தீண்டுமை

சுமார் 2500 வருடங்களுக்கு மெய்யியலில் ஒரு முக்கியமான கேள்வி எழுந்தது. ‘உணர்வுகளில் பிரதானமானது எது?’ பிளேட்டோவின் பக்கம் சிலரும் அரிஸ்டாட்டிலின் பக்கம் சிலருமாய் இந்த விவாதம் தொடர்ந்தது. இன்றும் மெய்யியலில் விவாதிக்கப்படும் ஒரு விஷயமாய் இது இருக்கிறது. பிளேட்டோ பார்வைத் திறனே முதன்மையானது என்றார். மெய்யியலின் வரலாற்றில் அதுவே வெற்றி பெற்ற தரப்பாகும். ஆனால் அரிஸ்டாட்டில் தொடுவுணர்வையே முதன்மையானது என்றார். தொடு உணர்வு உயிர்களுக்கெல்லாம் பொதுவானது, அடிப்படையானது என்றாலும் மனிதனில் அது மிக நுட்பமானதாக செயல்படுவதாலேயே மனிதன் சிந்தனைத் திறனுடையவனாயிருக்கிறான் என்பது அவரது வாதமாய் இருந்தது. அரிஸ்டாட்டிலின் முதன்மையான மெய்யியல் படைப்பு என கருதப்படும் டி அனிமா (De Anima) – ஆன்மாவின் தன்மை – இது குறித்து விவரிக்கிறது. இன்றைக்கு மெய்யியலின் இடத்தை அறிவியல் மெல்ல மெல்ல ஆக்கிரமித்து வருகிறது. ‘அரியணை தத்துவவாதிகள் இறந்துவிட்டார்கள்’ என ஸ்டிபன் ஹாக்கிங் பிரகடனப்படுத்தினார். இன்றைக்கு அந்த 2500 வருடக் கேள்விக்கு விடை தேடுபவர்கள் அறிவியலின் துணையையே நாடவேண்டியிருக்கும். அவ்வகையில் தொடுதல் குறித்து பொதுவான வாசகர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கும் ஒரு அறிவியல் புத்தகம் டேவிட் லின்டனின்(David Linden) ‘Touch: The Science of Hand, Heart, and Mind’.

நமது உடல் எப்போதும் எதையேனும் தொட்டுக்கொண்டே இருக்கிறது, ஆடைகளை, தரையை, குறைந்தபட்சம் காற்றை. நம் கண்களை மூடிக்கொள்ள முடியும், அதேபோல எப்போதும் நம் உடல் தட்பவெட்பத்தை, குளிரை, சூட்டை உணர்ந்துகொண்டேயிருக்கிறது. காதுகளையும் மூக்கையும் அடைத்துக்கொள்ளலாம். தொடு உணர்வை நாம் விரும்பியபடி செயலிழக்கச் செய்யமுடியாது. நாம் பிறந்ததிலிருந்து முழுமையாக செயல்பாட்டில் இருக்கும் ஒரு புலனறிவு தொடுவுணர்வாகும். நம் உடலின் மிகப்பெரிய தனி உறுப்பு தோல் எனவே நம் மூளை அதிகம் உணரும் புலன் தொடு உணர்வு. நம் மூளை முதலில் உணரும் புலனும் தொடுதலே. மனிதக் குழந்தை 1.4 சென்டிமீட்டர் நீளம் இருக்கையிலேயே மூளை தொடுதலை உணர ஆரம்பிக்கிறது. நமது மொழியில் ‘உணர்தல்’ என்பது இரு அர்த்தங்களைத் தருகிறது. ஒன்று உடல்வழியே உணர்வது இன்னொன்று உளஉணர்வு. ஆங்கிலத்திலும் ‘ஃபீலிங்;’ என்பதுவும் இரு அர்த்தங்களைக் கொண்டது. புரோட்டோ இந்தோ ஐரோப்பிய மொழிகளில் மட்டுமன்றி பிற மொழிகளிலும் இந்தப் பயன்பாடு உள்ளது. ‘உணர்வுகள் மரத்துப் போனது’ அல்லது ‘கடினமான’ ‘மென்மையான’ உணர்வுகள் என நாம் தொடு உணர்வுக்கும் உள உணர்வுக்கும் பொதுவான வார்த்தைகளையே பயன்படுத்துகிற அளவுக்கு தொடுதலும் உள்ள உணர்வுகளும் பிணைந்துள்ளன. நாம் மிக சாதாரணமானதாகவும் இயல்பானதாகவும் கருதும் ஒரு எளிய உணர்வின் பின்னால் இருக்கும் அறிவியலை, உளவியலை அது செயல்படும், நம்மை செயல்படுத்தும் விதங்களை மிட்டாய்கடைக்குள் புகுந்துவிட்ட குழந்தையின் உற்சாகத்துடனும் எளிமையுடனும் டேவிட் லின்டன் சொல்லிச் செல்கிறார்.

தொடுதல் ஒரு சமூகச் செயல்பாடு என்கிறார் டேவிட். குரங்குகள் மத்தியில் ‘பேன் பார்க்கும்’ (Grooming) வழக்கம் இருக்கிறது என நமக்குத் தெரியும். ஒட்டுண்ணிகளை ஒன்று மற்றொன்றின் மீதிருந்து எடுத்து சுத்தப்படுத்தும் ஒரு சமூகப் பழக்கம் அது. இந்தப் பழக்கம் பயன்மதிப்பு மிக்கது மட்டுமல்ல. அது அவ்விலங்குகளுக்கிடையே இருக்கும் உறவினை நிர்ணயிப்பதும்கூட. ஒரு விலங்கு கூட்டத்தின் அதிகார அடுக்கையும், நெருக்கத்தையும் அது தீர்மானிக்கிறது. தனக்குப் பேன் பார்க்கும் நெருக்கமான குரங்கின் எச்சரிக்கை குரலை அதன் கூட்டாளி அதிகம் நம்புகிறது. ஆண் குரங்குகளுக்கு மத்தியில் அதிகாரத்துக்கான சண்டைகள் ஏற்படுவதுண்டு. அந்தச் சண்டையில் தோற்கும் ஆண் குரங்கிற்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அது ஓடிப்போய்விடலாம். அல்லது அந்தக் கூட்டத்தில், குடும்பத்தில் தொடர்ந்து இருக்க வேண்டுமென்றால் வெற்றி பெற்ற ஆணின் குறியை தொட்டு தன் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்.

வாம்பயர் வவ்வால்களின் (Vampire bats) தொண்டை மிகச் சிறியது. அவற்றால் திட உணர்வுகளை உண்ண முடிவதில்லை. அவற்றின் ஒரே உணவு விலங்குகளின் இரத்தம். மனித கற்பனையை ஆழமாக ஈர்த்து பல்வேறு திகில் கதைகளுக்கும் ஆதாரமான இரத்தம் குடிக்கும் ஒரே வவ்வால் வகை இவைகளே. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இரத்தம் குடிக்காமல் போனால் அவை உடல் நலிந்து இறந்துபோகும். இவையும் ‘பேன் பார்த்தல்’ போன்ற பழக்கமுடையவை. ஒரு வவ்வாலுக்கு இரண்டு நாட்களில் உணவு கிடைக்கவில்லையென்றால் அது தன் பேன் பார்க்கும் கூட்டாளியை இரைஞ்சுகிறது. தன் கூட்டாளிக்கு தான் உண்ட இரத்தத்திலிருந்து கொஞ்சத்தை அது வாய்வழியே ஊட்டி விடுகிறது. தொடுதல் மூலம் விலங்குகள் நெருக்கமான உறவுகளையும், சமூக கட்டமைப்புகளையும் உருவாக்கிக்கொள்கின்றன.

மனிதர்களிடையேயும் தீண்டுதல் உறவுகளை பலப்படுத்த பயன்படுகிறது. அதை உறுதி செய்ய ஒரு சுவரஸ்யமான ஆய்வு நடத்தப்பட்டது. அமெரிக்க தேசிய கூடைப்பந்து போட்டிகளை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். ஒவ்வொருமுறை இலக்கை அடைந்ததும் அந்த விளையாட்டுக் குழு கொண்டாடும் விதங்களை 12வகையான தொடுதல்களாக வகைப்படுத்தினர். பின்னர் அவற்றை கணக்கிட்டனர். ஒரு போட்டிக்காலம் முழுவதும் இவ்வாறு அந்தக் குழுவின் கொண்டாட்டங்கள் கணக்கிடப்பட்டன. ஆய்வின் முடிவில் உடல் நெருக்கம் அதிகமாக இருந்தக் குழுக்கள் வெற்றிகரமாக இருந்தன என்பது நிரூபிக்கப்பட்டது. இதேபோல வாடிக்கையாளைரை தொட்டு உபசரிக்கும் உபசாரகர் அதிகம் ‘டிப்ஸ்’ பெறுகிறார், பொது இடங்களில் கருத்துக்கணிப்பு கேட்பவர்களும் வழிப்போக்கர்களை தொட்டுப் பேசும்போது அவர்கள் கருத்துக்கணிப்பில் பங்குபெறும் வாய்ப்பு அதிகமாகிறது என்பவை நிரூபிக்கப்பட்டுள்ளன.

மனித வளர்ச்சியில் தொடுதல் மிக முக்கியமானது என்பதற்கு ஒரு வரலாற்றுச் சோகத்தினை முன்வைத்து விளக்குகிறார் டேவிட். 1989ல் ருமேனியாவில் கம்யூனிச அதிகாரம் வீழத்தப்பட்டபோது ஒரு லட்சத்துக்கும் மேலான குழந்தைகள் காப்பகங்களில் இருந்தனர். அந்தக் காப்பகங்களில் தேவைக்கும் குறைவான அளவே தாதிகள் பணிபுரிந்தனர். பின்னர் இந்தக் குழந்தைகளை ஆராய்ந்தபோது அவர்கள் மூளை அளவில் சிறியதாக இருப்பதைக் கண்டு விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கான மூல காரணம் குழந்தைப்பருவத்தில் அவர்கள் தீண்டப்படாது தனிமையில் தொட்டிலிலும் கட்டிலிலும் கிடந்து வளர்ந்ததே என்கிறது அறிவியல். இசிடோர் ரக்கல் (Izidor Ruckel) இந்த வரலாற்று சோகத்தின் பிள்ளையும், சமூக செயல்பாட்டாளருமாவார். அதேபோல குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளை ‘வென்டிலேட்டர்களில்’ அல்லாமல் தாயின் திறந்த மார்புக்கு நெருக்கமாக வைக்கும் பழக்கம் தென்னமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அவற்றின் உயிர்பிழைக்கும் சாத்தியங்கள் அதிகமாயின. ‘கங்காரு கேர்’ (kangaroo care) என வழங்கப்படும் இம்முறை இன்று உலகமெங்கிலும் அமெரிக்கா உட்பட்ட வளர்ந்த நாடுகளிலும் பிரபலம். மனிதக்குழந்தைகளின் வளர்ச்சியில் அவற்றின் உடல் உள நலத்தில் அவர்களுக்கு சிறு வயதில் கிடைக்கும் பரிவான தீண்டல் மிக முக்கியமானது என்பதை திட்டவட்டமாக அறிவியல் நிறுவியுள்ளது.

தொடுதல் எத்தனை நுட்பமானது என்பதை ஒரு எளிய உதாரணத்துடன் விளக்குகிறார் டேவிட். நீங்கள் ஒரு எந்திரத்தில் காசை இடவேண்டும். உங்கள் கால்சட்டை பையில் துழாவி சரியான காசை கண்களால் காணாமலேயே தேர்ந்தெடுக்கிறீர்கள். பின்னர் அதை எந்திரத்தில் இடுகிறீர்கள் அது சரியாக உள்ளே சென்றுவிட்டது என்பதை உணர்கிறீர்கள். இந்த எளிய செயல்பாட்டை செய்துமுடிக்க தொடுதல் எத்தனை நுட்பமாக செயல்படவேண்டியுள்ளது! பையில் துழாவுகையில் அங்கிருக்கும் காகிதம் அல்லது நெகிழிப்பொருட்களிலிருந்து ஒரு உலோகப்பொருளை விரல் நுனிகள் கண்டடைகின்றன. வேறெந்த வட்ட உலொகப்பொருளுக்கும் காசுக்கும் உள்ள வித்தியாசத்தை அதன் மீதுள்ள மிகச் சிறிய, நுட்பமான மேடுபள்ளங்களைக் கொண்டு அறிகின்றன. பின்பு அதன் தடிமனையும் பரப்பளவையும் கொண்டு அது ஒரு ரூபாயா ஐந்து ரூபாயா அல்லது வேறா எனக் கணக்கிடஉதவுகிறன. பின்னர் சரியான அழுத்தத்தை அளித்து அதை விரல்களுக்கு நடுவே பிடிக்கிறன. அதை எடுத்து எந்திரத்தில் இடுகின்றன. அந்தக் காசு எந்திரத்தின் உள்ளே செல்லும் அதிர்வுகளை தொடுதல் மூலம் உணர்ந்துகொள்கிறோம். அது இடையில் மாட்டிக்கொண்டதா அல்லது சென்று சேர்ந்ததா என்பதையும்கூட உணர்ந்துகொள்ளமுடியும். இந்த ஒரு செயலை விவரிக்க மட்டுமே பல பக்கங்களை செலவிடுகிறார் டேவிட். நாம் கண்டுபிடித்துள்ள எந்த அதிநுட்ப எந்திரத்தையும்விட நம்மால் எளிதாக இதைச் செய்யமுடியும் என்பதை அவர் பதிவு செய்கிறார். இந்த சாதாரண செயலை செய்துமுடிக்க நம் தோலில் உள்ள வெவ்வேறு நரம்பு அமைப்புகள் நுட்பமான தகவல்களை நம் மூளைக்கு தந்துகொண்டும் மூளையிலிருந்து கட்டளைகளைப் பெற்று செயல்பட்டும், பிற உறுப்புகளை செயல்படுத்தியும் கொண்டிருக்கவேண்டியுள்ளது.

உதாரணமாய் ஒரு பொருளை கைகளில் பிடிக்க எவ்வளவு அழுத்தத்தைத் தரவேண்டும் என்பதை நம் மூளை எப்படி உணர்ந்துகொள்கிறது எனப்பார்க்கலாம். ஒரு பொருளை நாம் பிடிக்கும்போது அதற்கு சரியான அழுத்தம் கிடைக்கும்வரை. அது நம் கைகளிலிருந்து நழுவிக்கொண்டேயிருக்கிறது. இது நாம் சாதாரணமாக அனுபவப்படும் வெளிப்படையான நழுவல் அல்ல. மாறாக மைக்ரோ நழுவல்(Micro Slip) மிகமிகச் சிறிய அளவிலேயே இந்த நழுவல் ஏற்படுகிறது. அதை நாம் அறியமுடிவதில்லை. ஆனால் நம் மூளை அறிகிறது. நம் நரம்புகள் மிக நுட்பமாக இந்த மைக்ரோ நழுவலை அளவிட்டு மூளைக்குச் சொல்கின்றன. அந்த மைக்ரோ நழுவல் நிற்கும்வரை அழுத்தம்தரச்செய்கிறது நம் மூளை. மிகத் தன்னிச்சையாக நம் மூளை செயல்படும் தருணங்களில் இதுவும் ஒன்று. எனவேதான் நம்மால் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குத் தேவையான அழுத்தத்தை மட்டுமே தந்து பற்றிக்கொள்ள முடிகிறது.

உங்கள் கைகளை கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும்படி நீங்கள் உயர்த்தும்போதோ அல்லது பின்னால் கட்டும்போதோ அது எங்கே இருக்கிறது என்பதை மூளை எப்படி தெரிந்துகொள்கிறது? உதாரணமாக ஒரு நபந்தை மேலே தூக்கிப் போடுகிறீர்கள் பந்து கீழே வரும்போது கைகளை கண்களால் காணாமலேயே உங்களால் அதை பிடிக்க முடியும். கண்ணுக்குத் தெரியாத உறுப்புகள் எங்கே இருக்கின்றன என்பதை தோல் இழுபடும் உணர்வைக் கொண்டே மூளை அறிந்துகொள்கிறது. நாம் அதை ஒரு தனித்த உணர்வாக உணர்வதில்லை ஆனால் நம் மூளை உணர்கிறது. துல்லியமாக கணக்கிடுகிறது. பழகப் பழக அது மேலும் துல்லியமடைகிறது. கிரிக்கெட்டில் ‘Blinders’ எனப்படும் பார்க்காமலேயே பந்து பிடிக்கப்படும் அபூர்வக் காட்சியை நாம் கண்டு வியப்போடுகூட இந்த அறிவியல் உண்மை மீதான வியப்பும் இனி சேர்ந்து கொள்ளும்.

தொடுதலின் முக்கியத்துவத்தை பார்வையற்றவர்களே அதிகம் உணர்ந்திருப்பர். பார்வையற்றவர்கள் தொடுதலின் மூலமே தங்களின் முழு வாழ்வையும் வாழ முடியும். பிரெயில் மூலம் அவர்களால் படிக்கவும் எழுதவும் முடியும். நாம் மேற்கண்ட மிக நுட்பமான தொடுதல் பிரெயில் அறிதலுக்குத் தேவை என்கிறார் டேவிட். விரல்களில் இருக்கும் முடியற்ற தோல் (glabrous skin) கொண்டு மட்டுமே நம்மால் நுட்பமான மேடு பள்ளங்களை அறிய முடியும். அதனால் உதடுகளையும் விரல்களையும் தவிர்த்த வேறெந்த உறுப்புக்களையும் கொண்டு பிரெயிலை படிப்பது கடினம்.
தொடு உணர்வின் பயனையும் நுட்பத்தையும் நிறுவும் இன்னொரு முக்கியமான தகவலையும் டேவிட் தருகிறார். வயதான மனிதர்கள் தரையில் நிற்கத் தடுமாறுவதற்கு அவர்களின் கால்களில் தொடு உணர்வு குறைவதே காரணம் என்கின்றன ஆய்வுகள். நம் உடலில் இருவகை தோல்கள் உள்ளன. முடியுள்ளவை முடியற்றவை (glabrous). இவற்றில் முடியற்ற தோல் நுட்பமான தொடுதல் எங்கெங்கு தேவையோ அங்கே அமைந்திருக்கின்றன. நமது உள்ளங்கைகள், உதடுகள், ஆண் பெண்ணுறுப்புகளின் சில பகுதிகள் மற்றும் பாதங்களில் இவை உள்ளன. நுட்பமான தொடு உணர்வை உணரும் தோல்களை பாதங்களில் கொண்டதால்தான் மனிதன் எழுந்து நிற்க ஆரம்பித்தான். அதற்குப்பின் நிகழ்ந்தது வரலாறு.

தொடு உணர்வின் மற்றொரு பயன் வலியை உணர்வது, ஆம் வலியை உணர்வது ஒரு பயன் அல்லது வரம் என்றே டேவிட் நிரூபிக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு பாக்கிஸ்தானின் குரேஷி இனக்குழு ஒன்றைச் சார்ந்த ஒரு 14வயது சிறுவன் தன் பிறந்த நாளில் அனைவரையும் குஷிப்படுத்தவேண்டி தன் வீட்டு மாடியிலிருந்து குதித்தான். அவனுக்கு அது ஒரு பொருட்டல்ல. அவனது தொழில் தனது கைகளில் கத்தியை நுழைத்து வித்தை காண்பிப்பதாகும். கீழே குதித்தவன் எந்த பிரச்சனையும் இன்றி எழுந்து நடந்தான். இரண்டு நாட்களில் மரணித்தான். என்ன ஆனது? அவனுக்கு ஒரு மரபணு குறைபாடு இருந்தது. அவன் மூளைக்கு வலியுணர்வை கொண்டு செல்லும் ‘சோடியம் கடத்திகள்’ அவன் உடலில் இல்லாமல் இருந்தன. (நம் உடல் வேதியல் தொடர்செயல்பாட்டின் வழியேதான் மின்னணுத்தகவல்களை கடத்துகிறது என்பது இன்னொரு விந்தையான அறிவியல் உண்மை.) அவன் உடல்வலியை உணர்வதேயில்லை. பின்னர் அப்பகுதியில் ஆய்வு செய்த கேம்ப்ரிட்ஜ் விஞ்ஞானிகள் அந்த இனக்குழுவில் பலருக்கும் வலி உணரும் தன்மை இல்லாததை அறிந்தனர். அவர்கள் இனக்குழுக்களுக்குளேயே திருமணம் செய்யும் பழக்கமுடையவர்களாயும் இருந்தனர். இதுவும் இந்தப் மரபணு குறைக்கு பரவலாய் இருப்பதற்குக் காரணம். வலியை உணராதவர்கள் அதிக நாட்கள் வாழ்வதில்லை. அவர்களின் சராசரி வயது 13 அல்லது 14தான். அவர்களின் உடல் இரத்தப்போக்கையும் எலும்புமுறிவுகளையும் ஏற்படுத்தும் அபாயங்களுக்கு எதிரான பாதுகாப்புணர்வை பழகமுடியாமல் மீண்டும் மீண்டும் ஆபத்தில் விழுந்துகொண்டிருக்கச் செய்கிறது. அவர்கள் நாக்குகளை அடிக்கடி கடித்துக்கொள்கிறார்கள். ஏனென்றால் எதோச்சையாக நாக்கை கடிக்காமல் இருக்க மனித உடல் இளமையில் பழகவேண்டியுள்ளது. அது வலியைக் கொண்டே இந்த பழக்கத்தை மிக தன்னிச்சையாக உருவாக்கிக்கொள்கிறது. இவர்கள் மிக மோசமான காயங்களையும் உணராதவாறே இருந்துவிடுகின்றனர். உடல்வலி என்றால் என்ன என்பதை அவர்களால் சொல்ல முடிவதில்லை. ஆனால் அவர்களால் ஒரு உளவலியை புரிந்துகொள்ள முடியும். உளவலியை உணரவும் முடியும். சூட்டையும் குளிரையும் பிற தொடுதல்களையும் உணர முடியும் ஆனால் வலியை மட்டும் உணர முடியாது. பாக்கிஸ்தானின் ஒரு இனக்குழுவுக்குள் மட்டுமல்ல இந்தக் குறைபாடு உலகில் எவருக்கு வேண்டுமானாலும் தோன்றலாம்.

இதற்கு நேர்எதிராக ஒரு நிலை ஒரு சின்ன செயலும் மாபெரும் வலியை உருவாக்கும் கொடுமை அது. இந்தக் குறைபாடுள்ளவர்கள் குழந்தைகளாய் இருக்கையில் முதன்முதலில் மலம் கழிக்கையில் இந்தப் பெருவலியை உணர்கிறார்கள். பிறர் சாதாரணமாக உணரும் வலியோ அழுத்தமோ இவர்களுக்குப் பன்மடங்கு பெரிதாகி தாங்கமுடியாத வேதனையை அளிக்கிறது. மலம் கழிக்கும் அன்றாட நிகழ்வு மகப்பேறு போன்ற கடும் வலியைத் தரும் அனுபவமானால் எத்தனை துன்பகரமான வாழ்கையாக அது அமையும். இந்தக் குறைபாட்டுக்கு இப்போது மருந்து உள்ளது என்றாலும் இதை அனுபவித்தவர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளுக்கும் இந்தக் குறை வருமென்றால் தான் பிள்ளையே பெறப்போவதில்லை என முடிவெடுக்கிறார்கள்.
உடல் அரிப்பை உணர்வதுவும் வலியை உணர்வதுவும் ஒரே நரம்பமைப்புதான். அரிப்பு ஏற்படும்போது நாம் தோலை சொறிந்து அரிப்பை ஏற்படுத்தும் பொருளை தோலிலிருந்து அகற்றுகிறோம். இது குறிப்பாக வெளியிலிருந்து உடலில் ஒட்டிக்கொள்ளும் தூசி போன்ற அழுக்குகளையும், உடல்மீது கண்ணுக்குத் தெரிந்தோ தெரியாமலோ ஒட்டியிருக்கும் ஒட்டுண்ணிகளை அகற்ற்வும் பயன்படுகிறது. ஆனால் விலங்குகள் மந்த்தியில் சொறிதல் ஒரு சமூகப் பழக்கமாக இருந்து வருகிறதை ஆராய்ந்தறிந்துள்ளனர். அதாவது ஒரு குரங்கு சொறிய ஆரம்பித்ததும் இன்னொன்று ஆரம்பிக்கிறது. பின்னர் சுற்றியுள்ள எல்லா குரங்குகளும் சொரிகின்றன. இதற்குக் காரணம் வழக்கமாக அரிப்பை ஏற்படுத்தும் சூழலில் இருந்து பழக்கப்பட்ட விலங்குகள் ஒன்று சொறிய ஆரம்பித்தவுடன் தன்மீதும் ஏதோ தொற்றுப்பொருள் விழுந்துவிடும் எனும் எச்சரிக்கையுணர்வை அடைகிறது. ஆகவே தானும் சொறிய ஆரம்பிக்கிறது. சொறிதலை அறிய சில ஆய்வுகளை செய்துள்ளனர். அரிப்பை உருவாக்கும் பொருட்களை கண்ணால் பார்க்கும்போதே, அதுவும் அவற்றின் புகைப்படங்களை பார்க்கும்போதேகூட மனித உடலில் அரிப்பு தோன்ற ஆரம்பிக்கிறது என்கிறது ஒரு ஆய்வு. அரிப்பை பற்றி பேசினாலும்கூட மனிதர்கள் சொறிய ஆரம்பித்துவிடுகிறார்கள் என்கிறது இன்னொரு ஆய்வு. இதை படிக்கும்போது உங்களுக்கு அரிப்பு ஏற்பட்டிருக்கும் வாய்ப்பு அதிகம்.

வலிக்கும் உள்ளத்திற்கும் தொடர்புள்ளைதை பல்வேறு ஆய்வுகள் நிறுவியுள்ளன. மென்மையான குணமுடையவர்கள் உடல்வலியை பிறரை விட அதிகமாய் உணர்கிறார்கள். இதை நம் அனுபவங்களில் நாம் கண்டிருப்போம். அதேபோல தொடர்ந்து உடல்வலியில் அவதியுறுபவர்கள் மனம் மென்மையானதாகிறது, அவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாகிறார்கள் என்பதையும் ஆய்வுகள் நிறுவியுள்ளன. இவை வெறும் பழக்கவழக்கங்களால் ஏற்படும் மாற்றங்கள் அல்ல மாறாக மூளையில் ஏற்படும் தொடர் மாற்றங்களால் நரம்புகள் நிரந்தரமாக வேறு வகைகளில் செயல்பட ஆரம்பிப்பதால் உருவாகுபவை. போர்வீரர்கள் போர்க் களத்தில் வலியை அதிகம் உணர்வதில்லை என்பதையும் உளவியலுக்கும் உடல்வலிக்குமான தொடர்பாக முன்வைக்கிறார் டேவிட். அதே போர்வீரன் சிகிச்சை பெறும் வேளையில் சிறிய வலிக்கும் பெரிதாக நொந்துகொள்வதை பதிவு செய்திருக்கிறார்கள். நம்மால் சோகத்தில் இருப்பவரையோ, கோபத்தில் இருப்பவரையோ கிச்சு கிச்சு மூட்ட முடிவதில்லை. அதேபோல மனப்பிணக்கு கொண்ட தம்பதியர் அல்லது காதலர்களின் தொடுகை வேறாகவும் அதுவே காதல் தொடுகை முற்றிலும் வேறாகவும் உணரப்படுகிறது. மனநிலைக்கும் தொடுதலுக்கும் உள்ள தொடர்பை இவை நிறுவுகின்றன.

நம் உள்ள ஓட்டம் தொடு உணர்வை நிர்ணயிப்பதைப்போல நாம் எதைத் தொடுகிறோம் என்பது நம் மனநிலையை நிர்ணயிக்க முடியுமா? ஒரு ஆய்வில் எளிதில் நம்பமுடியாத விளைவுகளை பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு அலுவலகத்துக்கு நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் சிலரிடம் சூடான காபி கோப்பையையும் பிறரிடம் குளிர் காபி கோப்பையையும் சற்று நேரம் வைத்துக்கொள்ளச் சொல்கிறார்கள். தற்செயலாக நடந்ததைப்போல் இது செய்யப்படுகிறது. பின்னர் அவர்களின் ஆளுமையில் ஏற்படும் மாற்றத்தை பதிவு செய்ததில் சூடான கோப்பையை பிடித்தவர்களிடம் அது நேர்மறையான விளைவுகளை உருவாக்கியது. பிறரை அவர்கள் நல்லவர்களாகவும் இதமான ஆளுமையுடையவர்களாயும் உணர்ந்தனர். குளிர்ந்த கோப்பையை பிடித்தவர்களோ பிறரை கடினமானவர்களாக உணர்ந்தனர். நாம் எதைத் தொடுகிறோம் என்பதைக்கொண்டு நம் மனநிலை மாறும் என்பது நம்பமுடியாத அதே வேளையில் மிக முக்கியமான தகவலாய் உள்ளது. இதைப்போலவே நேர்முகத் தேர்வுகளில் கடினமான அட்டைகள் மீது தங்களது சுய அறிமுகத்தை (Bio-data) தருபவர்கள் திடமான ஆளுமை உடையவர்களாகவும் பிறர் மென்மையானவர்களாகவும் உணரப்படுகிறார்கள்.

பார்வையில் மாயத் தோற்றங்கள் (illusion) இருப்பதைப்போலவே தொடுதலிலும் மாய உணர்வுகளை உணர முடியும். கியூட்டேனியஸ் ராபிட் (cutaneous rabbit illusion) எனும் சிறிய ஆய்வை இணையத்தில் தேடி நீங்களே செய்துணர முடியும். குளிர்ந்த பொருட்கள் கனமானவையாகத் தோன்றுவதும் மாயத் தோற்றமே. புலன்கள் தறுமாறாக செயல்படுகையில் புலனனுபவங்களை மூளை உணர்ந்துகொண்டேயிருக்கும் நிலை உருவாகிறது. உதாரணமாக இல்லாத ஒலியை உங்கள் காதுகள் கேட்கின்றன. இல்லாத காட்சிகள் தோன்றுகின்றன. அதேபோலவே தொடுகையும் நிகழ்கிறது. தற்போது ஒரு புது மாய உணர்வை அறிவியல் பதிவு செய்துள்ளது. பலருக்கும் தன்னிடம் செல்போன் இல்லாதபோதும் செல்ஃபோன்கள் அதிரும் உணர்வு ஏற்படுவது ஒரு நவீன மாய உணர்வு.

டேவிட் தன் அனுபவத்திலிருந்து ஒரு சுவாரஸ்யமான நிகழ்வை பதிவு செய்கிறார். அவரது இரட்டைப் பிள்ளைகள் குளியலறை கதவை ஒருவர்மீது ஒருவர் தள்ளி விளையாடுவது வழக்கம். இருவரில் ஒருவர் அழுது புலம்பும்வரை அந்த விளையாட்டு தொடரும். அதன் முடிவில் நடக்கும் விசாரணையில் ஒருவர் இன்னொருவரை குற்றம் சாட்டுவர். ‘நான் மெதுவா தள்ளினா அவந்தான் வேகமா தள்ளினான்’ ‘இல்ல அவந்தான்’ என்று இருவரும் மாறி மாறி சொல்லிக்கொள்கிறார்கள். பின்னாளில் டேவிட் லின்டன் ஒரு சுவாரஸ்யமான ஆராய்ச்சியை கண்டடைகிறார் அதில் அவரின் குழந்தைகளின் விளையாட்டின் விபரீத முடிவுக்கு விளக்கம் கிடைக்கிறது. ஒருவர் தான் கதவைத் தள்ளும்போது அது மெதுவானத்தள்ளல் என உடல்ரீதியாக உணர்கிறார். ஆனால் அடுத்தவர் அதே விசையுடன் கதைவத் தன்மீது தள்ளினால் அதை அதிக அழுத்தமுடையதாக உணர்ந்துகொள்கிறார். ‘தனக்கென்றால் இரத்தம் அடுத்தவனுக்குண்ணா தக்காளி சட்டினியா’ எனும் பிரபல வசனத்துக்கு ஒரு அறிவியல், அதுவும் உடல் உணர்தல்போன்ற ஒரு தெளிவாக அளவிடக்கூடிய அறிவியல் விளக்கம் இருக்கும் என்பது வியக்கத்தக்கது. உண்மையில் மனித வரலாற்றின் பல நிகழ்வுகளையும் இந்தக் கொள்கை கொண்டு விளக்க முடியலாம். நாம் இயல்பாகவே, உடல்ரீதியாகவே நம்மையும் நம் சுற்றத்தையும் பற்றிய கவலைகளைக் கொண்ட பிராணிகள். எல்லா உயிர்களுமே அப்படித்தான். அதே நேரத்தில் அடுத்தவர்கள் நமக்குச் செய்யும் தீமைகளை அவற்றின் நியாயமான அளவைவிட அதிகமாக அளக்கிறோம் என்பதுவும் அறிவியல் உண்மை.

நம் உடல் நரம்புகள் எப்படி சரியான வகையில் தொடுக்கப்பட்டிருக்கின்றன, எப்படி சரியான வகையில் அவை நம் மூளையைச் சென்றடைகின்றன என்பவை நம் உடல்திறனை மடுமல்ல நம் ஆளுமையையையும் பழக்கவழக்கங்களையும் நிர்ணயிக்கக்கூடிய விஷயங்கள். வயலின் இசைப்பவர்களுக்கு விரல்களில் தொடுவுணர்வு நுட்பமாக இருக்கிறதை ஆராய்ந்தறிந்துள்ளனர். அதே நேரம் நுட்பமான தொடுகை உள்ளவர்களாலேயே வயலின் இசைப்பதில் வல்லுனர்களாக முடியும் எனும் கூற்றையும் மறுக்க முடியாது என்கிறார் டேவிட். காம உணர்வுகளில் பலருக்கும் பல்வேறு விருப்பு வெறுப்புக்கள் இருப்பது முக்கியமாக நரம்பு இணைப்புகளில் இருக்கும் வித்தியாசத்தால்தான். ஒவ்வொருவருக்கும் சில குறிப்பிட்ட இடங்களில் தொடுவது காம இன்பத்தை தருகின்றது. காம உணர்வை கடத்தும் நரம்புகள் சீராக அமையாத ஒரு பெண்ணின் கதையை டேவிட் குறிப்பிடுகிறார். அப்பெண்ண்க்கு தொடர்ந்து காம உணர்வு தோன்றிக்கொண்டே இருக்கிறது. அவள் அதை தணித்துக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. ஒரு நாளைக்கு ஐம்பது முறைகூட அவள் இதை செய்திருக்கிறாள். மிகக் கொடுமையான அனுபவமாக இது மாறிவிடுகிறது, அவளது உடலில் யாரோ இருந்து அவளைத் தூண்டிக்கொண்டேயிருப்பதைப்போல. மனம் உடைந்து இறுதியில் தற்கொலை செய்துகொண்டாள் அவள்.

காமத்தில் ஈடுபடும்போது உச்சத்தை அடையும் நிலையில் மூளை அறவுணர்வுகளை அறியும் பகுதிகளையும், சுயமாக முடிவெடுக்கும் திறனை அளிக்கும் பகுதிகளையும் செயலிழக்கச் செய்துவிடுகிறது என்பது இன்னொரு அதிர்ச்சியூட்டும் தகவல். காமம் ஒருவழிப்பாதை அதில் செல்லும் முன்பே சரியான முடிவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

அரிஸ்டாட்டில் டி அனிமாவில் தன் தர்க்கத்தின் மீதான அபார நம்பிக்கையில் ஒரு கருதுகோளை முன்வைக்கிறார். மெல்லிய தோல் உடையவர்கள் சிந்தனையாளர்களாகவும், கலைஞர்களாகவும் இருக்கின்றனர் தடித்த தோல் உடையவர்கள் உடலுழைப்பை மட்டுமே செய்யத் தகுதியானவர்கள் என்பதே அந்தக் கருதுகோள். இந்த தர்கத்தின் வழியாகவே அவர் தொடுதலுக்கும் அறிவுக்குமான தொடர்பு குறித்த வாதத்தை வலுப்படுத்துகிறார். அரிஸ்டாட்டிலின் காலத்தில் அடிமை முறை இருந்தது. அதன் அடிப்படையிலேயே அவர் இந்த தர்கத்திற்கு வந்தடைந்திருக்க முடியும். ஆப்ரிக்க நாடுகளையும் பிற கலாச்சாரங்களையும் 17ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய அறிவியக்கத்தின் விளைவாக சென்றடைந்த ஐரோப்பியர்கள் அங்கிருந்த பழங்குடிகளின் கலைகளை நம்பமுடியாமல் வியந்தனர். அது அவர்களின் தர்கங்களை, அவற்றின் மீதெழுந்த நம்பிக்கைகளை உடைத்தெறிந்தது. கலைகள் இந்தக் காட்டுமிராண்டிகளிடம் எப்படி இத்தனை உன்னதமான கலை எழுந்திருக்க முடியும் என க் குழம்பினர். இன்று 2500 வருடங்களுக்குப் பின் அரிஸ்டாட்டிலும் அவரது வழித்தோன்றல்களும் அறிவியலின் பிழையற்ற தர்கத்தினால் வெல்லப்படுள்ளனர். நவீன அறிவியல் அரிஸ்டாட்டிலின் இரு நம்பிக்கைகளை தகர்த்தெறிந்தது. விலங்குகளில் மனிதனுக்கே தொடுவுணர்வு வீரியமானது , அதுவே அவனை அறிவுடையவனாக்கியது என அவர் நம்பினார். அதேபோல தோலின் தன்மைக்கும் அறிவுக்கும் நேரடியான தொடர்பில்லை என்பதையும் நவீன அறிவியல் நிருபித்துள்ளது. உலகெங்கும் இருந்த, இருக்கின்ற அடிமை முறைகளும் தீண்டாமையும் இத்தகைய தத்துவ தர்க்கங்களாலேயே நிலைத்து நின்றன. இன்றும் இவை செல்லுபடியாகின்றன என்பதே உண்மை. அறிவியலின் மேல் கட்டியெழுப்பப்படும் அறக்கோட்பாடுகளைக் கொண்டே இவற்றை தகர்க்க முடியும் என்பதே நவீன யதார்த்தம்.

இத்தகைய அறிவியல் புத்தகங்களை படிக்கையில் நமக்கு இயல்பாகத் தோன்றும் எண்ணம் ‘மனிதன் வெறும் எந்திரம்தானா?’ என்பதே. மின்கடத்திகளும் சில தர்க்கச் செயலிகளும், மொழித்திறனும் கொண்ட ஒரு எந்திரமா மனிதன்? அவன் இயற்கையின் அடிமையா? மீண்டும் மீண்டும் தன் புத்தகத்தின் ஒவ்வொரு அதிகாரத்திலும் டேவிட் இந்தக் கேள்விக்கு விடை சொல்லிக்கொண்டே வருகிறார். மனிதனின் உடல் இயல்புகள் ஒரு எந்திரத்தின் செயல்பாட்டோடு ஒப்பிடப்படக்கூடியவை. ஆனால் மனிதனின் அனுபவங்கள், அறிதல்கள் அவ்வுடலியல்புகளை செயல்படுத்தவும் கட்டுப்படுத்தவும் மேம்படுத்தவும் உதவுகின்றன. உடல்ரீதியான அனுபவங்கள் மட்டுமன்றி உள அனுபவங்களும் நம் உடலை கட்டுப்படுத்துகின்றன. சமூகக் கட்டுப்பாடுகள் நம் தொடுதலையும், தொடுதல் மூலம் நாம் பெறும் அனுபவங்களையும் கட்டுப்படுத்துகின்றன. மனிதன் உடலை மீறிச் செல்ல முடியும். எத்தனை தூரம் ஒரு மனிதன் தன் உடலை தன் மனதின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறானோ அவ்வளவு தூரம் அவனை பண்பட்டவன் என நாம் உணர்கிறோம். கீழை மரபுகளில் உடலை வெல்வதே பெரும் ஞானத்தின் வழியாகக் காணப்படுவதையும் குறிப்பிடவேண்டும்.

தொடுதல் குறித்த பல்வேறு சமூகத் தகவல்களையும் அறிவியல் உண்மைகளையும் சுவாரஸ்யமாகவும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் டேவிட் லின்டனின் புத்தகம் முன்வைக்கிறது. பொதுமக்களுக்கான அறிவியல் புத்தகங்களில் முக்கியமானவற்றுள் ஒன்றாக இந்த புத்தகத்தை பரிந்துரைக்க முடியும். தொடுதல் மனிதனுக்கு மிக அடிப்படையானதும் முக்கியமானதுமான உணர்வு. அதே நேரத்தில் அது மிகக்குழப்பமான, நுட்பமான அமைப்புகளால் ஆனது.

உடலும் உள்ளமும் ஊடும் பாவுமாகப் பிணைந்து நெய்யும் ஒரு மெல்லிய பட்டினைக் கொண்டு மனிதன் எத்தனை பெரிய பொன்னுலகை படைத்திருக்கிறான் இல்லையா? இல்லை என்போரும் உண்டே!
தீண்டுமை

சுமார் 2500 வருடங்களுக்கு மெய்யியலில் ஒரு முக்கியமான கேள்வி எழுந்தது. ‘உணர்வுகளில் பிரதானமானது எது?’ பிளேட்டோவின் பக்கம் சிலரும் அரிஸ்டாட்டிலின் பக்கம் சிலருமாய் இந்த விவாதம் தொடர்ந்தது. இன்றும் மெய்யியலில் விவாதிக்கப்படும் ஒரு விஷயமாய் இது இருக்கிறது. பிளேட்டோ பார்வைத் திறனே முதன்மையானது என்றார். மெய்யியலின் வரலாற்றில் அதுவே வெற்றி பெற்ற தரப்பாகும். ஆனால் அரிஸ்டாட்டில் தொடுவுணர்வையே முதன்மையானது என்றார். தொடு உணர்வு உயிர்களுக்கெல்லாம் பொதுவானது, அடிப்படையானது என்றாலும் மனிதனில் அது மிக நுட்பமானதாக செயல்படுவதாலேயே மனிதன் சிந்தனைத் திறனுடையவனாயிருக்கிறான் என்பது அவரது வாதமாய் இருந்தது. அரிஸ்டாட்டிலின் முதன்மையான மெய்யியல் படைப்பு என கருதப்படும் டி அனிமா (De Anima) – ஆன்மாவின் தன்மை – இது குறித்து விவரிக்கிறது. இன்றைக்கு மெய்யியலின் இடத்தை அறிவியல் மெல்ல மெல்ல ஆக்கிரமித்து வருகிறது. ‘அரியணை தத்துவவாதிகள் இறந்துவிட்டார்கள்’ என ஸ்டிபன் ஹாக்கிங் பிரகடனப்படுத்தினார். இன்றைக்கு அந்த 2500 வருடக் கேள்விக்கு விடை தேடுபவர்கள் அறிவியலின் துணையையே நாடவேண்டியிருக்கும். அவ்வகையில் தொடுதல் குறித்து பொதுவான வாசகர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கும் ஒரு அறிவியல் புத்தகம் டேவிட் லின்டனின்(David Linden) ‘Touch: The Science of Hand, Heart, and Mind’.

நமது உடல் எப்போதும் எதையேனும் தொட்டுக்கொண்டே இருக்கிறது, ஆடைகளை, தரையை, குறைந்தபட்சம் காற்றை. நம் கண்களை மூடிக்கொள்ள முடியும், அதேபோல எப்போதும் நம் உடல் தட்பவெட்பத்தை, குளிரை, சூட்டை உணர்ந்துகொண்டேயிருக்கிறது. காதுகளையும் மூக்கையும் அடைத்துக்கொள்ளலாம். தொடு உணர்வை நாம் விரும்பியபடி செயலிழக்கச் செய்யமுடியாது. நாம் பிறந்ததிலிருந்து முழுமையாக செயல்பாட்டில் இருக்கும் ஒரு புலனறிவு தொடுவுணர்வாகும். நம் உடலின் மிகப்பெரிய தனி உறுப்பு தோல் எனவே நம் மூளை அதிகம் உணரும் புலன் தொடு உணர்வு. நம் மூளை முதலில் உணரும் புலனும் தொடுதலே. மனிதக் குழந்தை 1.4 சென்டிமீட்டர் நீளம் இருக்கையிலேயே மூளை தொடுதலை உணர ஆரம்பிக்கிறது. நமது மொழியில் ‘உணர்தல்’ என்பது இரு அர்த்தங்களைத் தருகிறது. ஒன்று உடல்வழியே உணர்வது இன்னொன்று உளஉணர்வு. ஆங்கிலத்திலும் ‘ஃபீலிங்;’ என்பதுவும் இரு அர்த்தங்களைக் கொண்டது. புரோட்டோ இந்தோ ஐரோப்பிய மொழிகளில் மட்டுமன்றி பிற மொழிகளிலும் இந்தப் பயன்பாடு உள்ளது. ‘உணர்வுகள் மரத்துப் போனது’ அல்லது ‘கடினமான’ ‘மென்மையான’ உணர்வுகள் என நாம் தொடு உணர்வுக்கும் உள உணர்வுக்கும் பொதுவான வார்த்தைகளையே பயன்படுத்துகிற அளவுக்கு தொடுதலும் உள்ள உணர்வுகளும் பிணைந்துள்ளன. நாம் மிக சாதாரணமானதாகவும் இயல்பானதாகவும் கருதும் ஒரு எளிய உணர்வின் பின்னால் இருக்கும் அறிவியலை, உளவியலை அது செயல்படும், நம்மை செயல்படுத்தும் விதங்களை மிட்டாய்கடைக்குள் புகுந்துவிட்ட குழந்தையின் உற்சாகத்துடனும் எளிமையுடனும் டேவிட் லின்டனின்புத்தகம் சொல்கிறது.

தொடு உணர்வு ஒரு சமூகச் செயல்பாடு என்கிறார் டேவிட். குரங்குகள் மத்தியில் ‘பேன் பார்க்கும்’ (Grooming) வழக்கம் இருக்கிறது என நமக்குத் தெரியும். ஒட்டுண்ணிகளை ஒன்று மற்றொன்றின் மீதிருந்து எடுத்து சுத்தப்படுத்தும் ஒரு சமூகப் பழக்கம் அது. இந்தப் பழக்கம் பயன்மதிப்பு மிக்கது மட்டுமல்ல. அது அவ்விலங்குகளுக்கிடையே இருக்கும் உறவினை நிர்ணயிப்பதும்கூட. ஒரு விலங்கு கூட்டத்தின் அதிகார அடுக்கையும், நெருக்கத்தையும் அது தீர்மானிக்கிறது. தனக்குப் பேன் பார்க்கும் நெருக்கமான குரங்கின் எச்சரிக்கை குரலை அதன் கூட்டாளி அதிகம் நம்புகிறது. ஆண் குரங்குகளுக்கு மத்தியில் அதிகாரத்துக்கான சண்டைகள் ஏற்படுவதுண்டு. அந்தச் சண்டையில் தோற்கும் ஆண் குரங்கிற்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அது ஓடிப்போய்விடலாம். அல்லது அந்தக் கூட்டத்தில், குடும்பத்தில் தொடர்ந்து இருக்க வேண்டுமென்றால் வெற்றி பெற்ற ஆணின் குறியை தொட்டு தன் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்.

வாம்பயர் வவ்வால்களின் தொண்டை மிகச் சிறியது. அவற்றால் திட உணர்வுகளை உண்ண முடிவதில்லை. அவற்றின் ஒரே உணவு விலங்குகளின் இரத்தம். மனித கற்பனையை ஆழமாக ஈர்த்து பல்வேறு திகில் கதைகளுக்கும் ஆதாரமான இரத்தம் குடிக்கும் ஒரே வவ்வால் வகை இவைகளே. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இரத்தம் குடிக்காமல் போனால் அவை உடல் நலிந்து இறந்துபோகும். இவையும் ‘பேன் பார்த்தல்’ போன்ற பழக்கமுடையவை. ஒரு வவ்வாலுக்கு இரண்டு நாட்களில் உணவு கிடைக்கவில்லையென்றால் அது தன் பேன் பார்க்கும் கூட்டாளியை இரைஞ்சுகிறது. தன் கூட்டாளிக்கு தான் உண்ட இரத்தத்திலிருந்து கொஞ்சத்தை அது வாய்வழியே ஊட்டி விடுகிறது. தொடுதல் மூலம் விலங்குகள் நெருக்கமான உறவுகளையும், சமூக கட்டமைப்புகளையும் உருவாக்கிக்கொள்கின்றன.

மனிதர்களிடையேயும் தீண்டுதல் உறவுகளை பலப்படுத்த பயன்படுகிறது. அதை உறுதி செய்ய ஒரு சுவரஸ்யமான ஆய்வு நடத்தப்பட்டது. அமெரிக்க தேசிய கூடைப்பந்து போட்டிகளை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். ஒவ்வொருமுறை இலக்கை அடைந்ததும் அந்த விளையாட்டுக் குழு கொண்டாடும் விதங்களை 12வகையான தொடுதல்களாக வகைப்படுத்தினர். பின்னர் அவற்றை கணக்கிட்டனர். ஒரு போட்டிக்காலம் முழுவதும் இவ்வாறு அந்தக் குழுவின் கொண்டாட்டங்கள் கணக்கிடப்பட்டன. ஆய்வின் முடிவில் உடல் நெருக்கம் அதிகமாக இருந்தக் குழுக்கள் வெற்றிகரமாக இருந்தன என்பது நிரூபிக்கப்பட்டது. இதேபோல வாடிக்கையாளைரை தொட்டு உபசரிக்கும் உபசாரகர் அதிகம் ‘டிப்ஸ்’ பெறுகிறார், பொது இடங்களில் கருத்துக்கணிப்பு கேட்பவர்களும் வழிப்போக்கர்களை தொட்டுப் பேசும்போது அவர்கள் கருத்துக்கணிப்பில் பங்குபெறும் வாய்ப்பு அதிகமாகிறது என்பவை நிரூபிக்கப்பட்டுள்ளன.

மனித வளர்ச்சியில் தொடுதல் மிக முக்கியமானது என்பதற்கு ஒரு வரலாற்றுச் சோகத்தினை முன்வைத்து விளக்குகிறார் டேவிட். 1989ல் ருமேனியாவில் கம்யூனிச அதிகாரம் வீழத்தப்பட்டபோது ஒரு லட்சத்துக்கும் மேலான குழந்தைகள் காப்பகங்களில் இருந்தனர். அந்தக் காப்பகங்களில் தேவைக்கும் குறைவான அளவே தாதிகள் பணிபுரிந்தனர். பின்னர் இந்தக் குழந்தைகளை ஆராய்ந்தபோது அவர்கள் மூளை அளவில் சிறியதாக இருப்பதைக் கண்டு விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கான மூல காரணம் குழந்தைப்பருவத்தில் அவர்கள் தீண்டப்படாது தனிமையில் தொட்டிலிலும் கட்டிலிலும் கிடந்து வளர்ந்ததே என்கிறது அறிவியல். இசிடோர் ரக்கல் (Izidor Ruckel) இந்த வரலாற்று சோகத்தின் பிள்ளையும், சமூக செயல்பாட்டாளருமாவார். அதேபோல குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளை ‘வென்டிலேட்டர்களில்’ அல்லாமல் தாயின் திறந்த மார்புக்கு நெருக்கமாக வைக்கும் பழக்கம் தென்னமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அவற்றின் உயிர்பிழைக்கும் சாத்தியங்கள் அதிகமாயின. ‘கங்காரு கேர்’ (kangaroo care) என வழங்கப்படும் இம்முறை இன்று உலகமெங்கிலும் அமெரிக்கா உட்பட்ட வளர்ந்த நாடுகளிலும் பிரபலம். மனிதக்குழந்தைகளின் வளர்ச்சியில் அவற்றின் உடல் உள நலத்தில் அவர்களுக்கு சிறு வயதில் கிடைக்கும் பரிவான தீண்டல் மிக முக்கியமானது என்பதை திட்டவட்டமாக அறிவியல் நிறுவியுள்ளது.

தொடுதல் எத்தனை நுட்பமானது என்பதை ஒரு எளிய உதாரணத்துடன் விளக்குகிறார் டேவிட். நீங்கள் ஒரு எந்திரத்தில் காசை இடவேண்டும். உங்கள் கால்சட்டை பையில் துழாவி சரியான காசை கண்களால் காணாமலேயே தேர்ந்தெடுக்கிறீர்கள். பின்னர் அதை எந்திரத்தில் இடுகிறீர்கள் அது சரியாக உள்ளே சென்றுவிட்டது என்பதை உணர்கிறீர்கள். இந்த எளிய செயல்பாட்டை செய்துமுடிக்க தொடுதல் எத்தனை நுட்பமாக செயல்படவேண்டியுள்ளது! பையில் துழாவுகையில் அங்கிருக்கும் காகிதம் அல்லது நெகிழிப்பொருட்களிலிருந்து ஒரு உலோகப்பொருளை விரல் நுனிகள் கண்டடைகின்றன. வேறெந்த வட்ட உலொகப்பொருளுக்கும் காசுக்கும் உள்ள வித்தியாசத்தை அதன் மீதுள்ள மிகச் சிறிய, நுட்பமான மேடுபள்ளங்களைக் கொண்டு அறிகின்றன. பின்பு அதன் தடிமனையும் பரப்பளவையும் கொண்டு அது ஒரு ரூபாயா ஐந்து ரூபாயா அல்லது வேறா எனக் கணக்கிடஉதவுகிறன. பின்னர் சரியான அழுத்தத்தை அளித்து அதை விரல்களுக்கு நடுவே பிடிக்கிறன. அதை எடுத்து எந்திரத்தில் இடுகின்றன. அந்தக் காசு எந்திரத்தின் உள்ளே செல்லும் அதிர்வுகளை தொடுதல் மூலம் உணர்ந்துகொள்கிறோம். அது இடையில் மாட்டிக்கொண்டதா அல்லது சென்று சேர்ந்ததா என்பதையும்கூட உணர்ந்துகொள்ளமுடியும். இந்த ஒரு செயலை விவரிக்க மட்டுமே பல பக்கங்களை செலவிடுகிறார் டேவிட். நாம் கண்டுபிடித்துள்ள எந்த அதிநுட்ப எந்திரத்தையும்விட நம்மால் எளிதாக இதைச் செய்யமுடியும் என்பதை அவர் பதிவு செய்கிறார். இந்த சாதாரண செயலை செய்துமுடிக்க நம் தோலில் உள்ள வெவ்வேறு நரம்பு அமைப்புகள் நுட்பமான தகவல்களை நம் மூளைக்கு தந்துகொண்டும் மூளையிலிருந்து கட்டளைகளைப் பெற்று செயல்பட்டும், பிற உறுப்புகளை செயல்படுத்தியும் கொண்டிருக்கவேண்டியுள்ளது.

உதாரணமாய் ஒரு பொருளை கைகளில் பிடிக்க எவ்வளவு அழுத்தத்தைத் தரவேண்டும் என்பதை நம் மூளை எப்படி உணர்ந்துகொள்கிறது எனப்பார்க்கலாம். ஒரு பொருளை நாம் பிடிக்கும்போது அதற்கு சரியான அழுத்தம் கிடைக்கும்வரை. அது நம் கைகளிலிருந்து நழுவிக்கொண்டேயிருக்கிறது. இது நாம் சாதாரணமாக அனுபவப்படும் வெளிப்படையான நழுவல் அல்ல. மாறாக மைக்ரோ நழுவல்(Micro Slip) மிகமிகச் சிறிய அளவிலேயே இந்த நழுவல் ஏற்படுகிறது. அதை நாம் அறியமுடிவதில்லை. ஆனால் நம் மூளை அறிகிறது. நம் நரம்புகள் மிக நுட்பமாக இந்த மைக்ரோ நழுவலை அளவிட்டு மூளைக்குச் சொல்கின்றன. அந்த மைக்ரோ நழுவல் நிற்கும்வரை அழுத்தம்தரச்செய்கிறது நம் மூளை. மிகத் தன்னிச்சையாக நம் மூளை செயல்படும் தருணங்களில் இதுவும் ஒன்று. எனவேதான் நம்மால் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குத் தேவையான அழுத்தத்தை மட்டுமே தந்து பற்றிக்கொள்ள முடிகிறது.

உங்கள் கைகளை கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும்படி நீங்கள் உயர்த்தும்போதோ அல்லது பின்னால் கட்டும்போதோ அது எங்கே இருக்கிறது என்பதை மூளை எப்படி தெரிந்துகொள்கிறது? உதாரணமாக ஒரு நபந்தை மேலே தூக்கிப் போடுகிறீர்கள் பந்து கீழே வரும்போது கைகளை கண்களால் காணாமலேயே உங்களால் அதை பிடிக்க முடியும். கண்ணுக்குத் தெரியாத உறுப்புகள் எங்கே இருக்கின்றன என்பதை தோல் இழுபடும் உணர்வைக் கொண்டே மூளை அறிந்துகொள்கிறது. நாம் அதை ஒரு தனித்த உணர்வாக உணர்வதில்லை ஆனால் நம் மூளை உணர்கிறது. துல்லியமாக கணக்கிடுகிறது. பழகப் பழக அது மேலும் துல்லியமடைகிறது. கிரிக்கெட்டில் ‘ப்ளைன்டர்’ எனப்படும் பார்க்காமலேயே பந்து பிடிக்கப்படும் அபூர்வக் காட்சியை நாம் கண்டு வியப்போடுகூட இந்த அறிவியல் உண்மை மீதான வியப்பும் இனி சேர்ந்து கொள்ளும்.

தொடுதலின் முக்கியத்துவத்தை பார்வையற்றவர்களே அதிகம் உணர்ந்திருப்பர். பார்வையற்றவர்கள் தொடுதலின் மூலமே தங்களின் முழு வாழ்வையும் வாழ முடியும். பிரெயில் மூலம் அவர்களால் படிக்கவும் எழுதவும் முடியும். நாம் மேற்கண்ட மிக நுட்பமான தொடுதல் பிரெயில் அறிதலுக்குத் தேவை என்கிறார் டேவிட். விரல்களில் இருக்கும் முடியற்ற தோல் (glabrous skin) கொண்டு மட்டுமே நம்மால் நுட்பமான மேடு பள்ளங்களை அறிய முடியும். அதனால் உதடுகளையும் விரல்களையும் தவிர்த்த வேறெந்த உறுப்புக்களையும் கொண்டு பிரெயிலை படிப்பது கடினம்.

தொடு உணர்வின் பயனையும் நுட்பத்தையும் நிறுவும் இன்னொரு முக்கியமான தகவலையும் டேவிட் தருகிறார். வயதான மனிதர்கள் தரையில் நிற்கத் தடுமாறுவதற்கு அவர்களின் கால்களில் தொடு உணர்வு குறைவதே காரணம் என்கின்றன ஆய்வுகள். நம் உடலில் இருவகை தோல்கள் உள்ளன. முடியுள்ளவை முடியற்றவை (glabrous). இவற்றில் முடியற்ற தோல் நுட்பமான தொடுதல் எங்கெங்கு தேவையோ அங்கே அமைந்திருக்கின்றன. நமது உள்ளங்கைகள், உதடுகள், ஆண் பெண்ணுறுப்புகளின் சில பகுதிகள் மற்றும் பாதங்களில் இவை உள்ளன. நுட்பமான தொடு உணர்வை உணரும் தோல்களை பாதங்களில் கொண்டதால்தான் மனிதன் எழுந்து நிற்க ஆரம்பித்தான். அதற்குப்பின் நிகழ்ந்தது வரலாறு.

தொடு உணர்வின் மற்றொரு பயன் வலியை உணர்வது, ஆம் வலியை உணர்வது ஒரு பயன் அல்லது வரம் என்றே டேவிட் நிரூபிக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு பாக்கிஸ்தானின் குரேஷி இனக்குழு ஒன்றைச் சார்ந்த ஒரு 14வயது சிறுவன் தன் பிறந்த நாளில் அனைவரையும் குஷிப்படுத்தவேண்டி தன் வீட்டு மாடியிலிருந்து குதித்தான். அவனுக்கு அது ஒரு பொருட்டல்ல. அவனது தொழில் தனது கைகளில் கத்தியை நுழைத்து வித்தை காண்பிப்பதாகும். கீழே குதித்தவன் எந்த பிரச்சனையும் இன்றி எழுந்து நடந்தான். இரண்டு நாட்களில் மரணித்தான். என்ன ஆனது? அவனுக்கு ஒரு மரபணு குறைபாடு இருந்தது. அவன் மூளைக்கு வலியுணர்வை கொண்டு செல்லும் ‘சோடியம் கடத்திகள்’ அவன் உடலில் இல்லாமல் இருந்தன. (நம் உடல் வேதியல் தொடர்செயல்பாட்டின் வழியேதான் மின்னணுத்தகவல்களை கடத்துகிறது என்பது இன்னொரு விந்தையான அறிவியல் உண்மை.) அவன் உடல்வலியை உணர்வதேயில்லை. பின்னர் அப்பகுதியில் ஆய்வு செய்த கேம்ப்ரிட்ஜ் விஞ்ஞானிகள் அந்த இனக்குழுவில் பலருக்கும் வலி உணரும் தன்மை இல்லாததை அறிந்தனர். அவர்கள் இனக்குழுக்களுக்குளேயே திருமணம் செய்யும் பழக்கமுடையவர்களாயும் இருந்தனர். இதுவும் இந்தப் மரபணு குறைக்கு பரவலாய் இருப்பதற்குக் காரணம். வலியை உணராதவர்கள் அதிக நாட்கள் வாழ்வதில்லை. அவர்களின் சராசரி வயது 13 அல்லது 14தான். அவர்களின் உடல் இரத்தப்போக்கையும் எலும்புமுறிவுகளையும் ஏற்படுத்தும் அபாயங்களுக்கு எதிரான பாதுகாப்புணர்வை பழகமுடியாமல் மீண்டும் மீண்டும் ஆபத்தில் விழுந்துகொண்டிருக்கச் செய்கிறது. அவர்கள் நாக்குகளை அடிக்கடி கடித்துக்கொள்கிறார்கள். ஏனென்றால் எதோச்சையாக நாக்கை கடிக்காமல் இருக்க மனித உடல் இளமையில் பழகவேண்டியுள்ளது. அது வலியைக் கொண்டே இந்த பழக்கத்தை மிக தன்னிச்சையாக உருவாக்கிக்கொள்கிறது. இவர்கள் மிக மோசமான காயங்களையும் உணராதவாறே இருந்துவிடுகின்றனர். உடல்வலி என்றால் என்ன என்பதை அவர்களால் சொல்ல முடிவதில்லை. ஆனால் அவர்களால் ஒரு உளவலியை புரிந்துகொள்ள முடியும். உளவலியை உணரவும் முடியும். சூட்டையும் குளிரையும் பிற தொடுதல்களையும் உணர முடியும் ஆனால் வலியை மட்டும் உணர முடியாது. பாக்கிஸ்தானின் ஒரு இனக்குழுவுக்குள் மட்டுமல்ல இந்தக் குறைபாடு உலகில் எவருக்கு வேண்டுமானாலும் தோன்றலாம்.

இதற்கு நேர்எதிராக ஒரு நிலை ஒரு சின்ன செயலும் மாபெரும் வலியை உருவாக்கும் கொடுமை அது. இந்தக் குறைபாடுள்ளவர்கள் குழந்தைகளாய் இருக்கையில் முதன்முதலில் மலம் கழிக்கையில் இந்தப் பெருவலியை உணர்கிறார்கள். பிறர் சாதாரணமாக உணரும் வலியோ அழுத்தமோ இவர்களுக்குப் பன்மடங்கு பெரிதாகி தாங்கமுடியாத வேதனையை அளிக்கிறது. மலம் கழிக்கும் அன்றாட நிகழ்வு மகப்பேறு போன்ற கடும் வலியைத் தரும் அனுபவமானால் எத்தனை துன்பகரமான வாழ்கையாக அது அமையும். இந்தக் குறைபாட்டுக்கு இப்போது மருந்து உள்ளது என்றாலும் இதை அனுபவித்தவர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளுக்கும் இந்தக் குறை வருமென்றால் தான் பிள்ளையே பெறப்போவதில்லை என முடிவெடுக்கிறார்கள்.

உடல் அரிப்பை உணர்வதுவும் வலியை உணர்வதுவும் ஒரே நரம்பமைப்புதான். அரிப்பு ஏற்படும்போது நாம் தோலை சொறிந்து அரிப்பை ஏற்படுத்தும் பொருளை தோலிலிருந்து அகற்றுகிறோம். இது குறிப்பாக வெளியிலிருந்து உடலில் ஒட்டிக்கொள்ளும் தூசி போன்ற அழுக்குகளையும், உடல்மீது கண்ணுக்குத் தெரிந்தோ தெரியாமலோ ஒட்டியிருக்கும் ஒட்டுண்ணிகளை அகற்ற்வும் பயன்படுகிறது. ஆனால் விலங்குகள் மந்த்தியில் சொறிதல் ஒரு சமூகப் பழக்கமாக இருந்து வருகிறதை ஆராய்ந்தறிந்துள்ளனர். அதாவது ஒரு குரங்கு சொறிய ஆரம்பித்ததும் இன்னொன்று ஆரம்பிக்கிறது. பின்னர் சுற்றியுள்ள எல்லா குரங்குகளும் சொரிகின்றன. இதற்குக் காரணம் வழக்கமாக அரிப்பை ஏற்படுத்தும் சூழலில் இருந்து பழக்கப்பட்ட விலங்குகள் ஒன்று சொறிய ஆரம்பித்தவுடன் தன்மீதும் ஏதோ தொற்றுப்பொருள் விழுந்துவிடும் எனும் எச்சரிக்கையுணர்வை அடைகிறது. ஆகவே தானும் சொறிய ஆரம்பிக்கிறது. சொறிதலை அறிய சில ஆய்வுகளை செய்துள்ளனர். அரிப்பை உருவாக்கும் பொருட்களை கண்ணால் பார்க்கும்போதே, அதுவும் அவற்றின் புகைப்படங்களை பார்க்கும்போதேகூட மனித உடலில் அரிப்பு தோன்ற ஆரம்பிக்கிறது என்கிறது ஒரு ஆய்வு. அரிப்பை பற்றி பேசினாலும்கூட மனிதர்கள் சொறிய ஆரம்பித்துவிடுகிறார்கள் என்கிறது இன்னொரு ஆய்வு. இதை படிக்கும்போது உங்களுக்கு அரிப்பு ஏற்பட்டிருக்கும் வாய்ப்பு அதிகம்.

வலிக்கும் உள்ளத்திற்கும் தொடர்புள்ளைதை பல்வேறு ஆய்வுகள் நிறுவியுள்ளன. மென்மையான குணமுடையவர்கள் உடல்வலியை பிறரை விட அதிகமாய் உணர்கிறார்கள். இதை நம் அனுபவங்களில் நாம் கண்டிருப்போம். அதேபோல தொடர்ந்து உடல்வலியில் அவதியுறுபவர்கள் மனம் மென்மையானதாகிறது, அவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாகிறார்கள் என்பதையும் ஆய்வுகள் நிறுவியுள்ளன. இவை வெறும் பழக்கவழக்கங்களால் ஏற்படும் மாற்றங்கள் அல்ல மாறாக மூளையில் ஏற்படும் தொடர் மாற்றங்களால் நரம்புகள் நிரந்தரமாக வேறு வகைகளில் செயல்பட ஆரம்பிப்பதால் உருவாகுபவை. போர்வீரர்கள் போர்க் களத்தில் வலியை அதிகம் உணர்வதில்லை என்பதையும் உளவியலுக்கும் உடல்வலிக்குமான தொடர்பாக முன்வைக்கிறார் டேவிட். அதே போர்வீரன் சிகிச்சை பெறும் வேளையில் சிறிய வலிக்கும் பெரிதாக நொந்துகொள்வதை பதிவு செய்திருக்கிறார்கள். நம்மால் சோகத்தில் இருப்பவரையோ, கோபத்தில் இருப்பவரையோ கிச்சு கிச்சு மூட்ட முடிவதில்லை. அதேபோல மனப்பிணக்கு கொண்ட தம்பதியர் அல்லது காதலர்களின் தொடுகை வேறாகவும் அதுவே காதல் தொடுகை முற்றிலும் வேறாகவும் உணரப்படுகிறது. மனநிலைக்கும் தொடுதலுக்கும் உள்ள தொடர்பை இவை நிறுவுகின்றன.

நம் உள்ள ஓட்டம் தொடு உணர்வை நிர்ணயிப்பதைப்போல நாம் எதைத் தொடுகிறோம் என்பது நம் மனநிலையை நிர்ணயிக்க முடியுமா? ஒரு ஆய்வில் எளிதில் நம்பமுடியாத விளைவுகளை பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு அலுவலகத்துக்கு நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் சிலரிடம் சூடான காபி கோப்பையையும் பிறரிடம் குளிர் காபி கோப்பையையும் சற்று நேரம் வைத்துக்கொள்ளச் சொல்கிறார்கள். தற்செயலாக நடந்ததைப்போல் இது செய்யப்படுகிறது. பின்னர் அவர்களின் ஆளுமையில் ஏற்படும் மாற்றத்தை பதிவு செய்ததில் சூடான கோப்பையை பிடித்தவர்களிடம் அது நேர்மறையான விளைவுகளை உருவாக்கியது. பிறரை அவர்கள் நல்லவர்களாகவும் இதமான ஆளுமையுடையவர்களாயும் உணர்ந்தனர். குளிர்ந்த கோப்பையை பிடித்தவர்களோ பிறரை கடினமானவர்களாக உணர்ந்தனர். நாம் எதைத் தொடுகிறோம் என்பதைக்கொண்டு நம் மனநிலை மாறும் என்பது நம்பமுடியாத அதே வேளையில் மிக முக்கியமான தகவலாய் உள்ளது. இதைப்போலவே நேர்முகத் தேர்வுகளில் கடினமான அட்டைகள் மீது தங்களது சுய அறிமுகத்தை (Bio-data) தருபவர்கள் திடமான ஆளுமை உடையவர்களாகவும் பிறர் மென்மையானவர்களாகவும் உணரப்படுகிறார்கள்.

பார்வையில் மாயத் தோற்றங்கள் (illusion) இருப்பதைப்போலவே தொடுதலிலும் மாய உணர்வுகளை உணர முடியும். கியூட்டேனியஸ் ராபிட் (cutaneous rabbit illusion) எனும் சிறிய ஆய்வை இணையத்தில் தேடி நீங்களே செய்துணர முடியும். குளிர்ந்த பொருட்கள் கனமானவையாகத் தோன்றுவதும் மாயத் தோற்றமே. புலன்கள் தறுமாறாக செயல்படுகையில் புலனனுபவங்களை மூளை உணர்ந்துகொண்டேயிருக்கும் நிலை உருவாகிறது. உதாரணமாக இல்லாத ஒலியை உங்கள் காதுகள் கேட்கின்றன. இல்லாத காட்சிகள் தோன்றுகின்றன. அதேபோலவே தொடுகையும் நிகழ்கிறது. தற்போது ஒரு புது மாய உணர்வை அறிவியல் பதிவு செய்துள்ளது. பலருக்கும் தன்னிடம் செல்போன் இல்லாதபோதும் செல்ஃபோன்கள் அதிரும் உணர்வு ஏற்படுவது ஒரு நவீன மாய உணர்வு.

டேவிட் தன் அனுபவத்திலிருந்து ஒரு சுவாரஸ்யமான நிகழ்வை பதிவு செய்கிறார். அவரது இரட்டைப் பிள்ளைகள் குளியலறை கதவை ஒருவர்மீது ஒருவர் தள்ளி விளையாடுவது வழக்கம். இருவரில் ஒருவர் அழுது புலம்பும்வரை அந்த விளையாட்டு தொடரும். அதன் முடிவில் நடக்கும் விசாரணையில் ஒருவர் இன்னொருவரை குற்றம் சாட்டுவர். ‘நான் மெதுவா தள்ளினா அவந்தான் வேகமா தள்ளினான்’ ‘இல்ல அவந்தான்’ என்று இருவரும் மாறி மாறி சொல்லிக்கொள்கிறார்கள். பின்னாளில் டேவிட் லின்டன் ஒரு சுவாரஸ்யமான ஆராய்ச்சியை கண்டடைகிறார் அதில் அவரின் குழந்தைகளின் விளையாட்டின் விபரீத முடிவுக்கு விளக்கம் கிடைக்கிறது. ஒருவர் தான் கதவைத் தள்ளும்போது அது மெதுவானத்தள்ளல் என உடல்ரீதியாக உணர்கிறார். ஆனால் அடுத்தவர் அதே விசையுடன் கதைவத் தன்மீது தள்ளினால் அதை அதிக அழுத்தமுடையதாக உணர்ந்துகொள்கிறார். ‘தனக்கென்றால் இரத்தம் அடுத்தவனுக்குண்ணா தக்காளி சட்டினியா’ எனும் பிரபல வசனத்துக்கு ஒரு அறிவியல், அதுவும் உடல் உணர்தல்போன்ற ஒரு தெளிவாக அளவிடக்கூடிய அறிவியல் விளக்கம் இருக்கும் என்பது வியக்கத்தக்கது. உண்மையில் மனித வரலாற்றின் பல நிகழ்வுகளையும் இந்தக் கொள்கை கொண்டு விளக்க முடியலாம். நாம் இயல்பாகவே, உடல்ரீதியாகவே நம்மையும் நம் சுற்றத்தையும் பற்றிய கவலைகளைக் கொண்ட பிராணிகள். எல்லா உயிர்களுமே அப்படித்தான். அதே நேரத்தில் அடுத்தவர்கள் நமக்குச் செய்யும் தீமைகளை அவற்றின் நியாயமான அளவைவிட அதிகமாக அளக்கிறோம் என்பதுவும் அறிவியல் உண்மை.

நம் உடல் நரம்புகள் எப்படி சரியான வகையில் தொடுக்கப்பட்டிருக்கின்றன, எப்படி சரியான வகையில் அவை நம் மூளையைச் சென்றடைகின்றன என்பவை நம் உடல்திறனை மடுமல்ல நம் ஆளுமையையையும் பழக்கவழக்கங்களையும் நிர்ணயிக்கக்கூடிய விஷயங்கள். வயலின் இசைப்பவர்களுக்கு விரல்களில் தொடுவுணர்வு நுட்பமாக இருக்கிறதை ஆராய்ந்தறிந்துள்ளனர். அதே நேரம் நுட்பமான தொடுகை உள்ளவர்களாலேயே வயலின் இசைப்பதில் வல்லுனர்களாக முடியும் எனும் கூற்றையும் மறுக்க முடியாது என்கிறார் டேவிட். காம உணர்வுகளில் பலருக்கும் பல்வேறு விருப்பு வெறுப்புக்கள் இருப்பது முக்கியமாக நரம்பு இணைப்புகளில் இருக்கும் வித்தியாசத்தால்தான். ஒவ்வொருவருக்கும் சில குறிப்பிட்ட இடங்களில் தொடுவது காம இன்பத்தை தருகின்றது. காம உணர்வை கடத்தும் நரம்புகள் சீராக அமையாத ஒரு பெண்ணின் கதையை டேவிட் குறிப்பிடுகிறார். அப்பெண்ண்க்கு தொடர்ந்து காம உணர்வு தோன்றிக்கொண்டே இருக்கிறது. அவள் அதை தணித்துக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. ஒரு நாளைக்கு ஐம்பது முறைகூட அவள் இதை செய்திருக்கிறாள். மிகக் கொடுமையான அனுபவமாக இது மாறிவிடுகிறது, அவளது உடலில் யாரோ இருந்து அவளைத் தூண்டிக்கொண்டேயிருப்பதைப்போல. மனம் உடைந்து இறுதியில் தற்கொலை செய்துகொண்டாள் அவள்.

காமத்தில் ஈடுபடும்போது உச்சத்தை அடையும் நிலையில் மூளை அறவுணர்வுகளை அறியும் பகுதிகளையும், சுயமாக முடிவெடுக்கும் திறனை அளிக்கும் பகுதிகளையும் செயலிழக்கச் செய்துவிடுகிறது என்பது இன்னொரு அதிர்ச்சியூட்டும் தகவல். காமம் ஒருவழிப்பாதை அதில் செல்லும் முன்பே சரியான முடிவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

அரிஸ்டாட்டில் டி அனிமாவில் தன் தர்க்கத்தின் மீதான அபார நம்பிக்கையில் ஒரு கருதுகோளை முன்வைக்கிறார். மெல்லிய தோல் உடையவர்கள் சிந்தனையாளர்களாகவும், கலைஞர்களாகவும் இருக்கின்றனர் தடித்த தோல் உடையவர்கள் உடலுழைப்பை மட்டுமே செய்யத் தகுதியானவர்கள் என்பதே அந்தக் கருதுகோள். இந்த தர்கத்தின் வழியாகவே அவர் தொடுதலுக்கும் அறிவுக்குமான தொடர்பு குறித்த வாதத்தை வலுப்படுத்துகிறார். அரிஸ்டாட்டிலின் காலத்தில் அடிமை முறை இருந்தது. அதன் அடிப்படையிலேயே அவர் இந்த தர்கத்திற்கு வந்தடைந்திருக்க முடியும். ஆப்ரிக்க நாடுகளையும் பிற கலாச்சாரங்களையும் 17ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய அறிவியக்கத்தின் விளைவாக சென்றடைந்த ஐரோப்பியர்கள் அங்கிருந்த பழங்குடிகளின் கலைகளை நம்பமுடியாமல் வியந்தனர். அது அவர்களின் தர்கங்களை, அவற்றின் மீதெழுந்த நம்பிக்கைகளை உடைத்தெறிந்தது. கலைகள் இந்தக் காட்டுமிராண்டிகளிடம் எப்படி இத்தனை உன்னதமான கலை எழுந்திருக்க முடியும் என க் குழம்பினர். இன்று 2500 வருடங்களுக்குப் பின் அரிஸ்டாட்டிலும் அவரது வழித்தோன்றல்களும் அறிவியலின் பிழையற்ற தர்கத்தினால் வெல்லப்படுள்ளனர். நவீன அறிவியல் அரிஸ்டாட்டிலின் இரு நம்பிக்கைகளை தகர்த்தெறிந்தது. விலங்குகளில் மனிதனுக்கே தொடுவுணர்வு வீரியமானது , அதுவே அவனை அறிவுடையவனாக்கியது என அவர் நம்பினார். அதேபோல தோலின் தன்மைக்கும் அறிவுக்கும் நேரடியான தொடர்பில்லை என்பதையும் நவீன அறிவியல் நிருபித்துள்ளது. உலகெங்கும் இருந்த, இருக்கின்ற அடிமை முறைகளும் தீண்டாமையும் இத்தகைய தத்துவ தர்க்கங்களாலேயே நிலைத்து நின்றன. இன்றும் இவை செல்லுபடியாகின்றன என்பதே உண்மை. அறிவியலின் மேல் கட்டியெழுப்பப்படும் அறக்கோட்பாடுகளைக் கொண்டே இவற்றை தகர்க்க முடியும் என்பதே நவீன யதார்த்தம்.

இத்தகைய அறிவியல் புத்தகங்களை படிக்கையில் நமக்கு இயல்பாகத் தோன்றும் எண்ணம் ‘மனிதன் வெறும் எந்திரம்தானா?’ என்பதே. மின்கடத்திகளும் சில தர்க்கச் செயலிகளும், மொழித்திறனும் கொண்ட ஒரு எந்திரமா மனிதன்? அவன் இயற்கையின் அடிமையா? மீண்டும் மீண்டும் தன் புத்தகத்தின் ஒவ்வொரு அதிகாரத்திலும் டேவிட் இந்தக் கேள்விக்கு விடை சொல்லிக்கொண்டே வருகிறார். மனிதனின் உடல் இயல்புகள் ஒரு எந்திரத்தின் செயல்பாட்டோடு ஒப்பிடப்படக்கூடியவை. ஆனால் மனிதனின் அனுபவங்கள், அறிதல்கள் அவ்வுடலியல்புகளை செயல்படுத்தவும் கட்டுப்படுத்தவும் மேம்படுத்தவும் உதவுகின்றன. உடல்ரீதியான அனுபவங்கள் மட்டுமன்றி உள அனுபவங்களும் நம் உடலை கட்டுப்படுத்துகின்றன. சமூகக் கட்டுப்பாடுகள் நம் தொடுதலையும், தொடுதல் மூலம் நாம் பெறும் அனுபவங்களையும் கட்டுப்படுத்துகின்றன. மனிதன் உடலை மீறிச் செல்ல முடியும். எத்தனை தூரம் ஒரு மனிதன் தன் உடலை தன் மனதின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறானோ அவ்வளவு தூரம் அவனை பண்பட்டவன் என நாம் உணர்கிறோம். கீழை மரபுகளில் உடலை வெல்வதே பெரும் ஞானத்தின் வழியாகக் காணப்படுவதையும் குறிப்பிடவேண்டும்.

தொடுதல் குறித்த பல்வேறு சமூகத் தகவல்களையும் அறிவியல் உண்மைகளையும் சுவாரஸ்யமாகவும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் டேவிட் லின்டனின் புத்தகம் முன்வைக்கிறது. பொதுமக்களுக்கான அறிவியல் புத்தகங்களில் முக்கியமானவற்றுள் ஒன்றாக இந்த புத்தகத்தை பரிந்துரைக்க முடியும். தொடுதல் மனிதனுக்கு மிக அடிப்படையானதும் முக்கியமானதுமான உணர்வு. அதே நேரத்தில் அது மிகக்குழப்பமான, நுட்பமான அமைப்புகளால் ஆனது.

உடலும் உள்ளமும் ஊடும் பாவுமாகப் பிணைந்து நெய்யும் ஒரு மெல்லிய பட்டினைக் கொண்டு மனிதன் எத்தனை பெரிய பொன்னுலகை படைத்திருக்கிறான் இல்லையா? இல்லை என்போரும் உண்டே!

Popularity: 1% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப

RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....உங்கள் கருத்தை தெரிவிக்கவும்