நுண்ணரசியலின் நுண்ணரசியல்

நச் கவிதை எழுதியாச்சா?>>>>>>>

நுண்ணரசியலின் நுண்ணரசியல்
===============================

இந்த வருடத்தின் மிகச் சிறந்த இணையத் தமிழ் வார்த்தையாக நான் தேர்ந்தெடுத்திருப்பது ‘நுண்ணரசியல்’.

வருடக் கடைசி என்றாலே ‘சிறந்த’ எனும் அடைமொழிக்கு ஒரு தனி சிறப்பு வந்துவிடுகிறது. அஜித் ரசிகர்கள் ‘தலை’ சிறந்த என்று கூறுவதுவும் வழக்கம். இந்த வருடத்தின் சிறந்த மனிதர் என ஒரு தேர்வு, இந்த வருடத்தின் சிறந்த திரைப்படம் என இன்னொன்று, சிறந்த பாடல், சிறந்த முதல்வர், சிறந்த மாணவர் என ‘சிறந்த’ இல்லாத துறையே இல்லை.

ஒரு வருடத்தின் சிறந்த சிறப்பை கண்டு பிடிக்காமல் அடுத்த வருடத்தில் கால் வைக்கக் கூடாது என்பது மனிதனின் மரபணுவில் பதிக்கப்பட்ட விஷயமாகிவிட்டது.

ஆங்கிலத்தில் சிறந்த இணைய வார்த்தையை தேர்ந்தெடுக்கும் வழக்கம் கடந்த சில வருடங்களாக சிறப்பு பெற்றுவரும் ஒரு சிறந்த பழக்கமாயுள்ளது. இதைபோலவே தமிழ் இணையத்தில் இந்த வருடத்தின் சிறந்த வார்த்தையாக நான் தேர்ந்தெடுத்திருப்பது ‘நுண்ணரசியல்’.

நுண்ணரசியல் எனும் இந்த சிறந்த வார்த்தையை விவரிப்பது ஒரு நுண்செயல். முடிந்தவரை சிறப்பாக செய்ய முயலுகிறேன்.

நுண்+அரசியல் = நுண்ணரசியல் என நினைத்து நுண் எனும் வார்த்தைக்கு Lifco அகராதியில் அர்த்தம் தேடிக் கொண்டிருப்பவர்களுக்காக நுட்பம்+அரசியல் = நுண் அரசியல்.

அரசியலில் ஏதோ ஒரு நுட்பம் உள்ளது அந்த நுட்பத்தை உணர்ந்தவர்கள் பயன்படுத்துகிற வார்த்தைதான் நுண்ணரசியல். நுண் என்பதற்கு சிறு எனும் பொருளும் உள்ளது நுண்ணுயிரிகள் எனும் வார்த்தையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

நுண்ணரசியல் எனும் வார்த்தைக்கான தேவை என்ன? வெறும் அரசியல் என்பது சாமான்யனுக்கும் புரிகிற வார்த்தை. டீ கடை பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு சிந்துபாத் படக்கதையில் உரையாடலில்லாத இரண்டு படங்களில் என்ன நடக்கிறது என்பதை ஆராய்பவர் முதல் ஐநாவின் தோட்டக்காரர் வரை எல்லோருக்கும் ‘அரசியல்’ தெரியும்.

ஆனால் நுண்ணரசியல்? அது எல்லோருக்கும் தெரியாத ஒன்று. அரசியல் போன்ற சாதாரண பொதுப் பொருள் அல்ல நுண்ணரசியல். சொல்லப்போனால் நுண்ணரசியலுக்குள்ளே இருக்கும் நுண்ணரசியல் அந்த வார்த்தையை பயன்படுத்துபவருக்கு மட்டுமே தெரிந்த ஒரு நுண்ணரசியல். அதிலுள்ள அரசியலை எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளலாம் ஆனால் ‘நுண்ணை’ அவர் தவிர்த்த பிறரால் புரிந்து கொள்ளவே முடியாது.

உதாரணத்துக்கு.

அரசியல் : அவன் வழுக்கி விழுந்தான்
நுண்ணரசியல் : அவள் வழுக்கி விழுந்தாள்

அரசியல்: என் வாரிசு எனக்குப் பின் தலமை ஏற்க மாட்டார்
நுண்ணரசியல்: அவருக்கு எல்லா தகுதியும் இருக்கிறதென்கிற போதும்.

அரசியல்: என் மனைவி அழகானவள்
நுண்ணரசியல்: ஆமா.

முதல் உதாரணத்தில் வழுக்கி விழும் ஒரு நிகழ்வில் ஆணைப் பொருத்துகையில் அரசியல் வெளிப்படலாம் (படாமலும் இருக்கலாம் அது அவர் எங்கே விழுகிறார் என்பதைப் பொறுத்தது) ஆனால் ஒரு பெண்ணை வழுக்கி விழுந்தார் என்பதில் ஒரு நுண்ணரசியல் இருக்கிறது. ஒரே பொருளுடைய சொற்றொடர். ஒன்றில் நுண் உள்ளது இன்னொன்றில் நுண் இல்லை.

இரண்டாம் உதாரணம் ஒரே வாக்கியத்தில் முதல் பகுதியில் அரசியலும் இரண்டாம் பகுதியில் நுண்ணரசியலும் கொண்டது.

மூன்றாம் உதாரணத்தில் ஒரு நுண்ணரசியல் உரையாடல் காண்பிக்கப்பட்டுள்ளது. ஒருவர் தன் மனைவியை அழகானவள் என்பதில் அரசியல் இருக்கலாம் (இல்லாமலும் இருக்கிறார் அது அவர் எந்த மனைவியைக் குறிக்கிறார் என்பதில் உள்ளது). அதை இன்னொருவர் ஆமோதிப்பதில் நுண்ணரசியல் உள்ளது.

இதிலிருந்து என்ன தெரிகிறது.. அரசியலுக்கும் நுண்ணரசியலுக்கும் இடையேயான வித்தியாசத்தை நுண்கவனிப்பின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

உலகில் உள்ள எதுவும் இரண்டு வகைக்குள் அடங்கிவிடும் ஒன்று அரசியல் இன்னொன்று நுண்ணரசியல். இதற்கிடைப்பட்ட வேறெந்த நுண்பகுப்பும் இல்லை. ஆகவே ‘நுண்’ சேர்த்தது நுண்ணரசியல் மற்றவை எல்லாமுமே வெறும் சாதாரண, அடைமொழியில்லாத, அரசியல்கள்.

பொதுவாக ஒரு கருத்தை அலங்கரிக்க தேர்ந்தெடுத்து வார்த்தைகளை பயன்படுத்துவோம், நுண்ணரசியலில் அரசியல் எனும் வார்த்தையே அலங்கரிக்கப்படுள்ளது.

நுண்ணரசியல் எனும் வார்த்தைக்கான அடைமொழிகள் என்னென்ன ?
அதாவது ஆதிக்க, அவதூறு, பதிவுலக என்பதுபோல எதை வேண்டுமென்றாலும் இதற்கு முன் அல்லது பின் சேர்க்க இயலும். உலகில் உள்ள எல்லாவற்றிலுமே ஒரு நுண்ணரசியல் இருக்கிறது என்பதால்தான் இது.

நுண்ணரசியலுக்கு ஒத்த ஆங்கில வார்த்தை எது எனப் பார்த்தோமேயானால். அரசியல் என்பது Politics என்றும் நுட்பம் என்பது technique என்றும் வருகிறது. ஆக Politecnic என்பதுவே நுண்ணரசியலின் ஆங்கில மொழிபெயர்பாக இருக்கும்.

சாதாரண விஷயம் என நாம் நினைக்கும் அத்தனை விஷயங்களிலும் நுண்ணரசியல் உள்ளது. அரசியலுக்கு இல்லாத இடங்களிலும் நுண்ணரசியல் இருக்கும். அதுதான் நுட்பம்.

ஒரு பட்டுப் புடவை வாங்கினால் ஒரு கர்சீப்ஃ இலவசம் என்பதன் நுண்ணரசியல் குறித்து ஒரு வாழ் நாள் முழுக்க விவாதிக்கலாம். (இந்த விவாதம் இன்னும் முடிவடையவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்)

ஒரு மோர் வாங்கி குடிப்பதன் நுண்ணரசியல் வெயிலின் கொடுமையில் துவங்கி, மணலி ஆய்வுச்சாலையின் புகைபோக்கிவழியே பயணித்து, ஓசோன் அடுக்கில் ஓட்டையிட்டுக்கொண்டு, ஐநாவின் வராந்தாவில் உலாவிவிட்டு, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை வெளுத்துவிட்டு அல் கோரின் நோபலைக் நோண்டிவிட்டு அப்படியே அண்ட சராசரங்களையும் அளந்துவிட்ட பின்னர் முடிவடையும்.

ஆக நுண்ணரசியல் எனும் இந்த நுட்பம் மிக்க வார்த்தையை இந்த வருடத்தின் சிறந்த இணையத் தமிழ் வார்த்தையாக அறிவிக்கிறேன்.

இந்த கட்டுரையின் நுண்ணரசியலைத் தேடிக் கொண்டிருப்பவர்கள் அதற்குப் பதில் கூகிளில் தேடினால் இன்னும் சிறப்பான புரிதல்கள் கிடைக்கும். அதாவது அதில் வரும் 48 பக்கங்களையும் படிக்க உங்களுக்கு நேரம் இருந்தால்.

====
நன்றி: தமிழோவியம்
====

Popularity: 7% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....15 மறுமொழிகள் to “நுண்ணரசியலின் நுண்ணரசியல்”

 1. கப்பி சொல்கிறார்:

  கலக்கல்!! :)

  என் அறிவுக் கண்ணை தொறந்துட்டீங்க :))

 2. ila சொல்கிறார்:

  எழுதியாச்சா? ஒரு கடுகை வெச்சு பல மலைகளை குடையறீங்க போல. ஆனாலும் பதிவின் ஆழமான கருத்தை ரசிச்சேன்.

 3. Radha Sriram சொல்கிறார்:

  எங்கெயோ போயிட்டீங்க சிறில்….:) நல்ல ஆராய்ச்சி….
  நுண்ணரசியல…..ஆரம்பிச்சது ராமனாதன் இல்லையா??

 4. //என் அறிவுக் கண்ணை தொறந்துட்டீங்க :))//

  இதுல என்ன நுண்ணரசியல் இருக்குதோ :)))

  இல்ல இது கண்ணரசியலா?

 5. இதானா அது.. இப்பத்தான புரிஞ்சிருக்கு. புரிய வைத்த சிறிலாரே வாழ்க வாழ்க. (இது நுண்ணரசியலாகுமா?)

 6. தஞ்சாவூரான் சொல்கிறார்:

  சிறில், ரொம்ப ‘நுண்ணிய’ முறையில ஆராஞ்சு இருக்கீங்க போல :)

 7. ravishankar சொல்கிறார்:

  நல்ல சொல்லாத்தான் பரிந்துரைச்சிருக்கீங்க..ஆனா, அதுக்கு நீங்க தந்திருக்க விளக்கம் முழுக்க சரின்னு ஒப்புக்க முடியலை..

  இந்த இடுகையில் எத்தனை முறை நுண்ணரசியல் என்ற சொல் வருதுன்னு ஒரு போட்டி வைக்கலாம் ;)

 8. ரவி,
  சும்மா காமெடி பண்ணியிருக்கேங்க. பகுப்புக்கள் குறிச்சொற்கள கொஞ்சம் பார்த்துடுங்க.
  It is supposed to be ‘Sattire’ :)

 9. சிறில் அண்ணாச்சி!
  குருவே சரணம்!! :-))

  //ரவி,
  It is supposed to be ‘Sattire’//

  It is Satire – அரசியல்
  It is “supposed” to be ‘Sattire’ – நுண்ணரசியல்
  சரி தானே தலைவா? :-))

 10. TBCD சொல்கிறார்:

  இந்தப் பதிவிலே அரசியல் இருப்பதாகத் தெரியவில்லை…

  நுண்ணரசியல் இருக்கா இல்லையா என்று தான் தெரியவில்லை.

 11. இந்த இடுகையை சொல் ஒரு சொல்லுக்கு பரிந்துரைக்கிறேன்.

  :)

  உள்குத்து என்பது தானே நுண்ணரசியல் ?

 12. TBCD
  கண்டுபிடிக்க முடியலண்ணாலே அது நுண்ணரசியல்தான்.. பரிட்சையில ஃபெயிலாயிட்டீங்களே

 13. ///It is Satire – அரசியல்
  It is “supposed” to be ‘Sattire’ – நுண்ணரசியல்
  சரி தானே தலைவா? :-))///

  kannabiran,
  நல்ல எடுத்துக்காட்ட சொல்லி பாஸ் ஆயிட்டீங்க போங்க :)

 14. TBCD சொல்கிறார்:

  நுன்னரசியல் கண்டுப்பிடிக்கிற அளவிற்கு வளரவில்லை…வளரவேண்டியிருக்கிறது என்பதை உணர்த்திய பதிவு..என்பதாலே…பாராட்டுக்கள்…

  (இது அரசியல,நுன்னரசியலா என்று கண்டுப்பிடிப்பவர்களுக்கு அண்ணன் அலெக்ஸ் பாண்டியன் பரிசு வழங்குவார்..)

 15. புதுசா இருக்கே!! :)

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்