வருத்தமளிக்கும் வலைப்பதிவுகள்?

அன்பு பதிவர் உலகமே..
கீழுள்ளதைப் படியுங்கள். வலைப்பதிவுகள் பற்றிய பொதுவான அபிப்பிராயங்கள் என்ன என்பதை உணர ஒரு வாய்ப்பு.

இத்தனை அருமையான சிந்தனைகளும், படைப்புக்களும் இருந்தும் நம்மை பலரும் கவனிக்காமல் இருப்பதன, வெறுப்பதன்் காரணங்களை ஆராய ஒரு வாய்ப்பு. கருத்துக்கும் எழுத்துக்கும் தொடர்பில்லாமல் நாம் பலநேரங்களில் செயல்படுவதன் விளைவு இது.

நாயே பேயே எனத் திட்டுபவர் சமத்துவம் பேசுவது நகை முரணா இல்லை வெறும்் முரணா?

இனி நண்பரின் ஆதங்கம்.

இணையத்தில் அடி வாங்காமல் இருக்க…..

தமிழ் இணைய உலகத்தில் சுமார் 9 மாதங்கள் சுற்றிய பிறகு கற்றுக் கொண்ட சில விஷயங்களை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இணையத்தில் அடி வாங்காமல் இருக்க இதை பின்பற்றலாம்.

1. திகவை எதிர்த்து கருத்து சொல்லாதீர்கள் – நீங்கள் மேல்சாதி வெறியர் என்று தாக்குதலுக்கு உள்ளாவீர்கள்.

2. திமுகவை எதிர்த்து கருத்து சொல்லாதீர்கள் – நீங்கள் தமிழின துரோகி என்று முத்திரை குத்தப்படுவீர்கள்.அல்லது நீங்கள் அதிமுக என்று சொல்லி மேலும் அவமானப்படுத்திவிடுவார்கள்.

3. நதி நீர் பிரச்சனை கிருஷ்ணா – ஆந்திர பக்கமும் நியாயம் இருப்பதாக நீங்கள் எழுதிவிட்டால் நீங்கள் ஆந்திராகாரர் என்று முத்திரை இடப்படுவீர்கள். முல்லைபெரியாறு – கேரள பக்கம் நியாயம் இருப்பதாக நீங்கள் எழுதிவிட்டால் நீங்கள் மலையாளக்காரர் என்று அடி வாங்குவீர்கள் காவிரி – கர்நாடக பக்கம் நியாயம் இருப்பதாக நீங்கள் எழுதவும் வேண்டுமா. அடி வாங்க ஆசையா

4. ஹிந்தி ஹிந்தி படித்தால் நல்லது பயனுள்ளது இப்படியெல்லாம் எழுதினால் நீங்கள் வடநாட்டுக்காரர். தமிழை அழிக்க முயலுபவர். வடநாட்டவரின் கைக்கூலி.

5. எழுத்தாளர் ஒரு எழுத்தாளரை பாராட்டி பதிப்போ வலைப்பூவிலோ எழுதுவதற்கு முன்பு அவர் என்ன சாதியை சேர்ந்தவர் என்று தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியம். அது தெரியாமல் எழுதி மாட்டிக் கொள்ளாதீர்கள். அவர் சாதி பெரும்பான்மையாக இருந்தால் அவர் கதை நல்ல கதை என்று எழுதி தப்பித்துக் கொள்வது நல்லது.

6. திரைபடம் எஸ்பிபி நன்றாக பாடுகிறார் என்று நீங்கள் எழுதினால் நீங்கள் ஆந்திரா ஜால்ரா யேசுதாஸ் பற்றி எழுதினால் நீங்கள் மலையாளக்காரர் ஏஆர் ரகுமான் பற்றி எழுதினால் நீங்கள் முஸ்லீம் என்று சொல்லி இந்துக்களின் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடலாம்

7. இதிகாசம்-புராணம் ராமாயணம் மஹாபாரதம் பற்றி முடிந்த அளவு தவிர்க்கவும். அது ஆரியர்கள் எழுதியது. அதனால் திராவிடர்களுக்கு பிடிக்காது. ஏன் வம்பு. நீங்கள் ஐயோ நான் திராவிடன் தான் இருந்தாலும் ராமாயணம் பிடிக்கும் என்று சொன்னால் உங்கள் Birth Certificate ஐ இணையத்தில் போடுமாறு கேட்பார்கள்.

8. பிறப்பாலா வளர்ப்பாலா நீங்கள் வலைப்பூவில் பின்னூட்டம் இடுவதற்கு முன்பு வலைப்பதிவர் பிறப்பால் தமிழரா வளர்ப்பால் தமிழரா என்று பார்த்து பிறகு பின்னூட்டம் இடவும். ஒருவேலை வளர்ப்பால் தமிழராக இருந்தால் உங்களுக்கும் ஆப்புதான்.

9. ஷ ஜ ஸ க்ஷ இது போன்ற வடமொழி எழுத்துக்களை எழதினால் நீங்கள் தமிழில் கலப்படம் செய்கிறீர்கள். சமஸ்கிருதத்தை ஆதரிக்கிறீர்கள். தமிழ் ஆவலர்களால் உங்களுக்கு கண்டனம் வரலாம். அதனால் ஷாஜஹானை சாசகான் என்றும் கமலஹாசனை கமலகாசன் என்றும் ரஹ்மானை ரகுமான் என்றும் கிருஷ்ணனை கிருட்டிணன் என்றும் குறிப்பிடுவது நல்லது.

10. அடிவாங்காமல் தப்பிக்க எல்லா இடத்திற்கும் போய் வாருங்கள். படித்து வாருங்கள். அநாவசியமாக கருத்தை எழுதி கெட்ட பேர் வாங்காதீர்கள்.

11. பின்னூட்டம் பின்னூட்டம் இடவேண்டும் என்று கை அரித்தால்- ஒருவேளை நீங்கள் கருத்துக்களங்களில் உறுப்பினராக இருந்தால் விவாகாரமான தலைப்புகளுக்கு பின்னூட்டம் இடுவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை. அந்த தலைப்பிற்கு சுமார் 10 பின்னூட்டம் வரை காத்திருங்கள். பிறகு அதில் பெரும்பான்மை அந்த தலைப்பிற்கு ஆதரவாக பேசினால் நீங்களும் அதற்கு ஆதரவாக எழுதிவிட்டு போவது நல்லது. நடுநிலையுடன் பேசுகிறேன் பேர்வழி என்று எதையாவது எழுதி வம்புக்கு ஏன் போகிறீர்கள்.

12. தினமலர் ஹிந்து போன்ற பத்திரிக்கைகளை மேற்கோள் காட்டினால் நீங்கள் ஆரிய கைக்கூலி. தினகரன் தமிழ் முரசு மேற்கோள் காட்டினால் நீங்கள் திராவிட கைக்கூலி. இணையத்தில் எது பெரும்பான்மை என்பதை பார்த்து நடந்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம்

13. சோ என்று தெரியாமல் கூட எழுத வேண்டாம். அச்சோ என்று எழுத நினைத்தால் அச் என்று நிறுத்திக் கொள்ளுதல் நல்லது

14. முடிந்த அளவு தமிழ் நாடு செய்வதெல்லாம் சரி தமிழர்கள் செய்வது எல்லாம் சரி என்றே எழுதுங்கள். நம் பக்கமும் தவறு இருக்கிறது என்று சொல்லி துரோகி என்று முத்திரைக்கு ஆளாகாதீர்கள்.

15. கடவுள் கடவுளை பற்றி எழுத நினைத்தால் சைவ மதத்தை பற்றி மட்டும் எழுதினால் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது. சிவனை பற்றி மட்டும் எழுதினால் நல்லது. வேறு கடவுள்களை எழுதினால் அவர்கள் ஆரிய கடவுள் என்பதனால் நீங்கள் ஆரியர் என்ற அவபெயருக்கு ஆளாக நேரிடலாம். முடிந்தால் கடவுளை பற்றி எழுதுவதையும் மதங்களை பற்றி எழுதுவதை பற்றியும் தவிர்க்கலாம். கேட்கமாட்டேன் என்றால் அனுபவியுங்கள்

16. ஆக நீங்கள் அரசியல் எழுதினால் கட்சிக்காரர் என்றும் நீங்கள் இந்தியராக நினைத்து எழுதினால் பிற மாநிலத்தவர் என்றும் நீங்கள் கடவுளை பற்றி எழுதினால் இந்த மதத்தவர் என்றும் அதிலும் குறிப்பிட்ட கடவுளை பற்றி எழுதினால் இந்த இனத்தவர் என்றும் பார்த்து பார்த்து தாக்குதல் நடத்த ஒரு கூட்டம் கணினி படித்து தமிழ் பயின்று இணையத்தில் அலைகிறது. அவர்களுக்கு வேலையே இது போன்ற பதிவுகளை தேடிப்பிடித்து அசிங்கப்படுத்துவது தான்.

17. போகக்கூடாத இடங்கள் 1. மறைந்த தலைவர்களை பற்றி அசிங்கமாக எழுதும் வலைப்பூக்கள் 2. தமக்கு பிடிக்காத கருத்தை கூறும் வலைஞர்களின் பிறப்பை பற்றியும் குடும்பத்தை பற்றியும் தரக்குறைவாக எழுதும் வலைப்பூக்கள் 3. தமிழை எத்தனை கேவலப்படுத்தமுடியுமோ அத்தனை கேவலமான வார்த்தைகளை வரிக்கு நாலாக பயன்படுத்தும் தளங்கள்.

18. நான் செய்த தவறு நான் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள். முதலில் தமிழ் இணையதளங்களை கண்ட மகிழச்சியில் எல்லா இடங்களிலும் நிஜ பெயர் விபரம் கொண்டு பதித்துக் கொண்டேன். தமிழ் இணைய உலகம் மிகவும் தரம் குறைந்த நிலையில் இருப்பதால் Anoymous ஆக இருப்பதே நல்லது. எனக்கு இப்போது முழுவதும் நனைந்துவிட்டதால் முக்காடு எதற்கு என்று விட்டுவிட்டேன். 19. மதநல்லிணக்கமா – ஹா ஹா நீங்கள் ஒரு மதத்ததில் இருந்து மற்ற மதத்தையோ பாராட்டி பேசினால் உங்களுக்கு இருமுனை தாக்குதல் தங்கள் மதத்திலிருந்தும் மற்ற மதத்தவர்களிடமிருந்தும் வரும். உங்கள் மதத்தவர்கள் – மத துரோகி என்றும் மற்ற மதத்தவர்கள் – உளவாளி என்றும் உங்களை சொல்லக்கூடும். இதே ஃபார்முலா சாதிக்கும் பொருந்தும்.

19.. கொசுறு – எதை செய்தால் இணையத்தில் பிரபலம் அடையலாம். நீங்கள் ஏதோ நல்ல கவிதை கட்டுரை கதைகள் எழுதினால் இணையத்தில் பிரபலம் அடையலாம் என்று எண்ணியிருந்தால் நீங்கள் ஒரு முட்டாள். வலைப்பூவை துவங்கி மிகவும் கேவலமாக கெட்ட வார்த்தைகள் அதிகம் கொண்ட பதிப்புகளை இடவேண்டும். அதை தமிழ் வலைப்பூ திரட்டிகளுக்கு அனுப்ப வேண்டும். பிறகு அவர்களே அதை பிரபல படுத்திவிடுவார்கள்.
பரிமாற்றம் தொடரும்…..

பி:கு – நண்பரின் அனுமதியின்றி இதை வெளியிடுகிறேன். அவருக்கு ஆட்சேபமிருப்பின் மின்னஞ்சல் செய்யலாம்.

மேலும் சில ஆதங்கங்களை அவரது பக்கத்திலேயே சென்று படியுங்கள்

Popularity: 5% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....39 மறுமொழிகள் to “வருத்தமளிக்கும் வலைப்பதிவுகள்?”

 1. சிவபாலன் சொல்கிறார்:

  Good one!

 2. Anonymous சொல்கிறார்:

  ஆட்சேபணை இல்லை. :-)

 3. குமரன் (Kumaran) சொல்கிறார்:

  யாருங்க இது? ரொம்ப நல்லா எழுதியிருக்காரு. :-))

 4. SurveySan சொல்கிறார்:

  மொத்தத்துல எழுத்து சுதந்திரத்த ஒழுங்கான விஷயத்துக்கு பயன்படுத்தக் கூடாது.
  :)

 5. மணிகண்டன் சொல்கிறார்:

  //சோ என்று தெரியாமல் கூட எழுத வேண்டாம். அச்சோ என்று எழுத நினைத்தால் அச் என்று நிறுத்திக் கொள்ளுதல் நல்லது
  //

  :))))

 6. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  சுட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன

 7. மின்னுது மின்னல் சொல்கிறார்:

  அத்துனையும் உண்மை

  பல நேரங்களில் நான் பிளாக்கை விட்டு போக எண்னியதுண்டு

  இப்போதும்…

 8. மோகன்தாஸ் சொல்கிறார்:

  சிறில் இதுபோல் நிறைய கிடைக்கக்கூடும் இணையத்தில். ஆனால் யாரிடம் இருந்து நாம் எதை எடுக்கிறோம் என்று இருக்கிறது.

  நண்பரை தவறாகச் சொல்லவில்லை. நீங்கள் சொன்ன அனைத்தும் வாழ்க்கையில் எல்லா பக்கங்களிலும் கிடைக்கக்கூடியவை தான்.

  சொல்வதற்கு ஒன்றுமில்லை.

 9. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  மோகன்தாஸ்,
  நீங்க சொல்றதயோசிச்சு பார்த்தேன். உண்மைதான். குறிப்பா இணையத்தில் எதிர்கருத்துக்களை மிகவும் காட்டமாக முன்வைக்கும் பழக்கம் உள்ளது.

  என்றால் ஒரு புதிய தேவை ஒன்று இங்குள்ளது. இவைகளை பிரித்துக் காண்பிப்பது.

  யோசிக்கவேண்டிய விதயங்கள்.

 10. "வற்றாயிருப்பு" சுந்தர் சொல்கிறார்:

  //எஸ்பிபி நன்றாக பாடுகிறார் என்று நீங்கள் எழுதினால் நீங்கள் ஆந்திரா ஜால்ரா //

  சொல்ட்டு போறாய்ங்க. கெடக்குறானுங்க களுதைங்கன்னு விடுவீங்களா..

 11. துளசி கோபால் சொல்கிறார்:

  அச்சச்…………!!!

 12. நளாயினி சொல்கிறார்:

  வலைப்பதிவில் மட்டும் இந்த பாகுபாடு இல்லை காலம் காலமாக இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி இத்தகைய பாகுபாடு இருந்த தான் வருகிறது எழுத்தாளரிடையே சங்கீத வித்தவான்களிடையே ஓவியர்களிடையே. ஒரு தனித்தீவுகளாக பிரிந்து போய் இருக்கிறார்கள். கவனித்தீர்களேயானால் புரியும்.

  தமக்கு தமக்கு என கொஞ்ச குhட்டத்தை சேர்த்த வைத்தக்கொண்டு இருப்பார். அவேன்ரையை இவை வாசிக்காயினம் இவேன்ரையை அவை வாசிக்காயினம். தாறுமாறா விமர்சிப்பினம். இது இரத்தத்திலை ஊறின விசயம்.

 13. theevu சொல்கிறார்:

  உங்கள் நண்பர் என்ன சாதி என்று சொல்லவில்லையே அதன் பின்தான் இந்த கட்டுரையைப்பற்றி எனது ஆதங்கத்தையோ பாராட்டையோ தெரிவிக்கமுடியும்.
  :)

 14. ILA(a)இளா சொல்கிறார்:

  நீங்க சொன்ன 10 கருத்தை முன்வைத்து
  “No Comments”

 15. Anonymous சொல்கிறார்:

  அல்லல் தீர்க்கும் “அமுத மொழிகள்” அருளிய லியோமோகன் வாழ்க! வாழ்க!!

  அனைத்தையும் தொகுத்து வழங்கிய சிறில் அலெக்ஸ் வளர்க! வளர்க!!

 16. G.Ragavan சொல்கிறார்:

  ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம். கருத்தை எதிர்ப்பதற்கும் கருத்து சொல்கிறவரை எதிர்ப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

  // திரைபடம் எஸ்பிபி நன்றாக பாடுகிறார் என்று நீங்கள் எழுதினால் நீங்கள் ஆந்திரா ஜால்ரா யேசுதாஸ் பற்றி எழுதினால் நீங்கள் மலையாளக்காரர் ஏஆர் ரகுமான் பற்றி எழுதினால் நீங்கள் முஸ்லீம் என்று சொல்லி இந்துக்களின் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடலாம் //

  இதுல பாத்தீங்கன்னா….இசையரசி பி.சுசீலா மற்றும் எஸ்.ஜானகி நன்றாகப் பாடுறாங்கன்னு எழுதுனா ஆந்திரா ஜால்ரா பட்டம் கிடைக்காது. சின்னக்குயில் சித்ரா/ஜெயச்சந்திரன் நல்லா பாடுறாருன்னா மலையாள ஜால்ரா பட்டம் கிடைக்காது. அது ஏங்க? நாராயணா நாராயணா….

 17. G.Ragavan சொல்கிறார்:

  //// திரைபடம் எஸ்பிபி நன்றாக பாடுகிறார் என்று நீங்கள் எழுதினால் நீங்கள் ஆந்திரா ஜால்ரா யேசுதாஸ் பற்றி எழுதினால் நீங்கள் மலையாளக்காரர் ஏஆர் ரகுமான் பற்றி எழுதினால் நீங்கள் முஸ்லீம் என்று சொல்லி இந்துக்களின் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடலாம் //

  இதுல பாத்தீங்கன்னா….இசையரசி பி.சுசீலா மற்றும் எஸ்.ஜானகி நன்றாகப் பாடுறாங்கன்னு எழுதுனா ஆந்திரா ஜால்ரா பட்டம் கிடைக்காது. சின்னக்குயில் சித்ரா/ஜெயச்சந்திரன் நல்லா பாடுறாருன்னா மலையாள ஜால்ரா பட்டம் கிடைக்காது. அது ஏங்க? நாராயணா நாராயணா…. //

  டிஸ்கி போடம விட்டுட்டேங்க. எனக்கு பாலு யேசுதாஸ் பாட்டுகள் பிடிக்கும். நேத்து போட்ட முருகனருள் பாட்டு கூட யேசுதாஸ் பாடுனதுதான். மேல சொன்னது விவாதத்துக்கு.

 18. Anonymous சொல்கிறார்:

  mothalla ivaru http://vivasaayi.blogspot.com/2007/06/blog-post_2446.html.
  ippo neengala?

  thirudana parthu thirunthanum.

 19. வடுவூர் குமார் சொல்கிறார்:

  திரு லியோ மோகன்,மனது கசந்த பிறகு போட்ட பதிவு.அதில் பின்னூட்டம் இட்டதால் ஞாபகம் உள்ளது.
  சம்ஸ்கிரதத்தில் ஆர்வம் உள்ளவர் போலும்,அவருடைய பண்முக பதிவுகள் தமிழ்மண்றத்தில் காணலாம்.

 20. வடுவூர் குமார் சொல்கிறார்:

  சுட்டி கொடுக்க மறந்துவிட்டேன்.
  இங்கு காணலாம்.

 21. Anonymous சொல்கிறார்:

  சிறில்,

  இது முன்பே நண்பர் லியோ மோகன் அவர்கள் பதிப்பித்திருந்தார் என்று நினைக்கிறேன். பார்த்து ஆதங்கம்தான் பட்டுக்கொள்ளமுடியும். We are part of this and have no way around it!

  -யு.எஸ்.தமிழன்

 22. ஆதிபகவன் சொல்கிறார்:

  வலையுலகில் இதெல்லாம் சகஜமப்பா!

  சிறில், இப்படியெல்லாம் எழுதி திட்டு(பின்னூட்டம்) வாங்கினால்தான் நீங்கள் ஒரு வலைப்பதிவாளர். அதிகமாக திட்டு வாங்கினால் பிரபலமான வலைப்பதிவாளர்.

  அவ்வளவுதான், விட்டுத்தள்ளுங்க.

 23. மாயாவி சொல்கிறார்:

  நாம எல்லோருமே ப்ளாக்ல வெட்டியா ஆணி புடுங்கிக்கிட்டுதான் இருக்கிறோம். இதுல யாரு என்ன சொன்னா என்ன?

 24. Anonymous சொல்கிறார்:

  பத்து பதிவு எழுதுறாங்களோ இல்லையோ பத்து புல்லட் பாயிண்ட் போட்டு அப்பப்ப பதிவு போடலைன்னா அப்படியே கிறுகிறுன்னு வந்துருது? வாள்க.

 25. ramachandranusha சொல்கிறார்:

  இல்லை சிறில். திரு. மோகன் கூறியுள்ளது ஓரளவு உண்மை என்றாலும் கொஞ்சம் பிரச்சனைகளை அதிகபப்டுத்தி சொல்லுகிறார்
  போல் தோன்றுகிறது.நாளாயினி மேடம் சொல்லியதுப் போல பிரச்சனை எங்கு இல்லை. எங்கோ ஓரிருவர் செய்யும் செயலை பெரியதாய் எண்ண வேண்டாம் என்பதே என் அபிப்ராயம்.
  புதியதாய் வந்த delphine மேடம், சிவகாசி ஸ்ரீனிவாசன் இவர்கள் பெயரை பின்னுட்டங்களில் கூட நான் பார்த்ததில்லை. ஆனால் நன்றாக எழுதினால் எல்லாரும் தேடி வந்துப் படிப்பார்கள். கமெண்ட்டும் போடுவார்கள் என்பதுக்கு இவர்களே
  எடுத்துக்காட்டு. காலையில் பார்க்கிறேன் கிராண்ட் பிரிக்ஸ், பார்முலா ரேசில் கலந்துக் கொண்டவர், அலட்டிக் கொள்ளாமல் எட்டுப் போட்டு இருக்கிறார் :-) (ஜெசிலாவுக்கும், அருணாவுக்கும் நன்றி)
  தமிழ் பதிவுகளின் வளர்ச்சி ஆரோக்கியமாகவே உள்லது.

 26. வெங்கட்ராமன் சொல்கிறார்:

  தமிழ் வலைப் பூக்களைப் பத்தி ஆராய்ச்சி பண்ணி இவ்வளவு அருமையா விளக்கம் கொடுத்த அவருக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம்.

  அடுத்த வலைப் பதிவர் சந்திப்புல கொடுக்க ஏற்பாடு பண்ணீடுங்க. . . . .

 27. லக்கிலுக் சொல்கிறார்:

  லியோ மோகனின் கருத்துக்களை படிக்கும் போது சோவே ஒரு வலைப்பூவை தொடங்கி எழுதினால் எப்படி இருக்குமோ அதுபோல இருக்கிறது :-)))))

 28. உண்மைத் தமிழன்(15270788164745573644) சொல்கிறார்:

  உண்மைதான் சிறில் ஸார்.. இது வலையுலகத்திற்குள் நுழைவதற்கு முன் அனைவரும் படிக்க வேண்டிய குறள்கள் இவை.

  நானும் இதை முன்பே படித்திருந்தால் இதன்படி நடந்து ‘நல்ல பையன்’ என்று பெயரெடுத்திருப்பேன்.. ம்.. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்..

  எழுதிய மோகன் ஸாருக்கும், எடுத்துக் கொடுத்திருக்கும் உங்களுக்கும் நன்றி..

  அடுத்து வருகின்ற அனைத்து வலைப்பதிவர் கூட்டங்களிலும் இதை ஜெராக்ஸ் எடுத்து அனைவருக்கும் தர வேண்டும். ம்.. கொடுத்திரலாமா..?

 29. dondu(#11168674346665545885) சொல்கிறார்:

  ஏன் பயப்பட வேண்டும்? சோ அவர்களைப் பற்றி பேச வேண்டுமானால் கண்டிப்பாக பேசுவேன். எந்த நாதாறி வந்து என்னைக் கேட்க முடியும்? என்னைத் தாக்காத தாக்குதல்களா?

  நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல தமிழ் வலைப்பூ எனக்கு பல கதவுகளை திறந்தது. நன்றாக பணமளிக்கும் வாடிக்கையாளர்களையும் தேடித் தந்தது. தமிழ்மணம் போன்ற திரட்டிகள் என்னைப் போன்றவர்களுக்கு நல்ல லிஃப்ட் தந்தன. காசி, ம்யூஸ், மாசிவகுமார், ஜோசஃப், வஜ்ரா, எஸ்கே என்னும் சைபர் பிரும்மா, குழலி, மதுசூதனன், செல்வன், உண்மைத் தமிழன், ஓசை செல்லா, மாயவரத்தான், செந்தழல் ரவி, இன்னும் பலர் போன்ற பல நல்லவர்களையும் வல்லவர்களையும் அறிமுகப்படுத்தியது.

  அசிங்கப் பின்னூட்டங்கள், போலி டோண்டு போன்ற கெட்ட விஷயங்கள் வந்தாலும் அவற்றைத் துணிவோடு எதிர்க்கொண்டு போராட எனக்கு வலிமை தந்தது.

  வருத்தமளிக்கும் வலைப்பதிவுகளை லட்சியம் செய்தால்தான் அவற்றால் வருத்தமளிக்க இயலும் என்பதை மறக்காதீர்கள்

 30. கோவி.கண்ணன் சொல்கிறார்:

  வலையில் புனித பிம்பமாக உலாத்தனும் என்றால் அந்த 19 பாயிண்டை பாலோ பண்ணனுமா ?

  :)))))

  பிறரை குற்றம் சொல்லும் விரலும் கையும் எல்லோருக்கும் இருக்கிறது.

 31. சீனு சொல்கிறார்:

  சூப்பரப்பு.

  //நீங்கள் அதிமுக என்று சொல்லி மேலும் அவமானப்படுத்திவிடுவார்கள்.//

  நீங்கள் அதிமுக என்று சொல்லி “மேலும்”(?) அவமானப்படுத்திவிடுவார்கள்.

  //அச்சோ என்று எழுத நினைத்தால் அச் என்று நிறுத்திக் கொள்ளுதல் நல்லது//
  //அச்சச்…………!!!//

  அச்சச்’சோ’!!! (‘கோடிட்ட இடத்தை நிரப்புங்கள்’ போட்டிதானே???!!!)

  //பல நேரங்களில் நான் பிளாக்கை விட்டு போக எண்னியதுண்டு//

  ம்ஹூம். இந்த கழிசடைகளுக்காக (அடடா, மாட்டிக்கிட்டேனா!!) நாம் ஏன் ஓடவேண்டும். இவர்களை ஒதுக்கிவிடுங்கள்.

  20. இதனை எல்லாம் தவிர்க்க வேண்டுமென்றால், தமிழ்மணம் பக்கமே வரவேண்டாம்.

  டோண்டூ சார் சொன்னதும் ஓ.கே.தான். (இதுக்கும் வாங்கி கட்டிக்க போறேனா?)

 32. ஜெஸிலா சொல்கிறார்:

  //போகக்கூடாத இடங்கள் 1. மறைந்த தலைவர்களை பற்றி அசிங்கமாக எழுதும் வலைப்பூக்கள் 2. தமக்கு பிடிக்காத கருத்தை கூறும் வலைஞர்களின் பிறப்பை பற்றியும் குடும்பத்தை பற்றியும் தரக்குறைவாக எழுதும் வலைப்பூக்கள் 3. தமிழை எத்தனை கேவலப்படுத்தமுடியுமோ அத்தனை கேவலமான வார்த்தைகளை வரிக்கு நாலாக பயன்படுத்தும் தளங்கள்.// எழுதியவர், தவிர்க்கப்பட வேண்டிய வலைப்பூக்களென்று ஒரு பட்டியல் தந்தால் என் கணிணிக்கு தடை உத்தரவு கொடுத்துவிடலாம். கேட்டு சொல்லுங்க.

 33. Balaji சொல்கிறார்:

  ஒரு பதிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வருபவர்கள்தான் மெனக்கட்டு கருத்து எழுதுவார்கள். பாராட்டி எழுதுவதற்கு நிறைய பொறுமை தேவை!

 34. யோசிப்பவர் சொல்கிறார்:

  //வலைப்பதிவில் மட்டும் இந்த பாகுபாடு இல்லை காலம் காலமாக இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி இத்தகைய பாகுபாடு இருந்த தான் வருகிறது எழுத்தாளரிடையே சங்கீத வித்தவான்களிடையே ஓவியர்களிடையே. ஒரு தனித்தீவுகளாக பிரிந்து போய் இருக்கிறார்கள். கவனித்தீர்களேயானால் புரியும்.
  //
  உண்மைதான். மொத்தத்தில் உலகமே இப்படித்தான் இருக்கிறது. நமது தொகுதி வலைப்பதிவுகள் என்பதால் நாம் இதைப்பற்றி மட்டும் கவலைப்படுகிறோம்!!!

  //திரு. மோகன் கூறியுள்ளது ஓரளவு உண்மை என்றாலும் கொஞ்சம் பிரச்சனைகளை அதிகபப்டுத்தி சொல்லுகிறார்
  போல் தோன்றுகிறது//
  அதிகமில்லை! குறைவாகத்தான் சொல்லியிருக்கிறார் என்பது என் கருத்து

  //ஆனால் நன்றாக எழுதினால் எல்லாரும் தேடி வந்துப் படிப்பார்கள்.//
  அப்படியெல்லாம் எல்லா நேரங்களிலும் நடப்பதில்லை

 35. Anonymous சொல்கிறார்:
 36. யோசிப்பவர் சொல்கிறார்:

  //ஒரு பதிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வருபவர்கள்தான் மெனக்கட்டு கருத்து எழுதுவார்கள். பாராட்டி எழுதுவதற்கு நிறைய பொறுமை தேவை!

  //

  இதுவும் உண்மை. அந்தப் பொறுமை நம்மில் நிறைய பேருக்கு இல்லை; சிலசமயம் எனக்குகூட!!!

 37. பாண்டியன் சொல்கிறார்:

  என்னதான் இப்ப கம்பியூட்டர் முன்னாடி ஒக்காந்திருந்தாலும் ஒரு காலத்தில கூத்துக்காரணப் பாத்து கை தட்டித் திரிஞ்ச கூட்டம்தானே சார் நாமெல்லாம்.

 38. நெல்லை சிவா சொல்கிறார்:

  அருமையான அலசல், ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்று சொல்லக்கூடிய காலங்கள், கடந்து போய்விடுமோ என்று தோன்றுகிறது.

  ஆயினும் இதை எல்லாம் புறந்தள்ளி, செயல் வீரனாய் நம் பணியைச் செய்து கொண்டிருந்தால், கூச்சல் குறையலாம்..

 39. Hariharan # 03985177737685368452 சொல்கிறார்:

  ஜாதகப் பரிவர்த்தனை இடத்தை விடவும் ஜாதி அதிகம் புழங்கும் இடமாக தமிழ் வலைப்பதிவுகள் திகழ்கிறது.

  கடும் கருத்து விமர்சனம் என்பது தனித்த “நாறவசவு” எனும் நிலையை எய்தி இருக்கிறது 100% படித்தவர்கள் மட்டுமே புழங்கும் தமிழ் வலைப்பதிவுலகில்!

  என்ற போதும் மன உறுதியை அதிகப்படுத்தும் ஆற்றலைத் தரும் இடமாகவும், எதிர்தரப்புக் கருத்துக்கள், உணர்வுகள், விஷயங்கள் பல அறிதல் என்பதாகிய நல்லவைகளும் தமிழ் வலைப்பதிவுலகில் இருக்கின்றன.

  முட்கள் நிறைந்த செடியில் பழம் பறித்துச் சாப்பிடுவது மாதிரியான செயல் தமிழ் வலைப்பதிவுலகில் இருப்பது என்பது. நிறைய முட்கள் குத்திக் காயப்படுத்தினால் ஆசுவாசம் செய்து, ஓய்வெடுத்துக்கொண்டு மீண்டும் பழம் பறிக்கும்/சுவைக்கும் வேலையைச் செய்ய வேண்டியதுதான்.

  லியோ மோகனின் கருத்துக்கள் மிகையாகத் தெரியவில்லை. இருப்பதை அப்படியே ரிப்ளெக்ட் செய்திருக்கிறதாகவே உணர்கிறேன்.

  நல்ல கையேடு புதியவர்களுக்கு!

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்