உறைந்து நிற்கும் காலம்

காலத்தை உறையச் செய்வது எப்படி? நேற்று சிகாகோவின் ஃபீல்ட் அருங்காட்சியகத்தில் இதற்கு விடைகிடைத்தது. 65மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு நிலையில் பூமியில் புதைந்த சூ(sue) எனும் டைனசோர், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாட்டையடிகளின் சத்தத்தினூடே எழுந்த உளிகளின் புலம்பலில் உருவாக்கப்பட்ட எகிப்திய கற்சவப்பெட்டிகள், சில நூறாண்டுகளுக்கு முன்புவரை நாகரீகங்களின் நிலைகள் என அங்கே காலம் உறை நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது.

65 மில்லியன் ஆண்டுகள் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. பிரபஞ்சத்தின் வயது 4.55 பில்லியன் வருடங்கள் என்பது ஒரு கணக்கு. நூறு வருடங்கள் வாழும் மனிதன் தன்னை இயற்கையின் சிகரம் என நினைத்துக்கொள்கிறான். எல்லாம் வல்லது கடவுள் என்றும் தான் அதற்கு அடுத்தவன் என்றும் எண்ணிப் பெருமிதத்தில் மிதக்கிறான். இயற்கை அவனை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. இவனைப்போலவே எத்தெனையோ உயிர்களையும் உருவாக்கியும் உட்கொண்டும் அது பயணிக்கிறது.

‘சூ’வைத் தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டேன். இயலவில்லை. இயற்கை தன்னுள் அடக்கிவிட்ட இரகசியங்களின் மீச்சிறு வெளிப்பாடாக சூ நின்றுகொண்டிருக்கிறது. அதிலிருந்து எடுக்கப்பட்ட சில எலும்புகளை எங்கே பொருத்துவது என்றே தெரியவில்லையாம். அது இயற்கையின் ஜிக் சா புதிர். எஞ்சி நிற்கும் துண்டுகள் நமக்கு இயற்கை மீதான வெற்றி ஒருபோதும் கிடைக்காது என்பதையே சொல்லுகின்றன. அனுமானங்களின் வழியே நம்பிக்கைகளை உருவாக்குவதில் நாம் வல்லவர்கள்தானே?

இயற்கை உருமாறிக்கொண்டேயிருக்கிறது. இரவின் மொட்டு அதிகாலையில் மலர்ந்துவிட்டிருப்பதைப்போல. அந்த மாற்றத்தை உணர நாம் இரவு முழுவதும் விழித்திருந்து கவனிக்கவேண்டும். 4.55 பில்லியன் ஆண்டுகள் விழித்திருந்தால் மட்டுமே பூமியின் வரலாற்றை முழுமயாகப் புரிந்துகொள்ள இயலும். இல்லையெனில் சாமர்த்தியமான யூகங்கள் மட்டுமே எஞ்சும். மொட்டு காயாகி கனியாகி விதை விழுந்து மீண்டும் செடியாகி மொட்டாகி மலராகி… இயற்கை இயங்கிக்கொண்டிருக்கிறது. இயல்பாய் இயங்கிக்கொண்டிருக்கிறது.

மேக் அப் அணிந்துகொண்டல்ல ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டு பூமியின் முகம் மாறிவிடுகிறது. புகைப்படம் எடுத்துக்கொள்ளாத கிழவி அவள் திருமண வயதில் எப்படி இருந்திருப்பாள் என யூகம்தான் செய்ய இயலும்.

பரிணாமக் கொள்கை குறித்த பகுதியில் காலை 8மணி முதல் மதியம் வரைக்குள் 30 உயிரினங்கள் அழிந்துபோய்விட்டிருந்தன(Extinct) எனக் கணக்கிட்டிருந்தார்கள். ஒருநாள் அந்தப் பட்டியலில் எண் ஒன்று கூடும்போது கடைசி மனிதன் இறந்துவிட்டிருப்பான்.

தான் நிரந்தனமானவன் எனும் அதி முட்டாள்தனமான மனித நம்பிக்கையின் வெளிப்பாடாக எகிப்திய மம்மிகள் காட்சியளித்தன. மண்ணோடு மண்ணாகி இயற்கையில் உறைந்துவிடுவது மட்டுமே தன் நிரந்தரத் தன்மை என்பதை உணராமல் உடலைப் பாதுகாத்து வைக்க அத்தனை சிரமப்பட்டிருக்கிறான் மனிதன். இயலாமையின் சின்னமாகக் குறுகிக் கிடக்கின்றன அந்த மம்மிகள். ஆயினும் அவற்றினூடாக மனித அறிவின் திறனையும் உணர முடிகிறது.

கல்லில் செதுக்கப்பட்டிருந்த சவப்பெட்டி ஒன்றைத் தொட்டேன். அதைச் செதுக்கியவனின் எச்சிலோ வியர்வையோ கண்ணீரோ இரத்தமோ அந்தக் கல்லின் மீது விழுந்து உறைந்திருக்கலாம். யுகங்கள் கடந்தும் அவன் வாழ்ந்துகொண்டிருக்கிறான். உள்ளிருந்த மம்மியோ வெறும் சடலமாய் கிடக்கிறது.

வழக்கம்பபோல இந்தியாவில் இத்தகைய அருங்காட்சியகங்கள் இருக்கின்றனவா? அப்படி இருப்பவை சரியாக பராமரிக்கப்படுகின்றனவா? எனும் கேள்விகள் எழுந்தன. சில நேரங்களில் ஒரு பொருளின், செயலின், கருத்தின் மதிப்பை வருந்தி உணர்த்தவேண்டியுள்ளது. அமெரிக்காவில் இவற்றிற்கு ஒரு சிறப்பான மதிப்பை உருவாக்கிவிடுகிறார்கள். பல மார்கெட்டிங் யுக்திகளும் இவற்றைச் சுற்றி நடைபெறுகின்றன. உலகிலேயே 90% முழுமையான டி,.ரெக்ஸ் எலும்புக்கூட்டைக் கொண்ட அருங்காட்சியகம் போன்ற விற்பனை யுக்திகள் துவங்கி அங்கிருக்கும் காட்சிப் பொருட்களை அமைத்திருக்கும் விதமும், அருங்காட்சியகம் செயல்படும் விதமும் முற்றிலும் சீரிய இடத்திற்கு வந்துவிட்ட உணர்வைத் தருகிறது. இங்கே ஏதோ ஒன்று தீவிரமாக நடக்கிறது எனும் உணர்வு தோன்றுகிறது, சில கோவில்களில் நுழையும்போது தோன்றுவதைப்போல.

ஒரு மாபெரும் ஜிக் சா புதிரின் சில துண்டுகள் அருங்காட்சியகங்களில் உறைநிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. விழுந்துகொண்டிருக்கும் மழைத்துளி ஒரு புகைப்படத்தில் உறைந்ததைப்போல, ஆற்றில் அடித்துவரப்பட்ட கூழாங்கல் கரையொன்றில் ஒதுங்கிவிட்டதைப்போல, உலகைச் சுற்றியடித்துவந்தக் காற்று ஒரு பலூனுக்குள் சிறையானதைப்போல, உறைந்து நிற்கின்றன காட்சிப்பொருட்கள்.

வெளியேறியபோது பூமி சுழன்றுவிட்டதில் இருள் வரத் துவங்கியிருந்தது. நகரத்தின் பரபரபில் கலந்தபோது வழக்கமான நம்பிக்கைகளுடன் காலம் மீண்டும் உயிர்பெற்றது.

Sue – http://www.fieldmuseum.org/sue/index.html

Mummies – http://www.fieldmuseum.org/cleopatra/egypt2.html

Museum – http://www.fieldmuseum.org/

Popularity: 7% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....7 மறுமொழிகள் to “உறைந்து நிற்கும் காலம்”

 1. கையேடு சொல்கிறார்:

  எழுத்தும் எண்ணமும்,உங்களது காலத்திற்கு உயிர் கொடுத்துவிட்டு எங்களது காலத்தை எடுத்துகொண்டுவிட்டது.. முழுவதும் சிறப்பாக வந்திருக்கிறது.

 2. chinnappaiyan சொல்கிறார்:

  எப்படிங்க இப்படி எழுதறீங்க?… சான்ஸே இல்லே…

  //வழக்கம்பபோல இந்தியாவில் இத்தகைய அருங்காட்சியகங்கள் இருக்கின்றனவா? அப்படி இருப்பவை சரியாக பராமரிக்கப்படுகின்றனவா? எனும் கேள்விகள் எழுந்தன//

  இங்கே இருக்குமளவுக்கு இருக்குமான்னு சந்தேகம்தான்….

 3. கிரி சொல்கிறார்:

  //மேக் அப் அணிந்துகொண்டல்ல ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டு பூமியின் முகம் மாறிவிடுகிறது. புகைப்படம் எடுத்துக்கொள்ளாத கிழவி அவள் திருமண வயதில் எப்படி இருந்திருப்பாள் என யூகம்தான் செய்ய இயலும்//

  சூப்பர் ங்க

  //வழக்கம்பபோல இந்தியாவில் இத்தகைய அருங்காட்சியகங்கள் இருக்கின்றனவா? அப்படி இருப்பவை சரியாக பராமரிக்கப்படுகின்றனவா//

  நீங்க இப்படி எல்லாம் கேள்வி கேட்க கூடாது :-) தற்போது அருங்காட்சியகங்கள் எதற்கு பயன் படுகின்றன என்று இளசுகளை கேட்டால் கூறுவார்கள், அப்புறம் பராமரிப்பு பற்றி எல்லாம்…… இதெல்லாம் நடக்க கூடிய காரியமா? ;)

  //வெளியேறியபோது பூமி சுழன்றுவிட்டதில் இருள் வரத் துவங்கியிருந்தது. நகரத்தின் பரபரபில் கலந்தபோது வழக்கமான நம்பிக்கைகளுடன் காலம் மீண்டும் உயிர்பெற்றது//

  அட்டகாசமா எழுதி இருக்கீங்க

 4. aruna சொல்கிறார்:

  கொஞ்சம் யோசிக்க வைத்த பதிவு…வாழ்த்துக்கள்
  அன்புடன் அருணா

 5. பின்னூட்டங்களுக்கு நன்றி. அலுவல் அதிகமாயிருப்பதால் இன்னும் முழுமையாக எழுத முடியவில்லை. உணர்ச்சிவயத்தில் எழுதியது என்றே சொல்வேன். குறிப்பாக மனித அறிவின் வியத்தகு சாதனைகள். எப்படி அறிவியல், ஆன்மிகம், வாழ்வியல் எனும் அடிப்படைகள் ஒரு பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளன என்பவற்றையும் அருங்காட்சியகத்தில் காண முடிகிறது.

 6. A.Thangarasan சொல்கிறார்:

  வாழ்த்துக்கள்
  A.THANGARASAN

 7. A.Thangarasan சொல்கிறார்:

  வாழ்த்துக்கள்
  A.THANGARASAN

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்