‘அறச்சீற்றம்’ குறித்த அறச்சீற்றம்

அறச்சீற்றம் எனும் வார்த்தையின் புகழ் மேலோங்கி வருகிறது. இது வெறும் வார்த்தையாக இல்லாமல் ஒரு இயற்காட்சியாகவும்(Phenomenon) இருப்பதால் இது குறித்த நுண்ணிய அலசல் ஒன்றின் தேவையை உணர்ந்து இந்தக் கட்டுரை எழுதபடுகிறது.

அறச்சீற்றம் என்பது எழுத்தாளர்களுக்கு குறிப்பாக இலக்கியவாதிகளுக்கு எழும் கோபம். டீயில் கிடக்கும் ஈ துவங்கி, ஈ யில் நடித்த நயன் வரைக்கும் எழுத்தாளர்களின் கோபத்தை, சீற்றத்தை தூண்டுகிற விஷயங்கள் எண்ணிக்கையில் அடங்காது. அப்போது வாளினும் வலியதொரு ஆயுதத்தை எடுத்து அவர்கள் விளாச ஆரம்பிக்கையில் அதிலிருந்து இரத்தம் வழிந்து எழுத்தாகி அறச்சீற்றம் உருப்பெறுகிறது. சிலர் இதை எழுத்துக்களின் தலைகளில் இறுகத் தட்டியும் வெளிப்படுத்துவதுண்டு.

அறம் என்பது பலவகைப்படுவதுபோல அறச்சீற்றமும் பலவகைப்படும். அவற்றை துல்லியமாக வகைப்படுத்துவது இந்தக் கட்டுரையாளருக்கு அறச்சீற்றம் தரும் விதயமாகையால் தவிர்க்கப்படுகிறது.

எது இலக்கியம் எது இலக்கியமல்ல என்பது குறித்து இலக்கியவாதி ஒவ்வொருவருக்கும் எப்படி தனிப்பட்ட தீர்மானங்கள் உள்ளனவோ அதுபோலவே எது அறச் சீற்றம், எது வெறும் சீற்றம் என்பது குறித்தும் தனிப்பட்ட தீர்மானங்கள் உண்டு. எனினும் ஒரு வசதிக்காக இலக்கியவாதிகளின் சீற்றமெல்லாமே அறச்சீற்றம் என எடுத்துக் கொள்ளலாம்.

அப்படியானால் இலக்கிய கூட்டங்களில் ஒருவர் மற்றவரைத் தாக்கச் செல்வது அறச்சீற்றமா எனும் கேள்வி எழும். ஒரு எழுத்தாளர் இன்னொருவரை அறையச் சென்றால் அது அறைச்சீற்றம், அறச்சீற்றமல்ல. இதுபோலவே மாதக் கடைசியில் திருவல்லிக்கேணி பாச்சிலர்கள் மளிகை கணக்கை செட்டில் செய்யும்போது அறையில் ஏற்படும் சஞசலமும் ‘அறை’ச்சீற்றம் எனப்படுகிறது. (அந்த ரூமில் எழுத்தாளர் இருந்தால் அது அறச்சீற்றம் என்றே வழங்கப்படவேண்டும்)

‘அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்’
எனச் சொன்ன திருவள்ளுவருக்கே அடிக்கடி அறச்சீற்றம் ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது என ஆய்வாளர்கள் சிலர் கூறியுள்ளனர். இவர்கள்
‘நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.’
எனும் குறளுக்கு ஒரு பெண்ணின் நகையை பறித்து அவளது உவகையை கொல்லும் சனத்தைப்(சனம்=மக்கள்) போல வேறு பகைவர்களே இருக்க முடியாது எனும் விளக்கத்தினை அளித்துள்ளனர்.

அறம் எனும் வார்த்தையை ஆங்கிலத்தில் a rum எனப் பிரித்துவிட்டால், ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் பின்னிரவில் போத்தல்களுக்கிடையே நடக்கும் பேத்தல்களுக்குப் பின் ஐரோப்பிய, தென்னமெரிக்க, இத்தாலிய, உருசிய இலக்கியங்களுக்கிடையே ஆறு வித்தியாசங்களை வரிசைப் படுத்தும்போது ஏற்படும் சீற்றங்கள் arum+சீற்றங்கள் எனப்படும்.

அறச் சீற்றத்திற்கு எதிர்பதம் என்ன? இலக்கிய வட்டத்தில் ஒரு வார்த்தைக்கான எதிர்பதம் அந்த வார்த்தைக்கு முன் ‘அ’ போட்டால் தோன்றிவிடுவதால் அஅறச்சீற்றம் என்பதுவே அறச்சீற்றதுக்கு எதிர்சீற்றம். I mean எதிர்பதம். அபுனைவு என்பது இப்படி அ சேர்க்கப்பட்ட வார்த்தைகளின் முன்னோடி. அப்படியானல் அ. மார்க்ஸ் என்பவர் மார்க்சியத்துக்கு எதிரானவரா எனும் கேள்விகள் அறச் சீற்றத்தை உண்டுபண்ணலாம்.

திருக்குறளை முன்வைத்து அறத்தைப் போலவே பொருள், இன்பம் ஆகியவற்றிற்கும் சீற்றம் தேவை எனும் ஆர்வத்தில் தற்போது கடன்காரனின் கோபம் பொருள்சீற்றம் என்றும், காத்திருக்கும் காதலியின் கோபம் இன்பச் சீற்றம் எனவும் பெயரிடப்பட ஆய்வுகள் நடக்கின்றன. இதில் ரூபாய் நோட்டுக்கள் நிறைந்த பிச்சைக்காரரின் தட்டில் சில்லறை நாலணாவைப் போடும்போது அவருக்கு எழும் சீற்றமே பொருள் சீற்றம் என எதிர்வாதம் இருப்பதால் இதில் முடிவெடுக்க தயக்கம் உள்ளது.

இதைப் போலவே மதவாதிகளுக்கு ஏற்படும் சீற்றம் மறைச்சீற்றம் என்றும் பாதி எழுதப்பட்டு கிடக்கும் கட்டுரைகள் குறைச்சீற்றம் எனவும் வழங்கப்படும்.

அறச்சீற்றம் தண்டனைக்குரிய பாவமா என ராக்கெட் சித்தரைக் கேட்டுத் தெரிந்துகொள்ளும் முன் அவர் டேக் ஆஃப் ஆகிவிட்டதால் அடுத்த லேண்டிங்கின் போது இது குறித்த தெளிவு ஏற்படலாம்.

வலைப்பதிவுகள் எனப்படும் ஒருவகை எழுத்தாளர்கள் எப்போதுமே அறச்சீற்றத்திலேயே காணப்படுகிறார்கள். அவர்கள் எழுத்தை வைத்துப் பார்த்தால் ஒவ்வொருவரும் இதுவரை ஏழு கொலைகளும், இருநூறு முன்னூறு (உருட்டுக்) ‘கட்ட’பஞ்சாயத்துக்களும் செய்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது. ஆயினும் அறச்சீற்றத்தின் புறத்தோற்றம் எழுத்திலேயே நின்றுவிடுவதாலும், ஹிட் கவுண்டர்கள்(சாதி உட்பிரிவு அல்ல) ஏற ஏற சீற்றம் தணிந்துவிடுவதாலும் இவர்களின் அறச்சீற்றம் புறச்சீற்றமாய் மாறி கைகலப்புவரை இன்னும் செல்லவில்லை.

இதே பதிவர்கள் வகையில் சிலரின் கட்டுரைத் தலைப்பில் இருக்கும் சீற்றம் கட்டுரையில் இருப்பதில்லை என்பதும் குறிப்பிடத் தகுந்தது. தலைப்பில் உள்ள சீற்றத்தின் விகிதத்திற்கேற்ப டாப் 10 தரவரிசையில் ஒருவர் இடம் பெற முடியும் எனும் நம்பிக்கையே இதற்குக் காரணம்.

இத்தகைய ‘தலைப்பு-மட்டும்’ அறச்சீற்றத்திற்கு எதிரெழும் அறச்சீற்றப் பதிவுகளும் தற்போது அதிகரித்துள்ளன. இவற்றை மற்றவர்களுக்கு பரிந்துரைப்பதால் அவர்களுக்கு அறமற்ற சீற்றம் வந்து லோக்கல் தமிழ் சங்கத்திலிருந்து தங்களை விலக்கிவிடுவார்களோ என சிலருக்கு சந்தேகமும் வந்துள்ளது.

அறச்சீற்றத்தின் விளைவு எழுத்துதான் எனும் விதிக்கு ஒரு விலக்கும் உள்ளது. சிலர் அறச்சீற்றத்தின் விளைவாக இனி எழுதப்போவதில்லை என அறிவிப்பதுண்டு. ஆயினும் மற்ற சீற்றங்களைப் போலன்றி அறச் சீற்றம் விரைவிலேயே ஆறிப் போவதாலும், அடிக்கடி எழும் அறச் சீற்றத்தை எழுதாமல் விட்டால் அது பின்னாளில் அல்சரில் போய் முடியும் என்பதாலும் அவர்கள் மீண்டும் எழுத வருவது இயல்பு.

அல்சருக்கு, பத்து முறை கன்சல்டேஷனுக்குப் பின், பல டெஸ்ட்களும் அவர்கள் ‘குறிப்பிட்ட’ ஆய்வகத்தில் செய்துவிட்டபின் சில மருத்துவர்களே ‘வலைப்பதிவொன்றைத் துவங்கிவிடுங்களேன்’ எனச் சொல்லி பிரிஸ்கிரிப்ஷனில் www.blogger.com எனப் புரியும்படி எழுதித் தருவதாக அண்மையில் கிட்னி மாற்று செய்துகொண்ட ஒருவர் கூறினார்.

ஆகவே நண்பர்களே எழுத்தாளர்களின் சீற்றம் அறச் சீற்றம். அதன் விளைவுதான் இலக்கியம். அது அழகியலின் தலையை கலைத்து கொடூரமாக்கி, சமூகத்தின் கோர முகத்திற்கு ஜாம்பி(Zombie) வேஷமிட்டு, அரசியல்வாதியின் அங்கவஸ்திரத்திலிருக்கும் அழுக்கை தேடினாலும் கிடைக்காமல் செய்துவிட்டு, ஏழ்மையின் துயரைப் பிழியப்பாடி, ஐ.டி கம்பெனிகளின் அடிக்கோட்டைச் (bottom line) சாடிவிட்டு, சக எழுத்தாளனின் அறச்சீற்றம் மேல் பாய்ந்து குதறிவிட்டு, பின்னர் ஒரு காலி போத்தலோடு (போர்வையை போர்த்தல் அல்ல) படுத்துக்கொள்ளும்.

அறச்சீற்றம் கொள்ளுக! அதை எழுதித் தள்ளுக!

Popularity: 10% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....20 மறுமொழிகள் to “‘அறச்சீற்றம்’ குறித்த அறச்சீற்றம்”

 1. thamizachi சொல்கிறார்:

  “அழுக்காறு அவாவெகுளி இன்னாச் சொல் நான்கும்

  இழுக்கா இயன்றது அறம்”.

  பொறாமை,ஆசை,சினம்,கடுஞ்சொல் என்னும் நான்கிற்கும் இடமளிக்காமல் வருவது அறமாகும் என்கின்றது திருக்குறள்.

  அறம் என்றால் என்ன?
  சீற்றம் என்றால் என்ன? அலெக்ஸ்.
  உங்களுடைய கருத்துக்களை சொல்லுங்களேன் ப்ளீஸ்…. கொஞ்சம் விவாதிக்க வேண்டும்.

 2. தமிழச்ச்சி காமெடி பதிவு போட்டாலும் வந்து கலாய்க்குறீங்களே.
  :)

  அறம் – (right kind of) righteousness
  அறம் – நன்மை(செய்தல், நினைத்தல்)

  அழுக்காறு, அவா – நினைத்தல் வகை
  வெகுளி, இன்னாச் சொல் – செய்தல் வகை

  திருவள்ளுவர் இன்னொரு விளக்கமும் தருகிறார்.. ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்’ being pure of heart. having clear conscience எனவும் சொல்லலாம்.

  இப்ப அடுத்த பாயிண்ட்டா Morality எல்லாம் பத்தி பேச ஆரம்பிச்சோம்ணா having clear conscience என்பதில் வந்து முடிக்கலாம். அதுவும் போதுமான விளக்கமில்லை, ஆனால் பொதுவான விளக்கம்.

 3. சீற்றம் என்பது கோபத்தின் வெளிப்பாடு. சீறுதல் என்பதிலிருந்து வருகிறது என நினைக்கிறேன். கோபம் உள்ளேயே இருந்திட்டா சீற்றமில்ல, அது சினம். வெளியே காட்டினாத்தான் சீற்றம்.

  அடுத்து திருக்குறள் தெளிவுரையை என்னிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம் போல

  என் தமிழ் வாத்திகளுக்கு நன்றி.

 4. Balaji சொல்கிறார்:

  :) :))

 5. எனும் குறளுக்கு ஒரு பெண்ணின் நகையை பறித்து அவளது உவகையை கொல்லும் சனத்தைப்(சனம்=மக்கள்) போல வேறு பகைவர்களே இருக்க முடியாது எனும் விளக்கத்தினை அளித்துள்ளனர்.//
  :0)
  நகை என்றால் புன்னகைனு நான் நினைச்சேன்.

 6. சென்ஷி சொல்கிறார்:

  சான்ஸே இல்ல.. தலைவா,

  உங்களுக்குள்ள இப்படி ஒரு பதிவு சீற்றம் இருக்கும்ன்னு நான் கனவுல கூட நினைக்கல. ஆனாலும் சீற்றதுக்குன்னே பொறப்பெடுத்த பாம்பு சீற்றத்த பத்தி நீங்க ஒண்ணுமே சொல்லாதது எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப வருத்தமாயிருக்குது :)))

  சென்ஷி

 7. thamizachi சொல்கிறார்:

  “பொய்யுடை ஒருவன் சொல் வன்மையால்

  மெய்போலும்மே மெய்போலும்மே!”

  (பொய் சொல்லுபவன் சாமர்த்தியத்தால் அவன் சொல்லக்கூடிய பொய்யானது மற்றவர்களுக்கு உண்மை என எண்ணத் தோன்றும்)

  “மெய்யுடை ஒருவன் சொல்லமாட்டாமையால்

  பொய் போலுமே பொய்போலுமே.”

  (உண்மை பேசக் கூடியவன் ஒருவன் திறமையாகச் சொல்லத் தெரியாததால் அவன் சொல்லுவதை பொய் என எண்ணத் தோன்றும்)

  “பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

  அணியல்ல மற்றுப் பிற.”

  (பணிவு உடையவனாகவும், இனிதாகச் சொல்பவனாகவும் ஆகுதல் ஒருவனுக்கு அணிகலனாகும். பிறவெல்லாம் அணிகலன்கள் ஆகாது.)

  “அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

  நாடி இனிய சொலின்.”

  (நன்மையானவைகளையே விரும்பி இனிய சொற்களையும் சொல்லி வந்தால் அதனால் பாவங்கள் தேய்ந்து போக அறம் வளர்ந்து பெருகும்)

  “புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்

  நன்கு செலச் சொல்லு வார்.”

  ( நல்ல அறிவாளிகள் கூடியுள்ள அவையிலே அவர்களுக்கு நன்றாக பதியுமாறு சொல்கிறவர்கள், புல்லறிவினர் கூட்டத்திலே மறந்தும் பேசாதிருக்க வேண்டும்)

  “பகையத்துச் சாவார் எளியர் அரியர்

  அவையகத்து அஞ்சா தவர்.”

  (போர்களத்தின் நடுவே அஞ்சாமல் சென்று சாவையும் ஏற்பவர்கள் பலர்; ஆனால் கற்றோர் அவையிலே சென்று பேசக்கூடிய அஞ்சாமை உடையவர்கள் மிகமிகச் சிலரே)

  “திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்

  பொருளும் அதனினூ உங்கும் இல்.”

  (கேட்பவரது மனப்பான்மையை அறிந்தே எந்த சொல்லையும் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்வதை விட மேலான அறமும் பொருளும் இல்லை)

  “சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

  இகல்வெல்லல் யார்க்கும் அரிது.”

  (சொல்வல்லன் உடையவன் சொற்சோர்வு இல்லாதவன் சபைக்கு அஞ்சாதவன். இவர்களை பேச்சில் வெல்லுவது என்பது எவருக்குமே அரிதானது)

  “பல சொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற

  சில சொல்லல் தேற்றா தவர்.”

  (குறைவில்லாத சில சொற்களாலே தம் கருத்தை விளக்கிச் சொல்வதற்கு அறியாதவர்களே பல சொற்களைச் சொல்வதற்கு எப்போதும் விரும்புவார்கள்.)

  “இணருழ்த்தும் நாறா மலரளையர் கற்றது

  உணர விரித்துரையா தார்.”

  ( தாம் கற்றவைகளைப் பிறரும் அறியும்படியாக விளக்கிச் சொல்லத் தெரியாதவர் கொத்தாக மலர்ந்திருந்தும் மனம் வீசாத மலரைப் போன்றவர்கள் ஆவார்கள்)

  ” இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்

  கொலோவன்சொல் வழங்குவது.”

  ( இனிய சொற்கள் தனக்கு மிகுந்த இன்பத்தைத் தருவதனைக் காண்பவன் கடுமையான சொற்களை வழங்குவது எந்தக் காரணத்தினாலோ?)

  “இனிய உளவாக இன்னாத கூறல்

  கனியருப்பக் காய்கவர்ந் தற்று. ”

  ( இனிய சொற்கள் இருக்கின்ற போது ஒருவன் இன்னாத சொற்களைக் கூறுதல் இனிய கனி இருக்கவும் காயைத் தின்பது போன்றதே.)

  ” யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

  சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.”

  (எவற்றைக் காக்காதவராயினும் தம் நாவைத் தவறாமல் காக்க வேண்டும். காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்பம் அடைவர்)

  “ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

  நன்றாக தாகி விடும்.”

  ( தீய சொற்களாலே வந்தடைந்த பொருளாகிய நன்மை ஒன்றாயினும் ஒருவனிடம் இருந்தாலும் அதனால் எல்லா நன்மையுமே இல்லாமற் போய்விடும்)

  “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

  நாவினாற் சுட்ட வடு.”

  (தீயினாலே சுடப்பட்ட புண் உள்ளே ஆறிவிடும். நாவினாலே சுட்ட வடுவானது உள்ளத்தில் ஒரு போதும் மறையவே மறையாது)

  “ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய

  வழுக்கியும் வாயாற் சொலல்.”

  (தீய சொற்களைத் தவறியும் தன் வாயினாற் சொல்லும் குற்றம் நல்ல ஒழுக்கம் உடையவர்களுக்கு ஒரு போதும் பொருந்தாத பண்பாகும்)

  “அறனழீ அல்லவை செய்தலின் தீதே
  புறனழீஇப் பொய்த்து நகை.”

  (அறத்தையே அழித்துத் தீமைகழளச் செய்து வருவதைக் காட்டிலும்,
  இல்லாத போது ஒருவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாகச் சிரிப்பது தீமையாகும்)

  ” புறங்கூறிப் பொயத்துயிர் வாழ்தலின் சாதல்

  அறங்கூறும் ஆக்கம் தரும்.”

  ( பிறர் இல்லாத போது அவரைப் புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட இறந்து போதல் அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்)

  “கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க

  முன் இன்று பின்நோக்காச் சொல்.”

  (நேரில் நின்று இரக்கம் இல்லாமல் கடுமையாகப் பேசினாலும் பேசு.நேரில் இல்லாத போது பின்விளைவைக் கருதாமல் எந்தப் பழியையும் எடுத்துச் சொல்லக் கூடாது.)

  “அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்

  புன்மையால் காணப்படும்.”

  (அறநூல்கள் கூறும் உள்ளமுள்ளவனாக ஒருவன் இல்லாத தன்மையினை அவன் புறங்கூறுகின்றதால் அந்த இழிசெயலால் தெளிவாக அறியலாகும்)

  “பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்

  திறன் தெரிந்து கூறப் படும்.”

  (பிறனைப் பின்னால் பழித்துப் பேசுபவன் அவனுடைய பழிச் செயல்களுக்குள்ளும் இழிவானதைத் தெரிந்தெடுத்துக் கூறிப் பிறரால்
  மிகவும் பழிக்கப்படுவான்)

  “பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

  நட்பாடல் தேற்றா தவர்.”

  (மகிழ்சியாகப் பேசி நட்பு கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவரே பிறர் தம்மை விட்டு விலகுமாறு பழித்துப் பேசி தமக்குள்ள நண்பரையும் பிரித்து விடுவர்)

  “துள்ளியார் குற்றமும் தூற்றும் மரபினார்

  என்னை கொல் ஏதிலார் மாட்டு.”

  (நெருங்கிய நட்பினரின் குற்றத்தையும் புறத்தே பேசித் தூற்றும் இயல்பினர் அயலாரிடத்து எப்படி மோசமாக நடந்து கொள்வார்களோ?)

  “அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன் நோக்கிப்

  புன்சொல் உரைப்பான் பொறை.”

  (ஒருவன் இல்லாததைப் பார்த்து அவனைப்பற்றி இழிவான சொற்களை உரைப்பவனையும் அறத்தைக் கருதியே தான் உலகம் தாங்கிக் கொண்டிருக்கிறதோ?)

  “பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

  எல்லாரும் எள்ளப் படும்.”

  (பலரும் வெறுக்கும்படி பயனில்லாத சொற்களையே சொல்லும் ஒருவன் உலகினர் எல்லோராலுமே இழிவாய்ப் பேசப்படுவான்)

  ” பயனில பல்லார்முன் சொல்லல் நயனில

  நட்டார்கண் செய்தலின் தீது.”

  (பலபேர் முன்பாக பயனற்ற பேச்சைப் பேசுதல் நன்மை அல்லாத செயலை நண்பர்களிடத்தில் செய்வதைவிடத் தீமையானது ஆகும்)

  மேற்குரிப்பிட்ட சில பேச்சுக்கள் பற்றிய கருத்துக்கள் திருக்குறளில் இருந்து உதாரணத்திற்காக சொல்கிறேன். 1500 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பலதரப்பட்ட மனிதர்கள் இருந்திருக்கின்றார்கள் என்பதை திருக்குறள் முலம் அறிந்து கொள்ள முடிகின்றது.

  அந்தக் காலத்தில் சட்டிப்பானையும், மேலாடை இல்லாமல் ஒற்றைப் கோவணமோ அல்லது ஏதோ ஒன்றை போட்டுக் கொண்டு நவீன யுகத்தில் இல்லாத மனிதர்களிடமே பொறாமை, பொய், பொச்சரிப்பு இருந்திருந்தது என்றால், நவீன மனிதனுக்குள் ஒப்பிட்டுப் பார்க்கும் புத்தியும், மற்றும் கூடா உணர்வுகளும் அதிகரித்துப் போய்விட் இந்த காலத்தில் அறம் என்றால் நம்மை லூசு போல் பார்க்கின்றார்கள். சத்தியம் செயல்பாடு மனிதாபிமானம் அறம் எல்லாம் கெட்ட வார்த்தையாகி விட்டது.

  righteousness (right kind of)என்ற சொல் ஆங்கிலத்தில் உச்சரித்தாலோ வேற்று மொழியில் உச்சரித்தாலோ அதன் புனிதத்தை புரிந்து கொள்ளும் தமிழன் அறம் என்று தமிழ்ல் உச்சரித்தால் இழித்துப் பார்ப்பதும் நக்கல் செய்வதும் ஏன்?

  ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்’ being pure of heart. having clear conscience அப்படியென்றால்?

 8. தமிழச்சி,
  உண்மையில் நீங்க பொதுவா கேக்குறீங்களா இல்ல உங்களை முன்வைத்து கேக்குறீங்களான்னு தெரியல..

  இருந்தாலும் மேற்கண்ட பதிவு யார் ஒரு தனி ஆளையும் முன்வைத்து எழுதப்படல. நுண்ணரசியல் பற்ற் எழுதினது போலவே ‘அறச்சீற்றம்’ குறித்தும் எழுதத் தோணிச்சு. (ரெம்ப நல்லா வரல என்பது வேற விஷயம்).

  சரி உங்கள் கேள்விக்கு வருவோம்.

  அறம் எனச் சொன்னதும் நம்ம மக்கள் ஏன் கேலி செய்கிறாங்க(என்னையும் சேர்த்து என எடுத்துக்குவோம்)

  முதலில், இந்த வார்த்தைக்கான சரியான அர்த்தம் எல்லோருக்கும் புரிந்திருக்கவில்லை. நான் இந்தப் பதிவை போடும்போதுதான் தேடிப் பார்த்தேன். அறம் என்றால் தானம் செய்வது என்பது போன்ற குறுகிய விளக்கம்தான் எனக்குத் தெரிந்திருந்தது.

  righteousness என சொன்னதும் புரிகிறது என்பது இதனால்தான். அறத்துக்கு முழு ஆர்த்தம் தெரியல ஆனா இதுக்கு தெரியுது.

  அறம் என்னும் சொல் புழக்கத்தில் இருக்கும் சொல்லும் அல்ல. அதனாலகூட கேலி எழலாம். (இப்ப நான் அறச்சீற்றம் செய்தது மாதிரி).

  ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்’ being pure of heart. having clear conscience அப்படியென்றால்?
  அதுல தமிழும் இருக்குது ஆங்கிலமும் இருக்குது வேற எப்படி சொல்வது :)

  étant pur du coeur
  avoir la bonne conscience

  மனத்துக்கண் – மனசுக்குள்ளே
  மாசிலன் – அழுக்கில்லாதவன்

  மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
  ஆகுல நீர பிற.

  அறம் என்பது தூய்மையான மனதைக் கொண்டு வாழ்வது (இது அனைத்து அறனுக்கும் சமம்?) மற்றதெல்லாம் வெறும் வெட்டி சத்தம் என்கிறார் வள்ளுவர்.

 9. thamizachi சொல்கிறார்:

  //// தமிழச்சி,
  உண்மையில் நீங்க பொதுவா கேக்குறீங்களா இல்ல உங்களை முன்வைத்து கேக்குறீங்களான்னு தெரியல..///

  சத்தியமா என்னை முன் வைத்து கேட்கவில்லை தோழர். எனக்குள் இருக்கும் நிறைய தேடல்கள்களை உங்களைப் போன்ற ஒரு சில தோழர்களுடன் என் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்பியதால் மெனக்கெட்டு டைப் பண்ணிக் கொண்டிருக்கிறேன் தோழர். வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. இதற்கு முன் உங்களுக்கு பின்னூட்டமிட்டது இல்லை. தகாத வார்த்தைகள் என்ற உங்களின் பதிவு தான் உங்களின் எழுத்துக்களையும், உங்கள் சிந்தனையையும் அறிய உதவியது. இது போன்ற சிந்தனைகள் நம் சமூகத்தில் மிகக் குறைவு. எனக்கு பிடித்தவர்களிடன் விவாதிப்பது கேள்விமேல் கேட்டுக் கொண்டிருப்பது எனக்கு பிடித்த விடயம். இன்னும் நிறைய விடயங்களை அறிந்து கொள்ளலாம் இல்லையா?

  “la bonne conscience”- மனக்குறைகளை பற்றி பேசிக் கொண்டு மனக்குறைகளுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அறம் என்பதெல்லாம் சம்பிரதாயப் பேச்சாகவே மனிதர்களிடம் இருக்கிறது தோழர். நீங்கள் என்ன சொல்கிறிர்கள். கருத்தை தெரிந்து கொள்ள கேட்கிறேன்

 10. சிறில். அருமையா இருக்கு இந்த இடுகை. ரொம்ப நாளைக்கப்புறம் இந்தப் பக்கம் வந்தது நல்லதா போச்சு. நல்லதொரு நையாண்டியைப் படித்த மகிழ்ச்சி. :-)

 11. தமிழச்சி,
  நானும் தேடல்களுடையவந்தான், முடிவுகளைக் கொண்டவனல்ல. ஆக, சேர்ந்து தேடலாம் :)

  அறம் என்பது நல்லெண்ணம், நற்செயல் கொண்டு வாழ்வது என எடுத்துக்கொள்வோம். அந்த ஏக்கம் எல்லோருக்கும் இருக்கிறது. இது ஒரு உன்னத நிலை, ideal situation. எல்லா நேரமும் இது சாத்தியமில்லை. மேலும் ஒழுக்கம் அறம் ஆகியவை தொடர்ந்து மாறிக்கொண்டே வரும் மதிப்பீடுகள். ஒருவர் வாழும் சூழலுக்கேற்ப இவை மாறும்.

  எல்லோரும் சில நேரம் அறமுடையவர்களாயும் சில நேரம் அறமற்றவர்களாயும் இருக்கிறோம். ஆனால் நல்லவராய் இருக்கவேண்டும் எனும் முனைப்பு எல்லோருக்கும் இருக்கும் என்றே கருதுகிறேன்.

  பெரிதாய் விவாதிக்கவேண்டியவை.. விவாதத்தின் மூலமாய் இதில் பெரிதாய் எதுவும் செய்துவிட முடியும் என்றும் தோணல. ;)

 12. thamizachi சொல்கிறார்:

  ///பெரிதாய் விவாதிக்கவேண்டியவை.. விவாதத்தின் மூலமாய் இதில் பெரிதாய் எதுவும் செய்துவிட முடியும் என்றும் தோணல. ///

  மற்றவர்களுக்காகவா நாம் தேடப் போகிறோம். நம்முள் மாற்றம் வருமா? அல்லது இன்னும் மண்டைக் குழம்பிக் கொண்டு போகப் போகிறோமோ என்பதை விட முதலில் அறம் என்பதெல்லாம் வெறும் ஏட்டுச் சுரக்காய் வாழ்க்கைக்கு உதவாது என்ற என் வாதத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் தோழா!

 13. //முதலில் அறம் என்பதெல்லாம் வெறும் ஏட்டுச் சுரக்காய் வாழ்க்கைக்கு உதவாது என்ற என் வாதத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் தோழா!//

  அறம் என்பது ரெம்ப பொதுவான வார்த்தை. நல்லவனாய், நல்லவளாய் வாழ்வதை அறவழ்வு என்கிறார்கள். இது ஏட்டுச் சுரைக்காய் எனச் சொல்ல முடியாது. பெண்ணியம், சமத்துவம் எல்லாமுமே அறவழிகள்தான்.

  நான் முன்பு சொன்னதுபோல இது ரெம்ப பெரிய டாப்பிக். நிறைய எழுதலாம், பேசலாம்.

  அடிப்படையில் மனிதன் நல்லவனாக வாழ விரும்புக்கிறான். (அல்லது) எல்லா மனிதனும் அறத்தை பின்பற்றுவதே உன்னத (Ideal) நிலையாக இருக்கும். ஆனால் எது நல்வழி, எது கெட்டவழி என்பது காலத்துக்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்ப மாறுகிறது. இவற்றை ஏட்டுச்சுரைக்காய் எனலாம். ஆனால் அறம் என்பது ஒரு அடிப்படை நெறி, தேவை என்றே நினைக்கிறேன்.

  இதுகுறித்து ஒரு பதிவு போடப் பார்க்கிறேன். ஏதோ எனக்குத் தெரிந்தவற்றை சொல்ல முடியும்.

 14. Prabhu சொல்கிறார்:

  சிறில், தமிழ் பதிவர்கள் பற்றிய உங்கள் அறசீற்றத்தை நகைசுவையா எழுதுனிங்களா, இல்ல அறசீற்றம்னா என்னனு நகைசுவையா சொன்னீங்களா? உங்க கட்டுரையின் உண்மையான முதன்மை நோக்கம் என்னனு கண்டு பிடிக்க முடியல. :)

 15. //உங்க கட்டுரையின் உண்மையான முதன்மை நோக்கம் என்னனு கண்டு பிடிக்க முடியல//
  அப்படா தப்பிச்சேன் :)

 16. Prabhu சொல்கிறார்:

  //சிலர் அறச்சீற்றத்தின் விளைவாக இனி எழுதப்போவதில்லை என அறிவிப்பதுண்டு. ஆயினும் மற்ற சீற்றங்களைப் போலன்றி அறச் சீற்றம் விரைவிலேயே ஆறிப் போவதாலும், அடிக்கடி எழும் அறச் சீற்றத்தை எழுதாமல் விட்டால் அது பின்னாளில் அல்சரில் போய் முடியும் என்பதாலும் அவர்கள் மீண்டும் எழுத வருவது இயல்பு.//

  என்னோட சிங்கை நண்பரை சீக்கிரம் எழுத சொல்லுங்கப்பா, அல்செர் வந்துடப்போகுது :)

 17. thamizachi சொல்கிறார்:

  //// சிறில் அலெக்ஸ்

  அடிப்படையில் மனிதன் நல்லவனாக வாழ விரும்புக்கிறான். (அல்லது) எல்லா மனிதனும் அறத்தை பின்பற்றுவதே உன்னத (Ideal) நிலையாக இருக்கும். ஆனால் எது நல்வழி, எது கெட்டவழி என்பது காலத்துக்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்ப மாறுகிறது. இவற்றை ஏட்டுச்சுரைக்காய் எனலாம். ஆனால் அறம் என்பது ஒரு அடிப்படை நெறி, தேவை என்றே நினைக்கிறேன். ////

  இல்லை அலெக்ஸ், மனிதன் நல்லவனாக வாழ விரும்புவது போல் நடிக்கிறான். ஒரு கட்டுப்பாட்டுடன் தனிமனிதன் வாழ்வையும், சமூதாய வாழ்வையும் அமைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை அறமாக நெறிப்படுத்தி சமூகம் பேசும் போது அவன் சலிப்படைகின்றான். அடிப்படை வாழ்வியல் நியதியாக சொல்லப்படும் அறத்துடன் சில நேரங்களிலாவது நாம் (நானும்) முரண்படுகின்றோம்.

  நம் கவலைகளும் கடந்த கால நிகழ்சிகளினால் ஏற்படும் பாதிப்புகளும், அதன் அனுபவங்களும், நம்மை சுயநலவாதிகளாக ஆக்கும் போது அறநெறியில் இருந்து விலகி மனிதன் சுயசலமாகிறான் என்பதே சமூக நிகழ்வுகளாக இருப்பதை நாமும் பார்த்துக் கொண்டுதானே இருக்கின்றோம். ஒருவேளை மனிதன் அறத்தை ஊறுகாய் போல் வாழ்வில் உபயோகிக்கின்றானோ?

 18. சூப்பர் கமெண்ட் விட்டுருக்கீங்க தமிழச்சி. நன்றி.

  அடிப்படையில் மனிதன் நல்லவனாக வாழ விரும்புவதுபோல நடிக்கிறவனாகவே இருக்கட்டும். ஆனால் ஒரு சமூகமாக வாழும்போது அவன் நல்லவனாக நடித்திருப்பதே அவசியமானது. இல்லைண்ணா கண்ட குழப்பமும் வந்துவிடும்.

  //ஒரு கட்டுப்பாட்டுடன் தனிமனிதன் வாழ்வையும், சமூதாய வாழ்வையும் அமைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை அறமாக நெறிப்படுத்தி சமூகம் பேசும் போது அவன் சலிப்படைகின்றான்.//

  இன்னொருவர் உங்களுக்கெதிராய் அறமற்ற ஒன்றை செய்கிறார் என வைத்துக்கொள்வோம் அப்போது உங்களுக்கு என்ன தோன்றும்? இவன் ஏன் அறவழியில் செல்லவில்லை எனத் தோன்றுமா இல்லையா? ஒழுக்க நெறிகள் எல்லாமே அறம் என நான் சொல்லவரவில்லை.

  அறம் என்பது ஒரு உன்னத நல்ல நிலை. அதை அடைவது மிகவும் கடினம். சொர்கத்தை அடைவது எளிதானதா? இல்லை. ஆனால் இவ்வுலகிலோ அல்லது அடுத்த உலகிலோ சொர்கம்தான் நம் இலக்கு. இன்பமயம். அதைத்தான் மனிதமனம் தேடுகிறது. இன்பம். எல்லோரும் அறவழியில் செல்லும்போது எல்லோருக்கும் இன்பம் கிடைக்கிறது. சொர்கம் பிறக்கிறது.

  ஒழுக்க நெறிகள் என்பவை பரிட்சயிக்கப்பட்ட சில வழிகள். உனக்கு அறம் என்றால் என்னவெனத் தெரியலியா இந்தா புடி பத்து பாயிண்ட் இத ஃபாலோ பண்ணு போதும் என சொல்லி வைத்துள்ளார்கள். அது சிலருக்கு போதுமானது. தேடல் கொண்டவர்கள் அறவழிகளைத் தேடிப் பெறுகிறார்கள். அவை சம்பிரதாயங்களைத் தாண்டிய தேடல்களாக அமைவது சிறப்பு. அப்படி பலர் சம்பிரதாயங்களைத் தேண்டும் போது அடுத்த தலைமுறையின் புதிய பத்து பாயிண்ட்கள் உருவாக்கப்படுகின்றன.

 19. தமிழச்சி, சிறில்,

  என் 2 சென்ட்ஸ்:

  //ஒரு கட்டுப்பாட்டுடன் தனிமனிதன் வாழ்வையும், சமூதாய வாழ்வையும் அமைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை அறமாக நெறிப்படுத்தி சமூகம் பேசும் போது அவன் சலிப்படைகின்றான்.//

  ஒழுக்கம் அல்லது அறம் என்பது சமூக வாழ்க்கைக்கு நாம் அனைவரும் கொடுக்கும் கட்டணம்.

  யானைக் கூட்டத்தில் குட்டியாக இருக்கும் போது நெறிகளைப் பின்பற்றி நடந்து கொள்கிறது ஒரு ஆண் யானை. கூட்டத்து தலைவியின் அனுபவ அறிவும், கூட்டமாக செல்வதில் உள்ள பாதுகாப்பும் அதற்குக் கிடைக்கிறது. அதற்கு மாற்றாக தன்னைக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்திக் கொள்கிறது.

  அதே யானை கொம்பன் யானையாக வளர்ந்து திமிறும் போது தனியாகப் போய்ப் பிழைத்துக் கொள்ள வேண்டியதுதான். அப்போது தன் விருப்பம் போல என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். கூட்டமாக இருக்கும் போது கிடைத்த பாதுகாப்பும் நிரந்தரத் தன்மையும் போய் விட்டிருக்கும்.

  விலங்கு நிலையிலிருந்து சமூக அமைப்புக்கு நகர்ந்ததால் கிடைத்துள்ள பலன்கள் ஏராளம். நாள் முழுவதும் வேட்டை ஆடி, கிழங்கு பிடுங்கி சாப்பிட்டு விட்டுத் தூங்குவதற்கு மட்டும்தான் ஒருவர் தனியாக உழைத்து சாதிக்க முடியும். பிற விலங்குளிலிருந்து இயற்கைச் சீற்றங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வது கூட முடியாமல் இருக்கும்.

  சமூகமாக வாழ்வதால், இன்றைக்கு இணையம் மூலம் அமெரிக்காவிலிருந்து ஒருவர், பிரான்சிலிருந்து ஒருவர். தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் பேசிக் கொள்ள முடிகிறது. இத்துடன் கோடிக் கணக்கான வசதிகள், வளங்கள்.

  இவை அனைத்தையும் தாங்கிப் பிடிக்கும் அமைப்புக்காக ஏற்படுத்தப்பட்ட நெறிகள் அறம் என்று வைத்துக் கொண்டால்,
  thou shall not kill என்பது ஒரு அடிப்படை அறம். Thou shall not steal என்பது இன்னொன்று.

  நம்ம வள்ளுவருக்கு மனதில் மாசு இல்லாமல் இருப்பதுதான் அறம். மாசு என்றால் என்ன? இந்த சமூக அமைப்புக்கு ஊறு விளைவிக்கும் எண்ணம் எதுவும் மனத்துக்கண் மாசு. அதை முற்றிலும் தவிர்த்து விடுவதுதான் சிறந்த அறம்.

  அன்புடன்,
  மா சிவகுமார்

 20. ///சீற்றம் என்பது கோபத்தின் வெளிப்பாடு. சீறுதல் என்பதிலிருந்து வருகிறது என நினைக்கிறேன். கோபம் உள்ளேயே இருந்திட்டா சீற்றமில்ல, அது சினம். வெளியே காட்டினாத்தான் சீற்றம்.////

  ‘அறச்சீற்றம்’ means ‘moral outrage’.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்