ஆக்குபை அமெரிக்கா!

முதலில் அமெரிக்கப் பொருளாதார அரிச்சுவடிகளிலிருந்து ஒரு பாலபாடம். 2007 கணக்கெடுப்பின்படி அமெரிக்காவின் சொத்தில் 85% பங்கு 20% பணக்காரர்களிடமும் மீதி 15% மிச்சமுள்ள 80% மக்களிடமும் உள்ளது. அதாவது அமெரிக்க மக்கள் தொகையில் 1% பேர் அமெரிக்காவின் 34.6% சொத்துக்களுக்கு உரிமையாளர்கள். மீதி 99%பேரில் சிலர் தற்போது ‘வால்’ தெருவுக்கு வந்துவிட்டிருக்கிறார்கள்.

அமெரிக்கப் பொருளாதாரத்தின் முக்கியமானக் குறியீடுகளில் ஒன்று நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள வால் ஸ்ட்ரீட். இங்குதான் உலகப்புகழ் பெற்ற நியுயார்க் பங்கு வர்த்தக மையம் உள்ளது. உலகின் 99%தலைவிதியை நிர்ணயிக்கும் சக்திகொண்டதாக நம்பப்படும் அமெரிக்கப் பொருளாதாரத்தின் முக்கிய புனிதத்தலமான வால் தெரு நோக்கி கடந்த செப்டம்பர் 17 சனிக்கிழமை ஒரு கூட்டம் கோஷங்களுடனும், பாடல்களுடனும், பேனர்களுடனும் நகர்ந்துகொண்டிருந்தது. வழக்கமான கறுப்பு கோட்டும் டையும் கையடக்க முதலைத் தோல் பெட்டியும் இல்லாத மக்களின் கூட்டம். ஒன்று இரண்டு பத்து நூறு என கூட்டம் பெருகியது. அவர்களின் அன்றைய கோரிக்கைகள் பல, நோக்கம் ஒன்றே ஒன்று, வால் ஸ்ட்ரீட்டில் குடிபுகுவது. கூட்டம் மெல்ல நகர்ந்து நியு யார்க்கின் ஜக்கோட்டி பூங்காவிற்கு வந்து சேர்ந்தது. கூடாரங்கள் அமைக்கப்பட்டன வந்த ஆயிரம்பேரில் 300பேர் அன்றிரவை ஜக்கோட்டிப் பூங்காவில் கழித்தனர்.

இப்படி எளிமையாக, வெறும் ஆயிரம்பேர்களைக் கொண்டு துவங்கிய இந்தப் போராட்டம் இன்று அமெரிக்கப் பெருநகரங்களிலெங்கும் பரவிப் பெருகி வளர்ந்து வருகிறது. ‘ஆக்குபை’ (முற்றுகை) எனும் பெயரில் பல்வேறு சிறு சிறு இயக்கங்கள் உருவாகியுள்ளன. சியாட்டில் முற்றுகை, போர்ட்லான்ட் முற்றுகை, என வெவ்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நகரின் முக்கிய பகுதியில் கூடுவது, கூடாரமிடுவது அங்கேயே தங்குவது என்பதுவே போராட்ட முறை. ஒட்டு மொத்த அமெரிக்க அரசியல் களமும் தன் கவனத்தை ஆக்குப்பை இயக்கத்தின்பால் கொண்டுள்ளது. ஊடக விவாதங்கள் ஆக்குப்பையை சுற்றியமைந்துள்ளன. இது ஒரு உலகளாவிய இயக்கமாகவும் மாறிவருகின்றது. தென் கொரியா, இத்தாலி பிரான்ஸ் ஜெர்மனி ஆஸ்திரேலியா இங்கிலாந்து உட்பட்ட பல்வேறு நாடுகளில் ஆக்குப்பை இயக்கங்கள் உருவாகியுள்ளன.

ஆக்குபை இயக்கம் அடிப்படையில் ஒரு முதலாளித்துவ எதிர்ப்பு இயக்கம். இதை ஒருங்கிணைத்தது கனடா நாட்டைச் சார்ந்த anti-consumerist பத்திரிகையான adbusters(ஆட்பஸ்டர்ஸ்). இது தேவைக்கதிகமான நுகர்பொருட் கலாச்சாரத்தை நுகர்பொருட் கலாச்சாரத்தின் கருவிகளைக்கொண்ட்டே எதிர்க்கும் ஒரு அமைப்பு. உதாரணமாய் இவர்களின் விளம்பரங்கள் நுகர்பொருட்களின் விளம்பரங்களைப்போலவே அமைந்திருக்கும் ஆனால் அதிநுகர்வுக்கு எதிரான செய்திகளைக் கொண்டிருக்கும்.

ஜூன் 9, 2011ல் ஆட்பஸ்டர்ஸ் பத்திரிகை வால்ஸ்ட்ரீட் முர்றுகைப் போராட்டத்திற்கான முதல் வரைவையும் அழைப்பையும் முன்வைத்தது. அடுத்த சில நாட்களில் அது ஒரு இணைய தளத்தை உருவாக்கியது. இன்னும் ஒருசில தன்னார்வ அமைப்புகளும் சேர்ந்துகொண்டன. ஆரம்பத்தில் மிகவும் தயக்கத்துடனும் சந்தேகங்களுடனும் துவங்கிய ஆக்குபை இயக்கம். தற்போது இணையம் வழியாக மட்டும் பல லட்சம் ஆதரவாளர்களைத் திரட்டியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரம் ஆக்குபை போராட்ட தலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவகல்கள் உள்ளன.

ஆக்குபை வால்ஸ்ட்ரீட் இயக்கத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோரிக்கைக்காக போராடி வருகிறார்கள் எனலாம். அவை பொதுவாக தத்தம் பின்னணிகளிலிருந்தும் அமெரிக்காவின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளில் அவரவருக்குக் கிடைத்த மோசமான அனுபவங்களிலிருந்தும் உருவெடுக்கின்றன. உதாரணமாக சிலர் தங்கள் வேலைகள் பறிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து களத்திலிறங்கியுள்ளனர், சிலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர், இன்னும் சிலர் தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழந்துள்ளனர், அரசியல் நோக்கங்களுடையவர்கள் களத்திலுள்ளனர், பொதுவுடமைக் கோரிக்கைகளுடையவர்களுள்ளனர். உலகளாவிய ஆக்குப்பை இயக்கத்தின் முக்கிய கோரிக்கை ‘அரசின் செயல்பாடுகளில் கார்ப்பரேட்டுகளின் ஈடுபாட்டை குறைப்பது அல்லது முற்றிலும் நீக்குவது’ என்பதேயாகும்.

அமெரிக்க அரசியலில் கார்ப்பரேட்டுகளின் அதீத ஈடுபாடு நெடுநாட்களாக விவாதிக்கப்பட்டுவரும் ஒரு பிரச்சனை. தேர்தல் நிதி வழங்குதல் மூலமும், லாபியிங் மூலமும் அமெரிக்க கார்ப்பரேட்டுகள் கோடிக்கணக்கில் அரசியல்வாதிகளுக்கு பணம் தருகின்றன என்பது மிக வெளிப்படையான இரகசியமாகும். வங்கிகள், காப்பீடு உட்பட்ட பொருளாதாரச் சந்தையில் இயங்கும் கார்ப்பரேட்டுகள் மட்டுமே கடந்த பத்து ஆண்டுகளில் 5பில்லியன் டாலர்கள் அமெரிக்க அரசியலில் தெளித்துவிட்டிருக்கிறன. (இன்றைய மதிப்பில் இந்திய ரூபாய் 25,000 கோடி). இந்த கார்ப்பரேட், அரசியல் கள்ள உறவு ஒவ்வொரு தேர்தலின்போதும் விவாதிக்கப்படுகின்றது. கடந்த 2008 அதிபர் தேர்தலின்போது ஒபாமா அமெரிக்க அரசியலில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை குறைக்க சட்டங்களை இயற்றப்போவதாக அறிவித்தார். அவரது தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமானதான ஒன்றாக இது கருதப்பட்டது. ஆனால் ஒரு ஆட்சி காலத்திலேயே மாற்றியமைக்க முடியாத மிக ஆழமாக வேரூன்றிய நச்சு மரமாக இந்த கார்ப்பரேட் ஆதிக்கம் உருமாறியிருக்கிறது என்கிறார்கள் ஆக்குபை போராளிகள்.

ஒபாமாவின் அரசும் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான பல முடிவுகளையும் தொடர்ந்து எடுத்தது. குறிப்பாக பொருளாதார வீழ்ச்சியின்போது ‘பெயில் அவுட்’ எனப்படும் கார்ப்பரேட் உதவித் தொகைகள் வழங்கப்பட்டபோது அமெரிக்க பொதுமக்கள் மத்தியில் பெரிய அதிருப்தி நிலவியது. பின்னர் அந்த பெயில் அவுட் பணம் கார்ப்பரேட் கொண்டாட்டங்களுக்கும், கார்ப்பரேட் முதலாளிகளின் பெருத்த போனஸ்களுக்கும், சம்பள உயர்வுக்கும் பயன்படுத்தப்பட்டபோது பொது மக்கள் இன்னும் கோபமடைந்தனர். பல ஆக்குபை போராளிகளின் முக்கிய எரிச்சல் ‘பெயில் அவுட்’ ஆகும்.

2001, 2003ஆம் ஆண்டுகளில் ஜார்ஜ் புஷ் வழங்கிய வரி சலுகைகள் பெரும்பாலும் பணக்கார அமெரிக்கர்களுக்கு சாதகமாக அமைந்தன. இதை புஷ் வரி குறைப்பு (…) என்றே அழைக்கின்றனர். அடுத்து வந்த ஒபாமா அரசு இந்த குறைந்த வரி விகிதத்தை தொடர்ந்து செயலாக்கியது. இதன்மூல பல பெரும்பணக்காரர்களும் குறைந்த வரியை செலுத்தி வந்தனர். பல கார்ப்பரேட்டுகளும் எந்த வரியுமே செலுத்தாமல் பெயில் அவுட் மூலமும் வரி திரும்பப்பெறுவதன் மூலமும் பல மில்லியன் டாலர்களை அமெரிக்க அரசிடமிருந்து பெற்றுள்ளன.

அமெரிக்காவில் ஒரு சாதாரண பணியாளரின் சம்பளத்துக்கும் ஒரு கார்ப்பரேட் தலைமை இயக்குநரின் சம்பளத்துக்குமான விகிதாச்சாரம் 1:475 என்ற நிலையில் இருக்கிறது. பிற வளர்ந்த நாடுகளில் இது அதிகபட்சம் 1:50 என்ற விகிதத்திலேயே இருக்கிறது. மேலும் பல அதிர்ச்சியூட்டும் புள்ளி விபரங்களும் ஆக்குபை இயக்கத்தை நியாயப்படுத்துகின்றன. ஏழில் ஒரு அமெரிக்கர் வறுமைக்கோட்டிற்கும் கீழே வசிக்கிறார். இது நான்கு கோடிபேருக்கும் மேல். ஆறுபேரில் ஒருவருக்கு மருத்துவக் காப்பீடு இல்லை. 14.5% வீடுகள் அடுத்த வேளை சாப்பாடு குறித்த நிச்சயமின்றி வாழ்கின்றனர்.

அமெரிக்க அரசின் வரவு செலவு திட்டங்களில் தொடர்ந்து பெரும் இடைவெளி இருந்து வருகிறது. இதனால் சோஷியல் செக்யூரிட்டி, மெடிக்கேர், மெடிக்கெய்ட் போன்ற மக்கள் நலப் பணிகளுக்கான செலவுகள் குறைக்கப்பட்டுவருகின்றன. ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு பெயில் அவுட் உதவித் தொகைகளுக்கும் பணக்காரர்களுக்கு வரிவிகிதக் குறைப்பும் தொடர்ந்து அமலில் உள்ளன. கார்ப்பரேட்டுகள் தனது பங்குதாரரின் இலாபங்களை பெருக்குவது எனும் ஒரே கொள்கையுடன் இயங்குகின்றன. இலாபத்தை ஈட்ட எல்லா வழிகளையும் அவை கயாளுகின்றன. பல கார்ப்பரேட்டுகளும் பொய்யான தகவல்களின் மூலம் தொடர்ந்து மகளையும் அரசையும் ஏமாற்றி வந்திருக்கின்றன. கார்ப்பரேட் உதவித் தொகைகள் வேலை வாய்ப்பை பெருக்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் எனும் நம்பிக்கையில் வழங்கப்பட்டன. ஆனால் கார்ப்பரேட்டுகளோ வேலைவாய்ப்பை தொடர்ந்து குறைத்து வந்திருக்கின்றன. 1948 துவங்கி 2010 வரை வேலையில்லாதவர்களின் சதவிகிதம் சராசரி 5.7% என்றிருந்தது. 2008 ஜனவரியில் இது 5%க்கருகிலிருந்தது. தற்போது 9%க்கும் மேல் இருக்கிறது. தற்போது இது ஒரு பெரும் பிரச்சனையாகியுள்ளது.

பல படித்த பட்டதாரிகளும் தகுதி குறைந்த வேலைகளைச் செய்தோ அல்லது வேலையே இல்லாமலோ வாழ்ந்து வருகின்றனர். அமெரிக்காவில் உயர்கல்விகற்கும் பலரும் வங்கிகளில் கல்விக் கடன் வாங்கியே படிக்கவேண்டியுள்ளது. இப்படி பெறப்படும் கல்விக்கடன்களின் சராசரி $230,000 ஆகும். அமெரிக்காவின் சராசரி வருடாந்திர சம்பளம் $30,000 எனும்போது இந்தத் தொகை எத்தனை பெரியது என்பதை புரிந்துகொள்ளலாம். இப்படி கடன் வாங்கி கல்வி கற்றும் வேலை வாய்ப்பின்றி, கடனை திருப்பி செலுத்த வழியின்றி திண்டாடும் இளைய தலைமுறையின் இயக்கமாகவும் ஆக்குபை மாறிவருகிறது. இவர்களில் பலர் இணையம் மூலம் தங்கள் சொந்தக் கதைகளை பரப்பி ஆக்குபை இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இவற்றில் பலவும் பரிதாபமான சோகக் கதைகள். தன் தாய் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டதை ஒருவர் பதிந்துள்ளார், வேலை பறி போனதை பலரும் பதிந்துள்ளனர், பார் மற்றும் உணவகங்களிலும் ஸ்ட்ரிப் கிளப்களிலும் வேலைபார்க்கும் பட்டதாரிகளின் பதிவுகளும் உள்ளன, ஒரு சிறுவன் தன் தாய் தன் பிறந்தநாளை கொண்டாடவுமில்லை தனக்கு பரிசும் தரவில்லை என்று பதிந்துள்ளான். இவர்கள் எல்லோருமே தங்களை ‘நாங்கள் 99%’ என்று அழைத்துக்கொள்கிறார்கள்.

ஆக்குபை வால் ஸ்ரட்ரீட் இயக்கம் அவ்வப்போது சில குறிப்பிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றது. இவற்றில் முக்கியமானவை சில..

1. பொருளாதார ஏர்றத்தாழ்வை களையவேண்டும்
2. அரசியலில் லஞ்சம் களையப்படவேண்டும்
3. தனிமனித தகவல் தணிக்கைகள் கைவிடப்படவேண்டும்
4. வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவேண்டும்.

5. ஏழ்மை ஒழிக்கப்படவேண்டும்
6. மரண தண்டனையை தடை செய்ய வேண்டும்
7. போர்களை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்
8. அமெரிக்கா பிற நாடுகளில் அமைத்திருக்கும் இராணுவத் தளங்கள் மூடப்படவேண்டும்.

9. மருத்துவத் துறையில் அதிக இலாபம் ஈட்டுவது தடைசெய்யப்படவேண்டும்.

இந்தப் பட்டியலில் ஒன்றுகூட ஒரு திட்டவட்ட வரையறையுடையதல்ல என்பதை நம்மால் உணர முடிகிறது. ஆக்குபை போராளிகளும் இதை நிச்சயம் உணர்ந்துள்ளனர். இந்தப் போராட்டங்கள் துவங்குகையில் எந்தவித கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை என்பதுவும், தற்போதும் பலரும் கோரிக்கைகளை முன்வைப்பதை தவிர்க்கிறார்கள் என்பதுவும் அல்லது இதுபோன்ற பொதுவான கோரிக்கைகளே முன்வைக்கப்படுகின்றன என்பதுவும் இந்தக் கிளர்ச்சியை புரிந்து கொள்வதில் பல சிக்கல்களை உருவாக்குகின்றன.பல ஆதரவாளர்களும் இதை எந்த ஒரு கோரிக்கையுமில்லாத ஒரு மக்கள் இயக்கமாகவே பார்க்கின்றனர். ஒரு நம்பிக்கையை முன்வைக்கும் இயக்கமாகவும், அரசின் செயல்பாடுகளில் மக்களின் பங்கை உருவாக்கும், பெரிதாக்கும், மீட்டெடுக்கும் ஒரு இயக்கமாகவும் இது பார்க்கப்படுகின்றது.

ஆக்குபை இயக்கத்தை விமர்சிப்பவர்கள் வழக்கமான கம்யூனிச எதிர்ப்பு முழக்கத்திலிருந்து துவங்குகிறார்கள். அமெரிக்க வலதுசாரிகளும், அவர்களின் ஊடகப் பிரதிநிதிகள் பலரும் ஆக்குபை வால் ஸ்ட்ரீட் இயக்கத்தை ஒரு மார்க்சிஸ்ட் இயக்கமாக வர்ணித்துள்ளனர். அமெரிக்க அரசியல் சமூக கலைச்சொல்லகராதியில் கம்யூனிசம் எப்போதுமே கெட்டவார்த்தையாகவே குறிக்கப்படுகிறது. இவ்வியக்கம் முதலாளித்துவ எதிர்ப்பியக்கம் என்பதால் இது கம்யூனிச ஆதரவு இயக்கமாக வர்ணிக்கப் படுகிறது. அடுத்தது இவ்வியக்கம் உழைப்பை விரும்பாத சோம்பேறிகள் சிலரின் இயக்கம் என்றும் விமர்சிக்கப்படுகிறது. அமெரிக்க வலதுசாரிகளின் பார்வையில் ஏழைகள் சோம்பேறிகள். பணக்காரர்கள் தங்கள் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுபவர்கள். ஆனால் நோபல் பரிசுபெற்ற பொருளாதார நிபுணர் பால் க்ருக்மேன் அமெரிக்கா ஒரு சமநிலை கொண்ட முதலாளித்துவ பொருளாதாரமாக இருந்திருந்தால் உழைக்கும் அனைவருக்கும் தத்தம் பங்களிப்பிற்கேற்ற கூலி கிடைத்திருக்கும், மாறாக பணக்காரர்கள் மட்டும் அதிகபட்ச ஊதிய உயர்வும், வளர்ச்சியும் அடைந்துவரும் நிலை சமநிலையின்மையையே காட்டுகிறது என்கிறார். கடந்த ஆண்டுகளில், முதல் 1% பணக்காரர்களின் வருமானம் 250%க்கும் மேல் உயர்ந்துள்ளது ஆனால் கடைநிலையில் உள்ளவர்களின் வருமானம் ஆண்டுக்கு $900 குறைந்துள்ளது என்கிறது ஒரு புள்ளிவிபரம்.

ஆக்குபை இயக்கத்தின் வியத்தகு அம்சங்களில் ஒன்று அதன் தலைமையற்றத் தன்மை. இது முற்றிலும் தன்னார்வமுடைய மக்களால் நடத்தப்படுகிற இயக்கம். இடதுசாரித்தன்மை இந்தப் போராட்டங்களில் தென்பட்டாலும் இவற்றில் பங்குபெறும் பலரும் கட்சியோ அல்லது சித்தாந்த சார்புநிலைகளோ அல்லாத சாமானியர்கள். இயக்கத் தலைவர்களென்று எவருமில்லை. ஒருங்கிணைப்பாளர்கள் என சிலர் தாமாகவே பொறுப்பேற்றுள்ளனர். எவரையும் தங்கள் பிரதிநிதியாகவோ தங்கள் சார்பு பேச்சாளர்களாகவோ ஆக்குப்பை போராளிகள் அறிவிக்கவில்லை. நிதியும் மற்ற உதவிகளும் அன்பளிப்புகளின் மூலமே பெறப்படுகிறது. நகைமுரணாக இவ்வியக்கத்துக்கு சில பணக்காரர்களும் கார்ப்பரேட்டுகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் தற்போது குளிர்காலமாகும். பனிப்பொழிவும் உறைநிலைக்குக் கீழான தட்பவெப்பமும் அமெரிக்காவின் பல முக்கிய நகரங்களிலும் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. இரவில் வெளியில் சற்று நேரமே நடமாடமுடியும் எனும் நிலை இருந்தும் ஆக்குப்பை போராளிகள் தங்கள் தெருவோரக் கூடாரங்களை, பூங்காக் கூட்டங்களை கலைப்பதாயில்லை. பல இடங்களிலும் போராட்டம் இன்னும் தீவிரமடைந்து வருகின்றது. குளிர்காலத்தை கடத்த பல புது யுக்திகளை ஆலோசித்துவருகிறது ஆக்குபை இயக்கம். கூடாரங்கள் வைக்கோல் கட்டுகளால் பலப்படுத்தப்படுகின்றன. குளிர்கால ஆடைகளை அன்பளிக்குமாறு தங்கள் ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டுள்ளனர். இருந்தாலும் அமெரிக்காவின் தசையை உறயச் செய்யும் குளிர்காலம் ஆக்குபை இயக்கங்களுக்கு பெரும் சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

தலைமை என்று எதுவுமில்லாத, கோரிக்கைகளும் இலக்குகளுமில்லாத, தத்துவார்த்த நம்பிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே இயங்கும் ஆக்குபை இயக்கம் எங்கு சென்று முடிவடையும் என்பதை யூகிப்பது கடினம். ஆக்குபை ஏற்கனவே அமெரிக்க அரசியலில் சமூகத்தில் ஒரு தாக்கத்தை உருவாக்கியுள்ளது கண்கூடு. வரும் அதிபர் தேர்தலில் ஆக்குப்பையின் சித்தாந்தங்கள் வாக்குறுதிகளாக மாற்றப்படும். அரசு தன் பங்குக்கு ஒன்றிரண்டு கமிஷன்களை அமைக்கும். ஏற்கனவே ‘சூப்பர் கமிட்டி’ என்று ஒன்று அமைக்கப்பட்டு அது எந்த முடிவையும் எட்ட முடியாமல் தோல்வியுற்றுள்ளது. அமெரிக்க அரசியலில் கார்ப்பரேட் ஆதிக்கம் குறையுமா என்பது எளிதில் பதில் சொல்ல முடியாத கேள்வி. நாம் இன்று காணும் அமெரிக்கா கார்ப்பரேட் அமெரிக்கா. படையெடுப்புக்கள், போர்கள் உள்ளிட்ட முக்கிய முடிவுகளுமே கார்ப்பரேட் இலாபங்களுக்காகவே செய்யப்படுகின்றன என்பதை பல தரவுகள் மூலம் அமெரிக்க ஊடகங்களும் உலக ஊடகங்களும் நிறுவியுள்ளன‌.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அரசாட்சியில் மக்கள் தங்களுக்கான பங்கை கேட்டு போராடி வருகின்றனர். ஆக்குபை இயக்கங்கள் இதில் மிக முக்கியமானவை. இந்தியாவில் லோக் பால் சட்டத்தை இயற்ற வலியுறுத்தும் போராட்டமும் அரசியல் அதிகாரத்தில் மக்களுக்கு கணிசமான பகுதியை பெற்றுத் தருவதற்கான முயற்சியே. ஆக்குபை இயக்கம் அமெரிக்க ஜனநாயகத்தின் ஆன்மாவை நோக்கிய ஒரு பிரார்த்தனையே. கார்ப்பரேட் அமெரிக்கா மக்களின் அமெரிக்காவாக மாறுவதென்பது பிரார்த்தனைகளால் மட்டுமே நிகழ்த்தப்படக்கூடிய அற்புதம் இல்லையா?

– ஆழம் பிப் 2012ல் வெளியான கட்டுரையின் முழு வடிவம்.

Popularity: 2% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....ஒரு மறுமொழி to “ஆக்குபை அமெரிக்கா!”

  1. Vijayakumar Ramdoss சொல்கிறார்:

    நல்ல தகவல்

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்