பாதிரியார்களுக்கு பத்து கட்டளைகள் – ஒரு பிரசங்கம்
கத்தோலிக்க கிறீத்துவனாக இதுவரை ஆயிரம் பிரசங்கங்களாவது பாதிரியார்களிடமிருந்து கேட்டிருப்பேன். இதோ ஒன்று அவர்களுக்கென.
பாதிரியார்களுக்கு பத்து கட்டளைகள்
1. ஏழ்மை வேண்டாம் எளிமையைக் கடைபிடியுங்கள்.
பல வசதி வாய்ப்புக்களும் சாதாரணமாய்விட்ட காரணத்தினால் இன்று வாகன வசதிகள், தொலைக்காட்சி, செல்போன் ஆகியவை அத்தியாவசியமாகிவிட்டன. இவை இல்லாத நிலை ஏழ்மை என்றால் இவற்றை பயன், வசதி கருதி உபயோகிப்பதுவே எளிமை. எளிமையான வாகன வசதி செய்துகொள்ளுங்கள். விலை உயர்ந்த செல்ஃபோனுக்கு பதில் ஒரு சாதாரண மாடலைத் தேந்தெடுங்கள். ஏழ்மையின் அடையாளங்கள் காலத்துக்குக் காலம் மாறுகின்றன. ஆனால் எளிமையின் அடையாளங்கள் எல்லா காலத்திலும் ஒன்றாகவே இருக்கின்றன. மக்கள் உங்களை அழைத்துச் செல்ல எளிய போக்குவரத்து முறைகளை அளித்தாலும் மனமுவந்து ஏற்றுக்கொள்ளுங்கள்.
‘எளிய மனத்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் விண்ணரசு அவர்களதே’ – இயேசு (மத்தேயு 5:3)
2. பிறருக்கு மதிப்பளியுங்கள்
உங்களை சந்திக்க வருபவர் யாராக இருந்தாலும் சரி மதிப்புடன் நடத்துங்கள். ஊரில் பெரியவர்கள், பதவி வகிப்பவர்களுடன் வறியவர் ஏழை யார் வந்தாலும் எல்லோரையும் ஒரே மதிப்புடன் நடத்துங்கள். இயேசு அவர் காலத்தில் பாவிகள் என கருதப்பட்டோருடனேயே அதிக நேரத்தை செலவிட்டார் ‘நோயுற்றவனுக்கே மருத்துவன்’ என்றார். தன் சீடர்களையும் அவ்வாறே தாழ்நிலை மனிதர்களிலிருந்து தெரிந்துகொண்டார். மனிதரை மனிதராக நடத்துவது ஒரு அடிப்படை மானுடப் பண்பாக உங்களிடமிருந்து உணரப்படவேண்டும்.
‘உங்களுள் பெரியவர் சிறியவராகவும் ஆட்சிபுரிவபர் தொண்டு புரிபவராகவும் மாற வேண்டும்.’ இயேசு. (லூக்கா 22:26)
3. பூசை தவிர்த்த மற்ற நேரங்களிலும் தனியே கோவிலுக்குச் சென்று செபம் செய்யுங்கள்.
மக்களுக்கு நற்கருணையில் இறை பிரசன்னத்தை போதிக்கும் நீங்கள் ஏன் அப்பிரசன்னத்தை அதிகம் நாடுவதில்லை? மக்களுக்கான சடங்குகளிலன்றி தனிப்பட்ட முறையில் கடவுளுடனான உங்கள் உறவு வலுத்திருந்தால்தான் உங்கள் எல்லா செயல்களிலும் அதை மக்கள் உணர முடியும். அப்படி தனிப்பட்ட உறவை வலுப்படுத்த பூசை, கொண்டாட்டங்களை தவிர்த்து கோவிலில் நேரம் ஒதுக்குவதை பழக்கமாகக் கொள்ளுங்கள்.
‘ இயேசு (அவரோ) ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று தனித்திருந்து செபித்தார்’ (லூக்கா 5:16)
4. சமூகப் பிரிவினைகளை முன்வைத்த பேச்சுக்களைக் கூட அனுமதிக்காதீர்கள், தீவிரமாகக் கண்டியுங்கள்.
சமூகப் பாகுபாடுகளை முன்வைத்த அரசியல் எழுச்சி தற்போது பரவிவருகிறது. இதன் தாக்கம் சமூகத்தின் எல்லா முகங்களிலும் தெரிகிறது. குறிப்பாக சாதிப்பாகுபாட்டை முன்வைத்த முயற்சிகள் பலவும் இன்று நம்மை மனிதன் சிறு குழுக்களாக வாழ்ந்த பழைய காலத்துக்கே கொண்டு சென்றுவிடும்படிக்கு இருக்கின்றன. சாதிப் பிரிவினைகள், ஏழை பணக்கார வித்தியாசங்கள் குறித்த பேச்சுக்களைக் கூட கோவில் பிரச்சனைகளில் அனுமதித்தல் ஆகாது. அப்படி பேசுபவர்களை தீவிரமாகக் கண்டித்துவிடுங்கள்.
நீங்கள் வெறும் போதகரின் வழி வந்தவர்கள் மட்டுமல்ல ஒரு புரட்சிக்காரரின் வழியிலும் வந்தவர்கள் என்பதை நினைவு கொள்ளவும். சமூகத்தில் உங்கள் பொறுப்பும் அத்தகையதே. சமூக அவலங்களை சரிசெய்வதில் ஆன்மிகவாதிகள் தைரியமாகச் செயல்படுவது அவசியம்.
‘இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் எறும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறீஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்’. – புனித சின்னப்பர் (கலாத்தியர் 3:28)
5. உங்களுக்குச் சேரவேண்டிய காசை மட்டுமே உங்களுக்குச் சொந்தமாக்குங்கள்.
முன்பு சொன்னதைப்போல உங்கள் வாழ்கை முறை எளிதாக்கிக் கொண்டால் பணத்தின் தேவை குறைந்துவிடுவதை உணர்வீர்கள். மக்களுக்குச் சேரவேண்டிய பணத்தை அவர்களுக்கே கடைசி காசு வரைக்கும் சென்று சேர்க்கப் பாடுபடுங்கள். பிறர் இந்தக் காசை கைகொள்ளுவதையும் அனுமதிக்காதீர்கள்.
“எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளை கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது.” இயேசு (லூக்கா 12:15)
6. பதவிகள் கிடைத்தால் அது அதிகம் சேவை செய்ய ஊக்கம் எனக் கொள்ளுங்கள். பதவிகளை எதிர்பார்த்து எதையும் செய்யாதீர்கள்.
பதவி மோகம் பிடித்த பல பாதிரியார்களும் உண்டு. பதவி என்பது அதிகம் சேவை செய்வதற்கான வாய்ப்பு. உங்கள் சேவைகளை தீவிரமாக்க வழங்கப்படும் அனுமதி, அங்கீகாரம். அதை ஒரு அதிகாரப் பொருளாகக் கொள்வதுவும், பதவிக்காக சண்டையிடுவதும் எந்த வகையிலும் இயேசுவின் படிப்பினைகளுக்கு அப்பாற்பட்டது.
‘உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்.’ – இயேசு (மத்தேயு 20:27)
7. குழு மனப்பாங்கை பொதுமக்களிடமும் உங்களுக்குள்ளேயும் உருவாக்காக்கிக் கொள்ளாதீர்கள்.
உங்களுக்குள்ளேயே பிரிவினைகள் இருக்குமாயின் அவை பொதுமக்களை எப்படி பாதிக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவும். மிகவும் அவலமான ஒரு செயல் இது. எதையெல்லாமோ தியாகம் செய்து சாமியாராகிறேன் எனச் சொல்பவர்கள் தன் சுய முனைப்பின்றி கிடைக்கும் சாதி எனும் எவரோ தந்த பட்டத்தை, அங்கீகாரத்தை துறக்க இயலவில்லை என்பது கவலைக்குரியது. சாதியமாகட்டும் வேறெந்த குழு மனப்பாங்காகட்டும் அவை பிரிவினையின் விதைகள். அவற்றை முளையிலேயே கிள்ளிவிடுங்கள்.
‘தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த நகரமும் வீடும் நிலைத்து நிற்காது.’ இயேசு (மத்தேயு 12:25)
8. பெண்களிடம் கண்ணியமாகப் பழகுங்கள்.
இன்றைய கத்தோலிக்க பாதிரியார்களுக்கெதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் மிகவும் முக்கியமானதாகவும் முதன்மையானதாகவும் இது அமைந்துள்ளது. காமத்தை துறப்பது அத்தனை எளிதான காரியமல்ல இருப்பினும் நீங்கள் தேர்ந்தெடுத்த பாதையின் அதி முக்கிய அடையாளமாகவும், தியாகமாகவும், சவாலாகவும் இது அமைந்துள்ளது. எனவே இது தொடர்ந்து கவனிக்கப்படவேண்டிய ஒன்று என்பதை உணருங்கள். சீரிய உடற்பயிற்சியும், கள விளையாட்டுக்களும் எளிய மாற்றுக்களாக அமைகின்றன. தியானம் இன்னொரு மாற்று. உங்கள் பணியின் முக்கியத்துவத்தை நீங்களே உணர்ந்திருந்தால் காமம் மட்டுமல்ல வேறெதையும் தூக்கி எறியலாம்.
இந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கும் பிற குறிப்புக்கள் ஒரு தனி ஆளையோ அல்லது ஒரு குழுவையோதான் பாதிக்கும் ஆனால் பெண்களுடன் கண்ணியமற்றுப் பழகுவது குடும்பங்களையே குலைக்கும் ஒரு கொடுமை. அப்படி பாதிக்கப்படும் குடும்பங்களில் ஏற்படும் வடுக்கள் சில தலைமுறைகளுக்கும் அழியாமலிருக்க வாய்ப்புள்ளது.
“ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.” – இயேசு (மத்தேயு 5:28)
9. எந்தச் சூழலிலும் சட்டத்தை மீறும் செயல்களில் ஈடுபடாதீர்கள். லஞ்சம் வழங்குவது, பரிந்துரைகளைக் கேட்பது, அரசியல் பலத்துடன் காரியங்களைச் செய்வது போன்றவற்றை தவிர்க்கவும்.
இது பரவலாக செய்யப்படுகிற ஒரு அநீதி. சட்டம் நீதிக்குப் புறம்பாக எதையும் செய்வதை தவிர்த்துவிடுங்கள். அப்படிச் செய்வதில் அதீத தீமை விளைந்தாலும் பரவாயில்லை என்றே சொல்லுவேன். ஒரு நாட்டின் பிரஜை அடிப்படையில் சட்டம் நம்மைக் காக்கும் என்னும் நம்பிக்கையுரியவன். ஒவ்வொருமுறை நீங்கள் சட்டத்தை மீறும்போதும் மிகவும் அடிப்படையான இந்த நம்பிக்கையை சிறுமைப்படுத்துகிறீர்கள். ஒரு நாட்டின் இறையாண்மையை, ஒரு அடிப்படை நம்பிக்கையின் புனிதத்தை கேலிசெய்யும் விஷயங்கள் இவை.
(தங்கள் நாடுகளின்) “சட்டங்களுக்கு கீழ்படிய மறுப்பவர்கள் கடவுளுக்கு கீழ்படிய மருக்கிறார்கள்” புனித சின்னப்பர் (உரோமையர் 13:2)
10. இவை அனைத்திலும் திருச்சபையை அன்றி இயேசுவை பின்பற்றுங்கள்.
கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு அதி உன்னதமான ஒன்றாக இல்லை. பல கட்டங்களில் அது மனித ஈடுபாட்டால் கொலைகள் உட்பட்ட பல கொடுஞ்செயல்களில் ஈடுபட்டுள்ளதை அறிவீர்கள். அந்தக் காலகட்டங்களில் இயேசுவை முன்வைத்து திருச்சபையை எதிர்க்க அதன் உறுப்பினர்கள் துணிந்திருப்பார்களானால் திருச்சபையின் முழுமை நோக்கிய பயணம் இத்தனை கடினமாயிருந்திருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இவை அனைத்தும் கீழ்கண்ட இரு கட்டளைகளுக்குள்ளும் அடங்கும்…
“உன் முழு இதயத்தோடும் ஆன்மாவோடும் ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக”
“உன்மீது அன்பு செலுத்துவது போல அயலான் மீதும் அன்பு செலுத்துவாயாக.” – இயேசு (மாற்கு 12:30-31)
Popularity: 16% [?]
Print This Post
இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப
RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....
April 2nd, 2008 at 12:07 am
ஆனாலும் உங்களுக்கு ஆசை அதிகம்தான் சிறில்.
எந்தப் பாதிரியார் இவைகளைப் படிச்சு அதன்படி நடக்கப்போறார்?
April 2nd, 2008 at 1:30 am
துள்ளசியக்கா சொன்ன மாதிரி இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல்ல ..பாதிரியார்கள் உண்மையிலேயே கையெடுத்துக் கும்பிடும் படி இருந்ததெல்லாம் அந்த காலம் ..இப்போ அது சேவை என்பது மாறி வேலை என்றாகிவிட்டது .ஹூம்.
April 2nd, 2008 at 2:07 am
முதல் 10 கட்டளைகளுக்குள் இது வரவில்லையா…?
April 2nd, 2008 at 2:39 am
//எந்தப் பாதிரியார் இவைகளைப் படிச்சு அதன்படி நடக்கப்போறார்?//
மக்க்ளெல்லாம் திருந்திவிடப்போகிறார்கள் என்றா சாமியார்கள் பிரசங்கம் வைக்கிறாங்க..
உண்மையில் இவ்வற்றை நேரடியாக எழுதவோ பொதுவில் பேசவோ எந்த ஒரு Forumம் இல்லை என்றே சொல்லுவேன் (இல்லை எனக்குத் தெரியவில்லை).
இவையெல்லாமே நமக்கெல்லாமுமே தேவையானவை. ஆனாலும் சாமியார்களிடம் எதிர்பார்ப்பு அதிகமில்லையா.. நம்மை பார்த்து எத்தனைபேர் கையெடுத்து கும்பிடுறாங்க?
April 2nd, 2008 at 2:40 am
//சேவை என்பது மாறி வேலை என்றாகிவிட்டது .ஹூம்.
//
நிச்சயமா. ஒட்டுமொத்தமா நாம எங்கேயோ போயிட்டிருக்கோம்.
April 2nd, 2008 at 2:48 am
எல்லாம் இருக்குது.. இருந்தாலும் அவ்வப்போது பிரசங்கங்கள் தேவைப்படுதே
Original 10 கட்டளைகள்
1. என்னைத் தவிற வேறு கடவுள்கள் உனக்கு இல்லை
2. கடவுளின் பெயரை வீணாகச் சொல்லாதே
3. ஓய்வுநாளை (sabbath)புனிதமாக அனுசரிப்பாயாக
4. தாய் தந்தையை மதித்திருப்பாயாக
5. கொலை செய்யாதே
6. விபச்சாரம் செய்யாதே
7. களவு செய்யாதே
8. பொய்சாட்சி சொல்லாதே
9. பிறன் வீட்டை(உடமைகளை) விரும்பாதிரு
10. பிறன் மனைவி, உடைமைகளை விரும்பாதிரு
தமிழ் விக்கி பக்கம்
April 2nd, 2008 at 6:05 am
நல்ல அறிவுரைகள்/அறவுரைகள். ஆனால் பாறையிலும், பாலையிலும், பாழும்கிணற்றிலும் போட்ட விதையாகத்தான் தெரிகின்றன. பிரசங்கிகள் பிரசங்கங்களை விரும்புவதில்லை. இதுவே கத்தோலிக்கத் திருச்சபையின் சாபக்கேடு.
April 2nd, 2008 at 6:55 am
New moses Mr.Cyril,
Best head line.I am sure no priest will read this and follow this.The thing is Roman Catholics has to read this,to protect themseves as well as thier families from these so called priests.
Now a days,the priest post is a profession and business.
Let us see the commandments and present situation
1)Upto my knowledge very rich wizards following very simple life style.I read that,Computer Samrat Azim Premji flying in economy class in flight.
Many people including business and high professinals are not using mobile phones.Eveybody have their own reasons.
But,the poor priests are using Nokia N72 series Camera mobiles.What is the need of camera mobile to them?
Be aware,they are using camera mobile phones to click the women.The women also not understaning.Because,no flash in the camera phones.They are just acting like talking in the phone and clicking.
2)Yes,the the so called priests respecting the rich people in the parish and beautiful family women
3)Yeah,they are going to church,during the women sweeping the church by brooms.
4)In the church,now a days they have only time to threaten the catholics by their speech.PURATCHI…..haha.They have only time to preach in the following way.
“Dont talk about priets and dont protest me in anyway.If you protest,i will curse you and your family.If you protest me,it equals to injure MOTHER MARY”Eyes.So,support me”
They are using the preaching time for thier self defence in such a way
5)If they take correct money,how can they buy properties and start educational institutions?
6)I have no idea about this 6th commandment
7)No :1 caste division makers are the priests
8)hahahahhahahhahhahahhahhahahhahhahhahhahhhahhahhahhahhahhhahahhahahhhahhahahhahhahahhahhahhhah(NO COMMENTS PLEASE)
9)Mr.Cyril now a days priests are not giving pribes.They themselves asking pribes.
To conduct marriage in a short period,means within 2 weeks,one so called priest asked Rs.5000/- as pribe.
I think,you dont know such matters.
10)So,after a intensive trainning in the seminaries,still they are not following Jesus Christ.
And please add one more commandment.That is DONT CONDUCT TOURS IN YOUR PARISHES WITH WOMEN.YOU ARE NOT THE TOUR OPERATORS.YOU DO YOUR DUTY AS PRIEST.TOUR OPERATORS WILL DO THEIR DUTY.
And,some priests are now a days studying law.
Alraedy morethan sufficient Lawyers are in the courts.These priests using this law practice for just time pass.
Martin
April 2nd, 2008 at 8:09 am
ஒரிஜினல் 10 கட்டளைகளை ஒழுங்காகப் பின்பற்றியிருந்தால் சிலுவைப் போர்களே நடந்திருக்க வாய்ப்பில்லை.
அப்பொழுதே அந்தரத்தில் விட்டுவிட்டார்கள்.
நீங்கள் என்றில்லை சிறில்..
அனைத்து மதங்களுமே பேப்பரில் மட்டும்தான் போதனைகள்.. நிஜத்தில் சோதனைகளாகத்தான் இருக்கின்றன.
April 3rd, 2008 at 11:24 pm
April 1-ல இத எழுதுனது, சொல்லாம எதயோ சொல்லுற மாதிரி இருக்குது. ஒரு சாமி இத படிசிட்டு ஒருமாசம் இத பின்பற்றினால்…., சிறிலுக்கு ஓ போடுவோம்
April 4th, 2008 at 1:53 pm
[…] http://cyrilalex.com/?p=407 […]
April 4th, 2008 at 3:05 pm
உங்கள் நகைச்சுவை உணர்வுக்கு வந்தனங்கள். அப்புறம் பத்தாவது கட்டளையாக ‘பிறன் மனைவி, உடைமைகளை விரும்பாதிரு’ அப்படீன்னு சொல்லிருக்கீய இந்த உடமைகள் சமாச்சாரம் கொஞ்சம் ஓவராக தோணலையா? ஏன்னா ஒரிஜினல்ல வேலைக்காரனையும் வேலைக்காரியையும் அப்படீன்னு இருக்குது. வேலைக்காரன் வேலைக்காரியெல்லாம் உடமை அப்படீங்கிற அஃறிணைல்ல போறது போப்பாண்டவர் பெனடிக்ட் வந்தப்பறம் உள்ள இறையியல் இஸ்டைலுங்களா அல்லது நாங்கதான் வழக்கம் போல வெள்ளாந்தைகளா இருந்திருக்கமா? அப்புறம் இந்த ‘நான் மட்டும்தான் கடவுள் மத்த கடவுளை கும்பிடாதே’ அப்படீங்கிறது கொஞ்சம் அதீதமா தோணலை?
April 4th, 2008 at 3:18 pm
//உங்கள் நகைச்சுவை உணர்வுக்கு வந்தனங்கள். //
உங்களோட ஒப்பிட்டால் எனக்கு நகைச்சுவை உணர்வு கொஞ்சம் கம்மிதான். எல்லாம் கூடா நட்பில் வந்தவைண்ணு வீட்ல திட்டுறாங்க.
//வேலைக்காரன் வேலைக்காரியெல்லாம் உடமை அப்படீங்கிற அஃறிணைல்ல //
பத்து கட்டளைகள் வந்த காலத்துல இவங்கெல்லாம் அப்படித்தான் இருந்தாங்க. ஒருவர் இன்னொருவருக்கு கால்நடையும் அடிமைகளையும் ‘பரிசா’ வழங்கின குறிப்புக்கள் பைபிளில் இருக்குது. என்ன செய்ய எல்லாரும் இ.பி.கோ வந்த காலத்துலேயே வாழலியே.
நம்ம வேதங்களுக்கெல்லாம் புதிய அர்த்தங்களத் தேடுறதுபோல இதுக்கும் தேடவேண்டியதுதான் சாமி.
அப்படியே புதிய ஏற்பாட்டுல இயேசு இந்தப் பத்துக் கட்டளைகளையும் சுருக்கி புதிய அர்த்தத்த குடுத்திருக்காரே. பதிவுல இருக்குதே படிச்சிருப்பீங்க. இவர் சொல்றது இ.பி.கோ காலத்துக்கும் ஏற்புடையது.
//அப்புறம் இந்த ‘நான் மட்டும்தான் கடவுள் மத்த கடவுளை கும்பிடாதே’ அப்படீங்கிறது கொஞ்சம் அதீதமா தோணலை?//
புற்றில்வாழ் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றுமோர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு
கற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே
இதுபோல அதையும் எடுத்துக்கலாம். இல்லை இன்னும் விவாதிக்கலாம். உங்கள் விருப்பம்.
April 4th, 2008 at 3:41 pm
அன்புள்ள சிறில்,
திரும்பவும் நகைசுவையா பேசுறீங்க. மாணிக்கவாசகர் பக்தி மேலீட்டில் தன்னுடைய நிலையை சொல்றதுக்கும் இறைவன் என்னைத் தவிர வேறு யாரையும் கும்பிடாதே அப்படீன்னு சொல்றதுக்கும் வேறுபாடு இருக்கு. இது நிச்சயம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கணுமே.
அநீ
April 4th, 2008 at 3:50 pm
அரவிந்த்,
ஒத்துக்குறேன். அதீத பக்தியுள்ள எவரின் நிலையும் அதுவாகத்தான் இருக்கும். ‘உனக்கு கர்த்தாவாகிய கடவுள் நானே’ என்கிறார். ஊருக்கெல்லாம் சொல்லலை என நானும் ஏததச்சும் ஆர்க்யூ பண்ணலாம்.
அடிப்படையில ஆன்மீகம் நிறுவனமாகும்போது ஏற்படும் விளைவுதான் இது. இந்து மதத்தின் பல பிரிவுகளில் இது இருக்குது. (கடவுளே அப்படி கட்டலையிட்டாரா மனிதன் அப்படி செய்துகொண்டானாவெல்லாம் தெரியல).
ஒரே கடவுள் எனும் கொள்கை மோசமானதொன்றும் அல்ல. அடுத்த கடவுளை தொழாதே என்பது வரைக்கும் அதில் பின்விழைவுகள் இல்ல. ஆனா அடுத்த தெய்வத்த குறைவாப் பாரு, அது சாமியே இல்லை எனும்போதுதான் பிரச்சனை வருது.
யஹோவா இஸ்ராயேலுக்குத் தன்னை கடவுளாக்கிக் கொள்கிறார். I am fine with it.
April 4th, 2008 at 4:03 pm
ரொம்ப சரியா சொல்றீங்க சிறில் கரெக்ட். ஆனா ஆன்மிகம் நிறுவனமானதால ஏற்படுற விளைவுதான் இது அப்படீன்னு பொதுமைப்படுத்த முடியலை. அதே நேரத்துல ஆன்மிகம் நிறுவனப்படுத்தப்படும் போது விரும்பத்தகாத விளைவுகளையும் அதிகார vested interestsஐயும் கொண்டு வருங்கிறதை நான் மறுக்கலை – இந்து தருமம் உட்பட. இங்கே பிரச்சனை அடிப்படையான கோட்பாடு பத்தினதுதான். ரொம்ப விசேஷமா பேசப்படுற இரண்டாம் வத்திகான் கூட பிற மதங்களிலும் கடவுளின் உண்மை ஒளி இருக்கலாம் என்றாலும் கூட அப்படீன்னு ரொம்ப caveatsஸோடத்தான் பேசியது. என்ன பிரச்சனைனா அடுத்த மதங்களை எடை போட்டு பார்த்து தீர்ப்பிடற அல்லது வகைப்படுத்துறதை ஒரு பெரிய அளவுல சர்ச் இன்னைக்கும் செஞ்சு வருது. போப் பெனிடிக்ட் அதனை வெளிப்படையாவே கிறிஸ்தவத்தின் மேன்மையை நிலைநாட்டுவதற்கான கருவி மட்டுமே வேற்று மதத்துடனான உரையாடல்கள் அப்படீங்கிறாரு. இதோ கலுங்கு ஜெங்க்ஷன் தெரியுமில்லையா அங்கே ‘ஏசுவாலன்றி வேறொருவராலும் ரட்சிப்பு இல்லை’ அப்படீன்னு நேற்றைக்கு பெரிதா எழுதி போட்டிருக்காங்க. பப்ளிக் ஸ்பேஸுல இப்படி எழுதிப் போட வைக்கிற இறையியல் ஏன் கிறிஸ்தவ சமுதாயத்துக்குள்ள ஒரு முனகலைக் கூட எழுப்ப மாட்டேங்குது? இயல்பா இது இந்துக்கள் கிட்ட பதிலடியை எழுப்பும் அப்படீன்னு சொல்ல வேண்டியதில்லை. ஏக-இறை கோட்பாட்டில் உள்ளார்ந்த ஒரு வன்முறை இருக்குதுன்னே நினைக்கிறேன் எப்படி சாதியத்தில் உள்ளார்ந்த ஒரு மானுட நேயமின்மை இருக்குதோ அது போல.
April 4th, 2008 at 4:11 pm
சிந்தித்துப் பார்த்ததில் பத்துக்கட்டளைகளுக்குப் பின்னோ முன்னோ யூதர்கள் மத மாற்றம், மத துவேஷத்தில் ஈடுபட்டிருக்காங்களா எனத் தெரியல, தங்கள் கடவுள்தான் உயர்ந்தவர் எனும் கொள்கை இருந்ததே தெவிர்த்து. தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் எனும் கொள்கையும் தங்கள் கடவுள் உயிருள்ளவர், மேலானவர் எனும் கொள்கைதான் இருந்தது.
யூதர்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டை நாடிச் செல்வது, அதன் பேரில் போர் செய்வதெல்லாம் ஒரு சமூக இயக்கமாகப் பார்க்கலாம். அது முழுமையாக என் கடவுள் பெரியவர் உன் கடவுள் சின்னவர் எனும் அடிப்படையில் அமையவில்லை.
ஆக உள்ளார்ந்த ‘வன்முறை’ என்பதை முழுவதுமாய் ஏற்க இயலவில்லை.
இயேசுவுக்குப் பின்னால் உடனடியாக எழுந்த கிறீத்துவக் கூட்டம் வன்முறையை கையெடுக்கவில்லை. அது அரசியல் அங்கீகாரம் பெற்று நிறுவனமாக்கப்பட்டபிந்தான் வன்முறைகள் துவங்குகின்றன. அதுவரைக்கும் எல்லாரும் இயேசுவுக்காக செத்துகிட்டுதான் இருந்தாங்க.
அப்ப இருந்த கிறீத்துவ சமூகத்தை இப்ப உருவாக்குவதே மிகக் கடினம்.
Acts of Apostles 2:44And all that believed were together, and had all things common; 2:45and they sold their possessions and goods, and parted them to all, according as any man had need
அது ஒரு உச்சகட்ட பொதுவுடமை இயக்கமாயிருந்தது.
April 4th, 2008 at 4:21 pm
இல்லை இங்க வரலாற்று ரீதியாகவே உங்க பார்வை தவறு. வாக்களிக்கப்பட்ட பூமி என்கிற யூத வட்டார கோட்பாட்டை ஒரு யூனிவர்ஸல் இறையியலாக கிறிஸ்தவம் மாற்றியது. இதன் விளைவுகள் சரித்திரமெங்கும் உள்ளன.
பாருங்க;
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20512302&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=206011310&format=html
பல இடங்களில் கிறீஸ்தவ வன்முறை அதற்கு முன்னரே தொடங்கிவிட்டது. பாக்ன்களின் கிறிஸ்தவ எதிர்ப்பு வன்முறையை காட்டிலும் கிறிஸ்தவத்தின் பாகன் ஒழிப்பு வன்முறை எத்தனை திறமையாக கட்டமைக்கப்பட்டிருந்தது என்பதனை ரோமானிய வரலாற்றினை படிக்கும் எவரும் எளிதாக தெரிந்துகொள்ளலாம்.
April 4th, 2008 at 4:27 pm
//இல்லை இங்க வரலாற்று ரீதியாகவே உங்க பார்வை தவறு. //
இருக்கலாம். இதில் எனக்கு தேர்ச்சியில்லை. எனக்கு அதிக கவலையும் இல்லை.
உங்கள் கட்டுரைகளை படித்து கருத்திருந்தால் சொல்கிறேன்.
April 4th, 2008 at 6:04 pm
//உண்மையில் இவ்வற்றை நேரடியாக எழுதவோ பொதுவில் பேசவோ எந்த ஒரு Forumம் இல்லை என்றே சொல்லுவேன் (இல்லை எனக்குத் தெரியவில்லை).//
உங்களுக்கு தமிழ்கிறிஸ்தவர்கள் http://www.tamilchristians.com வலைதளத்தை பற்றி தெரியவில்லை என்று நினைக்கிறேன். சபை பாகுபாடற்ற நிலையில் இயங்கும் இந்த தளத்தில் உங்கள் படைப்புகளை ஒத்த படைப்புகள் இருக்கும், அரோக்கியமான விவாதங்களும் நடைபெறுகிறது.
http://www.tamilchristians.com/modules.php?name=Forums
எனக்கு மிகுந்த பயன்உள்ளதாக இருக்கிறது
April 4th, 2008 at 7:58 pm
//இங்கே பிரச்சனை அடிப்படையான கோட்பாடு பத்தினதுதான். //
கிறீத்துவத்தின் அடிப்படட கோட்பாடுகள் இயேசுவின் வார்த்தைகள்தான். அதில் பிரிவினைக்கு இடமில்லை. இதைத்தான் நான் முதல் கீறீத்துவர்களின் வாழ்வை முன்வைத்து சொன்னேன். கிறீத்துவம் அமைப்பாக, நிறுவனமாக, அரசியல் பலத்துடன் செயல்பட ஆரம்பித்ததிலிருந்தே பல பிரச்சனைகளும் வந்துவிட்டன.
இயேசு நானே வழியும் சத்தியமும்ணு சொன்னார். அதைப்போய் எல்லாருக்கும் சொல்லுங்க என்ரும் சொன்னார் ஆனால் அவரது சீடர்களை அனுப்பும்போதே உங்களை ஒரு ஊரில் ஏற்றுக்கொள்ளலைண்ணா உங்க செருப்பிலிருக்கும் தூசியைக் கூட உதறிவிட்டு வந்திடுங்க என்றுதான் சொன்னார். போர் தொடுத்து எப்டியாவது அவன மதம் மாற்றிடுங்க, காலனி ஆதிக்கம் செய்யுங்க என ‘அடிப்படை கொள்கை’ எதையும் அவர் வகுக்கல.
உங்கள் கட்டுரைகளைப் படித்தேன். நிறுவனமாக்கப்பட்ட, அரசியலில் சிக்கிக்கொண்ட மதங்களிலெல்லாம் நடந்தவைகளே கிறீத்துவத்திலும் நடந்தது. கிறீத்துவம் வரலாற்று காலத்தில் இதை செய்திருப்பதால் பலதும் அப்பட்டமாகத் தெரியுது.
வருந்தத்தக்க நிகழ்வுகளே. பலவற்றிற்கும் கத்தோலிக்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.
The Mission எனும் படத்தில் தெனமெரிக்க பூர்வீகக் குடிகளுக்கு ஆதரவா அங்கிருந்த மிஷனரிகள் போராடுவதையும் ஆனால் அரசியல் ஆதாயத்திற்கு திருச்சபை அவர்களை விட்டுக்கொடுப்பதையும் அதற்காக கிறீத்துவ இறையியல் வளைக்கப்படுவதையும் காண்பித்திருப்பார்கள்.
Robert De Nero நடித்திருப்பார். ரெம்ப அருமையான படம்.
April 5th, 2008 at 1:30 am
//
யஹோவா இஸ்ராயேலுக்குத் தன்னை கடவுளாக்கிக் கொள்கிறார். I am fine with it.
//
கிறீஸ்டியன்ஸ் எல்லாம் இஸ்ரேல் காரர்களா ?
April 5th, 2008 at 3:43 am
இல்லை.
யூத தொன்மம் (myth) யூதர்களை அவர்களது இறைவனான யஹீவாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாக அறிவிக்கிறது. இது ஒரு சில மத்திய மற்றும் மேற்கத்திய ஆசிய இனக்குழுக்களுக்குள்ளான ஒரு ஒப்பீடு மட்டுமே. ஒரு வட்டார காண்டெக்ஸ்டில். ஆனால் கிறிஸ்தவமும் இஸ்லாமும் இந்த வட்டார தொன்மத்தை பூமி முழுமைக்கும் நீட்டிக்கின்றன. ஆக, இஸ்ராயேல் என்பது இப்போது கிறிஸ்தவ சபைக்கான ஸிம்பல் ஆகிவிடுகிறது. யூத தொன்மத்தில் யஹீவா இஸ்ரேலை தன் மணவாட்டியாக கருதும் சித்தரிப்பு உள்ளது. கிறிஸ்தவ இறையியலில் இது அந்த குறிப்பிட்ட சபைக்கு மாற்றியமைக்கப்படுகிறது. அப்படியானால் யூதர்களின் கதி என்ன? அவர்களின் விவிலியம் பழைய ஏற்பாடு என பின் தள்ளப்படுகிறது. அதாவது தேவன் யூதர்களுடனான பிணைப்பை பழையதாக்கி கிறிஸ்தவர்களுடன் புதிய ஏற்பாட்டை ஏசுவின் இரத்தத்தின் மூலம் ஏற்படுத்திக்கொண்டார் என்பதாகும். ஆக, யூதர்கள் புறந்தள்ளப்பட்டவர்கள் எனவே அடிமைப்படுத்தப்பட அல்லது அழிக்கப்பட வேண்டியவர்கள் எனும் கருத்தாக்கத்துக்கு இந்த இறையியல் வழி வகுத்தது.
December 10th, 2009 at 6:39 pm
very good site,
I found it through Google when I was searching for other sites.
July 24th, 2012 at 6:23 am
சிரில் உங்கள் பத்துக்கட்டளை ரொம்ப நன்றாக இருக்கிறது.
ஆனால். கருத்து தெரிவிப்பவர்கள் ஞாபகம் வைக்கவேண்டியது. பாதிரியார்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.
April 19th, 2014 at 6:59 pm
[…] http://cyrilalex.com/?p=407 […]
September 14th, 2014 at 10:01 am
அருமையான பதிப்பு !!
எனினும் இறுதியில் உள்ள இரண்டு ‘கட்டளைகளையும்’ சிறிது மறு ஆய்வு செய்யவும்,
சட்டத்திற்கு கீழ்படிவது என்பது குமக்கள் அனைவரின் கடமை; ஆனால், சட்டத்தை நடைமுறைபடுத்தும் அரசாங்கமே சில வேளைகளில் சட்டத்தை மீறும்போது நாமும் சட்டத்தை மீறும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
(எ .கா.: கூடங்குளம் அணுஉலை போராட்டம் )
குருக்கள் அனைவரும் கற்பு,எளிமை மற்றும் கீழ்ப்படிதல் என்னும் வார்த்தைபாடுகளை ஏற்றவர்கள். இங்கு ‘கீழ்ப்படிதல்’ என்பது திருச்சபைக்கு கீழ்ப்படிதல் என்பதை குறிக்கும்.
தாங்கள் குருக்கள் அனைவரும் கற்பு, எளிமை ஆகிய பண்புகளில் ஒழுக வேண்டும் என்பதை வலியுறுத்தும் வேளையில், குருக்களின் திருச்சபைக்கு கீழ்ப்படிதல் என்னும் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.