அமெரிக்கத் தேர்தல்

அமெரிக்கத் தேர்தல் முறையின் வியத்தகும் அம்சம் உட்கட்சி ஜனநாயகம். அதிபர் தேர்தலில் தன் கட்சி சார்பில் போட்டியிடுபவரை ஜனநாயக முறையில் வாக்கெடுப்பின் மூலம் கட்சி உறுப்பினர்களும், பொதுமக்களும் தேர்வு செய்கிறார்கள். மிக நீண்டதும், அதிபர் பொதுத்தேர்தலைவிட ஆர்ப்பாடமும் குழப்பமும் மிகுந்ததாக உட்கட்சி தேர்தல்கள் அமைந்திருந்தாலும் மக்கள் பிரதிநித்துவம் எனும் ஜனநாயகக் கொள்கையை இயன்றவரை செயலாக்குவதற்கான ஒரு பெரும் முயற்சி என இதைக் காண முடிகிறது.

அமெரிக்கத் தேர்தலில் இரு பெரும் கட்சிகளான குடியரசுக் கட்சி (Republican Party) மற்றும் ஜனநாயகக் கட்சி(Democratic Party) தங்கள் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க உட்கட்சி தேர்தலை நடத்துகின்றன. 2008 அதிபர் தேர்தலுக்கான குடியரசுக்கட்சி வேட்பாளராக ஜான் மெக்கெய்ன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ஜனநாயகக் கட்சியில் பராக் ஒபாமாவிற்கும் முன்னாள் முதல் குடிமகள் ஹில்லரி கிளிண்டனுக்கும் கடுமையான போட்டி நடைபெற்று வருகிறது.

ஒபாமா, ஹில்லரி இருவருமே முதல் கறுப்பின அதிபர் முதல் பெண் அதிபர் எனும் தனித்துவங்களின் பிரதிநிதிகள். இருவருக்குமிடையே குறிப்பிடத்தகுந்த கொள்கை வேறுபாடுகள் இல்லை என்பதால் இவர்களை, இவர்களின் ஆதரவாளர்களைப் பிரிப்பது இனம்(Race), பால்(Gender) எனும் இரு முக்கிய சமூகக் கூறுகள். குறிப்பாக ஹில்லரிக்கான ஆதரவு இனப் பின்னணியில் முளைத்து திளைத்தது. வெள்ளை இனத்தவரின் ஆதரவை மட்டுமே பெற்று அவர் தேர்தலில் இத்தனைதூரம் பயணம் செய்ய முடிந்தது. ஒபாமாவிற்கு எதிராக வாக்காளர் மத்தியில் இருக்கும் ஒரே பெரிய கருத்தும் இனம் மட்டுமே.

ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் அதிகம். டைம் பத்திரிகை ஒபாமாவே வெற்றியாளர் என்று அறிவித்துள்ளது. ஒபாமாவை ஹில்லரி முந்திச்செல்ல இனிவரும் தேர்தல்களில் 80% மேல் வாக்குகளை அவர் பெற்றாக வேண்டும். இது சாத்தியமே அல்ல. ஹில்லரிக்கான அடுத்த வாய்ப்பு ஜனநாயகக் கட்சியின் சூப்பர் டெலெகேட்ஸ் எனும் சிறப்பு கட்சி பிரதிநிதிகளின் வாக்குகள் வழியாக வரலாம்.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தேர்தல் முறை பொதுவான உட்கட்சி தேர்தல்களில் துவங்குகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அவை முந்தைய தேர்தல்களில் கட்சிக்குத் தந்த ஆதரவை முன்வைத்து டெலெகேட்ஸ்(Delegates) எனப்படும் பிரதிநிதிகள் வழங்கப்படுகின்றனர். இந்தப் பிரதிநிதிகள் இறுதியாய் நடக்கும் கட்சியின் மாநாட்டில்(Convention) வாக்களிப்பவர்கள். பொதுவாக தன் பகுதி மக்கள் எந்த அதிபர் வேட்பாளருக்கு வாக்களித்தனரோ அந்த வேட்பாளருக்கே இவர்களும் வாக்களிப்பது வழக்கம். இது சட்டமல்ல. மரபு. இப்படி வழங்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் மேலாக சில முக்கிய கட்சி பிரமுகர்களுக்கும், தற்சமயம் சிறப்பு பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆளுக்கு ஒரு வாக்கு வழங்கப்படுகிறது. இவர்கள் ‘சூப்பர் டெலெகேட்ஸ்’. இவர்கள் தங்கள் வாக்குகளை தங்கள் விருப்பப்படி அளிக்கலாம். ஒபாமாவிற்கு சூப்பர் டெலெகேட்ஸ் ஆதரவு அண்மையில் ஹில்லரியை விட அதிகமாகியது. மீதமிருக்கும் சூப்பர் டெலெகேட்ஸ் அனைவரின் வாக்கையும் ஹில்லரி பெற்றாலொழிய ஹில்லரிக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை.

ஊடகங்களும் அரசியல் பண்டிதர்களும் ஹில்லரி வெற்றிபெற இயலாது என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். எதிரணியான குடியரசுக் கட்சியும் ஒபாமாவையே எதிரணி வேட்பாளராக பாவித்து பிரச்சார பீரங்கியை அவர்பக்கம் திருப்பி விட்டிருக்கிறது. எனவே ஒபாமா மெக்கெய்ன் மோதலில் வரும் பொதுத்தேர்தலை அதிகம் பாதிக்கும் பிரச்சனைகளாக கீழ்கண்டவற்றைச் சொல்லலாம்.

அனுபவம் - ஒபாமாவிற்கு எதிரான வாதங்களில் அதி முக்கியமானது அவரின் அனுபவமின்மையே. ஜான் மெக்கெய்ன் 1982 முதல் தீவிர அரசியல் ஈடுபாடுள்ளவர். 1982 அரிசோனா மாநிலத்திலிருந்து செனெட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்ந்து முக்கிய குடியரசுக்கட்சி தலைவராக இருந்து வருகிறார். ஒபாமா எட்டு வருடங்களாக இல்லினாய் மாநில அவையிலும் இரண்டு வருடங்களாக அமெரிக்க செனட்டிலும் பங்குபெற்றுள்ளார். ஜார்ஜ் புஷ் அதிபராகும் முன் டெக்சாஸின் ஆளுநராக 6 வருட அரசியல் அனுபவமே கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹில்லரியும் மற்றொரு முக்கிய ஜனநாயகக் கட்சி முனாள் வேட்பாளர் ஜான் எட்வர்ட்சும் 6 வருட செனட் அனுபவமுடையவர்கள். ஒபாமாவின் அனுபவமின்மை ஒரு முக்கிய விவாதப் புள்ளியாக அமையும். ஆயினும் உட்கட்சி தேர்தல்களுக்கு முன்புவரை ஒரு பொருட்டாகவே மதிக்கப்படாத ஒபாமா உட்கட்சித் தேர்தலில் தொடர் வெற்றிகளைப் பெற்று முன்னணியில் இருப்பது மக்கள் மனதில் அவரின் திறன் குறித்து திருப்தியை உருவாக்கியுள்ளது. அனுபவமின்மையை அவர் திறமையுடன் செயல்படுவதாலும், திறமையுள்ளோரைத் துணைகொள்வதாலும் எதிர்கொள்கிறார்.

இனம் - அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் 13 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளனர். வேறெந்த பெரிய நாட்டைப் போலவே அமெரிக்காவும் நகர, கிராம கலாச்சாரங்களைக் கொண்டது. கிராம, விவசாய, ஆலைகளில் அடிமட்ட வேலைகளை செய்யும் வெள்ளை இனத்தவர் மத்தியில் கறுப்பினத் தலைவரை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு இல்லை. குடியரசுக் கட்சி பரவலாக வெள்ளை இனத்தவரின் கட்சியாக ஜான் கென்னடி காலத்தில் உருமாறியது. கிறீத்துவ அடிப்படைவாதிகளின் கட்சியாகவும் அது காணப்படுகிறது. இன வேற்றுமையின் அடிப்படையில் அதன் வாக்காளர் களம் அமைந்துள்ளதை பரவலாகக் காணலாம். ஹில்லரிக்கு கிடைக்கும் வாக்குகள் அவருக்கு ஆதரவான வாக்குகள் என்பதை விட ஒபாமாவுக்கு எதிரான வாக்குகள் என்றே சொல்லலாம்.

ஜான் எட்வர்ட்ஸ் எனும் வெள்ளையின ஆதரவு உள்ள முன்னாள் வேட்பாளர் ஒபாமாவிற்கு ஆதரவைத் தெரிவித்துள்ளார். எட்வர்சின் ஆதரவாளர்கள் பலரும் ஒபாமாவுக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர். ஆனாலும் ஹில்லரியின் முழுமனதான ஆதரவுடன், அவரின் பிரச்சாரத்துடன் மட்டுமே வெள்ளை வாக்காளர்களை ஒபாமா கவர இயலும். அப்படி முழுமனதான ஆதரவு அவருக்கு ஹில்லரி வழங்குவாரா என்பது சந்தேகத்துக்குரியது. வெற்றி மிகவும் அரிதுதான் எனத் தெரிந்தும் ஹில்லரி உட்கட்சி தேர்தலில் நீடித்திருப்பது தனக்கில்லையென்றாலும் ஒபாமாவுக்கு பதவி கிடைக்கக் கூடாது என்பதற்காகவே எனும் கூற்றும் உருவாகியுள்ளது. ஒபாமா இந்தத் தேர்தலில் தோற்றால் 2012 தேர்தலில் ஹில்லரிக்கு வெற்றி நிச்சயம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்வைத்தே காய் நகர்த்துகிறார் ஹில்லரி என்பது சில பண்டிதர்களின் கருத்து.

அமெரிக்காவில் இன்னொரு குறிப்பிடத் தகுந்த சிறுபான்மையினர் ஹிஸ்பானிக்ஸ் என அழைக்கப்படும் தென்னமெரிக்கர்கள். குறிப்பாக மெக்சிகோவிலிருந்து வந்தவர்கள். இவர்களுக்கும் கறுப்பினத்தவர்களுக்குமிடையேயான இணக்கமின்மை ஒபாமாவை பாதிக்கும் வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க ஒபாமா பில் ரிச்சர்ட்சன் போன்ற ஹிஸ்பானிக் தலைவர்களை கூட்டு சேர்த்துள்ளார்.

வயது - மெக்கெயினுக்கு எதிரான முக்கிய வாதங்களில் ஒன்று அவரது வயது. 71 வயதாகும் மெக்கெய்ன் அதிபரானால் அதிக வயதில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமெரிக்கர் ஆவார். முன்பைவிட இந்தத் தேர்தலில் இளைஞர்களின் ஈடுபாடு அதிகமிருக்கிறது. இது ஒபாமாவினால் ஏற்பட்ட அலை. மெக்கெயினின் வயதும் உடல்நிலையும் அவரின் தோல்விக்கு காரணமாக அமையலாம். ஈராக்கில் அல் கொய்தா, ஈரான் குறித்து மறதியில் அவர் வெளியிட்ட சில தகவல்கள் அவர் வயதின் காரணமாக என அவருக்கு எதிராக நிச்சயம் மேலெழும்பும்.

பொருளாதாரம் - அமெரிக்கப் பொருளாதாரம் இறங்கு நிலையிலுள்ளது. வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கித்துள்ளது. வீடுகளின் மதிப்பு குறைந்துபோய் பணச்சந்தை(Financial Services Market) படும் வீழ்ச்சியை சந்திதுள்ளது. டாலரின் மதிப்பு குறைந்துள்ளது. பெட்ரோல் விலை அதிர்ச்சியூட்டும்வகையில் உயர்ந்துள்ளது. அடுத்து வரும் அதிபர் யாரானாலும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவது மாபெரும் சவாலாக அமையும். ஜான் மெக்கெய்னின் பொருளாதாரக் கொள்கைகள் ஜார்ஜ் புஷ்ஷின் கொள்கைகளை ஒத்திருக்கிறது. வரி விலக்குகளை வாரி வழங்கி கஜானாவை கடனுக்குத் தள்ளியது ஜார்ஜ் புஷ்ஷின் அரசு.

ஒபாமாவின் பொருளாதாரத் திட்டம் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு அதிக வரிவிலக்கு வழங்கும் திட்டம். புஷ் அறிவித்திருந்த மேல்தட்டு வரிவிலக்குத் திட்டங்களை ஒபாமா திரும்பப்பெறப்போவதாக அறிவித்துள்ளார். ஜான் மெக்கெய்னோ புஷ் வழங்கிய வரிச் சலுகைகளை நிரந்தரமாக்குவதை கொள்கையாகக் கொண்டுள்ளார். வெளிநாடுகளுக்கு அமெரிக்கர்களின் வேலைகலை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகைகளை திரும்பப்பெறப்போவதாக ஒபாமா தெரிவித்துள்ளார். இது நடந்தால் இந்திய மென்பொருள் மற்றும் தொலைஅலுவலகம்(Back office) மற்றும் கால் செண்டர் துறைகள் பாதிப்படைய வாய்ப்புண்டு.

ஈராக் - அமெரிக்க பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு இன்னொரு காரணம். மாதம் 8 பில்லியன் டாலர்களை விழுங்கிக்கொண்டிருக்கிறது ஈராக் போர். பராக் ஈராக்கிற்கு அமெரிக்க சென்றிருக்கவே கூடாது என்பதில் உறுதியாயிருக்கிறார். இதுவே தற்போது பரவலாக அமெரிக்க மக்களின் எண்ணமும். சி.என்.என் ஜனவரியில் நடத்திய கணிப்பின்படி 33% அமெரிக்கர்களே ஈராக் போரை ஆதரிக்கிறார்கள். ஜான் மெக்கெய்ன் ஈராக்கை சரிசெய்ய நூறுவருடங்களானாலும் வெளியேற மாட்டோம் என அறிவித்தார். ஒபாமா ஈராக்கிலிருந்து விரைவில் வெளியேற விரும்புகிறார். ஆட்சி துவங்கி 16 மாதங்களில் அமெரிக்கப் படையை ஈராக்கிலிருந்து வெளியேற்ற திட்டம் வைத்துள்ளதாக ஒபாமா தெரிவிக்கிறார். மெக்கெய்னோ அமெரிக்கப் படை ஈராக்கிலிருந்து வெளியேற கால நிர்ணயம் செய்வதையே எதிர்க்கிறார். 2013 வாக்கில் அதிகபட்ச படைகள் ஈராக்கிலிருந்து வெளியேற்றப்படும் என யூகிக்கிறார்.

வெளியுறவு - அண்மையில் இஸ்ரேலில் பேசிய ஜார்ஜ் புஷ் ஒபாமா தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக குற்றம் சாட்டினார். ஜான் மெக்கெய்னும் ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கைகள் அழுத்தமாக இல்லை என்பதை கூறிவருகிறார். ஈரானையும், பாலஸ்தீனத்தையும் தீவிரவாத நாடுகள் என புஷ்ஷும் மெக்கெயினும் முத்திரை குத்துகிறார்கள். ஒபாமாவோ அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முதலில் முயலவேண்டும் என்கிறார். ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கை முதலில் பேச்சுவார்த்தைகளுக்கு இடம் தருவது அவை தோற்றுப்போகையில் போர்புரிவது என்பதாக உள்ளது. ஆனால் ஜார்ஜ் புஷ்ஷின் வழியில் ஈராக்கை முன்னெச்சரிக்கையாக தாக்கி சதாமை அழிப்பதை ஆதரித்த மெக்கெய்ன் கண்டிப்பான கட்டுப்பாடுகளுக்குட்பட்டே பேச்சுவார்த்தைகளைத் துவங்க முன்வருவேன் எனத் தெரிவிக்கிறார்.

சுகாதாரக் கொள்கை - அமெரிக்க தேர்தல்களில் முக்கியமாகவும், மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றதாகவும் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று அரசின் சுகாதாரக் கொள்கை. அமெரிக்காவில் மருத்துவச் செலவுகள் அதிகமாகையால் மருத்துவக் காப்பீடு இன்றி மருத்துவம் பெறுவது மிகவும் கடினம். காப்பீடு பெற இயலாத ஏழை மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகளைப் பெற இயலாத நிலை உள்ளது. இதை சரி செய்ய வேண்டிய தேவை முன்பைவிட அதிகரித்துள்ளது. ஒபாமா குழந்தைகளுக்கு காப்பீடு பெறுவதை கட்டாயமாக்கப் போவதாக அறிவித்துள்ளார். எல்லோருக்கும் காப்பீடு வாங்கும் வாய்ப்பை அரசின் நடவடிக்கைகள் மூலம் உருவாக்க இயலும் என நம்புகிறார். மெக்கெய்ன் கட்டாயமாக்குவதில் நம்பிக்கையில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஜார்ஜ் புஷ் - ஜான் மெக்கெய்ன் இந்தத் தேர்தலுக்கு முன்புவரை குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகளின் இணைப்புப் பாலமாக பார்க்கப்பட்டு வந்தார். தன் கட்சியின் பல கொள்கைகளை எதிர்த்து குரல் கொடுத்தவர் மெக்கெய்ன். அமெரிக்க அரசின் பல செயலாக்கங்களில் ஜனநாயகக் கட்சியினரோடு இணைந்து செயல்பட்டவர் மெக்கெய்ன். இதனால் அவருக்கு ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவும் இருக்கும் நிலை இருந்துவந்தது.

ஆனால் ஜான் மெக்கெய்ன் புஷ்ஷின் நிழலில் ஒதுங்கத் துவங்கியதிலிருந்து நடுநிலை முகமூடி கிழிக்கப்பட்டு புஷ்ஷின் கையாளாக மெக்கெய்ன் வர்ணிக்கப்படுகிறார். மெக்கெய்னுக்கு எதிரான ஜனநாயகக் கட்சியின் பிரச்சார முழக்கம் ‘மெக்கெய்னின் ஆட்சி இன்னும் நான்கு வருட புஷ் ஆட்சி’ என்பதேயாகும். இதை நிரூபிப்பதைப்போல இருவரும் ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கையை ஒரே குரலில் ஒரே வார்த்தைகளில் குறைகூறியுள்ளனர். புஷ்ஷின் வரி விலக்குக் கொள்கைகளை நிரந்தரமானதாகச் செய்யப் போவது, ஈராக் போரை தொடர்வது, ஈரானை, ஹமாசை பேச்சுவார்த்தைக்கு இடமில்லாத எதிரிகளாகப் பாவிப்பது என மெக்கெய்னுக்கும் ஜார்ஜ் புஷ்ஷுக்குமான ஒற்றுமைகள் ஏராளம். இது மெக்கெய்னுக்கு எதிரான முக்கிய பிரச்சாரமாய் அமையும்.

வேட்பாளர்களின் ஆளுமை - வயது, இனம், கொள்கைகளை தவிர்த்த வேட்பாளரின் ஆளுமை குறித்த அலசல்கள் அமெரிக்க அதிபர் தேர்வில் முக்கியமானதாக விளங்குகிறது. ஒபாமாவின் எழுச்சியூட்டும் பேச்சுத் திறன் அவருக்கு மிகவும் கைகொடுத்துள்ளது. ஜார்ஜ் புஷ்ஷின் குளறல்களுக்கும், நகைப்புக்குரிய உளறல்களுக்கும் ஒபாமாவின் வியத்தகும் பேச்சுத் திறன் மாற்றாக அமைந்திருக்கும். அதே சமயம் ஜான் ரைட் எனும் சர்ச்சைக்குரிய மதபோதகருடனான தொடர்பு, மேட்டிமை(Elite) மனப்பாங்குடைய பேச்சு என சில ஆளுமைச் சிக்கல்களுக்கு ஒபாமா ஆளானார். இவை மீண்டும் பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின்போது விவாதிக்கப்படும்.
ஜான் மெக்கெய்னைப் பொருத்தவரை அவருக்கு ஆதரவு தெரிவித்த மதபோதகர் கத்தோலிக்க மதத்தை தரக்குறைவாகப் பேசியது ஜான் ரைட்டின் ஏச்சுக்கு இணையாக பார்க்கப்படுகிறது. இவரது நடுநிலையான அரசியல் ஆளுமை சந்தேகத்துக்குரியதாக்கப்படும். ஜார்ஜ் புஷ்ஷுக்கு ஒத்த ஆளுமையாக இவர் வர்ணிக்கப்படுவார். இது குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் விலைபோனாலும் நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் செல்லாமல் போகும்.

அமெரிக்கத் தேர்தல்களில் ஊடகத்தின் பங்களிப்பு இன்னொரு சிறப்பம்சம். போட்டியாளர்களுக்கிடயே விவாதங்களை(Debates) நடத்துவது, பொதுமக்களையும் வேட்பாளர்களையும் கலந்துரையாடச் செய்வது, வேட்பாளர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனிப்பது என மிகச் சிரத்தையுடன் ஊடகங்கள் செயல்படுகின்றன. வேட்பாளர்களின் பிறப்பு முதல் அவரின் தனிப்பட்ட மற்றும் பொதுவாழ்க்கை முழுவதுமாக வெளிக்கொண்டுவரப்பட்டு ஊடகங்களால் அலசப்படுகிறது. இத்தேர்தலில் இணைய வழி பிரச்சாரம் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக யூ ட்யூப் போன்ற இணைய சேவைகளின் வழியே சாதாரண அமைப்புக்களும், மக்களும் தங்கள் எதிர்ப்பையும் ஆதரவையும் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு வேட்பாளரும் தங்கள் இணைய தளங்கள் வழியே மக்களை அணுகவும் நிதி திரட்டவும் செய்கின்றனர்.

ஒப்பீட்டளவில் அமெரிக்க அரசியலுக்கும் இந்திய அரசியலுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. தேர்தல் நேரத்தில் வாக்காளன் மகுடம் சூட்டப்பட்டு அரசனாக்கப்படுகின்றான். பின்னர் மக்களின் குரலுக்கு மதிப்பில்லாமல் போகிறது. குறிப்பாக ஈராக் போருக்கு மக்களின் ஆதரவு குறைந்து வருவதையோ அல்லது புஷ்ஷின் அரசுக்கு ஆதரவு கவலைகொள்ளும்படி குறைந்து வருவதையோ யாரும் கணக்கில் கொள்வதில்லை. துணை அதிபர் ஒரு பேட்டியிலேயே ‘மக்களுக்கு பிடிக்கவில்லையென்றால் என்ன?’ எனக் கேள்வி எழுப்பினார்.

இந்தியாவின் சாதி, மதம் சார்ந்த அரசியல் விளையாட்டுக்கள் அமெரிக்காவில் அத்தனை வெளிப்படையாக இல்லையென்றாலும் தேர்தல் இயக்கத்தில்(Dynamics) அதன் பங்கு முக்கியமானது. அதுவும் ஒரு கறுப்பினத்தவர் முன்னணியில் நிற்பது இனம் சார்ந்த அரசியல் களமாக அமெரிக்கத் தேர்தல் களத்தை மாற்றியுள்ளது. அமெரிக்க கிறீத்துவ பழமைவாதிகளின் அரசியல் ஈடுபாடு குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளில் இந்த மதபோதகர்கள் மக்கள் மத்தியில் அதிகாரமுள்ளவர்கள்.

படித்தவர்கள் படிக்காதவர்கள் என வலதும் இடதுமாய் அமெரிக்க வாக்காளர் தொகை பெரிதும் பிரிந்து கிடக்கிறது. படித்தவர்கள், இடதுசாரி சிந்தனையுடையவர்கள், இளைஞர்கள் ஒபாமாவை ஆதரிப்பதும் பிறர் ஹில்லரி அல்லது மெக்கெய்னை ஆதரிப்பதும் இந்தத் தேர்தலில் தெளிவாகப் புலப்படுகிறது. இந்தப் பிரிவினைகளைத் தாண்டி, மரபுக்கும் புதுமைக்குமான இந்தப் போட்டியில் ஒபாமா அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபராவாரா அல்லது புஷ்ஷின் நிழலாகவே தெரியும் ஜான் மெக்கெய்ன் வெற்றிக்கனி பறிப்பாரா என்பதை நவம்பரில் தெரிந்து கொள்ளலாம்.

=============
வடக்குவாசல் ஜூன் 2008 இதழில் வெளிவந்த கட்டுரை.

Popularity: 7% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....9 மறுமொழிகள் to “அமெரிக்கத் தேர்தல்”

 1. Amal சொல்கிறார்:

  Good Analysis!

 2. நன்றி அமல்.

 3. நல்ல அலசல்.இன்று ஹில்லரி தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார்.ஒபாமாவுக்கு வெள்ளை மாளிகைக் கதவு கூடிய சீக்கிரம் திறக்கப்படப்போகிறது.

 4. Vijay சொல்கிறார்:

  மிக நல்ல அலசல். ஒரே ஒரு சிறு திருத்தம். அமெரிக்க மாநிலங்களை பொதுவாக “மாகாணம்” என்று தமிழ் மீடியாக்கள் வழங்குகின்றன.

  என்னதான் ஜனநாயக முறைப்படி நடத்தப்படும் உட்கட்சித் தேர்தல் என்றாலும், இதிலும் மீடியாவின் பங்கு ஓங்கியே காணப்படுகிறது. குறிப்பாக, பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியின் ஆதரவு மிகவும் அவசியம். ரான் பால், டென்னிஸ் குசினிச் போன்ற சில நல்ல வேட்பாளர்கள், மீடியாக்களால் ஒதுக்கப்பட்டது சற்றே வருத்தத்தக்கது தான்.

  ஆயினும் ஒபாமா ஜனநாயக கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் வரவேற்கத்தக்கது தான். அவரே அமெரிக்க அதிபராக வருவார் என்று நான் நம்புகிறேன்.

 5. ஜோ சொல்கிறார்:

  நிறைய தெரிந்து கொண்டேன் ..நன்றி சிறில்!

 6. பின்னூட்டங்களுக்கு நன்றி.

  மகாணம் – மாநிலம் நான் மாறி மாறி பயன்படுத்துகிறேன். ஒரு ஒப்பீட்டுக்காகவே மாநிலம் பயன்படுத்தினேன். இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என எனக்கு பிடிபடவில்லை.

  ஜோ. நெடுநாள் கழித்து உங்கள் பின்னூட்டம். நன்றி :)

 7. […] சிறில் அலெக்ஸ்: அமெரிக்கத் […]

 8. S.Prem Prakash சொல்கிறார்:

  Very well written article, clarifies lot of things…

 9. vijay சொல்கிறார்:

  thodarthu eyankungal

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்