டி மெலோ கதைகள் – 1

ஊட்டி சந்திப்பில் பகிர்ந்து கொண்ட சில கதைகள்.

பயணி

 ஒரு பயணி தன் மக்களிடம் திரும்பி வந்தான். அவர்கள் அமேசான் நதியின் வனப்பினை அறிந்துகொள்வதில் ஆர்வமாயிருந்தார்கள். தன் மனதை நிறைத்த வனப் பூக்களையும், வனத்தின் இரவொலிகளையும், காட்டு விலங்கினைக் கண்டபோது கொண்ட பயத்தையும், புரண்டோடும் காட்டாற்றில் நீந்தியதையும் அவனால் ஒரு போதும் முழுமையாக வார்த்தைகளால் வெளிப்படுத்த இயலாதே?

 அவன் சொன்னான்”நீங்களே போய் பாருங்கள்” என்று. அவர்களுக்கு  வழிகாட்ட ஒரு வரைபடத்தை வரைந்து அவர்களுக்குத் தந்தான்.

 எல்லோரும் அந்த வரைபடைத்தின் மீது பாய்ந்தார்கள். ஆளுக்கொரு நகலை எடுத்துக்கொண்டார்கள். ஊரின் மத்தியில் அந்த வரைபடம் சட்டம்போட்டு வைக்கப்பட்டது. சிலர் அதை மனப்பாடம் செய்தார்கள். பலர் தங்களை அதில் வித்தகர்களாகக் கருதினார். ஏனெனில் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லையா எங்கே அமேசான் வளைகிறதென்றும், விரிகிறதென்றும், விழுகிறதென்றும்?

 

ஆற்றுத் தண்ணீரை விற்பவன்.

அந்த குருவின் ஒவ்வொரு சொற்பொழிவும் ஒரு குழப்பமான வாக்கியத்தோடு நிறைவுறும். ஒரு புன்னகையுடன் அவர் சொல்வார் “நான் செய்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஆற்றங்கரையில் நின்றுகொண்டு ஆற்று நீரை விற்றுக்கொண்டிருக்கிறேன்.”

 டி மெலோ: நான் ஆற்று நீரை வாங்குவதிலேயே குறியாக இருந்துவிட்டேன், ஆற்றைப் பார்க்க தவறிவிட்டேன்.

 

குருவின் பூனை

குருவின் பூனை அவரது பூஜைக்கு இடைஞ்சலாக இருந்தது. குரு ஒவ்வொரு முறை பூஜை செய்யும்போதும் அதை ஒரு குறிப்பிட்ட இடத்தில் கட்டி வைத்தார். குரு ஒரு நாள் இறந்துபோனார். அவரது சீடர்கள் பூஜை செய்தனர். அப்போதும் அவர்கள் அந்தப் பூனையை அந்த இடத்தில் கட்டி வைத்துவிட்டு பூஜை செய்தனர்.

 ஒரு நாள் அந்தப் பூனை இறந்து போனது. சீடர்கள் போய் வேறொரு பூனையை வாங்கிவந்து அந்த இடத்தில் கட்டி வைத்துவிட்டு பூஜையை தொடர்ந்தனர்.

 

ஆற்றில் பூதம்

ஒரு குரு தியானத்தில் இருக்கையில் சில சிறுவர்கள் வெளியில் சத்தம்போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை துரத்திவிட அவர்களிடம் “நம்ம ஊர் ஆற்றில் ஒரு பூதம் தீயை கக்கிக்கொண்டு நிற்கிறது. போய் பாருங்கள்” என்றார்.

 கொஞ்ச நேரத்தில் ஊர் மூழுவதும் செய்தி பரவ ஊரார்கள் கூட்டம் கூட்டமாய் ஆற்றை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். அந்த குருவும் ஆற்றை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார். அவர் தனக்குத்தானே சொல்லிக் கொண்டார் “நாந்தான் அந்தக் கதையை உருவாக்கினேன் இருந்தாலும் அது உண்மையாக இருந்துவிட்டால்?”

 டி மெலோ: நாம் உருவாக்கி வைத்திருக்கும் நம்பிக்கைகளில் நமக்கு நம்பிக்கை வர சிறந்த வழி அடுத்தவரையும் நாம்பச் செய்வதுதான்.

Popularity: 2% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....ஒரு மறுமொழி to “டி மெலோ கதைகள் – 1”

  1. […] டி மெலோ கதைகள் – 1 […]

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்