ஊனம்

மாநாட்டிலிருந்து கடைசி மந்திரி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்.
காலையிலிருந்து காத்திருப்பும் தொடர் சல்யூட்களுமாய் ஏட்டு வேலுமணியின் உடலை வருத்தியிருந்தன. இன்னும் முக்கால் மணிநேரமாவது ஆகும் அவர் வீடு செல்ல.

“சார். நல்லா இருக்கியளா?”

குரல்கேட்டுத் திரும்பினார் வேலுமணி.

“டேய் ராசையா எப்டி இருக்க?” வந்தவனைப் பார்த்து சிரித்தார் ஏட்டு தோளில் தட்டியபடியே, “என்னடே இங்க? துபாய்க்கு எதாவது போறியா?”

“என் கடேசி தம்பி அமெரிக்கா போறான்.”

“அமெரிக்காவுக்கா? ரெம்ப சந்தோஷம்டே. வேலைக்காபோறான்?

“ஆமா.”

“ஒங்கப்பன் எப்டி இருக்கான்?”

“அவரு போயி ரெண்டு வருசமாவுது சார்.”

“அப்டியா? ஊருக்கு வந்து வருசக்கணக்காவுது. பரவாயில்லியேடே என்ன நியாபகம் வச்சிருக்கியே. தண்ணி பாட்டில் வாங்கவந்தியோ?”

“ஆமா. தம்பி அங்க வரிசைல நிக்கான்.”

“அப்ப போ தம்பி. பாப்போம்.”

வந்தவன் திரும்பி நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தார் ஏட்டு. பைக்கின் சப்தம் கேட்டு திரும்பி தனிச்சையாய் சப் இன்ஸ்பெக்டர் செல்வத்துக்கு சல்யூட்வைத்தார்.

“யார் சார் அது?” சப் இன்ஸ்பெக்டர் கேட்டார்.

“சார். இவன் எங்க ஊரு நாசுவனோடப் பையன் சார்.”

“நாசுவன்னா?”

“முடிவெட்றவர். நாவிதர்.”

“ஓ. இங்க என்ன பண்றான்?”

“இவன் தம்பி, கடைசில உள்ளவன் அமெரிக்கா போறானாம். வழியனுப்ப வந்திருக்கான். நம்ம பையன்கூட படிச்ச பய.”

“பரவாயில்லியே.”

“காலகாலமா எங்க ஊர்ல இவங்கதான் முடிவெட்றது சாவுக்கு சேதி சொல்றதெல்லாமே. இப்ப எல்லா மாறிப்போச்சு”

“ம்ம்ம்”

“இந்தா போறானே ராசையா. இவன் இப்ப பஸ் ஸ்டாண்ட்ல சலூன் வச்சிருக்கான்.”

“இப்படி ஒரு பையன் அமெரிக்கா போறது பெரிய விஷயந்தான்.”

“என்ன சார் சொல்ல இவனுங்க ரிசர்வேஷன்ல சர்ர்ருன்னு மேல வந்துற்றானுவ. நம்ம புள்ளைக கஷ்ட்டப்படுதுங்க.”

“காலேஜ்ல சேர்றதுக்குத்தானே இட ஒதுக்கீடு அங்க படிக்கிறது அவனவன் தெறம சார். இப்ப ஒங்க பையன, ஒங்க சாதி ஐ.ஜி கிட்ட சொல்லி ரெக்கமண்டேசனோட காலேஜ்ல சேத்தீங்க. இந்தப் பையனுக்கு அரசாங்கமே ரெக்கமெண்டேஷன் தந்திருக்குன்னு சொல்லலாம்லியா. அதுக்கப்புறம் ஒங்க பையனமாதிரி படிப்ப பாதியிலே நிறுத்துறதும் முழுசா முடிச்சு வேலைக்குப் போறதும் அரசாங்கமா வந்து செய்யுது?”

“சரிதான் ஆனாலும் தெறமயில்லாட்டியும் இவங்களுக்கு வேல கெடைக்குதே சார்.”

“இந்தப் பையன் அமெரிக்கா போறான் சார். அமெரிக்கா போறதுக்கு ஃப்ளைட்லதான் ரிசர்வேஷன் உண்டு வேலைக்கில்ல. இவன்கிட்ட திறமயில்லன்னு எப்டி சொல்வீங்க?”

“……….”

“நாளைக்கும் ஏர்போர்ட் வந்துருங்க.” பைக்கை கிளப்பினார் சப் இன்ஸ்பெக்டர்.

ஏட்டு, தறுதலையாய் சுற்றிக்கொண்டிருக்கும் தன் மகனை நினைத்துக்கொண்டே, தூரத்தில் தன் கால் ஊனமுற்ற தம்பியின் சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு ராசையா நுழைவாயிலை கடப்பதை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.


============================================================================
இந்தவாரத் தமிழோவியத்தில் வந்த கதை

தமிழோவியம் ஆசிரியர் குழுவில் சேர்ந்து பணியாற்ற இருக்கிறேன்.
வாய்ப்பளித்த தமிழோவியம் குழுவிற்கு நன்றி.

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....10 மறுமொழிகள் to “ஊனம்”

 1. துளசி கோபால் சொல்கிறார்:

  தமிழோவியம் ஆசிரியர் குழு அங்கமா?
  பேஷ் பேஷ்.
  எல்லா நலமும் பெற்று வாழ்க.

  ஊனம் – கதை நல்லா இருக்கு.

 2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  வாழ்த்துக்கும் பாராட்டிற்கும் நன்றி துளசிஅக்கா.

 3. Anonymous சொல்கிறார்:

  நல்ல கதை சிறில். கடைசில ஏன் தம்பிக்கு கால் ஊனம் சொல்லிட்டிங்க

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நிர்மல்,
  அவன் வசதியில்லாதவன் மட்டுமல்ல ஊனமுமானவன் என்பதைச் சேர்த்தால் வலுவாயிருக்கும் என நினைத்தேன்.

  சொல்லப்போனா அதுதான் என் கருவாயிருந்தது. ஊனமுற்ற ஒருவர் வான்ழ்க்கையில் முன்னேறும்போது பலரும் ஏளனமாய் பார்ப்பதுண்டு. இவன் சமூகத்தாலும் ஊனப்படுத்தப்பட்டவனாயிருந்தா? தாக்கம் இன்னும் அதிகம்.

  இதில் ஒருவர் மனதளவிலும் ஒருவர் உடலளவிலும் ஊனமானவராய் சொல்லப்படுகிறார்கள் எனவும் கொள்ளலாம். (இலக்கியவாதிமாதிரி பேச ஆரம்பிச்சிட்டேனா)

  :)

 5. Anonymous சொல்கிறார்:

  சொன்னாலும் சொல்லாட்டாலும் நீங்க எலக்கியவாதிதான் சிறில் ;-)

  //ஒருவர் மனதளவிலும் //

  கதையில் இக்கருத்து இருக்கவும்தான்

  //உடலளவிலும் ஊனமானவராய் //

  இது ஏனென கேட்டேன்

 6. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //ஊனமுற்ற ஒருவர் வாழ்க்கையில் முன்னேறும்போது பலரும் ஏளனமாய் பார்ப்பதுண்டு. இவன் சமூகத்தாலும் ஊனப்படுத்தப்பட்டவனாயிருந்தா? தாக்கம் இன்னும் அதிகம்.//

  சொல்லிட்டேனே.

  நான் ஒரு கற்பனாவாதின்னு சொல்லலாம். இலக்கியமெல்லாம் நமக்கு ஒண்ணும் தெரியாதுங்க.
  :)

 7. லதா சொல்கிறார்:

  // அங்க படிக்கிறது அவனவன் தெறம ***சார்***. //
  // இந்தப் பையன் அமெரிக்கா போறான் ***சார்***. //
  போலீஸ் வாரம் அண்மையில்தான் கொண்டாடினார்களாம் என்று படித்தேன். சப்-இன்ஸ்பெக்டர் அய்யா, ஏட்டு அவர்களை, சார் என்று விளிக்கிறாரே நல்ல மாற்றம்தான்.
  :-)

  // தூரத்தில் தன் கால் ஊனமுற்ற தம்பியின் சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு ராசையா //

  நான் புரிந்து கொண்டது, ஊனம் அந்தத் தம்பிக்கு இல்லை பார்க்காமலே / விவரம் தெரிந்துகொள்ளாமலே முன் ஊகங்களுடன் தவறாக ஒரு முடிவிற்கு வரும் ஏட்டு அவர்களுக்குத்தான் (ஊனம்) என்றுதானே சொல்ல வருகிறீர்கள். சரியா சிறில் ?

 8. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  லதா,
  //சப்-இன்ஸ்பெக்டர் அய்யா, ஏட்டு அவர்களை, சார் என்று விளிக்கிறாரே நல்ல மாற்றம்தான்.
  //

  வேண்டுமென்றே இதை வைத்தேன் சரியாகப் பிடித்துவிட்டீர்கள். சிலராவது வயது காரணம்கொண்டு இதைச் செய்வார்கள் எனும் நம்பிக்கை. மற்றும் அந்த சப்-இன்ஸ்பெக்டரின் நல்மனத்தை உறுதுசெய்யும் கூறு இது. இல்லண்ணா ஏட்ட வா போண்ணு சொல்ற இவன் அறீவுர சொல்ல வந்துட்டான்னு வந்துரலாம்.

  ஊனம் பற்றிய உங்கள் விளக்கம் சரியானதே. கதையை முடித்தபிந்தான் தலைப்பு வைத்தேன். சரியாக வந்தது.

  ஆழ்ந்த பின்னூட்டத்துக்கு நன்றி.

  உடல் ஊனமுள்ளவர்கள் மன ஊனமுள்ளவர்களை விட எளிதில் வெற்றிபெறலாம் எனும் எண்ணமும் தெளிகிறதே.

 9. குமரன் (Kumaran) சொல்கிறார்:

  நான் சொல்ல வந்ததை ஏற்கனவே லதா சொல்லிட்டுப் போயிட்டாங்க. சரி வாழ்த்தாவது சொல்லலாம்ன்னா அதையும் துளசி அக்கா சொல்லிட்டாங்க. இப்ப என்ன அதனால? நான் வாழ்த்து சொன்னா வேணாம்னா சொல்லப் போறீங்க? :-)

  வாழ்த்துகள் சிறில்.

 10. Anonymous சொல்கிறார்:

  ரெம்ப நன்றி குமரன்.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்