2006ன் அரிய கண்டுபிடிப்புக்கள்/உருவாக்கங்கள்

இந்த வார டைம் 2006ன் அரிய கண்டுபிடிப்புக்கள்/உருவாக்கங்களை பட்டியலிட்டுள்ளது. காற்றிலிருந்து குடிநீர் பெறுவது முதல் காணாமல் போனவற்றை கண்டுபிடிப்பது வரை பல புதிய கருவிகளை கண்டுபிடித்திருக்கிறார்கள். பாயன்பபட்டுக்கு உதவும் பொருட்களையே இதில் பட்டியலிட்டுள்ளார்கள். என்னை கவர்ந்த சில கீழே.

1. குடும்ப இஸ்திரி
சூடான இஸ்திரி பெட்டியை துணிகளின்மேல் வைத்துவிட்டு போய் ராங் கால் அழைப்பை துண்டித்துவிட்டு வருமுன் அது எரிந்து போனதால் வரும் பயங்கர விளைவுகளை (நன்றி தமிழ் சினிமாக்கள்) இனி தவிர்க்கலாம். இந்த இஸ்திரி பெட்டியை துணிமேல் வைத்துவிட்டு கையை எடுத்துவிட்டீர்களென்றால் இதற்கு கால்கள் முளைத்துவிடும்.

மேல் விவரம்: oliso.com விலை: $90
நன்மை: குடும்ப இஸ்திரிகளுக்கு இனி கொண்டாட்டம்தான்.
தீமை:மாமியார்கள் சண்டைபிடிக்க வேறு காரணத்தை தேட வேண்டியுள்ளது.
பிடி வரி (அதாங்க catch phrase) : ‘சொந்தக் காலில் நிற்கும் ஸ்திரிகளுக்கு சொந்தக்காலில் நிற்கும் இஸ்திரி’.


2. உன்னைத் தேடி
பொருட்கள் காணாமல் வீட்டில் நடக்கும் சண்டைகளின் விளைவாக ஊர்க் கலவரங்கள் துவங்கி சர்வாதிகாரிகள் உருவாவதுவரை பல கதைகள் இருக்கின்றன (இருக்கலாம்!). இனிமேல் அந்தக் கவலை வேண்டாம். ரேடியோ அலைகளை வெளியிடும் ஸ்டிக்கர்களை முக்கியமான பொருட்களில் ஒட்டிவைத்து அடையாளப் படுத்திக் கொண்டால் இந்தக் கருவிமூலம் அவை காணாமல் போனால் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். இந்தக் கருவியே காணாமப் போனா?

மேலும் விவரம்: loc8tor.com விலை: $190
நன்மை: பொருட்களத் தேடுற நேரத்துக்கு கூகிள்ல நாலு தேடல் போட்டு ஒரு பதிவப் போடலாம்.
தீமை: சில பொருட்கள தேடும்போது தொடர்பில்லாத முக்கியமான பல பொருட்கள் கிடைக்கும். இனி அது கிடையாது.
பிடி வரி : ‘தேடாமலேயே கிடைக்கும்’ (as against தேடினாலும் கிடைக்ககது).

3. குடைக்காலம்
சென்னையில் மழைக்காலம். மழைக்காலமெல்லம் குடைக்காலம். மழையில் நனைந்த குடையை மடக்கி வச்சா வீடெல்லாம் தண்ணியாகுதா? இந்தக் குடையில் தண்ணி ஒட்டுறதில்லை. தாமரை இலையப் பாத்துவந்த இன்ஸ்பிரேஷன்னு சொல்றாரு இதக் கண்டு பிடிச்சவர். அடுத்த வீட்டு தாமரையப் பார்த்து இன்ஸ்பிரேஷன்ல கவிதையா எழுதினவுங்களுக்கு அஞ்சலி.

மேலும் விவரம்: proidee.co.uk விலை: $95 (அடேங்கப்பா)
நன்மை: குடைக்குள் மழை இனி இருக்காது.
தீமை: ஏற்கனவெ வெள்ளப் பெருக்குல தெருத்தண்ணி வீட்டுல வந்துடுச்சே.
பிடி வரி: குடைய மட்டும் வீட்டுக்குள்ள கொண்டுபோங்க. மழை வெளியே பெய்யட்டும்.

4. அச்சூசூசூ இல்ல மியாவ்
பூனைகள்னா சிலருக்கு அலர்ஜி. கறுப்பு பூன குறுக்கவந்தா விலகி ஒட்டுறது மட்டுமில்லங்க நிஜமான உடல் ரீதியான அலர்ஜி. இப்போ புதிதாய் அலர்ஜி கொடுக்காத பூனைகள் விற்பனைக்கு வந்திருக்குதுங்க. ஜெனட்டிக் மாற்றமில்லாம இனக்கலப்பு மூலமா இத செய்யுறாங்க. என்ன இப்பவே டிமாண்ட் அதிகமாகி 15 மாசம் வெயிட்டிங் லிஸ்ட் வந்துடுச்சு.

மேலும் விவரம்: allerca.com விலை: $3,950
நன்மை: தும்மல் போட்டு சகுனத்தையெல்லாம் அபசகுனப் படுத்துறது குறையும்.
தீமை: இந்த விலைக்கு இந்தியாவுல பூனை என்ன ஒரு அரசியல்வாதியையே பெட்டா வச்சுக்கலாம். (என்னது? அரசியல்வாதின்னா அலர்ஜியா?)
பிடி வரி: பூனை வளர்ப்பீர் பயன்பெறுவீர்.

5. வாயுவிலிருந்து திரவம்
வெறும் காத்துல என்ன செய்யமுடியும்? குடிநீர் எடுக்க முடியும்னு நிருபிச்சிருக்காங்க. அட மூலிகப் பெட்ரோல் மாதிரியில்லீங்க. நிஜமாவே. காற்றில் இருக்கும் ஈரப்பதத்த குடிநீரா மாத்துற தொழில்நுட்பம். போர்களங்களிலோ பேரழிவு நிகழ்ந்த இடங்களிலோ பயன்படுத்தலாம். என்ன மெஷின் கொஞ்சம் பெருசு, குட்டி ரூம் அளவுக்கு.

மேலும் விவரம்: aquasciences.com விலை: $300,000
நன்மை: காசு இருந்தா தண்ணி கிடைக்குண்றது போயி இப்ப காத்து இருந்தா தண்ணி கிடைக்கும்
தீமை: கோலா கம்பெனிங்க தாமிரபரணில தண்ணி எடுத்ததே பிரச்சனையில கெடக்குதே?
பிடி வரி: சுவாசத்துக்கும் தாகத்துக்கும் பயன்படுத்துவீர் காத்து…காத்து .. காத்து.

6. மரம் வெட்டி
மரம் வெட்டும்போது கைய வெட்டிக்கிறது ரெம்ப சகஜம். இந்த எந்திரம் ச்தையப் போல எது தொட்டாலும் நேனோ நொடிகளுக்குள்ளால நின்று போகுமாம். இது மாதிரி நகம் (மட்டும்) வெட்ட ஏதாவது இருக்குதா?

மேலும் விவரம்: sawstop.com விலை: $2,799
நன்மை: கை இருந்தா இன்னும் நாலு மரம் வெட்டலாம்
தீமை: கை வெட்ட இந்த மெஷின பயன்படுத்த முடியாது
பிடி வரி: உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே

7. ரோபோ வீரன்
போர்க்களத்தில் காயப்பட்டுக் கிடக்கும் வீரர்களை தூக்கிவர இந்த ரோபோ உதவுகிறது. தொலை கட்டுப்பாடில் இயங்குகிறது. சுமார் 200 கிலோவுக்கு மேல் தூக்கும் திறன் உள்ளது. சட்டசபைக்கு ‘குடித்துவிட்டு’ வருபவர்களை தூக்கிச்செல்ல உதவுமா?

மேலும் விவரம்: vecna.com/robotics விலை: தரப்படவில்லை
நன்மை: காயப் பட்டவர தூக்கப்போயி இன்னும் காயப்படவேண்டாம்
தீமை: இந்த ரோபோவே சண்ட போடுற மாதிரி செஞ்சா யாரும் காயப் படவேண்டாமே?
பிடி வரி: தெருச்சண்டையா? சாதிக்கலவரமா? குண்டுவெடிப்பா? ஆமாய்யா ஆமா…

8. கட்டிபுடி வைத்தியம்
டெலிபோன்ல முத்தம் குடுக்கலாம் கட்டிப்புடிக்க முடியுமா? இந்த சட்டைய போட்டுக்கிட்டு தொலைபேசில குறிப்பிட்ட குறியீட்டத் தந்தா அலைபேசி அத ப்ளூ டூத் வழியா சட்டைக்கு சொல்லிடுது. சட்டையும் அப்படியே ஒருத்தர் கட்டிப்புடிச்சா எப்படி இருக்குமோ அந்த உணர்வத் தருது.

மேலும் விவரம்: cutecircuit.com விலை: தரப்படவில்லை
நன்மை: அனானிமஸா யாரவேண்ணா கட்டிபுடிக்கலாம். ‘சாரி ராங் நம்பர்’-னு சொன்னா போதும்.
தீமை: அனானிமஸா யார்வேண்ணா கட்டிபுடிக்கலாம். ‘சாரி ராங் நம்ப்பர்’-னு சொல்லிடுவாங்க.
பிடி வரி: கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா காணாமலே கட்டிபுடிடா.

Popularity: 5% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....9 மறுமொழிகள் to “2006ன் அரிய கண்டுபிடிப்புக்கள்/உருவாக்கங்கள்”

 1. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  test.

 2. வடுவூர் குமார் சொல்கிறார்:

  எல்லாமே சூப்பர் தான்.
  ஆனா அந்த இஸ்திரி பெட்டி தான் சிரிப்பை வரவழைத்தது.

 3. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி குமார்

 4. murali சொல்கிறார்:

  அலெக்ஸ்,
  மிக உபயோகமான பதிவு.நன்றிகள்.
  என்றென்றும் அன்புடன்,
  பா. முரளி தரன்.

 5. kannabiran, RAVI SHANKAR (KRS) சொல்கிறார்:

  அட, கலக்கல் சிறில்!
  இப்படி பிடி வரிகளை அள்ளிப் போட்ட உங்களுக்கு இந்த முதல் ஏழில் எதைப் பரிசாகக் குடுக்கலாம்ன்னு மறக்காமச் சொல்லுங்க! :-)

 6. Vajra சொல்கிறார்:

  சிறில்

  interesting.

  அந்த தாமரை இலை போல் செய்யப்பட்ட குடை நீங்கள் கொடுத்த லிங்கில் இல்லை. அதைத் தேடவேண்டுமா ?

 7. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:
 8. G.Ragavan சொல்கிறார்:

  இப்படியெல்லாம் கண்டு பிடிக்கிறாங்களா? ஒரு ஆறு வருசத்துக்கு முன்னாடி சப்பான் கண்டுபிடிப்புகள்னு ஒரு மெயில் வந்துச்சு (இப்பல்லாம் எனக்கு பார்வேர்டு மெயில்கள் வர்ரதில்லை. எல்லாருக்கும் அப்படித்தானா?) அதுல இந்த மாதிரி நெறைய இருந்துச்சு. லிப்ஸ்டிக் மாதிரியே சீஸ்…அப்படியே பிரட்ல தடவிக்கலாம். கைல ஒட்டாது. இன்னும் நெறைய இருந்தது. ஆனா அதுல எதுவுமே உலகம் முழுசும் பரவலை. எத்தனையோ வெளிவந்தாலும் ஒரு சிலதுதான் புகழடையுது. இல்லையா சிறில்?

 9. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஆமா ராகவன். சில புது கண்டுபிடிப்புக்கள மொத்த தயாரிப்பு செய்வதற்கு தயக்கம் இருக்கலாம். மொத்தமா தயாரிக்கலன்னா விலை அதிகமாயிருக்கும்.. பொருள் விற்காது.

  சில நேரம் மக்கள் பழச மறக்க மாட்டாங்க.. நீங்க சொன்ன சீஸ் விஷயம் அப்படி இருக்கலாம்.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்