‘அடி வாங்குக’ என வாழ்த்தியவர்

அடி வாங்குக! அதுவும் முடிவின்மையின் அடி வாங்குக என ஒருவர் என்னை வாழ்த்தியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?

எனக்கும் தமிழ் இலக்கியத்திற்குமான தூரம் முட்டத்துக்கும் சிகாகோவுக்குமான தூரத்தை விட அதிகம். எனக்குத் தெரிந்த தமிழ் இலக்கியமெல்லாம் பள்ளியில் உருப் போட்ட சில திருக்குறள்கள், ‘வானாகி மண்ணாகி’ எனத் துவங்கும் பாடல், சினிமாவில் கேட்ட சில பாரதியார் கவிதைகள், ஆனந்த விகடன், குங்குமம், குமுதம் இவற்றில் அடக்கம்.

எழுத்தாளர் சு.ரா மறைவின் போது திண்ணையில் சில கட்டுரைகளை படிக்க நேர்ந்தது அப்போதுதான் கன்னியாகுமரி மாவட்டத்தின் தமிழ் இலக்கிய பங்களிப்பை உணர முடிந்தது. நம்ம ஊரிலிருந்து இத்தனை பெரிய இலக்கியவாதிகளா எனும் ஆச்சர்யமே முதலில் என்னை தாக்கியது. நம் ஊரின் பெருமையை நாம் அதிகம் உணர்ந்திருப்பதில்லை. அடுத்தவர்கள் சொல்லத்தான் அது நமக்குப் பெரிதாய் படுகிறது.

அப்படி நான் மலைத்துப் போய் பார்த்த ஒரு எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள். அவரின் சில சிறுகதைகளைத்தான் இணையத்தில் படித்திருந்தேன். இப்படி தமிழில் எழுத ஆட்கள் இருக்கிறார்களா என எண்ணினேன்.

என் ‘அலைகள் பாறைகள் மணல் மேடுகள்’ வலைப்பதிவு குறித்து ஒரு மடல் அனுப்பியிருந்தார். பெருமையாக இருந்தது.

நண்பர் அரவிந்தன் நீலகண்டன் ‘ஜெயமோகனிடம் உங்களைப் பற்றி கேட்டேன். உங்க விசுவலைசேஷன் நல்லாயிருக்குண்ணு சொன்னார்’ எனச் சொல்லி என் தூக்கத்தை கெடுத்தார். தொலைபேசி எண்ணைத் தந்தார். ஒருமுறை அழைத்தேன் அவர் இல்லை. அதன் பின் முட்டம் புத்தகத்திற்காக அவரிடம் ஒரு அணிந்துரை கேட்டால் நன்றாயிருக்கும் எனும் எண்ணத்தில் அழைத்தேன். உடனே ஒப்புக் கொண்டார்.எனக்கு மிகவும் ஆச்சரியமாயும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அது என் எழுத்துக்காக கிடைத்த அங்கீகாரம் அல்ல. முட்டம் போன்ற கிராமங்களை பெருமைபட பேசும் ஆக்கங்களை வெளிக் கொண்டு வருவதில் அவருக்கு இருக்கும் ஆர்வம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

அணிந்துரையில் திரு. ஜெயமோகன் என்னை அடி வாங்கிக் கொள் என வாழ்த்தியுள்ளார். அவரின் தளத்தில் சென்று படிக்கவும்.

இன்றும் எனக்கும் இலக்கியத்துக்குமான தூரம் குறைந்துவிடவில்லை. ஆனால் அந்த பாதையில் கொஞ்சமேனும் நடக்க வேண்டும் எனும் எண்ணம் வந்துள்ளது.

யோசித்துப் பார்த்தால் முடிவின்மையின் அடி எல்லோருக்கும் விழுகிறது.  அதை உணர்ந்து கொண்டவர்கள் சிலரே.

Popularity: 7% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....2 மறுமொழிகள் to “‘அடி வாங்குக’ என வாழ்த்தியவர்”

  1. நல்ல வாழ்த்து. வாழ்க வளமுடன்.

    முப்பிணியும் உண்டாகட்டும்னு காளிதாசர் வாழ்த்துனது நினைவுக்கு வருது :)

  2. //முப்பிணியும் உண்டாகட்டும்னு //
    இதுக்கு என்னங்க அர்த்தம்?

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்