‘கடலைக் காணாதவனின் அலை குறித்த குறிப்புக்கள்’ – ஊட்டி சந்திப்பு

மாபெரும் கடலொன்றிருந்தது. சிலருக்கு அந்தக் கடலில் நீந்தத் தெரிந்திருந்தது. சிலருக்கு அதில் மீன் பிடிக்கத் தெரிந்திருந்தது. சிலர் வலை கொண்டு, சிலர் தூண்டிலிட்டு. இன்னும் சிலர் அந்தக் கடலின் கரையில் நின்று இளைப்பாறிக்கொள்வர், சிலர் விளையாடி மகிழ்வர். ஆழமான, பரந்து விரிந்த, ஆபத்துக்களையும், கடின சவால்களையும், உயிரையே மாய்க்கும் சுழிகளையும் உள்ளோடைகளையும் பாறைகளையும் கொண்ட அந்த கடலில் குளித்து முத்தெடுத்து வந்தவர்கள் வெகுசிலரே. இன்னும் சிலர் அந்தக் கடலைக் குறித்து கேள்வி மட்டும் பட்டுள்ளனர். பலருக்கும் அந்தக் கடல் குறித்த தகவல் கூடத் தெரியாதாம்.

இலக்கியம் ஒரு கடல்போல எனச் சொல்வதை கொஞ்சம் விரித்தால் மேலுள்ள சித்திரம் கிட்டுகிறதில்லையா?

ஊட்டியில் எழுத்தாளர் ஜெயமோகனும் நண்பர்களும் நடத்திய இலக்கிய சந்திப்பில் கலந்துகொண்டபோது இந்த சித்திரம் இன்னும் தெளிவானது. 55பேர் வந்திருந்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை பின்புலங்களிலிருந்து வந்தபோதும் இலக்கியம் எனும் ஒற்றைப் புள்ளியில் இணைய முடிந்தது.

எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், தேவதேவன் ஒவ்வொரு அமர்விலும் பங்கேற்று சிறப்பித்தனர்.

முதல் நாள் நண்பர் ஒருவர் ‘நீதான் மெச்சிக்கொள்ள வேண்டும்’ என்ற பாடலை அழகாகப் பாடினார்.  பின்பு நான் களத்தில் குதித்து டி மெலோவின் கதைகள் சிலவற்றை வாசித்தேன். சந்திப்பின் திட்டமிடலின் துவக்க நாட்களில் இது தத்துவம் குறித்த சந்திப்பு என்பதுபோன்ற தோற்றம் எனக்கு கிடைத்ததால் நானும் உள்ளே மூக்கை நுழைத்துவிட்டிருந்தேன். டி மெலோ கதைகளுக்குப் பின் ‘கிறீத்துவ இறையியலின் வன்முறையை அடிப்படையில் கொண்டதா?’ என்ற பொருள்படும் ஒரு திட்டமிடப்படாத விவாதம் நடைபெற்றது. இரசிக்கும்படி இருந்தது.

பின்பு ஜெ இந்திய தத்துவங்களை எப்படி ஒப்பிடுவது என்பது குறித்து பேசினார். நான்கு அடிப்படை பேசுபொருட்கள்… எனும் தலைப்பில். வழக்கம்போல தகவல்களும் கருத்துக்களும் செறிந்ததொரு பேச்சாக அமைந்தது. அந்த உரையை தயாரிக்க அவருக்கு அதிகபட்சம் 20நிமிடங்கள்கூடத் தேவைப்பட்டிருக்காது என்பது என் கணிப்பு. அவர் பத்து நிமிடங்களில் உருவாக்கிய உரைகள் தமிழின் முக்கிய படைப்பாளிகள் மத்தியிலேயே வரவேற்பு பெற்றதை நேரடியாகக் கண்டிருக்கிறேன்.

முதல்நாள் மதியம் கவிதைகளுக்குள் வந்தோம். இந்த முறை தமிழ் கவிதை பரப்பிற்கு ஒரு அறிமுகம் தரும் பொருட்டு கால வரிசையில் கவிதை வாசிப்பு நடத்தலாம் என முடிவெடுத்திருந்தனர். சங்கப்பாடல்களிலிருந்து துவங்கியது அமர்வு. நற்றிணை குறுந்தொகையிலிருந்து பாடல்கள் வாசிக்கப்பட்டன.

கவிதை அமர்வுகளின் நடைமுறை இப்படி இருந்தது. முதலில் கவிதை இரண்டு அல்லது மூன்று முறைகள் வெவ்வேறு நபர்களால் வாசிக்கப்பட்டது. பின்பு அந்தக் கவிதையின் பின்புலம், சூழல், அதன் வகை, அல்லது அதை புரிந்துகொள்ளும் முகமாய் சில சிந்தனைகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன, தேவைப்பட்ட இடத்தில் அருஞ்சொற்பொருள் கிடைத்தது. பின்பு கவிதை குறித்த கருத்துக்கள் பகிரப்பட்டன. இதில் வெறும் பொருள் விளக்கம் மட்டுமன்றி பல நுண்ணிய இரசனைகளும் தொடர்புள பிற இலக்கியங்களிலிருந்து மேற்கோள்களும் வந்துகொண்டே இருந்தன. இதற்குப்பின் கவிதை மீண்டும் சிலமுறைகள் படிக்கப்பட்டது.

சங்கப்பாடல்கள் நேரடி வாழ்க்கை குறிப்புக்களை உணர்த்துவனவாயும் அதே சமயம் சில நுட்பமான கவிதைக் கூறுகளுடையனவாயும் இருந்தன. அவற்றில் அபரிமிதமாக உரிச்சொற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதை நான் சுட்டிக்காட்டினேன். அந்த அதீத பயன்பாடே தற்கால கவிதைகளில் அவற்றை இல்லாமலே செய்துவிட்டன என்றார் ஜெ.

இரண்டாம் நாள் காலை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ‘கம்பரின் இராமாவதாரம்’ எனும் தலைப்பில் கம்பராமாயணத்திலிருந்து 18 பாடல்களைப் பகிர்ந்தார். மிகவும் சிறப்பானதொரு அனுபவமாய் அமைந்தது இது. இராமாயணக் கதை பலருக்கும் பரிட்சயமானதாயினும் கம்பனின் மொழியில் அது வேறொரு மிஅக் நுட்பமான கதையாகவே தென்பட்டது. இதில் பல பாடல்களும் மிக எளிதாகப் புரிந்துகொள்ளும்படியே இருந்தன. கம்பன் இடங்களை எப்படி விவரிக்கிறான், வேண்டல், மொழிதல், பகர்தல், முழக்கமிடல் போன்ற உரையாடல்களை எப்படி அமைக்கிறான், நிகழும் பெரும் நாடகத்தின் உச்சக் காட்சிகளை எப்படி விவரிக்கின்றான் என்பவற்றுக்கு உதாரணங்களாய் அந்தத் தொகுப்பு அமைந்திருந்தது. இராமாயணம் மாந்தர்களின் வாழ்வைச் சொல்வதால் ஒரு நடகத்தைக் காண்பதுபோலவே அந்த அமர்வு அமர்ந்திருந்தது. நாஞ்சில் நாடன் அவர்களும் கூடவே ஜடாயு எனும் நண்பரும் ஒரு சிறப்பான அமர்வை செய்து முடித்த பின்பு அனைவருக்குமே கம்பனின் மேல் அபார பிரியம் ஏற்பட்டிருந்தது. கம்பராமாயணத்துக்கென்று தனி சந்திப்பொன்றை திட்டமிடத் துவங்கிவிட்டனர் நண்பர்கள்.

அடுத்ததாக வைணவப் பாடல்கள். நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார் பாடல்களிலிருந்து சிலவற்றை நண்பர் ஜடாயு பகிர்ந்துகொண்டார். இவற்றினூடாக வைணவ தத்துவ சிந்தனை எப்படி வளர்த்தெடுக்கப்பட்டது என்பதற்கு சில உதாரணங்களைத் தந்தார். எனக்கு மலைப்பாகவே இருந்தது. பல உள்ளுணர்வுகளைத் தரும் ஒரு சிறு சிற்பத்தைப்போல போல ஒரு புகைப்படம் போல, ஒரு ஓவியம் போலவே ஒரு கவிதையும் அமைந்துள்ளது என்பதை உணர முடிந்தது. ஆண்டாள் பாடல்கள் புனித ஜானின் கவிதைகளுக்கும் பழைய ஏற்பாட்டின் சாலமனின் பாடல்களுக்கும் உள்ள இறைவனை காதலனாக (காதலியாக) உருவகப்படுத்தும் மரபில் ஒத்திருந்தன. வைணவப் பாடல்களின் கவி நயத்தையும் தத்துவ உள்ளடக்கத்தையும் மிகச் சிறப்பாக ஜடாயு விவரித்தார்.

அடுத்தது சில சைவப்பாடல்களை ஜெ வாசித்து விளக்கினார். அவற்றில் கவிதை நயத்தை விட நேரடி தத்துவ உள்ளடக்கமே அதிகமாயிருந்ததுபோலத் தோன்றியது. திருமந்திரம், அப்பர் தேவாரம், திருவாசகம், தாயுமானவர், சிவவாக்கியர் பாடல்கள் இடம்பெற்றிருந்தன. சித்தர் பாடல்கள் சைவ மரபில் வந்தவையா என்ற விவாதமும் எழுந்தது. அவை உருவ வழிபாட்டுக்கு எதிரானவையாக வந்தன சைவ மரபுப்பாடல்களே என்பதுபோல ஜெ சொன்ன நியாபகம்.

அடுத்ததாக திராவிட இயக்க காலகட்டப் பாடல்கள் சில செல்வப்புவியரசுவால் தொகுக்கப்பட்டிருந்தன. பாரதிதாசனுக்குப் பின்வந்த கவிஞர்களின் கவிதைகள் சில. முடியரசனின் ‘நிலவு’, சுரதாவின் ‘சொல்லடா’, கம்பதாசனின் ‘அருணோதயம்’, தமிழ் ஒளியின் ‘மழைக்காலம்’, கண்ணதாசனின் ‘காலக்கணிதம்’, ச.து.சு. யோகியின் ‘ஆசைப்பட்டேன், திருலோக சீதாராமின் ‘ஒளியமுதம்’, சாமி. சிதம்பரனாரின் ‘முருகு’, கவிமணி தேசிக விநாயகனின் ‘நினைப்பதின்று! முடிவதொன்று!’, ம. லெனின் தங்கப்பாவின் ‘பகைமை எதற்கு?’ என பத்து கவிதைகள் வாசிக்கப்பட்டன. இவற்றின் எளிமையும், நேரடித் தன்மையும் ஜனநாயகம் உருவாகிய காலகட்டத்தில் உலகளவில் கவிதைகளில் இருந்த போக்குதான் என்று ஜெயமோகன் கூறினார். நம் கறுப்பு வெள்ளை திரைப்பட வசனங்கள் இவற்றின் தொடர்ச்சியாகப் பட்டது எனக்கு.

மூன்றாம் நாள் காலை சந்திப்புக்கு வந்திருந்த கவிஞர்களின் புதுக்கவிதைகள் கவிஞர்களாலேயே வாசிக்கப்பட்டது. கவிஞர்கள் தேவதேவன், இசை, இளங்கோ கண்ணன், மோகனரங்கன்,  இராவணன், வீணாப்போனவன், செல்வப்புவியரசு ஆகியோரின் கவிதைகள் வாசிக்கப்பட்டன. வாரப்பத்திரிகைகளின் ‘புதுக் கவிதைகளையே’ அதிகம் வாசித்திருந்த எனக்கு அது ஒரு ஆச்சர்யமான திறப்பாகவே அமைந்திருந்தது. சிலவற்றில் வெறும் படிமங்களே கவிதைகளாயிருந்தன, சிலவற்றில் எளிய ஒரு காட்சியிலிருந்து வாழ்வினை விரிக்கும் யுக்தியிருந்தது, இயற்கை கணிசமான கவிதைகளில் வந்துபோனது. சங்ககாலத்திலிருந்தே பாடப்பட்டு வரும் அதே பறவை அதே நிலா, பூ, காடு, மரம் இந்தக்காலத்திலும் பாடப்படுகிறது ஆயினும் இப்போதும் இயற்கை நம்மை வியக்கச் செய்துகொண்டேயிருக்கிறது. நாம் இயற்கையை இன்னும் பாடி முடிக்கவில்லை என்பதுதானே உண்மை. சம்பவங்களை வித்தியாசமான கோணங்களில் பதித்தன சில, வரலாற்றை வேற்று கோணத்தில் கண்டதொரு கவிதை, செஸ் விளையாட்டை வைத்து பெண்ணியம் சொன்னது ஒன்று. மிகச் சிறப்பாக அமைந்திருந்தது இந்த அமர்வும்.

 அரங்குகளில் பார்வையாளர்களில் அதிகம் பேசிக்’கொன்றி’ருந்தது நாந்தான் என நினைக்கிறேன். ஒருவர் தனியே சந்தித்து ‘போதும்பா’ என்றே சொல்லிவிட்டார். ஏனோ தெரியவில்லை தோன்றுவதை சொல்லாமலிருக்க முடியவில்லை. அப்படிப் பழகிக்கொள்ளவில்லை என்பது ஒரு குறையே. போர் அடித்திருக்க மாட்டேன் என நம்புகிறேன்.

இந்த சந்திப்பில் நண்பர்களை சந்தித்ததும் எழுத்தாளர்களுடன் உரையாடியதையும் அவர்களின் அறிமுகம் கிடைத்ததையும் முக்கியமானதாகக் கருதுகிறேன். தமிழகம் முழுதுமிருந்து பல பின்புலங்கலிலிருந்தும் பலரும் இலக்கியத்தில் இத்தனை ஆர்வம் கொண்டு வந்திருந்தது வியக்க வைத்தது. தாய்லாந்த்திலிருந்து ஒருவர் இந்த சந்திப்புக்கென்றே வந்திருந்தார். அவர் அங்கேயே பிறந்து வளர்ந்த தமிழர். கனடாவிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்த ஒருவரும் பங்குகொண்டார். (அரசியல் காரணங்களுக்காக பல பெயர்களையும் தவிர்திருக்கிறேன்.) ‘வசதி வாய்ப்பிருக்கும் நாமெல்லாம் ஏன் சினிமா தொலைக்காட்சி போன்ற பாப்புலர் ஊடகங்களிலேயே நிறைவு பெற்றுவிடுகிறோம்?’ எனக் கேள்வி எழுந்தது. என் ஸ்பீடுக்கு அடுத்த ஆறு மாதங்கள் வாசிக்க புத்தகங்கள் வாங்கிக்கொண்டேன்.

 ஜெயமோகன் மலைக்க வைக்கும் ஒரு ஆளுமை. அவரின் பேச்சில் தகவல்களும் அனுபவக் குறிப்புகளும் தத்துவங்களும் வரலாறும் துணுக்குகளும் ஜோக்குகளும் கலவையாக வந்துகொண்டேயிருக்கும். யாரை நோக்கியும் அவருக்குப் புரியும் வகையிலும் அவர் சிலாகிக்கும் வகையிலும் அவரால் பேச முடியும் அப்படி அவருடன் நடைபயணங்களில் எல்லோரும் பேசியும் கேட்டும் கொண்டிருந்தோம். அதுவே ஒரு தனியான சிறப்பம்சம் எனலாம். இதை ஒரு இரசிக மனோபாவத்தில் நான் சொல்லவில்லை. இணையத்துக்கு முன்பு அவர் எழுதிய புத்தகங்களில் 5%கூட நான் படித்ததில்லை என்பதே உண்மை. ஆனால் அவரின் நட்பும் அவரின் நண்பர்களின் நட்பும் எனக்குக் கிடைத்தது இன்பமானதொரு நிகழ்வே. இதற்குமேல் அடக்கமாக என்னால் இதைச் சொல்ல முடியாது.

இரண்டாம் நாள் இரவு கவிஞர் தேவதேவன் ஐயாவுடன் இரண்டு மணிநேரங்கள் தனியாக உரையாடிக் கொண்டிருந்தேன். அவரின் கவிதைகள் சிலவற்றை நான் மொழிபெயர்த்ததைக் காட்டினேன். எத்தனை எளிய! மனிதர் எத்தனை அரிய கவிதைகள்! நாஞ்சிலாரும் மிகுந்த கனிவோடு  பழகினார். குறிப்பாக எனது அமர்வு நடைபெறும்போது சிறப்பாக தலையசைத்து அங்கீகரித்தார். ஊர்க்கார பாசம்ணா சும்மாவா?

வார்த்தைகள் கொண்டு ஒருபோதும் ஒரு அனுபவத்தை முழுதாகச் சொல்லமுடிவதில்லை என்பதை உணர்கிறேன். நான் சொல்ல வந்தது என்னென்னவோ சொல்ல முடிந்தது இத்தனையே.

கடலைப் பார்த்தவர்கள், மீன்பிடித்தவர்கள், காற்று வாங்கியவர்கள், கால் நனைத்தவர்கள் முத்தெடுத்தவர்களின் கதைகளைக் கேட்டு மலைத்து நிற்கிறேன். அலைகளின் சப்தம் கேட்கிறது, உப்புநீர் வாசம் அறிகிறேன், சாரல் விழுவதுபோல தோல்களில் நுண்ணிய ஈரம் படர்கிறது. விரைவில் கடல்கண்டு கால்நனைப்பேனாக.

Popularity: 5% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....13 மறுமொழிகள் to “‘கடலைக் காணாதவனின் அலை குறித்த குறிப்புக்கள்’ – ஊட்டி சந்திப்பு”

 1. […] This post was mentioned on Twitter by Cyril Alex, மணி. மணி said: http://cyrilalex.com/?p=544 -பக்தனே ரசிகனாக•. ரசிகனே படைப்பாளியுமாய்.. […]

 2. //வார்த்தைகள் கொண்டு ஒருபோதும் ஒரு அனுபவத்தை முழுதாகச் சொல்லமுடிவதில்லை என்பதை உணர்கிறேன். நான் சொல்ல வந்தது என்னென்னவோ சொல்ல முடிந்தது இத்தனையே//

  வார்த்தையோ , புகைப்படமோ அனுபவித்ததை பகிர்ந்து கொள்ள சரியான ஊடகமாக அமையாது போல ,

  முட்டத்துக்காரர் இதுவரை காணாத கடலை கண்ட அனுபவம் மிக கொஞ்சமாகத்தான் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது , ஏமாற்றம்தான்

 3. manimuthu.s/Dubai/ சொல்கிறார்:

  Enjoyed as i was with you all.

 4. ஜடாயு சொல்கிறார்:

  சிறில்,

  ஊட்டி அனுபவத்தை மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். உதிர்க்கப் பட்ட சொற்கள் வாயிலாக நம் மனங்கள் பல புள்ளிகள் இணைந்தன, சில புள்ளிகளில் முரண்டு பிடித்தன. அவை சந்தித்ததும் உரையாடியதுமே மிகப் பெரிய விஷயமாக நான் நினைக்கிறேன்.

  நீங்கள் அங்கு சொன்ன கதைகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 5. Parthiban சொல்கிறார்:

  Cril,
  Nice article and nice writting.

 6. சிவக்குமாரசாமி சொல்கிறார்:

  அன்புள்ள சிறில்,
  கடல் அலை காணவந்த நான்,ஒரு நல்ல ஆளுமையை கண்டுகொண்டேன்.அது நீங்கதான் சிறில்.எனக்கு பொய்சொல்ற பழக்கமில்லைங்க சிறில்! இனி சிறில்சார் இல்லை, சிறில் தான்.

 7. ஜோ சொல்கிறார்:

  அருமையா எழுதியிருக்கீங்க .முத்தெடுக்கும் காலம் கனியட்டும்

 8. pichaikaaran சொல்கிறார்:

  கலந்து கொள்ள தவறிவிட்டோமே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு நன்றாக எழுதி இருக்கிறீர்கள் . நன்றி..
  கவிதைகளையும் பகிர்ந்து கொண்டு இருந்திருக்கலாம்

 9. கிரி சொல்கிறார்:

  சிறில்,

  // சாரல் விழுவதுபோல தோல்களில் நுண்ணிய ஈரம் படர்கிறது. விரைவில் கடல்கண்டு கால்நனைப்பேனாக//

  அற்புதமான முத்தாய்ப்பான முடிவு. வாழ்த்துக்கள். தாங்கள் கண்ட பேரானந்தத்தை தங்கள் எழுத்து மூலம் உணர முடிகிறது. பகிர்ந்தமைக்கு நன்றி.

  என் நண்பர் திரு.சண்முகநாதன் அவர்கள் கூட இந்தச் சந்திப்பில் தான் கலந்து கொண்டதை சிலாகித்து வர்ணித்தார்.

 10. கண்டேன் கடலை!!!

 11. neo சொல்கிறார்:

  //நம் கறுப்பு வெள்ளை திரைப்பட வசனங்கள் இவற்றின் தொடர்ச்சியாகப் பட்டது எனக்கு..//
  :-) :-)
  // மிகுந்த கனிவோடு பழகினார். குறிப்பாக எனது அமர்வு நடைபெறும்போது சிறப்பாக தலையசைத்து அங்கீகரித்தார் //
  ஜெ தான் அப்படின்னா நீங்களுமா சார் … நாஞ்சிலார் பாவம் சார் …
  // விரைவில் கடல்கண்டு கால்நனைப்பேனாக…//
  அவையடக்கம் …??

  இனிமையான பகிர்வு … நன்றி !

 12. […] சிறில் அலெக்ஸ் பதிவு http://cyrilalex.com/?p=544 […]

 13. johnson சொல்கிறார்:

  Idhan moolam kadalai patri nan kelvi paduhiraen…

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்