அதிகறுப்புக் காந்தி

மார்ட்டின் லூத்தர் கிங் சுட்டுக் கொல்லப்பட்டு நாற்பது ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. வெறும் நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரைக்கும் இன்று உலகெங்கும் ஜனநாயகத்தையும் விடுதலையையும் சமத்துவத்தையும் துப்பாக்கி முனையில் பரப்பத் துடிக்கும் அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் ‘சட்டப்படி’ கீழானவர்களாக நடத்தப்பட்டு வந்தார்கள். வெறும் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அங்கே ஒரு படித்து பட்டம் பெற்ற இளைஞன் தன் இனத்துக்குச் சம உரிமை கேட்டு சத்யாகிரகம் செய்து இறுதியில் ஒரு வெறியனின் தோட்டாவிற்கு பலியானான். வெறும் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு உடல்வலிவுள்ள இளைஞர்கள் பலர் அவரின் பின் சென்று ‘வெள்ளையர்களுக்கு மட்டும்’ என இருந்த உணவகங்கள், கல்லூரிகள், பள்ளிச்சாலைகளில் நுழைந்து அடியும் உதையும் வாங்கினர். வெறும் நாற்பதே ஆண்டுகள்.

நாற்பது ஆண்டுகளில் அகிம்சை நீர்த்துப் போய்விட்டது. வன்முறை வன்முறையையே தூண்டும் என்பது மறந்துபோய் விட்டது. அகிம்சை எனும் ஆயுதத்தின் வலிமையை மக்கள் மறந்துவிட்டனர், தன் சொந்த மண்ணிலேயே, தன் உரிமைகளின் பலனிலேயே அகிம்சையின் வெற்றிக்கான நிரூபணங்கள் தெரிகின்றபோதும்.

மார்ட்டின் லூத்தர் கிங்கின் தலைமையில் நடந்த கறுப்பின சம உரிமைப் போராட்டம் பிரபலங்களிடமிருந்து துவங்கியதல்ல. அது ஒரு அரசியல் அறைகூவலின் பின்விளைவுமல்ல. அதன் துவக்கம் மிகச் சாதாரணமானது.

டிசம்பர் 1, 1955 ரோசா பார்க்ஸ் எனும் கறுப்பினப் பெண்மணி தன் அலுவலுக்கு பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது இருந்த ஜிம் க்ரோ சட்டங்களின்படி பஸ்ஸில் ஒரு கறுப்பினரின் இடத்தை வெள்ளையர் கேட்டால் விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. ரோசா பார்க்ஸ் மறுத்தார். ஒரு பெரும் புரட்சி வெடிக்கத்தூண்டும் அக்கினிக் குஞ்சாக எரிந்தார். அதன் பின் தொடர்ந்த போராட்டங்களுக்கு அப்போது வெறும் 26 வயதான இளைஞனான மார்ட்டின் லூத்தர் கிங் தலமை வகித்தார்.

காந்தியின் அகிம்சை வழியே மனிதத்தின் வழியே சமூக உரிமைகளைப் பெறும் வழி என்பதை உணர்ந்திருந்தார் கிங். காந்தியை ஆழமாகப் படித்திருந்தார் அவர். ‘வன்முறை வன்முறையயே விளைவிக்கும்’ என்பதை ஆணித்தரமாக நம்பினார். “விடுதலைக்கான நம் தாகத்தை (மனக்) கசப்பு மற்றும் வெறுப்பின் கோப்பைகளிலிருந்து அருந்தித் தணிக்க வேண்டாம்” என அறிவுறுத்தினார். தன் எதிரியின் குணங்கள் அவை. வெறுப்பில் செயலாற்றினால் தான் வெறுக்கும் தன் எதிரியாகவே தான் மாறிவிடுவோம் என்பதை உணர்ந்திருந்தார்.

இன்றைக்கு சமத்துவம் வேண்டிய போராட்டங்கள் வெறும் அரசியல் விளையாட்டுக்களாய் அரங்கேறுகின்றன. தலைவர்கள் தியாகத்தைவிட ஆதாயத்தையே முதலில் நாடுகின்றனர். மக்களில் துவங்கினாலும் அதிவிரைவிலேயே தங்கள் இலக்குகளை விட்டு அகன்று செல்கின்றனர். தலைவன் தொண்டன் எனும் சமத்துவமற்றக் குழுவொறால் சமத்துவத்தை நிறுவிவிட இயலாது.

‘தலமை ஏற்பது சேவகனாக இருக்கவே’ எனும் இயேசுவின் வார்த்தைகளை மார்ட்டின் லூத்தர் கிங் அடிக்கடி பயன்படுத்துவார். அகிம்சைக்காக அதிகபட்ச பின்விளைவை அவர் சந்திக்க நேரிட்டது. தன் முன்னோடி, ஆதர்ச நாயகன் காந்தியைப் போலவே தோட்டாக்களுக்குப் பலியானார்.

‘எனக்கொரு கனவுண்டு’ (I have a dream) என கிங் பேசிய புகழ்பெற்ற பேச்சின் அசைபடம் கீழே உள்ளது. மேலும் சில உபயோகமான தொடுப்புக்கள் கீழே.

‘கண்ணுக்குக் கண் எடுப்பதால் உலகமே குருடாகும்’ - காந்தி

பேச்சின் ஆங்கிலப் பிரதி மற்றும் ஒலி வடிவம்
கறுப்பினருக்கெதிரான ஜிம் க்ரோவ் சட்டம் – விக்கிப்பீடியா
ரோசா பார்க்ஸ் – விக்கிப்பீடியா பக்கம்
வரலாற்றில் அகிம்சை வழிப் போராட்டங்கள் – விக்கிப்பீடியா

Popularity: 8% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....5 மறுமொழிகள் to “அதிகறுப்புக் காந்தி”

 1. […] காந்தியின் அகிம்சை வழியே மனிதத்தின் வழியே சமூக உரிமைகளைப் பெறும் வழி என்பதை உணர்ந்திருந்தார் கிங். காந்தியை ஆழமாகப் படித்திருந்தார் அவர். ‘வன்முறை வன்முறையயே விளைவிக்கும்’ என்பதை ஆணித்தரமாக நம்பினார். மார்ட்டின் லூதர் கிங் மற்றும் அவரின… […]

 2. வடுவூர் குமார் சொல்கிறார்:

  தலைவர்கள் தியாகத்தைவிட ஆதாயத்தையே முதலில் நாடுகின்றனர்.

  உண்மையை அழகாக உரைத்திருக்கார்.

 3. he did not say that. I am in the process of translating the speech. Will post soon.

 4. MLK க்கு, காந்தியப் பிடிக்கும். காந்தி வழியிலதான் போராடப் போறேன்னு, இந்தியா வந்ததுக்கு அப்புறம் சொல்லிகிட்டு இருந்தாராம்! பாவம், வியட்னாம் போரை எதுத்துப் பேசுன ஒரு வருஷத்துல அவரக் கொன்னுட்டாங்க. இது, அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு சதின்னு ஒரு பலத்த பேச்சு இருக்கு :)

  கறுப்பர்கள் —- வழக்கம் போல் அடிமையாகவே!!

 5. Badri Seshadri சொல்கிறார்:

  அலெக்ஸ்: நான் ஏற்கெனவே இந்தப் பேச்சை மொழிபெயர்த்து என் பதிவில் சேர்த்துள்ளேன். எனது வடிவத்தை எடுத்து மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். முற்றிலும் புதிதாகத் தொடங்காமல், எனது வெர்ஷனிலிருந்து ஆரம்பித்தால் நேரம் மிச்சம் ஆகலாம்?

  http://thoughtsintamil.blogspot.com/2008/04/blog-post_7831.html

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்