மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் ‘எனக்கொரு கனவுண்டு’ எழுச்சி உரை

ஆகஸ்ட் 28, 1963 லிங்கன் நினவகம், வாஷிங்டன் டி.சி

மார்ட்டின் லூத்தர் கிங் சுட்டுக்கொல்லப்பட்ட நாற்பதாண்டு நினைவு நேரத்தில் அந்த மாமனிதருக்குச் சமர்ப்பணம்

நம் நாட்டின் வரலாற்றில் மாபெரும் விடுதலைப் போராட்டமாக இடம்பெறப்போகும் நிகழ்வொன்றில் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சி.

நூறு(Five score) வருடங்களுக்கு முன்னர், இங்கு யாரின் நிழலில் இன்று நாம் நிற்கிறோமோ அந்த உன்னத அமெரிக்கர், (அடிமைகள்) விடுவிப்புப் பிரகடனத்தில் (Emancipation Proclamation) கையெழுத்திட்டார். தகுந்த நேரத்தில் வந்த அந்தச் சட்டம் நம்பிக்கையின் பேரொளியாய் அநீதியின் தீயில் அழிந்துகொண்டிருந்த இலட்சக்கணக்கான நீக்ரோ அடிமைகளுக்கு வந்தது. Kingஅடிமைத்தனத்தின் நீண்ட இரவிற்கு மகிழ்ச்சியூட்டும் விடியலாக அது வந்தது.

ஆனால் நூறு வருடங்களுக்குப் பின், நீக்ரோ இன்னும் விடுதலை அடையவில்லை. நூறு வருடங்களுக்குப் பின், நீக்ரோவின் வாழ்க்கை கவலைதரும் விதத்தில் ஒதுக்கப்படுதலின்(segregation) விலங்காலும் இரட்டைநிலைகளின்(discrimination) சங்கிலியாலும் முடமாகிக்கிடக்கிறது. நூறு வருடங்களுக்குப் பின் நீக்ரோ வளமைக் கடலின் நடுவே ஏழ்மைத் தீவில் வாழ்கிறான். நூறு வருடங்களுக்குப் பின் நீக்ரோ அமெரிக்கச் சமூகத்தின் மூலைகளில் மனச்சோர்வுடன் கிடக்கிறான், தன் சொந்த நாட்டிலேயே தான் அகதியாயிருப்பதைக் காண்கிறான். இதனாலேயே இன்று நாம் இந்த அவல நிலையை அரங்கேற்றக்(dramatize) கூடியுள்ளோம்.

ஒரு வகையில் நாம் நம் தலைநகருக்குக் காசோலை ஒன்றை மாற்றிச் செல்ல வந்துள்ளோம். நம் குடியரசின் சிற்பிகள் உன்னத வார்த்தைகளால் அரசியல் சானத்தையும் விடுதலைப் பிரகடனத்தையும் எழுதுகையில் நமக்கொரு காசோலையில் கையெழுத்திட்டுத் தந்தார்கள், அந்தக் காசோலைக்கு ஓவ்வொரு அமெரிக்கனும் வாரிசுகள். அது எல்லா மனிதனுக்கும், ஆம், கறுப்பு மனிதனுக்கும் வெள்ளை மனிதனுக்கும், உயிர்வாழவும், விடுதலைக்கும் மகிழ்ச்சியைத் தேடிப்பெறவும் (Life, Liberty and the pursuit of Happiness) ஆன “பிரித்தெடுக்க இயலாத(unalienable) உரிமையை” வாக்களிக்கிறது. அமெரிக்கா கறுப்பினத்தவருக்கு மட்டும் அந்தக் காசொலையை மாற்றிக்கொள்ள மறுத்துவிட்டது இப்போது தெளிவாகிறது. இந்தப் புனிதக் கடமைக்கு மதிப்பளிக்காமல் அமெரிக்கா நீக்ரோ கறுப்பினத்தவருக்கு மோசமான காசோலையை வழங்கியுள்ளது, அந்தக் காசோலை “போதுமான பணம் இல்லை” எனத் திரும்பி வந்துள்ளது.

ஆனால் நாம் சமூகநீதியின் வங்கி திவாலாகிவிட்டதென்பதை நம்பமாட்டோம். இந்த நாட்டின் வாய்ப்புக்களின் பெட்டகங்களில் (vaults of opportunity) போதிய பணமில்லை என்பதை நம்பமாட்டோம். அதனால் இங்கே விடுதலையின் வளங்களையும் (riches of freedom) நீதியின் பாதுகாப்பையும் நமக்களிக்கும் காசோலையை காசாக மாற்றிக்கொள்ள வந்துள்ளோம்.

‘இப்போதே’ (Now) என்பதன் அவசியத்தை உணர்த்தவும் நாம் இந்தப் புனித இடத்தில் கூடியுள்ளோம். இது வசதியாகத் தணிந்து செல்லவும் (cooling off), படிப்படிச் செயலாக்கமெனும் (gradualism) போதைப்பொருளின் மயக்கத்தில் கிடக்கவுமான நேரமல்ல. ஜனநாயகத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான காலம் இது. பிரிவினையின் இருண்டத் தூரப்பள்ளத்தாக்கிலிருந்து எழுந்து கதிரொளிபரவும் இனநீதியின் பாதைக்கு வரவேண்டிய காலம் இது. இன அநீதி எனும் புதை குழியிலிருந்து நம் நாட்டைத் தூக்கிச் சகோதரத்துவம் எனும் திடமான பாறையின் மேல் வைக்க வேண்டிய தருணம் இது. கடவுளின் மக்கள் அனைவருக்கும் நீதியை நிஜமாக்கும் காலமிது.

இந்தத் தருணத்தின் முக்கியத்தைக் கவனிக்காமல் விடுவது இந்த நாட்டிற்கு ஆபத்தானதாக முடியும். கொடுஞ்சூட்டுக் கோடையாயிருக்கும் நீக்ரோவின் சட்டபூர்வமான இந்த மனக்குறை விடுதலை, சமத்துவம் எனும் உயிரூட்டும் வசந்தகள் வந்தாலன்றி மறையாது. 1963 ஒரு முடிவல்ல துவக்கம். நீக்ரோக்கள் கொஞ்சம் கோபத்தைக் காண்பிப்பார்கள் பின்னர் அடங்கிவிடுவார்கள் என நினைத்து வழக்கம்போலப் பணிகளை மேற்கொள்பவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. நீக்ரொவுக்கு குடிமகனின் உரிமைககள் வழங்கப்படும்வரை இங்கே ஓய்வும் அமைதியும் இருக்காது. புரட்சியின் சூறாவளிகள் இந்த நாட்டின் அஸ்திவாரங்களை நீதி ஒளிரும் நாள் வரும்வரை அசைத்துக்கொண்டிருக்கும்.

ஆனால் நீதியின் அரண்மனைக்குள் இட்டுச் செல்லும் இதமான பாதைகளில் நிற்கும் என் மக்களுக்கு நான் ஒன்று சொல்லியாக வேண்டும்: நமக்குச் சொந்தமான இடத்தை நாம் பெறும் வழியில் தவறான செயல்களைச் செய்த குற்றத்திற்கு ஆளாகக்கூடாது. விடுதலைக்கான நம் தாகத்தை (மனக்) கசப்பு மற்றும் வெறுப்பின் கோப்பைகளிலிருந்து அருந்தித் தணித்துக்கொள்ளத் துடிக்க வேண்டாம். எப்போதும் நாம் கண்ணியம், கட்டுப்பாட்டின் உயர்தளங்களிலிருந்தே நம் போராட்டத்தை(struggle) நடத்தவேண்டும். நம் போராட்டத்தை வன்முறைத் தாக்குதலாகக் கீழிறக்க அனுமதிக்கக் கூடாது. மீண்டும் மீண்டும் நாம் உடல் ரீதியான(வன்முறை) சக்திகளை ஆத்மரீதியாக எதிர்கொள்ளும் உன்னத உயரங்களை நோக்கி எழ வேண்டும்.

இந்தப் புதிய வியத்தகு கறுப்பின எதிர்வினை எல்லா வெள்ளையினத்தவர்மீதும் அவநம்பிக்கை கொள்ள நம்மை Rosa and kingஇட்டுச் செல்லக்கூடாது, ஏனெனில் நம் வெள்ளையினச் சகோதரர்கள் பலர், இங்கு வந்திருப்பவர்களால் வெளித்தெரிவது போலவே, அவர்களின் இலக்குகள் (Destiny) நம் இலக்குகளோடும் அவர்களது விடுதலை நம் விடுதலையோடும் பின்னிப் பிணைந்திருப்பதையும் உணர்ந்திருக்கிறார்கள்.

நாம் தனித்து நடக்க இயலாது.

நாம் நடந்துகொண்டிருகையில் எப்போதும் முன்நோக்கி நடக்க உறுதிகொள்ளவோம்.

நாம் திரும்பிச் செல்ல இயலாது.

சமூக உரிமையின் பக்தர்களிடம் “எப்போதுதான் நீ திருப்தியடைவாய்?” எனக் கேட்பவர்கள் உண்டு. காவல்துறையின் சொல்லமுடியாத கொடுமைக்கு நீக்ரோ பலியாகிக்கொண்டிருக்கும்வரை நாம் திருப்தியடைய முடியாது. பயணத்தில் சோர்வடைந்த நம் உடல்கள் நெடுஞ்சாலைகளுக்கருகிருக்கும் விடுதிகளிலும் நகரங்களுக்குள்ளிருக்கும் விடுதிகளிலும் ஓய்வைப் பெற இயலாதவரைக்கும் நாம் திருப்தியடைய முடியாது. நீக்ரோவின் அடிப்படை இடப்பெயர்வு சிறிய சேரியிலிருந்து பெரிய சேரிக்குத்தான் என இருக்கும் வரையில் நம்மால் திருப்தியடைய முடியாது. “வெள்ளையர்களுக்கு மட்டும்” எனும் அறிவிப்புப் பலகை ஒன்று நம் குழந்தைகளின் தன்மதிப்பையும்(self-hood) கண்ணியத்தையும் அவிழ்த்தெறிந்துகொண்டிருக்கும்வரைக்கும் நம்மால் திருப்தியடைய முடியாது. மிசிசிப்பியிலிருக்கும் நீக்ரோ வாக்களிக்க இயலாமல் இருக்கும்வரையில், நீயூ யார்க்கில் இருக்கும் நீக்ரோ வாக்களிப்பதால் எந்த நன்மையுமில்லை எனக் கருதும்படி இருக்கும்வரையில் நாம் திருப்தியடையப்போவதில்லை. இல்லை. இல்லை நாம் திருப்தியடையவில்லை. சமநீதி பெரும்நீரைப்போலவும் , அறம் மாபெரும் ஓடைபோலவும் வீழ்ந்தோடும்வரைக்கும் நாம் திருப்தியடையப்போவதில்லை.

உங்களில் பலரும் பல போராட்டங்களுக்கு மத்தியில் இங்கு வந்திருப்பதை நான் கவனியாமலில்லை. உங்களில் சிலர் குறுகிய சிறைச்சாலைகளிலிருந்து இப்போதுதான் வந்துள்ளீர்கள். மேலும் சிலர் விடுதலைக்கானத் தேடல், அடக்குமுறைப் புயலிலும் காவல்துறையின் வன்கொடுமைக் காற்றிலும் அலைக்கழிக்கப்படும் இடங்களிலிருந்து வந்துள்ளீர்கள். மனம்கிளர்ந்தத் துயரத்தின் (creative suffering) அனுபவம் மிக்க வீரர்கள்(veterans) நீங்கள். உரியதல்லாதத் துயரம் விடுதலைதரவல்லது(unearned suffering is redemptive) எனும் நம்பிக்கையில் தொடர்ந்து முயலுங்கள். மிசிசிப்பிக்குத் திரும்பிச் செல்லுங்கள், அலபாமாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள், சவுத் காரலைனாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள், ஜியார்ஜியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள், லூசியானாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள் வடக்கு நகரங்களிலுள்ள சேரிகளுக்கும் குடிசைகளுக்கும் திரும்பிச் செல்லுங்கள் எப்படியேனும் இந்த நிலை மாற்றப்படும், மாறிவிடும் எனும் நம்பிக்கையுடன் திரும்பிச் செல்லுங்கள்.

இன்று உங்களுக்குச் சொல்கிறேன் நண்பர்களே, நம்பிக்கையின்மையின் பள்ளத்தாக்கில் நாம் சேற்றில் உழலவேண்டாம்.

மேலும் இன்றையின், நாளையின் சவால்களை நாம் எதிர்கொண்டிருக்கும்போதேகூட, எனக்கு ஒரு கனவிருக்கிறது. அமெரிக்காவின் கனவில் ஆழ்ந்து வேரிட்டக் கனவு அது.

ஒரு நாள் இந்த நாடு “எல்லா மனிதனும் சமமாகப் படைக்கப்பட்டான் எனும் உண்மைகள் தன்னுள் நிரூபணமானவை(self-evident)” எனும் அதன் கோட்பாட்டிற்கேற்ப எழுச்சி பெறும் எனும் கனவு எனக்குண்டு.

ஒரு நாள் ஜியார்ஜியாவின் சிவந்தக் குன்றுகளின் மேல் முன்னாள் அடிமைகளின் மகன்களும் முன்னாள் அடிமைகளின் எஜமானர்களின் மகன்களும் சகோதரத்துவத்தின் மேசையில் ஒன்றாய் அமர்ந்திடுவார்கள் எனும் கனவு எனக்குண்டு.

ஒரு நாள் அநீதியின், அடக்குமுறையின் அதிவெப்பத்திலுழலும் மிசிசிப்பி மகாணம்கூட விடுதலையின், சமநீதியின் பாலைவனச் சோலையாக மாறும் எனும் கனவு எனக்குண்டு.

என் நான்கு குழந்தைகளும் ஒரு நாள் அவர்களின் தோலின் நிறத்தைப் பார்த்தல்லாமல் அவர்களின் நடத்தையின் பேரில் மதிப்பிடப்படுவார்கள்(judged) எனும் கனவு எனக்குண்டு.

இன்று எனக்கொரு கனவுண்டு!

ஒரு நாள் தெற்கே கொடுமையான இனவெறியர்களுள்ள, ஆளுனர் interposition*(மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசின் தலையீட்டை தவிர்க்கும் சட்டம்) , nullification**(மத்திய அரசின் சட்டத்தை செல்லுபடியில்லாமல் செய்வது) எனக் கூறிக்கொண்டிடுக்கும் அலபாமாவில், கறுப்புச் சிறுவர்களும் கறுப்புச் சிறுமிகளும் வெள்ளை சிறுவர்களும் சிறுமிகளும் சகோதர சகோதரிகளாகக் கைகோர்த்துக்கொள்ள இயலும் எனும் கனவு எனக்குண்டு.

இன்று எனக்கொரு கனவுண்டு!

ஒரு நாள் எல்லா பள்ளத்தாக்குகளும் உயர்த்தப்படும், எல்லாக் குன்றுகளும் மலைகளும் தாழ்த்தப்படும், கரடுமுரடான நிலங்கள் சமனாகும் வளைந்திருக்கும் பாதைகள் நேர்படுத்தப்படும் கடவுளின் மகிமை வெளிப்படும் எல்லா தசைகளும்(உயிர்கள்) அதை ஒன்றாய்க்காணும்.

இதுதான் நமது நம்பிக்கை. நான் இந்த நம்பிக்கையுடனேயே தெற்கு நோக்கிச் செல்கிறேன்.

இந்த நம்பிக்கையுடன்(Faith) மலையெனத் தெரியும் அவநம்பிக்கையிலிருந்து(Despair) நம்பிக்கை(Hope) எனும் சிறு கல்லைக் கடைந்தெடுக்க இயலும். இந்த நம்பிக்கையுடன் இரைச்சலிடும் சத்தங்களைச் சகோதரத்துவமெனும் அழகிய சேர்ந்திசையாக மாற்ற முடியும். இந்த நம்பிக்கையுடன் நம்மால் ஒருங்கிணைந்து வேலை செய்ய இயலும், ஜெபிக்க இயலும், சேர்ந்து போராட இயலும், சிறை செல்ல இயலும் விடுதலைக்காக நிமிர்ந்து நிற்க முடியும், ஒரு நாள் நாம் விடுதலை பெறுவோம் எனும் அறிதலுடன்.

இந்த நாள் — இந்த நாளே கடவுளின் பிள்ளைகள் அனைவரும் (கீழுள்ளதைப்) புதிய அர்த்தத்துடன் பாட இயலும்.. .

‘என் நாடே உன்னை, இனிய விடுதலையின் பூமியே, உன்னைக் குறித்து பாடுகிறேன்

என் முன்னோர் உயிர் நீத்த பூமியே, புனிதப் பயணிகளின்*** பெருமைக்குரிய பூமியே,

(உன்) மலைகளனைத்திலிருந்தும் விடுதலை முழங்கட்டும்.’

அமெரிக்கா உன்னத நாடாக வேண்டுமென்றால் இது உண்மையாக வேண்டும்.

எனவே நியூ ஹேம்ஷைரின் பருத்த மலைகளின் உச்சியிலிருந்து விடுதலை முழங்கட்டும்

நியூ யார்க்கின் பெரும் மலைகளிலிருந்து விடுதலை முழங்கட்டும்

பென்சுல்வேனியாவின் உயர்ந்த அலெகெனீசிலிருந்து விடுதலை முழங்கட்டும்

பனி மூடிய கொலொரடாவின் ராக்கியிலிருந்து விடுதலை முழங்கட்டும்

கலிபோர்னியாவின் வளைந்து நெளிந்த சரிவுகளிலிருந்து (Slopes) விடுதலை முழங்கட்டும்.

அது மட்டுமல்ல

ஜியார்ஜியாவின் கன்மலைகளிலிருந்தும்

டென்னிசியின் லுக்அவுட் மலையிலிருந்தும்

மிசிசிப்பியின் ஒவ்வொரு குன்றிலிருந்தும், மேட்டிலிருந்தும் விடுதலை முழங்கட்டும்.

ஒவ்வொடு மலைவெளியிலிருந்தும் விடுதலை முழங்கட்டும்.

இது நடக்கும்போது, நாம் விடுதலை முழங்க வகை செய்யும்போது, ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் சிற்றூரிலிருந்தும்(Hamlet) விடுதலையை முழங்கச் செய்யும்போது, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் நகரத்திலிருந்தும் விடுதலையை முழங்கச்செய்யும்போது, கடவுளின் மக்கள் எல்லோரும், கறுப்பரும் வெள்ளையரும், யூதரும் பிற இனத்தவரும், ப்ராட்டஸ்டாண்டும் கத்தோலிக்கரும் ஒன்றாய் கைகோர்த்து (கீழுள்ள ) நீக்ரோவின் ஆன்மீக வரிகளைப் பாடும் நாளை விரைவில் அடையக் கூடும்.

விடுதலையடைந்தோம் ஒருவழியாய்! விடுதலையடைந்தோம் ஒருவழியாய்!

எல்லாம்வல்லக் கடவுளுக்கு நன்றி! விடுதலையடைந்தோம் ஒருவழியாய்!

**********************************

*http://en.wikipedia.org/wiki/Interposition

**http://en.wikipedia.org/wiki/Nullification_Crisis

*** அமெரிக்காவில் முதன்முதலில் ஐரோப்பியாவிலிருந்து குடிபுகுந்தவர்கள் Pilgrims எனப்படும் புனித யாத்திரிகர்கள்.

ஆங்கிலப் பிரதி மற்றும் ஒலி ஒளி வடிவங்கள்

முதல் படத்தில் கிங். இரண்டாம் படத்தில் ரோசா பார்க்ஸ், பின்னணியில் கிங். (நன்றி: விக்கிப்பீடியா)

*******************************************

நன்றி: திண்ணை

Popularity: 8% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....11 மறுமொழிகள் to “மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் ‘எனக்கொரு கனவுண்டு’ எழுச்சி உரை”

 1. karthikramas சொல்கிறார்:

  சிறில்.

  தமிழாக்கத்துக்கு நன்றி. மார்ட்டின் லூதெர் கிங் ‍இன் உரையை சிரமப்பட்டு தமிழாக்கம் செய்திருப்பதால், ஒரு க்யூரியாசிட்டி, ஈழத்தமிழர்கள் பற்றி உங்கள் கருத்தை எங்காவது பதிந்திருந்தால் லின்க் தரமுடியுமா?

 2. கார்த்திக்,
  முதலில் எதைக் குறித்தும் உங்கள் கருத்து என்ன எனக் கேட்கப்படுமளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. இந்த மாதிரிக் கேட்டீங்கண்ணா நான் பயந்துடுவேன்.

  ஈழம் குறித்த என் அறிவு மிகவும் மேலோட்டமானது. உலகில் எங்கே அப்பாவி மக்கள் கொல்லப்படும்போதும் எனக்குள் என்ன உணர்வுகள் நேருமோ அதே உணர்வுகள் ஈழத்துக் கொடுமைகளைக் கேட்கும்போதும் தோன்றும்.

  ஒருமுறை அங்கே சிதைக்கப்பட்டிருந்த பிள்ளை ஒன்றின் படத்தை பார்த்தபின்னர் வெறுப்பு எனும் கவிதையை எழுதினேன்.

  திரு. திலீபன் அவர்களைப்போல ஈழத்துக்காக இதுவரை போரில் உயிர்விட்டவர்கள் சத்தியாகிரக முறையில் உயிர்விட்டிருந்தால் உலகம் இன்னும் தீவிரமாக ஈழத்தை பார்த்திருக்கும் எனும் கருத்தை ஒரு பின்னூட்டத்தில் வெளியிட்டிருந்தேன். ஈழம் குறித்து இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் முட்டம் கிராமத்தில் இருந்த எனக்கு, ஒரு சிறுவனுக்கு அந்த உயிர்த்தாகம் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் ஈழம் குறித்துத் தெரிந்துகொண்ட முதல் செய்தி அதுதான் என நினைக்கிறேன்.

  வன்முறையின் மூலம் சமத்துவத்தை ஒருபோதும் பெற இயலாது. அதிகாரத்தை வேண்டுமானால் பெறலாம் என்பது என் எண்ணம்.

  உலகில் எந்தக் கொள்கையும் ஒரு அப்பாவி மனித உயிருக்கு மேலானதல்ல என நினைக்கிறேன்.

  ஒரு விதயம் குறித்து அதிகம் அறிவு வரும்போது அதைக் குறித்து கருத்துக்களை மாற்றிவிட வாய்ப்புண்ணு எனும் டிஸ்க்கி ஒன்றையும் இங்கே போட்டுவிடுகிறேன்.

  மார்ட்டின் லூத்தர் கிங் அல்லது காந்தி போன்ற தலைவர்களால் மிகவும் ஈர்க்கப்படுகிறேன். பிறரை வருத்தியன்றி தங்களை வருத்தியே அவர்களின் புரட்சியை மேற்கொண்டனர். பிறரின் உயிரைப் பணயம் வைத்தல்லாமல் அவர்களின் உயிரைப் பணையம் வைத்தே புரட்சி செய்தனர். அகிம்சை ஒரு பேராயுதம் என்பதை நிரூபித்தவர்கள்.

  மார்ட்டின் லூத்தர் கிங், ஜான் கென்னடி போன்றோரின் உரைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். பொதுவாகவே அழகிய உரைகள் எனக்குப் பிடிக்கும் அண்மையில் ஒபாமா உரையைப் பற்றிக்கூட எழுதியிருந்தேன். மனஎழுச்சியூட்டும் உரைகளைக் நம் மக்கள் கேட்டு எத்தனை காலமாகிறது.என் தலைமுறைக்கு அது வாய்க்கவேஎயில்லையோ எனத் தோன்றுகிறது. It is more powerful than the voluminous book ever written.

 3. Thamizhan சொல்கிறார்:

  மதிப்பிற்குரிய மார்ட்டின் லூதர் கிங்கின் அமைதிப் புரட்சி அமெரிக்கக் கருப்பர்களை ஆச்சரியப் பட வைத்தது.நம்ப மறுத்தனர்.
  அவருடைய ஆழ்ந்த மனித நேய வார்த்தைகள் பண்புள்ள அமெரிக்கர் அனைவரின் மனசாட்சியை உலுக்கியது.பல வெள்ளையர்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருடைய நடைப் பயணங்களில் கல்ந்து கொண்டனர்.தனது 13 ஆண்டு பொதுப் பணியில் அமெரிக்காவின் மனசாட்சியை மனித நேயம் பெற வைத்தார்.

  இன்று ஒரு கருப்பின பராக் ஓபாமா அமெரிக்கத் தலைவராக வர முடியும் என்ற அளவிற்கு அமெரிக்க்கா
  முன்னேறியுள்ளது.

  இந்தியாவின் மனித நேயத் தலைவர்கள் மஹாத்மா ஜோதி பாபுலே,சாகு மகராஜ்,நாரயண குரு,பெரியார்,பாபா சாகேப் அம்பேத்கர் இவர்களின் தன்னலமற்றத் தொண்டு மாணவர்கள் அனைவருக்கும்
  சொல்லித் தரப்பட்டு,இந்தியாவின் பிரதமராக ஒரு தாழ்த்தப்பட்டவர்,அவரது சாதியின் அடிப்படையில் இல்லாமல் அவரது திறமைக்காக தேர்ந்தெடுக்கப் படும்போது இந்த்யா உண்மையிலேயே விடுதலையும் முன்னேற்றமும் அடைந்து விட்டதாகப் பெருமைப் படலாம்.

 4. //இன்று ஒரு கருப்பின பராக் ஓபாமா அமெரிக்கத் தலைவராக வர முடியும் என்ற அளவிற்கு அமெரிக்க்கா
  முன்னேறியுள்ளது.//

  முதலில் இது இன்னும் நிஜமாகவில்லை. ஒபாமாவைப் பொருத்தவரை எல்லோரின் பார்வையும் அவரின் இனத்தின் மீதே இருக்கிறது. முதலில் கவலை தரும் விதயம் இதுதான்.

  அடுத்து ஒபாமாவின் கறுப்பு பின்னணி சந்தேகத்துக்குரியதாக ஆக்கப்பட்டுவிட்டது. அவரது தந்தை அடிமைகளின் வழி வந்தவரல்ல. இந்த வாரம் MSNBC மற்றும் Time ஒபாமாவின் வெள்ளைத் தாயை முன்வைத்து விபரங்களை விவாதங்களை முன்வைப்பதன் தேவையை வெள்ளை அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்வேன்.

  கீழ்தட்டு சமூகங்கள் முன்னேற கிங்போல, சுயநலம் பார்க்காத தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். இத்தகையத் தலைவர்கள் இரு பக்கத்தையும் ஒன்று சேர்க்கும் சக்தியுடன் இருப்பார்கள். வெறுப்பின் அடிப்படையில் செயல்படுவதில்லை.

 5. karthikramas சொல்கிறார்:

  சிறில் நன்றி.

  //திரு. திலீபன் அவர்களைப்போல ஈழத்துக்காக இதுவரை போரில் உயிர்விட்டவர்கள் சத்தியாகிரக முறையில் உயிர்விட்டிருந்தால் உலகம் இன்னும் தீவிரமாக ஈழத்தை பார்த்திருக்கும் எனும் கருத்தை ஒரு பின்னூட்டத்தில் வெளியிட்டிருந்தேன். ஈழம் குறித்து இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் முட்டம் கிராமத்தில் இருந்த எனக்கு, ஒரு சிறுவனுக்கு அந்த உயிர்த்தாகம் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் ஈழம் குறித்துத் தெரிந்துகொண்ட முதல் செய்தி அதுதான் என நினைக்கிறேன்.

  வன்முறையின் மூலம் சமத்துவத்தை ஒருபோதும் பெற இயலாது. அதிகாரத்தை வேண்டுமானால் பெறலாம் என்பது என் எண்ணம்.

  உலகில் எந்தக் கொள்கையும் ஒரு அப்பாவி மனித உயிருக்கு மேலானதல்ல என நினைக்கிறேன். //

  நான் கேட்ட‌த‌ன் கார‌ண‌ம், நீங்க‌ல் பெரியஆள்/அல்ல‌து இல்லை என்ப‌தற்காக அல்ல‌.
  அமெரிக்கா வ‌ரும் ‘ இந்திய‌த் த‌மிழ‌ர்க‌ள்’ க‌றுப்பின‌த்த‌வ‌ரின் பிரச்சினைக‌ளை பேச‌ ஆர‌ம்பிக்கும்போது, ஆர்வம் காட்டும்போது (அது தவறெனச்சொல்ல வரவில்லை) தாம் இத்த‌னை வ‌ருட‌ங்க‌ளாக‌ வ‌ள‌ர்ந்த‌ பிர‌தேச‌த்தின் த‌ன் இன‌த்தின் அடையாள‌த்தோடு,த‌ன் மொழியோடு ஒடுக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் குறித்து அறிந்திருக்க‌வில்லை எனில் அது ஏன் என்ற‌ விவாத‌ப்புள்ளியை துவ‌க்க‌லாம் என்றும், அல்ல‌து வெறும‌னே த‌ம்மை சமூக ‌சீர்த்திருத்த‌வாதியாக‌ காட்டிக்கொள்ள‌ விழைகிற‌வ‌ர்கள்(அப்படி இருக்கும்போது) பிர‌ச்சினையை செல‌க்ட் செய்யும் கார‌ணிக‌ள் என்ன‌ என்று அறிய‌லாம் என்ப‌த‌ற்காவும்தான்.

  மேலே நீங்கள் சொன்ன‌திலேயே இருக்கும் முர‌ணை சுட்டிவிடுகிறேன், விடையைத்தேடுவ‌து உங்க‌ள் பாடு ;)நீங்கள் சொன்னது போல் எந்த‌ கொள்ககையும் ‘ஒரு அப்பாவி’ ம‌னித‌னின் உயிரைவிட‌ மேலான‌த‌ல்ல‌ என்றால் திலீப‌ன் ‘ச‌த்தியாகிர‌க’ அகிம்சை முறையில் த‌ன் உயிர் துற‌ந்த‌வுட‌னே இல‌ங்கை அர‌சு ஈழ‌த்தை அறிவித்திருக்க‌வேண்டும் அல்ல‌வா? அப்ப‌டி என்ன ‘கொள்கை’ இல‌ங்கை அர‌சுக்கு என்ற‌ கேளிவி வ‌ருகிற‌த‌ல்லவா?

  வாசியுங்க‌ள் அய்யா வாசியுங்க‌ள்! :-)

 6. கார்த்திக்,
  இந்தியத் தமிழர்கள் ஈழம் குறித்த அறிவின்மையில் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

  என்னைப் பொருத்தவரை சில எண்ணங்கள்.
  1. ஈழம் தமிழகத்தில் கணிசமாக அரசியல்படுத்தப்பட்டுவிட்டது. அது சமூகப் பிரச்சனையாகக் கொள்ளப்படவில்லை என்றே தோன்றுகிறது. இந்தி எதிர்ப்பு, பெரியார் கால சாதி ஒழிப்பு புரட்சிகள் போன்றதொரு உணர்வினை ஈழம் குறித்து ஏற்படுத்த முயற்சிகள் இருக்கின்றனவா எனத் தெரியவில்லை.
  2. ஈழம் என்றாலே புலிகளின் போர் மட்டுமே நினைவுக்கு வருவது. இதனால் அங்கு இருபக்கமும் சண்டையும் இழப்பும் உள்ளது என அறியமுடிகிறதேயன்றி சிங்கள அரசு தொடர்ந்து வன்முறைகளை அப்பாவித் தமிழர்மீது நடத்திவருகிறதா என்பதைக் குறித்த தரவுகள் பரவலாக இல்லாமல் இருப்பது.
  3. நேரடி அனுபவம் இல்லாமல் இருப்பது. அது வேறொரு நாட்டில் நடக்கும் பிரச்சனை. என்பதுபோன்றதொரு உணர்வு.
  4. ஈழத்துக்கு எதிராக தமிழர்களே செய்யும் பிரச்சாரங்கள். ஈழம் குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது.

  கிங் உரையை மொழிபெயர்த்தவுடன் நான் சமூக சிந்தனையாளனாகிவிட்டேன் என நினைத்தேனானால் என்னைவிட அடி முட்டாள் வேறொருவன் இல்லை. ஒரு கொள்கைக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்தவர் என்கிற முறையில் அவரை எனக்குப் பிடித்துள்ளது.

  கறுப்பினத்தவர் அடிமையாக்கப்பட்டு அழைத்து வரப்பட்ட வரலாறு மிகத் தெளிவானது. அது மனித அவலங்களில் அண்மையானதும், கேவலமானதுமாயுள்ளதை இங்குள்ள மீடியாக்கள் நேரடியாக விவாதிக்கின்றன.

  MSNBCயில் இரண்டு நாட்களுக்கு முன்பு இது குறித்த விவாதம் ஒன்றில் கறுப்பினத்தவர் அடிமையாக, விலங்குகளாக கொண்டுவரப்பட்டது Holocaustக்கு சமமானது எனப் பேசப்பட்டது. இத்தகைய விவாதங்களோ, விவரணங்களோ ஒரே இனமேயாகிலும் தமிழக ஊடகங்களில் காணக்கிடைக்கவில்லை.

  இணையத்தில் உள்ளவற்றை தொகுத்து ஒரு பக்கம் போடுங்கள்.
  குறிப்பாக எனக்கு இருக்கும் கேள்விகள்..
  1. இலங்கையில் தமிழர்கள், சிங்களர் ஆரம்ப வரலாறு.
  2. சுதந்திரத்தின்போது அரசியலமைப்பை முடிவு செய்தது எப்படி.
  3. தமிழர்களுக்கெதிரான ‘சிங்கள அடக்குமுறையின்’ வரலாறு?
  4. ஈழத்துக்காக புலிகள் தவிர்த்து நடந்த போராட்டங்களின் விபரங்கள்.
  5. இலங்கை அரசியலில் தமிழர்களின் பங்கு என்ன? எப்படி சில தமிழர்கள் இலங்கை அரசியலில் கலந்துகொள்கிறார்கள் சிலர் இல்லை?
  6. இலங்கையிலிருந்துகொண்டே ஈழத்தை விரும்பாத தமிழர்களின் நிலை என்ன?

  நானும் என் தரப்பிலிருந்து தேடிப் படிக்க முயல்கிறேன்.

  நன்றி

 7. johan paris சொல்கிறார்:

  இந்த ‘எனக்கொரு கனவுண்டு’ எனும் தொடருடன் இவர் விபரணங்கள் பார்த்துள்ளேன்.
  தன் இனத்தைப் பற்றிச் சிந்தித்து அதற்காக உயிரை விட்டவர் என்பதால் மதிப்புமுண்டு.
  முழு உரைத் தமிழாக்கத்திற்கு நன்றி.

 8. karthikramas சொல்கிறார்:

  சிறில், தாமதத்துக்கு வருந்துகிறேன்.
  முதலில் ஒரு 4 புல்லட் பாயின்ட்கள் போட்டுள்ளீர்கள். பிறகு ஒரு 6 புல்லட் பாயின்டுகள் போட்டிருக்கிறீகள். உங்கள் தொனி நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது அல்லது தெரிந்து கொள்வதற்காக என்று கேட்கும் பொழுது எழுதுவதற்கு ஒரு பலன் இருப்பது போல் இருப்பதால் நன்றாக் இருக்கிறது. :)
  இப்போது இங்கெ பேசவேண்டிய தேவை உள்ளது எனக்கருதும், முதல் நான்கில் சில புல்லட் பாயிண்டுகள் பற்றி மட்டும்.
  //ஈழம் தமிழகத்தில் கணிசமாக அரசியல்படுத்தப்பட்டுவிட்டது. அது சமூகப் பிரச்சனையாகக் கொள்ளப்படவில்லை என்றே தோன்றுகிறது. இந்தி எதிர்ப்பு, பெரியார் கால சாதி ஒழிப்பு புரட்சிகள் போன்றதொரு உணர்வினை ஈழம் குறித்து ஏற்படுத்த முயற்சிகள் இருக்கின்றனவா எனத் தெரியவில்லை.//
  இது தவறான பார்வை; எந்த அரசியலும் இரண்டு பக்க சக்திகள் இல்லாமல் உந்தப்படுவது இல்லை; ஆதிக்க சக்தி மட்டுமே முழுமையாக செயல்படுமென்று இருந்தால் அங்கே போராட்டம் இல்லை. போராட்ட‌ம் ம‌ட்டுமே மேலெம்பி வ‌ள‌ருமென்றால் அது நிச்ச‌ய‌ம் முடிபை நோக்கி குறுகிய‌ கால‌த்தில் ந‌க‌ர்ந்தே ஆக‌வேண்டும் என்ப‌து விதி. அதாவ‌து அத‌ன் முடிவான‌ ச‌ன‌நாய‌க‌ம், ச‌ம‌ உரிமை, அதிகார‌ப்ப‌ங்கீடு போன்ற‌வை வெளிவ‌ந்திருக்க‌வேண்டும்.
  ஆனால், த‌மிழ‌க‌த்தில் / இந்தியாவில் ந‌ட‌ப்பது,ஈழப்பிரச்சினையை ச‌மூக‌ப்பிர‌ச்சினையாக‌ பார்க்கிற‌வ‌ர்க‌ள் கையில் அதிகார‌ம் இல்லை. அதிகார‌ம் இருக்கும் போது ஈழ‌ப்பிர‌ச்சினையை ச‌மூக‌ப்பிர‌ச்சினையாக‌ பார்த்த்வ‌ர்க‌ள் கூட‌ போதுமான‌ கார‌ண‌ங்க‌ள் கிடைத்த‌வுட‌ன் த‌ம‌து/த‌ன‌து இலாப‌ங்க‌ளுக்காக‌ ஒதுங்கிய‌தும் ந‌ட‌க்கிற‌து/ந்த‌து. இத‌ற்கு ம‌த்திய‌ இந்திய‌ அர‌சுக்கும் த‌மிழ‌க‌ அர‌சுக்கும் உள்ள‌ இடைவெளி முக்கிய‌மான‌து. இராசீவ் கொலை அவ‌ர்க‌ளுக்கு தேவையான‌ கார‌ண‌ங்களை அளித்தாதாக‌ காட்டிக்கொள்கிறார்க‌ள். இல்லைன்றால் கோசோவோவையும்,மான்டிநெக்ரொ,இராக்,பால‌ஸ்தீன‌ம்,கூபா போன்ற‌ நாடுக‌ளின் சுத‌ந்திர‌த்தையும்,போர் எதிர்ப்பு,க‌ம்யூனிச‌ கொள‌கைக‌ளையும் ஆத‌ரிக்கும் அர‌சுக்கு ஈழ‌த்தை ஆத‌ரிக்க‌ காரணங்க‌ள் ஏனில்லை?
  ஆக‌ சொல்ல‌வ‌ந்த‌து அதிகார‌த்தை த‌க்க‌வைத்துக்கொள்ள‌ ச‌ம‌ ம‌திப்பீடுக‌ளையுடைய‌ அதிகார‌ங்க‌ளை கையில் வைத்துள்ள‌ ச‌க்திக‌ளுட‌ன் போராட‌வேண்டிய‌ நிலைமை உருவாகிற‌து என்ப‌துதான். ஈழ‌த்து பிர‌ச்சினையில், ம‌த்திய‌ அர‌சு பார்ப்ப‌னிய‌த்த‌ன்மையுட‌னேயே சிங்க‌ள் அர‌சை அடையாள‌ம் காண்கிற‌து என்ப‌தில் இருந்து புரிந்து கொள்ள‌ வேண்டிய‌து உள்ள‌து.

  //ஈழம் என்றாலே புலிகளின் போர் மட்டுமே நினைவுக்கு வருவது. இதனால் அங்கு இருபக்கமும் சண்டையும் இழப்பும் உள்ளது என அறியமுடிகிறதேயன்றி சிங்கள அரசு தொடர்ந்து வன்முறைகளை அப்பாவித் தமிழர்மீது நடத்திவருகிறதா என்பதைக் குறித்த தரவுகள் பரவலாக இல்லாமல் இருப்பது.//
  இத‌ற்கு எளிதாக‌ ப‌தில் சொல்லிவிட‌லாம், ‘ஈழ‌ம் என்றாலே புலிக‌ள்’ நினைவுக்கு வ‌ருகிற‌து என்றால், ‘புலிக‌ள் என்றாலே இந்திய‌ சுத‌ந்திர‌ப்போர்’ ஏன் நினைவுக்கு வ‌ருவ‌தில்லை. காந்தி என்றாலே திலீபன் ,பிரபாகரனை ஏன் சுபாஷ் சந்திரபோஸ் ஓடு அடையாளம் காணமுடிவதில்லை? ஏன் நினைவுக்கு வ‌ருவ‌தில்லை.ஆங்கிலேய‌ர்க‌ள் வெள்ளையாக‌ இருந்தார்க‌ள்; சிங்க‌ள‌ர்க‌ள் நம்ம‌ க‌லரில் இருப்ப‌தால் கொஞ்ச‌ம் மென்மையாக‌ பார்க்க‌லாம் என்ப‌தா?
  உங்க‌ள் புல்ல‌ட்டின் இர‌ண்டாம் ப‌குதிக்கு என்னால் சிரிக்காம‌ல் இருக்க‌வேமுடியாது :)த‌மிழ்நெட்.காம் த‌ர‌வுக‌ளை கொடுத்தால் ந‌ம்புகிற‌ ஆட்க‌ள் இல்லை என்ப‌து கூட‌ எங்க‌ளுக்கு தெரியாதா? யூ என் சி எச் ஆர் த‌ள‌த்திலே சிறில‌ங்கா என்று தேடுங்க‌ளேன்? குறிப்பாக‌ வ‌லைப்ப‌திவுல‌கிலே வங்காலை ப‌டுகொலைக்கு க‌ண்ட‌ன‌ம் எல்லாம் தெரிவித்தோமே? சுனாமி நிதியில் மோச‌டி என்று எத்த‌னையோ த‌ள‌ங்க‌ளில் நூற்றுக்க‌ண‌க்கான‌ செய்திக‌ள் வ‌ந்த‌ன‌வே?
  த‌ர‌வுக‌ள் இல்லையா? அல்ல‌து தெரிய‌வில்லையா? அல்ல‌து ந‌ம்க்கு அது அவ‌சிய‌மில்லை? என்ப‌து தான் என் ஓப்ப‌ன் கேள்வி. ம‌ன்னியுங்க‌ள் உங்க‌ள் புல்ல‌ட் வேத‌னைப‌டுத்துக்கிற‌து. :‍(
  அட‌ சும்மா, ராம்வாட்சிலே கிட்ட‌த்த‌ட்ட‌ 2 ஆண்டுக‌ள் பெரும்பாலான ஹிந்து செய்தியையும், பிற‌ பத்திரிகை செய்திக‌ளை ஒப்பிட்டு ஹிந்து முக‌ம் ஈழ‌த்து விவ‌கார‌த்தில் கிழ‌க்க‌ப்ப‌டுள்ள‌தே? ஹிந்துவை ஒரு கால‌த்தில் துக்கிக்கொண்டிருந்த‌ ப‌த்ரி போன்ற‌வ‌ர்க‌ள் கூட‌ பிற‌கு உண்மை தெரிந்து த‌ங்க‌ளை மாற்றிக்கொண்டார்க‌ளே? உங்க‌ளுக்குத் தெரியாதா?
  அட‌ ஹிந்துவில் இல‌ங்கை குறித்த‌ செய்திக‌ள் வ‌ருவ‌து உங்க‌ளுக்குத் தெரியாதா? தெரிய‌வில்லையென்றால் பிர‌ச்சினை இல்லை; உண்மையாக‌வா என்று கேட்கிறேன்.
  //நேரடி அனுபவம் இல்லாமல் இருப்பது. அது வேறொரு நாட்டில் நடக்கும் பிரச்சனை. என்பதுபோன்றதொரு உணர்வு. //
  இது ஒரு அச‌வுக‌ரிய‌ம்தான். ஆனால், மற்ற‌ ‘வேறொரு நாட்டுப் பிர‌ச்சினைக‌ளை’அணுகும் அள‌வுக்கு ம‌னம் திற‌ந்து அணுகினால் போதும் என்ப‌து ம‌ட்டும் தான் இங்கே விம‌ர்ச‌ன‌ம். க‌றுப்பின‌த்த‌வ‌ர்க‌ள் பிர‌ச்சினைக‌ளைப் ப‌ற்றி கேட்டால் ‘நான் அமெரிக்காவில் இருக்கிறேனே ம‌ம்மி’ என்பீர்க‌ள். ;) அட‌ இஸ்ரேல் பிர‌ச்சினையை எப்ப‌டி அணுகிறீர்க‌ள் என்றால் இந்த‌க் கேள்விக்கு இன்னும் விரிவாக‌ ப‌தில் சொல்ல‌முடியும்.

  உங்கள் பிற கேள்விகள் குறித்து நேரம் இருக்கும் போது முடிந்தவற்றை எழுதுகிறேன்; தெரிவிக்கிறேன். நன்றி உரையாடலுக்கு.

 9. karthikramas சொல்கிறார்:

  //உணர்வினை ஈழம் குறித்து ஏற்படுத்த முயற்சிகள் இருக்கின்றனவா எனத் தெரியவில்லை//

  சொல்லத்தவறியது.

  ஈழம் குறித்து , பு.த.எம்ஜிஆர் தொடக்கம், கலைஞர், வைகோ, இன்று இராமதாஸ்,தொல்.திருமா என முயற்சிகள் இருந்து கொண்டே தான் இருகின்றன.
  நெடுமாறன், வைகோ தடவிலே உள்ளே ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார்களே? நினைவில்லையா? உள்ளே போட்டது அம்மையார் என்பதாலா? ;)

 10. கார்த்திக் பதில்களுக்கு நன்றி. அடிப்படையில் ஒரு பிரச்சனை குறித்த உணர்வு தோன்ற, தோன்றாமலிருக்க பல காரணங்கள் இருகும். ஈழம் குறித்து வருந்தித் தெரிந்துகொள்ள வேண்டும் எனும் ஆவலை ஏற்படுத்தியுள்ளீர்கள். நன்றி.

 11. tamilnathy சொல்கிறார்:

  கார்த்திக்ராமாஸ்,

  கிடுக்கிப்பிடிக் கேள்விகளை ரசித்தேன்:)

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்