லிஃப்ட்

சாலை ஆறாய் உருகியோடிக்கொண்டிருந்தது. உருவங்கள் செம்மையாகத் திரிக்கப்பட்டு வண்ணங்கள் வழிந்தோடும் ஒரு நவீன ஓவியமாய் கானல் வரைந்த கோலங்களை வியப்போடு ரசித்துக்கொண்டிருந்தார் பெரியவர்.

‘அங்க பஸ் வர நேரமாகும். கொஞ்சம் தள்ளி முக்குல நின்னீங்கண்ணா யாராவது டூ வீலர்ல வரும்போது லிஃப்ட் கேக்கலாம்.’ மகன் சொல்லியிருந்தான்.

முதலில் வந்த மாட்டுவண்டியில் உரம் ஏற்றப்பட்டிருந்தது.

“பெரியவரே.. பஸ் வர நேரமாகுமே. வண்டியில வர்றீங்களா?” மாட்டுவண்டிக்காரர் கேட்டார்.

எளிய மக்களின் உபசரிப்பும் கருணை மனமும் படித்தவர்கள் பலருக்கும் இருப்பதில்லை. அடுக்குமாடி கலாச்சாரத்தில் வீட்டுக்கதவை எப்போதும் மூடிவைக்கப் பழகிக்கொள்கிறோம்.

“இல்லப்பா, கொஞ்சம் வெயிட் பண்ணி பாப்போம்” பெரியவர் புன்னகையோடு பதிலளித்தார். “வண்டில என்ன ஒரமா?’

“சாணம் சார். நாலு மாடு இருக்கு. அங்க தோப்புல கொண்டு வித்துருவேன்.” பதில் சொல்லியபடியே மாட்டை ஒட்டினார்.

வண்டிகள் அதிகம் வராததாலேயே கிராமங்களில் இன்னும் மெதுவான, சாந்தமான வாழ்க்கை சாத்தியமாகிறது போலும். சக்கரம் கட்டிய நகர வாழ்க்கை இலக்கே இல்லாத, முடிவில்லா பயணம்போல காலத்தைக் கடக்கிறது. எப்போதும் பயணங்கள் சாத்தியமாகிறதாலேயே நகர மக்களும் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

வாழ்நாளில் இயந்திரத்தால் ஓடும் ஒரு வண்டியைக்கூடக் கண்டிராமல் இறந்தவர்களை நினைவு கூர்ந்தார். ஆச்சர்யம் மேலிட்டது.

‘இங்கேர்ந்து நடந்தே கோட்ட வரைக்கும் போயிருக்கோம்.’ தாத்தா

‘ரயிலுன்னா என்னடா?’ குருட்டு மாமி

‘ஒரு நாளாவது இந்த ப்ளெசர்ல ஓடனும்டா.’ அப்பா

கிராமங்களுக்கு ரோடு போடாமல் இருப்பதே நல்லது. நகரத்தின் அவசரத்திலும் கிராமத்தின் நிதானத்திலும் வாழ்க்கையின் சுக துக்கங்களில் வேறுபாடிருப்பதாகத் தெரியவில்லை. கிராமத்தின் நிதானம் வாழ்க்கையை அனுபவமாக்குகிறது, நகரவாழ்வில் வாழ்க்கை நிகழ்வுகளின் தொகுப்பாய், திரைப்படக் காட்சிகளாய் ஓடிக்கொண்டிருக்கின்றது.

அடுத்தடுத்து வந்த லாறிகளில் லிஃப்ட் கேட்கவில்லை. ‘டூ வீலர்ல மட்டும் ஏறுங்க. தெரியாத கார்ல, லாறில ஏறிராதீங்க.’ மனைவியின் எச்சரிப்பு.

வெற்றிலையில் மீந்த சுண்ணாம்புகள் தேய்க்கும் கல்லாய் மாறியிருந்த மைல் கல்மீது அமர்ந்தார். கோடையின் நாட்டியமாய் கானல். தெளிந்த ஓடையில் விழுந்த பிம்பங்களைப் போலக் காட்சியளித்தது.

அயர்ந்து கண்களை மூடப்போகும் நேரம் இருசக்கர வாகனத்தின் சப்தம் எழுப்பியது. எழுந்து நின்றார். கானலைக் கிழித்துக்கொண்டு பைக் வந்தது. லிஃப்ட் கேட்க கைகளை நீட்டினார். பைக்கில் வந்தவன் இவரைப் பார்க்காதது போல தொடர்ந்தான். பெரியவர் ஏமாற்றத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். பைக் இவரைக் கடந்ததும் பின்னால் கைக்குழந்தையுடன் பெண் இருப்பது தெரிந்தது.

அவனை சபிக்க நினைத்த இரு வினாடிகளை எண்ணி நொந்தபடியே மீண்டும் மைல் கல்லில் அமர்ந்தார். ‘வீட்டுக்கு அவசரமாப் போயி என்ன பண்ணப்போறோம். அரட்டை, டிவி அல்லது சின்னச் சின்ன வீட்டு வேலைகள்’. எந்தவித நினைப்புமின்றி, செயலுமின்றி வெறுமையாய் சில மணித்துளிகளை கடத்துவது காலத்தை ஏமாற்றுவதுபோலத் தோன்றியது பெரியவருக்கு.

அடுத்த பைக் சத்தம் கேட்டது. இந்தமுறையும் தாண்டிப் போய்விட்டான் பைக்காரன். பின்னால் யாருமில்லை.

“தம்பி..” கொஞ்சம் சப்தமாகக் கூப்பிட்டார். பைக் நின்றது.

“எங்க போணும் சார்? நீங்க நிக்குறதக் கவனிக்கலையே?” பைக்கிலிருந்த பையன் கரிசனையோடு கேட்டான்.

‘நல்லவந்தான்’.

“மேட்டு பஸ் ஸ்டாண்ட் வரைக்கும்.”

“வாங்க.”

வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஏறி உட்கார்ந்தார் பெரியவர்.

“இங்க பஸ் வராதா?” பெரியவர் கேட்டார்.

“ரெண்டுமணிக்கு ஒரு பஸ் வரும் சார். அப்புறம் ஆறு மணிக்குத்தான். சென்னையா சார்?”

“ஆமா. போனவாரம் எறந்துபோனாரே வாத்தியார். அவர் என்கூட வேல பாத்தார். துக்கம் வெசாரிக்க வந்தேன். பென்சன் விஷயமா சென்னைக்கு வந்தா எங்கூடத்தான் தங்குவார்.”

“அவர் பொண்ணு என் கூடப் படிச்சிச்சு.”

“தேவியா?”

“ஆமா.”

உரையாடல் கிராமத்துப் பள்ளிக்கூடம்பற்றியும், பையன் பத்து முடித்ததும் தேங்காய்மண்டியை கவனிக்க நேர்ந்ததையும் பற்றியும், இறந்துபோன நண்பனைப் பற்றியும் தொடர்ந்தது.

‘அடுத்தவர்மீதான சார்புநிலை இந்தக் காலத்தில் அதிகமாயுள்ளது. உறவு, ஊர்க்காரன்னு இருந்த மக்கள் அதையெல்லாம் விட்டுட்டு முகந்தெரியாத மனுசங்களோடப் பழகிவாழனும்னு ஆயிடுச்சு’.

புதியவர்களை சந்தேகத்துடனும் வேடிக்கையாகவும் மட்டுமே பார்த்துப் பழகிய அந்தக் காலத்து மனிதர் அவர். ஒரு முகம் தெரியாத மனிதனை, நம்பி லிப்ட் தரும் மனிதர்கள் இருப்பது பெரியவருக்குப் பெருமையாயிருந்தது.

பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிட்டான்.

“ரெம்ப நன்றிப்பா?”

“பரவாயில்ல சார்.” வண்டி நகர்ந்தது.

வாழ்க்கையில் முதன் முதலில் லிப்ட் கேட்டுப் பயணித்த அனுபவத்தை சந்தோசமாய் உள்வாங்கிக்கொண்டிருந்தார் பெரியவர். ‘அறிமுகமில்லாத மனிதனுக்கு எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல், இவரால் தீங்கு வருமோ என எண்ணாமல் உதவி செய்யும் உள்ளம் எல்லோருக்கும் இருக்குதா? ஒரு வேளை சரியான ட்ரெஸ் போடலன்னா லிப்ட் தந்திருக்க மாட்டானோ.’

பைக்கில் பையன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தார்.

சற்றுத் தொலைவில் போனதும் பைக் பையன் பேண்ட் பாக்கட்டில் தன் பர்ஸ் இருக்கிறதா என சோதனை செய்துகொண்டது தெரிந்தது.

சின்ன புன்னகையுடன் பஸ் நோக்கி நடந்தார் பெரியவர்.

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....46 மறுமொழிகள் to “லிஃப்ட்”

 1. தம்பி சொல்கிறார்:

  சிறில் அண்ணா,,

  கதை மிகவும் அருமை. இரண்டு முறை வாசித்தேன்.

  நகர வாழ்க்கைக்கும் கிராம வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடு மிகவும் உன்னிப்பாக காட்டியிருக்கிறீர்கள்.

  //நகரத்தின் அவசரத்திலும் கிராமத்தின் நிதானத்திலும் வாழ்க்கையின் சுக துக்கங்களில் வேறுபாடிருப்பதாகத் தெரியவில்லை. கிராமத்தின் நிதானம் வாழ்க்கையை அனுபவமாக்குகிறது, நகரவாழ்வில் வாழ்க்கை நிகழ்வுகளின் தொகுப்பாய், திரைப்படக் காட்சிகளாய் ஓடிக்கொண்டிருக்கின்றது.//

  நல்ல உதாரணம்.

 2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி தம்பி தம்பி.

  :)

 3. ஊமை சொல்கிறார்:

  கதை ரொம்ப நல்லா இருந்தது சிறில். க்ளைமாக்ஸ் ‘நச்’.
  வாழ்த்துக்கள்!!

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஊமை
  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

 5. Murali சொல்கிறார்:

  சிறில்…..
  அறுமையான கதை. மெய் சிலிர்த்தேன்.
  — முரளி.

 6. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  மெய் சிலிர்த்தீங்களா..?
  ம்ம்ம்ம்..சீக்கிரமா உணர்ச்சிவப்படக்கூடியவரா நீங்க?
  :)

  நன்றி..

 7. மணியன் சொல்கிறார்:

  மிக இயல்பான மண்வாசனை வீசும் கதை. நகரத்து இளைஞர் என்றால் கூப்பிட்டால் கூட காதில் விழாத்து போல போயிருப்பார்கள்.

 8. Anonymous சொல்கிறார்:

  Cyril,
  Summa Nachhhunu irukku!!!

  Raghs

 9. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  Thanks maniyan and raghs

 10. Simulation சொல்கிறார்:

  சிறில்,

  கதை அருமை.

  கற்பனைப் பாத்திரமென்றாலும், லிப்ட் கொடுத்த இளைஞன், ஏற்கெனெவே ஒரு முறை பட்ட கசப்பான அனுவத்தையும் மீறி, மனிதாபிமான உணர்வுடன் லிப்ட் கொடுத்துவிட்டு, எச்சரிக்கை கலந்த யதார்த்தத்துடன் பாக்கெட்டைச் சரி பார்த்திருப்பானோ என்று தோன்றியது.

  - சிமுலேஷன்

 11. கோவி.கண்ணன் [GK] சொல்கிறார்:

  //ஒரு வேளை சரியான ட்ரெஸ் போடலன்னா லிப்ட் தந்திருக்க மாட்டானோ.’

  பைக்கில் பையன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தார்.

  சற்றுத் தொலவில் போனதும் பைக் பையன் பேண்ட் பாக்கட்டில் தன் பர்ஸ் இருக்கிறதா என சோதனை செய்துகொண்டது தெரிந்தது.
  //

  எவ்வளவு தான் நல்லவராக இருந்தாலும் உதவி செய்பவர்களை / உதவி கேட்ப்பவர்களை சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். அந்த அளவு நல்ல மனங்கள் கெட்டுக்கிடக்கிறது என்பதை இதமாக சொல்லியிர்க்கிறீர்கள்.

  //ஒரு வேளை சரியான ட்ரெஸ் போடலன்னா லிப்ட் தந்திருக்க மாட்டானோ !

  சற்றுத் தொலவில் போனதும் பைக் பையன் பேண்ட் பாக்கட்டில் தன் பர்ஸ் இருக்கிறதா என சோதனை செய்துகொண்டது தெரிந்தது !//

  நன்றாக முடித்திருக்கிறீகள்.

 12. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி சிமுலேசன்.. பாத்திரங்களைப்பற்றிய மாற்றுக்கருத்துக்கள், நல்ல சிந்தனை.

 13. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  GK, நன்றி.

 14. -L-L-D-a-s-u சொல்கிறார்:

  Good Story ..

 15. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  Thanks LLDASU

 16. ராசுக்குட்டி சொல்கிறார்:

  //அவனை சபிக்க நினைத்த இரு வினாடிகளை எண்ணி நொந்தபடியே…//

  நல்ல கதை சிறில்… யதார்த்தமாக இருந்தது! போட்டிக்கு தலைப்பை எப்படா குடுப்பாங்கன்னு காத்துகிட்ருந்தீங்க போல

 17. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  Rasukkutti,
  the truth is the plot for this stroy was in my mind for a long time.

  :)

  the title matched it to the T.

 18. G.Ragavan சொல்கிறார்:

  நல்ல முயற்சி சிறில்.

  அந்தப் பையன் செய்ததிலும் தவறில்லை. இன்று இருக்கும் நிலையில் லிப்ட் கொடுப்பதும் ஒரு ரிஸ்க்தான்.

  எங்கள் அலுவலகத்தில் அடிக்கடி பார்க்கிறோம். யாராவது லிப்ட் கொடுத்தோ வாங்கியோ பட்ட கஷ்டங்களை.

  நான் யாருக்கும் லிப்ட் கொடுப்பதில்லை. லிப்ட் கேட்பதும் இல்லை.

 19. மின்னுது மின்னல் சொல்கிறார்:

  நல்லா இயல்பா இருக்கு

  வெற்றி பெற வாழ்த்துக்கள்

 20. வெற்றி சொல்கிறார்:

  சிறில்,
  நல்ல அருமையான கதை. நல்ல நேர்த்தியாகவும் அழகாகவும் சொல்லியுள்ளீர்கள். உண்மையில் இந்தக் கதையைப் படித்த போது என்னுள் ஓர் இனம்புரியாத ஏக்கம் ஏற்பட்டது. நானும் ஈழத்தில் ஒரு பழமைவாய்ந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். கிராமத்து வாழ்க்கையில் ஒர் அங்கமாக இருந்தவன். ஆனால் இப்போது பெரிய நகரங்களில் வாழ்ந்த போதும் கிராமத்தில் வாழ்ந்த சுகம் கிடைக்கவில்லை. ஏதோ ஒன்றைத் தொலைத்தது போன்ற உணர்வு.

  //பெரியவரே.. பஸ் வர நேரமாகுமே. வண்டியில வர்றீங்களா?” மாட்டுவண்டிக்காரர் கேட்டார்.

  எளிய மக்களின் உபசரிப்பும் கருணை மனமும் படித்தவர்கள் பலருக்கும் இருப்பதில்லை. அடுக்குமாடி கலாச்சாரத்தில் வீட்டுக்கதவை எப்போதும் மூடிவைக்கப் பழகிக்கொள்கிறோம்.//

  சிறில், அருமையாகச் சொன்னீர்கள். கிராமத்து மக்களின் கருணை நிறைந்த உபசரிப்பை என்னவென்று வர்ணிப்பது.

  சிறில், நீங்கள் புழங்கியுள்ள சில சொற்கள் புரியவில்லை. சிலவேளை இச் சொற்கள் ஈழத்தில் புழக்கத்தில் இல்லையோ என்னவோ.

  //’அங்க பஸ் வர நேரமாகும். கொஞ்சம் தள்ளி முக்குல நின்னீங்கண்ணா //

  மூக்குல = முடக்கில, மூலையில்?

 21. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //நல்ல முயற்சி சிறில்.//

  நன்றி ராகவன்

  //அந்தப் பையன் செய்ததிலும் தவறில்லை. இன்று இருக்கும் நிலையில் லிப்ட் கொடுப்பதும் ஒரு ரிஸ்க்தான்.//

  உண்மைதான்.. தவறு சரியென கதையில் சொல்லவரவில்லை..வாசகர்களின் முடிவே அது. :)

  //எங்கள் அலுவலகத்தில் அடிக்கடி பார்க்கிறோம். யாராவது லிப்ட் கொடுத்தோ வாங்கியோ பட்ட கஷ்டங்களை.//

  உண்மை..

  //நான் யாருக்கும் லிப்ட் கொடுப்பதில்லை. லிப்ட் கேட்பதும் இல்லை. //

  நான் இரண்டையும் செய்திருக்கிறேன்

 22. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  வெற்றி,

  நான் குக்கிராமம் துவங்கி டவுன் சிட்டி என வாழ்ந்திருக்கிறேன்.. என்னுள் அந்த ஏக்கம் எப்போதும் உண்டு. அலைகள் பாறைகள் படித்திர்ப்பீர்கள் என நம்புகிறேன்.

  முக்குல = மூலையில் அல்லது திருப்பத்தில் என எடுத்துக்கொள்ளலாம்

  நன்றி.

 23. மணியன் சொல்கிறார்:

  நல்லாருக்கு, பெரியவரின் எண்ண ஓட்டம் படம் பிடித்திருக்கிறீர். அருமை.

 24. நிர்மல் சொல்கிறார்:

  நல்ல விவரிப்பு சிறில்.

 25. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி மணியன், நிர்மல்.

 26. வல்லிசிம்ஹன் சொல்கிறார்:

  ciryl,
  நல்ல படைப்பு.
  சகஜமான நடை.
  அப்படியே நேரே பார்ப்பது போல இருந்தது.

  மனித நேயமும் இருக்கிறது,அதைக்
  கடினமாக்கும் நிஜங்களும் இருக்கின்றன. சரியாகக் கோர்த்து விட்டிர்கள்.
  வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

 27. பழூர் கார்த்தி சொல்கிறார்:

  சிறில், சிறுகதை நன்று, விமர்சனப் பதிவொன்றை இன்று மாலை வெளியிடுகிறேன், மதிப்பெண்ணை பாருங்கள் :-))

  வாழ்த்துக்கள்..

 28. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி வள்ளி.

 29. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  சோ. பையன்,
  உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.

 30. ஜெஸிலா சொல்கிறார்:

  கதை மேலே லிப்ட் ஆகிடும் போலிருக்கு. வாழ்த்துக்கள்.

 31. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  பல புதிய நண்பர்கள் பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள் மகிழ்ச்சி.

  நன்றி ஜெஸிலா.

 32. jeeva சொல்கிறார்:

  nice story siril

 33. பழூர் கார்த்தி சொல்கிறார்:

  படைப்புகள் பற்றிய விமர்சனத்திற்கு
  இங்கே
  பாருங்கள்

  வாழ்த்துக்கள் :-)

 34. மா.கலை அரசன் சொல்கிறார்:

  கதை மிகவும் அருமை.

 35. நெல்லை சிவா சொல்கிறார்:

  கதை நல்லா யதார்த்தமா வந்திருக்கு! எண்ண ஓட்டங்களும், சூழலையும் நன்கு வருணித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

 36. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  Thanks Siva

 37. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி கலை அரசன்.

 38. Hariharan # 26491540 சொல்கிறார்:

  சிறில்,

  இன்றைய யதார்த்த தினசரி நடைமுறை வாழ்வில் தனிமனிதர்களுக்கிடையே காணாமல் போய்விட்ட பரஸ்பர நம்பிக்கை, கிராம -நகர வித்தியாசமின்றிப் பெருகிவிட்ட மோசடிகள், மாசுபட்ட மனங்கள் இவைகளை நாசூக்காக சொல்லியிருக்கிறீர்கள்.

  சாமி கும்பிட கோயில் வெளியே தைரியமாய் புதுச்செருப்பை விட்டு விட்டு மனநிம்மதியோடு இறைவனைக் கூட வழிபட முடிவதில்லை என்பதுதானே இன்றைய யதார்த்த நிலை!!

  இந்தப் பையை / பெட்டியை ஒரு அஞ்சு நிமிஷம் பார்த்துக்குங்கன்னு ரயிலடியில்/ பேருந்து நிலையத்தில் எவரிடமாவது யதார்த்தமாகச் சொல்லிவிட முடிகிறதா?

  நாம அடுத்தவனை நம்பி பையை / பெட்டியை விட்டுட்டுப்போனா ஆட்டையா போட்டுர்றானுங்க, சரி நாம வேறு நபரின் பையை / பெட்டியை நம்பிக்கையாய் பார்க்கச் சரின்னு சொன்னால் கஞ்சா/ஆர்டிஎக்ஸ் கேஸ் என்று லாடம் கட்டி உள்ளே தள்ளி சிறையில் வாழ்வைத் தொலைக்கும் அபாயம் தொலைவில் இல்லையே!

  அன்புடன்,

  ஹரிஹரன்

 39. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஹரிஹரன்,
  கதையை நன்றாக அலசியுள்ளீர்கள். கதையில் எனது முடிவாக எதையும் சொல்ல வரவில்லை வாசகர்களின் முடிவுக்கே பலதையும் விட்டுவிடுகிறேன். நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கள் நிச்சயம் யதார்த்தம்.

  நன்றி.

 40. அருட்பெருங்கோ சொல்கிறார்:

  சிறில்,

  கதை நல்லா இருக்குங்க…

  /வெற்றிலையில் மீந்த சுண்ணாம்புகள் தேய்க்கும் கல்லாய் மாறியிருந்த மைல் கல்மீது/

  /’அடுத்தவர்மீதான சார்புநிலை இந்தக் காலத்தில் அதிகமாயுள்ளது. உறவு, ஊர்க்காரன்னு இருந்த மக்கள் அதையெல்லாம் விட்டுட்டு முகந்தெரியாத மனுசங்களோடப் பழகிவாழனும்னு ஆயிடுச்சு’./

  ரசித்தேன்…

 41. ஆவி அம்மணி சொல்கிறார்:

  கதை நல்லா வந்திருக்கு. என் ஓட்டு உங்களுக்குத்தான்!

 42. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  அருட்பெருங்கோ,
  ரெம்ப நன்றி. உங்கள மாதிரி எத ரசிச்சீங்கன்னு சொன்னாங்கன்ன நமக்கும் உதவியா இருக்கும்

 43. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஆவி.. விக்ரமாதித்தன் கதையவுட்டுட்டு எங்க கதைகள் கேட்க ஆரம்பிச்சிட்டீங்களா?

  ஓட்டுக்கு நன்றி. எலக்சன் நேர்ரத்ட்துல மறந்துடாதீங்க.

 44. Kowsalya Subramanian சொல்கிறார்:

  கிட்ட தட்ட இதே ஓட்டத்தில் ஆனந்த விகடனில் படித்ததாக நினைவு. ஆனால் உங்கள் நடை வித்தியாசமாக இருந்தது. வெற்றி பெற வாழ்த்துக்கள்

 45. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //கிட்ட தட்ட இதே ஓட்டத்தில் ஆனந்த விகடனில் படித்ததாக நினைவு. ஆனால் உங்கள் நடை வித்தியாசமாக இருந்தது. வெற்றி பெற வாழ்த்துக்கள் //

  என்னங்க இப்டி சொல்லிட்டீங்க?
  ஆனந்தவிகடன்ல கத ஏற்கனவே வந்திடுச்சா?

  :(

  பரவாயில்ல நடைய மாத்தினாலே அது புதுசுன்னு நம்ம சினிமாக்காரங்க நமக்குச் சொல்லியிருக்காங்க.. :}

  வாழ்த்துக்கு நன்றி.

 46. Anonymous சொல்கிறார்:

  படிச்சுப் பார்த்தேன். நல்லா இருந்திச்சு உங்க கதை. ஒரு வரியில சொல்லணும்னா … இங்கே பாருங்க.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்