இதயம் தொடாத இரும்பு!

எட்டு மணி நேரம் கொட்டோ கொட்டென்று கணிணியை கொட்டிவிட்டு அதற்குப் பின்னும் ஒரு சொலூஷன் கிட்டாத ஒரு சோர்வான மாலையில் போய் சேர வேண்டிய இடம் வீடு அல்லது ஒரு மதுவிடுதி. எந்திரன் டிக்கட் இலவசமாகக் கிடைக்கிறதே என்று தேவிக்குப் போய் உட்கார்ந்தேன்.

 ‘பரப்புக்’ கலைகளைக் குறித்து கருத்து சொல்வதில் மிகக் கவனம் தேவை என்கிறன தற்போதைய நிகழ்வுகள். கோட்பாட்டாளர்களும் விற்பன்னர்களும் நுண்ரசனையாளர்களும் வந்து முதுகுப் பரப்பை ஒரு பரப்பு பரப்பிவிடுவார்களென்கிற பயம்தான். இதையே ஒரு டிஸ்கிளெய்மராக எடுத்துக்கொள்ளும்படி தயை கூர்ந்து வேண்டுகிறோம்.

எந்திரன். ‘தமிழ் படங்களில் நாம் இதுவரை கண்டுகளித்த கதாபாத்திரங்களில் ஒரு ரோபோ நடித்திருந்தால் எப்படி இருக்கும்’. இதுதான் படத்தின் ஒன்லைனர் போலும். காமெடியன்களை எட்டி உதைக்கும் காமெடியன், பெண்ணை (எலக்ட்ரிக் டிரெய்னில்) மானபங்கப் படுத்தவிருப்பவர்களிடமிருந்து காப்பற்றும் தீரன், நெருப்பில் நுழைந்து பொது மக்களை காப்பாற்றும் மீட்பன், காதலிப்பவன், காதல் மறுக்கப்பட்டவன், கை பிசைந்து நிற்கும் உறவினர்களுக்கு சாமார்த்தியத்தால் நல்ல செய்தி சொல்லும் டாக்டர், கா க க கா எனச் சிரிக்கும் வில்லன், வசனம் பேசிவிட்டு கற்பழிக்க முயலும் வில்லன், வில்லனின் அடியாள், நாயகனின் நண்பன், விசுவாசமான வேலையாள், நாயகனின் காதலியை காதலிப்பவன், கோர்ட் சீனின் முக்கியமான சாட்சி, பிட் அடிக்க உதவுபவன்.

இந்த முறை பாட்டி ஆளுயர தங்கச் சட்டியில் நீலம் மற்றும் கிளிப்பச்சை நிறமுடைய கெமிக்கல் கலந்தூற்றி பானையளவு வடைகளை சுட்டுத் தள்ளுகிறாள். ஒரு போர்விமானம் போல பிரம்மாண்ட காக்கையொன்று பறந்து வந்து வடையைத் தூக்கிச் செல்கிறது. அதை ஒரு ஆளுயர ரோபோ நரி லவுட்டிச் செல்கிறது.

திரும்பத் திரும்ப எத்தனை முறைதான் பக்கத்து வீட்டு அகோரக் கேடி இளைஞ்சர்கள் பரிட்சை நேரத்தில் சத்தமாக பாட்டு போட்டுக் கொண்டிருக்கும் காட்சிகளை வைப்பார்களோ தெரியவில்லை. ஒரு கட்டத்தில் ‘தமிழ்ப்படம்’ பாணியில் இதை ரசித்தால் சிறப்பாயிருக்குமோ எனத்தோன்றிவிட்டது.

ரஜினி உழைத்திருக்கிறார். சில நேரங்களில் இளைத்திருக்கிறார். சில நேரங்களில் திளைத்திருக்கிறார். வில்லனாக வரும்போது எங்கிருந்து வந்து ஒட்டிக்கொண்டதோ அந்த உற்சாகமும் துறுதுறுப்பும் திடமான உடல் மொழியும். இந்த மெகா படத்துக்கேற்ற மகா வில்லன். ஐஸ்வர்யா அழகோ அழகு. மிக நுட்பமான நடன அசைவுகளை ஒன்றுமில்லை என்பதுபோலச் செய்து காட்டுகிறார். காமெடியன்கள் காமெடியன்கள்(முடிந்தால் புரிந்துகொள்ளவும்). டானி டென்சொங்பா இரசிக்க வைக்கிறார் கடைசி வரை வந்து திருந்திய மனிதராக வாழ வைத்திருந்தால் சம்பிரதாயம் நிறைவு பெற்றிருக்கும். ‘கொஞ்சம்’ கனீஃபா என்பவரும், கலா’பாவம்’ மணி என்பவரும் நடித்திருக்கிறார்கள். இப்படி நடிப்பதில் என்ன ‘கௌரவமோ’ தெரியவில்லை.

ரெம்ப ஓவரா குறை சொல்வதைப் போல இருக்கிறதென நினைக்கிறேன். அத்தனை மோசமான படம் அல்ல இது. பொது இரசனைக்கான திரைப்படங்களில் உணர்ச்சி விளையாட்டுக்கள் மிக முக்கியம். பார்ப்பவரிடம் காதலையும், பயத்தையும், எதிர்பார்ப்பையும், கோபத்தையும், சிரிப்பையும் அழுகையையும் கதை ஊட்டிச் செல்லவேண்டும். அப்படி ஏதோ ஒரு உணர்ச்சியிலிருந்து அவர்கள் விடுபடும் நேரத்தில் படம் சரியாக முடிவடையும். எந்திரத்துக்கு எப்படி உணர்ச்சிகள் இல்லையோ அப்படியே படத்திலும் உணர்ச்சிகளே இல்லை. கதை நம் மனதோடு பேசவேயில்லை. யார் மீதும் நமக்குக் கோபம் வரவில்லை, பொறாமை வரவில்லை, சோகமில்லை, சுகமில்லை. பார்வையாளர்கள் எல்லோரும் எதோ கணிணி விளையாட்டக் காண்பதைப்போல ஒரு மெல்லிய புன்னைகையோடு, மௌனத்தில் படம்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மிக மிகக் குறைந்த கைதட்டல்கள் அசைவுகள் சலசலப்புகளே அரங்கில் காண முடிந்தது.

அண்மையில் வம்சம் பார்த்தேன் அதுவும் அடிப்படையில் ஒரு ‘அண்மைய-வழக்கமான’ கிராமியச் சண்டைப் படம்போலத்தான். ஆனால் எத்தனை புத்துணர்ச்சியூட்டியது அந்தப் படம். அந்த நாயகி வில்லன் மீது சாணியடித்து விளாசும் காட்சிக்கிணையாக ஒரு காட்சியாவது எந்திரனில் இருந்திருக்கவேண்டும். அதுதான் ஒரு நல்ல வணிகப்படத்தின் கதைஅமைப்பு. சுஜாதாவின் கதையில் அப்படித் தருணங்கள் நிச்சயம் உள்ளன. ஆனால் ஷங்கர் அவற்றுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்றே தெரிகிறது.

எனக்கு முக்கியமாக சில காட்சிகள் தெரிகின்றன. ஒன்று ரோப்போ தன்னைப்போல பல ரோபோக்களை செய்யும் காட்சி. அதை காலிவுட் பாணியில் சொல்லியிருக்க வேண்டும். ஒரு ரோபோ மட்டும் இன்னொன்றை செய்து கொண்டிருக்க வேண்டும் விஞானியிடம் பேசி முடிக்கையில் 20 ரோபோக்கள் இன்னும் இருபது ரோபோக்களை செய்துகொண்டிருப்பதைக் காட்ட வேண்டும். அது ஒரு பிரம்மாண்டத்தை மட்டுமல்ல பயத்தை ஊட்டும் நிகழ்வாக உருவாக்கியிருக்கும். அடுத்ததாக செயற்கை உயிரணுக்களைக் கொண்டு ரோபோசேப்பியன்ஸ்களை உருவாக்கப் போவதாக வில்லன் சொல்லும் காட்சி. இதுவும் ஒரு முக்கிய கதைத் தருணம் ஆனால் ஏனோ இது பழைய கற்பழிப்புக் காட்சியை ஒத்து அமைந்திருப்பதைப் போலுள்ளது. இன்னொன்று சிட்டி அழிக்கப்படும் காட்சி. ஒரு ரோபோவை அழிக்க அதை கண்டந்துண்டமாக வெட்டினால்தான் முடியுமா? விஞ்ஞானம் தெரியாத விஞ்ஞானியா இவர். அங்கேயும் தமிழ் சினிமா பானியில் கோடாலியால் வெட்டிப் போட வேண்டுமா? (படத்தை பார்த்துவிட்டு இதையெல்லாம் சொல்வது எத்தனை எளிது இல்லையா?)

இத்தனை பிர்ம்மாண்டத்துக்கும் உழைப்புக்கும் பின்னணியில் ஒரு உணர்வுபூர்வமான கதை இல்லை என்பதே குறை. அப்படி ஒரு படமாக இருந்திருந்தால் மிகவும் திருப்திகரமாயிருந்திருக்கும். ஷங்கரின் ஒருவகையில் சுஜாதாவின் புத்திசாலித்தனம் மட்டுமே வெளிப்படும் ஒரு படமாகத்தான் இது வந்துள்ளது. ஒரு 15 வருடங்களுக்கு முன் வந்திருக்க வேண்டிய ஆங்கிலப் படம் போல சில காட்சிகள் வந்துள்ளன.

வரும் சனிக்கிழமை மீண்டும் ஒருமுறை என் பையனோடு சென்று பார்க்கவிருக்கிறேன். அப்போதாவது இரும்பிலே ஒரு இதயம் முளைக்குமா தெரியவில்லை.

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....9 மறுமொழிகள் to “இதயம் தொடாத இரும்பு!”

 1. baskar சொல்கிறார்:

  படம் பாக்கறாங்களோ இல்லையோ, நாம எழுதி இருக்கறதை யாரும் படிக்கக் கூடாதுன்னு எண்ணமா என்ன? ஒரே பத்தியா எழுதிட்டீங்க, நூல் புடிச்சு படிக்கறதுக்குள்ள கண்ணு ரெண்டும் பொங்கிருச்சி! :(

  !

 2. மன்னிக்கவும் அலுவலக அவசரத்தில் பத்தி பிரிக்க மறந்து விட்டேன்.

 3. […] This post was mentioned on Twitter by Cyril Alex, ragu. ragu said: இதயம் தொடாத இரும்பு! http://cyrilalex.com/?p=567 via @cvalex […]

 4. என் கருத்தும் கிட்டதட்ட இதுவேதான் , பிரஷ்ஸான எந்த காட்சியமைப்பும் இல்லாதது மிகப்பெரிய குறை .

 5. Haranprasanna சொல்கிறார்:

  சுருக்கமா ராவணன் அளவுக்கு இல்லைன்னு சொல்லுங்க.

 6. ஒத்த கமென்ட்ல உசிரே போக வெச்சுட்டீங்களே! :)))

 7. prem சொல்கிறார்:

  yen ya….puriyura mathiri elutha maatiya? yennamo purananooru padikura mathiri iruku. yennai pola pamaranukum puriyuramathiri simplea eludhu da.

  kind of agree with what you say….aana way too many compromises to make. given all the compromises the director had to make to make a movie like this in tamil with rajini..it wasnt a bad effort at all. given the expectations, given the buildup…i think it was reasonably bold.

  nee solura mathiri…yennamo missing mathirithan irundichu. un review title perfect.

 8. mathistha சொல்கிறார்:

  ////ஒத்த கமென்ட்ல உசிரே போக வெச்சுட்டீங்களே! :) ))////
  பதிவு நல்லாயிருக்கு…

 9. ssrsukumar சொல்கிறார்:

  சீரியல்களையும்,அரதபழசான தமிழ் படங்களை நினைவில வைத்து,அதே மாதிரி படமாக இருக்கும் என எதிர்பர்த்தால் இது அதுவல்ல என்பது உண்மைதான்.இந்தப்படம் பல சாதனைகளை உண்டாக்கியிருக்கிறது.உலக அளவில் நம்மை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.இது இட்லியும் இல்லை,தோசையும் இல்லை.எல்லா ஓட்டல்களிலும் ஒரே மாதிரி எதிர் பார்ப்பதற்கு.
  இது ரஜனி படம்,ஷங்கர் படம் என்று சென்றவர்கள் மறுபடி,மறுபடி செல்வார்கள்.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்