வெற்றியின் குரல்-1

உலகெங்கும் ஒரே தலைப்புச் செய்தியோடு விடிந்த அந்த நாளில் வரலாற்றில் புதிய பக்கம் ஒன்று எழுதப்பட்டிருக்கிறது. ஒபாமா வென்றார்’ என்பது அத்தகையதொரு தலைப்புச் செய்தி. வெறும் செய்தியாக மட்டுமில்லாமல் உலகெங்கும் உணர்வலைகளை உருவாக்கியுள்ளது ஒபாமாவின் தேர்தல் வெற்றி. கென்யாவில் அரசு விடுமுறை அறிவித்தது, மக்கள் வீதியில் கொண்டாடினர், இந்தோனேஷியாவில் பள்ளிக் குழந்தைகள் குதூகலித்தன.
தீமையின் அச்சாணி என புஷ்ஷால் வர்ணிக்கப்பட்ட ஈரான் தேசம் ஒபாமாவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளது. பிரதிநிதித் துவங்களுக்கும், தலைமைக்கும் ஏங்கிக் கிடக்கும் பல சிறுபான்மையினருக்கும் உத்வேகமும் நம்பிக்கையும் பிறந்துள்ளது.
ஒபாமாவின் வெற்றிக்குப் பின் இருப்பவை அவரது எழுச்சியூட்டும் ஆளுமை, அதைப் பின் தொடர்ந்த ஒரு இளைய, தளராத தேர்தல் பிரச்சாரக் குழு, களம் கண்டிரா புதிய தேர்தல் யுக்திகள், அயராத களப்பணி (Ground Game). கூடவே ஜார்ஜ் புஷ்ஷின் தோல்விகள்.
கென்ய கறுப்பினத் தந்தைக்கும் அமெரிக்க வெள்ளையினத் தாய்க்கும் பிறந்தவர் ஒபாமா. ஜூனியர்’ அடைமொழியுடன் பாராக் ஹுசைன் ஒபாமா எனும் தந்தையின் பெயர் இவருக்கு சூட்டப்பட்டது. பராக் ஹுசைன் ஒபாமா எனும் பெயர் அமெரிக்க கலாச்சார ஒவ்வாமைக்குட்பட்ட பின் பேரி (Barry) என வழங்கப்பட்டது. பராக் ஒபாமாவின் பிறப்பிலேயே சோதனைகள் நிறைந்திருந்தன. ஒபாமாவின் தந்தையும் தாயும் மணம் முடித்தபோது அமெரிக்காவின் சில மகாணங்களில் வெள்ளை கறுப்பு இனக்கலப்புத் திருமணங்கள் சட்டப்படி குற்றமாக இருந்தன. கறுப்பினத்தவர்களோடு பழகுபவர்களை நீக்ரோ லவ்வர்’ என கேலி செய்வதும் ஒதுக்கி வைப்பதும் வழக்கமாயிருந்தது.
தனது சுயசரிதையில் (Dreams from my father) ஒபாமா தன் வெள்ளைத் தாயின் சிறுவயது நிகழ்வொன்றைக் கூறுகிறார். ஆஸ்த்துமாவால் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு பள்ளியில் அதிகம் நண்பர்களற்ற ஒரு சிறுமியாக ஆன் டன்கம் வளர்கிறார். ஒரு நாள் ஆனின் தாய் (டூட்ஸ் என அழைக்கப்பட்ட ஒபாமாவின் பாட்டி) வீட்டுக்குத் திரும்பி வரும்போது அங்கே குழந்தைகளின் கூச்சல் கேட்கிறது. அருகே வரும்போதுதான் அந்நிகழ்வின் தீவிரம் அவருக்குப் புலப்படுகிறது. தொலைவில் ஒரு மரத்தடியில் தன் மகளும் ஒரு கறுப்பினச் சிறுமியும் படுத்திருந்து பேசிக் கொண்டிருப்பதைக் காண்கிறார் டூட்ஸ். நிகர் லவ்வர்’ எனும் கூச்சல்கள். சிறுவன் ஒருவன் கல்லெறிகிறான். குறிதவறிப்போய் விழுகிறது. டூட்ஸ் சிறுவர்களை கலைத்துவிட்டு உள்ளே சென்று ஆனிடம் நீங்கள் வீட்டுக்குள் சென்று விளையாடுங்கள் எனச் சொல்ல அந்த கறுப்பினத் தோழி நடுக்கத்துடன் ஓட்டம் பிடிக்கிறாள்.
ஒபாமாவின் தாத்தா (கிராம்ஸ்’ என்கிறார் ஒபாமா) அடுத்தநாள் பள்ளிக்குச் சென்று சிறுவர்களின் பெற்றோரிடம் குறைசொல்கிறார். எதிர்பாராத திருப்பமாக அவர்கள் கிராம்சிடம் உங்கள் மகளை கறுப்பினத்தவர்களோடு பழக வேண்டாம் என கண்டித்து வையுங்கள்.’ எனச் சொல்லி அனுப்பி விடுகிறார்கள்.
கறுப்பின வெறுப்புணர்வுகளைச் சுட்டும் மிகச் சாதாரண நிகழ்வு இது. அதே காலகட்டங்களில் கறுப்பினத்தவர் அமெரிக்காவில் வாக்குரிமைகளற்ற இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டனர். ஜிம் க்ரோ (Jim Crow) சட்டங்களின் அடிப்படையில் சட்ட பூர்வமாகவே கறுப்பினத்தவர்கள் தனி உணவகங்களில் உண்பதும், தனி கல்விக் கூடங்களில் படிப்பதுவும், பேருந்தில் ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்வதும் அமலாக்கப்பட்டிருந்தது. அடிமைத் தளையிலிருந்து விடுபட்டு நூறு ஆண்டுகளுக்குப் பின்னும், தங்கள் முன்னள் முதலாளிகளின் மனதில் அடிமைகளாகவே கறுப்பினத்தவர்கள் கருதப்பட்டனர்.
கறுப்பினத்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் பல்வேறு பரிமாணங்களில் நிகழ்ந்து கொண்டிருந்த காலங்கள் அவை. கறுப்பினத்தவர்களின் கோவில்கள் செப வழிபாடுகள் நடந்து கொண்டிருக்கும்போதே தீ மூட்டப்பட்டன. பலரும் உயிருடன் எரியூட்டப்பட்டனர். கறுப்பினப் பெண்கள் விருப்பம்போல பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். ஆண்கள் திடீரென்று காணாமல் போயினர். சில மகாணங்களில் கறுப்பினத்தவர்கள் சட்டத்தின் முன் சென்று நீதி பெறுவது சாத்தியமற்றதாகவே இருந்தது.
இந்தப் பின்னணியில் டூட்சும் கிராம்சும் கட்டக் கரிய நிறம் கொண்ட, சொல்லக் கடினமான பெயர் கொண்ட, ஆழ்ந்த ஆப்ரிக்க உச்சரிப்புடன் ஆங்கிலம் பேசும் இளைஞனை தன் மகள் மணந்து கொள்ள எப்படி அனுமதித்திருப்பார்கள் என்பது தனக்கு வியப்பாகவே இருக்கிறது எனக் குறிப்பிடுகிறார் ஒபாமா. அமைதியாகவும் எளிதாகவும் பலருக்கும் தெரிவிக்கப்படாமலேயே அந்தத் திருமணம் நடந்தது.
ஒபாமா பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே அவரது தந்தை அவர்களை விட்டுப் பிரிந்து ஆப்ரிக்கா திரும்பிவிட்டார். ஒபாமாவிடம் எஞ்சி நின்றது தன் தந்தையின் பெயரும், நிறமும் அவர் குறித்த சில சாகசக் கதைகளுமே.
“ஒரு நாள் மது அருந்த பாருக்குச் சென்றிருந்தோம்”, பராக்கின் தந்தை குறித்த கதையொன்றை கிராம்ஸ் புன்னகையுடன் சொல்லுவார். “அங்கிருந்த வெள்ளையன் ஒருவன் பார் ஊழியரிடம் நான் ஏன் இந்தக் கறுப்பனுடன் சேர்ந்து மது அருந்த வேண்டும்?’ என குறைகூறினன். உன் தந்தை எழுந்து அந்த வெள்ளையனிடம் சென்றார். ஏதோ தீவிரமாக நடக்கப் போகிறது என பயந்தேன். உன் அப்பா அவனிடம் சென்று இனவெறியின் வெறுமையையும், தீமையையும் குறித்து வியாக்கியானம் செய்ய ஆரம்பித்தார். முடிவில் அந்த வெள்ளையன் இவருக்கு நூறு டாலர்களைத் தந்து மன்னிப்பையும் நட்பையும் வேண்டினன். தன்னம்பிக்கை’ பேரி. அதுதான் உன் தந்தையின் அதிமுக்கிய குணம். அதுதான் மனிதனின் வெற்றிக்கு அடித்தளம்.” பெருமிதத்துடன் கதையை முடிக்கிறார் கிராம்ஸ். சிறுவன் ஒபாமாவிடம் தன்னுடன் இல்லாத தன் தந்தை குறித்த இந்தக் கதைகள் பெரும் தாக்கத்தை உருவாக்கியிருக்கக் கூடும். அவருடைய தன்னம்பிக்கையே யாரும் எண்ணிப்பார்க்க முடியாத அரசியல் மூலையொன்றிலிருந்து உச்சத்தை அடையச் செய்தது. தன்னம்பிக்கையும், வசீகரிக்கும் ஆளுமையும். இரண்டும் இணைபிரியாதவை இல்லையா?
இனம் குறித்த கனத்த பிரக்ஞைகளுடன் வளர்ந்தார் ஒபாமா. சிறுவனக, மருத்துவ சிகிச்சை மூலம் தோலின் நிறத்தை மாற்றிக் கொண்டவர்களைக் குறித்து ஒரே நேரத்தில் ஆவலுடனும் விரக்தியுடனும் எண்ணிப் பார்க்கிறார். பள்ளியில் தனிமைப் படுத்தப்படுகிறார். வெள்ளை இனக் குடும்பத்தில் வளர்ந்தாலும் வெளியுலகுக்கு அவர் கறுப்பன் என்பதே அடையாளமாயிருந்தது. ஒரு கட்டத்தில் தன் தாயின் வெள்ளைப் பின்னணியை முன்நிறுத்தும் பழக்கத்தை கைவிடுகிறார். ஆயினும் கறுப்பினத்தவர்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் அல்லது இப்படித்தான் இருப்பார்கள் எனும் பொதுப்படுத்தல்களைத் தாண்டிச் செல்ல வேண்டியதன் அவசியத்தை உணர்கிறார். இந்தப் பாடங்களை தலைவர்களிடமிருந்தோ கொள்கைகளை அழுந்தக் கூறி விளக்கும் புத்தகங்களிலிருந்தோ அல்லாமல் மிகச் சாதாரணமான மக்களிடமிருந்தே பெற்றிருக்கிறார் ஒபாமா.
ஒபாமா எழுதிய என் தந்தையிடமிருந்து (பெற்ற) கனவுகள்’ எனும் சுயசரிதையில் இந்த சாதாரண மக்களே நாயகர்களாக உலாவருகின்றனர். அவர்களைத் தேடியே சிகாகோ சென்று சேர்கிறார் ஒபாமா. அங்கே கறுப்பினத்தவர் மத்தியில் ஒரு சமூக சேவகராய் (Community Organizer) தன் பொது வாழ்வைத் துவங்குகிறார். தனிமைப் படுத்தப்பட்ட சூழலில், பிளவுபட்டு, வறுமையின் பிடியில், கனவுகளை சிறைக் கூண்டுகளுக்குள் பூட்டி வைத்திருந்த கறுப்பினத்தவர் மத்தியில் தன்னைக் கண்டடைகிறார். வசீகரிக்கும் ஆளுமையும், நல்லெண்ணம் நிறைந்த பேச்சும், செயல்களும் யாரையும் சந்தேகத்துடனே அணுகிப் பழகியிருந்த கறுப்பினத்தவர்களிடம் நன்மதிப்பை பெற்றுத் தந்தன. இந்த காலங்களில் இனம் குறித்தும் இன விடுதலை குறித்தும் ஆழ்ந்த சிந்தனைகளில் ஈடுபடுகிறார். தெளிவுகளையும் பெறுகிறார். மீண்டும் இந்த மக்களை வந்தடைவேன்’ எனும் உறுதியுடன் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்துக்கு சட்டம் பயிலப் புறப்பட்டார்.
28 வயதில் ஹார்வர்ட் லா ரிவியூ இதழின் முதல் கறுப்பினத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார் பராக் ஒபாமா. 102 வருடப் பாரம்பரியத்தை உடைத்தெறிந்த வெற்றி அது. அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு அதிக பணம் ஈட்டும் அரிய வாய்ப்புக்கள் காத்திருந்தன. ஆனல் ஒபாமாவின் கனவுகள் தன்னைத் தாண்டியவையாயிருந்தன. அந்த வெற்றிக்குப் பின் அவர் பத்திரிகைகளுக்களித்த பேட்டியிலேயே தன் எதிர்காலத்தை தெளிவாக விவரிக்கிறார். ஹார்வர்டில் கிடைக்கும் கல்வி ஒருவன் தன் கனவுகளை எட்டிப் பிடிக்க நம்பிக்கையை அளிக்க வேண்டும்’ என்றார். ஒபாமாவுக்கு அந்தக் கனவு தன் மக்களைச் சென்றடைவதாகவே இருந்தது. எதிர்காலத்தில் அரசு பதவிக்காக தேர்தலில் போட்டியிடுவேன்’ என்று தன் திட்டத்தைத் தெளிவாக்குகிறார். பின்னளில் அது அமெரிக்க அதிபர் பதவியில் வந்து முழுமை பெறும் என்பதைக் கனவில் கூட யாரும் உணர்ந்திருக்க முடியாது.
ஹார்வர்ட் லா ரிவியூ பத்திரிகையின் தலைவர் பதவி ஏற்றபின் அவர் அளித்த பல பேட்டிகளிலும் அவரது நேர்மையான ஆளுமையும் மக்கள் சார்ந்த சமூக அரசியல் அணுகு முறையும் வெளிப்படுகிறது. நான் பல உலகங்களிலிருந்து வருபன்’ (I come from lot of worlds) எனத் தன்னை உருவகப்படுத்துகிறார் ஒபாமா. இத்தகைய பன்முகத் தன்மை தரும் சாத்தியங்களின் உச்சங்களை தேடிச் சென்றார் ஒபாமா. அவற்றை இறுதியில் அடைந்தும் உள்ளார்.
சிறுவனக இந்தோனேஷியாவில் துவங்கி, துடிப்பும் உறுதியும் கொண்ட இளைஞனக சிகாகோவின் சேரிகள் வரையிலும் ஏழ்மையுடன் நேரடித் தொடர்பு உடையவராகவும், உரக்க ஒலிக்கும் கோஷங்களும் தடித்த கொள்கைகளும் இன்றி மக்களை ஒருங்கிணைக்கும் திறனுடையவராயும், தன் கருத்தை தெளிவாகச் சொல்லவும் எளியவரானலும் பிறர் கருத்துக்கு மதிப்பளிக்கும் குணத்துடனும் தன் எதிர்காலம் மக்களுக்கானது எனும் முடிவை அவர் அடைய முடிந்தது.
பட்டப் படிப்புக்குப் பின் இரண்டு வருடங்கள் சட்ட வல்லுநராக வேலை பார்த்த பின்பு மீண்டும் தன் சகாக்களான சாதாரண மக்களைத் தேடிச் சென்றடைந்தார். இல்லிநாய் (Illinois) மகாணத்தில் கவுன்சிலில் ஒரு பதவி தேர்வுக்கு வந்தது. தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார் ஒபாமா. அவர் சந்தித்த மக்கள் அவரிடம் இரண்டு கேள்விகளை திரும்பத் திரும்பக் கேட்டார்கள். “எங்கிருந்து இந்த கேலிக்குரிய பெயர் (பராக்) உனக்கு கிடைத்தது?” “இத்தனை நல்லவனகத் தெரியும் நீ ஏன் அரசியலுக்குச் செல்கிறாய்?” இந்தக் கேள்விகள் நிறைவேற்றப் படாத அரசியல் வாக்குறுதிகள் தந்த விரக்தியிலிருந்து பிறந்தவை என பராக் குறிப்பிடுகிறார். ஒரு மெல்லிய புன்னகையுடன் இவற்றைஎதிர்கொள்கிறார் பராக், அரசியலில் வேறொரு மரபும் உள்ளது,’ எனத் துவங்குகிறது அவரது பதில், அது நம் நாடு உருவானது முதல் கறுப்பினத்தவர்களின் உரிமைப் போராட்டம் (Civil Rights Movement) வரை நீண்ட மரபு, நாம் ஒவ்வொருவருக்கும் அடுத்தவரிடம் ஏதேனும் ஆதாயம் உள்ளது எனும் எளிய கருத்தில் நிலைநிற்கும் மரபு அது. நம்மை பிரிப்பவற்றைவிட நம்மை சேர்த்து வைப்பவை மேலானவை, போதுமான பேர் நம்பிக்கை கொண்டார்களானல் நம்மால் எல்லா பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்ய இயலாவிட்டாலும் ஓரளவுக்கு அர்த்தமுள்ளவற்றை செய்து முடிக்க இயலும்.’
ஒபாமாவின் வெற்றிகளை அலசுபவர்கள் சொல்லும் முக்கிய குணாம்சம் இந்தப் பதிலில் வெளிப்படுகிறது. எதைக் குறித்தும் உயரிய எதிர்பார்ப்புக்களை உருவாக்க விளைவதில்லை ஒபாமா. நிதர்சனங்களை சாயம் பூசி மறைத்துவிடவில்லை. அரசியல்வாதிகளுக்கு மிக எளிதில் கைகூடுகிற ஆகாயக் கோட்டை கட்டும் வித்தைகள் இவருக்கும் கைகூடுமென்றாலும் அதை அவர் செய்யவில்லை. 28 வயது இளைஞனக ஹார்வர்ட் லா ரிவ்யூவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் நிதர்சனங்களை முன்வைத்து, “என்னைப் போன்ற ஒவ்வொரு வெற்றியாளருக்கும் என்னைப்போலவே சக்தியும், உத்வேகமும், திறமையும் கொண்ட ஆயிரம் கறுப்பின மாணவர்கள் (வெளியே) குற்றச் சூழலாலும், போதை கலாச்சாரத்தாலும் ஏழ்மையாலும் வாய்ப்புகளின்றி நிற்கிறார்கள்.” எனக் கூறினர். “என் தேர்தல் (நிலைமைகளில்) ஒரு முன்னேற்றம் ஆனல் இன்னும் செய்யப்பட வேண்டிய வேலைகள் அதிகம் என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது.” என்றார்.

தொடரும்…

நன்றி: வடக்கு வாசல்

Popularity: 9% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....2 மறுமொழிகள் to “வெற்றியின் குரல்-1”

  1. […] வெற்றியின் குரல்-1 […]

  2. […] வெற்றியின் குரல்-1 […]

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்