அமைதியான நதியினிலே…!

‘பரபரப்பான இந்த வாழ்க்கையில…’ என்று துவங்குகிறது ஒரு பண்பலை வானொலி விளம்பரம். நம் வாழ்க்கை மிகவும் பரபரப்பாகிவிட்டது. காலை எட்டு மணிக்கு சென்னையின் சாலைகள் பிதுங்கி வழிகின்றன. மாலை ஆறு மணி துவங்கி இரவு எட்டரை வரைக்கும் உக்கிரமான டிராஃபிக். நாள் ஒன்றின் அதிக செயலூக்கமுள்ள  பகுதியை மாதச் சம்பளத்துக்கு விற்றுவிட்டு வெறும் சக்கையான உடம்புடனும் மனதுடனும் வீடு வந்து சேர்கிறோம். வீடுகளுக்குள்ளேயே அடைபட்டு கிடக்கிறோம். சென்னையில் எந்த வீட்டிலுமே வெளியே அமர்ந்திருக்க இடம் ஒதுக்கப்படவில்லை!

வார இறுதியை கண்டுபிடித்தவன் கடவுள். (உண்மையிலே அப்படித்தான் என்கிறது ஆதியாகமம்). விடுமுறையானாலும் நம் வார இறுதிகளிலும் பரபரப்பிற்கு குறைவேயில்லை. ஏனெனில் நாம் ஐந்து நாட்களாக தொலைத்துவிட்ட குடும்பவாழ்க்கையை இரண்டு நாட்களில் மீட்டெடுக்க வேண்டியுள்ளது. பீச் பார்க் என எங்கே சென்றாலும் நாம் ஏதேனும் பரபரப்பாக செய்துகொண்டே இருக்கிறோம். ‘நாங்க பீச் போனோம்’ என ஒரு நண்பரிடம் சொன்னால் உடனே அவர் திரும்பக் கேட்பது ‘அங்க என்ன செஞ்ச்சீங்க?’ என்பதுதான். இது நமக்கு பழக்கப்பட்டதொரு உரையாடலாக அமைந்துவிட்டது.

அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் நண்பர்களுடன் கோதாவரி ஆற்றில் படகில் மூன்று நாட்கள் பயணித்தோம். உடனே உங்களுக்குள் தோன்றும் கேள்வி ‘என்னவெல்லாம் செய்தீர்கள்?’ என்பதாக இருந்தால் பெரிய ஏமாற்றம். எதுவுமே சொல்லும்படி செய்துவிடவில்லை. மூன்று நாட்கள் மலைகளிடையே காயப் போட்ட பட்டுச் சேலையாய் வளைந்து ஓடிக்கொண்டிருக்கும் ஈர நதியில், கோதாவரியில் வெறுமனே மிதந்துகொண்டிருந்தோம். அவ்வளவுதான். எத்தனை ‘போரிங்கான’ ஒரு அனுபவம் இல்லையா?

இந்தப் பயணம் எப்படி இருக்கும் என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ரயிலில் ஏறினேன். படகுத் துறையை அடைந்ததும் கொஞ்சம் உற்சாகம் தட்டியது. கோதாவரியோ கடலென ஓடிக்கொண்டிருந்தது அந்தப் பகுதியில். படகில் ஏற ஒரு மரப்பாலம் அமைத்திருந்தார்கள். கைப்பிடித்து ஏற ஒரு மூங்கில் கழி. பாரிஸ்டர் ரஜினிகாந்த் போல சடசடவென்று இறங்கினால் கோதாவரியில்தான் இறங்கவேண்டும்.

படகு மிகுந்த நிதானத்துடன் நீரோட்டத்திற்கு எதிராகப் பயணிக்க ஆரம்பித்தது. ஐம்பதுபேர்வரை பயணிக்கக் கூடிய படகில் வெறும் பதினேழு பயணிகள். சட்டை பொத்தான்களைத் திறந்துவிட்டு விட்டு, அரைக்கால் சட்டையுடன் நட்சத்திரச் சக்கரத்தைச் சுழற்றி படகை முன்செலுத்திக்கொண்டிருந்தார் மாலுமி தாத்தா. கோதாவரியில் விழுந்தாலும் மூழ்கிவிடாதபடி வயிற்றையே பலூன்போல வைத்திருந்த படகின் சொந்தக்காரர். ஒரு அருமையான சமையல்காரர், கீயர் போடும் வேலையை மட்டுமே செய்யும் ஒருவர், இன்னொரு உதவியாளர் என எங்கள் பயணக் குழு அமைந்திருந்தது.

ஏற்பாடு செய்திருந்த ஒரு பாடகி ஒரு மேளக்காரர் கொண்ட குழு சில தெலுங்குப்பாடல்களைப்பாட பயணம் களை கட்டியது. எழுத்தாளர் யுவன் சந்திர சேகர் ஆடலுடன் பாடலை சேர்த்தார், கூடவே நண்பர் இராமச்சந்திர ஷர்மாவின் பயிற்சிபெற்ற குரலும் இணைந்து கொள்ள. கொஞ்ச நேரம் கோதாவரியை மறந்து பாடல் வரியில் லயித்தோம். இவர்கள் இருவரையும் வைத்துக்கொண்டு நான் பாடுவது கோதவாரியின் முதலைகளை வெறிகொள்ளச்செய்யும் முயற்சியாக முடியலாம் என்பதால் அமைதி காத்தேன். உள்ளுக்குள் ஒரு பாடகன் முதலை பயத்தால் ஒடுங்கி செத்துக் கொண்டிருந்தான். விரைவிலேயே செல்ஃபோன்கள் செயலிழந்தன. இந்தப் பயணத்தின் ஆகக் கடினமானதொரு சவால் இதுதான் போலும். அந்த மலைப்பகுதிகளில் செல்பேசி கோபுரங்கள் இல்லை.

சற்று நேரத்தில் படகின் இருபுறமும் மெல்ல காட்சிகள் மாற ஆரம்பித்தன. சமவெளிகள் மறைந்து படகின் இருபுறங்களிலும் மலைகள் தோன்ற ஆரம்பித்தன. மலைகளைப் பொதுவாக நாம் இரட்டைப் பரிமாணத்திலேயே பார்க்கிறோம். அவற்றை அப்படியே, முக்கோண வடிவில் வரையவும் செய்கிறோம். ஆனால் படகில் பயணிக்கையில் அவற்றின் முழு கூம்பு வடிவத்தையும் கண்டுணர முடிந்தது. தூரக் காட்சியில் மலைகள் பல்வேறு சாம்பல் நிறங்களில் காட்சியளித்தன. அருகில் செல்லச் செல்ல அவற்றின் பச்சை நிறம் தெரிய ஆரம்பித்தது.

காவல் துறையினரிடம் எங்கள் பெயர் பட்டியலை தந்து அனுமதி வாங்கியபின் பயணம் தொடர்ந்தது. காலையிலிருந்தே யுவன் ‘குளிக்கணும்.. குளிக்கணும்’ என அரற்றிக்கொண்டிருந்தார். பாவம் அவர் சிறுவயதிலிருந்தே அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார்போல. படகு ஒரு ரம்மியமான காட்சிக்குள் புகுந்து ஒதுங்கி நின்றது. கால்படாத ஒரு மணல்திட்டு மலையின் நாக்கைப்போல கிடந்தது. அதில் இறங்கி நின்றதும் குழந்தைகளைப் போல எல்லோரும் மாறிவிட்டோம். படகின் சொந்தக்காரர் ஒரு எல்.கே.ஜி ஆசிரியைப்போல் எங்களை மிரட்டி வழிநடத்திக்கொண்டிருந்தார். யாரோ சொன்னார்கள் தெலுஙை சத்தமாகத்தான் பேசவேண்டும் என்று.

ஆற்றில் குளித்து எத்தனை காலமாகிவிட்டது? கால்களை வருடும் ஆற்று மணற் பரப்பின் அக்குப்பிரஷர் அழுத்தம் பட்டு எத்தனை காலமாகிவிட்டது? நீரினுள் நின்று ஒன்றுக்கடித்து எத்தனை காலமாகிவிட்டது? மணலெடுத்து அழுக்கு தேய்த்து எத்தனை காலமாகிவிட்டது? ஆற்றின் மேல் சில்லி அடித்து எத்தனை நாள் ஆகிவிட்டது? இதைத்தான் இலக்கியவாதிகள் பால்யத்தை தொலைப்பது எனும் கலைச்சொல்லால் குறிப்பிடுகிறார்கள் போலும்! (குளியலுக்குப் பின் யுவன் சகஜ நிலைக்குத் திரும்பினார்.)

மெல்ல பகல் விடைபெற்றது. இரவில் மலைகள் படுத்துறங்கும் ஒரு பிரம்மாண்ட மிருகத்தை ஒத்திருந்தன. கொஞ்ச நேரம் வெறித்துப்பார்த்திருந்தால் அவை புரண்டு படுப்பதைக் கண்டுவிடலாம் என்றே தோன்றியது. அந்தக் கொஞ்ச நேரம் என்பது கோடி ஆண்டுகளோ? முதல் நாள் இரவில் படகு எங்கே என்று தெரியாத ஒரு இடத்தில் கரையொதுங்கி நின்றது. இருள் தொட்டுணரக் கூடியதொரு பொருளைப்போல அந்தப் பகுதியை மூடியிருந்தது. தூரத்தில் மின்மினிகளாக சில வெளிச்சப் புள்ளிகள்.

ஆற்று மீன் பொரியலுடன் அருமையான இரவுணவு சுடச் சுட தயாராயிருந்தது. படகில் சிறு விளக்கொளி தெரிந்தால்கூட சிறு பூச்சிகள் கூட்டம் கூட்டமாய் வந்துவிடுகின்றன. குறட்டை சிம்ஃபனி தவளைகளை மௌனிக்கச் செய்ய, அவை காத்திருந்து தூங்க ஆரம்பித்தபோது விடிந்திருந்தது.

இரண்டாம் நாள் பயணம் இனிதே துவங்கியது. இம்முறை ஒரு மலையடிவார கிராமத்தில் இறங்கிச் சென்று சுற்றிப் பார்த்தோம். 100 முதல் 150 வீடுகளைக் கொண்ட ஒரு கிராமம். குறைவாகவும் இருக்கலாம். முற்றிலும் கழிகளால் செய்யப்பட்டிருந்த மாடுகள் பூட்டப்பட்ட ஏரில் நின்று விவசாயியாய் போஸ் கொடுத்தேன். அந்த ஊரில் அன்று சிகெரெட் பஞ்சம் வந்திருக்கும். எல்லாவற்றையும் நாங்களே வாங்கிக்கொண்டோம். ‘சார் இதைத் திங்க முடியாது’ என்று கடைக்காரர் சொல்ல நினைத்திருப்பார்.

அங்கே ஒரு குளியல். வெட்ட வெளியில் ஒரு வெளிக்கிருப்பு (பால்யத்தில் தொலைத்த இன்னொன்று) என காலைக் கடன்கள் முடிந்தன. மீண்டும் மலைகளின் நடுவே பயணம் தொடர்ந்தது. இன்னொரு கிராமத்தில் இறங்கி மீன் வாங்கிக்கொண்டோம். இங்கே சில மீன்கள் கரையில் மிதந்துகொண்டிருந்தன. அவை இறந்துபோனவையோ என நினைத்து அருகில் சென்றேன். அங்குள்ளவர்கள் மீங்களைப் பிடித்து செவிள் வழியே கயிற்றைப் போட்டு அவற்றை நீரிலேயே விட்டு வைத்திருக்கிறார்கள். அவை அப்படியே தொங்கியபடி கறிச்சட்டிக்கு காத்திருக்கின்றன.அந்த கிராமத்தில் ஒரு டிரெக்கிங். ஆறுபேர் அணைத்தாலும் அணையாத மா மாமரம் ஒன்று அந்தக் காட்டில் இருந்தது. அங்கே ஆழம் அதிகமாகையால் குளிக்கவில்லை.

கரையில் மூங்கில் கூடாரங்களிட்டு, வெஸ்டர்ன் டாய்லட் சகிதம் ஒரு ரிசார்ட் ஒன்று உருவாகிக்கொண்டிருந்த இடத்தில் கொஞ்சம் மேலே நடந்து சென்றால் அருவி இருக்கிறதென்று அழைத்து சென்றார்கள் படகுக்காரர்கள். நாம் தேனீக்களாயிருந்தால் அது ஒரு பிரம்மாண்டமான அருவியாய் இருந்திருக்கும் எனும் அளவுக்கு ஒரு இடத்தில் பாறைகள் நடுவே நீர் வேகமாக வீழ்ந்துகொன்டிருந்தது. அந்த இடத்தில் முட்டளவு தண்ணீரில் காக்காய்கள் போல குளிக்க ஆரம்பித்தோம். கூழாங்கற்களால் வேயப்பட்ட தரைப்பரப்பு. நீர் வேகமாக வந்துகொண்டிருந்தது. உட்கார முடியாத அளவிற்கு வேகம். அடித்துத் தள்ளி ஒருவர் ஒருவர் மீது சென்று விழுந்துகொண்டிருந்தோம். தூரத்தில் மலை மேட்டில் நின்றுகொண்டு ஒரு சிறுமி எங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். கால் சட்டைகள் கழன்றுவிடும் அளவுக்கு நீரின் வேகம் இருக்க மானத்தையும் உயிரையும் காப்பாற்ற நிகழ்ந்த பல போர்களின் வரிசையில் எங்கள் போராட்டமும் இடம்பெற்றது.

அன்று இரவு ஒரு இராமர் கோவில் இருந்த மலைக் கிராமத்தை அடைந்தோம். பெரிய கோவில், கோவிலைச் சென்றடைய படிக்கட்டுகள், எல்லா வீடுகளிலும் மின் விளக்குகள், ஆட்டோ வசதிகள் என சற்று முன்னேறிய கிராமம் அது. இரவில் பேய்க்கதைகளும் பேயனுபவங்களும் பகிரப்பட்டன. திகிலூட்டும் அனுபவமாக இருந்தது. எனக்கு பேய் நம்பிக்கையில்லை இல்லை என மனதுக்குள் சொல்லிக்கொண்டே இருந்தேன்.

மறுநாள் காலை நதியின் போக்கில் படகு திரும்பியது. இம்முறை குளிக்கும் இடத்தை ராமச்சந்திர ஷர்மா தேர்ந்தெடுத்தார். படகு தரை தட்டி நின்றது. எல்லோரும் இறங்கி ஏலேலோ ஐலசா சொல்லி படகை ஆற்றுக்குள் இறக்கிவிட்டனர். நானும் அந்த ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தேன். பின்பு சுகமான குளியல்.

திரும்புகையில் எருமைக் கூட்டம் ஒன்று ஆற்றைக் கடந்துகொண்டிருந்தது. அவை நடக்கின்றன என்று நினைத்தேன். இல்லை அவை நீந்துகின்றன என்றார் படகுக்காரர். ‘மைக்கேல் ஃபெல்ப்சை அவர் அம்மா எருமை என்று திட்டியிருப்பாரா?’ எனும் வினோதக் கேள்வி மனதில் எழுந்தது.அவை ஏன் ஆற்றைக் கடக்கவேண்டும் எனத் தெரியவில்லை? இருபுறமும் ஒரேபோல பச்சை மலைகளே இருந்தன!

இன்னொரு மணற்பரப்பில் இறங்கிக்கொண்டோம். சற்றே பெரிய நாக்கு. நாங்கள் பார்த்ததிலேயே மிகவும் அழகான இடம் அது என்று சொல்வேன். மழை வேகமாக அடித்தது. மலையிலிருந்து சிறு ஓடைகளில் நீர் வழிந்தது. பால்ய நியாபகத்தில் ஓடிச் சென்று ஒரு அணையைக் கட்டினேன். என்னாலான சமூகத் தொண்டு.

மாலை மீண்டும் ஒரு இடத்தில் நிறுத்தி குளியல். அது ஒரு தீவு. இந்த முறை நண்பர் கிருஷ்ணன் சென்று ஒரு நூறு பசுக்கள் சூழ வந்து சேர்ந்தார். அவர் பெயர் ராசி அப்படி. மறுநாள் நாங்கள் பஸ் ஏறிச் சென்று இரயிலைப் பிடிக்கவேண்டியிருந்தது. அந்த இடத்தில் படகு கரை ஒதுங்கியது. காலையில் மீண்டும் சாலைகள், வண்டிகள், இரயில் நிலையம், மக்கள் கூட்டம் என பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இந்த மூன்று நாட்களிலும் நாங்கள் ஏதேனும் செய்துகொண்டிருந்த நேரங்கள் அதிகபட்சம் நான்கு அல்லது ஐந்து மணி நேரங்களே. மற்ற நேரங்களில் வெறுமனே உட்கார்ந்திருந்தோம். இயற்கையின் மடியில் சும்மா இருப்பது என்பது ஒரு தியான அனுபவம்தான் இல்லையா? எதுவுமே செய்யாமல். எதைப்பற்றியும் எண்ணிக்கொள்ளாமல். காற்றோடு, நதியோடு, கரையோடு, அலையோடு ஒன்றாய் நம்மையும் இணைத்துக் கொள்கையில் வாழ்க்கைக்கு வேறொரு அர்த்தம் கிடைத்துவிடுகிறது. அடுத்தமுறை ஒரு இயற்கைச் சூழலுக்குச் செல்கையில் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று பரபரக்காமல். ஒரு இடத்தில் அமர்ந்து அந்தச் சூழலில் இணைந்துவிட்டாலே அது ஒரு பேரனுபவமாய் மாறிவிடும் என்பதை உணர்ந்தேன். அது மக்கள் கூட்டமாயிருக்கும் ஒரு இடமாயிருந்தாலும் சரி.

ஆழ்மனதில் ஒரு நதி ஓடிக்கொண்டே இருக்கிறது. அதன் மீதமர்ந்துதான் கம்ப்யூட்டரைத் தட்டிக்கொண்டிருக்கிறேன் போலும்.

http://picasaweb.google.com/cyril.alex/Kothavari#

http://picasaweb.google.com/vishnupuram.vattam/GodavariTrip#

Popularity: 5% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....15 மறுமொழிகள் to “அமைதியான நதியினிலே…!”

 1. படங்கள் பார்த்தேன் அலெக்ஸ். பொறாமையாக இருக்கிறது.

 2. அருமையான பயண அனுபவம்..

 3. Haranprasanna சொல்கிறார்:

  Great write up. Keep it up! :-)

 4. […] This post was mentioned on Twitter by Cyril Alex, Cyril Alex. Cyril Alex said: அமைதியான நதியினிலே…! http://cyrilalex.com/?p=572 […]

 5. அழகான மனப்பதிவு சிறில்

 6. நான் எதிர்பார்த்தது போன்ற ஒரு அழகான சாரத்தை உள்ளடக்கிய பதிவு. சாலா பாகுந்தி.

 7. நறுக்கென்று வந்திருக்கிறது கட்டுரை

 8. RAVICHANDRAN சொல்கிறார்:

  நதி அனுபவங்களை மீட்டெடுத்தது போன்ற உணர்வு, அருமையான பதிவு.

 9. அனுபவத்தை பகிர்ந்தபின்புதான் அது முழுமையடைந்தது. பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி.

 10. கிரி சொல்கிறார்:

  //இயற்கையின் மடியில் சும்மா இருப்பது என்பது ஒரு தியான அனுபவம்தான் இல்லையா? //

  முற்றிலும் உண்மை. “நச்” பதிவிற்கு நன்றி.

  //அனுபவத்தை பகிர்ந்தபின்புதான் அது முழுமையடைந்தது//

  நிச்சயமாக!

 11. ராஜகோபால் சொல்கிறார்:

  ஜெயமோகன் குழுவினருடனான உங்களின் நதியனுபவங்களை படிக்கும் போதும் படங்களைப் பார்க்கும்போதும் ஏக்கமும் பொறாமையும் ஒருமித்து எழுகின்றன. முப்பதாண்டுகளுக்கு முன் கிருஷ்ணா நதியில் பயணித்து நண்பர்களுடன் நாகார்ஜுன மலையைத் தரிசித்து வந்த நினைவுகள் மேலெழ பெருமூச்சு முட்டுகிறது. இப்போது பாழ்பட்டிருக்கும் யமுனைக் கரையில் குழாயடியில் குளிக்கும் காலக் கொடுமையை எங்கே சொல்ல? ஆழ்மனதில் ஒரு நதி ஓடிக்கொண்டேயிருக்கிறது என்ற உங்களின் வார்த்தைகள் தாம் எவ்வளவு சத்தியமானவை? பதிவுக்கு நன்றி. பயணம் தொடர வாழ்த்துக்கள்!

 12. பொன். மகாலிங்கம் சொல்கிறார்:

  புது இடம், புது மனிதர்கள், புதிய தட்ப-வெப்பம் இவையெல்லாம் நம்மிடம் மாற்றத்தை ஏற்படுத்துமெனக்
  கேள்விப்பட்டிருக்கிறேன். அனுபவித்தும் இருக்கிறேன்.
  ஜெமோ கட்டுரைத் தொடரையும் உங்கள் கட்டுரையையும்
  படித்து விட்டுப் படங்களைப் பார்த்தபோது, உண்மையிலேயே
  பொறாமையாக இருந்தது. படத்தில் உள்ள உங்கள் முகங்களே,
  நீங்கள் அனுபவித்த இன்பத்துக்கு சாட்சியாக உள்ளன.
  பல்கலைக் கழக நாட்களில், நண்பர்களோடு முதுமலைக் காட்டில்
  சுற்றிய என் அனுபவம் நினைவுக்கு வந்தது. நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள் !

 13. காஸ்மிக் தூசி சொல்கிறார்:

  மீன் நீங்களே பிடிச்சதா…

 14. மதிசுதா சொல்கிறார்:

  அருமையான களக்காட்சிகள்….

 15. //இரவில் பேய்க்கதைகளும் பேயனுபவங்களும் பகிரப்பட்டன. திகிலூட்டும் அனுபவமாக இருந்தது. எனக்கு பேய் நம்பிக்கையில்லை இல்லை என மனதுக்குள் சொல்லிக்கொண்டே இருந்தேன்.//

  10 அடி தள்ளியுள்ள பாத்ரூம் போக என்னை துணைக்கழைத்தவர் பேசுற பேச்சா இது ?

  நீண்ட நாள் கழித்து மீண்டும் படித்த உங்கள் பதிவு கோதாவரி ஏக்கத்தை கிளரி விட்டது .

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்