பராக்! பராக்! பராக்! – பழசு

(பராக் ஒபாமா உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதும் எழுதிய கட்டுரை. எங்கேயும் வெளியிடாமல் இருந்தது. சேமிப்புக்காக இங்கே….)

பராக்! பராக்! பராக்!

1856ல் அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பொன்றில் நீதிபதி ட்ரெட் ஸ்காட் கீழ்கண்டவாறு கூறுகிறார்,”கறுப்பினத்தவர் வெள்ளை இனத்தவர்கள் மதிக்கத்தக்க எந்த உரிமையும் இல்லாதவர்கள். வெள்ளை மனிதனின் இலாபத்திற்காக/வசதிக்காக நீக்ரோ நீதியோடும் சட்டபூர்வமாகவும் அடிமையாக்கப்படலாம்.” ஒரு நூற்றாண்டுக்குப் பின் 1965ல் அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. வாக்குரிமை பெற்று 43 ஆண்டுகளுக்குப் பின் கறுப்பினத்தவர் ஒருவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

பராக் ஒபாமா! அமெரிக்க இளைஞர்கள் துடிப்புடனும், அமெரிக்க சிறுபான்மை கறுப்பினத்தவர்கள் கண்ணீருடனும் சில பழமைவாதிகள் வெறுப்புடனும் சொல்லிக்கொள்ளும் பெயர் இதுதான். அமெரிக்க அடிமை வரலாற்றின் முடிவின் துவக்கம் பராக் ஒபாமா. தன்முயற்சியில் யாரும் வெல்லலாம் எனும் ‘அமெரிக்கக் கனவை’ அரசியல் தளத்தில் கறுப்பினத்தவருக்குமாய் நிருபணம் செய்தவர். ‘கனவொன்று காண்கிறேன்’* என்ற அறைகூவலின் பதிலொலி.

அமெரிக்க கறுப்பினத்தவர் நிலைமை வெறும் சிறுபான்மையினர் என்பதால் மோசமாகிவிடவில்லை. யூதர்கள், கத்தோலிக்கர்கள் உட்பட்ட பல சிறுபான்மையினரின் நிலைமை இங்கே சிறப்பாகவே உள்ளது. கறுப்பினத்தவர்கள் விளைந்த நிலத்திலிருந்து அதிகொடூரமாக பிடுங்கி எடுத்து வைக்கப்பட்ட மரங்களைப்போல, அமெரிக்காவில் முழுமையாகக் காலூன்றிவிடவில்லை. அடிமைகள் விடுவிக்கப்பட்டு 150 ஆண்டுகள் ஆனபோதும் 40 வருடங்களுக்கு முன்னர்வரை கறுப்பினத்தவர்கள் சட்டபூர்வமாக ஒடுக்கப்பட்ட நிலையிலேயே இருந்துவந்தனர். கறுப்பினத்தவர் அமெரிக்கர்களாகி 40ஆண்டுகளே ஆகின்றன என்றால் தவறில்லை. தங்கள் அடிமைகளைத் சகாக்களாக ஏற்றுக்கொள்ளாத இனவெறியும், தன் முன்னாள் எஜமானர்களின் செய்கைகளை மன்னிக்க இயலாத மனப்போக்கும் கறுப்பினத்தவரின் சமூக, பொருளாதார தனிமைப்படுத்தலுக்கு வழிவகுத்துள்ளன. ஒபாமா இவை இரண்டையும் தாண்டிச்செல்ல ஒரு பாலம் அமைத்துள்ளார்.

ஒபாமா கென்யாவைச் சார்ந்த கறுப்பினத் தந்தைக்கும் வெள்ளை இனத் தாய்க்கும் பிறந்தவர். அவர் சிறுவனாயிருக்கையிலேயே தந்தை அவர்களைக் கைவிட்டபின் தன் தாய்வழி தாத்தா, பாட்டியின் கண்காணிபில் வளர்ந்தார். இந்தவகையில் ஒபாமா துவக்கத்தில் முழுமையான கறுப்பினத்தவராக ஏற்றுக்கொள்ளப்படவேயில்லை. அவரின் கருமை அடிமை வழியில் வந்ததில்லையாகையால் கறுப்பினத்தவர்களே அவரின் கறுப்பினப்பின்னணி குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர். உடலின் நிறம் குறித்தெழும் வெறுப்பின் அளவில் ஒபாமாவின் கருமை சற்று குறைவாகவே மதிப்பிடப்பட்டது.

ஒபாமாவின் கறுப்பினப் பின்னணியை முதலில் தாண்டிச் சென்றது ஒபாமாவேதான். அதை தன் பிரச்சாரங்களில் அதிகம் அவர் முன்நிறுத்தவில்லை. அமெரிக்காவின் இனப் பிரச்சனை குறித்த தன் சிறப்புரையிலும் அவர் இனங்களைத் தாண்டிய அமெரிக்கத் தலைவராகவே தன்னை முன்னிறுத்திக் கொண்டார். தன் கறுப்புத் தந்தையை விட வெள்ளை பாட்டியின் வளர்ப்பையே அதிகம் நினைவு கூர்ந்தார். கறுப்பு, வெள்ளை, மாநிறம் எனும் பிரிவினைகளைத் தாண்டி தன்னை அனைத்து மக்களுக்குமான தலைவராக்கிக் கொள்வதே அமெரிக்க அதிபர் வேட்பாளரின் முதல் தகுதி என்பதை உணர்ந்தவராக, அமெரிக்காவின் இனப்பிரிவினையை ஏற்றுக்கொண்டவராயும் அதே சமயம் பிரிவினைகளைத் தாண்டிய செயல்பாடுகளே வலிமையான அமெரிக்கவை உருவாக்கும் என்பதில் நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கு முன் வேறெந்த கறுப்பினத் தலைவருக்கும் உட்கட்சி வேட்பாளர் தேர்வுகளில் கருதத் தகும் வெற்றி எதுவும் கிடைக்காததற்கு இது முக்கியக் காரணம். அவர்கள் அதீத கறுப்பினச் சார்புடையவர்களாயிருந்தனர். ஒபாமா தன் இனப் பின்னணியை ஒரு பொருட்டாகவோ, விலைபோகும் பொருளாகவோ மதிக்கவில்லை. இது தன் இனத்தை வெறுத்து, தன் பின்னணிகளை மறைத்துச் செல்லும் ஏய்ப்பல்ல மாறாக தன் இனம், நிறம் பிரிவினையின் ஆதாரமாய் இருக்கிறதென்பதைக் கடந்து செல்வது. அதே போல பிறரின் நிறத்தையும் பிரிவினையின் ஆதாரமாய் கொள்ளாமலிருப்பது. தன்னைத்தானே தன் ‘குணாதிசயங்களின் வலிமையால்’* மதிப்பிடுவது. அதே மதிப்பை பிரருக்கும் வழங்குவது.

தன்னளவில் இந்தத் தடைகளைக் கடந்தவராயிருந்தாலும் ஒபாமா கறுப்பினத்தவர் குறித்த பல மனத்தடைகளை தகர்த்தெறியவேண்டியிருந்தது. அந்த மனத்தடைகள் சாதாரணமானவை அல்ல. சமூக, இறையியல் பின்னணிகளில் ஊற்றெடுத்த மனத்தடைகள் அவை. கறுப்பினத்தவர்கள் ஆத்மாவே இல்லாத விலங்குகள் எனும் நம்பிக்கைகள் இன்றும் அமெரிக்காவின் கிராமப்புறங்களில் பரவிக் கிடக்கின்றன. கே.கே.கே போன்ற கறுப்பின வெறுப்புக் குழுக்களும், நாஜிப் பின்னணியில் எழுந்த ‘ஆரிய’ வழித் தோன்றல்கள் என்போரும், வெள்ளையர்களுக்கு மட்டுமாய் இயங்கும் திருச்சபைகளுமாய் ஒருங்கிணைந்த இனவெறிக் குழுமங்கள் அமெரிக்காவில் இயங்கிவருகின்றன. இனப்பிரிவினை சார்ந்த இறையியலை முழுமையாய் மறுக்காத, அமெரிக்க கிறீத்துவ அடிப்படைவாதிகளின் அரசியல் தலையீடுகள் கடந்த எட்டு வருடங்களாக அரசின் முடிவுகளில் குறிப்பிடத் தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இவற்றின் மீதான வெற்றி ஒபாமாவின் வெற்றி.

இன, மத அடிப்படைவாதங்களைத் தாண்டிய ஒரு அமெரிக்காவை அமெரிக்காவிற்கே கண்டுவந்து தந்துள்ளார் ஒபாமா. இந்த வகையில் ஒபாமாவின் வெற்றி அமெரிக்காவின் வெற்றி.

ஒரு ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து அவர் இத்தனை தூரம் வந்துள்ளதால் ஒபாமாவை ஒரு இனத்தின் பிரதிநிதியாக பார்ப்பது தவிர்க்க இயலதாதது. ஆனால் ஒபாமாவை வரையறுப்பது இனம் மட்டுமல்ல. ஒரு புதிய அரசியலின் துவக்கத்தை அவரிடம் காண முடிகிறது. மக்களின் சார்புநிலைகளையும், உணர்வுபூர்வமான இயக்கங்களையும் தந்திரமாக அரசியலாக்கிக்கொள்ளும் ஜனநாயக அரசியல் வழக்குகளுக்கு ஒபாமா மாற்றாய் விளங்குகிறார். மக்களின் தேவைகளையல்லாமல் தனிமனிதப் பண்புகளையே விமர்சிக்கும் அரசியல் பிரச்சாரங்களுக்கு ஒபாமா மாற்றாய் விளங்குகிறார். இந்த புதிய, மக்கள் பிரச்சனைகளை மட்டுமே முன்வைக்கும் பிரச்சாரத்தின் வெற்றிதான் ஒபாமாவின் வெற்றி. இதுவே அவர் பின் சென்ற இளைஞர்களை ஊக்குவித்தது, பழைய அரசியலில் ஊறிய மெக்கெய்னையும் ஹில்லரியையும்கூட தன் புதிய அரசியலுக்கு இழுத்துவந்தது.

ஒபாமாவின் தனிப்பெரும் பண்பு அவரின் ஆளுமை. இளமை துடிப்பும், இன்முகமும், திறந்த மனமும், எழுச்சியூட்டும் பேச்சுத் திறனும் ஒபாமாவின் வசீகரத்தை தவிர்க்க இயலாததாக்குகின்றன. ஆதாயமும், ஆதாரமும் இல்லாத நீண்ட போர் ஒன்றினாலும், வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தினாலும் சோர்வடைந்திருக்கும் அமெரிக்க மக்களின் முதல் தேவை ‘நம்பிக்கை’. மாற்றம் வரும் எனும் நம்பிக்கை. காயங்களை தீர்க்கவில்லையாகிலும் நம்பிக்கை வலிகளைக் குறைக்க வல்லது. அந்த நம்பிக்கையை பராக் ஒபாமா வழங்கியுள்ளார். இதற்காக வெறும் மணல்வீடு கட்டுகிறார் என விமர்சிக்கப்பட்டார். ஆனால் அவரின் அரசியல் மேலாண்மை திறன் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படாத அரசியல் இருள் மூலையொன்றிலிருந்து வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்த பிரச்சார ஒருங்கிணைப்பிலே நிரூபிக்கப்பட்டது. இதை சாதாரண அமெரிக்கர்களும் உணர்ந்திருப்பதை ஊடகங்கள் மேலிட்டுக் காட்டின. இதுவே அவரின் வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதற்கும் சான்றாகியது.

ஒபாமாவின் பயணம் முடிந்துவிடவில்லை. வெற்றியை அறிவித்து அவர் கூறியதைப் போல ஒரு வரலாற்று சிறப்புமிக்க பயணம் முடிந்து இன்னொன்று ஆரம்பித்துள்ளது. இதுவே அமெரிக்காவிற்கும் ஒபாமாவிற்குமான உண்மையான சோதனை. இதுவரை ஒபாமா பரவலாக தன் கட்சி உறுப்பினர்களையே கவர வேண்டியிருந்தது. பொதுத் தேர்தலில் கட்சி தாண்டிய ஆதரவைப் பெற்றாலொழிய ஒபாமா வெல்லப்போவதில்லை. இனப்பிரிவினை ஏற்படுத்திய தடைக்கற்களை ஒபாமா முற்றிலும் கடந்துவிடவுமில்லை. குறிப்பாக ஹில்லரிக்கு வாக்களித்த 18மில்லியன் வாக்காளர்களையும் தன்பக்கம் ஈர்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. அவை தாமாக ஒபாமாவிற்கு வந்துவிடப் போவதில்லை. ஏனெனில் ஹில்லரியின் வாக்காளர் களம் இனம், பால் எனும் பிரிவினைகளால் ஆனது. ஹில்லரிக்கு முக்கிய பதவி அளிப்பதுடன் இந்த சவால் நிறைவுபெறப் போவதில்லை. ஏனெனில் 18மில்லியன் வாக்குகளும் ஹில்லரிக்கு சொந்தமான வாக்குகளல்ல. அவை மக்களுக்கு சொந்தமான வாக்குகள். ஹில்லரியை சந்தோஷப்படுத்தி மட்டுமே இவர்களைக் கவர்ந்துகொள்ள முடியாது.

எதிரணி வேட்பாளர் ஜான் மெக்கெய்னும் சாதாரணமானவர் அல்ல. அடிப்படைவாத குடியரசுக் கட்சியின் வேட்பாளரானாலும் கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக பலமுறை செயல்பட்டு நடுநிலைமையாளர் எனப் பெயர்பெற்றவர் மெக்கெய்ன். திறமையுள்ள ஒபாமாவோ, பரவலாக அறியப்பட்ட ஹில்லரியோ எதிர்த்து நிற்காமல் போனால் மெக் கெய்ன் வெற்றி பெறுவது நிச்சயம். ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களேகூட அவரை ஆதரிக்கத் தயாராயிருப்பர். மெக்கெய்னின் அரசியல் பின்னணி அத்தகையது. உட்கட்சி தேர்தல்களின்போது கட்சி ஆதரவைப் பெறவேண்டி இந்த ‘நடுநிலமையாளர்’ சட்டையை கழற்றிப் போட்டிருந்த மெக்கெய்ன் ஒபாமா வெற்றியை அறிவித்த நாளில் ஆற்றிய உரையில் தன் கட்சி சார்பின்மையை முன்னிறுத்தியது குறிப்பிடத்தக்க மாற்றம். இனி அவரின் பிரச்சாரங்கள் கட்சி சார்பற்ற நடுநிலையாளர்களை, மதில்மேல் இருக்கும் ஜனநாயகக் கட்சியினரைக் கவரும்படி தன்னை கட்சி சார்பற்றவராகக் காண்பிப்பதாய் அமைந்திருக்கும்.

ஒபாமாவின் அனுபவமின்மை குற்றச்சாட்டு ஓரளவுக்கு விலைபோகும். அதை ஒபாமாவின் திட்டங்களின் சாத்தியங்களைப் புரியவைப்பதன் மூலமே அவர் மீறிச் செல்ல இயலும். கடந்த எட்டு வருடங்களாக அமெரிக்க மக்களின் மனதில் வெளியுலகைக் குறித்த அதீத பயத்தை உருவாக்கி வளர்த்த திட்டமிட்ட பிரச்சாரங்களின் பலன்களை மெக்கெய்ன் வாக்குகளாகப் பார்க்கிறார். ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கைகளை அதே பிரச்சாரங்களின் தொனியில் விலக்குகிறார். தன் வெளியுறவுக் கொள்கைகள் ஜனநாயக் முறைகளின் நீட்சியே என்பதையும் ‘உயிர்வாழ்கைக்கும், விடுதலைக்கும், மகிழ்ச்சியைத் தேடிப் பெறுவதற்குமான**’ (“Life, liberty, and the pursuit of happiness” )உரிமைகள் மனிதம் முழுமைக்கும் பொருந்தும் என்பதையும் நிலைநிறுத்துவதன் மூலமே ஒபாமா உலக அரங்கில் அமெரிக்காவின் நற்பெயரை மீட்டெடுக்க இயலும்.

கறுப்பினத்தவர் என்றில்லை எந்த சிறுபான்மையினரும் அதிபராவது மற்ற ஜனநாயகங்களைப் போலவே அமெரிக்காவிலும் அரிதானது. அமெரிக்காவின் ஒரே கத்தோலிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி மட்டுமே. பல மகாணங்களிலும் ஒபாமா குறித்த சரியான அறிமுகமே பெறாத மக்கள் இருக்கின்றனர். அவர்களிடம் ஒபாமா குறித்த சந்தேகங்களே அதிகமுள்ளன. சிலர் வெளிப்படையாக எதிர்மறை கருத்துக்களையே கொண்டுள்ளனர். இதற்கு இனமும், ஹுசைன் எனும் அவரது பெயரும் காரணிகள். பலரும் ஒபாமா இஸ்லாமியர் என்றே நம்புகின்றனர். இவற்றை ஒபாமா சங்கடங்களோடு எதிர்கொள்ளவேண்டியுள்ளது. அவர் விரும்பாவிட்டாலும் மக்கள் தங்கள் தலைவர்களை பரவலாக சரியானதாய் தோன்றும் காரணங்களுக்காய் தேர்ந்தெடுப்பதில்லை.

ஒபாமா வரும் பொதுத் தேர்தலில் வெல்வாரானால் கறுப்பு வெள்ளை இனங்களிடையே மட்டுமல்ல அமெரிக்காவின் குறிப்பிடத்தகும் சிறுபான்மையினராக விளங்கும் ஹிஸ்பானியர்களுக்கும் கறுப்பினத்தவர்களுக்குமிடையே ஒரு பாலமாக அமைவார். அமெரிக்காவில் அதற்குப் பின் இனவெறியே இருக்காது என்பது உண்மையில்லை. இனவெறியின் மீது ஒட்டுமொத்த வெற்றி என்பது பலவிதமான சமரசங்களுக்குமிடையே மட்டுமே நடக்கக்கூடியது. பிரிவினைகளின் பின்னணியிலிருக்கும் தத்துவங்களுக்கு மாற்றுக்களை உருவாக்கி நிலைநிறுத்திய பின்னரே அவற்றை முறியடிக்க இயலும். தேர்தல் போன்ற ஒரு அரசியல் இயங்கலில் இது சாத்தியமல்ல. இருப்பினும் இந்தப் பிரிவினைகளைத் தாண்டிச் செல்ல விரும்பும் ஒரு சமூகத் தேடலின் குறியீடாக ஒபாமாவின் வெற்றியைக் காண்பதில் தவறில்லை.

இனங்களைத் தாண்டிய மக்கள் தலைவராக, புதிய அரசியலின் செயல் வீரராக, நாளைய தலைமுறையின் நம்பிக்கை நாயகனாக, உலக அரங்கில் அமெரிக்காவின் தலையீட்டை ஆக்கபூர்வமாக்க விரும்புமுடையவராக ஒபாமா தெரிகிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் கனவுகளை நினைவாக்குவது இன்றைய நூற்றாண்டில் ஒவ்வொரு சமூகத்தின் கடமையாகும். அமெரிக்கா அந்தக் கடமையை முன்னின்று நிறைவேற்றுமா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்விதான்.

===

* மார்ட்டின் லூத்தர் கிங்கின் I have a dream உரையிலிருந்து.
** அமெரிக்க விடுதலைப் பிரகடனத்திலிருந்து (Declaration of Independance)

Popularity: 11% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....2 மறுமொழிகள் to “பராக்! பராக்! பராக்! – பழசு”

  1. Balaji சொல்கிறார்:

    have U seen this: Change.gov

  2. இப்பத்தான் பார்த்தேன் ஆனா முன்னமே கேள்விப்பட்டேன். They are planning to move into government with the same kind of public movement during campaign. Hope the result is just like the campaign. Though I think it is a bit too much.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்