எவன் இவன்?

அமெரிக்காவிலிருந்து வரும்போது என் மகனின் கெலைடோஸ்கோப் ஒன்றையும் எடுத்து வந்தோம். வண்ணத் தகர வெளிப்புறம் கொண்டது. கெலைடோஸ்கோப்கள் முதலில் பார்க்கும்போது அற்புதமான அனுபவத்தை தருகின்றன. வடிவங்கள் நம் கண்முன்பே உருமாறி உருமாறி ஆச்சரியமூட்டுகின்றன. உள்ளே நாம் காண்பவை கட்டுக்கோப்பான கணித வடிவங்கள், ஆனாலும் குழப்பமும் அழகும் கொண்டவை. பார்வைக்கும், அறிவுக்கும் அகத்தூண்டல்களைத் தருகிறது ஒரு கெலைடோஸ்கோப்.

நாட்கள் ஆக ஆக, கெலைடோஸ்கோப்பை மீண்டும் மீண்டும் பார்க்கும்போது வண்ண வடிவங்களைத் தாண்டி கெலைடோஸ்கோப்பின் உள்ளே கிடக்கும் பொருட்கள் ஒவ்வொன்றாகத் தென்பட ஆரம்பிக்கின்றன. சில கண்ணாடி வலையல் துண்டுகள், சில பாசி மணி முத்துக்கள், இன்னும் கற்பனைக்கேற்றபடி இடப்பட்ட பொருட்கள். இந்தப் பார்வை கிடைக்க கிடைக்க கெலைடோஸ்கோப் தனது ஆச்சர்யமூட்டும் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிடுகிறது. பாலாவின் அவன் இவன் இப்படி ஒரு பழக்கப்பட்ட கெலைடோஸ்கோப் அனுபவத்தையே தந்தது.

படத்தின் முதல் பகுதி பாலா எடுத்த ஒரு கிரேசி மோகன் நாடகம் போல ஓடிக்கொண்டிருக்கிறது. வழக்கமான பாலாத்தனமான நீளமான காட்சிகள் இந்த படத்தில் அயற்சி அளிக்கின்றன. இரண்டாம் பகுதியில் திடீரென அழையாத விருந்தாளி போல கதை வந்து புகுந்துவிடுகிறது. ஆம் கதை என்று ஒன்று அங்கேதான் ஆரம்பிக்கிறது. அதன் பின்பு பல அழுகைகளும் பற்கடிப்புகளும் தாண்டி கதை ஒரு கோரமான முடிவைச் சென்றடைந்து தன்னைத்தானே சிதைமூட்டிக் கொள்கிறது.

படம் துவங்குகையில் இருந்த உற்சாகம், பாலாவின் பெயர் திரையில் விழுந்தபோது எழுந்த கரகோஷங்கள், விஷாலின் அறிமுகக்காட்சிக்கெழுந்த சலசலப்புக்கள் ஒரு சில நிமிடங்களிலேயே திரையரங்கின் மூலைமுடுக்குகளில் ஒளிந்துகொண்டன. ஏதோ ஒரு கொடூரத்தின் மௌன சாட்சிகளாக பார்வையாளர்கள் அரங்கு நிறைய அமர்ந்திருந்தனர் எனலாம்.

என்ன குறை? முதலில் கதை. படத்தில் கதை இல்லை. அல்லது இப்படிச் சொல்லலாம் படத்தில் போதுமான அளவு கதை இல்லை. பிதாமகன் பாத்திரங்களுக்கு கோமாளி வேஷம் போட்டுவிட்டதைப்போல கதை நாயகர்கள். கதையும் அதே வண்ணத்தில் தீட்டப்பட்டிருக்கிறது. எஸ்.ரா வசனம் எழுதுவதற்குப்பதில் பாலாவுக்கு ஒரு நல்ல கதையை எழுதித் தந்திருக்கலாம்.

இரண்டாவது கெலைடோஸ்கோப் இஃபக்ட். நாம் பார்த்துப் பழகிப்போன பாலாவின் கதாபாத்திரங்கள், சிச்சுவேஷன்கள். தெருச்சண்டைகள், முதலாளி விசுவாசம், எக்செண்ட்ரிசிசம், கொண்டாட்டங்கள் கும்மாளங்கள்.

மூன்றாவது அதிமிகை நடிப்பு. (Excesive Acting) ஒவர் ஆக்டிங்கையெல்லாம் தூக்கிச் சாப்பிடுமளவுக்கு தேவையில்லாமல் ஓவராய் நடித்துக் கொல்கிறார்கள். விஷால் உண்மையில் சிறப்பாகச் செய்திருக்கிறார். பல இடங்களில் வியக்கவைக்கும் நடிப்பு ஆனால் எதற்காக? அவர் வழியாக எந்த ஒரு கதையும் சொல்லப்படாதபோது அவரது உழைப்பு மொத்தமும் வீண் என்றே சொல்வேன். ஆர்யாவின் தண்ணீர் தள்ளாட்டம் சகிக்க முடியவில்லை. அண்மையில் தொலைக்காட்சியில் தில்லானா மோகனம்பாள் பார்த்துக்கொண்டிருந்தேன். சிவாஜி ஒரு சபையில் முதன்முதலில் பேசுவதாக நடிப்பார். அத்தனை அற்புதமான நடிப்பு. பயமும், கூச்சமும் கலந்த உடல்மொழி. பேச்சை இடையில் விட்டு பயம் கலந்த சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு தொடர்வார். அற்புதம் அற்புதம். அடுத்த கணமே அவர்மீது கத்தி எறியப்பட்டு கீழே விழுவார் அப்படியே அவரது நடிப்பும் கீழே விழுந்து கத்திக்காயத்துடனேயே உருள் உருளென உருள ஆரம்பித்துவிடும். அவன் இவனும் இப்படியான அற்புதமானதும் அபத்தமானதுமாயான நடிப்பைக் கொண்டிருந்தது. குடித்துவிட்டுத் தள்ளாடிக் கொண்டே பேசும் நடிப்பை தயவு செய்து யாராவது மாற்றுங்கள். அத்தனை எளிதானதா அது?

இன்னொன்றை இங்கே சொல்லவேண்டும். அண்மையில் அழகர்சாமியின் குதிரைக்கு (நான் இன்னும் பார்க்கவில்லை) வந்த விமர்சனங்களையும் அவன் இவன் அனுபவத்தையும் பார்க்கும்போது ஒன்று தோன்றுகிறது. தமிழ் சினிமாவில் எதார்த்த(?) கிராமிய கதைகளைச் சொல்லும் திரைமொழி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இப்படி பலவகை திரைமொழிகள் உண்டு. கடத்தல்காரன் படங்கள், பழிவாங்குப் படங்கள், ஹீரோ சபதத்தை வெல்லும் படங்கள், இரட்டை வேடப் படங்கள், காதல் படங்கள்(இதில் பலவகைகள்)  எனப் படங்களுக்கென ஒரு ஃபார்முலா உருவாகிவிடுகிறது. அதில் பல்வேறு கதைகளைப் யுக்திகளைப்புகுத்தி புதிய படங்கள் வந்துகொண்டிருந்தன. எழுபது எண்பதுகளில் கல்லூரி நண்பர்களின் கதைகளுக்கென ஒரு திரைமொழி உருவானது. இப்போது எதார்த்த படங்களுக்கான சூத்திரம் கைவசப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தத் திரைமொழியில் சொல்லப்படும் படங்கள் எல்லாமுமே சிறந்ததாக அமைந்துவிடுவதுமில்லை. கதையோ திரைக்கதையோ சரிவர அமைக்கப்படவில்லையென்றால் வெறும் எதார்த்த பாத்திரங்களோ களனோ அதிர்ச்சியூட்டல்களோ எடுபடுவதில்லை.

சில நேரங்களில் ஒருவரின் மோசமான படைப்பொன்றைக் காண நேர்கையில் இவர் உண்மையிலேயே இவ்வளவுதானோ என சந்தேகம் எழுந்துவிடுகிறது. ஆனால் பாலாவை அப்படி எளிதில் சொல்லிவிட முடியவில்லை. வியத்தகும் பாத்திரங்களைய்ம் கதைகளையும் கதைக் களங்களையும் உருவாக்கி நம் மனசை நிரப்பியவர். ஆனால் அவர் படங்களுக்கென ஒரு ஃபார்முலா உருவாகிவிட்டிருக்கிறது. கெலைடோஸ்கோப்பின் உட்பொருட்கள் ஒவ்வொன்றாய் புலப்பட ஆரம்பித்துவிட்டன. என் பையனின் கெலைடோஸ்கோப் உடைந்தால்தான் நான் இன்னொன்றை வாங்கிக் கொள்வேன். அப்போது மீண்டும் என் கண்கள் ஆச்சர்யங்களைக் காணத் துவங்கலாம்.

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....5 மறுமொழிகள் to “எவன் இவன்?”

 1. புருனோ சொல்கிறார்:

  பல்வண்ணக் காட்சிக் கருவி, பன்னிறவுருக்காட்டி, பல் உரு காட்டி
  உவமானம் சூப்பர் !!

  http://ta.wiktionary.org/wiki/kaleidoscope

 2. புருனோ சொல்கிறார்:

  பயணச்செலவு, பயணச்சீட்டு செலவு, திண்பண்ட செலவு ஆகியவற்றை மிச்சப்படுத்த உதவியதற்கு நன்றி

 3. புருனோ சொல்கிறார்:

  பயணச்செலவு, நுழைவுச்சீட்டு செலவு, திண்பண்ட செலவு ஆகியவற்றை மிச்சப்படுத்த உதவியதற்கு நன்றி

 4. நன்றி புருனோ. ”பல்வண்ணக் காட்சிக் கருவி, பன்னிறவுருக்காட்டி, பல் உரு காட்டி” ஒரு விளையாட்டுப் பொருளுக்கு இத்தனை சீரியசாகவா பெயர் வைக்கணும்? இதுக்குத்தான் சுஜாதா வேணுங்கிறது. :) தமிழாக்கம் செய்கிறவர்கள் மொழியின் பல்வேறு பயன்பாடுகளை உணரவேண்டாமா? ஒரு குழந்தை இதை எப்படி சொல்லும்? கிலிகிலுப்பை என்பதுபோல இருக்கலாமே? மினுமினுப்பி எப்படி :)

 5. பிரபு சொல்கிறார்:

  தங்களது விமர்சனம் நன்றாக இருந்தது.

  ஒரு திரைப்படம் எல்லோரும் விரும்பும் படி இருக்க நீங்கள் ஒரு கோட்பாட்டை அல்லது ஒரு சமன்பாட்டை குடுத்தீங்கன்னா ரொம்ப நல்லாருக்கும்.

  எனக்கு தங்களது விமர்சனத்தை படித்த பிறகு ஒரு எண்ணம் வந்து விட்டது நீங்க ஏன் அப்புடி ஒரு படம் உருவாக்ககூடாது ?

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்