பத்துத்தலைவலி!

இந்த வார இறுதியில் ராவணன் படம் பார்க்கப் போயிருந்தோம். படம் முடிந்ததும் ‘வள வளண்ணு சொல்லாம ஒரே வார்த்தையில் சொல்லுங்க, படம் எப்படி?’ என்றார் நண்பர். ‘பத்துத்தலைவலி!’ என்றேன் விளையாட்டாக.
இரு வாரங்களுக்கு முன்பு இயக்குனர் மணிரத்தினம் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டரை மணி நேரம் ஐந்து எழுத்துலக நண்பர்களுடன் இலக்கில்லா உரையாடல்கள். உரையாடலின்போது அங்கிருந்த நம் நண்பர் உத்தம எழுத்தாளர் (ஒருவர் உத்தமராக இருப்பது மோசமானதா என்ன? அப்படியே அழைப்போமாக.) “ஒருவர் ஒரு கருத்தை அல்லது கோட்பாட்டை நிராகரிக்க அதற்கான காரணங்களைச் சொல்லவேண்டும், ஆனால் ஒரு கலைப்படைப்பை நிராகரிக்க அல்லது அங்கீகரிக்க அதற்கான காரணங்கள் தேவையில்லை. ‘ஏனோ எனக்குப் பிடிக்கல’
அல்லது ‘ஏனோ எனக்கு பிடிச்சிருக்கு’ என்பது ஒரு கலைப்படைப்பை விமரிசிக்கப் போதுமானது” என்றார். ராவணன் அப்படித்தான் பலருக்கும் காரணம் சொல்லத் தெரியாத ஒரு கலைப்படைப்பாக இருக்கிறது. ‘படத்தில் ஏதோ மிஸ்ஸிங். என்னண்ணு தெரியல’ என்றார் என் மைத்துனர்.

படம் மூன்று தளங்களில் நகர்வதாக நான் புரிந்துகொண்டுள்ளேன். ஒன்று லோக்கல் தாதா அல்லது தீவிரவாதி அல்லது நக்சலைட் அல்லது …. (யாருயா அவர்?) தன் தங்கையின் வாழ்வைக் குலைத்த போலிஸ் ஆஃபிசரின் மனைவியை கடத்திக்கொண்டு வருவதும் அவளை மீட்கவும் நடக்கும் ஒரு சாதாரண ஆக்ஷன் +பழிவாங்கும் (ஐ மிஸ் பழிவாங்கும் கதை சோ மச்!)  கதையின் தளம்.

இரண்டு அந்தக் காட்டுதாதாவுக்கும் கடத்தப்பட்ட ஆஃபிசரின் மனைவிக்குமிடையேயான ஒரு விவரிக்க முடியாத உறவு. (நமெக்கெல்லாம் ஒருதலைக் காதலென்றால் ராவணனுக்கு?)

மூன்றாவதாக ராவணன் எனும் பெயரைக் கொண்டிருப்பதாலும் கதையின் கரு மற்றும் கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கும் விதமும் இராமாயண காப்பியத்தை ஒத்திருப்பதால் அதற்கும் திரைப்படத்துக்குமான ஒப்பீடு.

இந்த மூன்று தளங்களையும் சேர்த்து படம் இயங்குவதால் பார்வையாளர்களால் கதையோடு ஈடுபாட முடியாமல் போய்விடுகிறது என்றே நினைக்கிறேன். பலரும் இராமாயணத்தினோடான ஒப்பீட்டில் இறங்கிவிட, இராவணனுக்கும் சீதாவுக்குமான புதிய உறவு வந்து பூசையில் நுழைந்துவிடுகிறது. இராவணன் என்ற டைட்டிலோடு வந்த படமானதால் இதை தவிர்ப்பது மிகவும் கடினமானது.

ஆக படத்தின் மிகப்பெரிய குறைபாடு அதன் தலைப்பாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். கர்ணனின் கதையை சொன்ன ‘தளபதி’யைப் போல, வெறும் முதல் இரண்டு தளங்களிலும் மட்டுமே இயங்கும் கதையை இயக்குனர் தந்துவிட்டு இராமாயண ஒப்பீட்டை நுண்ரசனையாளர்களுக்கு விட்டிருந்திருக்கலாம். அதற்கு வெறும் டைட்டிலை மாத்தினாலே போதுமாயிருந்திருக்கும். மற்றபடி கதையிலோ பாடல் வரிகளிலோ எந்த மாற்றமும் தேவையாயிருந்திருக்காது. அவை அப்படியே இருந்திருக்கலாம். இது மூன்றில் ஒரு குழப்பத்தை சாதாரண ரசிகர்களிடமிருந்து நீக்கியிருக்கலாம்.

இராமாயணக் கதையை பின்பற்றி மட்டுமே இந்தக் கதை எடுக்கப்பட்டிருந்தாலும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அதற்கு சில மாற்றங்களைச் செய்யலாம். இராமாயணத்தில் மிக முக்கியமான பாத்திரம் லக்ஷ்மணன். அந்தப் பாத்திரம் படைக்கப்பட்டிருக்கலாம். லக்ஷ்மண ரேகை, மாயமான், ஜடாயு, பாலம், அனுமன் இலங்கைக்குத் தீயிடுவது,  போன்ற மிக பாப்புலரான விஷயங்கள் விடப்பட்டுள்ளன.  இவற்றை அந்தக் கதையின் சூழலில் சொல்வது எளிது. மாய மானை
ராவண் பாத்திரம் போலிசின் கவனத்தை திருப்ப ஏதோ செய்வதாகக் கொண்டுவரலாம், அப்போது லக்ஷ்மணன் (இன்னொரு போலிஸ் அதிகாரி) ஒரு பாதுகாப்பு எல்லைக்குள்ளேயே நாயகியை இருக்கச் சொல்லிவிட்டுச் செல்லலாம். இராவணனை சந்திக்கும் கார்த்திக்(அனுமன்) ஒரு கயிற்றுச் சுருள் போன்ற இருக்கையொன்றில் அம்ர்ந்திருக்கலாம். சுவரஸ்யமாக இருந்திருக்கும். இப்படியாக கதை இராமாயணக் கதையை மட்டுமே ஒட்டி அமைக்கப்பட்டிருந்தாலும் மக்களால் இன்னும் சிறப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் என நம்புகிறேன். (என்ன ‘அது ஒரு இந்துத்துவப் பிரதி’ என நான்குபேர் திட்டியிருப்பார்களாயிருக்கும்.) இதில் இராவணன் பாத்திரம் காதலில் விழுவதை முற்றிலும் தவிர்த்திருக்க வேண்டும். காதல் இல்லாமல் படம் எடுப்பது கொலைக்குற்றமா என்ன?

வீராவின் காதலை படித்தவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடிகிறது என்று படத்திலேயே சொல்லிவிடுகிறார்கள். 12 படித்த தம்பிக்குத் தெரிகிறது படிக்காத அண்ணனுக்குத் தெரியவில்லை. இதே குழப்பம்தான் படம்பார்ப்பவர்களுக்கும். அதைப் புரிந்துகொள்ள ஒரு நுண்ணிய ரசனை தேவைப்படுகிறது போலும். எனக்கெல்லாம் இது பிடிபடவே இல்லை. ‘பொறாமை’ அது இது என்று ஏதேதோ தத்துவார்த்த வெளிகளில் அதை நிகழ்த்தப்பார்க்கிறார்கள்.  பிடிபடவில்லை. அதுவும் ‘தங்கையின் அகால மரணத்தின் வடு வாடாத நாயகன் இப்படி வழிவாரா?’ என்றெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது. எததனை தத்துவார்த்தமாயிருந்தாலும் வழிகிறது வழிகிறதுதானே?

முதல் பாதியில் இராமாணத்தை ஒப்பிடும் குறுநிகழ்ச்சிகளை, பாத்திரங்களை இன்னும் சேர்த்திருக்கலாம். இதற்காகவே காத்திருந்த பக்கத்து சீட் பாட்டி கார்த்திக் பறப்பதைக் கண்டதும் ‘டேய் அனுமாரு’ என்று கத்தியேவிட்டர்.

படமாக்கப்பட்ட விதத்தில் இராவணன் பல உலகப்படங்களையும் மிஞ்சிவிட்டது என்றே சொல்லவேண்டும். அத்தனை டெக்னிக்கல் நேர்த்தி. இது ஒரு அழகியல் படமேயன்றி யதார்த்த படம் அல்ல. ஒரு காட்சியில் அது எத்தனை யதார்த்தமாய் உளது என்பதைவிட  எத்தனை அழகாய் தோன்றுகிறது என்பதே முக்கியம் பெற்றிருக்கிறது. த மிஷன் எனும் தென்னமெரிக்க அருவி+காடுகளில் எடுக்கப்பட்ட படத்தை நினைவூட்டியது ராவணனின் படமாக்கல். கதாபாத்திரங்கள் கூட அழகியல் நோக்கோடேயே படைக்கப்பட்டிருக்கின்றன. த மிஷன் ஒரு யதார்த்தம் சொல்லும் அழகிய படம் என்பதையும் குறிப்பிட வேண்டும். உள்ளூரிலேயே படப்பிடிப்பை நிகழ்த்தி இங்கிருக்கும் அழகை திரையில் காட்டியிருப்பது பாராட்டத்தகுந்தது.

மணியுடனான சந்திப்பில் (தன்னை மணி என்று மட்டுமே அறிமுகம் செய்துகொண்டார்) அவரிடம் நண்பர் ஷாஜி நேட்டிவிட்டி குறித்து கேள்வி ஒன்றை கேட்டார். மணி அது இந்தியாவில் செய்வது எளிது என்றார். திருடா திருடாவின் வட இந்திய ஆடை உடுத்திய நெல்லைத்தமிழச்சி குறித்து நான் சொன்னபோது திருடா திருடா ஒரு “ஃபன்”/பொழுதுபோக்கு படம்தான் என்றார். உண்மைதான். அதுபோலவே ராவணனும் ஒரு மிகைப்படைப்பே.

இராமகாவியத்தை தற்காலக் கதையாக்கிச் சொல்வதற்கு ஏற்ற கதைக்களன் ஒன்றை உருவாக்கியதற்கு பாராட்டப்படவேண்டிய படைப்பாகவே ராவணன் உள்ளது. அதை மட்டுமே முழுமையாகச் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அல்லது ராவணன் எனும் டைட்டிலை நீக்கிவிட்டு திரன், வீரன், சூரன், “உலக
நாயகன்” (டைட்டிலுக்கா பஞ்சம்) என ஏதேனும் ஒன்றோடு படம் வெளிவந்திருக்கலாம். அப்போது ஒரு வித்தியாசமான படமாக அமைந்திருக்கும். குழப்பங்கள் குறைந்திருக்கும். சீதை ராவணனோடே தங்கியிருந்தாலும்
பிரச்சனையிருந்திருக்காது. (மணி வீட்டின் முன்பு இன்னொர் குண்டு விழுந்திருக்கலாம்.)

என்னதான் அலசினாலும் ஆராய்ந்தாலும் ‘படத்தில் புதியது ஏதொவொன்றை சொல்லவருகிறார்கள் நமக்குத்தான் பிடிபடமாட்டேன் என்கிறது’ எனும் தோற்றம் இருந்துகொண்டேயிருக்கிறது. இதை யோசித்துக்கொண்டிருந்தால் பத்துத்தலைவலி வந்து சேரலாம் என்பதால் இத்தோடு முடித்துக்கொள்கிறேன் டண் டண் டண்டண்
டணக்கா.

பின் குறிப்பு 1: அமெரிக்காவில் பல பகுதிகளில் தமிழ் சினிமாக்களை தரம் குறைந்த, சவுன்ட் சிஸ்டங்கள் சரியில்லாத திரையரங்குகளில் வெளியிடுகிறார்கள். சென்னை திரையரங்கில் படம் பார்த்தது சிறப்பான
அனுபவமாய் அமைந்தது. உலகத்தரம்தான் போங்கள்.

பின் குறிப்பு 2:எனக்கு மிகப் பிடித்த கதாபாத்திரம் பத்து தலைகள் கொண்ட இராவணன். கல்லூரிநாட்களில் ‘இராவணான் என் நாயகன்’ என ஒரு கார்ட்டூன் புத்தகம் போடத் திட்டம் ஒன்று வைத்திருந்தேன். தேர்தல் நேரத்தில் ஒரு கார்ட்டூன் போட்டோம். பத்துத் தலை இராவணன் ஓட்டுப்போட வ்ந்துள்ளார். தேர்தல் அதிகாரி தொலைபேசியில் யாரிடமோ கேட்கிறார்,”சார் தலைக்கொரு ஓட்டா? இல்ல ஆளுக்கொரு ஓட்டா” என்று.

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....21 மறுமொழிகள் to “பத்துத்தலைவலி!”

 1. siddhan555 சொல்கிறார்:

  அப்ப அடுத்த மணி ஸார் படத்துக்கு ஜெயமோகன் வசனம்?

 2. I wish!

 3. சார்லஸ் சொல்கிறார்:

  //ஆக படத்தின் மிகப்பெரிய குறைபாடு அதன் தலைப்பாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். கர்ணனின் கதையை சொன்ன ‘தளபதி’யைப் போல, வெறும் முதல் இரண்டு தளங்களிலும் மட்டுமே இயங்கும் கதையை இயக்குனர் தந்துவிட்டு இராமாயண ஒப்பீட்டை நுண்ரசனையாளர்களுக்கு விட்டிருந்திருக்கலாம்//

  மிகச் சரியான கருத்து

 4. //“உலக
  நாயகன்” (டைட்டிலுக்கா பஞ்சம்) என ஏதேனும் ஒன்றோடு படம் வெளிவந்திருக்கலாம்//

  உலக நாயகன் மீது உங்களுக்கு ஏன் கடுப்பு ? தசவதாரம் பத்து தலைகளாலும் தலைவலி ஏற்படுத்த வில்லையே……
  :)

 5. கோவி,
  லாஸ்ட் ஏர் பெண்டர் ஆங்கிலப் படத்துக்கு உலக நாயகன் எனத் தமிழில் பெயரிடப்பட்டிருப்பதை ரசித்தேன் அதையே இதில் குறித்துள்ளேன். :)

 6. prem சொல்கிறார்:

  dont forget about trying to make a hindi and a tamil movie at the same time with different sensibilities as well…i think that was a big issue

 7. ramji_yahoo சொல்கிறார்:

  ராவணன் மட்டும் அல்ல குருவும் இப்படித் தான், மணி (ரத்னம் என்பது மணியின் தந்தையின் பெயர்(gopala rathnam), சுப்பிரமணி என்றே நாம் கூபிடுவோம்- டிக் டிக் டிக் பட டைட்டில் கார்டு போல – அசொசியாடே இயக்கம் சுப்பிரமணி- கமல்ஹாசன்), அடுத்த படத்தை எடுக்கும் பொழுது தமிழக பார்வையாளர்களை மட்டும் கருத்தில் கொண்டு எடுத்தால் மட்டுமே, அக்னி நட்சத்திரம், இதய கோவில், unaru, மௌன ராகம் , இதயத்தை திருடாதே போன்ற படத்தை எடுக்க முடியும்.
  அதை விடுத்து மணி ஹிந்தி மார்க்கட்டை குறி வைத்து எடுத்தால் குரு, ஆளவந்தான், ஆயுத எழுத்து, ராவணன் போன்ற படங்களை தான் தர முடியும்.
  என் கவலை எல்லாம், மணி போலவே எந்திரனுக்கு அப்புறம் ஷங்கரும் மாறி விடுவாரோ என்பதே.

 8. ramji_yahoo சொல்கிறார்:

  மணி யையும் கமலையும் குறை சொல்ல கூடாது, எத்தனயோ நல்ல படங்கள் தந்து உள்ளனர்.

  இருந்தும் புலியை பார்த்து பூனையும் சூடு/கோடு போட்டு கொண்டது என்பது போல, எ ஆர் ரஹ்மானை பார்த்து இவர்களும் அகில இந்திய அளவு, பன்னாட்டு புகழ் மோகத்தில் பேராசையில் விழுந்து இருந்த புகழையும் பெயரையும் இழக்கின்றனர்.

 9. c.p.senthilkumar சொல்கிறார்:

  நல்ல அலசல்.20 நாள் முன்னால் வந்திருந்தால் இன்னும் நல்லா ரீச் ஆகி இருக்கும்

 10. Prem,
  Making Hindi and Tamil at the same time could have contributed to some compromises. But this could still have been made in both languages with a focused screenplay.

 11. //என் கவலை எல்லாம், மணி போலவே எந்திரனுக்கு அப்புறம் ஷங்கரும் மாறி விடுவாரோ என்பதே.//

  Let him go. Let them all go. We have great new directors who make stories from our own lands, who needs stories plucked from the skies? They will be welcome as long as they are good :)

 12. prem சொல்கிறார்:

  still…ravanan was a good movie.

  want something amazing? see inception

 13. //20 நாள் முன்னால் வந்திருந்தால் …./
  படமும் 5 வருடங்களுக்கு முன் வந்திருந்தால் சூப்பராய் இருந்திருக்கும்(கலாம்) :))

 14. ஜோ சொல்கிறார்:

  முக்காலும் ஒத்துப்போகிறேன்.

 15. Haranprasanna சொல்கிறார்:

  மணிரத்னத்தைப் பார்த்த பாதிப்பால் வந்த கருத்தாய் இருக்கலாம் நீங்கள் சொல்வது. மற்றபடி ராவணன் என்னும் மொன்னைப் படம் எந்தப் பெயரில் வந்தாலும் இப்படித்தான் இருந்திருக்கும். ஒரு பெயரை மாற்றினால் படம் சூப்பர் ஹிட்டாகிவிடும் என்னும் கருத்தை முன்வைத்து, சினிமாவுக்கு ஆங்கில எழுத்துகள் எழுதித் தரும் நியூமரலாஜிஸ்டுகள் லிஸ்டில் சேர்ந்துவிட்டீர்கள் ஐயா!

 16. வேணு சொல்கிறார்:

  நன்றி சிறில் ஐயா, நன்றி!
  எனக்கு ஒரு தலை மட்டுமே இருப்பதாலும் அதில் ஏற்கனவே சில பல வலிகள் இருப்பதாலும் ராவணன் பார்க்கும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டேன்!

 17. வேணு,
  ராவணன் ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம். கொஞ்சம் பொறுமை வேண்டும். படமாக்கல் சிறப்பாயுள்ளது. பெரிய திரையில் இன்னும் சிறப்பாக உணர முடியும்.

 18. பிரசன்னா,
  இராமாயணத்தோடான ஒப்புமை இல்லாமல் பார்த்தால் படம் வித்தியாசமாக இருந்திருக்கும் என நம்புகிறேன். மற்றபடி நூமராலஜியெல்லாம் நமக்குத்தெரியாது :)

 19. Anonymous சொல்கிறார்:

  சிறில், எப்படி இருக்கீங்க?

  //நமெக்கெல்லாம் ஒருதலைக் காதலென்றால் ராவணனுக்கு?//

  :)

  //பின் குறிப்பு 1: அமெரிக்காவில் பல பகுதிகளில் தமிழ் சினிமாக்களை தரம் குறைந்த, சவுன்ட் சிஸ்டங்கள் சரியில்லாத திரையரங்குகளில் வெளியிடுகிறார்கள். சென்னை திரையரங்கில் படம் பார்த்தது சிறப்பான
  அனுபவமாய் அமைந்தது. உலகத்தரம்தான் போங்கள்.//

  ஓவர் சத்தமாக இல்லையா? என் 4 வயது மகள் பயந்து அலறுகிறாள்!! சத்தம் கொஞ்சம் அதிகம் என்பது என் கருத்து.

  //படமாக்கப்பட்ட விதத்தில் இராவணன் பல உலகப்படங்களையும் மிஞ்சிவிட்டது என்றே சொல்லவேண்டும். அத்தனை டெக்னிக்கல் நேர்த்தி//

  இதுக்காக மட்டுமே இந்தப் படத்தைப் பாக்கலாம்னு இருக்கேன்!

 20. சிறில், எப்படி இருக்கீங்க?

  //நமெக்கெல்லாம் ஒருதலைக் காதலென்றால் ராவணனுக்கு?//

  :)

  //பின் குறிப்பு 1: அமெரிக்காவில் பல பகுதிகளில் தமிழ் சினிமாக்களை தரம் குறைந்த, சவுன்ட் சிஸ்டங்கள் சரியில்லாத திரையரங்குகளில் வெளியிடுகிறார்கள். சென்னை திரையரங்கில் படம் பார்த்தது சிறப்பான
  அனுபவமாய் அமைந்தது. உலகத்தரம்தான் போங்கள்.//

  ஓவர் சத்தமாக இல்லையா? என் 4 வயது மகள் பயந்து அலறுகிறாள்!! சத்தம் கொஞ்சம் அதிகம் என்பது என் கருத்து.

  //படமாக்கப்பட்ட விதத்தில் இராவணன் பல உலகப்படங்களையும் மிஞ்சிவிட்டது என்றே சொல்லவேண்டும். அத்தனை டெக்னிக்கல் நேர்த்தி//

  இதுக்காக மட்டுமே இந்தப் படத்தைப் பாக்கலாம்னு இருக்கேன்!

 21. vannai rajan சொல்கிறார்:

  Every film of mani ratnam has had a social message intertwined with the current events. probably mani was always impressed with veerapan and tried to bring his antics to the fore. No wonder why the film fared better in Tamil than in Hindi. Of course, vikram became veeraiya but abishek, for all his efforts, couldnt quite emulate the forest brigand. Well, as i see it, something like avatar, mani tried to bring out the tribals living methods, their shelters, their festivals, the way they herd their cattle… (fabulous) but there are few loose strands.
  But definitely raavanan is miles ahead of ‘kalavani’.
  every film aesthetist would support me.
  And cyril, for all the praises u have heaped upon the film in your latter part of critique, ur title is indeed ironic!

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்