வாய்ப்பு – சிறுகதை

வாய்ப்பு.

சீனா குமார் ஒரு ‘இது’வாயிருப்பான் என எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ‘ஏந்தான் அவனுக்கு சென்னையில் வேலை வாங்கித் தந்தோமோ?’ என்றே நினைக்கவைத்துவிட்டான். என்னைச் சொல்லணும். போயும் போயும் அவனிடம் என் காதல் கதையைச் சொன்னேனே.

என்னோடு கல்லூரியில் படித்தான். அறை நண்பன். சென்னை கோயம்பேட்டில் வீடெடுத்து தங்கியிருந்தோம். கன்னியாகுமரி மாவட்டத்தின் கிராமமொன்றிலிருந்து வந்திருந்த நான் எப்படி நாகர்கோவில்காரனோ அதுபொல சீனா குமார் கோயம்புத்தூர்காரன். ஆனால் என்னைப்போல அவனை ஒரு கிராமத்தான் என எளிதில் சொல்லிவிட முடியாது. ஆலையில் நேர்த்தியாகக் கிழிக்கப்பட்ட ஜீன்ஸ், கிராஃபிட்டி டி ஷர்ட், கைகளாலேயே சரி செய்யக் கூடியதும் அலங்காரமானதுமான தலைமுடி, 100சதவீதம் மாநிறம், சற்றே குழிவிழுந்த கவர்ச்சியான கண்கள், நீளமான கைவிரல்கள், ‘அன்லிமிட்டட்’ சாபிட்டாலும் வெளித்தெரியாத வயிறு. இன்னும் என்னென்னமோ. மொத்தத்தில் எனக்கு நேர் எதிர்.

கல்லூரி படிப்புக்காக சென்னை வந்த முதல் சில நாட்களில் என் கண்களை உறுத்தியது பைக்கில் கட்டிக்கொண்டு செல்லும் ஜோடிகள்தான். கிராமங்களில் பைக்கில் செல்வோர் எண்ணிக்கை குறைவென்றாலும் இப்படி ஃபெவிக்கால் விளம்பரம்போல ஒட்டிக் கொண்டு செல்வதென்பது கொஞ்சமும் ஜீரணிக்க முடியாத விஷயமாயிருந்தது. சீனா குமாருக்கும் அப்படித்தான். ஆனால் அதை அவன் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டதுதான் வித்தியாசம். ‘மாப்ள நானும் ஒருநாள் இப்படிப் போவேண்டா’ என என்னிடம் சொன்னதை அவன் செய்து முடிக்க மூன்று மாதங்களே ஆனது.

‘பைக் வேணும்டா. ஒரே ஒரு பைக் இருந்தா போதும்.’ ஒரு மாதத்துக்குள் பைக் வந்தது. சுசுகி ஷோகண். இரண்டு மாதத்துக்குள் ஃபிகர் பைக்கில் வந்தது. குண்டு வித்யா. மூன்று மாதத்தில் நெருக்கம் வந்தது. காற்றுகூடப் புகமுடியாத நெருக்கம்.

‘சாதிச்சிட்டியேடா குமார்.’ என்றேன். ‘சொன்னேன்ல. பைக் போதும்.’ அண்ணன் எனக்குத் தந்த பழைய டி.வி.எஸ் சாம்புக்கு பெண்களைக் கவரும் வசீகரம் இல்லை என்பதற்கு முகம் சுளிக்கும் மெக்கானிக்குகளே சான்று.

குண்டு வித்யாவுக்குப் பிறகு ஜே ஜே எனப்படும் ஜீவிதா ஜோசப், இந்திரா செல்லத்துரை, ஷர்மி என நெருக்கமும் இறுக்கமும் தொடர்ந்தது. சீனா குமார் நகரத்துப் பையன்களின் வயித்தெரிச்சலுக்கு ஆளானான். ‘எப்படிடா உனக்கு மட்டும்?’ எனக் கேட்காதவர்களே இல்லை. தாஜ் ஒயின்ஸ், தி. நகர் அருணா என ‘தண்ணீர் பந்தல்களில்’ எப்போது கூடினாலும் சீனா குமாரின் பைக் லீலைகள் பட்டியலிடப்படும். அருணாவில் செர்வர்களுக்கும் இது தெரியும். ‘இப்ப யாரு சார்?’ எனக் கேட்பது வழக்கம்.

ஆனால் சீனா குமார் ஒரு டிரைவர்தான் என்பதை அவனே ஒப்புக்கொண்டபோது அவன் மீது பரிதாபம்தான் வந்தது. அன்றைக்கு அறையிலேயே குப்பிகளோடு செட்டிலானோம் ‘என்னடா சொல்ற?’ ‘ஆமாம்டா. எல்லாப் பொண்ணுகளும் சும்மா ஃப்ரெண்டாத்தான் பழகுதுங்க. பைக்குலப் போகும்போது மட்டும் கீழ விழாம இருக்க அப்டி ஒரு நெருக்கம். அவளுகளா நெருங்கினாத்தான் உண்டு. நாமா நோ டச்சிங்க். எனக்கும் அதுல பெரிய இண்ட்ரஸ்ட் இல்ல.’

பரவாயில்ல. நல்ல பையன்தான். அவனைப் பற்றிய கருத்தை கொஞ்சம் மாற்றிக்கொண்டேன். இவன் இந்த உண்மைகளைச் சொல்வதற்கு பியர் எனும் ‘உண்மை கண்டறியும் பானம்’ மட்டும் காரணமில்லை. ‘போனவாரம் இந்திரா ஈ.சி.ஆர் போணும்னு சொல்லிக் கூப்பிட்டா. அங்கப் போனா அங்கெ இன்னொருத்தன் நின்னுகிட்டிருக்கான். அவளோட டிஸ்டண்ட் ரிலேட்டிவாம். லவ்வாம். ரெண்டு வீட்டுக்கும் பிரச்சனையாம். ஏதேதோ கதை சொன்னா. விட்டுட்டு வந்திரலாம்ணு நெனச்சேன்.’ சரிதான் பையன் பக்குவமாகிறான் என்று எண்ணிக்கொண்டேன்.

‘பைக் டிரைவர்’ சீனா குமார் என கொஞ்ச நாள் கிண்டலடிக்கப்பட்டான். கால் டேக்சி போல ‘கால் பைக்’. எப்போ செல்ஃபோன் அடித்தாலும் ‘எங்கடா பிக் அப்’ என நக்கல். அதன் பின் எனக்கு சென்னையிலும் அவனுக்கு நொய்டாவிலும் வேலை கிடைத்தது. சீனா குமாரின் பைக்கும் அவனோடு வட இந்தியா பயணித்தது. நான்கு வருடத்துக்குப் பிறகு சென்னையில் என் கம்பெனியில் சொல்லி வேலை வாங்கித்தந்தேன். மீண்டும் பழைய நினைவுகளை மீட்டிக்கொண்டு ஒரே அறையில்.

நேற்று வரை அவனால் எந்த பிரச்சனையும் இல்லை. பழைய சீனா குமாரேதான். உள்ளே கிராமத்தான் வெளியே நகரத்தான். முன்பை விட கொஞ்சம் தெளிவு தெரிந்தது அவனிடம். தன்னம்பிக்கைபோலத் தோன்றும் ஏதோ ஒன்று. மெஸ் சாப்பட்டின் பெருமையை பறைசாற்றும் என் தொப்பை அவனுக்கு இல்லை. ‘மாப்ள. தொப்பைய விடுடா. ஒரு பிடி சோறு கிடைக்காதாண்ணு எத்தன நாள் ஏங்கிருக்கேன் தெரியுமா. எப்பவும் சப்பாத்தி. நான் திரும்பி வர்றதுக்கு அது ஒரு மேஜர் காரணம்டா.’

நேற்று மாலை பீச்சுக்குப் போய் அமர்ந்தோம். எப்போதாவது எங்களுக்கிடயே பரஸ்பர நம்பிக்கையின் அளவு உச்சங்களைத் தொடுவதுண்டு. அப்படி அமைந்த சந்தர்ப்பத்தில் என்னுடைய காதல் கதையை சொல்ல ஆரம்பித்தேன்.
‘பேரு ராஜ லக்ஷ்மி. ராஜி.’
‘இந்துவா?’
‘ம்ம்.’
‘சர்தான் உங்கப்பா வெட்டருவாளுக்கு வேல வச்சுட்ட.’
‘இல்லடா. இப்பெல்லாம் எங்க வீட்ல என் பேச்சு அதிகமா செல்லுபடியாகுது. மாசம் பத்தாயிரம் அனுப்புறேன்ல. ஊர்ல அது பெரிய பணம். வீடு கட்டிட்டாங்க. தங்கச்சி எஞ்சினியரிங் படிக்குறா. அப்பா இப்ப வேலைக்குப் போறதில்ல.’
‘சமாளிச்சுரலாம்ணு சொல்லு.’
‘ஆமா’.

அதோடு விட்டுருக்க வேண்டும் நான். ‘உனக்கு என்னடா கதை. நீதான் காதல் மன்னனாச்சே?’ என்றேன்.

‘மாப்ள. இங்க பொண்ணுங்க வேஸ்ட்டுடா. நொய்டாவ்ல… சான்சே இல்ல.’ எனத் துவங்கி ஒரு முழு நீள திரைக்கதையை சொல்லி முடித்தான். அதை மலையாளத்தில் ஷக்கிலாவை வைத்து பெரிய வட்டத்துக்குள் ஆங்கில முதலெழுத்து போட்ட படமாக எடுக்கலாம். அல்லது தமிழில் மன்மத லீலையின் ரீ மேக் எனச் சொல்லி எடுக்கலாம். சுருக்கமாகவே சொல்கிறேன். இதுவரை பல பெண்களுடன் ‘பழகி’யிருக்கிறான். ஆனால் கடைசி கட்டத்துக்கு செல்லவில்லை என ஒரு செக் வைக்கிறான். ‘அது மட்டும் கெடையாதுடா. மற்றபடி…’ தமிழில் கலைச் சொற்கள் இல்லாத விஷயங்களையெல்லாம் சொன்னான்.

‘ஒருத்தி என்ன பாத்து ஏன் என்ன முறைக்குறேண்ணு கேட்டா. ‘சும்மா’ண்ணு தமிழ்ல சொன்னேன்.சும்மாண்ணா முத்தம்ணு எனக்கு அப்ப தெரியாது.’ கண்ணை சிமிட்டி சிரித்தான். இதுபோல ஒவ்வொரு கதையிலும் சுவாரஸ்யம்.

எனக்கு முதலில் தோன்றியது பொறாமையா, இயலாமையா அல்லது வெறும் எரிச்சலா தெரியவில்லை. இவை மூன்றில் ஒன்றும் கூடவே கிளுகிளுப்புமாக ஒரு புதுவகை உணர்வு. மௌனமாக இருந்துவிட்டேன். ‘நமக்கு ஏன் வாய்க்கவில்லை? வாய்த்திருந்தால் செய்திருப்போமா? எவ்வளவு தூரம்?’ அதன் பின் உலகில் நல்லது எது கெட்டது எது? அதை யார் நிர்ணயிப்பது? என்பது போன்ற பெருங்கேள்விகளில் மனம் சென்றது.

வீடு வந்து சேர்ந்த பின்னர் சீனா குமார் கேட்டான் ‘என்னடா மாப்ள. நான் சொன்னதுக்கு நீ ஒண்ணுமே சொல்லல?’
ஏதாவது சொல்ல வேண்ண்டும் எனத் தோன்றியது ‘மாப்ள. உன் மனசாட்சிக்கு நல்லதுண்ணு தெரிஞ்சா தப்பில்லண்ணு நினைக்குறேன். உனக்கோ அந்தப் பொண்ணுக்கோ ஆட்சேபன இல்லைண்ண பிரச்சனையில்ல. ஆனா இதுக்கு அடிமையாயிடாத. அதத் தேடிப் போகாத. அப்புறம் பொண்ணுங்கள அப்படியே பார்க்கத் தோணும். ஒரு உணர்ச்சி வேகத்துல சர்க்கரை வியாதிக்காரன் லட்டு சாப்பிடறப்புல இது நடக்குதுண்ணா சரிதான். இருந்தாலும் ஒரு நெருடல் இருக்குதுடா.’
‘ஆமாடா.’ என்றவன் அதற்குப்பின் பேசவில்லை.

Virginity is the absence of opportunity என யாரோ சொல்லியிருக்காங்க. இழக்க வாய்ப்புகள் இல்லாததாலேயே ஒருவன் கற்புடையவனாயிருக்கிறானாம். சீனா குமாருக்கு வாய்ப்பு இருந்தது எனக்கு வாய்ப்பு இருந்ததில்லை. அதை நான் தேடிச் செல்லவுமில்லை.

அடுத்த நாள் ராஜியை சந்தித்தபோது முதல் கேள்வியாய் அவளிடம் கேட்டேன். ‘நீ நோய்டாவ்ல இருந்தப்போ குமார்ணு யாரையாவது தெரியுமா?’

==============
வடக்கு வாசல் இதழில் வெளிவந்த கதை

Popularity: 13% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....6 மறுமொழிகள் to “வாய்ப்பு – சிறுகதை”

 1. Sridhar Narayanan சொல்கிறார்:

  நன்றாக இருக்கிறது சிறில். வாழ்த்துகள்

  //Virginity is the absence of opportunity என யாரோ சொல்லியிருக்காங்க. இழக்க வாய்ப்புகள் இல்லாததாலேயே ஒருவன் கற்புடையவனாயிருக்கிறானாம்.//

  அப்ப பெண்கள்? :-))

 2. Jeyakumar சொல்கிறார்:

  Dear Cyril,

  Good story. Chastity is nothing but lack of opportunity..

  //அடுத்த நாள் ராஜியை சந்தித்தபோது முதல் கேள்வியாய் அவளிடம் கேட்டேன். ‘நீ நோய்டாவ்ல இருந்தப்போ குமார்ணு யாரையாவது தெரியுமா?’//

  :-)

  Jayakumar

 3. superlinks சொல்கிறார்:

  ஸிரில் அலெக்ஸ்,
  உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.

 4. guna சொல்கிறார்:

  nice story, i like it

 5. Anonymous சொல்கிறார்:

  thamadham ethaiyum sari seithu vidum

 6. ilavarasan சொல்கிறார்:

  எதார்த்தம் நிரம்பிய கதை.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்