கத்தோலிக்கம் ஜெயமோகனுக்கு கடிதம்

தொடர்புள்ள ஜெ.மோ பதிவு கத்தோலிக்கமதம் பெண்ணுரிமை-ஒரு கடிதம் 

அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு,
பெண்ணியம் குறித்த உங்கள் பதிவுக்கு, பதிலுக்கு நன்றி.

//பெண்ணுரிமை பேசப்படும் மேலைநாட்டில் கத்தோலிக்கமதம் இன்றும் பெண்ணடிமைக்கருத்துகளின் தொகையாகவே உள்ளது.//

இது நீங்கள் முன்பு கேள்விபதில் ஒன்றில் எழுதியிருப்பது. கத்தோலிக்கம் (பைபிளில்) பெண்ணுக்கு இரண்டாம் இடம் தரப்பட்டுள்ளது எனும் உங்கள் பதிலில் எனக்கு ஒப்புதலே. ஆதாம் ஏவாளின் கதையிலிருந்தும் அதிலிருந்து பெறப்படும் பிந்தைய புரிதல்களிலிருந்தும் (1 Corinthians 11:9) இது தெளிவாகிறது. இதில் எந்த பிரச்சனையுமில்லை.

ஆனால் கத்தோலிக்கம் பெண்ணடிமைத்தனத்தின் தொகுப்பாக இன்றும் இருக்கிறதென்பதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. உங்கள் கூற்றில் எனது ஆச்சரியமும், கேள்வியும் மூன்று வார்த்தைகளை முன்வத்தது.
1. இன்றும்
2. பெண்ணடிமைத்தனம்
3. தொகையாக
(மொத்தமே பெண்ணடிமைத்தனத்தை முன்வைத்ததாக)

வெறும் semantics என விட்டுவிட இயலவில்லை எனவே இது குறித்து என் கருத்துக்கள்.

என் பார்வையில் பெண்ணடிமைத்தனம் என்பது பல அடுக்குகளைக் கொண்டது. வெறும் தத்துவ நிலையிலேயே அது நின்று விடவில்லை. அதன் படிமங்கள் வேதாந்த சித்தாந்தங்களில்(அல்லது சமூக சித்தாந்தங்களில் துவங்கி) நடைமுறை வாழ்க்கையில் ஆணுக்கும் பெண்ணுக்கும், சமூகத்திற்கும் பெண்ணுக்குமான உறவுகளில் பெண்ணை இழிநிலைக்குத் (வெறும் இரண்டாம் நிலைக்கல்ல) தள்ளும்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அப்படி ஒரு ஒருங்கிணைந்த தாக்கத்தை கத்தோலிக்க மதம் இன்றும் ஏற்படுத்திக்கொண்டிருந்தால் அதை பெண்ணடிமைத்தனத்தின் தொகையாக ஏற்றுக்கொள்ளலாம்.

பெண்ணியம் என்பது ஒரு தத்துவார்த்த நிலைப்பாடு. அது பெண்ணடிமைத் தனத்தை எதிர்ப்பதோடு நின்றுவிடவில்லை மாறாக மேலே சென்று ஆணும் பெண்ணும் சமம் என நிறுவ முயல்கிறது. கத்தோலிக்க இறையியலில் அதற்கு (தற்போது) இடமில்லை.

முதலில், கத்தோலிக்கத்தின்(கிறீத்துவத்தின்) துவக்கம் இயேசுவில்தான். இயேசுவுக்கு முந்தைய வரலாறு மனித இனத்தின் பாவத்தின் வரலாறாகவும், இயேசுவை முன்னறிவிக்கும் வரலாறாகவும் பார்க்கப்படுகிறது.

மனித குலத்தின் பாவ வரலாறு என்பது ஆதாம் ஏவாளில் துவங்குகிறது என்பதில் சந்தேகமில்லை. இதில் பெண், வலுவானவளாயில்லாததால், சாத்தானால் ஏமாற்றப்படுகிறாள் என்கிற ஒரு ஆரம்பம் நிச்சயம் பெண்ணியத்துக்கு எதிரானதாய் பார்க்கப்படக்கூடிய ஒன்று. ஆனால் ஆதாம் ஏவாளின் கதையிலிருந்து கத்தோலிக்கம் பெற்றுக்கொள்வது பெண் அடிமைப்படுத்தப்படவேண்டும் எனும் கருத்தல்ல மாறாக மனிதன் பாவச் சூழலில் பிறக்கிறான் எனும் அர்த்தமே. ஏனெனில் ஆதாம் ஏவாள் கதைக்குத் தொடர்ச்சியாக பழைய ஏற்பாடு சொல்லும் காயின், ஏபெல், நோவா, சோதம் கொமொரா எனும் கதைகள் (வரலாறுகள்) மனிதனின் பாவச் சூழலையும், அவன் கடவுளை விட்டு விலகிய தருணங்களையும் மீண்டும் மீண்டும் கடவுளின் இரக்கம் அல்லது கோபம் அவர்கள் மீது எப்படி செயல்பட்டது என்பதையும் காண்பித்து இறுதியாக இயேசுவில் பாவ மன்னிப்பிற்கான புதிய உடன்படிக்கையில் நிறைவேறுகிறது என்பதை நிறுவுகின்றன.

கத்தோலிக்கத்தில் பெண்ணின் இரண்டாம் இடம் நீங்கள் குறிப்பிட்ட படைப்பின் விவரிப்பிலிருந்து மட்டுமே பெறப்படுகிறது. ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாள் பெறப்பட்டாள் என்பதை விட ஆதாமுக்குத் துணையாக அவள் ஏற்படுத்தப்பட்டாள் என்பதுவே அவளுக்கான இரண்டாமிடத்தை சுட்டுகிறது. இந்தப் படிமம் நீங்கள் குறிப்பிட்டதுபோல எல்லா தொன்மையான மதங்களிலும் உண்டு. அதாவது ஆண் முதலில் தோன்றினான் என்பதுவும் பின்னர் பெண் உருவாக்கப்பட்டாள் என்பதுவும். இந்து மதத்தில் ஆண் தெய்வம்(ங்கள்) முதலில் தோன்றி பின்னர் பெண் தெய்வங்களை உருவாக்கி வைக்கின்றனர். அதாவது தெய்வமாயிருப்பினும் பெண் இரண்டாமிடத்திலிருக்கிறாள்.

பெண்ணின் படைப்பு குறித்த ஆதியாகம வசனங்களைப் பார்ப்போம்.

ஆதியாகமம்(Genesis) 2: 18. “பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.”

இவ்வளவுதான் பெண்ணின் இரண்டாம் நிலையைச் சொல்வது. ஆதாமுக்குத் துணையாக, இரண்டாவதாக படைக்கப்பட்டவள் ஏவாள். கடவுள் மற்ற உயிர்களை இருபாலோடும் படைத்துவிட்டு ஆதாமை மட்டும் தனியாகப் படைத்து, பின் பெண்ணை அவனிடமிருந்து படைத்திருப்பதில் ஆணிய சூழ்சி வெளியாகிறது என்றே கொள்ளலாம். மிக நீண்ட யூத பாரம்பரியத்தின் மரபு அது. கத்தோலிக்கத்தின் மரபும் கூட ஆனால் கத்தோலிக்கம் இதை பெண்களுக்கெதிரான வாதமாய் பயன்படுத்தியதா? அதுவும் பெண்ணடிமைத்தனத்தின் தொகையாக இன்றும் செயல்படுகிறது எனக் கூறும் அளவுக்கு பயன்படுத்தியதா என்பதற்கு ஆதாரமே இல்லை.

அடுத்து அதே அதிகாரத்தில் பெண்ணை படைத்ததும் அதற்குப் பின்னான சில வசனங்களையும் படித்தால் பைபிள் சொல்லும் பெண்ணின் இரண்டாம் நிலை அத்தனை மோசமானதாயில்லை எனப் புரியும்.

21. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.

22. தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார். (இந்த இடத்தில் அவளை கடவுளின் பரிசாக எண்ணிப் புழங்காகிதம் அடையவும் வாய்ப்புண்டு)

23. அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான். (நீ என்னடா எனக்குப் ஏரு வைக்கிறது நாயே என இங்கே பெண்ணியம் பேசலாம்)

24. இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். (இங்கே பெண்ணியம் பேசுவது கடினமாகிறது)

அந்த கடைசி வரியை கூர்ந்து கவனியுங்கள் ‘அவர்கள் ஒரே சதையாயிருப்பார்கள்.’ ‘ஈருயிர் ஓருடல்.’

இந்த வசனங்கள் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றன என்றால் பொதுவாக திருமணத்தை ஒட்டிய மதச் சடங்குகளில் பெண்ணடிமைத்தனம் பரவலாக வெளிப்படுவதை உணர முடியும். கத்தோலிக்க திருச்சபையில் நடத்தப்படும் ஒவ்வொரு திருமணத்தின் போதும் மேற்கண்ட வாசகம்தான் முதலாம் வாசகமாய் வாசிக்கப்படும். ஆனால் அதற்குப் பின்னான பிரசங்கத்தில் ‘ஓருடல் ஈருயிர்’ என்கிற வார்த்தைகளை உச்சரிக்காத சாமியாரே இல்லை. ஆக பெண் இரண்டாவதாக, துணையாளாக படைக்கப்பட்டாள் என்பது அவளுக்கெதிரான வாதமாகவோ அவளை அடிமைப் படுத்த முகாந்திரமாகவோ ஒருபோதும் பார்க்கப்படவில்லை.

கத்தோலிக்க திருமணத்தின் போது ஆணும் பெண்ணும் ஒரே வார்த்தைப்பாடுதான்(சத்தியப்பிரமாணம்) எடுத்துக் கொள்கிறார்கள், என்றால் எங்கிருக்கிறது பெண்ணடிமைத்தனம்? XYZ ஆகிய நான் ABC ஆகிய உன்னை கணவனாக/மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும் நோயிலும் சுகத்திலும் உனக்கு என்றும் பிரமாணிக்கமாயிருப்பேன் (Not exact words). இதுதான் இருவருமே எடுத்துக்கொள்ளும் சத்தியப் பிரமாணம்.

(இதில் பெண்ணியத்திற்க்கெதிரான பாயிண்டை சொல்லணும்னா பொதுவாக பெண் இந்த வார்த்தைப்பாட்டை(Oath/commitment) படிக்கும்போது ‘உங்களை‘ ஏற்றுக்கொள்கிறேன் என்பாள், ஆணோ ‘உன்னை‘ ஏற்றுக் கொள்கிறேன் என்பான். :) இது மரியாதை நிமித்தமானதாயும் இருக்கலாம். நம்மூரில் வயதுக்கும் மரியாதை உண்டே?)

ஆதியாகமத்தில் 3:20ல் இன்னொரு வசனம் பெண்ணின் நிலையை சொல்கிறது.

20. ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்.

ஏவாள் எனும் பெயருக்கு உயிர்வாழ்வது(To live – Verb) எனும் பொருள். பெண்ணை அடிமைப்படுத்தப் பட வேண்டியவளாய் குறிப்பிட வேண்டுமென்றால் அவளை உயிருள்ளவற்றிற்கெல்லாம் தாய் எனச் சொல்வானேன்? அதுவும் அவள் இரண்டாமவள் எனச் சொல்லிய அதே புத்தகத்தில் (Genesis) அடுத்த அதிகாரத்தில் (சில வரிகளுக்குள்ளாலேயே). இது தர்க்க ரீதியாக பைபிளை இண்டர்பிரெட் செய்து எடுக்கப்பட்டதல்ல பைபிளில் இருக்கும் நேரடியான செய்தி. ஆனால் பைபிளில் பெண்ணின் இரண்டாமிடம் உள்ளூர இருக்கும் செய்தி (it can be known only through interpretation.) வெளிப்படையாகத் தெரிந்தாலும் பெண் இரண்டாமவள் என்கிற வார்த்தைகள் அதில் இல்லை ஆனால் வெளிப்படையாக உயிருள்ளவைக்கெல்லாம் அவள் தாயாகிறாள் எனச் சொல்லப்படுகிறது.

//இந்த அடிப்படைப் படிமத்தை எப்படி மதம் கடந்து செல்ல முடியும்? ஒன்று அதற்கு மாற்றாக பெண்சமத்துவத் தன்மை கொண்ட வேறு ஒரு அடிப்படைப் படிமம் முன்வைக்கப்படலாம்.//

உண்மை. பெண் ஆணுக்கு சமமானவள் என்பதை நிறுவ கத்தோலிக்கம் முன்வரப் போவதில்லை ஏனெனில் பெண்ணுக்கும் ஆணுக்குமான ஏற்றத் தாழ்வு அவள் ஆணுக்குத் துணையாய், இரண்டாவதாய் படைக்கப்பட்டாள் என்கிறதிலேயே முடிந்து போகிறது. இதன் நீட்சியாக அவள் ஆன்மாவற்றவளென்றோ, பெண்களெல்லோரும் மட்டும் பாவிகள் என்றோ, அவளுக்கு மோட்சத்தில் இடமில்லை என்றோ, அவள் ‘அடிமை’யாய் நடத்தப்பட வேண்டும் என்றோ கத்தோலிக்கம் போதிக்கவில்லை.

நிலமை அதற்கு எதிரானது. பெண்ணால் ஏற்பட்ட பாவச் சூழல் அவளாலேயே முறியடிக்கப்படும் என்பதுவும் ஆதாம் ஏவாளின் கதையிலேயே சொல்லப்படுகிறது. ஆதாம் ஏவாள் விலக்கப்பட்ட கனியை உண்டபின் கடவுள் என்ன நடந்தது என விசாரித்துவிட்டு கனியை உண்ணத் தூண்டிய பாம்பை(சாத்தான்) கீழ்கண்டவாறு சபிக்கிறார்.

ஆதியாகமம்(Genesis) 3:

14. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப்பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;

15. உனக்கும் ஸ்திரீக்கும்(பெண்ணுக்கும்), உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.

இங்கே குறிப்பிடப் பட்டிருக்கும் பெண் இயேசுவின் தாய் மரியாள். மாதாவின் சிற்பங்கள் பலவற்றில் காலின் கீழே ஒரு பாம்பு, வாயில் ஆப்பிளைக் கடித்தபடி இருப்பதை பார்த்திருக்கலாம். அந்த வடிவமைப்பு இந்த கருத்தை முன்வைத்ததே. பெண்ணால் ஏற்பட்ட பாவச் சூழல் பெண்ணாலேயே விடுவிக்கப்பட்டது.

ஏவாள் எனும் கன்னி கடவுளுக்கு கீழ்படியவில்லை அதனால் மனிதனுக்குப் பாவமும் மரணமும் வந்தது, மரியாள் எனும் கன்னி கடவுளின் திட்டத்திற்கு கீழ்படிந்தாள் அதனால் பாவ மன்னிப்பும் முடிவில்லா வாழ்வும் வந்தது, என்பதுதான் கத்தோலிக்க இறையியல் சிந்தனை. இதனாலேயே கத்தோலிக்கம் மரியாளுக்கு ஒரு சிறப்பிடம் தருகிறது. அவளின் சம்மதமின்றி மனிதருக்கு மீட்பு வந்திருக்காது. அவள் ஏவாளின் வழி வந்த பாவத்திலிருந்து விடுவிக்கும் புதிய ஏவாளாகப் பார்க்கப்படுகிறாள்.

இது மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே கத்தோலிக்கம் எடுத்துக் கொண்ட நிலை. நமது நூற்றாண்டில் போப் பயஸ் XII இவ்வாறு எழுதுகிறார்,”மரியாள், கடவுளின் விருப்பத்தால், மீட்பின் செயல்பாட்டில் மீட்புக்கு காரணியான இயேசுவோடு இணைந்தார், ஏவாள் சாவின் காரணியான ஆதாமுடன் (பாவத்தில்) இணைந்ததுபோல.”
[Pope Pius XII is responsible for the principle papal contributions on this theme. In the Encyclical, AD CAELI REGINAM. dated 11 Oct. 1954, he wrote: “Mary, in the work of Redemption was by God’s will, joined with Jesus Christ, the cause of salvation, in much the same way as Eve was joined with Adam. the cause of death. – Read here ]

இதில் தெளிவாக ஆதாம் பாவத்தின் காரணியாகவும் இயேசு(புதிய ஆதாம்) மீட்பின் காரணியாகவும், ஏவாள் பாவத்தில் இணைந்த (joined) பெண்ணாகவும் மரியாள் மீட்பில் இணைந்த பெண்ணாகவும் பார்க்கப்படுகிறார்கள். இதையே இரண்டாம் வத்திக்கான் (இன்றைய கத்தோலிக்கத்தின் ஆணிவேர்) மறுமொழிகிறது.

பெண் இயற்கையிலேயே, பலமற்றவளாக, இரண்டாமிடம் பெறுகிறாள் எனும் (ஆணியவாதக்?) கொள்கையை ஏவாளின் ‘இரண்டாம்’ நிலைக்கு ஒப்பிடலாம். இது பெண்ணியத்துக்கு எதிரானதே (பெண்ணியம் ஆணும் பெண்ணும் அனைத்திலும் சமம் என வாதிடுவதாய்க் கொள்ளுகையில்). ஆயினும் இதை பெண்ணடிமைத் தனத்தின் ஊற்றாய் கத்தோலிக்கம் பயன்படுத்தியது எனவும், ஏவாளின் இரண்டாமிடத்தைக் முன்வைத்து அவள் கீழ்த்தரமாக நடத்தப்பட்ட வேண்டும் என கத்தோலிக்கம் போதித்தது எனவும், கத்தோலிக்கம் (கிறீத்துவம்) பெண்ணடிமைத்தனத்தின் தொகுப்பு எனவும் கூறவும் எந்த முகாந்திரமும் இல்லை. இதுதான் என்னுடைய வாதம்.

உங்கள் பதிவில் கீழ்கண்டதை இணைத்துள்ளீர்கள்…
“ஆனால் அடிப்படையான படிம தளத்தில் மிக மெல்ல நூற்றாண்டுகளாகத்தான் மாற்றம் நிகழ முடியும். பல்வேறுவகை படிமங்களின் உரையாடலுக்கு வாய்ப்புள்ள இந்துமதங்களில் இந்த மாற்றம் ஒப்புநோக்க மேலும் எளிதானது.

நீங்கள் எந்த இந்து மதத்தை முன்வைத்து இந்தக் கூற்றை சொல்கிறீர்கள் எனவும் சொல்லியிருக்கலாம். இந்துமதத்தின் அடிப்படை நம்பிக்கை இதுதான், இவைதான் என எந்தக் கட்டுக் கோப்புமில்லாத நிலையில். இந்தியாவில், இந்துமதம் எனத் தன்னை அழைக்காத எந்தமதத்திற்கும் அப்பால் இருக்கும் எல்லா ஆன்மீகத் தத்துவங்களும் இந்து தத்துவம் எனக் கொள்ளும் நிலையில் நீங்கள் சொல்வதுபோல எந்த ஒரு மாற்றத்தையும் இந்துமதம் மொத்தத்துக்குமாக அடைந்துவிட முடியாது. பெண் ஆணுக்கு சமமானவள் என ஒரு முடிவை இந்துமதம் (மொத்தமாக) அடைய விரும்புகிறது என வைத்துக் கொள்வோம். இது எப்படி சாத்தியமாகும்? கட்டுமானமே அற்றதாகக் கருதப்படும்(இதில் எனக்கு முழுவதுமாக உடன்பாடில்லை) இந்து மதத்தில் ஆன்மிகத்தின் அடிப்படையில் எப்படி இத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துவது? தத்துவங்களை, கொள்கைகளை அவை தரும் வாழ்க்கை நெறிகளை மொத்த மதத்திற்குமாய் அலசி ஆராய்ந்து முடிவுகளை, மாற்றங்களை எட்டும் ஒரு அமைப்பு இல்லாத ஒரு மதத்தில் எப்படி ஒட்டுமொத்த மாற்றங்களை உருவாக்க முடியும்?

அப்படியானால் இந்து மதத்தில் மாற்றங்களே நடைபெறவில்லையா எனக் கேட்கலாம். எனக்கு தெரிந்த வகையில் இந்துமதம் மொத்தத்துக்குமாய் நிகழ்ந்த இறையியல் ரீதியான மாற்றங்கள் என அதிகமில்லை. சிறுதெய்வங்களை பெருந்தெய்வங்களின் வடிவங்களாய் பொருத்தியதைத் தவிர வேறொரு இறையியல் மாற்றத்தையும் இந்துமதம் மொத்தமாகப் பெறவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. இந்துமதம் மொத்தத்திற்குமான சமூக சீர்திருத்த மாற்றங்கள் எதுவும் மத ரீதியாய் எழுந்ததாக எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிப்பு போன்ற மாற்றங்களில் சமூக மாற்றக் கூறுகளே அதிகம். இதில் ஆன்மிக நோக்கம் குறைவு. ஏனென்றால் சதி என்பதே ஒரு சமூகப் பழக்கம். ஆன்மிகப் பழக்கமல்ல என நான் கருதுகிறேன். அதாவது சதி என்பதை அங்கீகரிக்கப்பட்ட இந்து முறையாக ஏற்றுக்கொள்வதை விட ஒரு சமூக அவலமாகவே பார்க்க விரும்புகிறேன். 1. சதி இந்து மதம் முழுவதுமாய் பின்பற்றப்பட்டதல்ல, 2. இந்துமதத்தின் தொன்மங்கள் என நான் நினைக்கும் வேதங்களிலோ அல்லது பிற மத நூல்களிலோ சதி எனும் பழக்கத்திற்கு இடமிருப்பதாய் (எனக்குத்) தெரியவில்லை. அது தொன்மம் முதல் இருக்கும் பழக்கமும் அல்ல. எனவே சதி ஒழிப்பு ஒரு ஆன்மீக முனைப்பல்ல மாறாக ஒரு சமூக முனைப்பே.

ஆக ஒரு ஒருங்கிணைந்த வடிவமைப்பைப் பெறாத, வேறுபட்ட (சில நேரங்களில் முற்றிலும் வேறுபட்ட) தொன்மங்களிலிருந்து ஊற்றெடுக்கும் வெவ்வேறு இந்து தத்துவ ஞான மரபுகளில் ஒருங்கிணைந்த மாற்றம் எதற்கும் இடமில்லை. அப்படி இருந்திருந்தால் இன்று இந்து மதத்தின் மீது வைக்கப்படும் எண்ணற்ற குற்றச்சாட்டுகளை சமூக நோக்கில் அலசி, ஆன்மீகம் வழியாக, தொன்மங்களை சீர்தூக்கிப் பார்த்து மாற்றியமைக்க முடியும். அப்படி செய்ய இயலாமல் தொன்மங்களில் சிக்கி நிற்கிறது. (இப்படி ஒரு மாற்றத்தை ஏற்கும் அமைப்போ சீர்திருத்தமோ வரும்வரை, இந்த நூற்றாண்டுக்கும் வரும் நூற்றாண்டுகளுக்குமாய் தன்னை பொருத்திக் கொள்ளாததுவரை அல்லேலூயாக் கூடங்கள் அதிகரிக்க வாய்ப்புக்கள் நிச்சயம் உள்ளன என்பது என் தாழ்மையான கருத்து.)

இந்துமதத்தின் பல கிளைகளில்/அங்கங்களில் ஆன்மீகத்தின் அடிப்படையில் மாற்றங்கள் நிச்சயமாய் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக உங்கள் எழுத்திலிருந்தே தெரியப்படும் நாராயண குரு, அய்யன் காளி போன்ற குருக்களின் ஆன்மீக வழியிலான சமூகப் பங்களிப்புக்கள். இவை இந்து மதம் மொத்தத்திற்குமானதல்ல. இந்துமதம் மாற்றங்களுக்கு ஏதுவானது, இங்கு மாற்றம் செய்வது எளிது என பொதுவாக நீங்கள் சொல்வது ஏற்க இயலாத வாதம். மாறாக இந்துமதத்தின் சில கிளைகளில் (தரிசனங்களில்?) இது எளிதில் சாத்தியமாகிறது என்றிருக்கலாம் (Another issue with semantics may be)

தொடர்ந்து நீங்கள்..”இறுக்கமான கட்டுமானம் கொண்ட தீர்க்கதரிசி மதங்களில் அது மிக மிக அரிதாகவே நிகழ முடியும்” எனச் சொல்கிறீர்கள்.

இங்கே கத்தோலிக்கம் ஆபிரகாமிய, தீர்க்கதரிசன மதமாயிருந்தபோதும் மற்ற இரு மதங்களிலிருந்தும்(யூத, இஸ்லாம்) மாறுபட்டே உள்ளது. (மற்ற மதங்களைப் பற்றிய என் கருத்துக்கள் மேலோட்டமான தகவல்களை முன்வைத்தே எழுதுகிறேன் ஆழமான ஆராய்ச்சி எதுவும் நான் செய்யவில்லை – இந்து மதம் குறித்த குறிப்புக்களுக்கும் இது பொருந்தும்).

கத்தோலிக்கம் இறைதூதர் (இங்கே இறைவன் அவரே (God himself)) சொல்வதை வைத்துக்கொண்டு மட்டும் செயல்படும் மதம் அல்ல. கத்தோலிக்க திருச்சபை (church) தனக்கென பல உரிமைகளைக் கொண்டுள்ளது. அதாவது இயேசுவின் போதனைகளை (தூய ஆவியின் துணையோடு) மறு ஆய்வு செய்வதற்கும், புதிய அர்த்தங்களை உருவாக்குவதற்குமான அதிகாரம் திருசபைக்கு (சற்று மிகையாகவே) இருக்கிறது. Infallibility என்பது (இறைவனின் அருளால்) திருச்சபை தவறிழைக்க சாத்தியமே இல்லை என்கிறது.(எல்லா நேரங்களிலும் இந்த அதிகாரம் வழங்கப்படவில்லை அதற்கென கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்).

இந்த அடிப்படையிலேதான் உலகம் தட்டை எனும் நம்பிக்கை மாறியது (பைபிளின் விவரிப்பில் உலகம் தட்டையானது, சூரியன் உலகைச் சுற்றிவருகிறது), பரிணாமக் கொள்கை ஆன்மீக நோக்கில் (விலங்கிலிருந்து மனிதன் உருவாக இறைவன் காரணியாயிருந்தார்) ஏற்றுக்கொள்ளப்படுகிறது, ரெனேசான்ஸ், Protestant Reformation போன்ற புரட்சிகளுக்குப் பின் ஒவ்வொரு முறையும் திருச்சபை தன்னை புதிப்புத்துக்கொண்டது, பல மாற்றங்களுடன்.

இரண்டாம் வத்திகான் கவுன்சில்(1962-1965) தற்போதைய கத்தோலிக்கக் கொள்கைகள் பலவற்றையும் உருவாக்கிய முக்கிய நிகழ்வு. இதில் மாற்றியமைக்கப்பட்ட இறையியல் கொள்கைகளும், தத்துவங்களும், வழிபாட்டு முறைகளும், வாழ்வியல் கொள்கைகளும் பல. முதன் முதலாய் கத்தோலிக்க திருச்சபைக்கு வெளியேயும் மீட்பு உண்டு என அறிவித்தது(எல்லோருக்கும் இல்லை). இது திருச்சபைக்குள்ளேயே எதிர்ப்பலைகளை ஏற்படுத்திய முடிவாகும்.

திருச்சபை தன்னை மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கொள்கிறது. மாற்றம் இங்கே எளிதாய் நடப்பதில்லை எனும் வாதம் அடிப்படையற்றது, இதற்கு மாறாக மாற்றங்களை எளிதில் மேற்கொள்ள வசதியான கட்டமைப்பை கொண்டது கத்தோலிக்கம். இப்படி ஒரு கட்டமைப்பை வேறு எந்த மதங்களிலும் நான் காணவில்லை. கிட்டத்தட்ட ஒரு ஜனநாயக நாட்டின் செயல்பாட்டிற்கு ஒத்தது இந்தக் கட்டமைப்பு (பொதுத் தேர்தலை தவிர) .

அண்மையில் ஏற்பட்ட சில மாற்றங்களாக ஞானஸ்னானம் பெறாமல் இறந்து போன குழந்தைகளுக்காக (திரிசங்கு சொர்க்கம் போல) லிம்போ என ஒரு இடம் இருப்பதாக கத்தோலிக்க மதம் முன்பு சொல்லி வந்தது. லிம்போ என்பது இல்லை எனவும் அவர்கள் சொர்கத்துக்கே செல்வார்கல் எனவும் அண்மையில், தற்போதைய போப் அறிவித்தார். திருச்சபை முழுவதற்குமான மாற்றம். அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்றான சொர்க்கம் குறித்த மாற்றம்.

அமெரிக்காவில் பாலியல் கொடுமை செய்த பாதிரியார்களுக்கெதிராக திருச்சபையின் செயலின்மையை (அவர்கள் திர்ச்சபையால் க(த)ண்ட்டிக்கப்படவோ, விலக்கிவைக்கப்படவோ, அல்லது சட்டத்தின் முன் திருச்சபையால் நிறுத்தப்படவோ இல்லை) ஆராய்ந்து இனிமேல் பாலியல் கொடுமை செய்வதாகத் தெரிந்தால் அந்த பாதிரியாரை விலக்கி வைக்கும் முடிவொன்றை திருச்சபை எடுத்துள்ளது. சமூக நோக்கிலான ஒரு முடிவு.

இறுக்கமான கட்டுமானத்துடன் இருப்பதாலேயே ஒரு அமைப்பு மாற்றத்திற்கு இசையாது என்பது சரியானதா அல்லது ஒருங்கிணைந்த மாற்றங்கள் நிகழ்த்தப்பட, ஒட்டு மொத்த முடிவுகள் எடுக்கப்பட அப்படி ஒரு கட்டுமானம் தேவை என்பது சரியானதா?

பெண்ணும் ஆணும் சரி நிகர் எனும் முடிவை திருச்சபை எடுக்க விரும்பினால் அதற்குத் தடை ஒன்றும் இருக்கப் போவதில்லை. ஆனால் அதற்கான அவசியம் எதுவுமே இல்லை. ஒரு மதக் கோட்பாடு அல்லது நம்பிக்கை பெண்ணை இரண்டாம் இடத்தில் வைத்துள்ளது என்பதைக் கொண்டு மட்டும் அது பெண்ணடிமைத் தனத்தின் தொகுப்பு மதம் என்று சொல்லிவிட முடியாது, மாறாக அப்படிப் பட்ட நம்பிக்கையிலிருந்து தன் மதத்தின் அங்கத்தினருக்கு பெண்ணைப் பற்றிய இழி போதனைகளை அது செய்யுமானால், அல்லது பெண்ணை இழிவு செய்யும் சடங்குகளையும் ஆன்மீக முயற்சிகளையும் அது பரவலாக்கியிருக்குமானால், தனி மனித, குடும்ப வாழ்வில் பெண்ணுக்கு சரி சமமான இடமில்லை என கட்டுப்பாடுகளை விதிக்குமானால் அந்த மதம் பெண்ணடிமைத்தனத்தின் தொகை எனச் சொல்லிவிட முடியும்.

கத்தோலிக்கம் ஒரு உயிரோட்டமுள்ள மதம் (Lively, living எனப் பொருள் கொள்ளவும்) அதாவது தொன்மங்களைப் பின்பற்றி அது நின்றுவிடவில்லை. தொடர்ந்து தொன்மங்களை ஆராய்கிறது, அறிவியலோடு இசைய முயல்கிறது(அப்படி இல்லாத கறுத்த காலம் இன்றும் இல்லை). பின்நவீனத்துவ நோக்கில் படிக்கப்படும் பைபிள் கதைகள் ஏராளம். (அவை மீண்டும் பைபிளின் வேறொரு பரிமாணத்தை தொட்டுச் செல்வதாகவே இருந்தபோதும்).

உதாரணத்திற்கு இயேசு ஐந்து அப்பத்தையும் இரண்டு மீன்களையும் ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்தளித்ததாக ஒரு புதுமை( Miracle) பைபிளில் சொல்லப்படுகிறது. இதை பின்னவீனத்துவப் பார்வையில் அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் பலரிடமும் உணவு இருந்ததென்றும் இயேசு தன் சீடர்களிடமிருந்து உணவு வாங்கி பகிர்ந்த போது அனைவரும் தங்கள் உணவைப் பகிர ஆரம்பித்ததாகவும் அதன் மூலம் எல்லோரும் பசி ஆற முடிந்ததாகவும் மறுவாசிப்பு செய்யப்படுகிறது. இயெசு புதுமையாக (மாயாஜால டைப் மிராக்கிள்) இதைச் செய்யாமல் மக்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறார். இதுவும் மிராக்கிள்தான். ஒரு சமூக மிராக்கிள். தனிப்பட்ட முறையில் நான் ஏற்றுக்கொள்ளும் இயேசுவும் இத்தகைய சமூக மிராக்கிள் செய்ய வல்லவரே. அந்த சமூக மிராக்கிள்தான் அவரது முக்கியப் பணி. மற்றதெல்லாம் வெறும் காற்றில் உலவும் தத்துவங்கள் என ஒதுக்கி விட்டுவிடலாம்.

கத்தோலிக்கம் உயிரோட்டமானது என்பதை இன்னொரு கருத்தைக் கொண்டும் சொல்லலாம். பல மதப் புத்தகங்களோடு ஒப்பிடுகையில் பைபிள் உள்ளடக்கத்தில் மிகச் சிறியது. இயேசுவின் படிப்பினைகளை மட்டும் எடுத்துக்கொண்டால் அவை சில பக்கங்களே. ஆனால் இந்த சில பக்கங்களின் அடிப்படையில் பல்வேறு கருத்துக்களை திருச்சபை தினமும் உருவாக்குகிறது. சாமியாரின் பிரசங்கம் துவங்கி, பல பதிப்புக்கள் வழியாகவும் பல புதிய கருத்துக்களை வெளியிட்டு வருகிறது. லட்சக்கணக்கான புத்தகங்கள், வெளியீடுகள் கருத்துப் பரிமாற்றங்கள் கத்தோலிக்க திருச்சபையின் சார்பில் நிகழ்கின்றன. இவை எவற்றிலேனும் பெண்ணடிமைக்கு ஆதரவான கருத்துக்கள் (பெண்ணியத்துக்கு எதிரான அல்ல) இருக்குமேயானால் கத்தோலிக்கம் இன்றும் பெண்ணடிமைத்தனத்தின் தொகையாக இருப்பதாக ஏற்றுக்கொள்ளலாம்.

அப்ப ஏன் பெண்கள் பாதிரியார்கள்போல பூசை செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது அல்லது கருக்கலைப்புக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்கிற கேள்விகள் எழலாம்.

பெண்ணுக்கு இந்த உரிமைகள் மறுக்கப்படுவது நீங்கள் சொல்லும் “பெண்ணின் இரண்டாமிடத்தை” முன்வைத்தல்ல, இந்தத் தடைகளுக்குப் பின்னிருப்பது ஏவாளின் பலவீனமும் அல்ல மாறாக இவற்றிற்கு வேறு காரணங்களே முன்வைக்கப்படுகிறது.

கருக்கலைப்புக்கான உரிமை மறுக்கப்படுவது (கரு) உயிர் வாழ்வதற்கான உரிமையை அது பறிக்கிறது என்பதாலேயே. பெண் அடிமை என்பதால் அல்ல. [The Holy See continues to insist that no human right to abortion exists because it contradicts the human right to life. The human right to life is the basic human right: all others stem from it. Human life deserves respect in any circumstance. – Holy See’s position at Beijing Conference on Women - ]

பெண்கள் பாதிரியாராக ஏன் இருக்கக் கூடாது? பாதிரியார் பட்டம் என்பது இயேசுவின் 12 அப்போஸ்தலர்களின் மரபில் வரும் பட்டம். இயேசுவின் சீடர்கள் எல்லோரும் ஆண்கள் என்பதாலேயே இந்தப் பட்டம் பெண்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் ஒரு பூசைக்கான ஆயத்தங்களிலும், பூசையின் செயல்பாடுகளிலும் ஒரு பாதிரியாரின் பங்கு 20% என்றே கணக்கிடப்படுகிறது மீதமுள்ள எண்பது சதவீத நடவடிக்கையில் பெண்கள் கலந்துகொள்ளலாம். கத்தோலிக்கத்தின் மற்ற வழிபாட்டு முறைகளில் (நற்கருணை ஆராதனை தவிர்த்து) பெண்கள் தாராளமாய் முன்னின்று நடத்தலாம். கன்னியாஸ்திரிகள் பிரசங்கம் செய்யும் பூசைகளில் பங்கேற்றிருக்கிறேன், இப்போது கிட்டத்தட்ட அனைத்து கோவில்களிலும் கன்னியாஸ்திரிகள் (அமெரிக்காவில் திருமணமானவர்கள் கூட) நன்மை வழங்குவதற்கு அனுமதி உண்டு, பெண்கள் பைபிளை வாசிக்கலாம் சாதாரண, பாதிரியாரில்லாத ஒரு ஆண் என்னென்ன செய்யலாமோ அத்தனையும் கத்தோலிக்க சடங்குகளில் பெண் செய்யலாம். அசாதாராண சமயங்களில் பெண்களும் சாமான்யர்களும் ஞானஸ்னானம் வழங்கலாம், பாவ மன்னிப்பு வழங்கலாம்.

கத்தோலிக்கம் இன்றும் பெண்ணடிமைத்தனத்தின் தொகையாக உள்ளதா அல்லது கலாச்சாரச் சூழலில் எழும் பெண்ணடிமைத் தனத்தை எதிர்த்துப் போராடும் ஒரு சக்தியாக விளங்குகிறதா என்பதை பீஜிங்கில் நாலாவது உலக மகளிர் மாநாட்டில் போப் ஜான்பால் IIன் சார்பில் படிக்கப்பட்ட அறிக்கையை படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதன் சுருக்கம் இங்கே.

(இதே மாநாட்டில் அப்போதைய பாக்கிஸ்தான் பிரதமரின் அறிக்கை இங்கே. Interesting to read )

இதுபோன்ற அதிகாரபூர்வமான, உலகப் பார்வைகொண்ட, பெண்ணுக்கு ஆதரவான ஆக்கச் செயலுக்கு உலக அளவில் அறைகூவல் விடுக்க “இன்றும் பெண்ணடிமைத்தனத்தின் தொகையாக” இருக்கிற கத்தோலிக்க கிறீத்துவத்தால் எப்படி சாத்தியமாகும்?

இன்னும் விவாதங்களை வெவ்வேறு வழிகளில் கொண்டு செல்லலாம். கத்தோலிக்கத்தின் கறுப்பு நாட்களிலிருந்து உதாரணங்களை எடுத்துச் சொல்லலாம் ஆயினும் இன்று, இன்றளவில் கத்தோலிக்கம் தன் போதனைகளில், செயல்பாட்டில் பெண்ணடிமைத்தனத்தை நிலைநிறுத்துகிறது என்பது மிக மிக மிகைப்படுத்தப்பட்ட ஒரு கூற்று.

அன்புடன்

சிறில் அலெக்ஸ்

Popularity: 10% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....24 மறுமொழிகள் to “கத்தோலிக்கம் ஜெயமோகனுக்கு கடிதம்”

 1. Christopher Francis சொல்கிறார்:

  நன்றி சிறில்,
  ஒரு தேர்ந்த இறையியலாளர் போல் தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள். உஙகளின் மற்றும் சேவியரின் கருத்துக்களை ஆர்வமுடன் படிப்பவர்களுள் நானும் ஒருவன்.

  சுந்தர்

 2. சேவியர் சொல்கிறார்:

  மிக ஆழமான தெளிவான அலசல். குறிப்பாக இன்றைய திருச்சபையை எடுத்துக் கொண்டால் பெண்களின் விடுதலைக்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் கத்தோலிக்க மதம் முன்னெடுத்துச் செல்லும் முயற்சிகள் ஏராளம் ஏராளம்.

  ஒரு மதம் குறித்த பார்வையை மத நூலிலும், பழக்கங்களிலும் ஆழமான அறிவு அற்றவர்கள் பொதுப்படையாய் சொல்லிச் செல்வது சரியல்ல. ஜெயமோகன் அதைச் செய்திருக்கிறார்.

  அவருக்குத் தெரிந்த இறையியலும், விவிலியமும் மேலோட்டமான சில தகவல்கள் மட்டுமே.

  குறிப்பாக பழைய சட்டங்கள், வழிமுறைகள், கட்டளைகள் போன்றவை இயேசுவினால் மாற்றப்பட்டது எனவும், திருத்தி போதிக்கப்பட்டது எனவும் “ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை, அடிமை என்றும் உரிமைக் குடிமகன் என்றும் இல்லை” எனவும் புதிய ஏற்பாடு கிறிஸ்தவ வாழ்க்கையை நெறிப்படுத்துகிறது என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை.

  உங்கள் கட்டுரை சிறப்பாக உள்ளது.

 3. SV சொல்கிறார்:

  Brilliant piece of writing;

 4. சேவியர்,கிரிஸ்டோபர், SV.
  பின்னூட்டங்களுக்கு நன்றி.

  //ஒரு மதம் குறித்த பார்வையை மத நூலிலும், பழக்கங்களிலும் ஆழமான அறிவு அற்றவர்கள் பொதுப்படையாய் சொல்லிச் செல்வது சரியல்ல.//

  நிச்சயமாய். இது எல்லோருக்கும் பொருந்துகிற விஷயம்.

  உண்மையில் கத்தோலிக்கம்(பைபிள்) சொல்லும் பெண்ணின் இரண்டாம் நிலை ஆன்மீக இரண்டாம் நிலைதான்.. சமூக இரண்டாம் நிலை அல்ல.

 5. Ste சொல்கிறார்:

  //குறிப்பாக பழைய சட்டங்கள், வழிமுறைகள், கட்டளைகள் போன்றவை இயேசுவினால் மாற்றப்பட்டது எனவும், திருத்தி போதிக்கப்பட்டது எனவும் “ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை, அடிமை என்றும் உரிமைக் குடிமகன் என்றும் இல்லை” எனவும் புதிய ஏற்பாடு கிறிஸ்தவ வாழ்க்கையை நெறிப்படுத்துகிறது என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை.//

 6. Prabhu சொல்கிறார்:

  அண்ணே செமினரில படிசிருகீங்கலா? :)

  Your writing made me remember some great sermons from good priests, now a days it’s rare to hear a interesting sermon in masses :(

  //நன்மை வழங்குவதற்கு அனுமதி உண்டு

  Any better tamil word for நன்மை ?

 7. ஜோ சொல்கிறார்:

  //Any better tamil word for நன்மை ?//
  நற்கருணை

 8. ஜோ சொல்கிறார்:

  சிறில்,
  ஜெயமோகன் உங்கள் நண்பராயிருந்தாலும் ,ஒரு விடயத்தை நான் சொல்ல நினைக்கிறேன்.

  இதற்கு முன் ஜெயமோகன் எழுதிய ஒரு கட்டுரையில் தான் வாழும் சமூகத்து மக்களைப் பற்றி அடிப்படை அறிவு இல்லாதவர் என்பதை நான் உணர்ந்து கொண்டேன் .இப்போது அவருக்கு மற்ற மதங்களைப் பற்றிய அடிப்படை அறிவே இல்லை என தெளிவாகிறது .என்னைப் போல சாதாரணன் ஒருவனுக்கு அது இல்லாதிருக்கலாம் ..ஆனால் தலையணை அளவுக்கு நாவல் எழுதி பெரிய இலக்கியவாதி என தன்னைத் தானே முன்னிறுத்தும் இவருக்கு இந்த அறியாமை பெருமையல்ல ..என்னைக் கேட்டால் இவர் அரசியல் ,சமூகம் ,மற்ற மதம் என்று உளறிக் கொட்டாமல் ,வழக்கம் போல யாருக்கும் புரியாத ஏகாந்த எழுத்துக்களில் நாவல் வடிப்பதிலேயே கவனம் செலுத்தலாம் .

 9. //அண்ணே செமினரில படிசிருகீங்கலா?//
  ஆமா.. ஆனா இவ்வளவும் அங்கேயே படிக்கல :)

  Sermon வழங்குற ஐடியா எல்லாம் இல்ல. :)

 10. ஜோ,
  //இதற்கு முன் ஜெயமோகன் எழுதிய ஒரு கட்டுரையில் தான் வாழும் சமூகத்து மக்களைப் பற்றி அடிப்படை அறிவு இல்லாதவர் என்பதை நான் உணர்ந்து கொண்டேன் //

  நீங்கள் எந்த கட்டுரையை குறித்து சொல்றீங்கண்ணு தெரியுது. ஆனால் இதிலெனக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்து உள்ளது. முடிந்தால் இதைப்பற்றி அப்புறம் எழுதி விவாதிக்கலாம்.

  மற்ற மதங்கள் குறித்த முழுதான புரிதலை அவரிடமோ அல்லது வேறு யாரிடமுமோ நான் எதிர்பார்க்கவில்லை. இன்னொரு விஷயம், நான் கட்டுரையில் குறிப்பிட்டும் பல விஷயங்களும் நான் தன் முயற்சியால் அறிந்துகொண்டது, எனக்கு கத்தோலிக்க திருச்சபை நேரடியாக சொல்லித் தந்ததல்ல. ஆக ஒரு சாதாரண கத்தோலிக்கனுக்கு இறையியல் குறித்த (முழுமையான) அறிவு இருக்கவேண்டிய அவசியமில்லை. அப்படி இருக்கையில் பிறரிடம் இதை எதிர்பார்க்க முடியவில்லை.

  நானும் கட்டுரையில் இந்துமதம் குறித்து எனக்கு கிடைத்த மேலோட்டமான தகவல்களை முன்வைத்து பேசியிருக்கிறேன். விவாதங்களும் விளக்கங்களும் நிச்சயம் தேவை.

  அவர் கத்தோலிக்கத்தின் சில கருத்துக்கள் பெண்களுக்கு எதிராயிருக்கின்றன எனச் சொல்லியிருந்தால் அதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதை ஒரு ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்டாக, அழுத்தமான குற்றச்சாட்டுபோல வைத்தது சரியானதாகப்படவில்லை. ஆன்மிக விவாதங்கள் எனக்குப் பிடிக்கும். பலமுறை பிற மதங்களைப் பற்றி விமர்சித்திருக்கிறேன் விவாதித்திருக்கிறேன் என்கிற முறையில் இது சகஜமாகவே தோன்றுகிறது. நான் டிஸ்க்ளெய்மர் போட்டு தப்பித்துக் கொள்கிறேன் அதுதான் வித்தியாசம் :)

  வெறுப்புடனும், மனத்தடைகளுடனும், முன்முடிவுகளுடனும் அணுகினால் முதலில் நம் வாதங்கள் கேட்கப்படமாட்டாது. அப்புறம் நம்மால் ஒழுங்காக, தெளிவாக சொல்லவந்ததை சொல்லமுடியாது.

  நான் ஜெ.மோவிற்கு கட்டுரை அனுப்பியதும் அவர் படித்துவிட்டு நன்றாக எழுதியிருக்கிறீர்கள் என பதிலனுப்பினார். இதே கட்டுரையை நக்கல் தொனியிலோ, எரிச்சலுடனோ எழுதியிருந்தால் அவர் இதை ஒதுக்கியிருப்பார்.

  (என்னடா அட்வைஸ் மழைன்னு நினைக்காதீங்க தோன்றியதை எழுதுறேன் :) – )

 11. Prabhu சொல்கிறார்:

  //ஒரு சாதாரண கத்தோலிக்கனுக்கு இறையியல் குறித்த (முழுமையான) அறிவு இருக்கவேண்டிய அவசியமில்லை. அப்படி இருக்கையில் பிறரிடம் இதை எதிர்பார்க்க முடியவில்லை.//

  இது முற்றிலும் உண்மை. ஓரு கதோலிக்கனாய், கத்தோலிக்கமதம்-பெண்ணுரிமை பற்றி இதுவரை சிந்தித்தது/ஆராய்தது இல்லை.

  //வெறுப்புடனும், மனத்தடைகளுடனும், முன்முடிவுகளுடனும் இதை அணுகினால் முதலில் நம் வாதங்கள் கேட்கப்படமாட்டாது. பிறகு நம்மால் ஒழுங்காக, தெளிவாக சொல்லவந்ததை சொல்லமுடியாது.//

  நீங்கள் பதிவுலகில் வெற்றி நடை போட இதுவும் ஒரு முக்கிய காரணம் :)

 12. ஜோ சொல்கிறார்:

  சிறில்,
  //ஆக ஒரு சாதாரண கத்தோலிக்கனுக்கு இறையியல் குறித்த (முழுமையான) அறிவு இருக்கவேண்டிய அவசியமில்லை. அப்படி இருக்கையில் பிறரிடம் இதை எதிர்பார்க்க

  முடியவில்லை.//

  இதைத் தான் நான் இங்கே குறிப்பிட்டிருக்கிறேன் .
  //.என்னைப் போல சாதாரணன் ஒருவனுக்கு அது இல்லாதிருக்கலாம் ..ஆனால் தலையணை அளவுக்கு நாவல் எழுதி பெரிய இலக்கியவாதி என தன்னைத் தானே

  முன்னிறுத்தும் இவருக்கு இந்த அறியாமை பெருமையல்ல ..//

  மற்றபடி நான் எந்த கட்டுரையைக் குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்கு தெரியும் என குறிப்பிட்டீர்கள் .நான் தீவிர சிவாஜி ரசிகன் என்பதால் நான் எந்த கோணத்தில்

  சொல்லுகிறேன் என்று நீங்கள் முன்முடிவோடு நினைக்க வாய்ப்பிருக்கிறது .’திலகம்’ என்ற பெயரில் நடிகர் திலகம் பற்றி வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று

  விமர்சனம் என்ற பெயரில் அவர் செய்த அறிவுஜீவி கோணங்கி தனத்தை விட்டு விடுவோம் .ஏனென்றால் அது ஒரு விமர்சனமாகவே இருந்து விட்டு போகட்டும் .ஆனால்

  உண்மைகளை அப்படியே புரட்டக்கூடாது .அந்த கட்டுரையில் இவர் ஊரில் நாடார்களுக்கு சிவாஜியைப் பிடிக்காது என எழுதியிருக்கிறார் .இவர் ஊர் என்றால் இவர் வாழ்ந்த

  கிராமம் என்று தப்பித்துக் கொள்ளலாம் .ஆனால் பலருக்கும் இவர் ஊர் என தெரிவது நாகர் கோவில் தான் ,அல்லது குமரி மாவட்டம் தான் .நாகர்கோவில் பகுதியில் உள்ள

  நாடார்களுக்கு சிவாஜியை பிடிக்காது என்று சொல்வது எவ்வளவு வடிகட்டிய பொய் மட்டுமல்ல தலைகீழ் புரட்டு என்பது அந்த பகுதி நாடார்களைப் பற்றி அடிப்படை

  புரிதலும் பழக்கமும் உள்ளவர்கள் அறிவார்கள் .ஏனென்றால் அந்த பகுதியில் குறிப்பாக நாடார் மக்கள் சிவாஜி மேல் கொண்டுள்ள அதீதமான அபிமானத்தை நேரடியாக

  உணர்ந்தவன் நான் .வேறு எந்த பகுதியிலும் எந்த மக்களும் ஒரு நடிகன் மீது இந்த அளவுக்கு அபிமானம் கொண்டதில்லை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும் .

  ஒரு சின்ன உதாரனம் சொல்கிறேன் .எங்கள் ஊரைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம் .எங்கள் ஊர் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் நிரம்பிய ஒரு கிறிஸ்தவ மீனவ கிராமம்

  .நம்மூர் பகுதிகளில் கோவில் திருவிழாக்களில் சினிமா போடும் பழக்கம் உண்டு .எங்கள் ஊரில் கோவில் திருவிழாவுக்கு ஊர் சார்பில் சினிமா போட்டால் ஒரு படம்

  என்றால் அது எம்.ஜி.ஆர் ,சிவாஜி படமாக இருக்காது ..எனென்றால் எம்.ஜி,ஆர் படம் போட்டால் சிவாஜி படம் போட்டாக வேண்டும் ,எம்.ஜி,ஆர் ரசிகர்கள் பெருமளவில்

  இருந்தாலும் ..எங்கள் ஊரை சுற்றி பல நாடார் இந்து கிராமங்கள் உள்ளன .அங்கே நடக்கும் கோவில் கொடை விழாக்களில் 10 நாளும் 10 திரைப்படங்கள் போடுவார்கள்

  ..10 படங்களும் சிவாஜி படங்களாகவே இருக்கும் ..ஒருவர் கூட ஆட்சேபம் சொல்வது கிடையாது .இதில் பல கோவில்கள் முழுக்க முழுக்க நாடார்கள் நிர்வகிக்கும்

  கோவில்கள் .சந்தேகத்திற்கபார்பட்டு அவர்கள்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ஒரே நடிகன் சிவாஜி மட்டும் தான் ..ஆனால் இவரோ நாடார்களுக்கு சிவாஜியை

  பிடிக்காது என்று புழுகுகிறார் .. சும்மா வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்று நினைத்துக்கொள்ளக் கூடாது .. கொஞ்ச நஞ்சம் மாற்றிச்

  சொன்னால் பரவாயில்லை ..தோசையையையே தலைகீழாக போட்டால் எப்படி ? விமர்சனம் என்பது வேறு ..உண்மைகளை குழி தோண்டி புதைப்பது ,தவறான தகவலை

  பரப்புவது என்பது வேறு ..அவர் ஜெயமோகனாய் இருந்தால் என்ன ..எந்த கொம்பனாக இருந்தால் என்ன ?

 13. சேவியர் சொல்கிறார்:

  //நான் ஜெ.மோவிற்கு கட்டுரை அனுப்பியதும் அவர் படித்துவிட்டு நன்றாக எழுதியிருக்கிறீர்கள் என பதிலனுப்பினார். இதே கட்டுரையை நக்கல் தொனியிலோ, எரிச்சலுடனோ எழுதியிருந்தால் அவர் இதை ஒதுக்கியிருப்பார்//

  உண்மையிலேயே ஜெயமோகனுக்கு கத்தோலிக்கம் பெண்ணடிமைத்தனத்தின் கட்டமைப்பில் இயங்குகிறது எனும் சந்தேகம் இருந்தால் சொல்லுங்கள். அவருடைய சொந்த இடம் கோட்டாறு மறைமாவட்டத்தின் எல்லைக்குள் வரும். இறையியலிலும், விவிலிய ஆராய்ச்சியிலும் ஆழமான அறிவு கொண்ட கத்தோலிக்க பாதிரியார்கள் அங்கு ஏராளம். ஒரு சிறிய கலந்துரையாடல் நடத்தச் சொல்லுங்கள்.

 14. சேவியர் சொல்கிறார்:

  //

  நாடார்களுக்கு சிவாஜியை பிடிக்காது என்று சொல்வது எவ்வளவு வடிகட்டிய பொய் மட்டுமல்ல தலைகீழ் புரட்டு

  //

  இப்படிப்பட்ட பொதுமைப்படுத்தல்கள் தான் எழுத்தாளர் மீதான மரியாதையைக் குறைக்கின்றன.

 15. ஜோ,
  அவர் வாழ்ந்த இடத்தில் நாடார்களைப் பற்றி சொல்கிறார். நாகர்கோவில் நாடார்களுக்கு சிவாஜியை (காமராஜ் வழியில் என நினைக்கிறேன்) பிடிக்கும் என்பது உண்மை.

  கன்னியாகுமரி மாவட்டத்தில் தெலுங்கு படம் பார்ப்பவர்களும் உண்டு என்பதை அவர்சொல்லித்தான் தெரிந்துகொண்டேன். நாகர்கோவில் பக்கத்தில் அப்படி பார்க்கிறவர்கள் இல்லை என்றே சொல்லமுடியும்..

  ஆக அவர் யாரைப் பற்றி குறிப்பிடுகிறார் என்பதெல் எழும் benefit of doubt அவருக்கே வழங்கப்பட வேண்டும். நாமாக இது குறித்து முடிவெடுத்துக்கொள்ள முடியாது.

  இப்படி ஆராய்ந்து தகவல் பிழைகளையும் உள்ளோடும் அரசியலையும் பார்த்துக்கொண்டிருந்தால் உலகில் எதையும் அனுபவிக்க முடியாது என்பது என் கொள்கை. அதுக்காக எதிர்வினைகளே கூடடதென்பதற்கில்லை.

  அனுபவிக்கணும் ஆராயக் கூடாதுண்ணு பம்மல் ங்கே சம்பந்தம் சொல்லீருக்காருல்ல :)

 16. martin சொல்கிறார்:

  Dear Mr.Cyril Alex,

  “CATHOLIC Religion and Women Rights”.Good joke article.

  First you please pray to God to save the catholic women,altar boys and families from majority catholic priests.
  Just,please write keywords in google search that,”roman catholic priests sexual abuse”.Then please read some of the articles in that websites.
  Then write articles about roman catholic religion.NOW A DAYS,THE ROMAN CATHOLIC FORT IS SLOWLY DAMAGED BY ITS OWN DIRTY PRIESTS.
  FIRST,YOU PEOPLE HAVE TO WRITE ARTICLES TO SAVE ROMAN CATHOLIC WOMEN,ALTAR BOYS AND FAMILIES FROM THESE SO CALLED PRIESTS.

  AFFECTED EX-ROMAN CATHOLIC
  martin

 17. Hi Martin,
  Don’t know if you read the article or even cared to check the background. Assuming you did and ignored them all, the discussion is on the theology and the concepts behind Catholicism on Woman and not on how things are actually practiced.

  People sin but that cannot be attributed to the religion itself (unless it is done explicitly in the name of religion). So if the Catholic Church approves child molestation then we have a concern there.

  There are malpractices under every system that we know. It is very easy to blame a system and hide our inequities (assuming you are as human as I am). The notion that people should not sin is applicable to everyone, including the priests, including you.

  So in the words of Jesus (assuming you remember some of it), ‘let the one who has not sinned throw the first stone’.

  Our expectation on priests and our leaders are too high. We want them to be super humans, without sins, without defects. But we will offer an explanation to our defects in a second.

  Having said all these, if there was a need for discussing the acts of priests I will be willing to write about that too, if I feel I could bring in something to that discussion.

  :)

 18. martin சொல்கிறார்:

  Dear Mr.Cyril Alex,

  Thank you for your immediate reply.
  I am expecting a article about dirty priests from you.Now a days these so called priests are started to say that,i am a priest and i am not clergy.

  One priest described himself ,in his own words,”NAAN PAATHIRIYAAR.NAAN THURAVI ELLAI,YAAR SONNATHU NAAN THURAVI ENTRU?”.please Can you write in your article,what is the difference between PAATHIRIYAAR and THURAVI.

  We want peace in our homes Mr.Cyril alex.Not your theology and phylosophy.So,many priets are trying to attract the women in roman catholic families and trying to break the normal families.Is it roman catholism?.

  Try to understand the presnt condition of catholic priests.If they want,they can marry.My demand is why these dirty priests trying to demolish families.

  You know,their thinking is,if they marry,they have to live with one girl.If stay as priest in a parish,they can get many women.This is their thinking.
  All are sinners including me.I agree.But,nobody get easy access with women like priests.Choir class,sunday classes etc.
  Now a days,these so called priests arranging so many tours in their parishes with women.My doubt is,these priests are tour operators or preachers?

  These dirty priests are threatening the catholics that,they will curse them.These foolish people are afraid of such curses.

  My question is protestants made their own church.At that time,i hope POPE and priests must cursed them.But,now a days the protestants are in good position.In USA 52% Population in protestants.In Kanyakumari district,csi peple are wealthy people.Why pope”s and priests curse didnot worked?

  I request you to dont compare a ordinary man and a priest.And dont support their misbehaviours.

  Now a days,you can see priests with women in their vehicles and in liquour bar too.
  If you believe all are sinners,then no need of these priests.Stay the churches as it is.If people want to pray,they can go to church and pray.

  WHAT IS THE NEED OF A SINNER PRIEST THERE?

  Many priests are simply watching and enjoying the women in the church.We heard this,in their own words

  I am a affected person.Try to understand the ugly conditions of majority priests and news coming frequently about dirty priests in newspapers.

  Our expectation on priests and our leaders are too high. We want them to be super humans, without sins, without defects. But we will offer an explanation to our defects in a second.

  The above is your words.If the priest doing sins,then he have to leave from his priesthood.I am not a priest.But,it is not easy to me to call a women to my bed in my first meet with her.I know a priest,he is calling any women to bed in his first meet in his bungalow.Really he is not a human.He is superhuman.DO YOU AGREE HIS ACT?.Is it simple defect?

 19. Anonymous சொல்கிறார்:

  சிரிலுக்கு,
  ‌ஜெயமோகனுக்கு நீங்கள் பதில் தந்திருக்கவே கூடாது. மீடியாக்களில் போடுகிறார்கள் என்பதற்காக தங்கள் கிறிஸ்தவ எதிர்ப்பு கருத்துக்களை தொடர்ந்து நச்சு வார்த்தைகளுடன் தந்து கொண்டிருப்பவர்களில் ஜெயமோகனும் ஒருவர். கிறிஸ்தவ மதத்தை பற்றி எழுத ஜெயமோகனுக்கு அருகதை இல்லை.
  அதே வேளையில் நீங்கள் கத்தோலிக்கத்திற்காக வேண்டி வரிந்து கட்டிக்கொண்டு போராட வேண்டிய அவசியம் இல்லை. எல்லா மதங்கள் போல கத்தோலி்கமும் அசிங்கமானது தான். இந்த சாக்கடையில் கத்தோலிக்கம் கொஞ்சம் பரவாயில்லை அவ்வளவு தான்.
  பாதிரியார்கள் பற்றி உங்களிடம் வாதித்திட்ட மார்ட்டினிடம் ஒரு நியாயம் இருக்கிறது. குருக்கள் ஒட்டுமொத்த அக்கிரமக்கார்களாக மாறி வருவது உண்மை தான். நல்லவன் பெரியவன் குடும்பத்‌தைச் ‌சேர்ந்த பெண்கள் குருக்களிடம் ‌பேசினா‌லே அது பாவம் தான். சுத்த பொம்பளை பொறுக்கிகளாக அவர்கள் மாறி விட்டனர்.
  சிரில்‌ போன்றவர்கள் மீனவ சமுகத்தில் விழிப்புணர்வு உருவாக உழைக்க வேண்டும். இனி கடற்கரை ஊர்களில் கோவில் கட்ட வேண்டாம். மருத்துவமனை, கல்லூரிகள் கட்ட விழிப்புணர்வு செய்யுங்கள்

 20. அனானி நண்பருக்கு.
  நான் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பதுபோல, (மதங்கள் குறித்த) விவாதங்களில் இதுபோன்ற பொதுமைப்படுத்தல்கள் சகஜம், அது தவறெனப் பட்டால் சொல்லவேண்டியது நம் கடமை என நினைக்கிறேன்.

  பொதுவாக மதங்களின் பிரச்சனை மதங்களே அல்ல, மனிதன்தான். கொள்கையளவில் எல்லா மதமும் ஒரு சுமூக சமூக வாழ்கையயே முன்வைக்கின்றன(விதிவிலக்குகள் உண்டு). நல்லது என எடுத்துக் கொள்ள எல்லா மதங்களிலும் நிறைய இரூக்கின்றன. அதே சமயம் மதங்களை தங்கள் வசதிக்காக தவறாக பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள், குறிப்பாக அதன் அதிகார வர்கத்தில் இருப்பவர்கள். மார்டின் அவர்களின் வாதம் முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதே. இன்று சாமியார்களின் நிலை படு மோசமாகிவிட்டது என்பதை மறுக்க இயலாது. ஆனால் அதற்காக கிறீத்துவம் (and thus Jesus) மோசமான கருத்துக்களை உட்கொண்டது என்பதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது.

  பின்னூட்டத்திற்கு நன்றி.

 21. Edwin சொல்கிறார்:

  Dear Cyril

  Thanks very much for your article. I relly appriciating you about your appraoch and your sensible answers to Mr.Martin comments hence those are not fully fit your article.

  As annony told Jaya Mohan is now days acting as a RSS one of mouthpiece / outfit. so no need to answer him.

  The major difference between Chatholic and other is the Chatolic church allows moderation and diaglouge in all level. but the present church must think about Priests marriage and allow womens in all level.

 22. //As annony told Jaya Mohan is now days acting as a RSS one of mouthpiece / outfit. so no need to answer him.//

  Edwin,
  Thanks for the comment. I feel there is no need to certify anyone as this and that. If JM can be called an RSS guy, then who would I be?

  We are just exchanging ideas. Clarifying points. We all have a way of saying things. I have made comments on Hinduism which can be totally turned against me and someone can call me a Christian Fundamentalist easily.

  //The major difference between Chatholic and other is the Chatolic church allows moderation and diaglouge in all level. but the present church must think about Priests marriage and allow womens in all level.//
  I agree. There is a growth pattern we see in Catholic church. It has rejected its own ideologies sometimes, or given them whole new meanings to fit the times.

  But there is no denying that it is subject to heavy criticisms, from within and without, on several issues. But then it has a way of dealing with them. Like I mentioned it is like a Democracy. The concept is beautiful, but how it is actually executed may not always be perfect.

 23. ஜோ சொல்கிறார்:

  மார்ட்டின்,
  சிறிலை ஏதோ கண்ணை மூடிக்கொண்டு கத்தோலிக்க மதத்துக்கும் குருமார்களுக்கும் வக்காலத்து வாங்குபவராக முடிவு செய்து கொண்டு எல்லா கேள்விகளையும் அவரிடமே கேட்டால் என்ன செய்வது?

  சிறில் சொன்னது போல இங்கே மதம் அதிகாரபூர்வமாக என்ன சொல்கிறது என்பது தான் விவாதமே தவிர மதத்தில் உள்ளவர்களின் யோக்கியதை பற்றியல்ல .

 24. Marlan சொல்கிறார்:

  I just want to tell that I enjoyed reading this article. Well done. I also have come to realize how the actions of the clergy (human though they are) affect the faith of the common people. Good. Keep it up

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்