சில கிறுக்கல்களும் கிறுக்குத்தனங்களும்.

“சூப்பர் ஸ்டாருக்காக சர்வசமய கூட்டு பிரார்த்தனை @ மகாவதார் பாபாஜி கோயில், பரங்கிப்பேட்டை. 12 ஜீன், ஞாயிறு காலை பத்து மணி. அனைவரும் வருக!” என்று அறிவிக்கிறது ஒரு கூகிள் பஸ் செய்தி. அதன் கீழே ”தலைவாவாவாவாவா……” என்றொரு கூக்குரல் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. எந்த மனநிலையில் இந்த செய்தியும் எதிர்வினையும் பதிவாகியுள்ளன? விழியோரக் கண்ணீருடனா? கனத்தமனத்துடனா? அலுவல் பரபரப்புகளின் மத்தியில் கவனமின்றியா? நண்பருடன் தொலைபேசிக்கொண்டா? எதையுமே நம்மால் யூகிக்க முடிவதில்லை. இணையத்துக்கு இரத்தமுமில்லை சதையுமில்லை. உலகம் முழுவதும் அது ஒரு மாபெரும் வெள்ளைத்தாள் போல விரிந்து கிடக்கிறது. மக்கள் அதன் மீது ஏதேதோ எழுதிவைத்துச் சென்றுகொண்டிருக்கிறார்கள். கணிணியின் திரை எனும் ஒரு சின்ன சாளரம் வழியே இழுத்து இழுத்து அந்த மாபெரும் வெள்ளைத் தாளின் பக்கங்களை பார்த்துக்கொள்ள முடிகிறது. ஒருபோதும் அந்தத் தாளில் கிறுக்கியவர்களை, அவர்களின் மனநிலையை, அவர்களின் நம்பிக்கைகளின், ஈடுபாட்டின் தீவிரத்தை, ஆளுமைகளை நம்மால் துல்லியமாக எடைபோட முடிவதில்லை. ஆக இந்தக் கட்டுரையில் நேரடி ஆளுமைகளை அல்ல இணைய பதிவுகள், குறிப்புகள், பகிர்வுகள் வழியே தோன்றும் ஆளுமைகளையே குறிப்பிட முடிகிறது.

செய்திகளையும் பத்திரிகைக் கட்டுரைகளையும் தவிர்த்துப் பார்த்தால் இணையத்தில் ரஜினிகாந்த் குறித்து எழுதும் மூன்று முக்கிய ஆளுமைகளைக் காணமுடிகிறது. முதலில் ரஜினி ரசிகர்கள். மிகத் தீவிர ரசிகர்கள் முதல் சாதாரண, பகுதி நேர ரசிகர்கள் வரை இவர்களில் பல விதங்கள். இரண்டாவது ரஜினிகாந்த் எனும் சமூக நிகழ்வை அவதானித்து மற்ற சமூக நிகழ்வுகளைப் போலவே இதைக்குறித்தும் கருத்துக்களை பதிவு செய்துகொண்டிருப்பவர்கள். ஜப்பான் அணு உலை வெடிப்பதும், ரஜினி திரைப்படம் வெளியிடப்பதுவதும் ஒரே தீவிரத்துடனோ அல்லது தீவிரமின்மையுடனோ இவர்களால் பதிவு செய்யப்படுகிறது. அடுத்து ரஜினிகாந்தின் ரசிகர்களை, ரஜினிகாந்தை விமர்சனம் செய்யும் நபர்கள். இவர்களிலும் பல வகைகள் உண்டு. சிலர் பிற நடிகர்களின் ரசிகர்கள். சிலர் அரசியல் சாய்வுடையவர்கள். சிலர் சமூக சீர்திருத்தப் பார்வையோ பாவனையோ கொண்டவர்கள். எது எப்படியானாலும் ரஜினிகாந்த் குறித்த எண்ணற்ற பதிவுகளை இணையத்தில் காணமுடிகிறது.

ரஜினி ரசிகர்கள் இணையத்தில் குழுக்களாகவும் தனித்தும் என்னவெல்லாம் செய்துவிட முடியுமோ அதையெல்லாம் செய்து வைத்திருக்கிறார்கள். ரஜினி பெயரிலும் அவரது இரசிகர்களின் பெயரிலும் பிரபல வலைத்தளங்கள் இயங்கிவருகின்றன. இவை ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு துவங்கி ரஜினி குறித்த அண்மைச்செய்திகள்வரை பதித்து வைத்திருக்கின்றன. ரஜினிகாந்த் நடித்த படங்களின் பட்டியல்கள், பாடல்கள், புகைப்படத் தொகுப்புகள், பஞ்ச் டயலாக்குகளின் தொகுப்புக்கள், படத் தொகுப்புக்கள், செய்தித் தொகுப்புக்கள், ரஜினிகாந்த் குறித்து பிற பிரபலங்களின் ’பொன்மொழிகள்’ என பல பக்கங்களில் பல பரிமாணங்களில் இந்தத் தளங்கள் ரஜினிகாந்தின் புகழ்பாடிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய தளங்களை செயல்படுத்த ஒப்பீட்டளவில் அதிக நேரமும் பணமும் தேவைப்படுவதால் பொதுவாக இவை குழுக்களால் செயல்படுத்தப்படுகின்றன.

உலகளாவிய ரசிகர்களை ஒருங்கிணைத்துக்கொள்வதே இத்தகைய ரஜினி ரசிகர்களின் இணைய தளங்களின் முக்கிய நோக்கம். rajinifans.com, envazi.com onlysuperstar.com போன்றவை இத்தகைய தளங்கள். rajinifans.com 2003 முதல் இயங்கிக்கொண்டிருக்கிறது. நானூறு ரசிகர்களுக்கும் மேல் இதில் உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் அதிகம் பேர் வெளிநாடுகளில் இருப்பவர்கள். தமிழகத்தில் ஊர் ஊராக இயங்கும் ரசிகர் மன்றங்களுக்கு மாற்றாக இணையத்தில் குழுவாக இவர்கள் இயங்கிவருகின்றனர். ரஜினியின் ஜப்பானிய ரசிகர்களோடும் இவர்கள் தொடர்பிலுள்ளனர்.

வெறும் ரஜினி திரைப்படங்களின் ரசிகர்களாய் மட்டுமில்லாமல் பல சமூக சேவைகளையும் இவர்களால் செய்ய முடிந்திருக்கிறது. தமிழகத்தை ஆழிப்பேரலைகள் தாக்கியபின்பு அலையென எழுந்த உதவிக்கரங்களில் இணைய ரஜினி ரசிகர்களின் கரங்களும் ஒன்று. ஒரு இணையதளம் மட்டும் இரண்டு லட்சம் ரூபாய் நன்கொடை பெற்று நலப்பணிகளை செய்துள்ளது. இதில் கணிசமான தொகை ஜப்பானிய ரசிகர்களிடமிருந்து பெறப்பட்டது. நன்கொடையோடு நின்றுவிடாமல் நேரடி சமூகப்பணிகளிலும் ஈடுபட்டு பல உதவிகளை செய்துள்ளார்கள். ரஜினிகாந்தின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் இவர்கள் இரத்ததான முகாம்களை நடத்தி இரத்ததானம் செய்கிறார்கள்.

இத்தகைய இரசிகர்குழுத்தளங்களுக்கிடையே சிறு சித்தாந்த வேறுபாடுகளும் தென்படுகின்றன. சில தளங்கள் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை ஆதரிக்கின்றன, சில தளங்கள் அவரை திரைநாயகனாக மட்டுமே காண விரும்புகின்றன, சில சமூக சேவைகளுக்கு முக்கியத்துவம் தருகின்றன மற்றவை சினிமாவை மட்டுமே கண்டுகொள்கின்றன.

குழுக்களாக இல்லாமல் தனிநபர்கள் ரசிகர்கள் இலவச வலைப்பதிவு சேவைகளில் இயங்குகிறார்கள். ரஜினி ரசிகர்கள் ரஜினியை குறித்து மட்டுமே எழுதிவரும் வலைப்பதிவுகள் பத்துக்கும் குறையாமல் உள்ளன. இதே எண்ணிக்கையில் பல்வேறு பேசு பொருள்களுக்கிடையில் ரஜினி குறித்த பதிவுகளையும் முக்கியமாக பதிக்கும், ரசினி ரசிகர் என்பதை வெளிப்படையாக அறிவித்துக்கொண்டு இயங்கும் பதிவுகள் உள்ளன. இணையம் குறித்து அதிகம் தெரிந்துவைத்திருக்காதவர்களுக்கு இவை சிறிய எண்ணிக்கையாகத் தெரியலாம். வலைப்பதிவுகள் என்பவை ஒரு தனிநபரே நடத்தும் பத்திரிகையைப் போன்றது. தன் ஓய்வு நேரத்தில் கணிசமான பகுதியை செலவிட்டாலொழிய ஒரு வெற்றிகரமான வலைப்பதிவை நடத்த முடியாது என்கிறவகையில் இந்த எண்ணிக்கைகள் கணிசமானவை.

வலைப்பதிவுகளைத் தவிர்த்தால் ரசிகர்கள் கூடிப் பேசிக்கொள்ள விவாதக் குழுமங்கள் (Discussion groups/forums) உருவாக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஒரு வலைத்தளம் அமைக்கப்படுமுன் ரசிகர்கள் குழுமங்களாகவே இணைகிறார்கள். இக்குழுமங்களில் ரஜினியின் திரைப்படங்கள் குறித்த கருத்துக்களும், செய்திப்பதிவுகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன.

கடந்த சில வருடங்களில் இணையத்தில் பிரபலமாகியிருக்கும் Social Networking எனப்படும் சமூகத் தொடர்புத் தளங்கள் வழியாகவும் ரஜினி ரசிகர்கள் ஒருங்கிணைந்துள்ளார்கள். இங்கேயும் தனியாகவும் குழுக்களாகவும் ரசிகர்கள் இணைந்துள்ளார்கள். facebook, orkut போன்ற சேவைகள் இதற்கு உதாரணம். மிக இயல்பாகவும் அனிச்சையாகவும் இங்கே ரசிகர்கள் பேசிக்கொள்கிரார்கள்.

ரஜினிகாந்த் உடல்நிலை தேறிவர எழுப்பப்பட்ட ஆயிரக் கணக்கான வேண்டுதல்களை ஃபேஸ்புக்கில் காண முடிகிறது. ‘என் குடும்பத்துக்காக வேண்டிக்கொள்ளும்போதெல்லாம் உங்களுக்காகவும் வேண்டிக்கொள்வேன். உங்கள் பெயரை என் உடம்பில் பச்சை குத்தி வைத்துள்ளேன். நீங்கள் இதை வாசிக்கப் போவதில்லை என்பது தெரியும் இருந்தாலும் உங்களை எனக்கு மிகவும்ம்ம்ம்ம் பிடிக்கும்’ என்று ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘கடவுளே ரஜினி’ என்று ரத்தினச் சுருக்கமாக ஒருவர் பதிவு செய்துள்ளார். ‘தலைவா நீ சீக்கிரம் வா’ என அழைப்பு விடுக்கிறார் இன்னொருவர். ரஜினிகாந்தின் அண்மைய புகைப்படம் ஒன்றின்கீழ் ஒருவர் மிக உருக்கமாக “தலைவரின் இந்த போட்டோ பார்த்தவுடன் என் கண்கள் கலங்கிவிட்டது நீண்ட நாட்கள் கழித்து என் தாய் ,தந்தையை ,பார்ப்பது போல் உள்ளது” என எழுதிவைத்துள்ளார். பலரும் எதுவும் சொல்லத் தெரியாதவர்களைப்போலவோ, சொல்ல முடியாதவர்களைப்போலவோ வெறுமனே ‘தலைவா…’ என்றொரு பெரும் விளிப்புடன் நின்றுவிடுகின்றனர். இன்னொரு பிரபல சமூகத் தொடர்புத் தளமான டுவிட்டரில் ரஜினிகாந்த் குறித்து தினமும் ஒரு பதிவேனும் செய்யப்படுகிறது. ரஜினி குறித்த முக்கிய செய்திகள் வெளிவரும்போது தமிழ் இணையத்தில் ரஜினி குறித்த உற்சாகம் இன்னும் பலமடங்காகிவிடுகிறது.

தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் எல்லா திரைப்படங்களுக்கும் இணையத்தில் விமர்சனங்கள் எழுதப்படுகின்றன. பல பக்கங்கள் வரை செல்லும் கட்டுரைகள் முதல் 140 எழுத்துக்களுக்குள் அடக்கப்படும் டுவிட்டர் செய்திகள்வரை இவை பல்வேறு பரிமாணங்களுடையவை. ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்கள் வெளிவரும்போது யார் முதலில் திரை விமர்சனம் எழுதுவது என்பதில் தீவிர போட்டி நிலவுகிறது. சிவாஜி, எந்திரன் படங்கள் வெளி வந்து இரண்டே நாட்களுக்குள் நூற்றுக்கும் மேல் திரை விமர்சனப் பதிவுகள் வெளிவந்தன. இவற்றை எழுதியவர்களில் 90%க்கும் மேல் ரஜினியின் தீவிர ரசிகர்களல்லாத வலைஞர்கள் என்பதை குறிப்பிட வேண்டும்.

புகழுக்கு இரு எல்லைகள். ஒரு எல்லையில் வழிபாடுகளும் உயர்வு நவிர்ச்சிகளும் விதந்தோம்பல்களும் என்றால் இன்னொரு எல்லையில் கிண்டல்களும் கேலிகளும் வசைகளும் உள்ளன. ஹாலிவுட்டின் அதிரடி சாகச நாயகனான சக் நோரிஸ் குறித்த பகடிகள் இணையத்தில் பிரபலம். இந்தியர்கள் அவற்றை சற்று குறைத்தும் நீட்டியும் ரஜினிகாந்த் ஜோக்குகளாக மாற்றியுள்ளனர். ரஜினிகாந்த் ஜோக்குகளுக்கென்றே சில வலைத்தளங்களும் ஃபேஸ்புக் பக்கங்களும் செயல்படுகின்றன. இவை பொதுவாக ரஜினிகாந்த் திரைப்படங்களில் வரும் அதீத சாகசத் தன்மையை பகடி செய்பவை “நேப்பாளில் நிலநடுக்கம் ஏன் வந்தது தெரியுமா? ரஜினிகாந்த் மொபைலை வைப்ரேட் மோடில் வைத்ததனால்.” “ரஜினியால் ஒரு மீனை மூழ்கடிக்க முடியும்” “ரஜினிகாந்தால் ஒரு வெங்காயத்தை அழவைக்க முடியும்” “கிரகாம் பெல் தொலைபேசியை கண்டுபிடிச்சப்போ ரஜினிகாந்திடமிருந்து மூணு மிஸ்டுகால் வந்திருந்துச்சு”. போன்றவை எடுத்துக்காட்டுகள். ஃபேஸ்புக்கில் இதை செய்துகொண்டிருப்பவர்களில் பலரும் வட இந்தியர்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது. இவை வெறுப்பின் அடிப்படையில் எழுதப்படுபவையாக அல்லாமல் ஒரு புதிய வகை பகடியாக, தரம் தாழாமல் எழுதப்படுபவை..

இந்த உள்நோக்கமற்ற பகடிகளைத் தாண்டி ரஜினி மீது தொடர்ந்து வசைபாடும் நபர்களையும் இணையத்தில் காணமுடிகிறது. இவற்றில் பல கீழத்தரமான வார்த்தைகளில் எழுதப்பட்டிருக்கின்றன. இவர்களுக்கு பதிலடி தரும் தீவிர ரசிகர்களும் இதே தரத்தில் பதிலளிக்கிறார்கள். இணையத்தில் கிட்டத்தட்ட எல்லா தலைப்புகளிலும் இதுபோன்ற தரம் தாழ்ந்த விவாதங்கள் நடைபெறுகின்றன. தன் சுய அடையாளங்களை மறைத்து ஒருவரால் இணையத்தில் செயல்படமுடியுமாகையால் இது உலகளாவிய நிகழ்வாகவே அறியப்படுகிறது.

இணையத்தில் அதிகமும் பயன்படுத்தப்படுகிற கூகிள் தேடுபொறி வசதி இணையத்தில் பரவலாக யார் எதைத் தேடுகிறார்கள் என்பதை கணக்கெடுத்துக்கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த் குறித்த தேடல்களை அலசும்போது பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. இணையத்தில் இந்தியாவிலிருந்தே அதிகம் பேர் ரஜினி ரஜினிகாந்த் அல்லது சூப்பர்ஸ்டார் ஆகிய வார்த்தைகளைத் தேடுபவர்களாக இருப்பார்கள் என்பதில் ஆச்சர்யமிலை. 35% தேடல்கள் இந்தியாவிலிருந்து வருகின்றன. அடுத்து வருவது இலங்கை(26%), அடுத்தது ஐக்கிய அரபு நாடுகள்(12%), சிங்கப்பூர் நான்காமிடத்திலுள்ளது(10%), மலேஷியா ஐந்தாமிடத்தில் (9.9%), அடுத்தது சவுதி அரேபியா(2%), ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, போலாந்து, ஃபிரான்ஸ் நாடுகள் 1%க்கும் குறைவான அளவு தேடல்களுடன் அடுத்தடுத்து வரிசைப்படுத்தப்படுகின்றன. (see Table 1). அஜித் விஜய் தொடர்பானத் தேடல்களில் இலங்கை முதலிடம் வகிக்கிறது என்பது உப தகவல்.

Table 1: Top regions for rajinikanth+rajini+ரஜினி+ரஜினிகாந்த்+சூப்பர் ஸ்டார்
Country/region % Searches
India 35.33568905
Sri Lanka 26.14840989
United Arab Emirates 12.72084806
Singapore 10.60070671
Malaysia 9.893992933
Saudi Arabia 1.766784452
Australia 0.706713781
Canada 0.706713781
United Kingdom 0.706713781
United States 0.706713781
Poland 0.35335689
France 0.35335689
Source: Google insight

ரஜினிகாந்த் இறந்துவிட்டதாக இணையத்தில் வதந்தி பரவிய மே 2011ன் இரண்டாம் மூன்றாம் வாரங்களில் ரஜினி குறித்த தேடல்கள் உச்சத்தை அடைந்துள்ளது. பிற முன்னணி தமிழ் நடிகர்கள் குறித்த தேடல்களுடன் ஒப்பிடுகையிலும் இதுவே அதிகமான எண்ணிக்கை என்கிறது கூகிள். இத்தகைய முக்கிய தினங்களை தவிர்த்து தினசரி தேடல்களில் பிற நடிகர்களோடு ஒப்பிடும்படியே ரஜினி குறித்த தேடல்கள் அமைந்துள்ளன. பல நேரங்களில் இளைய தலைமுறை நடிகர்கள் குறித்த தேடல்களின் எண்ணிக்கை (அதிகம் அஜித்) மேலோங்கியுள்ளது.

ரஜினி குறித்து அதிகம் தேடும் நகரங்களில் தஞ்சாவூர்(22%) முதன்மையானது என்கிறது கூகிள். அடுத்து ஈரோடு(19%), சென்னை(17.3%) மூன்றாமிடத்திலுள்ளது, நான்காமிடத்தில் கோயம்புத்தூர்(17.1%), அடுத்து பெங்களூரு(6.6%) ஆறாமிடத்தில் ஹைதராபாத்(3.5), ஏழில் கொழும்பு(3%), அடுத்து டில்லியும்(2%) மும்பையும்(2%),ஒன்பதாமிடத்தில் துபாய்(1.5%), பூனே(1.5%) , கோலா லம்பூர்(1.5%) ஆகிய நகரங்களுள்ளன
பத்தாமிடத்தில் சிங்கப்பூர்(1.3%) இடம்பெறுகிறது. (see table 2)

Table 2: Top cities for rajinikanth+rajini+ரஜினி+ரஜினிகாந்த்+சூப்பர் ஸ்டார்
Town/City/Suburb %
Thanjavur (India) 22.22222222
Erode (India) 19.33333333
Chennai (India) 17.33333333
Coimbatore (India) 17.11111111
Bangalore (India) 6.666666667
Hyderabad (India) 3.555555556
Colombo (Sri Lanka) 3.111111111
New Delhi (India) 2.222222222
Mumbai (India) 2.222222222
Dubai (United Arab Emirates) 1.555555556
Pune (India) 1.555555556
Kuala Lumpur (Malaysia) 1.555555556
Singapore (Singapore) 1.333333333
Warsaw (Poland) 0.222222222

Source: Google insight

அதிகமானபேர் தேடுவது ரஜினி பாடல்களையே என்கிறது கூகிள். அதன் பிறகு வெறுமனே ‘ரஜினிகாந்த்’ எனும் தேடல் பிரபலமானது. அண்மையில் ‘ரணா’ குறித்த தேடல்கள் மிக அதிக அளவில் நடைபெறுவதாககூகிள் தெரிவிக்கிறது.
1954ல் மாஸ்லோவ் எனும் உளவியல் வல்லுநர் மனிதனின் தேவைகளின் அடுக்கு ஒன்றை வெளியிட்டார். இன்றளவும் உலகப் புகழ்பெற்ற உளவியல் கருதுகோள்களில் ஒன்றாக அது விளங்குகிறது. உளவியலின்படி மனிதனின் தேவைகளை ஒரு பிரமிடாக அடுக்கினார் மாஸ்லோவ். காற்று, நீர், உணவு போன்ற உடல் உயிர்வாழத் தேவையானவை மிக அடிப்படைத் தேவைகள் என்றார், அடுத்ததாக பாதுகாப்புக்கானவற்றிற்கான தேவைகள் அமைந்தன. இவ்விரு அடிப்படை தேவைகளுக்கும் அடுத்ததாக மனிதன் தான் அன்பு செலுத்தப்படுவதற்கும் சமூகத்தில், ஒரு குழுவில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்படுவதற் குமான தேவைகளை வைக்கிறார் மாஸ்லோவ். தேனீக்களும் எறும்புகளும் சிம்பன்சிகளும் தன் கூட்டை, குழுவைச் சார்ந்தவற்றை எளிதில் அடையாளம் கண்டுகொள்கின் றன, தாவரங்கள் உட்பட்ட பல உயிரினங்களும், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் கூட கூடிவாழ்வதில் பலனடைகின்றன. ரசிகர்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவதென்பது உலகளாவிய நிகழ்வே. உலகளவில் எல்விஸ் ப்ரெஸ்லிக்கு ஐந்து கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்கிறது ஒருகணக்கு, மக்கேல் ஜாக்சனுக்கும், பீட்டில்ஸ் பாடகர்குழுவிற்கும் மிகத் தீவிர ரசிகர்குழுக்கள் உள்ளன. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் விளையாட்டு அணியினருக்கு பைத்தியக்காரத்தனமான ரசிகர் கூட்டங்கள் செயல்படுகின்றன. இணையத்தில் ஹாரிபாட்டருக்கும், ஆன்ட்ராய்ட் இயங்குதளத்துக்கும், ஆப்பிள் கணிணிகளுக்கும்கூட இரசிகர் தளங்கள் செயல்படுகின்றன. இவை எவையுமே நம் ரஜினி நரசிகர்களின் மனோபாவங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் எந்தவிதத்திலும் வேறுபட்டவையாக இல்லை. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை குணாதிசயங்களையும், நற்குணங்களையும், தீவிரப் போக்குகளையும் இவைகளும் கொண்டுள்ளன. நமக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொள்வது நம் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகவே இருக்கிறது. அது பலருக்கும் ரஜினி ரசிகன் என்கிறதாய் அமைந்துவிடுகிறது.

இணையத்தில் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு பார்த்தால் ரஜினிகாந்த் அவரின் ரசிகர்களால் மட்டும் விரும்பப்படுகிற கலைஞர் அல்ல என்பது தெளிவாகிறது. ரஜினி குறித்த செய்திகளில் மக்கள் அதிக விருப்பம் கொண்டிருக்கிறார்கள், அவரது திரைப்படங்களை எதிர்பார்த்திருக்கிறார்கள், அவரை எப்போதும் கவனித்தபடியே இருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. உலகெங்கிலும் பரவிக்கிடக்கும் தமிழர்களை இணைக்கும் பல்வேறு புள்ளிகளில் முக்கியமான ஒன்றாய் தமிழ் திரையுலகம் அமைந்துள்ளது. அதில் முதன்மையானவர் ரஜினிகாந்த். இவற்றையெல்லாம் மிக எளிதாக கிறுக்கத்தனம் என்றும் நேர விரையமென்றும் கடந்துபோகிறவர்களும் நம்மிடையே உண்டு. என்னைப் பொறுத்தவரை இந்தக் ‘கிறுக்கத்தனங்கள்’ ஒரு குறிப்பிட்ட விகிதம் இருந்துகொண்டிருப்பதே ஒரு ஆரொக்கியமான சமூகத்தின் அடையாளமாக இருக்க முடியும், ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் ஏதோ ஒரு கிறுக்கத்தனம் இருந்துகொண்டிருப்பதைப்போல.

====

தொகுக்கப்படாத பதிப்பு.

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....2 மறுமொழிகள் to “சில கிறுக்கல்களும் கிறுக்குத்தனங்களும்.”

 1. Indli.com சொல்கிறார்:

  சில கிறுக்கல்களும் கிறுக்குத்தனங்களும்….

  “சூப்பர் ஸ்டாருக்காக சர்வசமய கூட்டு பிரார்த்தனை @ மகாவதார் பாபாஜி கோயில், பரங்கிப்பேட்டை. 12 ஜீன், ஞாயிறு காலை பத்து மணி. அனைவரும் வருக!” என்று அறிவிக்கிறது ஒரு கூகிள் பஸ் செய்தி. அதன் கீழே ”தலைவாவாவாவாவா……” என்றொரு கூக்குரல் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது…

 2. GiRa ஜிரா சொல்கிறார்:

  கிறுக்குத்தனம் இருக்க வேண்டியதுதான். எல்லாருக்கும் கிறுக்கு இருக்கு. ஆனா அது அளவுக்கு மீறிப் போகும் போதுதான் மத்தவங்களுக்கும் எரிச்சல் வருது.

  ஆனா இதுக்கு நம்ம எதுவும் செய்ய முடியாது. இன்னைக்கு ரஜினி. நாளைக்கு மஜினின்னு உலகம் இயங்கிக்கிட்டேதான் இருக்கும்.

  வாழ்ந்தவர் கோடி. மறைந்தவர் கோடி. மக்களின் மனதில் நிற்பவர் யார்? :)

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்