ராஜாங்கம்

என் பழைய நினைவுகள் அழிக்கப்பட்டுவிட்டன என்றே தோன்றுகிறது. அவ்வப்போது துண்டு துண்டுகளாக, ஒரு சிறிய படத்தின் காட்சிகளாக அவை நினைவுக்கு வந்து போகின்றன. அவையெல்லாம் உண்மையா கற்பனையா என்று என்னால் வகுத்துக்கொள்ள முடிவதில்லை. அவைதான் கனவா இல்லை நான் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த நிஜம்தான் கனவா என பலமுறை தோன்றியதுண்டு. நான் தெருவில் அழுக்கடைந்து கிடக்கும் ஒரு பைத்தியமென்றும் இந்த வாழ்க்கையும் என் பழைய வாழ்க்கை குறித்த கனவுகளுமெல்லாமும் என் கற்பனையே என்றும் நினைப்பதுண்டு.

நான் கல்லூரிக்கு வெளியில் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருக்கும்போதுதான் என்னை தூக்கி வந்தார்கள். இரவு ஏழு மணி இருக்கும். நான்குபேர். பழைய அரசர்காலப் படங்களில் பல்லக்கு தூக்குபவர்களைப்போலிருந்தார்கள். அதேபோலவே வரிந்துகட்டிய வேட்டி அணிந்திருந்தார்கள். இடுப்பில் துண்டு இறுகக்கட்டப்பட்டிருந்தது. முதுகுத் தண்டுக்கு ஆதரவாக இருக்கலாம். சட்டையில்லை. எருமையின் நிறத்துடன் இறுகிப் படிந்த உடல்வாகுடன் இருந்தனர். எப்படி என்னை இங்கு கொண்டு வந்தார்கள் என்றே தெரியவில்லை. நான் மயங்கியிருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த நினைவு முற்றிலும் அழிந்திருக்க வேண்டும். கோயம்பத்தூரிலிருந்து இந்த இடத்துக்கு நடைபயணமாக வரவேண்டுமென்றால் மூன்று நாட்களாவது வேண்டும். இரண்டு மலைகளையேனும் கடந்து காட்டு வழிகளில் வரவேண்டும்.

நான் இங்கு வந்து சேர்ந்தபோது கண்ட முதல் காட்சி ஒரு கரிய தாமரைக் குளம். தண்ணீர் சாக்கடை நீர் போலக் கரியதாய் இருந்தது அதில் இருந்த எல்லாமே கருமையின் பல வண்ணங்களிலிருந்தன. உயிருள்ள சாம்பல்நிற தாமரை மொட்டை நான் கண்டிருந்ததேயில்லை. தாமரை இலைகளோ கடுங்கரிய நிறத்திலிருந்தன, தூரத்தில் மதகின் வழியே கரிய நீர் கொட்டிக்கொண்டிருந்தது. ஒரு படித்துறையில் யாரோ குளித்துக்கொண்டிருந்தனர். அது ஒரு தெளிவற்ற நினைவுதான். அடுத்து அந்த மலைத்தொடரைக் கண்டேன். அந்த இடம் மலைகளால் சூழப்பட்டிர்ந்தது. மலைகளும் கறுப்பு வெள்ளௌயில் காட்சியளித்தன. அண்மையிலிருந்த மலைகள் கரிய நிலக்கரிக் குவியல்களாகத் தோன்றின. அவற்றிலிருந்த பெரிய பாறைகள் பெரும் நிலக்கரிப் பாளங்களாகத் தோன்றின. தொலைவிலிருந்த மலைகள் ஈரத்திருநீற்றைப் போலவும் இன்னும் தொலைவில் மலைகள் வெள்ளை நிறத்திலுமிருந்தன. வானமோ வெளிறிய சாம்பல் நிறத்திலிருந்தது. அதன்மீது பளிச்சிடும் வெண்மையுடன் மேகங்கள் நகர்ந்துகொண்டிருந்தன.

பின்பு நான் சிதிலமடைந்து கிடந்த இந்த அரண்மனையைக் கண்டேன். ஒரு குட்டி அரண்மனை. ஒரு பேரரசனின் அரண்மனைக்கு ஒரு மாதிரியை செய்து வைத்ததைப்போல. ஆனால் மிகப் பழமையானதாயிருந்தது. சுவரெங்கும் கரிய பாசி படர்ந்திருந்தது. சுவற்றின் மூலைகளில் பூச்சிகளின் கூடுகளும் வலைப்பின்னல்களுமாயிருந்தன. சுவற்றுப் பூச்சுக்கள் பல இடங்களில் உடைந்து வீழ்ந்திருந்தன. உள்ளே கற்கள் தெரிந்தன கற்கள் கறுப்பு நிறத்திலிருந்தன. ஆங்காங்கே அதன் பழைய வெள்ளைப் பூச்சு தெரிந்தது. அரண்மைனையின் உட்பக்கத்திற்கு வெளியிலிருந்து ஒளி செல்லவே இல்லை. அதன் பழைய மரச்சன்னல்கள் இறுக மூடி வைக்கப்பட்டிருந்தன, சிறிதாகத் திறந்து கிடந்த கதவின் வழியே ஒரு நீண்ட செவ்வக வடிவாக ஒளி விழுந்தது. அந்த ஒளியும் வெள்ளை நிரத்திலிருந்தது. உள்ளே முகடுகளில் இருட்டு அப்பி இருந்தது. குரலெழுப்பினால் அவ்விருட்டு பறந்து கலைந்துவிடுமென்றே தோன்றியது. கருமை. எங்கும் கருமை. ஆங்காங்கே பழைய வெண்மை என அத்தோற்றம் ஒரு கறுப்பு வெள்ளை படக்காட்சியை நினைவூட்டியது.

என்னைச் சுற்றி எல்லாமே கறுப்பும் வெள்ளையுமாகவே தோற்றமளித்தன. அந்த அரண்மனைத் தோட்டமும், அதைச் சுற்றியிருக்கும் காடுகளும்கூட. தோட்டமோ வெறும் புதர்களைக் கொண்டதாயிருந்தது. சாம்பல் நிறத்திலும் வெள்ளை நிறத்திலும் சில காட்டுப்பூக்கள் மலர்ந்திருந்தன. காடு முழுவதும் அடர்ந்த கரிய மரங்கள் காற்றில் மெல்ல தலையசைத்துக்கொண்டிருந்தன, அடர்ந்த முடியுடைய ராட்சதன் ஒருவனின் தலைமுடி அசைவதுபோல. அது மாலையோ இரவோ அதிகாலையோ அல்ல. போதுமான வெளிச்சமிருந்தது. ஆனாலும் கறுப்பும் வெள்ளையும் அவற்றின் பல வண்ணங்களைத் தவிர வேறெதையும் என்னால் காண முடியவில்லை. சூரியன் மஞ்சளல்லாமல் வெள்ளையாக ஒளிர்ந்துகொண்டிருந்தது. தூரத்தில் சாம்பல் நிறப் புல்வெளியில் சாம்பல்நிறப் பறவைகள் மேய்ந்துகொண்டிருப்பதைக்கண்டேன். அவை பச்சைக்கிளிகளாயிருக்கவேண்டும் என யூகிக்கிறேன். என் உடலின் நிறமும் துல்லிய கருஞ்சாம்பல் நிறமாக மாறியிருப்பதை என் கைகளில் கண்டேன்.  பிற வண்ணங்களை பார்க்கும் சக்தியை என் கண்கள் இழந்துவிட்டன என்று நினத்தேன் அல்லது கறுப்பு வெள்ளையிலாலான ஒரு உலகிற்குள் நான் வந்துவிட்டிருக்கிறேன். பழைய கோப்புக்களையோ புத்தகங்களையோ புரட்டும்போது ஏற்படும் மெல்லிய நார்றமொன்று எப்போதும் வீசிக்கொண்டிருந்தது.

என் கைகளோ கால்களோ கட்டப்படவில்லை என்றாலும் என்னால் எழுந்து நிற்கவோ கையசைக்கவோ முடியவில்லை. பேசக்கூட முடியவில்லை. ஒரு வசியக் கட்டுக்குள்ளிருப்பதைப்போல உணர்ந்தேன். நான் தரையில் உட்கார்ந்திருந்தேன். அந்த நான்குபேரும் என்னைச் சுற்றி நின்றுகொண்டிருந்தனர். திடீரென அந்த நான்குபேரும் உடல் கூனி நின்றனர். அந்த பாழடைந்த குட்டி அரண்மனையின் உள்ளிருட்டிலிருந்து ஒரு கரிய உருவம் தோன்றி வந்தது. முதலில் அவரை ஒரு நடமாடும் நிழல் என்றே நினைத்தேன். சற்று தடித்த உடல்வாகு. வயிறு வீங்கிப் புடைத்திருந்தது. முதுமையடைந்து பொலிவிழந்த முகம். ஒளியிழந்த கண்கள். அவரது உடல் முழுக்க அழுக்கடைந்திருந்தது. கால்களிலும் கைகளிலும் நகங்கள் மட்கிப்போன மரக்கட்டைகளைப் போல காட்சியளித்தன. அவர் அவர்களை ஏதோ கேட்டார். தமிழில் அல்ல. அவர் பேசிய மொழியில் அவ்வப்போது சில தமிழ் வார்த்தைகள் கலந்து வந்தன. ஒரு முதிராத கரடு முரடான மொழி போலத் தோன்றியது. அவரின் குரல் கனத்திருந்தது. அதிகாரத்தொனியிருந்தது. நான்குபேரில் ஒருவன் குனிந்து நின்றுகொண்டே தலையசைத்தான். பின்பு அந்தப் பெரியவர் என் அருகில் வந்தார். ‘வருக’ எனத் தமிழில் சொன்னார். பின்பு அந்த நான்குபேருக்கும் ஏதோ கட்டளை ஒன்றைச் சொன்னார். அவர்கள் என்னை அந்த அரண்மனையின் இருளுக்குள் தூக்கிச் சென்றார்கள். அந்த இருளுக்குள்ளிருந்து பல கண்களும் என்னை பார்த்துக்கொண்டிருந்ததைப்போலிருந்தது.

உருக்குலைந்து அதிர்ந்து ஆடிக்கொண்டிருக்கும் ஒரு மரப்படியின் மீதேறி மாடியில் ஒரு அறைக்குள் என்னைத் தள்ளி கதவை சாத்தினார்கள். மூலையில் ஒடுங்கி அமர்ந்தேன். பின்பு களைப்பில் அங்கிருந்த படுக்கையில் படுத்துக்கொண்டேன். எத்தனை மணி நேரம் உறங்கியிருப்பேன் என்று தெரியவில்லை. ஒரு நாள் முழுக்கவும் தூங்கியிருக்கலாம். எழுந்தபோது அறையில் ஒரு சன்னல் இருந்தது. அதைத் திறந்தேன் வெள்ளை ஒளி உள்ளே வந்து விழுந்தது. தூசி எழுந்து ஒளியில் மிதந்தது. வெளியில் அதே கறுப்பு வெள்ளையில் இயற்கை மாயமாகத் தோற்றமளித்தது. என்னால் இன்னும் பேச முடியவில்லை. அல்லது நான் பேச முற்படவில்லை. அங்கிருந்து தப்பி ஓடுவது குறித்தே எனக்கு யோசனையில்லை. என்னால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. மெல்ல நடந்து அந்த அறையின் தடித்த கதவின் பக்கம் வந்து நின்று அதை விரலால் தொட்டேன். அதை உடைக்கவோ தள்ளவோகூட என்னால் முடியாது என்று தோன்றியது. அப்படியே தப்பிச் சென்றாலும் வெளியே அந்த நான்கு பேரும் கண்டிப்பாக காவலிருப்பார்கள்.

அறைக்குள் மேசையில் உணவு வைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். கரிய நிற ஆப்பிள் போன்ற பழங்கள். அப்படி பழங்கள் இருக்கும் என நான் கேள்விப்பட்டதுகூட இல்லை. ஒரு பழத்தை எடுத்து பிய்த்தேன். உள்ளே கன்னங்கரியதாய் பழத்தின் சதை இருந்தது. கரியச் சாறு கையில் வழிந்தது. சட்டென்று கீழே விட்டெறிந்தேன். பசி வயிற்றில் நெருப்பாய் எரிந்துகொண்டிருந்தது. அந்த உணவுத்தட்டை எடுத்து கீழே வீசினேன்.

மேசையின் ஓரத்தில் ஒரு புத்தகம் இருந்தது. மிகப் பழைய புத்தகம். சாம்பல் நிற தடித்த அட்டையில் எதுவும் எழுதப்படவோ பதிக்கப்படவோ இல்லை. புத்தகத்தை புரட்டினேன். வெற்றுத்தாள்களாய் இருந்தது. ஆங்காங்கே காய்ந்த மிருகத் தோல்களும் தாள்களைப்போல மடித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றிலும் எழுத்துக்களொன்றுமில்லை. கடைசி பக்கமும் வெற்று வெள்ளைத் தாளாயிருந்தது. ஆனால் அதில் ஒரு படம் வரைந்து வைக்கப்பட்டிருக்கிறது என என் மனதில் தோன்றியது. வியப்பாகவும் பயமாகவும் இருந்தது. எனக்கு மனம் பிசகி ஒரு பைத்தியக்கார விடுதியில் சேர்த்திருக்கிறார்கள் என எண்ணிக்கொண்டேன். பசி. தரையில் கிடந்த அந்தக் கரிய பழங்களிலொன்றை கையிலெடுத்தேன். பிய்த்து முகர்ந்து பார்த்தேன். எந்த மணமுமில்லை. இன்னொன்றை எடுத்து பிய்த்தேன். மணமில்லை. கண்களை இறுக மூடிக்கொண்டு வாயிலிட்டேன். கண்களை மூடிக்கொள்வது எத்தனை அபத்தமான பாதுகாப்புணர்வைத் தருகின்றது? அந்தப் பழத்தில் எந்தச் சுவையுமில்லை. வெறும் நீரை உள்ளடக்கிய சுவையற்ற மணமற்ற பழம். தரையிலிருந்து எல்லா பழங்களையும் எடுத்துத் தின்றேன். என் கையில் கருமையான பழச் சாற்றின் கறை படிந்திருந்தது.

மீண்டும் உறக்கம் வந்தது. உறங்கி எழுந்தபோது மேசையில் ஒரு தட்டில் அதே கரிய நிற பழங்கள் இருந்தன. இந்த முறை எந்தத் தயக்கமுமில்லாமல் பழங்களை உண்டேன். இன்னும் எத்தனை நாளில் பைத்தியம் தெளியுமோ என்று நினைத்தேன். எல்லாமே கறுப்பும் வெள்ளையுமாக இருந்தது. வேறு ஏதேனும் ஒரு வண்ணப்பொருளையேனும் பார்த்துவிட மாட்டோமா எனும் ஏக்கத்தை அளித்தது. வண்ண்ங்களற்ற உலகம் ஏமாற்றமளித்தது.

அடுத்த நாள் (என்றே நினைக்கிறேன்) பக்கத்து அறையிலிருந்து சத்தம் கேட்டது. யாரோ ஒருவரை சிலர் நையப்புடைத்துக்கொண்டிருந்தார்கள். அவன் வலியில் கதறிக்கொண்டிருந்தான். சற்று வயதான குரல். பரிச்சயமான குரலாகவும் தெரிந்தது. அடி விழுவதையும் கதறலையும் கவனித்துக்கொண்டிருந்தேன். அடிப்பது அந்த நான்குபேரும் என்று தெரிந்துகொள்ள முடிந்தது. அடி வாங்குபவன் ஏதோ பெருங்குற்றம் செய்துள்ளான். எனக்கு உள்ளூர பயம் எழுந்தது, அடுத்து நானாக இருக்கலாம் என்று. எனக்கு அடி தாங்க சக்தி இல்லை. அவர்கள் விருப்பம்போல நடந்துகொள்ள வேண்டியதுதான் என்று முடிவு செய்தேன்.

மாலை பழங்களைத் தின்றுவிட்டு கண்ணை மூடித் திறக்கையில் ஒரு திடுக்கிடும் காட்சி கிடைத்தது. அந்த வெற்றுப் புத்தகத்தின் அட்டையில் சில எழுத்துக்கள் தென்பட்டன. மிக மங்கலான எழுத்துக்கள். நான் புத்தகத்தை கயிலெடுக்கும்போதே அவ்வெழுத்துக்கள் மாயமாய் மறைந்தன. பிரமை என்று நினைத்தேன், நான் படிக்க விரும்புகிற கதை ஒன்றை என் மூளை எனக்காக அந்தப் புத்தகத்தில் எழுத விரும்புகிறது போல. மீண்டும் கண்களை சற்று மூடித் திறந்தேன். இப்போதும் அதேபோல எழுத்துக்கள் தோன்றி மறைந்தன. இம்முறை சில எழுத்துக்கள் கண்ணில் பட்டன. தமிழ் எழுத்துக்கள்தான். கண்களை மூடியபோது அந்தக் காட்சி மனதில் ஓடியது எழுத்துக்கள் மனதுக்குள் துல்லியமாகத் தெரிந்தன. ‘சிம்மபுர ராஜ வரலாறு’ என்பதுதான் அந்த புத்தகத்தின் தலைப்பு.

கண்களைத் திறந்தேன். இப்போது அந்த புத்தகத்தின் அட்டையில் அந்த எழுத்துக்கள் தெளிவாகத் தெரிந்தன. ‘சிம்மபுர ராஜ வரலாறு’. புத்தகத்தின் முதல் பக்கத்தை புரட்டினேன். அதில் எதுவும் எழுதப்படவில்லை. மேலும் சில பக்கங்களிலும் எதுவுமில்லை. திடீரென ஏதோ தோன்ற சட்டென்று அட்டைக்குச் சென்றேன். அது.. அது பழுப்பு நிற வண்ணத்திலிருந்தது. முன்பு கறுப்பு நிறத்திலிருந்த அட்டை பழுப்பு நிறத்திலிருந்தது. அதில் தங்க நிறத்தில் எழுத்துக்களிருந்தன. புத்தகத்தை மூடி வைத்துவிட்டு பின்னகர்ந்தேன். அறையின் மூலையிலிருந்து பார்க்கும்போது அந்த கறுப்பு வெள்ளை காட்சியில் அந்த புத்தகத்தின் அட்டையின் வண்ணம் மட்டும் தனித்துத் தெரிந்தது. சட்டென பயம் தொற்றிக்கொண்டது. கறுப்பு வெள்ளையாகவே காட்சி இருந்திருக்கலாமோ என்று நினைத்தேன்.

அடுத்த நாள் காலையில் நான் எழுந்தபோது கண்ட காட்சி எனக்கு இப்போது மிகத் துல்லியமாக நினவிலுள்ளது. மேசையில் அதே தட்டில் பழங்கள் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. எல்லா பழங்களும் அதே கரிய நிறத்திலேயே இருந்தன. ஒரே ஒரு பழத்தைத் தவிர. அந்தச் சிறிய பழக் குவியலின் மேல் முகட்டிலிருந்த பழம் மட்டும் இரத்தச் சிவப்பில் தெரிந்தது. செக்கச் சிவந்த ஆப்பிளைப்போல, அல்லது ஒரு ப்ளம் பழத்தைப் போல. உங்களுக்குப் புரிகிறதா நான் சொல்வது? என் காட்சி முழுவதுமே கறுப்பு வெள்ளையில் தெரிகின்றது ஒரே ஒரு பழம் மட்டும் செக்கச் செவேலென்று… இரவு வானத்தில் நிலா செக்கச் சிவப்பாக எரிந்துகொண்டிருந்தால் எப்படித் தோன்றும்? அதைப்போல. அல்லது ஒரு கரிய எருமையின் கண்கள் செக்கச் சிவந்திருப்பதைப்போல.

சட்டென்று எழுந்து அந்தப் பழத்தை உண்டேன். என் ஆழ்மனதில் ஏதோ தோன்றியிருக்க வேண்டும். அது என்னவென்று பழத்தை கடித்தவுடன் தெரிந்தது. சுவை. முதல் கடியிலேயே இனிமை திகட்டியது. உடனேயே சுவை மாறி சற்று கசந்தது. கொஞ்ச நேரம் துவர்த்தது. பின்பு கள்ளைப்போல புளித்தது மணந்தது. பின்பு சுவையேயின்றி மறைந்துபோனது. அடுத்த கடியிலும் அதேபோல இனிமையும். கசப்பும், துவர்ப்பும் புளிப்பும் வந்து பின்பு சுவையின்றி மறைந்து போனது. ஒவ்வொரு முறை அதை சுவைத்தபோதும் என்னால் அதன் சுவையை நினைவில் வைத்திருக்க முடியவில்லை. அதை மீண்டும் சுவைத்தே உணர முடிந்தது. மீண்டும் முற்றிலும் சுவையும் மணமும் மறந்து போயின.

அந்தப் புத்தகம் இப்போது முழுவதுமாக வண்ணத்தில் தெரிந்தது. பழத்தைக் கீழே வைத்துவிட்டு சிம்மபுர ராஜ வரலாற்றை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். அதன் சுருக்கம் இதுதான். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிம்மபுரத்தில் (அது கோயம்புத்தூருக்கருகிலுள்ள ஒரு மலையடிவாரமாயிருக்கலாம்) ஒரு சிற்றரசு இருந்தது. ஆயிரத்துக்கும் குறைவான வீடுகள் அங்கே இருந்தன. மலையின் மறுபக்கம் இன்னும் ஆயிரம் வீடுகள் இருக்கலாம். மிகவும் வளமான இடமாக இருந்தது. கொள்ளை நோய் ஒன்று அந்த சிற்றரசை தாக்கியபோது ராஜ விசுவாசிகள் அரசனையும் அவன் மனைவியையும் பாலகனாயிருந்த இளவரசனையிம் பதினெட்டு வகை வேலையாட்களையும் அவர்களின் குடும்பத்தையும் நூறு வண்டி பொருட்களையும் சேர்த்து பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பிவைத்தனர். அவர்கள் காடு மலைகள் வழியே பயணித்து இந்த குளக்கரையில் தங்கினர். சில நாட்களுக்கு பின் சிம்மபுரத்துக்கு அனுப்பப்பட்ட ஆள் திரும்பவேயில்லை. அடுத்து ஒருவனும் திரும்பவில்லை. மன்னனோடு வந்தவர்கள் நூற்றுக்கருகிலிருந்தனர். செம்மண்ணையும் மலைக் கற்களையும், மரங்களையும் கொண்டு இந்த குட்டி அரண்மனை கட்டப்பட்டது. அவர்களின் வம்சாவளியில் வந்தவர்கள்தான் இன்று இங்கே இருப்பவர்கள்.

இவர்கள் இங்கு வந்த கதைக்குப் பின் அவர்களின் பல சந்ததியினர் குறித்த குறிப்புக்களிருந்தன. திருமணங்கள், குழந்தை பிறப்புக்கள். பஞ்ச காலங்கள், வெள்ளக் காலங்கள் குறித்த குறிப்புகள். இவற்றில் சில விடுபட்டுமிருந்தன. பிற்காலத்தில் யாரோ எழுதத் துவங்கி பதிப்பது தொடர்ந்திருக்க வேண்டும். கடைசி அரசனின் வரலாற்றில் குழந்தை பிறப்புகளுக்குப்பின் ஒரு குறிப்பிருந்தது. அதில் மன்னனின் மூத்த மகன் சீரடிச் செவ்வேள் இங்கிருந்த பைத்தியக்காரன் ஒருவனால் கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருந்தது. நான் கடைசி பக்கத்தை புரட்டினேன். அதில் முன்பு எனக்குத் தோன்றியதைப் போலவே மெல்லிய மையால் ஒரு படம் வரையப்பட்டிருந்தது ஒரு சிறுவனின் படம். ஆறு வயதிருக்கும். என்னால் அதை நம்பவே முடியவில்லை. அது ஆறு வயதில் என்னை பார்ப்பதுபோலவே இருந்தது.

என் அப்பா எனக்கு வளர்ப்புத் தந்தை எனச் சொல்லியிருந்தார். தான் ஒரு பழங்குடி இனத்தவன் என்றும் அந்த ஊரில் நோய் வந்து எலோரும் சாகும்போது என்னை மட்டும் காப்பாற்றிக் கொண்டு வந்து விட்டதாகவும் என்னிடம் சொல்லியிருந்தார் . மிகக் கஷ்டப்பட்டு கூலி வேலை செய்து என்னை படிக்கவைத்தார். நல்ல உழைப்பாளி. அவர் என்னிடம் அதிகம் பேசுவதில்லை. என்னைத் தொடுவதுகூடக் கிடையாது சற்று தூரத்திலிருந்தே என்னை பார்த்துக்கொள்வார். எனக்கு அது புரியாததாகவே இருந்தது. நானோ எப்போதும் அமைதியாக தனித்தே இருக்கப் பழகிக்கொண்டேன். இப்போது எனக்கு நியாபகம் வந்தது, பக்கத்து அறையில் கேட்டது அவரது குரல்தான். அப்படியானால் நாந்தான் சீரடிச் செவ்வேளா?

‘சீரா சீரா’ என என்னை ஒரு பெண் முன்பு கூப்பிட்டிருப்பதைப்போல ஒரு பிரமை தோன்றியது. அந்தக் கரிய‌ தாமரைக் குளத்தில் நான் நீராடி களித்திருந்ததாய் ஒரு நினைவு வந்து சென்றது. அந்தக் குளிர்ந்த நீரை என்னால் உணர முடிந்தது. மரமெங்கும் செக்கச் சிவந்து பழுத்துத் தொங்கும் இந்த கிட்டிப் பழங்களை நான் கண்டிருக்கிறேன். கிட்டிப் பழம். பெயர்கூட நினைவிருக்கிறது. அவற்றை நான் முன்பு மிகவும் விரும்பு உண்பேன், அது மட்டுமே எனக்கு உணவாயிருந்தது என்றொரு நினைவு வந்தது. இல்லை இவை எல்லாம் கற்பனை என்று இன்னொரு குரல் கதறியது. நீ கோயம்பத்தூரில் கல்வி கற்று கலைக் கல்லூரியில் ப்யூனணாகப் பணியாற்றும் வேல் என்றது அந்தக் குரல். தினமும் எல்லோரிடமும் கேவலமாக திட்டு வாங்கி கூனிக் குறுகி நிற்கும் நான் ராஜ வம்சமா? என்ற கேள்வி எழுந்தது. பைத்தியம் பைத்தியம் என்றது இன்னொரு குரல். இப்போது தட்டிலிருந்த பழங்களெல்லாமே சிவப்பு நிறத்திலிருந்தன. பழத்தட்டு தங்க நிறத்தில் மினுமினுத்தது. என் கைகள் பழைய மாரநிற வண்ணத்தில் தெரிந்தன. அறையின் சன்னலுக்கு ஓடினேன். வெளியே காட்சிகளனைத்தும் பல்வேறு வண்ணங்களிலிருந்தன. தூரத்தில் தெளிந்த இளம்பச்சை நிறத்தில் தாமரைக் குளத்து நீர் தெரிந்தது. அதன் மீது மீனின் செதில்களைப்போல ஒளி பட்டு மினுங்கிக்கொண்டிருந்தது. மலைகள் பச்சையின் பலவண்ணங்களில் காட்சியளித்தன. சட்டென்று ஓடி கதவைத் தள்ளினேன். திறந்துகொண்டது. அந்தக் கதவு பூட்டப்படவேயில்லை எனத் தோன்றியது.

அறைக்கு வெளியே நான் கண்ட காட்சி வர்ணிக்க முடியாதது.

அரண்மனை புத்தம் புதிதாய் கட்டப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டதைப்போலிருந்தது. மரத்தூண்கள் எண்ணை பூசப்பட்டதைப்போல மினுமினுத்தன. அரண்மனைக்குள் மூலைகளில் கூட இருளே இல்லை. அதன் கூரைகளிலும் சன்னல்களிலும் தங்கம் பூசப்பட்டிருந்தது. பல வண்ணத் துணிகளைக் கொண்டு அரண்மனையின் தாள்வாரங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கர்பூரமும் மல்லிகையும் மணந்தன. அங்கே யாருமேயில்லை. வேகமாக நடந்து அரண்மனையின் நடுப்பகுதிக்கு வந்தேன். முன்பு பார்த்ததைவிட அரண்மனை பெரியதாக, ஒரு ராஜாங்கத்தின் அரண்மனையாகவே தோன்றியது. அங்கே தங்கம் மின்னும் ஒரு அரியணை இருந்தது. ஓடிச் சென்று அதில் அமர்ந்தேன். அதில் முன்பு நான் அமர்ந்திருக்கிறேன் என்று ஒரு நினைவெழுந்தது. என் நினைவு தெரிந்து முதன்முறையாக ஆத்மார்த்தமான ஒரு புன்னகை தோன்றியது. கொஞ்சம் வாய்விட்டு சிரித்தும்விட்டேன். பைத்தியம் பைத்தியம் என்றது ஒரு தீனக்குரல். அக்குரல் மெல்ல மறைந்து போவதைப்போலிருந்தது. மெல்லக் கண்களை மூடினேன். என்னை அறியாமலே சிரித்துக்கொண்டிருந்தேன். ‘சீரா சீரா’ எனும் குரல் கேட்டு எழுந்தேன். என்னருகே ஒரு மத்திய வயதுப் பெண்மணி அரச உடையில் நின்றுகொண்டிருந்தாள். அவளருகே அரச உடையில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். என்னை ‘வருக’ என வரவேற்ற அசிங்கமான அந்த வயதானவர் இப்போது பொலிவான முகத்துடன் இராஜ களையோடு நின்றுகொண்டிருந்தார். அவரது ஆடைகள் புத்தம் புதியதாயிருந்தன. அவர்களைத் தாண்டி மக்கள் நின்றுகொண்டிருந்தனர். எண்ணிக்கை நூறுக்கும் மேல் இருக்கும். அவர்கள் முகங்களில் ஆச்சரியமும் சந்தோஷமும் நிறைந்திருந்தது. ஒருக‌ண‌ம் என் பார்வையை திருப்பிய‌போது அவ‌ர்க‌ளெல்லாம் பைத்திய‌ம் என்று முணுமுணுடத்த‌தைப்போலிருந்த‌து. ச‌ட்டென‌த் திரும்புகையில் எல்லோரும் புன்ன‌கையுட‌ன் உறைந்துபோலன‌வ‌ர்க‌ளைப்போல‌ நின்றுகொண்டிருந்த‌ன‌ர்.

அன்றிலிருந்து நான் இந்த குட்டி ராஜாங்கத்தின் அரசனாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். என் சின்ன அசைவுகளுக்கெல்லாம் பணி செய்ய ஆட்களிருக்கிறார்கள். என்னை காதலிக்கும் பேரழகி ஒருத்தி இருக்கிறாள். பட்டாடைகளாலும் பொன்னாலும் நான் தினமும் அலங்கரிக்கப்படுகிறேன். ஆணையிடுகிறேன் ஆட்சி புரிகின்றேன். நானே இந்த சிம்மபுரத்தின் புதிய ராஜா. பைத்தியம் பைத்தியம் எனும் அந்தக் குரல் அவ்வப்போது கேட்கிறது. ஆனால் என்னால் இந்த இன்பங்களனைத்தையும் உணர முடிகிறது. கிட்டிப் பழத்தின் சுவை இப்போது மறப்பதில்லை. அவர்களின் அந்தப்பழைய மொழி எனக்கு மிகப்பரிச்சயமாகிவிட்டது. என்மேல் புதிய பாடல் ஒன்றும் இயற்றப்பட்டுவிட்டது. நான் முடிசூடிய வரலாறு அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுவிட்டது.

ஏன் இந்தக் கதையை உங்களிடம் சொல்கிறேனென்றே தெரியவில்லை. எது நிஜம் எது பொய் எனத் தெரிந்துகொள்ள முடியாத ஒரு உலகத்தில் நீங்களும் ஒரு அரசனாக அமர்ந்து ஆட்சி செய்துகொண்டிருக்கலாம் என நான் எண்ணுவதாலோ என்னவோ?

இல்லை ஒருவேளை நான் தெரு ஓர‌த்தில் கிட‌ந்துகொண்டு, மேல் நோக்கி, இல்லாத ஏதோ ஒன்றை வெறித்துப்பார்த்து புன்ன‌கைத்துக்கொண்டிருக்கும் ஒரு அழுக்க‌டைந்த‌ பைத்திய‌மென்றாலும் பரவாயில்லை. என்னை அப்படியே விட்டுவிடுங்கள். எனக்கென ஒரு ராஜாங்கம் உள்ளது.

=======================

நன்றி: வடக்குவாசல் (ஜூலை 2012)

Popularity: 2% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....2 மறுமொழிகள் to “ராஜாங்கம்”

  1. baskar சொல்கிறார்:

    பிரமாதமான கதை ஸார். அருமையாக இருக்கிறது. நன்றி.

  2. ஜிரா சொல்கிறார்:

    சிறில், ஒரு அதிர்ச்சி ஆச்சரியத்தைக் கொடுக்கும் கதை.

    நிறைய யோசிக்க வைக்கும் கதை. இப்படி எழுதுறது ஒங்க எழுத்தின் முதிர்ச்சியைக் காட்டுது.

    என்னவொரு விவரணைகள். ரசிச்சேன். ரசிச்சேன். ரசிச்சேன் :)

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்