கனவுக் களவாணி ~ Inception

உலக கார்ப்பரேஷன்கள் பச்சைக் காசுக்காக எதையும் செய்யத் துணிந்துவிட்ட காலம் இது. உலகின் பலம்வாய்ந்த அரசாங்கங்கள் இன்று கார்பரேஷன்களின் கைப்பொம்மைகள். நமூரில் சாதி ஓட்டுக்காக செய்யப்படும் அரசியல் சமரசங்கள் பெரிய நாடுகளில் கார்பரேட் ஆதரவுக்காக செய்யப்படுகின்றன.

இந்த சர்வாதிகார வியாபாரிகளின் அதிமுக்கிய மூலப்பொருள் ‘தகவல்’. இன்று பல வழிகளில் நம்மைப்பற்றிய தகவல்களை கார்ப்பரேஷன்கள் பெற்றுக்கொண்டேயிருக்கின்றன. கருத்துக்கணிப்புக்களில் சாதாரணமாகத் தோன்றும் கேள்விகளுக்கு நாம் பதிலளிக்கிறோம். ஆனால் அதிலிருந்து பலவிதமான தகவல்களை அவர்கள் பிரித்தெடுக்கிறார்கள். அவற்றின் அடிப்படையில் வியாபார முடிவுகளை எடுக்கிறார்கள். அதே போல நம்மைக் குறித்த தனிப்பட்ட தகவல்களையும் மிக எளிதாக பல வழிகளில் பெற்றுக்கொண்டே இருக்கின்றன தொழில் நிறுவனங்கள். ஒரு தேர்தலில் எந்தப் பகுதியில் எந்தக் கட்சி வெற்றிபெறும் எனும் தகவல் ஒரு பெரிய தொழில் நிறுவனத்துக்குத் தேவைப்படும் மிக முக்கியத் தகவல். அதேபோல ஒரு பகுதியிலிருக்கும் மக்களின் கல்வி, உழைப்பின் தரம், சமூகப் பழக்கங்கள் என பல தகவல்களையும் சேகரித்த பின்னரே அங்கு வியாபாரம் செய்ய முன்வருகிறார்கள். இப்படி இல்லாமல் செய்யும்போது பெங்காளிலிருந்து குஜராத்துக்கு ஓடவேண்டிவரும்.

தகவல் சேகரிப்பின் இன்னொரு முகம் ‘இன்டஸ்ட்ரியல் எஸ்பியனேஜ்’ எனப்படும் தகவல் துப்பறிதல். அரசாங்கங்களின் ஒற்றர்களைப்போல தொழில்நிறுவனங்களும் ஒற்றர்களையும், துப்பறியும் நிபுணர்களையும் கொண்டு தன் போட்டியாளரின் நகர்வுகளைத் தெரிந்துகொள்வதும், அவர்களின் திட்டங்களை தோற்கடிப்பதும் நடக்கின்றன. ‘மிஸ்டர் பாரத்’ படத்தில் கார்பன் பேப்பர் திருடுவது நியாபகம் வருகிறது.

இந்தப் பின்னணியைக் கொண்டு ஒரு அதிரடி த்ரில்லரை உருவாக்க முடியும். ஏற்கனவே சில படங்கள் வந்துள்ளன. கிரிஸ்டோபர் நோளன் இன்செப்ஷனில் இதை ஒரு சின்ன இழையாகக் கொண்டு ஒரு அற்புதமான அறிவியல் த்ரில்லரை உருவாக்கியுள்ளார்.

உங்கள் ஆழ்மனதில் ஒரு இரகசியம் புதைந்துள்ளது. அதை எப்படித் திருடுவது? அதற்கு உங்கள் கனவுக்குள்ளே நாங்கள்  நுழைந்தாகவேண்டும். கனவில்தான் ஆழ்மனம் வெளிப்படுகிறது. ஒருபடி மேலே போய் உங்களுக்கெனெ ஒரு கனவை நாங்களே வடிவமைத்துத் தருகிறோம். கனவில் உங்களுக்கு மிகப் பரிச்சயமான இடங்களும் பொருட்களும் தோன்றி உங்களுக்கு பாதுகாப்புணர்வைத் தருகின்றன. அங்கே ஒரு இரகசியமான இடத்தில் ஒரு பாதுகாப்புப் பெட்டகமொன்றை வடிவமைக்கிறோம். உங்கள் ஆழ்மனது அதை ஒரு பாதுகாப்பான இடமாக உணரும்போது அதில் உங்களின் மிகப்பத்திரமான இரகசியங்களை போட்டுவைத்துவிடுகிறது. உங்கள் கனவை நாங்களதானே வடிவமைத்தோம்? ஆகவே எங்களிடம் அந்தப் பாதுகாப்புப் பெட்டகத்தின் திறவுகோல் உள்ளது. இப்படித்தான் திருடுகிறோம் உங்கள் ஆழ்மனதின் இரகசியங்களை.

படத்தின் துவக்கத்தில் இந்த கனவுக் களவினை சொல்லிவிடுகிறார்கள். உரையாடல்கள் வழியே சொல்லப்பட்டாலும் இந்தப் பகுதியில் சுவாரஸ்யம் குறையவே இல்லை. இந்தக் கனவுக் களவினை நம்புவதா வேண்டாமா எனக் கேள்விகள் எழும் முன்னரே இரண்டாம் பகுதிக்குள் நம்மை கடத்திவிடுகிறார்கள்.

சரி! உங்கள் ஆழ்மனதிலிருந்து திருடுவது மிக எளிது.(நிஜமாவா?) ஆனால் அங்கே ஒரு கருத்தை விதைக்க முடியுமா? அதுதான் இரண்டாம் பகுதி. இன்செப்ஷன் என்பதற்கு துவங்கிவைத்தல் என்று பொருள். ஒரு கருத்தை, கோட்பாட்டை நம் ஆழ்மனது பக்கம் பக்கமான விவரணைகளாக உள்வாங்கிக் கொள்வதில்லை. ஒரு ஒற்றைவரி செய்தியாகத்தான் அது ஆழ்மனதில் ஊன்றியிருக்கிறது என்பது விளக்கப்படுகிறது. அந்தப் பக்கம் பக்கமான விவரணைகள் நம் நினைவில் இருக்கலாமே ஒழிய ஆழ்மனதில் அல்ல. அப்படி ஒற்றைவரியாய் விதைக்கப்பட்டதொரு கருத்திலிருந்து நாம் எடுக்கும் முடிவுகள் விளைகின்றன.

இறந்துபோன தன் தந்தை தனக்கு விட்டுச் செல்லும் ஒரு மாபெரும் தொழில் நிறுவனத்தை உடைத்து சிறியதாக்க மகனைத் தூண்டவேண்டும். அதற்கு அந்த மகன் தன் தந்தையைப் போல செயல்படக் கூடாது என்ற சிறிய கருத்தை அவனின் ஆழ்மனதில் உருவாக்கித் துவங்கிவைக்க வேண்டும். இதைச் செய்துமுடிக்க கனவுக் களவாணியான நம் நாயகனும் அவனது சிறு குழுவும் என்னென்ன செய்கிறார்கள் என்பதுவே இரண்டாம் பகுதி. (இந்தப் பயல்கள் ரெண்டுபேருக்கும் வயதே ஆகாதா?)

படம் பல இடங்களிலும் கனவுக்கும் நினைவுக்குமாய் பார்வையாளர்களைக் குழப்பாமல் தாவிச்செல்கின்றது. ஆனால் படத்தின் சில கதாபாத்திரங்களுக்கு கனவுலகமும் நினைவுலகமும் வேறுபடுத்த முடியாததாய் உள்ளது. கனவுலகில் நுழைந்த ஒருவர் அங்கிருந்து மீள முடியாமல் போனால்? அங்கேயே வாழ்ந்து வயதாகிச் சாகவேண்டியதுதான். அப்படிக் கனவுலகில் சாகும்போது அவர் நிஜ உலகுக்கு வந்துவிடலாம். ஆமாம்! கனவுலகிலிருந்து மீள ஒன்று நீங்கள் கனவில் கொல்லப்படவேண்டும் அல்லது கீழே விழவேண்டும்.

இப்படி மாறி மாறி கனவுக்கும் நினைவுக்கும் தவி வருபவர்கள் தாங்கள் எந்த உலகில் இருக்கிறோம் என எப்படித் தெரிந்துகொள்வது? அதற்கு ஒவ்வொருவரும் தனக்கு ஒவ்வொரு பொருளைக் கைகொள்ளவேண்டும். ‘டோட்டம்’ எனப்படுகிறது அப்பொருள்.  பழங்குடியினரின் காவல் தெய்வங்களை டோட்டம் என அழைக்கிறார்கள். அந்தப் பொருள் நிஜ உலகில் ஒருமாதிரியும் கனவுலகில் வேறுமாதிரியும் செயல்படும். உதாரணமாய் கதாநாயகன் ஒரு கைப்பம்பரத்தை வைத்துள்ளான். கனவுலகில் அதைச் சுற்றிவிட்டால் நிற்காமல் சுழன்றுகொண்டேயிருக்கும். நிஜவுலகில் அது சுழன்று வீழ்ந்துவிடும்.

இப்படி பல சுவாரஸ்யமான தகவல்களோடு தர்க்கபூர்வமாக படம் எடுக்கப்பட்டுள்ளது. நம்மால் இந்தத் தகவல்கள் அனைத்தையும் உள்வாங்க முடிவதில்லை என்பதால் மீண்டும் மீண்டும் படம் பார்க்கத் தூண்டப்படுகிறீர்கள். படத்தின் களத்தைப்போலவே இந்தத் தகவல்களும் மிக ரசிக்கும்படியும், வியக்கும்படியும் உள்ளன. திரைக்கதை மிக நேர்த்தியாகவும் சுவாரஸ்யமாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. சற்று பிறழ்ந்தாலும் பார்வையாளர்களைக் கைவிட்டுவிட நேரிடும். அத்தனை கவனத்துடன் பார்வையாளர்கள் ஒரு திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்த விதமே படத்தின் தரத்தைச் சொல்லிவிடுகிறது.

இன்செப்ஷன் பார்த்துவிட்டு வீட்டுக்குப் போய் ‘வடக்கு வாசல்’ இதழின் இலக்கிய மலர் 2008 இதழில் இருந்த சில சிறுகதைகளை படித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய பூனை கதையும் அதில் வந்திருந்தது. அந்த இதழில் இந்திரா பார்த்த சாரதி ஐயா ‘பிரிவு’ எனும் சிறுகதை ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கதைக்கும் இன்செப்ஷனுக்கும் ஒரு நேரடியான ஒப்புமை இருந்ததைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. கதையில் ஒரு வயதானவர் தன் மனைவியோடு மானசீகமாக வாழ்கிறார். அவள் அவரோடு வாழ்ந்துகொண்டிருப்பதாகவே நம்புகிறார். அந்தக் கனவை கலைக்க தன் மகள் விரும்பியபடி மனநல மருத்துவத்தை அணுக மறுத்துவிடுகிறார்.

அதேபோல இயல் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் பேசுகையில் ஒரு ஐடியா/கருத்து எப்படி சிறு தகவல்களாக, மேற்கோள்களின் வழியில் அல்லது சிறு நிகழ்வுகளின் விவரிப்புவழியாக ஒரு சமூகத்தின் ஆழ்மனதில் விதைக்கப்படுகிறது என்று பேசியது நினைவுக்கு வந்தது. அட எங்க ஊர்லேயும் இருக்காங்கல்ல கிரிஸ்டோஃபர் நோளன்கள்!

படத்தின் முடிவில் சிறுகதையின் திருப்பம்போன்றதொரு முடிச்சை வைக்கிறார் நோளன். நம் ஆழ்மனதில் கனவுகளையும் நினைவுகளையும் குறித்த சில கேள்விகளை விதைத்துவிடுகிறது இன்செப்ஷன்.

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....10 மறுமொழிகள் to “கனவுக் களவாணி ~ Inception”

 1. neo சொல்கிறார்:

  //கனவுலகிலிருந்து மீழ ஒன்று நீங்கள் கனவில் கொல்லப்படவேண்டும் அல்லது கீழே விழவேண்டும்.//
  ஜப்பானிய ஹரகரி வாள் எப்போதும் நம் கண் முன்னே தான் இருக்கின்றது …

 2. neo சொல்கிறார்:

  // அட எங்க ஊர்லேயும் இருக்காங்கல்ல கிரிஸ்டோஃபர் நோளன்கள்! //

  விசும்பு !

 3. neo சொல்கிறார்:

  உங்கள் பார்வைக்கு …
  இன்ஷா அல்லாஹ் (கவித முயற்சி )…
  கேரள பேராசிரியர் டி ஜே ஜோசப் மீதான தாக்குதல் குறித்து …
  http://neo-periyarist.blogspot.com/2010/07/blog-post_759.html

 4. […] This post was mentioned on Twitter by Cyril Alex, Cyril Alex. Cyril Alex said: கனவுக் களவாணி ~ Inception http://cyrilalex.com/?p=534 […]

 5. kalimankalayam சொல்கிறார்:

  நீங்கள் சொல்கிற கதையும் இந்த இன்போக்ராபிக் சொல்கிற கதையும் வெவ்வேறாக இருக்கின்றனவே- ஒரே படம்தானா?
  http://www.buzzfeed.com/awesomer/inception-the-infographic/

 6. இன்ஃபோகிராஃபி நல்லா இருக்குது. ஆனா அது முழுக் கதையையும் சொல்லிவிடல ஐக்கானிக்கலாதான் இருக்குது.

 7. vasanth சொல்கிறார்:

  இது நமது அறிவியல் புனைகதைப் போட்டிக்காக எழுதியது :: http://kaalapayani.blogspot.com/2008/07/blog-post_23.html

 8. காஸ்மிக் தூசி சொல்கிறார்:

  நல்லா எழுதிருக்கீங்க சிரில்!
  தொடர்ந்து திரைப்பட விமர்சனங்களை எழுதவும்!

 9. காஸ்மிக் தூசி சொல்கிறார்:

  சிறில்,
  கனவுக் களவாணி பொருத்தமான தலைப்பு.
  நல்லாவும் விமர்சனம் எழுதியிருக்கீங்க.தொடர்ந்து திரை விமர்சனங்கள் எழுதவும்.

 10. veeraragavan சொல்கிறார்:

  இன்றுதான் தங்களது பதிவைப் படித்தேன். இந்தக் கதையின் மூலத்திலிருந்து தமிழில் ‘கனவே கொல்லாதே’ என்று லயன் காமிக்ஸில் கதை வந்திருந்தது நினைவுக்கு வருகிறது. அதில் காமிக்ஸ் படிக்கும் சாதாரணமானவர்களுக்கும் (தமிழில்) புரியும் வகையில் கதை சொல்லப்பட்டிருந்தது.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்