விபத்து
70 கி.மி என டிஜிட்டலில் சொன்னது வேகம் காட்டும் கருவி. சாலையில் யாருமில்லை ஒரே ஒரு நாயைத் தவிர. இரண்டு கிலோமீட்டர்களுக்குள் ஒரு வீட்டைக்கூட நான் காணவில்லை. அந்த நாய் சாலைக்குள் வரவா வேண்டாமா என ஆலோசித்துக்கொண்டிருந்தது. என் பைக்கின் சப்தம் அதை பயமுறுத்திவிடும் எனும் நம்பிக்கையில் க்ளட்சை பிடித்து ஆக்சிலேட்டரை திருப்பினேன். வ்ர்ர்ரூரூம் என்று அலறியது எஞ்சின். நாய் என்ன நினைத்ததோ தடாரெனக் குதித்து சாலைக்குள்வந்தது. மறுகணம் வண்டி சரிந்து சாலையில் தீப்பொபொறிபறக்க சறுக்கிக்கொண்டிருந்தது. நான்? நானும் சாலையில் சறுக்கிக்கொண்டிருந்தேன். சுதாகரித்துக்கையை ஊன்றி என் சறுக்கலை நிறுத்த முயன்றேன். ‘தஞ்சாவூர் 27 கி.மீ’ மைல்கல் என் கண்களுக்கு மிக அருகில் தெரிந்தது. கல்லில் தலை மோதியதியதும் என் சறுக்கல் நின்றது.
உள்ளங்கைகள் இரண்டிலும் படுகாயமாகியிருந்தது. இடதுகையில் ஆழமாக இரண்டு இஞ்ச் கீறல். நரம்பு வெட்டப்பட்டதைப்போல ரத்தம் சீரான வேகத்தில் கொட்டிக்கொண்டிருந்தது. இடது காலைத் தூக்க முடியவில்லை. மைல் கல்லில் சாய்ந்தேன். நாய் சாலையைக் கடந்துவிட்டிருந்தது, ஒரு காலை நொண்டிக்கொண்டே நடந்ததுபோலிருந்தது. தூரத்திலிருந்து ஒரு நடுவயதுப் பெண்மணியும் கொஞ்சம் வயதானப் பெரியவரும் என்னை நோக்கி ஓடி வந்துகொண்டிருந்ததைப்போலத் தெரிந்தது. காட்சி சிவப்பானது. தலையிலிருந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்ததை உணர்ந்தேன். தலை சுற்றியது.
கொஞ்சம் நினைவுவந்தபோது யாரோ பெண் பரபரப்புடன் பேசிக்கொண்டிருந்தது தெரிந்தது. அந்தப் பெண்மணியாகத்தான் இருக்கவேண்டும். ‘கொஞ்சம் வேகமா போ நைனா!’ குரல் அழுகையில் உடைந்திருந்தது. ‘இரு.. இரு..’ என்றார் பெரியவர். மூன்று சக்கர லோட் வண்டியில் கிடக்கிறேன் என யூகிக்க முடிந்தது அந்தப் பெண்மணி சேலையை கிழித்து என் கையில் கட்டு போட்டிருந்தார். என் தலையில் முந்தானையை சுருட்டி இரத்தம் வராமல் அழுத்தம் கொடுத்திருந்தார். ‘தம்பி…’ பெண்மணி என்னிடம் பேச முயன்றார். நான் பதில் சொல்ல முயன்றேன் முடியவில்லை. ‘நைனா புள்ள அர மயக்கத்துல இருக்கு… சீக்கிரம் போ.’ என்றாள் மீண்டும்.
அடுத்து நான் கண்விழிக்கும்போது சித்தி அருகில் நின்றுகொண்டிருந்தாள். சித்தி பையன் தீபக்கின் குரல் கேட்டது. ‘டேய்! நர்சக் கூப்பிடு இவனுக்கு மயக்கம் தெளிஞ்சிடுச்சு.’ என்றாள் சித்தி. மருந்து நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. அது அரசு மருத்துவமனைதான் என என்னால் எளிதில் யூகிக்க முடியும்படி இருந்தது அறை.
‘சித்தி!’ என்றேன்
‘படுத்துக்கப்பா. இப்ப நர்ஸ் வந்திருவாங்க’ என்றாள் சித்தி.
தலையில் ஒரு மைனர் அறுவை சிகிச்சையே செய்து முடித்திருந்தார்கள். சாலையில் தலை குப்பிற விழுந்திருக்கிறேன். தலையில் மேல் தோலுக்குள் கல்லும் மண்ணும் தாரும் உள்ளே பதிக்கப்பட்டதைப்போல ஒட்டியிருந்திருக்கின்றன. இடது உல்ளங்கயில் நான்கு தையல்கள். வலது உள்ளங்கையில் இரண்டு. இடது காலில் ஒரு முடியளவு எலும்புமுறிவு, ஒரு சுழுக்கு.
‘ஹெவியா ப்ளீட் ஆகியிருக்குமா’ சித்தி ‘மா’ சேர்த்துதான் என்னோடு பேசுவாள். ‘அந்தப் பெரியவரும் அந்தம்மாவும் இல்லைண்ணா நீ அங்கேயே மயங்கி கிடந்திருப்ப. இட் ஈஸ் அ காட் ஃபர்சேக்கன் ப்ளேஸ்மா. ரோட் ஃப்ரீயா இருந்தா எல்லாரும் என்ன வேகமா ஓட்டுறாங்க. ஈவன் எவனாவது லாறிக்காறன் வந்து ஒன்ன ஏத்திட்டுப் போயிருந்தாலும் போயிருப்பான்.’ கண்ணீர் தேங்கியது. ‘காட் ப்ளெஸ் தெம்!’.
‘சித்தி நீ எப்படி இங்க வந்த?’ என்றேன். தீபக் என் செல்ஃபோனை உயர்த்தி அசைத்துக் காண்பித்தான்.
‘ஒன் மந்த் ரெக்கவரி’ என்றார் டாக்டர். ‘ஈவினிங் ஆம்புலன்ஸ் வச்சி உங்க ஆஸ்பிட்டலுக்கு கொண்டுபோங்க. இப்ப வேண்டாம். லெட் ஹிம் டேக் சம் ரெஸ்ட்.’ சித்தியிடம் சொன்னார்.
மாலை தனியார் மருத்துவமனை வந்து சேர்ந்தோம். சித்தப்பா அங்குதான் பைபாஸ் செய்துகொண்டார். இதயம் துடித்து இரத்தம் உடலில் பரவும்போதெல்லாம் காயங்கள் வலித்தன.
ஒரு வாரம் கழித்து வீடு வந்து சேர்ந்தேன். சித்தி வீட்டுக்கு வந்தவர்கள் எல்லோரிடமும் என்னை மருத்துவமனையில் சேர்த்த தம்பதிகளைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தாள். ‘நாம இப்படி செய்வோமா? நாமெல்லாம் கார் அழுக்காயிரும்ணு பாப்போம். அப்புறம் போலிஸ் கேசாகும்ணு பாப்போம். ஒரு ஆளோட உயிர் போகுதேண்ணு நாம யோசிக்கிறதில்ல. ஒருத்தன் உயிர காப்பாத்துறதுக்கு சில மைனர் கம்ஃபர்ட்ஸ்கள விட்டுக்குடுக்க நாம தயாராயில்ல பாருங்க.’
‘சித்தி. நீ அவங்களப் பாத்தியா?’ என்று கேட்டேன். ‘இல்லையே. நாங்க வந்து சேர்றதுக்கு த்ரீ அவர்ஸ் ஆயிடுச்சு. நர்ஸ்தான் சொன்னாங்க. உன்ன ஒரு லோட் வண்டில போட்டு ஒரு பெரியவரும் ஒரு அம்மாவும் கொண்டு சேர்த்தாங்கண்ணு. இன் ஃபாக்ட் டாக்டர் வர்றதுக்குள்ள அவங்க போயிட்டாங்கண்ணு சொன்னாங்க.’
‘அப்புறம் எப்ப்டி எனக்கு ட்ரீட்மென்ட் குடுத்தாங்க?’
‘உன்னோட செல்ஃபோன்ல ஹோம்ணு நீ வச்சிருந்த நம்பர்ல நம்ம வீட்டுக்குப் கால் பண்ணாங்க. ஐ ரிக்குவெஸ்டட் தெம் டு ஸ்டார்ட் ட்ரீட்மென்ட். சித்தப்பாவும் பேசுனாரு.’
என் சித்தப்பா சப் இன்ஸ்பெக்டர். சித்தி முன்னாள் பேராசிரியை. சுயவிருப்ப ஓய்வு பெற்றிருந்தாள். சித்தி என் விபத்தைப்பற்றி பேசும்போதெல்லாம் காலியான அந்த ரோடும், கால் நொண்டும் நாயும் பெண்மணியின் அழுகுரலும் எண்ணத்தில் தோன்றி மறைந்தன.
இரண்டு வாரங்கள் கழித்து கொஞ்சம் நடமாட ஆரம்பித்தேன். வெளியில் பைக் குப்பைபோல குவித்துவைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்தபின்புதான் விபத்தின் வீரியம் புரிந்தது. சித்தி இனி பைக்கில் போகக் கூடாதென்றும் இரண்டு லட்சத்துக்குள் ஒரு பழைய கார் வாங்கிக்கொள் என்றும் சொன்னாள். ஒரு சான்ட்ரோவை வாங்கிக்கொண்டேன்.
இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் நிலம் பார்க்கப் போக வேண்டியிருந்தது. காரில் கிளம்பினேன். ‘இந்தத்தடவை பாத்து வாங்க சார்.’ என்று எச்சரித்தார் புரோக்கர். ‘ஒவ்வொருவாட்டியுமா விழுவாங்க?’ என்று சொல்லி சமாளித்தேன்.
இந்தமுறை கார். வேகம் ஐம்பதைத் தாண்டவில்லை. சாலையின் வெறுமையில் எண்ணங்கள் அந்த நாளின் சொற்ப நினைவுகளை அசைபோட்டன. அந்தப் பெண்மணி அழுதுகொண்டிருந்தாள். அவள் ஏன் அழவேண்டும்? அவளுக்கும் எனக்கும் என்ன உறவு? இரத்ததைக் கண்டு பயந்திருப்பாளோ? ஒரு அன்னியனின் உயிர் போய்விடும் எனும் கவலையாயிருக்கலாம், அதற்கு நாமும் காரணமாய்விடுவோமோ என்கிற குற்ற உணர்வாயும் இருக்கலாம். ஆறு வயது முதல் என்னை வளர்த்த சித்திகூட ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லையே.
அவர்களைத் தேடிப்போய் பார்த்தால் என்ன எனத் தோன்றியது. நான் விழுந்த இடத்தில் எந்த வீடும் இல்லை. ஒரு வேளை சாலையின் பக்கத்திலிருக்கும் சரிவின் பின்னால் ஏதேனும் வீடுகள் இருக்குமோ? வழியில் பழக்கடையில் கொஞ்சம் பழங்கள் வாங்கிக்கொண்டேன். வெறுங்கையோடு யாரையும் பார்க்கச் செல்லக்கூடாது என்பது என் சித்தியின் பழக்கம். என்னைப்போன்ற ஒரு நவநாகரீக இளைஞன் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவானா என்ற சந்தேகம் எழுந்தது.
நான் விழுந்த இடத்துக்கருகில் ஓரத்தில் வண்டியை நிறுத்தினேன். சரிவில் எட்டிப் பார்த்தேன். நினைத்ததுபொலவே அங்கே ஒரு சிறிய பழைய ஓட்டுவீடு ஒன்று தனித்திருந்தது. சரிவில் இறங்கி நடந்தேன்.
என்னைக் கண்டதும் அங்கிருந்த நாய் குரைதது. ‘நாயெ சும்மா கெட’ என்றபடி வெளியே வந்தார் ஒரு பெரியவர். பழைய அரை நிக்கர் ஒன்றை போட்டிருந்தார். நரையில் வயது தெரிந்தாலும் இன்னும் உழைத்துக்கொண்டிருக்கிறார் என்று அவரின் உடலைக் கண்டதும் சொல்லிவிடலாம். எனக்கு அவரை அடையாளம் தெரியவில்லை.
நான் வருவதைப் பார்த்ததும் என்னை நோக்கி வந்தார். ‘தம்பி. உடம்பெல்லாம் சரியாச்சா?” என்றார். தாத்தா என்பதா மாமா என்பதா சார் என்பதா. குழப்பம் முடியுமுன்பே பேசிவிட்டேன் ‘ஆமா அங்கிள்.’
‘வா வா.’ வீட்டுத் திண்ணைக்கு அழைத்துச் சென்றார். வெளிறிப்போன சிவப்பு பிளாஸ்டிக் இருக்கையில் அமரும்படி கையசைத்துவிட்டு திண்ணையில் உட்கார்ந்தார்.
‘நல்ல வேள சீரியசா ஆகல. எவ்ளோ ரத்தம். அங்க பாத்தியா?’ முழுதும் ரத்தக் கறைபடிந்த பனியன் ஒன்று வேலியில் தொங்கிக்கொண்டிருந்தது. சில வினாடிகள் இருவரும் அதை வெறித்துப் பார்த்தோம் வெவ்வேறு காரணங்களுக்காக.
‘உங்க உதவிக்கு ரெம்ப நன்றி.’ கூச்சத்துடன் சொன்னேன்.
‘பரவாயில்ல தம்பி. எம் பொண்ணுதான் பதறிப் போயிட்டா. ஒன் வண்டி சறுக்கிப்போன சத்தம் கேட்டதும் ‘நைனா யாரோ ரோட்ல விழுந்துட்டாங்கண்ணு’ என்னக் கூப்பிட்டா. வந்து பாக்குறப்போ நீ மயங்கிட்ட. கொஞ்ச நேரம் ஏதாச்சும் வண்டி வருதாண்ணு பாக்கலாண்ணு சொன்னேன். ரெண்டு மூணு காருங்க போச்சு யாரும் நிறுத்தல. லாறிக்காரனும் நிறுத்தல. எம் பொண்ணுதான் நைனா நம்ம வண்டியிலயே கொண்டு போயிரலாம்ணா. எடுத்து போட்டு தர்மாஸ்பத்திரிக்கே கொண்டுபோயிட்டோம். பொண்ணு கடைக்கு போயிருக்கா இப்ப வந்திருவா. ஒன்னப் பாத்தா சந்தோஷப்படுவா.’
பழங்களிருந்த பையை கீழே வைத்தேன்.
நாய் குழைந்தது. அந்தப் பெண்மணி இரண்டு பிளாஸ்டிக் பைகளில் பொருட்களோடு வந்து சேர்ந்தாள். “யார் வந்திருக்கா பாத்தியா?” என்றார் பெரியவர். நான் எழுந்து நின்று புன்னகைத்தேன். என்னைப்பார்ததும் அந்தப் பெண்மணியின் கண்கள் கலங்கின. அழுதேவிட்டார். கண்களைத் துடைத்தபடியே விசும்பலுடன் வீட்டுக்குள்ளே சென்றுவிட்டாள். எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது. அவள் கண்ணீருக்கு என்ன அர்த்தம்? ஏன் அழுகிறாள்?
பெரியவரைப் பார்த்தேன். அவர் எங்கோ வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தார். ஆழ்ந்த மௌனம் கவியத் துவங்கியது. அதன் அர்த்தங்களை புரிந்துகொள்ளுமளவுக்கு எனக்கு முதிர்ச்சியில்லை. உள்ளே அந்தப் பெண்மணியின் விசும்பல் கேட்டுக்கொண்டிருந்தது. அந்தச் சூழலை தனியே சமாளிக்க எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
அடுத்தமுறை சித்தியை கூட்டிக்கொண்டு வந்துவிடவேண்டும் என முடிவு செய்து கிளம்பத் தயாரானேன்.
வீட்டுக்குள் எட்டிப்பார்த்து ‘ரெம்ப நன்றி ஆன்டி..’ என்றேன். அழுதபடியே அவர் மெதுவாகத் தலையாட்டினார். சில விநாடிகள் வாசல் அருகிலேயே நின்றுவிட்டு திரும்பும்போதுதான் சுவற்றில் மாலைபோட்டிருந்த இளைஞனின் புகைப்படம் கண்ணில்பட்டது.
==========
வடக்கு வாசல் (Sep 2010)
Popularity: 3% [?]
Print This Post
இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப
RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....
September 9th, 2010 at 8:41 am
ஒரு தாழ்மையான வேண்டுகோள் சார்-
அந்தக் கடைசி வாக்கியத்தை மட்டும் தூக்கிருங்களேன். என்ன நடந்திருக்கும்னு சரியாகவே ஊகிக்க முடியுது. அப்புறம் அதையே படிக்கறது பெரிய லெட்-டவுன். அது இல்லன்னா பிரமாதமா இருந்திருக்கும், அட் லீஸ்ட் எனக்கு.
மற்றபடிக்கு நல்ல கதை நன்றி
September 9th, 2010 at 6:24 pm
appadiyae oru vipathai kan munnae kondu vanthu pathara vaithu vitterkal. enna mathri ulla soft heart ellam vedichudum.
September 9th, 2010 at 6:27 pm
appadiyae oru vipathai kan munnae kondu vanthu pathara vaithu vitterkal. enna mathri ulla soft heart ellam vedichudum. rembavae pathicha kathai.
September 9th, 2010 at 9:37 pm
yenna ya solla vara….onnume puriyala! yen intellect levelku ithu romba jasthi!
intha kathaiku konar tamil urai kedaikuma?
September 11th, 2010 at 5:20 pm
எதிர்பார்த்த முடிவு தானெனினும் நம்பகத்தன்மையை உருவாக்கும் நடையும் சித்தரிப்பும் …
//‘நாயெ சும்மா கெட’ என்றபடி வெளியே வந்தார் ஒரு பெரியவர்//
அதீத கருணை உணர்வுள்ளவர்கள் நாயை நாயே என்று அழைப்பதில்லைஎன நினைக்கிறேன் சிறில் …
November 2nd, 2010 at 10:24 am
மிக அழகான கதை. அந்த முடிவு சொல்லாமலே புரியக்கூடும் ஆனால் சொன்ன விதம் கவிதை.
November 16th, 2012 at 9:44 am
நல்ல கதை கண்கள் கலங்கி விட்டன . உங்கள் சொல்லும் விதம் நன்று . முடிவு சிறிது நன்றாகவில்லை
December 11th, 2014 at 7:49 pm
Thiinkng like that shows an expert at work