மெசியா அல்லது மீட்பர்

பஸ் ஸ்டாண்டில் கலகலத்துக்கொண்டிருந்த கல்லூரிப் பெண்களின் கூட்டம் ஒன்றை பார்த்துக் கொண்டே நின்றிருந்தான். ‘நம்ம ஊர் பொண்ணுங்க எதுவுமில்ல, தைரியமா பாக்கலாம்.’ அவன் அந்தப் பெண்களை நோட்டம் விடாமலிருந்தால் அவன் கல்லூரி மாணவன் என்று அடையாளம் காண முடியாது. கிராமத்திலிருந்து கல்லூரிக்கு வரும் மாணவனுக்கான இலக்கணங்கள் அத்தனைக்கும் ஒத்துப் போனான்.

எண்ணை வைத்து படிய வாரிய தலை, மூன்று நான்கு நாட்களாய் அணியப்பட்ட மேட்சிங் ஆகாத ஆடைகள்(இன்றைக்கு நீல பேண்ட் பழுப்பு சட்டை), சவரம் செய்யப்படாத இளம் முடிகளுடனான முகம், நீல நிற வார் பட்டையுள்ள ரப்பர் செருப்பு, சட்டை பொத்தான் துவாரத்தில் செருகப் பட்டிருக்கும் நீல மூடி கொண்ட ரேனால்ட்ஸ் பேனா, ஓரத்தில் தையல் அறுந்து தொங்கும் சட்டை பாக்கெட்.

பக்கத்தில் வெத்திலை போட்டு எச்சியை துப்பியவர் அவன் மீது புள்ளி ஓவியம் வரைந்திருந்தார். பார்வைகள் ஊடுருவாமல் இருக்கும்படி பெண்கள் ஒவ்வொருவராய் மாறாப்பை இழுத்து விட்டுக் கொண்டிருந்தனர்.

“குழந்தை!” சத்தம் வந்த திசையில் திரும்பினான். பள்ளியில் காப்பி அடித்து பிடிபட்டபோது அப்பா அவனை அப்படிக் கூப்பிட்டுக் கொண்டு அடிக்க வந்தது நியாபகம் வந்தது.

“குழந்தை!” அவனைப் பார்த்து சிரித்தபடியே நீண்ட நாள் கழித்து நண்பரை பார்த்தவர் சிரிப்புடன் நெருங்கி வருவதைப் போல அருகில் வந்தார் அந்த புதியவர்.

குழந்தை சாமிக்கு பிடிபடவில்லை. முகம் முழுக்க தாடி. பராமரிப்பற்ற நீண்ட தலை முடி. அழுக்கே நிறாமான வேட்டி. சட்டையில்லை. எலும்பாய் தேய்ந்த உடம்பு. நெற்றி முழுக்க திருநீறும் கழுத்தில் ரூத்ராட்ச மாலைகளும் தென் பட்டன.

அருகே வந்தார். ஆடைகளிலிருந்து புளித்த வாடை வந்தது. ரூத்ராட்ச மாலையில் ஆங்காங்கே சின்ன சிலுவைகள் தொங்கிக் கொண்டிருந்தன. பஸ் ஸ்டாண்டில் சாக்குப் பையில் குப்பை காகிதங்களோடு அழுக்கு சேர்ந்த கருப்பாய் போலிஸ் வராத இடங்களில் படுத்துக் கிடக்கும் ஆட்களைப் போலவே இருந்தார். குளித்திருந்தார் அதுதான் வித்தியாசம்.

“குழந்தை!” கணீர் குரல். கத்தி அழைத்தார். வாயிலிருந்து நாற்றம் வந்தது. தூரத்தில் பெண்கள் கூட்டம் இவர்களை கவனிக்க ஆரம்பித்திருந்தது.

“என்னையா கூப்டிய?” தைரியமாய் கேட்டான்.

“நம்ம ஊருக்குத்தான் வந்து கொண்டிருக்கிறேனப்பா.” புன்னகையுடன் உரக்கச் சொன்னார். வந்த வேகத்திலேயே திரும்பி நடந்தார்.

பின்னாலிருந்து பெட்டிக் கடைக் காரர் கேட்டார்,”தம்பி ஆளு யாராக்கும்?”

“தெரியல. பைத்தியம் போலிருக்கு.”

“உங்க பேரச் சொல்லுச்சே.”

“குழந்தைன்னுதானே சொன்னாரு.”

பஸ் வந்தது. சன்னல் வழியே கையிலிருந்த நோட்டு புத்தகத்தை சீட்டில் வைத்து இடம் பிடித்துவிட்டு ஏறி உட்கார்ந்தான். ‘உங்கள் ஊருக்குத்தான்…’ பஸ் கிளம்பியதும் அவர் இருக்கிறாரா என நோட்டம் விட்டான். ‘இனி ஊருக்கு பஸ் இண்ணைக்கு இல்ல. பைத்தியந்தான் போல’ என நினைத்தான். கலகலத்த கல்லூரிப் பெண்கள் கூட்டத்தில் இரண்டுபேர் இவனை பார்த்து தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டனர். பார்வையை விலக்கினான்.

குழந்தை சாமியின் ஊரில் ஆயிரம் வீடுகள்தான் இருக்கும். பதினேழு வருடங்களுக்கு முன்புவரை தமிழ் நாட்டில் கடுக்கன் விளை என ஒரு ஊர் இருப்பது யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. ஊர் முழுக்க ஒரே சாதியினர். ஆனால் இரண்டு மதத்தினர். நூறு வருடங்களுக்கு முன்பு கோவில் நிலத் தகறாரில் ஊர் பண்ணையாரின் மகன்களில் ஒருவர் தன் ஆட்களை கூட்டிக் கொண்டு போய் ஞானஸ்னானம் வாங்கிக் கொண்டு வந்தார் என பாட்டி சொல்ல கேள்வி பட்டிருக்கிறான். நூறு வருடங்களுக்கு முன்பு என்பது மிகை. எப்படியோ கடுக்கன் விளையில் பிள்ளையார் கோவிலும் மாதா கோவிலும் இருந்தன.

பண்ணையாரின் பிள்ளைகள் இருவரும் பிற்காலத்தில் ஒன்றாகினர். அப்போது துவங்கி இரண்டு கோவில்களிலும் ஊர் ஒன்றாய் கூடித் திருநாள் எடுக்கும் முறை அமலுக்கு வந்தது. பிள்ளையார் கோவிலுக்கு புனித சூசையப்பர் கோவில் நிலத்து காணிக்கைதான் முதலில் வரும். அதுபோல மாதா கோவில் சப்பரத்தை(ஆட்கள் சுமக்கும் தேர்) பிள்ளையார் கோவில் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள்தான் தூக்க முடியும் என்பது ஊர் கட்டு.

பதினேழு வருடங்களுக்கு முன்பு ஃபாதர் தேவராஜன் தாமஸ் அங்கு பங்குத் தந்தையாக இருந்தார். சர்க்கரை வியாதியின் உச்சகட்டத் தொல்லையால் கால்களிலெல்லாம் புண்களுடனும் எப்போதும் எரிச்சலுடனும் காணப்படுவார் அவர். பிள்ளையார் கோவில் இனிப்பு பொங்கல் பிரசாதத்தை சாப்பிடாமல் வைத்து கெட்டுப்போய் குப்பையில் போட்டார். பிள்ளையார் கோவில் நிர்வாகக் குழுவிலிருந்து நியாயம் கேட்கப் போனார்கள். மாதா கோயில் நிர்வாகிகளும் கூடியிருந்தனர்.
தேவராஜன் தாமஸ் வழக்கமான எரிச்சலுடன் பேசினார். “எனக்கு சர்க்கரை வியாதி சுகுமாறன். காலப் பாத்தியளா?” அங்கியை தூக்கி காட்டினார்.

“இருந்தாலும் குப்பையிலா போடுதது?” தலைவர் சுகுமாறன் தாமசின் காலைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கூட்டத்தில் ஒருவர் பேசினார்.

“மன்னிப்பு கேளுங்க.”

“ஃபாதர் எதுக்கு மன்னிப்பு கேக்கணும்?” மாதாகோவில் கூட்டத்திலிருந்து ஒரு குரல் எழுந்தது.

சுகுமாறன் எழுந்து நின்று பேசினார். “சாமி சொல்லுதார்லா. அவருக்கு சக்கரப் பொங்கல குடுத்திருக்கக் கூடாது. பட்டாணி குடுத்திருக்கலாம்லா.”

“இப்ப நம்ம தப்புங்கியளோ?”

“தப்பெல்லாமில்லப்பா… யார் மேலயும் தப்பில்ல போதுமா. இனிமே இப்டி நடக்காம பாத்துக்கலாம்” மாதா கோவில் கமிட்டி தலைவர் ஜெபராஜ் பேசினார்.

முனகல்களோடும் சில முறைப்புக்களோடும் அன்று கூட்டம் கலைந்தது. இரண்டு வாரத்தில் ஃபாதர் தேவராஜன் தாமஸ் சர்க்கரை வியாதியால் இறந்து போனார். அவரது கடைசி ஊர்வலத்தில் பிள்ளையார் கோவில் நிர்வாகத்திலிருந்து சுகுமாறனும் இன்னும் இரண்டு பெரியவர்களும் மட்டுமே கலந்து கொண்டனர்.

அடுத்தநாள் பிள்ளையார் கோவில் நோட்டிஸ் போர்டில் சாணி தெறித்திருந்தது. அதை அடுத்து பூட்டிக் கிடந்த மாதா கோவில் வாசலில் கெட்ட வார்த்தையில் ஏதோ எழுதி வைக்கப்பட்டிருந்தது. அதன்பின் நடந்த கலவரத்தில் இருபக்கமும் பலத்த இழப்பு ஏற்பட்டது. ஆறு நாட்கள் தினமும் செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருந்தது கடுக்கன் விளை கலவரம். பின்னர் குழந்தை சாமியால் கலவரம் முடிவுக்கு வந்தது.

அப்போது குழந்தை சாமிக்கு ஆறு அல்லது ஏழு வயது இருக்கும். ஊர் சண்டையில் கலந்துகொள்ள அவனது அப்பா தலையில் துண்டை கட்டிக் கொண்டு கையில் அரிவாளைக் கொண்டு ஓடியதைப் பார்த்தான். இரண்டாம் நாள் போலிஸ் வந்ததிலிருந்து அவரை வீட்டுப் பக்கம் காணவில்லை.

அம்மாவிடம் கேட்டான்,”அப்பா எஞ்ச போயிருக்கு?”

“புள்ளையார் கோயில் நோட்டீஸ் போர்ட்ல மாதா கோயில் ஆளுவ சாணி அடிச்சாவல்லா…”

“அந்த சாணிய மாடுல்லா அடிச்சது..”

“என்னல சொல்லுத?”

“பரமேஸ்வரன் இருக்கான்லா அவங்க தாத்தா வெளைக்கி ஒரம் போட வந்த மாடு பீச்சுகிட்டு கெடந்துச்சு.. ஒரம் எறக்கிட்டு வந்த வண்டீல நானும் பரமேஸ்வரனும் பின்னால தொங்கிட்டே வந்தோம்.. பிள்ளையார் கோயில் பக்கமா வரும்போ மாடு வால சுத்துச்சா… அது வாலுலேந்து சாணி போய்…”

பரமேஸ்வரனின் தாத்தாவும் மாட்டு வண்டிக்காரனும் சாட்சி சொன்னார்கள். வண்டிக்காரனுக்கு அறை விழுந்தது. கலவரத்தில் சுகுமாறனுக்கு காலில் நீளவாக்கில் வெட்டு பட்டு நடக்க முடியாமல் போனது. இரண்டு மாதங்களில் பம்பாயில் இருக்கும் தன் மகனை வரவழைத்து ஊரைக் காலி செய்து விட்டுப் போனார்.

கலவரம் அடங்கிய பின்னும் இரு பக்கமும் இழப்புக்களை முன்வைத்தே பேச்சு நடந்தது. ஊர் இரண்டு பட்டது.

வீடு வந்து சேர்ந்ததும் அம்மாவிடம் யாராவது தன்னை தேடி வந்தார்களா எனக் கேட்டுக் கொண்டான்.

இரண்டு வாரங்களில் அவரை முற்றிலும் மறந்திருந்தான். அந்த சனிக்கிழமை லைப்ரரியில் இருந்து சைக்கிளில் வரும்போது பிள்ளையார் கோவில் வேப்பமரத்தடியில் கூட்டம் நின்று கொண்டிருந்தது. ஏதேதோ சத்தமாய் பேசிக் கொண்டிருந்தனர். சைக்கிளை நிறுத்திவிட்டு எட்டிப் பார்த்தான்.

வேப்பமரத்தடியில் ஒரு கையில் பிள்ளையார் சிலையும் இன்னொரு கையில் மாதா சிலையுமாய் உட்கார்ந்திருந்தார் அந்த ‘பைத்திய’ சாமியார்.

உதட்டில் அவ்வப்போது புன்னகை தெரிந்தது. பின்பு கூட்டத்தை பார்த்து முறைப்பு. ஏதோ முனகிக் கொண்டிருந்தார். ‘யுகே யுகே’ என்பது மட்டும் எங்கேயோ கேட்டது பொல் இருந்தது. திடீரென எழுந்து நின்றார். சமஸ்கிருதத்தில் மந்திரம் போல ஏதோ சொன்னார். மீண்டும் அமர்ந்தார். சற்று முனகல். “…கள் பாக்கியவான்கள்” எனக் கத்தினார். மீண்டும் சமஸ்கிருதம்.

ஃபாதர் சகிதம் மாதா கோவில் ஆட்கள் வந்து சேர்ந்தனர்.

“பைத்தியம் போலிருக்கு. திடீர்னு மந்திரம் சொல்லுதான் திடீர்னு வேதம் சொல்லுதான்.” ஃபாதரிடம் பிள்ளையார் கோவில் கமிட்டி தலைவர் சின்னசாமி விளக்கினார்.

“தட்டிப் பறிங்கடே.” என்றார் ஒருவர். கூட்டத்திலிருந்து நான்குபேர் சிலைகளைப் பிடுங்க முயன்றனர். திமிறினார். “அன்பு செய்யுங்கள்” கத்தினார்.

அறை விழுந்தது அவருக்கு.

“அடிக்காண்டாம்.” சின்னசாமி விலக்கினார்.

எழுந்து சிலைகளுடன் நடக்க முற்பட்டார். பின்னாலிருந்து அவரை மடக்கிப் பிடித்து சிலைகளை பறிக்க முயன்றனர். சிலைகள் கீழே விழுந்தன. மாதா சிலையின் கீழ் பாகம் உடைந்தது. பிள்ளையார் சிலையில் எண்ணை பூசியிருந்ததால் மண் ஒட்டியது. “சாமியே! சாமீ சாமீ!” பிள்ளையார் கோவில் பூசாரி தலையில் அடித்துக்கொண்டார்.

வேப்பமரத்தில் அவரை கட்டி வைத்துவிட்டு லைப்ரரியில் ஊர்கூட்டம் நடந்தது. பூசாரி தீட்டுக் களைய என்னென்ன செய்ய வேண்டும் என்றார். இரண்டு பக்கமும் பழைய ஆட்கள் ‘முன்னைப் போலவே ஊரு ஒண்ணாகணும்னா புதிய மாதா செலைய பிள்ளையார் கோயில் சார்பாகவும் பிள்ளையார் செலைய மாதா கோயில் சார்பாகவும் வாங்கித் தரணும்’ என்றார்கள்.

“காலையில அவன போலிஸ்ல குடுத்துரலாம்” என முடிவானது.

அடுத்த நாள் குழந்தை சாமி காலையிலேயே எழுந்து போனான். வேப்பமரத்தடியில் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். “ராத்திரி பூரா இங்கனேயே கெடந்ததுல ஆளு அவுட்டுடே கொழந்த.” ஒருவன் திரும்பி குழந்தை சாமியிடம் சொன்னான்.

குழந்தை சாமி அப்போதுதான் அந்த சாமியாரின் காலில் இருந்த நீள வடுவை பார்த்தான்.

Popularity: 9% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....4 மறுமொழிகள் to “மெசியா அல்லது மீட்பர்”

 1. அருமையான கதை. இன்றும் கிராமப்புறங்களில் நடக்கும் தேவையற்ற, யாருக்குமே
  பிடிக்காத, மதக் கலவரங்கள் யாராலோ தூண்டி விடப்பட்டு, யாரும் அறியாமலேயே பெரிதாகி, மன வருத்தத்தில் முடிகிறது.என்ன செய்வது. நோக்கங்கள் நேர்மையாக இருப்பினும், சிறு சிறு பிரச்னைகள் அதிகமாகின்றன. பிள்ளையாரும் தேவனும் சேர்ந்து சரிப்படுத்த வேண்டும்.

 2. அட………வந்தது சுகுமாரனா !!!!!

  சாமிகளுக்குள் சண்டை இல்லை. எல்லாம் இந்த மனுசப்பயலுகதான்……..

 3. நன்றி சீனா

 4. //அட………வந்தது சுகுமாரனா !!!!!//

  //சாமிகளுக்குள் சண்டை இல்லை. எல்லாம் இந்த மனுசப்பயலுகதான்……..//

  இரண்டும் சரி :)

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்