பூனை

கடற்கரையில் மணலைப் பரப்பி லுங்கியால் முகம்வரை மூடிக்கொண்டு படுத்திருந்த மோட்சம் தட்டி எழுப்பப்பட்டான்.

“லே.. மோச்சம்.. ஏல.. எழும்பு. ஒம் பொண்டாட்டிக்கு வலி வந்தாச்சாம். ஒங்காத்தா கூப்பிடச் சொன்னாவு.”

அதிகாலை மெல்லிருளில் எழுப்பியது யார் எனக் கூட பார்க்காமல் வீட்டை நோக்கி வேகமாய் நடந்தான் மோட்சம்.

மோட்சத்திற்கு கல்யாணமாகி மூன்று வருடங்கள் இருக்கும். கேரளாவில் முதலில் பார்த்த பெண் வெளுப்பாயிருந்தாள் என்பதாலும் மணவாளக் குறிச்சி திண்ணை ஜோசியக்காரர் ‘பொருத்தம் கச்சிதம்’ என்றதாலும் உள்ளூர் சம்பந்தங்களை விலக்கினான். ஒரு வருடம் ஊரெல்லாம் பெண் பார்த்துவிட்டு அவன் தந்தை பொனிப்பாஸ் எரிச்சலுடன் கேட்டார்,” எல கல்யாணம் கட்டுதியா இல்லியா?” அப்போதுதான் உண்மையைச் சொன்னான். ஒரு வருடத்துக்குள் மூன்று முறை கேரளா சென்று வந்திருந்தான் என்பதைக் கேள்விபட்டபின் பொனிப்பாஸ் பேசுவதற்கு எதுவுமில்லை என உணர்ந்தார். மோட்சத்திற்கும் கீதாவுக்கும் திருமணம் நடந்தது.

திருமணத்திற்குப் பின் மோட்சத்தின் மீன்பிடித் தொழில் சீரடைந்தது. அது மனைவி வந்ததன் ராசிதான் என மோட்சம் நம்பினான். மோட்சத்தின் அம்மா லேனம்மாள் அந்த நம்பிக்கையை அலட்சியப் படுத்துவாள்,”கல்யாணங் கட்டதுக்கு முன்ன நீ சம்பாரிச்சதயெல்லாம் சினிமாக்கு கூட்டாளிக்கும் டூருக்கும்ணு செலவு செஞ்ச.. இப்ப அவ சேத்து வைக்கா. அதாம்புல. ராசியாம் ராசி.” என்பாள்.

இரண்டு வருடங்கள் கழிந்து அவள் வயிற்றில் ‘புள்ளை பூச்சி’ உருவாகாதது குறித்த பேச்சுக்கள் முனகல்களாயிருக்கும்போதே அவள் கருத்தரித்தாள். டாக்டர் “இவங்க வீக்காயிருக்காங்க. கம்ப்ளீட் ரெஸ்ட் வேணும். இல்லைண்ணா பிள்ளையா தாயாண்ணு ஆயிரும்.” என எச்சரித்ததன் பேரில் தலைப் பிரசவம் மாமியார் வீட்டிலேயே என முடிவானது.

மோட்சம் வீட்டுக்கு வெளியே இருந்த பானையிலிருந்து தண்ணீரெடுத்து முகம் கழுவி. கடல் மண்ணைக் கொஞ்சம் கையிலெடுத்து பல்லை லேசாகத் தேய்த்து கொப்பளித்துவிட்டு வீட்டில் நுழைந்தபோது லேனம்மாள் பதட்டமாய் பேசினாள்,”மோச்சம்.. இங்கனோடி தூங்கப்புடாதா? நெறமாசக் கப்புனக்காரி வீட்ல இருக்காண்ணு ஒரு கருத்துண்டா?”

தாயை பொருட்படுத்தாமல் கட்டிலில் வலியில் முனகிக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்தான்.
“ஆஸ்பத்ரிக்குப் போமா?”

கீதா இடுப்பில் கையை வைத்து, முகத்தை சுளித்துவிட்டு ஆம் எனத் தலையாட்டினாள்.

“அப்பா கார் கூப்டப் போயிருக்கு. நீ மாமா வீட்டுக்குப் போயீ செல்ல வாங்கிட்டு வந்திரு.” லேனம்மாள் இன்னும் பதட்டத்திலேயே இருந்தாள்.

லேனம்மாளுக்கு குழந்தை பிறப்பு அவள் தோழிகளைப்போல பழக்கமானதாயில்லை. அவர்களெல்லாம் ஆறு ஏழு என பெற்றுக்கொண்டபோது இவளுக்கு ஒன்றே ஒன்றுதான் வாய்த்தது.

மோட்சம் மாமா வீட்டுக்குப் போய் செல்ஃபோனை வாங்கிவிட்டு வந்து வேட்டிக்கு மாறியிருந்தபோது பொனிப்பாஸ் வந்தார், “கார் வந்தாச்சு. எங்கடே போயிருந்த?”

மோட்சம் அப்பாவின் கோபக் கேள்வியை வழக்கம்போல பொருட்படுத்தவில்லை.

“நீயும் அம்மையும் இப்ப போங்க. நாலுபேராப் போக்கூடாது. உச்சைக்கி(மத்தியானம்) நான் சாப்பாட்டோட வாறேன்.”

மனைவி கீதாவை கைத்தாங்கலாய் அழைத்து வீட்டுக்கு வெளியே வந்தபோது கருப்பு பூனை ஒன்று குறுக்கே ஓடியது.

“சவம் இந்த நேரத்துலியா? கட்டக் கரேல்னு பூன. எங்கவுள்ளதுல?” மோட்சம் எரிச்சலடைந்தான். ‘ஏற்கனவே டாக்டரு அதையும் இதையும் சொல்லியிருக்காரு.’ கருப்பு பூனை மோட்சத்தின் மனதைக் குறுக்கிட்டது.

திண்ணையில் மனைவியை உட்காரச் சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று வேளாங்கண்ணி ‘மாதா குப்பி’ எண்ணையை எடுத்து நெத்தியில் தேய்த்துவிட்டு. கொஞ்சம் கையில் எடுத்து வந்து மனைவி நெற்றியில் சிலுவை போட்டான். கழுத்தில் கிடந்த ஜெபமாலையை மனைவி கழுத்தில் இட்டான்.

“எல வா சீக்கிரம். கருப்பு பூன குறுக்கப் போனா தரித்திரம்ண்னு பைபிள்லயா சொல்லியிருக்கு?” லேனம்மாள் அவசரம் காட்டினாள். லேனம்மாளின் ஞானமுள்ள கேள்விகள் பலவும் ‘பைபிள்லயா சொல்லீருக்கு?’ என முடிவது வழக்கம்.

ரோட்டில் வந்து காரில் ஏறும் முன்பு கீதாவிற்கு வலி அடிக்கடி வர ஆரம்பித்திருந்தது. கார் நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்குச் செல்ல இன்னும் அரை மணி நேரமாகும். கீதா பல்லைக் கடித்துக்கொண்டு, தீனமாய் “அம்மே.. அம்மே” என முனகிக்கொண்டிருப்பது இந்த அரைமணி நேரப் பயணம் கடினமாய் இருக்கப்போகிறது என்பதை உணர்த்தியது.

லேனம்மாள் மருமகளின் கையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஜெபம் படிக்கத் துவங்கியிருந்தாள். “அருள் நிறைந்த மரியே வாழ்க. ஆண்டவர் உம்முடனே. பெண்களுக்குள்…. லேய் மோச்சம் ஆஸ்பத்ரிக்கு ஃபோன் போட்டியா?”

“அடிக்குது எடுக்கமாட்டேங்கான்.”

நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் கம்பௌண்டர் எட்வர்ட் ரத்தினம் மோட்சத்தின் கூட்டாளி. தன்னோடு வேலை பார்த்த வேற்று சாதிக் கிறீத்துவ பெண்ணைக் காதலித்து, மோட்சம் உட்பட்ட நண்பர்களின் உதவியால் திருமணம் செய்துகொண்டான். அவன் அப்பா ‘தாயளி நீ எம் புள்ளையில்லல.’ என அடித்து விரட்டியபின் ஊர் பக்கம் வருவதேயில்லை எட்வர்ட்.

பின்சீட்டில் கீதாவின் சத்தம் அதிகமாகியது. “இயேசுவே… இயேசுவே.. அம்மே…” அழுத்தமாகவும் சப்தமாகவும் மூச்சு விட்டுக்கொண்டிருந்தாள். இரண்டு மூன்று நிமிடங்களுக்கொருமுறை அவள் வலியில் துடிப்பதும், லேனம்மாள் செபமாலையால் அவள் வயிற்றைத் தடவுவதுமாய் காருக்குள் பதட்டம் அதிகரித்தது.

கருப்புப் பூனை மோட்சத்தின் மனதில் மீண்டும் குறுக்கிலோடியது. ‘சவம்.. சவம்’ மனதில் திட்டினான்.

மோட்சத்தின் கருப்பு பூனை குறித்த பயம் அவன் மாமாவிடமிருந்து வந்தது. சிலுவைப் பிள்ளை இதுபோன்ற நம்பிக்கைகள் அதிகமுள்ளவர். மோட்சத்துக்கு ஒரு பெண்பார்க்கக் கிளம்பும்போது யாரோ ஒற்றைத்தும்மல் போட, “இனி போனா ஒரு காரியமும் வெளங்காது.” என அந்த சம்பந்தத்தையே வேண்டாம் என்றார். சிலுவைப் பிள்ளைக்கு இது ஒரு தொழில் போலவே இருந்தது. மோட்சத்திற்கு திண்ணை ஜோசியருடனான பழக்கமும் சிலுவைப் பிள்ளையின் வாயிலாகவே உருவானது. சகுனம் சொல்வதும், சகுனத்திற்கு பரிகாரம் சொல்வதும், நல்ல நாள், நல்ல நேரம் பார்ப்பதும் என ஊரில் ஒரு ஜோஸ்யக்காரர் போலவே இருந்தார் சிலுவைப் பிள்ளை. எல்லாம் கட்டி அட்டை காலண்டர் தயவுதான்.

செல்ஃபோனில் எட்வர்ட் ரத்தினம் வந்தான்.
“டேய் மோச்சம் சொல்லு என்னாச்சு?”

“இவளுக்கு வலி வந்து.. கார்ல வந்துட்டிருக்கோம் பாத்துக்க.. இன்னும் இருபது நிமுசத்துல வந்துருவோம்.”

“சரி வா, நான் இங்க ரெடி பண்ணுதேன். எப்டி இருக்கா அவ?”

“தெரியில. கொஞ்சம் டென்சனாத்தான் இருக்கு.”

“சரி. வா.. செட்டி கொளத்துல 8 மணிலேந்துதான் ஒன் வே. அதனால அங்கனோடியே வரச்சொல்லு டிரைவர.”

செல்ஃபோனை வைத்துவிட்டு மனைவியை பார்க்கத் திரும்பினான். அவள் கண்களை மேல்நோக்கிச் சொருகி மூர்ச்சையாயிருந்தாள்.

“ஏ.. ஆத்தா அவளப் பாரு. நெனைவில்லாம கெடக்கா.”

லேனம்மாள் கீதாவை எழுப்ப முயன்றார். “ஏ மக்கா.. ஏ கீதா.” கீதா எழும்பவில்லை. “ஏசு மாரியா என் சூசே ரச்சியும்… ட்ரைவரு செணம்(சீக்கிரம்) போவும்.”

டிரைவர் தண்ணி பாட்டிலை எடுத்துத் தர கீதாவின் முகத்தில் அடித்தான் மோட்சம். “கீதா.. ஏ கீதா..” கத்தினான்.

முனகலோடு விழித்தாள் கீதா.

“மக்கா.. செணம் போணும்.. இயேசுவே.. ஏசுமரியா என் சூசே..”

“எத்தான்.. தாங்க முடியலியே. எத்தாங்..” கீதா கண்ணீருடன் கதறினாள். மோட்சத்திற்கு அவளிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“டிரைவர்.. வேகமாப் போவும்.”

கீதா மயங்கி லேனம்மாள் மேல் சாய்ந்தாள். வண்டி நாகர்கோவில் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தபோது அங்கே எட்வர்ட் ஸ்ட்ரெச்சர் சகிதம் காத்திருந்தான்.

கீதாவை இறக்கி ஸ்ட்ரெச்சரில் வைத்தபோது அவள் சேலை நனைந்திருந்தது

“எப்ப வலி வந்துச்சு? கன்னி கொடம் ஒடஞ்சிருச்சு.. சீக்கிரமே வரப்புடாதா..?” எட்வர்ட்டின் தீவிரம் மோட்சத்திற்கு மேலும் அச்சத்தை தந்தது.

ஐ.சி.யுவிலிருந்து கீதா கதறிக் கொண்டிருந்தாள். லேனம்மாள் வெளியே காலியாயிருந்த பெஞ்சிற்கு பக்கத்தில் கீழே அமர்ந்து ஜெபமாலையை உருட்டிக்கொண்டிருந்தாள்.

மோட்சம் மனைவியின் கதறலைக் கேட்கத் தாளாமல் வெளியே வந்தான். டிரைவர் பீடியை பற்றவைத்துக் கொண்டு நின்றிருந்தார்.

“வண்டி பழசானாலும் சரியா இருபத்தஞ்சு நிமிஷத்துல வந்தாச்சு. அவிய மயங்குனதும் பயந்துட்டேன். கொஞ்சம் சீக்கிரமா கெளம்பிருக்கலாம். கார் சீட் பூரா ஈரம்.”

மோச்சம் டிரைவரிடம் பீடி வாங்கி பற்றவைத்தான்.

“என்ன வெளிய வந்துட்டீய?” டிரைவர் கேட்டார்.

“அவ கதறுதா. என்னா சத்தம். பயமால்லா இருக்கு..”

“சும்மாவா. அவ்ளோ பெரிய புள்ள. கிழிச்சிட்டுல்லா வரும்.” .

“கிழிச்சுட்டா? எதக் கிழிச்சிட்டு?”

“அதான்…மத்தத.” சங்கடமாய்ச் சொன்னார் டிரைவர்.

டிரைவர் சொன்னதை மோட்சம் உள்வாங்கிக் கொள்ளும் முன் உள்ளிருந்து கீதாவின் கதறல் கேட்டது. ‘இது வேறொருத்தியோ?’ என நினைத்தான் மோட்சம். டிரைவர் கார் சீட்டை பேப்பரால் துடைத்துக் கொண்டிருந்தார்.

‘ஒரு காரியமும் உருப்படாதுல.’ கருப்பு பூனை குறித்து மாமா சொன்னது மீண்டும் நியாபகத்துக்கு வந்தது. ‘சாத்திரம்ணா சும்மாவா.. எத்தன ஆயிரம் வருசமா இருக்க விசயம்.’

‘ஊருக்குப் போனதும் தாயோழி பூனையக் கொல்லணும்.’

“மோச்சம்…”, தூரத்தில் மருத்துவமனை வாசலிலிருந்து எட்வர்ட் கைதட்டி கூப்பிட்டான். மோச்சம் அருகில் வந்ததும் சிரிப்புடன் சொன்னான். “மாப்ள! பொண்ணு பொறந்துருக்குடே.”

“அவ எப்டி இருக்கா.”

“பரவாயில்ல. அர மணி நேரம் கழிச்சுதான் பாக்க முடியும். கொஞ்சம் இரு.. கையெழுத்து போட்டுட்டு வாறேன்.”

லேனம்மாள் மகனைப் பார்த்து புன்னகைத்தாள். அருகில் சென்றான் மோட்சம். “அந்த வேளாங்கண்ணி மாதாதான் காப்பாத்துச்சு.”

எட்வர்ட் திரும்பியபோது யூனிபார்மிலிருந்து மாறியிருந்தான்.
“மாப்ள வா. டீ போடலாம்.” இருவரும் வெளியே வந்தனர்.

“காலைல யார் மொகத்துல முழிச்ச மோச்சம்?” எட்வர் கேட்டான். மோட்சம் கருப்புப் பூனையைச் சொன்னால் எட்வர்ட் சிரிப்பான் அல்லது திட்டுவான் அதனால் அவன் ஒன்றுமே சொல்லவில்லை.

“கொஞ்ச லேட்டாயிருந்தாலும் ரெம்ப சீரியசாயிருக்கும்டே. அவளுக்கு கொஞ்சம் காம்ப்ளிகேஷந்தான். கரண்டி போட்டு எடுத்தாரு டாக்டர். இவங்கள இங்க அட்மிட் பண்ணி பாத்துருக்கணும்னு என்னத் திட்டினாரு. சத்தியமா மாப்ள காலைல ராசியா யாரு முகத்துலேயோ முழிச்சிருக்க. இல்லைண்ணு வையி… சொல்லவே பயமாயிருக்கு. ரெண்டு உயிரையும்..”

மூன்று நாள் கழித்து கீதாவையும் குழந்தையும் வீட்டுக்கு கொண்டுவந்து விட்டபின் வெளியில் வந்து மோட்சம் முதலில் தேடியது பூனையைத்தான்.

“மோச்சம்.” சிலுவைப்பிள்ளை வந்தார்,”என்னத்த தேடுத?”

‘மாமாவிடம் கருப்புப் பூனையை செல்லப் பிராணியாய் வளர்க்கப் போகிறேன் என எப்படிச் சொல்வது?’
மோச்சம் “ஒண்ணுமில்ல…சும்மாத்தான்” என்றான்.

“இங்க பாத்தியா?” கையிலிருந்த வெள்ளை நிற பிளாஸ்டிக் கவர் ஒன்றை தூக்கி காண்பித்தார் சிலுவைப் பிள்ளை. “இங்கோடி ஒரு கருப்பு பூன சுத்திட்டு கெடந்துச்சு பாத்தியா? நேத்து கொஞ்சம் மீன் கொழம்பு ஊத்தி சோற வச்சு சுருக்கு போட்டு புடிச்சி செவத்துல ஒரே அடி..” கவரைத் தூக்கி குப்பையில் போட்டார். ஜடப் பூனை கவரிலிரிந்து வெளியில் விழுந்தது. மூக்கில் இரத்தம் வழிந்து உறைந்திருந்தது.

=============
வடக்கு வாசல் இதழில் வெளிவந்த கதை.

Popularity: 12% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....6 மறுமொழிகள் to “பூனை”

 1. Kumaran சொல்கிறார்:

  இந்த சீக்கிரம்ங்கறதுக்கு ‘செணம்’ங்கற சொல்லைப் புழங்குறது எந்த ஊரு வழக்கு? சௌராஷ்ட்ரத்துலயும் சீக்கிரத்துக்கு ‘செணம்’ தான். அதான் படிச்சவுடனே ஆச்சரியமா போச்சு.

 2. மங்கை சொல்கிறார்:

  வடக்கு வாசல் இலக்கிய மலர் ல படிச்சேன்….. உங்க ஊர் தமிழை ரசிக்கவே படிக்கலாம்..நல்லா இருக்கு..

 3. குமரன்,
  கன்னியாகுமரி கடற்கரை ஊர்களில் பொதுவாக மேற்கு கடற்கரை பகுதிகளில் செணம் என்பது சீக்கிரம் எனும் அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. இப்ப இந்த மாதிரி வார்த்தைகள் பயன்பாடு குறைந்திருக்கும்.

 4. நன்றி மங்கை.

 5. கதைய விடச் செணத்தப் பத்தித்தான் பேச்சுப் போலருக்கு. எங்கூர்ப்பக்கம் வெரசான்னு சொல்வாங்க.

  கதை நல்லாருக்கு. முடிவுதான் கொஞ்சம் வருத்தமாயிருக்கு. பூனைய வளத்தான்னு முடிச்சிருந்தா சந்தோசமாயிருந்திருக்கும். ஆனா அது பழைய முடிவாச்சுதே. ஆகையால புதுமுடிவு கதைக்குப் பொருத்தந்தான்.

 6. தலைப்பைப் பார்த்து ஓடிவந்தேன். கொஞ்சம் திக் திக்குன்னே இருந்தாலும் வளர்க்க முடிவு செஞ்சப்ப மகிழ்ச்சி ஊறுச்சு. ஆனா….
  அந்தக் கடைசிப்பத்தி…………..(-:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்