துளசி

பின் முற்றத்தில் நன்றாக இருட்டியிருந்தது.  குளிர்ந்த காற்று அவன் முகத்தை வருடிச்சென்றது. கிழக்குச் சுவற்றிலிருந்த முல்லைச் செடியிலிருந்து மணம் கசிந்து காற்றில் பரவியிருந்தது. தென்னை மரங்கள் இரண்டும் தூக்கம் கலைந்தது புரளும் கிழவனைப்போல் முனகின. இலைகள் சலசலத்ததில் பூச்சிகளின் ரீங்காரம் கொஞ்சம் அடங்கியது. மீண்டும் கச்சேரி ஆரம்பிக்கையில் காற்று திரும்பியடித்தது. இப்போது மாடத்து துளசி வாசம் துல்லியமாகத் தெரிந்தது. செல்ஃபோனில் பேசிக் கொண்டிருந்த அவன் மூச்சை இழுத்து விட்டான். முகத்தில் ஒரே புன்னகையுடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருக்கிறான். முகம் மலர்ந்திருந்தது. அத்தகைய முகமலர்ச்சி ஒரு இளைஞனுக்கு வாய்ப்பது மிகச் சில நாட்கள் மட்டுமே என்பதை அறிந்தவனாக இந்த நிமிடங்களை முழுவதும் அனுபவிக்கத் துடிப்பவனாக பேசிக்கொண்டிருந்தான். ஒவ்வொரு வாக்கியத்திற்கும் மிக நுட்பமான உடலசைவுகள் வெளிப்பட்டுக்கொண்டிருந்தன. மீண்டும் ஒருமுறை காற்று வந்து அவனைச் சீண்டியது. ’எத்தனை இதமான காற்று’ என்று அவன் நினைத்திருக்கக் கூடும். சட்டென்று முகத்தில் ஒரு பெருமிதம் தோன்றியது. ”ஒரு நிமிஷம்” எனச் சொல்லிவிட்டு. சுழன்று வந்த காற்றை கண்மூடி அனுபவித்தான். மீண்டும் துளசியின் வாசம் மூளைக்கு ஏறியது. எட்டிச் சென்று ஒரு துளசி இலை பறித்து வாயிலிட்டான். மூன்று வாரங்கள் அலைந்து திரிந்தாலும் இப்படி வசதியான காற்றோட்டமான தென்னை மரங்களும் முல்லைச் செடியும் துளசியும் கிணற்றடியுமாக பின் முற்றம் கொண்ட வீட்டில் தன் மனைவியோடு ஒரு புதுக் குடும்ப வாழ்க்கையை ஆரம்பிப்பதில் பெருமிதம்தான் இல்லையா?

 புன்னைகை மீண்டும் புள்ளியாகக் கோடாகக் கோலமாக விரிந்தது. பேச்சு தொடர்ந்தது. இன்னும் இரண்டு வாரங்கள்தான் இந்தக் காதல் அனுபவம். அதன்பிறகு அவள் இவனின் மனைவியாகிவிடுவாள். பெண்பார்த்து சம்மதம் சொல்லிய பிறகு கிடைத்த ஆறு வாரங்களுக்குள் ஆறு வருடக் காதலை நிகழ்த்திவிட்டிருந்தனர் இருவரும்.

 இப்போது பேச்சு முழுவதும் அந்த வீட்டைக் குறித்ததாக இருந்தது. ஆவடியிலிருந்து, அலுவலகத்திலிருந்து அரை மணி நேரம் பயணம்தான். ஊரில் இருந்த சில பழைய பண்ணை வீடுகளைப்போலிருந்தது. அவளுக்கு நிச்சயம் பிடிக்கும். பக்கத்து வீடு பக்கத்தில் இல்லை. கத்தினால் கதறினாலொழிய யாருக்கும் கேட்கப்போவதில்லை. அவள்தான் நகர்ப்புறத்தில் வீடு பார்க்கவேண்டாம் என்றாள். சென்னைக் காற்றுக்கு ஒரு வினோத நிறம் இருப்பதாக அவள் நம்பினாள். தூசியும் புகையும் கலந்ததொரு நிறம். அவள் கண்களுக்கு மட்டும் அந்நிறம் பளிச்சென்று தெரிந்திருக்க வேண்டும். காற்றுக்கு நிறம் இருப்பது எத்தனை அசௌகரியம். தேடித் தேடி இந்த வீட்டைக் கண்டடைந்தான். ஆவடியிலிருந்து திருப்பதி செல்லும் முக்கிய சாலைக்கு மிக அருகிலேயே வீடு இருந்தது. அவன் அங்கு குடி புகுந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டிருந்தாலும் இன்றுதான் பின்முற்றத்துக்கு வந்திருந்தான்.

 இரு மூலைகளிலும் உயர்ந்து வளர்ந்த தென்னை மரங்கள். ஏழடி உயர மாமமரம் ஒன்று. கிழக்குச் சுவற்றில் அடர்ந்து படர்ந்த முல்லைச் செடி. அதன் ஓரம் ஒரு வரிசை பூச்செடிகள். முற்றி வளர்ந்த ரோசாச்செடிகள் சில. பின் வாசலுக்கும் நேராக துளசி மாடம். அதிலிருந்து நேராக நான்கடி தள்ளி கிணறு. வீட்டில் கடைசியாக இருந்த ‘ஐயர்ஸ்’ துளசி மாடம் கட்டி வைத்திருந்ததாக வீட்டின் சொந்தக்காரர் சொல்லியிருந்தார்.

 செல்ஃபோன் பேச்சு தொடர்ந்துகொண்டிருந்தது. இன்னும் இரண்டு துளசி இலைகளை எடுத்து வாயில் போட்டு சுவைத்தான். எங்கேயோ முன்பு அவனுக்குப் பழகிய சுவையாக அது இருந்தது. கிணற்றடிக்கு வந்தான். எட்டி உள்ளே பார்த்தான். அழகிய முழு நிலவு உள்ளே தெரிந்தது. அது கிணற்றின் இருண்ட வட்டத்தை கருநீல வடிவாகக் காட்டியது. சலனமற்ற காட்சியாய் இருந்தது. ஐந்து விநாடிகள் பார்த்திருப்பான். பின்பு அதே புன்னகையுடன் பெச்சிவிட்டே வீட்டுக்குள் வந்தான். உரையாடலை முடித்துக்கொன்டு அவன் படுக்கையில் கிணற்றில் தெரிந்த முழு நிலவுக் காட்சி மீண்டும் ஒருமுறை மனதில் தோன்றி மறைந்தது.

 காலையில் எழுந்தவன் தன் மீது வீசிய வீரியமான துளசி மணத்தை உணர்ந்து ஆச்சரியப்பட்டான். அவன் உடம்பு முழுவதுமே துளசி மணம் அடித்தது போலத் தொன்றியது. எதிரே நாள்காட்டி தாள் கண்ணை உறுத்தியது. அதில் ஏதோ தவறிருப்பதாக அவனுக்குப் பட்டது. நேற்றைக் கிழித்து இன்றாக்கினான்.

 பின்முற்றம் வந்தான். இளங்காலை மெல்லிய ஒளி படர்த்தியிருந்தது. கொஞ்சம் புகை சேர்த்தால் மிக அழகாக படமாக்கப்பட்டதொரு திரைக்காட்சியாகிவிடும். இப்போது துளசிச் செடியை கூர்ந்து பார்த்தான். அது வித்தியாசமாக இருந்தது. இப்படி செடிகளை அவன் பார்த்திருக்கவில்லை. நடுத்தண்டு முதிர்ந்து வளர்ந்த காட்டு  மரம் போலவும் கிளைகள் மரத்தின் கிளைகளைப் போலவும் படர்ந்திருந்தன, ஒரு போன்சாய் செடியைப் போல. ‘துளசி இப்படி வளருமா’ என நினைத்துக் கொண்டான். வீட்டுக்காரர் சொன்னது நினைவுக்கு வந்தது ‘சார் அந்த ஐயர் வெத்திலை கூட இந்த எலைகள் ரெண்டப் போட்டுக்குவாரு.’ கிணற்றைப் பார்த்தான். ‘கெணத்துல சொட்டுத்தண்ணி இல்ல சார்.’ கிணற்றை தோண்டிய காலத்திலிருந்தே அதில் தண்ணீர் இல்லை என வீட்டுக்காரர் சொல்லியிருந்தார். காலெண்டரில் இருந்த தவறு என்னவென்று புரிந்தது. ‘நேற்று அமாவாசை’. சட்டென்று பயம் தொற்றிக்கொண்டது.

இரண்டெட்டு பதற்றத்துடன் வைத்து கிணற்றை எட்டிப் பார்த்தான். காலை வெளிச்சம் இன்னும் உள்ளே இறங்கியிருக்கவில்லை. கிணற்றின் உட்புறம் ஒரு கரு வளையமாகத் தோன்றியது. விருட்டென வீட்டினுள்ளே நுழைந்து கசங்கி கிடந்த காலெண்டர் தாளை இன்னொரு முறை பார்த்துக்கொண்டான். ‘செவ்வாய்’க்கு அருகில் பளிச்சென்று தெரிந்தது கரிய வட்டம். காதல் பரவசம் நீரற்ற கிணற்றில் அமாவசை இரவில் முழு நிலவைக் கன்டிருக்கும் என்பதைவிட வேறு தர்கம் எதுவும் அவனுக்கு கிடைக்கவில்லை.

 அன்று மாலையும் தொடர்ந்தது தொலை பேசிக் காதல். இன்று பின்முற்றம் வந்ததும் வானத்தைப் பார்த்தான். பேச்சு சுவார்ஸ்யமாய் ஓடிக்கொண்டிருந்தது. அவளின் கல்லூரிக் காலங்கள். துளசி மனம் மூக்கைத் துளைத்தது. அதைப் பார்க்கும்போதே எடுத்து வாயில் போடத் தூண்டியது. இரண்டு துளசி இலைகளைக் கிள்ளி வாயில் போட்டுக்கொண்டான். பச்சிலைபோல இல்லாமல் சற்று இனிப்பகவே இருந்தன துளசி இலைகள். கிணற்றைச் சுற்றி நடந்து கொண்டே உரையாடிக் கொண்டிருந்தான். பேசிக்கொண்டே கிணற்றின் உள்ளே பார்த்தான். உள்ளே அவனது எதிரொளி தெரிந்தது. உரையாடலின் மும்முரத்தில் அதை அவன் முழுதாகக் கவனிக்கவில்லை. கால் மணி நேரம் கழித்து அழைப்பை துண்டித்துவிட்டு துளசி மாடத்தில் புன்னகையுடன் சாய்ந்த போது கிணற்றில் தெரிந்த பிம்பம் மனதில் மீண்டும் தோன்றி மறைந்தது. அது அவனின் பிம்பம் அல்ல. கிணற்றில் தெரிந்தது ஒரு பெண்ணின் உருவம்.

சட்டென்று ஓடிச் சென்று கிணற்றில் எட்டிப்பார்த்தான். பின்முற்ற இருளைவிட கிணற்றுக் காட்சியில் இருள் குறைந்திருந்தது. இன்னும் முழுதாக இருட்டிவிடாத மாலையின் இருள். ஐந்து முதல் ஆறு மணி இருக்கலாம். குழப்பத்துடன் பார்வையை திருப்ப நினைக்கையில் தோன்றியது அந்த இளம்பெண்ணின் உருவம். அவள் அழுதுகொண்டிருந்தாள். பின்னால் நின்றிருந்த யாருடனோ அழுதபடியே பேசிக் கொண்டிருந்தாள். ஒருகணம் இவன் கிணற்றுக்குள் நின்று கிணற்றின் மேல் இருப்பவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பதைப்போலத் தோன்றியது.

 அந்தப் பெண் இப்போது திரும்பி நின்று பேசிக் கொண்டிருந்தாள். இவனுக்கு வீட்டுக்குள்ளே ஓடிவிடவேண்டும்போல் இருந்தது. ‘போய்விடாதே!’ என யாரோ இவனிடம் கெஞ்சுவதைப்போல் இருந்தது. ஏன் இப்படி தனக்கு நடக்கிறது என்று எண்ணிக்கொன்டான். இது உண்மையல்ல என ஒரு குரல் கேட்டது. ஓடு ஓடு என்றது மற்றொரு குரல். கால்கள் லேசாக நடுங்குவதை உணர்ந்தான். கைகள் ரெண்டையும் கிணற்றுச் சுவற்றில் ஊன்றி தன் உடம்பை பின்னுக்குத் தள்ள முயன்றான். ஆனால் அவன் உடம்பு அசையவில்லை. அவன் அப்படிச் செய்யவில்லை, அப்படிச் செய்ய எண்ணினான் என்று அவன் மனதில் தோன்றியது. இப்போது கிணற்றுக்காட்சியில் ஒரு ஆண் வந்தான் அவனுடந்தான் அவள் பேசிக் கொண்டிருந்திருக்க வேண்டும். உன்னிப்பாக அவனைப் பார்த்தான் எங்கேயோ பார்த்த முகம். சித்தப்பா. பாம்பே சித்தப்பா. ‘சித்தப்பா…’ எனக் கத்தினான். அவன் கத்தியது அவனது காதுக்கே கேட்கவில்லை. இப்போதும் தான் கத்த நினைத்ததாகவே நினைத்தான்.

 செல்ஃபோன் அதிர்ந்தபடியே ஓசை எழுப்பியது. மாயக் கட்டொன்றிலிருந்து விடுபட்டவனாக கிணற்றிலிருந்து விலகினான். ஃபோனை எடுக்க முடிய்வில்லை. செயலற்று கீழே அமர்ந்தான். உடம்பு வியர்த்திருந்தது. விருட்டென்று எழுந்து வீட்டுக்குள் ஓடினான். கண்களை இறுக மூடிக்கொண்டு படுக்கையில் விழுந்தான். சட்டென்று உறங்கிப்போனான்.

 காலையில் எழுந்தபோது மிகுந்த உடல் சோர்ந்திருந்தது. இரவெல்லாம் கனாக்கண்டதைப்போல கண்கள் உறுத்திக்கொண்டிருந்தன. தலை வலித்தது. உடம்பும் வலித்தது. முந்தைய இரவின் நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன. அது கனவுதானோ என்று சந்தேகித்தான். இல்லையே அந்தக் காட்சி… அந்தப் பெண்.. சித்தப்பா.. இல்லை அது சித்தப்பா போல வேறொருவரோ? குழம்பிப்போனான்.

வீட்டின் சொந்தக்காரருக்கு ஃபோன் அடித்து பேசினான். வீட்டின் முழு வரலாற்றையும் அவர் சொல்லி முடித்தார். ‘எங்க தாத்தா கட்டின வீடு ரெம்ப பழசெல்லாம் இல்ல சார். ஒரு முப்பது வருஷந்தான். பாட்டி செத்ததுக்கப்புறம் அதிகமா காலியாத்தான் கெடந்திருக்கு. அப்புறம் ஐயர்ஸ் வந்தாங்க. அவரு செத்தப்போ அவங்க காலி பண்ணிட்டு போயிட்டாங்க.. அது போன வருஷம். ஏன் தம்பி கேட்குறீங்க என்றவருக்கு ‘அம்மா கேட்கச் சொன்னாங்க’ என்றான்.

 மிகுந்த பயத்துடன் பின்முற்றம் வந்தான். வெளிச்சத்தைக் கொண்டு அவன் அதிக நேரம் தூங்கிவிட்டதை உணர்ந்தான். எப்படியென்றாலும் இந்த நிலையில் ஆபீஸ் போக முடியாது. தயக்கத்துடன் கிணற்றடிக்கு வந்து எட்டிப்பார்த்தான். கிணற்றினுள் ஒரு கருந்துளை மட்டுமே தெரிந்தது தண்ணீரோ தரையோ தென்படவேயில்லை.

அங்கிருந்தபடியே தன் நண்பனுக்கு ஃபோன் அடித்தான் ‘மாப்ள உனக்கு பேய் நம்பிக்க உண்டாடா’ என்றான். ‘கல்யாணம் பண்ணிக்கிட்டவனுக்கெல்லாம் அந்த நம்பிக்க கட்டாயம் உண்டு மாப்ள. இப்பவே தப்பிச்சுக்கோ.’ அவனுக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் இருக்கும். ‘இல்லடா நான் பாத்திருக்க இந்த வீட்டுல பேய் இருக்கும்ணு நினைக்கிறேண்டா.’ இரண்டு நாள் தனக்கு நடந்த எல்லாவற்றையும் சொல்லி முடித்தான். ‘இத்தன சீரியசா சொல்ற? பேயெல்லாம் இருக்கதுடா. ஒன் சித்தப்பா வேற வர்றாருண்ற. அவரு செத்தா போனாரு?’ இவன் சித்தப்பா ஊரிலிருந்து ஓடிப்போய் பாம்பே சென்று அங்கே ஒரு மராத்தி பெண்ணை கல்யாணம் செய்துவிட்டு பல வருடங்கள் கழித்துதான் ஊருக்கு வந்தார். ‘சித்தப்பாவேதான் ஒரு முப்பது வருஷத்துக்கு முன்னால சித்தப்பா இப்படித்தான் இருந்தாரு. அவர் காலேஜ் ஃபிரண்சோட எடுத்த ஃபோட்டோவ்ல பாத்திருக்கேன்.’

 இவன் கல்யாணத்துக்கு ஊருக்குப் போக இன்னும் இரண்டு நாட்களே இருந்தது. ‘இன்னைக்கு நைட் வேண்ணா நான் வந்து அங்க தங்கிக்கிறேன். நீ ரெஸ்ட் எடு. தூங்குடா நீ நல்லா தூங்கி ரெம்ப நாள் இருக்கும்ணு நினைக்குறேன். சரியா தூக்கமில்லைண்ணாலும் இப்டி ஆகும். நான் ஆஃபீசிலிருந்து நேரா ஒன் வீட்டுக்கே வந்திடுறேன்.’ என்று ஃபோனை வைத்தான் நண்பன்.

 தயாராகி வெளியே ஓட்டலில் சாப்பிடக் கிளம்பினான். ஓட்டல் சுவற்றில் ஒரு திருமண வாழ்த்து அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது. ‘மாப்ள நம்ம ஊர்லயே ஓன் கல்யாணத்துக்குத்தாம் மொதோ மொதல்ல மோஸ்டர் ஒட்டப்போறோம். அதுவும் நீ ஸ்க்கூல்ல டாவடிச்ச் பொண்ணுங்க வீட்டு சுவத்தல்யெல்லாம் ரெண்டு போஸ்டர் ஒட்டி வச்சுருவோம்.’ என நண்பர்கள் கிண்டலடித்தது நினவுக்கு வந்தது. மனம் கொஞ்சம் இனிமையடைந்திருந்தது. நாளைக்கே கிளம்பி ஊருக்குப் போய்விடவேண்டியதுதான் என முடிவெடுத்தான்.

சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பியவனுக்கு வீட்டுக்க்குள் நுழைய தயக்கமாய் இருந்தது. கிளம்பி அம்பத்தூர் சென்று டிக்கட் எடுத்து படம் பார்க்க உட்கார்ந்தான். அரிவாளுக்குப் பதில் துப்பாக்கியை வைத்துக் கொண்டி வில்லன்களை வகுந்தெடுத்துக்கொண்டிருந்தார்கள் ஹாலிவுட் நாயகர்கள்.

 படம் முடிந்து வெளியில் கொஞ்சம் சுற்றிவிட்டு வீடு வந்து சேர்ந்தான். இப்போது மனம் தேறி இருந்தது. அம்மாவுக்கு ஃபோன் அடித்தான். அம்மா திருமண அழைப்பிதழ்கள் கொடுத்துவிட்டு அப்போதுதான் வீடு திரும்பியிருந்தாள். ‘சொல்லுடா. என்னெல்லாம் வேல இருக்கு பாத்தியா. அப்பா மதுரைக்கு போயிருக்கு.’ அவள் பேச்சை நிறுத்தி ஆசுவாசமானபின் கேட்டான். ‘அம்மா நான் சின்ன வயசுல கிணறு பாத்தா பயப்படுவேனா?’ ‘கெணறா! ஏண்டா கேக்குற? பயப்படவெல்லாம் மாட்டியே. நம்ம ஊர்ல ஒரே கெணறுதான் இருந்துச்சு. அதுவும் நீ கொழந்தையா இருக்கும்போதே மூடிட்டாங்களே’ என்றாள் அம்மா. வேறு கல்யாண விஷயங்களில் பேச்சு நகர்ந்தது. பேச்சை முடிக்கையில் சட்டெனத் தோன்ற ‘ஏம்மா அந்தக் கெணத்த மூடினாங்க’ என்று கேட்டான். ‘அது பெரிய கதடா. அப்போ நம்ம வீட்டுக்கு பக்கத்துல ஒரு ஐயர் இருந்தாரு. நீ கைக் கொழந்த. கொஞ்சம் தவழுவ. உனக்கு நியாபகம் இருக்காது. அவருக்கு ஒரு பொண்ணு இருந்துச்சு. ரெம்ப லட்சணமா சரஸ்வதிபோல இருப்பா. பேரு துளசி. எப்பவும் நம்ம வீட்டுக்கு வந்து ஒன்ன கையில எடுத்து வச்சு வெளையாடிகிட்டே இருப்பா. நீயும் இல்சி இல்சீண்ணு அவகூட ஒட்டிக்குவ. அவ வீட்டுக்கு தூக்கிட்டு போவா நீ அங்கேர்ந்த துளசி எலைய சாப்பிட்டுட்டு பேதியாகி வருவ. பாவி மட்ட ஒரு நா ஒன்னையும் தூக்கிகிட்டு கெணத்தடிக்குப் போயி. கெணத்துல விழுந்து செத்துட்டா. நல்ல வேள தற்செயலா அங்க வந்த ஒன் பாம்பே சித்தப்பா ஒன்னத் தூக்கிட்டு வந்தான். அவன் இல்லைண்ணா என்ன நடந்திருக்குமோ?’ அம்மா கவலை தோய்ந்த குரலுடன் கதை சொல்லி முடித்தாள்.

 கதவை யாரோ தட்டினார்கள். அவன் நண்பன் வந்திருந்தான். அம்மாவிடம் சொல்லிவிட்டு ஃபோனைத் துண்டித்தான். நண்பனின் குறுக்கு விசாரணைகளுக்கு பதிலளித்துக்கொண்டே பின்முற்றத்தை வந்தடைந்தான். ‘இந்தக் கிணறுதாண்டா’ என்றான். நண்பன் மெல்லிய சிரிப்புடன் இவனைப்பார்த்தான். அம்மா சொன்னவற்றை சொல்லி முடித்தான். ‘இதெல்லாம் சில்லிடா.. எந்த லாஜிக்குமே இல்ல. இந்தக் கெணத்துல எப்படி இதெல்லாம் தெரியும்? பிரம்மடா..’ என்றான் நண்பன். ‘ஏதாச்சும் பெருசா நடந்து கல்யாணம் நின்னு போயிடுமோண்ணு பயமா இருக்குடா. இந்த நேரத்துல இதெல்லாம் தேவையாண்ணு எரிச்சலாயிருகு.’ என்றான். நண்பன் சமாதானங்கள் சொல்லி முடித்தான். வெளியே சென்று சாப்பிட்டுவிட்டு வந்தனர். பின் கதவை பூட்டிவிட்டு தூங்கிப்போனார்கள்.

  நள்ளிரவில் முழிப்பு தட்டியது. படுத்தபடியே கண்களைத் திறந்தான். உதவிக்கு தூங்க வந்தவன் குறட்டை சத்தத்துடன் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். யாரோ முகமெங்கும் துளசியை அரைத்து பூசி விட்டதைப்போல துளசி மணம் மூக்கை துளைத்தது.

 கற்பனை. பிரம்மை. என்று மனதில் திரும்பத் திரும்ப நினைத்துக்கொண்டான். கொஞ்சம் பயம் வந்தது. நண்பனை எழுப்பலாமா? கண்ணை மூடி படு என்றது மனதில் ஒரு குரல். எழுந்து போய் பார் என்றது இன்னொரு குரல். அரை மனி நேரத்துக்கும் மேல் மனதில் இந்தக் குரல்களின் கூச்சல் அலைக்களித்தது. கண்களை இறுக்க மூடிக்கொண்டாலும் தூக்கம் வரவில்லை. அறைக்குள் துளசி வாசம் உச்சமடைந்திருந்தது.

 சட்டென எழுந்து சென்று பின்கதவைத் திறந்து வெளியே வந்தான். வெறி பிடித்தவனைப்போல அவேச நடையிட்டு வந்து துளசி மாடத்தை எட்டி மிதித்தான் அது மழை நீரில் கரைந்து விழும் செம்மண்போல உடைந்து விழுந்தது. துளசிச் செடியை இடது கையில் எடுத்தான். வலது கை கொண்டு ஒரே உருவலில் எல்லா இலைகளையும் உருவி எடுத்தான். கை நிறைய துளசி இலைகள். ஒரு கைப்பிடி இலைகளையும் வாயிலிட்டு மென்று விழுங்கினான். மண்டைக்குள் வெவ்வேறு குரல்கள் பேசிக்கொண்டேயிருந்தன. என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று ஒரு கணம் நினைத்தான் மறுகணமே வெறி பிடித்த மிருகமொன்றைப்போலத் தாவி கிணற்றுச் சுவற்றின் மேல் ஏறினான்.

 இடது கையில் இலைகளற்ற துளசிச் செடியை இறுகப் பற்றியிருந்தான். வாயில் பச்சிலைச் சாறு வழிந்து கொண்டிருந்தது. வியர்வை நெற்றியிலிருந்து வழிந்து தாடையில் சொட்டு சொட்டாக விழுந்துகொண்டிருந்தது. கிணற்றில் எட்டிப் பாக்காதே என்று எச்சரித்தது ஒரு குரல். கிணற்றை பார் என்று கட்டளையிட்டது இன்னொன்று. கண்களில் வெறியுடன் கிணற்றினுள் பார்த்தான்.

 கிணற்றுக் காட்சியில் துளசி தவித்துக்கொண்டிருந்தாள். அவள் கழுத்தில் இரண்டு கைகள் அவளை நெரித்து கிணற்றில் தள்ளிக்கொண்டிருந்தன. ‘இல்சீ இல்சீ’ என இவன் கத்தினான். கத்தியதுபோலத்தான் தோன்றியது அவனுக்கு. அந்தக் கரங்கள் அவளை கிணற்றின் அரைவட்டத்துக்குள் கொண்டுவந்துவிட்டன. ‘ஆ இல்சீஈஈ ‘ எனத் தலையை உயர்த்திக் கத்தினான். அது ஒரு குழந்தையின் குரலைப்போலத் தோன்றியது. வெறி பிடித்தவனாய் கிணற்றுச் சுவற்றில் ஆங்கும் இங்குமாக பதட்டத்துடன் அலைந்து அலைந்து கத்தினான்.

துளசி கிணற்றில் விழும் காட்சி தெரிந்தது. விழிகளில் மரண பயத்துடன் அவள் கிணற்றுக்குள் விழுந்துகொண்டிருந்தாள். சிறிது நேரத்துக்கு ஒரு சலனமும் இல்லை. இறங்கி விடு என்றது ஒரு குரல். நில் நில் என்றது இன்னொன்று. குதித்துக் காப்பாற்று என்றது இன்னுமொரு குரல். சுவற்றின் மீதிருந்து கிணற்றின் கருந்துளையையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.

அடுத்து தோன்றிய காட்சியில் ஒரு குழந்தை கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தது. சட்டென்று மறைந்தது குழந்தை. யாரோ குழந்தையை தூக்கியிருக்க வேண்டும். பின்பு அம்மா எட்டிப்பார்த்தாள்.

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....5 மறுமொழிகள் to “துளசி”

 1. சிறில்அலெக்ஸ் சொல்கிறார்:

  என்ன ஆச்சு எல்லாருக்கும்…
  ஒரே திகில் கதையா எழுதிட்டு இருக்கீங்க..
  http://www.amuttu.com/index.php?view=pages&id=271

 2. கிழக்கு நிழல்கதைகளை திரும்ப போடும் போதே நெனச்சேன் இப்படியெல்லாம் நடக்குமுண்ணு… பெயரும் துளசி செடியும் துளசியா பேரையாவது பிருந்தான்னு மாத்தியிருந்திருக்கலாம்…

 3. Essex சிவா சொல்கிறார்:

  சிறில்,
  அ.முத்துலிங்கம் உர்ல் சரியா? (.com கிடையாதே, .net ஆச்சே?)

 4. அந்த “அ.முத்துலிங்கம் ” கமென்ட் வேறு யாரோ என் பெயரில் போட்டது. யாருண்ணு தெரியல.

 5. துளசி செடி – துளசி அக்கா – துள்சி … ஒரு சைக்கலாஜிக்கல் கனெக்ஷன் இருக்குல்ல.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்