கடலெனும் அனுபவம்

பல வருடங்களுக்கு முன்பு ‘ரீடர்ஸ் டைஜெஸ்ட்’ பத்திரிகையில் ஒரு கருத்துப்படம் வந்திருந்தது. இரு சிறுவர்கள் ஒரு ’மார்டன் ஆர்ட்’ படத்தின் முன்பு நின்றுகொண்டிருக்கிறார்கள். கீழே ’யாராவது நாமதான் இதை செஞ்சுட்டோம்ணு சொல்றதுக்கு முன்னால ஓடிரலாம் வா’ எனும் வரி. கடல் திரைப்படத்துக்கு வந்திருக்கும் பல விமர்சனங்களை படித்தபோது எனக்கு இதுவே நினைவுக்கு வந்தது. பல உன்னத கலை படைப்புகளும் குழந்தைகள் செய்தவற்றைப்போன்ற எளிமையுடனே இருக்கின்றன. ஒரு மாடர்ன் பெயிண்டிங்கைப்போலவே கடலும் நம் புரிதலைக் கோரி நிற்கும் ஒரு கலைப்படைப்பு.

கடல் பல உள்ளோட்டங்களையும் அடுக்குகளையும் கொண்ட திரைப்படம். அந்த உள்ளோட்டங்களை விட்டுவிட்டு வெறும் திரைப்படமாகப் பார்த்தால் எஞ்சுவது கொஞ்சமே. அதிலும்கூட துல்லிய மீனவ கிறீத்துவ பின்னணியும், மெல்லிய காதலும், அழகிய இசையும், ஒரு தீவிர பழிவாங்கும் கதையும், பல உச்சங்களைக் கொண்ட திரைக்கதையும் உள்ளது. ஆனால் அது மட்டுமே கொண்ட ஒரு படத்தை உருவாக்க ஜெயமோகனும், மணிரத்தினமும் எதற்கு? ஒரு சாதாரண பழிவாங்கும், மனம் திரும்பும் கதையை தங்கள் துறையில் உச்சங்களில் இருக்கும் இருவர் படமாக்குவார்களா?

கடல் ஒரு பெருங்கதை. இராமனின் கதையைக் கொஞ்சம் பெரிய ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். ஆனால் இராமாயணம் பல நூறு கதைகள் கொண்ட ஒரு காப்பியமாக உருவாகியது. அதேபோன்றதொரு காப்பியத்தன்மைகொண்டதே கடல். ஒரு ஆன்மா இந்த உலகில் செய்யும் ஒரு பெரும்பயணத்தின் கதையைச் சொல்கிறது கடல். அது வெவ்வேறு திசைகளில் பயணிக்கிறது, நன்மைக்கும் தீமைக்கும் குழந்தைமைக்கும் மத்தியில் நின்று தள்ளாடுகிறது. எழுகிறது விழுகிறது அலைகிறது மீழ்கிறது.

படம் நேரடியாக கதைக்குள் செல்கிறது. சிலுவை ஒன்றை நோக்கி நடந்து வரும் ஒரு மனிதன் முதல் காட்சி. அவன் பெயர் சாம் ஃபெர்னாண்டோ. ஒரு பெரும் பணக்காரனின் மகன். அவன் வந்திருப்பதோ துறவியாக, கிறீத்துவ சாமியாராக மாற. அவன் ஒரு தூய்மைவாதியாக, நீதிமானாகத் தோன்றுகிறான்(righteous man). செபிக்காமல் சாப்பிடுவதில்லை, மனம் நிறைந்து சிரிப்பதில்லை. இறுக்கமான நீதிமான். அதுவே இயேசுவை பின்பற்றும் வழி என நினைக்கிறான். (ஆனால் இயேசுவோ தூய்மைவாதிகளை வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் என வெறுக்கிறார்) அவன் அங்கே மனிதத்துக்கும் சாத்தானுக்கும் நடுவில் நின்று அல்லாடும் ஒருவனை சந்திக்கிறான். அவன் பாவம் செய்வதைக் கண்டு அவனை தண்டனைக்கு இட்டுச் செல்கிறான். பெர்க்மான்ஸ் எனும் மனிதன் முழுமையாக சாத்தானாகிறான். சாம்’ஐக் கொல்ல முயற்சிக்கிறான். ஆனால் உடல் இறப்பது என்பது விரைவானதொரு முடிவு. சாத்தான் அவனது ஆன்மாவுக்குக் குறிவைக்கிறான். ‘என்னைப்போல உன்னை பாவத்தில் தலைகுப்புற விழவைக்கிறேன்’ என சவால் விடுகிறான். மிக விரைவாக சொல்லப்படும் இந்தக் காட்சிகள் ஆழமானவை. நம் முழு கவனத்தையும் கோருபவை. இந்த முன்கதையில் பெர்க்மான்ஸ் விடும் சவாலின் தீவிரமும் சுவாரஸ்யமும் புரியாதவர்கள் அல்லது பிடிக்காதவர்களுக்கு கடல் படத்தை முழுமையாக அனுபவிக்க முடிவதில்லை.

இது சாதாரணமாக நம் ஹீரோக்கள் தொடையைத் தட்டி விடும் சவால்போலத் தோன்றினாலும் ஆழமானது. பெர்க்மான்ஸுக்கு பழிதீர்க்க சாம் கொல்லப்படுவது எளிதான தண்டனையாக இருந்திருக்கும். ஆனால் சாத்தான் அவனை நித்தியத்துக்கும் சபிக்க எண்ணுகிறான். இதில் உள்ள இறையியல்தன்மையை எடுத்துக்கொண்டே நாம் படத்தை முழுமையாகப் ரசிக்க முடியும். உடலைக்கொல்வது உடனடித் தண்டனை.. ஆன்மாவைக் கொல்வதோ நித்தியத்துக்கும் தண்டனை.

அடுத்து நாம் காண்பவை மிக உக்கிரமான காட்சிகள். பாலியல் தொழிலாளியான தன் தாய் இறந்துபோயிருப்பதை உணராமல் அவள் மீது படுத்துறங்கும் ஒரு குழந்தை. ஊருக்கு ஒதுங்கிய அந்தக் குடிலில் ஒரு ஆன்மா அனாதையாகி நிற்கிறது. வேசியின் ஆன்மாவுக்கு கோவிலில் இடமில்லை அவள் உடலுக்குக் கூட மரியாதையில்லை. அவளின் வளைந்து நீட்டிய ஊனமான கால் மண்வெட்டியால் உடைக்கப்பட்டு பழைய ஐஸ் பெட்டிக்குள் அடைக்கப்பட்டு ’தெம்மாடிக் குழியில்’ புதைக்கப்படுகிறது. தாமஸ் தனியனாக நிற்கிறான். தன் தந்தையென்று தாயால் அடையாளப்படுத்தப்பட்டவரான ஊர்ப்பெரியவரைத் தேடிச் செல்கிறான். இந்த தாமஸ் செட்டி உறவு மிக சிறப்பாக பல காட்சிகளில் சொல்லப்படுகிறது. தந்தையின் வீட்டிலிருந்து துரத்தப்படுகிறான் “சாத்தானின் மகன்”. கடற்கரையில் மீனைப் பொறுக்கி அடிவாங்குகிறான். செட்டி அவனுக்கு ஒரு மீனைத் தருகிறான். ஒருவன் ‘என்ன இருந்தாலும் மவனில்லையா’ என்கிறான் ‘எவனுக்க மவன்ல’ என்று கோபப்படுகிறார் செட்டி.. காட்சியின் பின்னணியிலேயே நிகழும் இந்த உரையாடல்களைப்போல படத்தில் தொடர்ந்து பல மெல்லிய பின்னணி உரையாடல்களும் காட்சிகளும் விரவியுள்ளன. அவை அனைத்தையும் உள்வாங்கும்போதே படம் முழுமையான அனுபவத்தை தரமுடியும்.

சிலவருடங்கள் கழிந்து ஊருக்கு ஒரு பாதிரியார் வருகிறார். சாமியாரே இல்லாத பாழடைந்த கோவில் இருக்கும் ஊர் ஒன்றில் இயேசுவின் பிரதிநிதியாக சாம் வந்திறங்குகிறார். கடவுளில்லாத ஊரில் வந்திறங்கும் கடவுளின் தேவதூதன். இப்போது சாம் மனமார சிரிக்கிறார், குடிகாரர்களுடன் பழகுகிறார், ஏழைகளுடன் உறவாடுகிறார். அவர் பழைய இறுக்கமான நீதிமான் அல்ல. அவர் கடற்கரையில் ஒரு ஆன்மாவை கண்டெடுக்கிறார். “சாத்தானின் பிள்ளையை” தெய்வத்தின் மகனாக மாற்றுகிறார். இந்தக் காட்சிகளும் மிக உக்கிரமாகவும் மனதைத் தொடும்வகையிலும் அமைந்துள்ளன. மணிரத்தினத்தால் ஒரு கிராமிய படத்தை எடுக்கவே முடியாது என்பது நம் சினிமா பண்டிதர்களின் கூற்று. கடலின் முதல் பாகத்தில் வரும் காட்சிகளில் அவர் தனக்கு துளிகூட பரிச்சயமில்லாத மீனவ கிராமத்தையும் கிறீத்துவ பின்னணியையும் மிகச் சிறப்பாகச் சொல்கிறார். ஒரு நல்ல படைப்பளிக்கு பின்னணி என்பது ஒரு படம் வரைபவனுக்கு கிடைக்கும் தாளைப்போலத்தான் இல்லையா? தாமஸ் நல்லவனாகிறான். திருமுழுக்கு (ஞானஸ்னானம்) பெறமுயல்கிறான். செட்டியை தன் தந்தையாக பதிவு செய்கிறான். செட்டியோ அதை ஊருடன் சேர்ந்து எதிற்கிறான் ஃபாதர் சாமின் மீது வன்மம் கொள்கிறான்.

கதை மீண்டும் பழைய சவாலுக்கு திரும்புகிறது. பெர்க்மான்ஸ் இப்போது முழுநேர சாத்தானாகிவிட்டான். சாம் குறித்து அவன் மறந்துவிடவில்லை. அவரைக் கண்டதும் ‘ஃபாதர் சாம்’ என்கிறான். பெர்க்மான்ஸ் சாமை ‘ஃபாதர்’ சாம் என அழைப்பது மிக முக்கியமானதொரு தொடர்பைக் காட்டுகிறது. சாம் ஃபாதர் ஆகிவிட்டதெல்லாம் அவனுக்குத் தெரியும். அவன் ஒரு நல்ல தருணத்துக்கு இன்னும் காத்திருக்கிறான். செமினரிக்குப் போகிறவர்களெல்லாம் சாமியாராகிவிடுவதில்லை (உ.ம் நான்). சாம் சாத்தானின் சதியால் நரகத்துக்கே அனுப்பப்படுகிறார்.

இதற்கிடையே தாமஸ் ஒரு புதிய உறவுக்குள் நுழைகிறான். அவன் ஆன்மா ஒரு தேவதையை கண்டுகொள்கிறது. குழந்தைமையே வடிவானதொரு தேவதை. நன்மைத்தனத்தயன்றி வேறெதையும் அறியாத தேவதை. தாந்தேயை (Dante) நரகத்திலிருந்து சுவர்க்கத்துக்கு அழைத்துச் சென்ற பியாட்ரிஸ் எனும் தேவதை. தாந்தேயும் பியாட்ரிஸையும் போலவே தாமஸும் பியாவும் படத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பெர்க்மான்ஸின் சவால் இப்போது ஒரு பெரும் தடையை சந்திக்கிறது. சாம் தாமஸின் ஆன்மாவை மீட்டெடுத்ததன் மூலம் பரலோகத்தில் தனக்கான இடத்தை முன்பதிவு செய்துவிட்டான். சாமை நித்தியத்துக்கும் வீழ்த்த இப்போது சாத்தானுக்கு ஒரே வழிதான் உள்ளது அது தாமஸை தன்வழிக்குக் கொண்டுவருவது. அது பெர்க்மான்ஸுக்கு கிடைக்கும் ஒரு வாய்ப்பும் கூட. ஒரு bibilical காட்சியில் மிகக்கவனமாக செதுக்கப்பட்ட வசனங்களின் வழியே தாமஸின் ஆன்மா சாத்தானின் பக்கம் சாய்வது சொல்லப்பட்டிருக்கிறது. தாமஸ் வழிமாறித் தன்னிடம் வந்துவிட்ட மகிழ்ச்சியான செய்தியை பெர்க்மான்ஸ் சிறைக்குச் சென்று சாமிடம் சொல்கிறான். ’தாமஸ் இப்போ என்கூட இதுதான் சாத்தானுக்க வெளையாட்டு’. பெர்க்மான்ஸ் உலக வெற்றிகளை தாமஸுக்கு வழங்குகிறான். சாத்தான் கொலைசெய்வதின் சுகத்தை தாமசுக்கு காண்பிக்கிறான். பியாட்ரிஸ் உயிர் பிறப்பின் அருமையை காண்பிக்கிறாள். இரண்டு இரத்தங்களின் வித்தியாசத்தையும் ஆழமாகவே உணர்ந்துகொள்கிறது தாமஸின் ஆன்மா.

சாம் சிறையிலிருந்து திரும்பி தாமஸை மீட்க மீண்டும் வருகிறார். அவரிடம் தாமஸுக்கு சொல்வதற்கு எதுவுமில்லை. அவர் அவனிடம் கேட்பது ’உலகத்தில ஒரு மனுசனுக்குள்ளேயேனும் நீ ஆண்டவரோட ஒளிய பாக்கலியா’ என்பதுதான். அவனோ உண்மையிலேயே சாத்தானின் பிள்ளையாகிவிட்டான். குற்ற உணர்வு கிறீத்துவ இறையியலில் மிக அடிப்படையான ஒன்று. அவனுக்கு பாவமன்னிப்பு தேவைப்படுகிறது. தன் தேவதையிடம் பாவத்தை அறிக்கையிட்டு மன்னிப்பை பெறுகிறான். ’இனிமே செய்யாத என்ன?’ பாவ மன்னிப்பில் சொல்லப்படுவதுவும் இதுதானே?

பியாட்ரிஸ் சாம் வழியாக (டேப் ரெக்கார்டர்) தாமஸின் ஆன்மாவை உணர்கிறாள். ஒரு குழந்தை தாயாகும் தருணம் நிகழ்கிறது. பெர்க்மான்ஸ் வெகுண்டெழுகிறான். தன்னில் நிலைத்திருக்கும் கடைசி நன்மைத்தனைத்தையும் அழித்து பேருருவெடுத்து முழுமையான சாத்தானாகவே மாறிவிட முடிவெடுக்கிறான். அதற்கு அவன் தன் மகளைக் கொன்றாகவேண்டும். கடல் பிரம்மாண்டமாகக் கொந்தளிக்கிறது. முடிவில் தாமஸின் ஆன்மா சாமின் ஆன்மாவையும் மீட்டெடுக்கிறது. பியாட்ரிஸிடம் சென்று அடைக்கலம் புகுகிறது.

படத்தின் பல காட்சிகளும் மிக அடர்த்தியாக உள்ளன. பார்வையாளன் ஒரு உச்சத்தை உள்வாங்கிக்கொள்ளும் முன்பே இன்னொன்று வந்துவிடுகிறது. இத்தனை ஆழமான படத்திற்கு இத்தனை வேகம் கொஞ்சம் அதிகம் என்றே சொல்வேன். பலரும் வசனம் இசையால் புரிந்துகொள்ள முடியாமல் போகிறது என்கிறார்கள். இது அப்பட்டமான பொய். பின்னணி இசை (மகுடி மகுடி தவிர்த்து) பல இடங்களில் சாந்தமாகவே உள்ளது. தொடர்ந்து முக்கியமான வசனங்கள் வந்துகொண்டேயிருப்பதால் அவற்றை உள்வாங்கிக்கொள்ள நேரமில்லாமல் போய்விடுகிறது.

கடலில் பல சரடுகள் கையாளப்படுகின்றன. இதுவும் பார்வையாளனிடம் அதிக கவனத்தையும் பங்களிப்பையும் கோருகிறது. சாம்+பெர்க்மான்ஸ், தாமஸ்+தாமஸின் அம்மா, தாமஸ்+செட்டி, செட்டியின் குடும்பம், தாமஸ்+சாம், தாமஸ்+பெர்க்மான்ஸ், ஃபாதர்+ஊர் மக்கள், ஃபாதர்+கோவில்பிள்ளை, பெர்க்மான்ஸ்+செலீனா, பியா+தாமஸ், பியா+பெர்க்மான்ஸ், பியா+மதர், பெர்க்மன்ஸின் பின்னணி, தாமஸின் பின்னணி இவை எல்லவற்றிற்கும் ஊடே கத்தோலிக்க திருச்சபையின் ஊடாடல். இந்த மேல் அடுக்களின் கீழே ஓடும் ஆன்மாக்களின் போராட்டம். இப்படி படம் பல விஷயங்களையும் தீவிரமாகப் பேசிக்கொண்டிருப்பது சாதாரண சினிமா பார்வையாளன் பழக்கப்பட்ட விஷயமல்ல.

என் மலையாள நண்பர் ஒருவர் ’படம் complicated’ என்றார். இதையே ஒரு சாதாரண பார்வையாளனின் நேர்மையான அவதானிப்பு என்பேன். ஆனால் பல சினிமா பண்டிதர்களும் படம் மிகவும் எளிமையான, மிக வழக்கமான நன்மைக்கும் தீமைக்குமான போராட்டம் என்றே தீர்ப்பளிக்கிறார்கள். “கடல், ‘டல்’ க சைலண்ட்” என்றெல்லாம் சொல்பவர்களின் சினிமா ரசனையை நியாயத் தராசில்தான் எடைபோடவேண்டும். இத்தனை நாடக உச்சங்களைக் கொண்டிருக்கும் ஒரு படத்தை டல் என்று சொல்பவர்களுக்கு லட்டு தின்றுவிட்டு சும்மா இருக்கலாம். எனக்கு இது ரெம்ப அதிகம் என்று உண்மையை ஒத்துக்கொண்டுவிடுங்கள் போதும்.

படத்தில் நேட்டிவிட்டி இல்லை என்று தீர்ப்பெழுதுகிறார் ஒரு பண்டிதர். கிறீத்துவம் நம் பொதுஜன மனதில் ‘அல்லேலூயா கோஷ்டி’ என்பதைத் தவிர வேறெந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையோ எனும் பரிதாபமான கேள்வியே எழுகிறது. இல்லையேல் தமிழ் நாட்டில் குறைந்தபட்சம் ஐநூறுவருட பாரம்பரியம் கொண்ட கிறீத்துவமும், ஆயிரக்கணக்கான வருடங்களாக தமிழ் கலாச்சாரத்தில் நீங்காமல் இடம்பெற்றுவரும் நம் தென்தமிழக மீனவர்களும் நேட்டிவிட்டிக்குள் வராதுபோவதெப்படி? படம் சமரசமின்றி மீனவர்களின் மொழிவழக்குகளை கயாளுகிறது. கித்தாப்பு, தொட்டி, கச்சோடம், எழுப்பம், தெம்மாடிக்குழி போன்ற வார்த்தைகளானாலும் சரி ’சாம்’க்கு தீபந்தம் தூக்கிட்டு திரியுத?’, ‘அம்மைக்கு மத்தவனால?’ ’(மண்ணை) அள்ளி வாயில போட்டுருவா’ எனும் வழக்குகளும் கடல் முழுக்க நிரவிக்கிடக்கின்றன.

கடல் ஒரு கிறீத்துவ பிரச்சார படம் என்கிறார்கள் சிலர். ஆனால் கடல் பல காத்திரமான விமர்சனங்களை நிறுவன கீறீத்துவத்தின்மீது வைத்திருக்கிறது. சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சாமியாராக வருவதாக, வேசியிடம் சென்றவர்களுக்கெல்லாம் மனிப்பும் ஏழை வேசிக்கு தெம்மாடிக்குழியுமாக, காசுக்கு மோட்சம் வாங்கித் தருபவர்களாக என்று சிலவற்றை கோடிட்டுக் காட்டலாம். தாமசின் ஆன்மா நிறுவன கிறீத்துவத்துக்கு வெளியேயே மீட்பை பெறுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் பல்வேறு வடிவங்களில் திருச்சபைக்குள்ளேயே வைக்கப்பட்டுவருகின்றன. ஆகவே ஒரு சாதாரண கிறீத்துவன் இவற்றை எதிர்க்கப்போவதில்லை. இவை மிக நேர்மையான விமர்சனங்களேயாகும்.

’நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில் பரலோக ராஜ்ஜியத்தில் உங்களுக்கு இடமில்லை.’ என்பதை ஒரு இன்ஸ்பிரேஷனாக ஜெயமோகன் எடுத்திருக்கலாம். இதை மையமாக வைத்து ஒரு தமிழ்ப்படம் வருவதென்பது எத்தனை அரிதானது?

கடல் கிறீத்துவ இறையியலை மிகச் சரியாகக் கையாண்டிருக்கிறது. சாத்தான் உலகின் வெற்றிகளை அளிப்பவன் என்பது தொடர்ந்து பெர்க்மான்ஸின் பாத்திரம் மூலம் வெளிப்படுகிறது. சாமோ உலகின் வெற்றிகளைக் குறிவைப்பதில்லை. தூய குழந்தைத் தன்மை இறையியல் அறிவையும்விட மேன்மையானது என்பது பியாவின் பாத்திரப்படைப்பின் வழியே சொல்லப்படுகிறது. பியா தூயக் குழந்தமையின் வடிவாக வருகிறாள். அவள் குழந்தையாகவே உறைந்துவிட்டவள். பாவத்தின் நிழலைக்கூட அறியாதவள். ’சாத்தானுக்க மவ ஒரு ஏஞ்சல் பாத்துக்க சிரிப்பா இல்லடே?’ இந்த முரணும் ஒரு அற்புதமான கிறீத்துவ முரணே. ’தொலைஞ்சு போன ஆடு மாதிரி திரும்ப வந்திருக்கல்ல தாமஸ்’ போன்ற மிக எளிமையாகத் தோன்றும் பைபிள் சார்ந்த வசனங்களுக்கு ஆழமான அர்த்தங்களை பார்வையாளன் உருவாக்கிக்கொள்ளாமல் கடலை எப்படி ரசிக்க முடியும்?

பெர்க்மான்ஸ் சாத்தானின் குறீடான எக்களிப்பும், எள்ளலும் கொண்ட ஒரு பாத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளது. சாம் சாந்தமும் அமைதியும் சந்தோஷப் புன்சிரிப்பும் விளையாட்டுத்தனமும் கொண்டதொரு பாத்திரம். அர்ஜுனும் அரவிந்த் சாமியும் மிக அற்புதமாக இந்தப் பாத்திரங்களுக்கு உயிரூட்டியுள்ளனர். கவுதமும் துளசியும்கூட நன்றாக நடித்திருந்தாலும் துளசியின் பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கும் விதம் பார்வையாளர்கள் பலரை அன்னியப்படுத்திவிட்டதாக உணர்கிறேன்.எப்போதும் குழந்தைத்தனமும் புன்சிரிப்பும் கொண்ட பாத்திரமாக அவள் வந்தாலும் ஒரு மெல்லிய சோகம் அவளைச் சூழ்ந்துள்ளைதை நம்மால் உணரமுடிகிறது.

இயக்குநர் மணிரத்தினம் தன்னுடைய திரைமொழியில் பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளார். தற்போதைய படங்களில் கையாளப்படும் தீவிரத் தன்மையும் இயல்பான வாழ்க்கைமுறையும் பின்னி உருவாக்கப்படும் திரை மொழியை அவரும் மிக இலாவகமாகக் கையாண்டுள்ளார். ஒரே விஷயம் பாடல்கள். படத்தை இரசித்த பலருக்கும் பாடல்கள் பெரிய ஸ்பீட் பிரேக்கர்கள். ஒன்றிரண்டு பாடல்களே போதுமானதாக இருந்திருக்கும். மற்றவை கொஞ்சமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

நான் சிறுவயதுமுதல் கடலை கவனித்து வருகிறேன். கடல் ஒவ்வொருமுறையும் எனக்கு ஒவ்வொரு அனுபவத்தை தருகிறது. ஆனால் நாம் விழித்திருக்க வேண்டும் அதன் அலைமொழியை கவனித்திருக்க வேண்டும் அதன் இரைச்சலை கேட்டிருக்கவேண்டும். கணம்தோறும் மாறும் கடலை கண்டுகொண்டேயிருக்கவேண்டும். அந்த உழைப்பைத் தராமல் வெறுமனே காலைக் கழுவிவிட்டு பஜ்ஜி வாங்கி தின்றுவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டால் போதுமென்று நினைப்பவர்களுக்கு கடல் வெறும் கடல்தான். ’கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்’

Popularity: 6% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....4 மறுமொழிகள் to “கடலெனும் அனுபவம்”

 1. GiRa ஜிரா சொல்கிறார்:

  இவ்வளவு ஆழமான விஷயங்களைக் கொண்டதா கடல்! நான் படத்தைப் பார்க்கவில்லை. ஆகையால் சொல்வதற்கு எதுவுமில்லை.

  குறியீடுகளால் நிரம்பிய படத்தைப் புரிந்து கொள்வது சிரமந்தான். நீங்கள் சொல்வது போல கிருத்துவ சமூகம் அந்த அளவுக்கு ஆழமான தாக்கத்தைப் பதிக்கவில்லையோ என்று ஐயம் வருகிறது. இத்தனைக்கும் கடலோர வட்டாரங்களில் கிருத்துவர்கள் நிறைய.

 2. ஜிரா,
  இவை இல்லாமலேயே படத்தை ரசிக்க முடிகிறது.

 3. Praveen Prasanna சொல்கிறார்:

  அருமையான பதிவு. ஆனால் “பின்னணி இசை (மகுடி மகுடி தவிர்த்து) பல இடங்களில் சாந்தமாகவே உள்ளது” – தவறு > மகுடி மகுடி பாடலின் உள் அர்த்தம் இதோ http://www.twitlonger.com/show/l33nkg

 4. Fr George Fernandaz சொல்கிறார்:

  அன்புள்ள சிறில் அவர்களுக்கு,
  நான் ஒரு இளம் கத்தோலிக்க குரு. எழுத்தில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். இவ்வளவு நன்றாக, சுவாரஸ்யமாக எழுதுகிற ஒரு கிறிஸ்தவரை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் அண்ணா. உங்களோடு தொடர்பில் இருக்க ஆசைப்படுகிறேன். உங்கள் மொபைல் எண் (ஆட்சேபணை இல்லையென்றால்)அல்லது ஈமெய்ல் முகவரி ஏதும் தரமுடியுமா?

  மிக்க அன்புடன், ஜார்ஜி

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்