேட்பதில் அவளுக்கு அலாதி பிரியம். துளசி பாட்டி ஊரிலிருந்து வரும்போதெல்லாம் அவர்தான் கதை சொல்லவேண்டும்.

“மம்மி, நீ எப்பவும் ஸ்னோ ஒயிட் கதையே சொல்லுற, பாட்டிதான் வேற வேற கதையா சொல்வாங்க.” என அன்னையை ஒதுக்கிவிடுவாள்.

துளசி முடிந்தவரை தனக்குத் தெரிந்த புராணக் கதைகளை சொல்லித் தருவார்.
‘குழந்தைங்களுக்கு நம்ம தெய்வங்களப் பத்தி நாம சொல்லிக்கொடுக்கணும். வெறுமனே கோயிலுக்கு மட்டும் கூட்டிட்டுப்போயி வந்தா மட்டும் போதுமா? குழந்தைங்களும் எளிதா தெரிஞ்சுக்கணுங்றதாலத்தான் கதையா சொல்றாங்க.’ துளசி மகனுக்கும் மருமகளுக்கும் சொல்லுவார்,

‘முன்னால நாங்க திருநாள் பெருநாள்னா கோவிலுக்குப்போயி கதாகாலாட்சேபமோ, கூத்தோ, டிராமாவோ பாத்து தெரிஞ்சுகிட்டோம். இப்ப டி.வி முன்னாலேயே காலம் போயிடுது. இந்தியாவிலயே இப்படீன்னா இங்க எப்படி குழந்தைங்களுக்கு நம்ம மதம் பத்தி தெரியும்?’

‘அம்மா, இங்க குழந்தைகளுக்கு என்ன சொல்லித் தராங்களோ அதத்தான் நாங்களும் சொல்லித் தர்றோம். நீங்க சொல்றதும் சரியாத்தான் படுது. முதல்ல எங்க தலைமுறைங்களுக்கே இந்தக் கதைங்க நெறையா தெரியாது.’ ஏதவது சொல்லி மழுப்புவான் மகன்.

“பத்து தலையா பாட்டி? டென் ஹெட்ஸ். அதெப்படி ஒரு ஆளுக்கு டென் ஹெட்ஸ் இருக்கும்?”

“அவர் வில்லன்மா அதுனால அப்டி சொல்லியிருக்காங்க. பத்து தலண்ண எவ்வளவு பயங்கரமாயிருக்கும்?”

“பாட்டி ஒனக்கு சிண்டரெல்லா கத தெரியுமா?”

“தெரியாதும்மா…”

“அந்த பொம்ம பொய்சொன்னா மூக்கு நீளுமே அந்தக் கத?”

“தெரியாதே. சரி இப்ப நான் சொல்ற கதையக் கேளு.”

“ம்.”

“இராவணன் லங்கையில அரசனாயிருக்கும் போது.”

“லன்கையின்னா?”

“ஸ்ரீலங்காம்மா..அது ஒரு. நாடு இந்தியாவுக்குக் கீழ குட்டியா இருக்குமே.”

“ஸ்ரீலங்காவா? என் ஃப்ரெண்ட் சிமிக்கும் அந்த ஊர்தான்.”

“அப்போ அனுமான் சீதையத் தேடி லங்கைக்குப் போனாரு.”

“மங்கி மாதிரி இருப்பாரே அந்த அனுமாரா?”

“ஆமா.”

“ம்.”

“இராவணன் அவையில அனுமாருக்கு ஒக்கார எடமே குடுக்கல.”

“ம்.”

“ஒடனே அனுமார் என்ன செய்தார் தெரியுமா? அவரோட வால நீஈஈஈஈளமாக்கி வட்டமா சுத்தி இராவணன விடவும் ஒசரமான இடத்துல ஒக்காந்தாரு.”

“ம். எதுக்கு?”

“இராவணன் சீதைய அடச்சு வச்சிருந்தான்ல.. அவள விடுவிக்கணும்னு அட்வைஸ் சொல்றதுக்கு.”

“எப்படி பாட்டி? மங்கி பேசுமா?”

“அனுமார அப்படிச் சொல்லக்கூடாதும்மா. அவர் சாமி.”

“ம்.”

“அனுமார் பேசுவார். அவரப் போல இருக்குற வானரங்கள் எல்லாமே அந்தக் காலத்துல பேசும்.”

“வானரம்னா?”

“ம்ம்ம்ம்….மங்கீஸ்.”

“ம்.”

“அனுமார் ஒயரமான எடத்துல இருந்ததால இராவணனுக்கு கோவம் வந்து வால்ல நெருப்பு வச்சுட்டாங்க.”

“ம்.”

“அனுமார் வால்ல எரியுற தீய வச்சி லங்கையில பெரிய அழிவயே உண்டாக்கிட்டாரு.”

“ம்..அப்போ வால்ல தீ எரிஞ்சா அனுமாருக்கு பெயின் இருக்காதா?”

“ம்.. அவர் தெய்வம்மா ரெம்ப ஸ்ட்ராங்கானவர் அனுமார். ஒரு மலையத் தூக்கிட்டே பறக்க முடியும் அவரால.”

“பாட்டி நீ எப்பவுமே இப்டிக் கததான் சொல்லுற. நம்பவே முடியல. நான் தூங்கப் போறேன்.”
கண்களை மூடித் தூங்க ஆரம்பித்த அனுவை கொஞ்சம் கோபத்தோடும் எரிச்சலோடும் பார்த்தார் துளசி.

‘எப்படி இவங்க நம்ம நாட்டப் பத்தியும் நம் பாரம்பரியம், மதம், தெய்வங்களப் பத்தியும்
தெரிஞ்சுக்கப் போறாங்க?’ யோசனையுடன் ஹாலிலிருந்த ஃப்யூட்டானில் படுத்து தூங்கிப்போனார்.

நள்ளிரவில் தன் அருகே யாரோ நின்று தன்னை தட்டுவதை உணர்ந்தார்.

“அனு… என்னம்மா தூக்கம் வரலையா?”

“பாட்டி என் கூட வந்து படுத்துக்கிறியா?”

“ஏம்மா?”

“என் ரூம் க்ளாசட்ல மான்ஸ்டர் இருக்குது.”

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....



2 மறுமொழிகள் to “மான்ஸ்டர் – சிறுகதை”

  1. துளசி கோபால் சொல்கிறார்:

    :-)))))))))

  2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    துளசி அக்கா,

    இந்த ஸ்மைலி உங்க பேரப் போட்டதுக்கிலையே?

    :)))

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்