ஒரு வேலியும் இரு பாதைகளும்

புதையல்களைத் தேடிச் செல்லும் சாகசக் கதைகளை நாம் படித்திருப்போம். தெளிவற்ற சிறிய தகவல் ஒன்றை பின்பற்றித் துவங்கும் ஒரு சாதாரணத் தேடல் பல விரும்பத்தகுந்த, தகாத பிரதேசங்கள் வழியே பயணித்து, நண்பர்களையும் பகைவர்களையும் எதிர்கொண்டு, சதி முடிச்சுகளை அவிழ்த்து, கைக்கெட்டியவற்றை தவறவிட்டு மீண்டும் கைகொண்டு உயிர்மாய்க்கும் சவால்களைக் கடந்து கதா நாயகர்கள் புதையலைக் கண்டடையும்போது நம் மனதில் ஒரு நிம்மதிப் பெருமூச்சு எழும். ராய் மாக்சம் எனும் ஆங்கிலேயர் எழுதிய ‘The great hedge of India’ அப்படி ஒரு அனுபவத்தைச் சொல்லும் புத்தகம். ஆனால் அது சாதாரண பொன்னும் பொருளுமான புதையலைத் தேடும் புனைவல்ல.

பழைய புத்தகங்கள் குவியலில் உருவி எடுத்த புத்தகத்துல் கண்ட சிறிய அடிக்குறிப்பிலிருந்து இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறுவப்பட்டிருந்த உலகின் மிகப்பெரிய முள்வேலியை குறித்து தெரிந்துகொண்ட ராய் மாக்சம் அதைத் தேட ஆரம்பிக்கிறார். வழக்கமான வரலாற்று புத்தகங்கள் எதிலுமே அப்படி ஒரு வேலி குறித்த எந்தத்தகவலும் இல்லாததைக் கண்டு வியப்படைகிறார். அதிஷ்டவசமாக நூலகத்தில் ஆவணங்களை புனரமைப்பவராக பணியாற்றிய ராய்க்கு இங்கிலாந்தின் நூலகங்கள் அத்துப்படி. இந்திய காலனியின் அலுவல்களை கவனித்த இலாகாவின் தகவல் களஞ்சியங்கள் ஆண்டறிக்கைகள் என மைல்கணக்கில் நீளும் ஆவணங்களுக்கு மத்தியில் இந்தியாவின் கூறுக்கே மார்கச்சையைப்போல நீண்டு வளர்ந்திருந்த வேலி குறித்த தகவல்களைத் தேடி அதன் இருப்பை உறுதி செய்தார் ராய். அடுத்தது இந்தியா பயணிக்க வேண்டியதுதான். வேலியைக் காணவேண்டியதுதான். ஒன்றிரண்டு புகைப்படங்களோடு நாடு திரும்பவேண்டியதுதான்.

ஆனால் சாகசக் கதைகள் திருப்பங்களுக்குப் பெயர்போனவை. துவக்கத்திலேயே முடிந்துவிடுவதுபோலக் கூட அவை தோற்றமளிக்கும். கையில் வேலியின் வரைபடத்துடன் இந்தியா வந்த ராய் மத்திய பிரதேசத்தின் தூரக் கிராமம் ஒன்றிற்குச் சென்று அதன் அருகே வேலி சென்றிருக்கவேண்டிய இடங்களைச் சென்று தேடுகிறார். யமுனையின் கரைகளில் அமைந்திருந்த அந்த கிராமங்கள் இப்போது விவசாய கிராமங்களாக மாறியிருந்தன. அவருக்கு அப்போது பிடிபடிகிறது இந்த வேலியை கண்டு பிடிப்பது மிக அரிதான காரியம் என்று. சாலைகள், விவசாயம், குடிபெயர்தல் என பல்வேறு காரணங்களுக்காக நூறாண்டுகளுக்கும் மேலாக கைவிடப்பட்ட உலகின் மிகப்பெரிய வேலி அழிக்கப்பட்டிருப்பதே நியாயமானது.

புதர்வேலி பித்தாக மனதில் ஏறிக்கொள்ளா ராய் தன் தேடலைத் தொடர்ந்தார். இங்கிலாந்தில் இந்தியா குறித்த ஆவணங்கள் இருக்கும் இடங்களிலெல்லாம் தேடி பயனுள்ள வரைபடங்களை கண்டடைந்தார். இறுதியில் மூன்று வருடத் தேடலுக்குப் பின் பல்லாயிரம் மைல்கள் பயணங்களை செய்து அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்களில் தங்கி, உயிர் பயம் உள்ள சம்பல் பள்ளத்தாக்கு பகுதிகளில் தனியே உலாவி வரலாற்றின் நினைவுகளிலிருந்து முற்றிலும் அழிந்துவிட்ட அந்த உயிர்வேலியின் மிச்சத்தை அவர் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுவே கதையின் சுவாரஸ்யமான முடிவு. ஒரு புனைவின் சுவாரஸ்யத்துடன் சொல்லப்பட்டாலும் உப்பு வேலி மிகத் தீவிரமான சிந்தனைகளை ஆழமான உணர்வுகளை நம்மில் விட்டுச் செல்கிறது.

ஆங்கிலேயர் காலத்தில் இந்தியா மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டு ஆளப்பட்டுவந்தது. தெற்கில் மதராஸ் வட மேற்கில் பம்பாய், வடக்கு மற்றும் கிழக்கில் வங்காளம். வங்காள மாகாணத்துக்குள் வட இந்தியாவின் பெரும் பகுதி உள்ளடங்கியிருந்தது. வங்காள விரிகுடாவில் கங்கை, யமுனை உள்ளிட்ட பல நதிகள் கலப்பதால் வங்காள மாகாணத்தின் கடல் பரப்பில் உப்பு தயாரிப்பது கடினமாக இருந்தது. ஒட்டுமொத்த வடகிழக்கும் உப்புக்காக குஜராத் அல்லது பஞ்சாப் பகுதிகளை நம்பியிருந்தது. வங்காளத்தின் ஒட்டுமொத்த உப்புத் தயாரிப்பையும் கையகப்படுத்திய ஆங்கிலேயர்கள் உப்பின் மீது கடுமையான வரி விதித்தார்கள். பிற மாகாணங்களில் நில வரியை அதிகப்படுத்தி, நில உரிமையாளர்களிடமிருந்து பெறப்பட்ட வரி வங்காளத்தில் உப்பின் மீது விதிக்கப்பட்டு ஏழைகளும் பணக்காரர்களும் ஒரே விகிதத்தில் வரியைச் செலுத்தும்படிக்கு அமைந்தது. இதன் விளைவாக ஒரு குடியானவர் தனது குடும்பத்தின் ஒரு வருட உப்புத் தேவைக்காக இரண்டு மாதச் சம்பளத்தைத் தர வேண்டியிருந்தது. சில நேரங்களில் இது ஆறு மாதச் சம்பளமாகவும் இருந்தது.
உப்பு பிற மாகாணங்களிலிருந்து வங்கத்துக்குள் கடத்தப்படுவதை தடுக்க ஆங்கிலேய அரசு சங்கிலித் தொடர்போல அமைந்த சுங்கச் சாவடிகளை வங்கத்தின் எல்லையில் உருவாக்கியது. இதிலிருந்த பணியாளர்களைக்கொண்டு முட்புதர்களைக் கொண்டு ஒரு பெரும் வேலியை உருவாக்கினர். முதலில் காய்ந்த முட்புதர்களாலூம் மரங்களாலும் உருவாக்கப்பட்ட இந்த வேலி பின்னர் உயிருள்ள முள்மரங்களையும் புதர்களையும் உள்ளடக்கிய பெரும் உயிர்வேலியாக மாற்றப்பட்டது. வங்கத்தின் உள்நாட்டு சுங்க அதிகாரிகளின் ஆண்டறிக்கைகளில்லிருந்து இந்த வேலி குறித்த பிரம்மாண்டமான தகவல்களை ராய் நமக்கு ஆதாரங்களாகத் தருகிறார். பல்வேறு பயணக்கட்டுரைகளிலிருந்தும், ஆவணங்களிலிருந்தும், பதிவுகளிலிருந்தும் நமக்கு காணக்கிடைக்கும் தகவல்களின் வழியே நம் கண்முன்னே விரிவது இந்தியாவை இரண்டாக வகுத்த ஒரு பெரும் முட்புதர் வேலி. உப்பு வேலியைத் தேடிச்செல்லும் ராயின் பயணமும் உப்பின் வரலாறும், பயன்பாடும், ஆங்கிலேய காலனியாதிக்கத்தின் வரலாறும், விளைவுகளும் தொடர்ந்து பல்வேறு அதிகாரங்களில் சொல்லப்பட்டு ஆங்கிலேய ஆட்சியில் விதிக்கப்பட்ட இந்தக் கொடூரமான வரியும் அந்த கொடூரத்தின் சாட்சியாக நின்ற வேலியும் பல கோணங்களில் விளக்கப்படுகின்றன.

ராய் மாக்சம் ஒரு எளிய ஆங்கிலேய குடும்பத்தில் பிறந்தவர். தனது பத்தாவது வயதிலேயே ஒரு விபத்தில் தந்தையை இழந்த ராய் தாயின் உழைப்பிலும் அரசின் ஆதரவிலும் கல்வி பயின்றார். விவசாயத்தில் ஆர்வம் கொண்ட ராய் தனது 21ஆம் வயதில் ஆப்ரிக்காவில் தற்போதைய மலாவியில் இருந்த ஒரு தேயிலைத் தோட்டத்தை நிர்வகிக்கக் கிளம்பினார். ஆப்ரிக்க கண்டத்தின் எல்லா நாடுகளுக்கும் பயணித்த ராய் ஆப்ரிக்க கலைப்பொருட்களை விற்கும் தொழிலில் இறங்கினார். பின்னர் தனது நாற்பதாவது வயதில் கல்லூரிக்குச் சென்று பழைய புத்தகங்களையும் எழுத்துப்பிரதிகளையும் பேணுவதில் தேர்ச்சி பெற்றார். இங்கிலாந்து திருச்சபையின் தலைமைப் பேராலயமான காண்டபரி பேராலயத்தில் பணியிலமர்ந்தார். பின்னர் லண்டன் பல்கலைகழகத்தின் நூலகத்திலும் பழைய, அரிய புத்தகங்களைப் பேணும் பணியில் ஈடுபட்டார். மிகப்பழமை வாய்ந்த மத நூல்களையும், கலிலியோ போன்ற வரலாற்று நாயகர்களின் கையெழுத்து பிரதிகளையும் இன்றைய, நாளைய தலைமுறைகளுக்காகப் பேணும் பணியை ராய் செய்துள்ளார். சம்பல் பள்ளத்தாக்கில் கொள்ளைக் கும்பலின் தலைவியாக இருந்த பின்னாள் அரசியல்வாதியுமான பூலன் தேவியின் நெருங்கிய நண்பர் ராய். உப்பு வேலி குறித்த தேடல்களுக்கு பூலன் தேவியும் அவரின் உறவினர்களும் உதவியுள்ளனர்.

உப்பு வேலி ஆங்கிலேயருக்கு வெற்றிகரமான முயற்சியாய் அமைந்தது. ஆனால் அது வங்கத்த்திற்குள் உப்பு கிடைப்பதை அரிதாக்கியது. ஒரு கட்டத்தில் வங்கத்தில் கிடைத்த பாதி உப்பு இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. உப்பின்மையின் காரணமாக உடலில் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதற்கு ராய் ஒரு அத்தியாயத்தை ஒதுக்கியிருக்கிறார். உப்பின்மையினால் எத்தனைபேர் இறந்தனர் என்பதை கணக்கிட முடியாது என்பதை குறிப்பிடும் ராய் வங்கத்தில் பஞ்சம் வந்தபோது உப்புச் சத்து குறைந்த ஏழைகள் மிக எளிதில் மடிந்திருப்பர் என்று கூறுகிறார்.

உப்பு வேலி நமக்கு இரு முக்கியமான ஆங்கிலேய வரலாற்றாளுமைகளை சுட்டிக்காட்டுகிறது. ஒன்று அங்கிலேய சுரண்டலின் முகமான இராபர்ட் கிளைவ். இன்னொன்று இதே சுரண்டல் அமைப்பில் இருந்துகொண்டே அதன் நீதியின் முகமாக அமைந்த ஆலன் ஆக்டேவியன். ஹுயூம். எப்போதும் தேடுவதற்கென்று ஒன்றை வைத்திருக்கும் ராய் அப்போது சென்னையில் மறைந்து அடக்கம் செய்யப்பட்ட லாறன்ஸ் ஹோப் எனும் ஆங்கிலேய கவிஞரின் கல்லறையை தேடிக்கொண்டிருந்தார். அதைத் தேடி ராயுடன் சென்னை ஜார்ஜ் கோட்டைக்கு சென்றிருந்தோம். காத்திருந்த நேரத்தில் அங்கிருந்த ’கிளைவ் ரூம்’ எனப்ப்டும் ஒரு அருங்காட்சியகத்துக்குச் சென்றோம். ஒரு சிறிய அறையில் இராபர்ட் கிளைவின் பல்வேறு வெற்றிகளை கொண்டாடும் வகையில் அவரின் படங்கள் காட்சியிலிருந்தன. ராய் அவற்றைக் கண்டதுமே முகம் சுழித்தார். எப்படி கிளைவ் ஒரு நாயகனைப்போல இங்கே கொண்டாடப்படமுடியும் என்றார். ஹிட்லரை யூதர்கள் கொண்டாடினால் எப்படி இருக்குமோ அதேபோலத்தான் இது என்றார். கிளைவ் இந்தியாவை முடிந்த மட்டும் சுரண்டினார். மட்டுமல்லாது தன்னை சுற்றியுள்ளவர்களும் சுரண்டல் செய்யும்படியான ஒரு சூழலை உருவாக்கினார். இதன் விழைவாக கடினமான கால கட்டங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக இறந்தனர். சிறிய காலத்திலேயே பெரும் செல்வந்தனான கிளைவ் அவனுக்கு எதிராக இங்கிலாந்து பார்லிமெண்டில் கொண்டுவரப்பட்ட எல்லா முயற்சிகளையும் பணத்தால் முறியடித்தான். பின்னர் தனியனாகத் தன் பேனா கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு உயிர்நீத்தான்.
ஏ.ஓ.ஹுயூம் ஒரு நீதிமானாக இருந்தார். மக்கள் மரணதண்டனையாகவே இருந்தாலும் அதை ஹியூமிடமிருந்து பெறவே விரும்பினர் எனக் குறிப்பிடுகிறார் ராய். தன் பணி ஓய்வுக்குப்ப்பின் பிற ஆங்கிலேயரைப்போல கிடைத்தவற்றை சுருட்டிக்கொண்டு இங்கிலாந்து சென்று செல்வச் செழிப்போடு வாழாமல் இந்தியாவின் விடுதலையை பெற்றுத்தந்த இந்திய தேசிய காங்கிரஸை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதை துவங்கி, தலைமையேற்று வழிநடத்தி வலுவடையச் செய்தார்.

கிளைவும், ஹுயூமும் இருவேறு முகங்கள். இரு வேறு பாதைகள். இன்றும் மேற்குலகின் இரு குணங்களாகவே இவை இருந்து வருகின்றன என்று சொல்லலாம். ஒருபுறம் சுரண்டல்கள் போர்கள் மறுபுறம் மானுட விடுதலைக்காககவும் சமநீதிக்காகவும் ஒங்கி ஒலிக்கும் குரல்கள், அவை சன்னமாக ஒலித்தபோதும்கூட. இந்த இரண்டு பாதைகளுமே விடுதலை பெற்ற இந்தியாவின் முன் இருந்தன என்று சொல்லலாம். பலர் கிளைவின் பின் சென்றனர் வெகு சிலரே ஹுயூமை பின்பற்றினர் என்பதுவே இன்றைய காலம் நமக்குச் சோல்லும் கணக்கு.

ராய் மாக்சமுக்கு பிரான்ஸ் நாட்டின் அணு உலைகளை மேலாண்மை செய்யும் அறிஞர்களின் குழுவிலிருந்து ஒரு எதிர்பாராத தொலைபேசி அழைப்பு வருகிறது. ‘எங்களது மாநாட்டில் நீங்கள் வந்து உரையாற்ற முடியுமா?’ எனக் கேட்கின்றனர் அவரை அழைத்தவர்கள். அவருக்கு அழைப்பின் காரணம் புரியவில்லை. ’அணுசக்திக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது!’ என வியக்கிறார் ராய். ’நாங்கள் பிரான்ஸில் செலவழிந்த அணுசக்தி எரிபொருட்களை ஆங்காங்கே குறிப்பிட்ட இடங்களில் கொண்டு கொட்டுகிறோம். ஆனால் நீங்கள் உப்பு வேலி புத்தகத்தில் வரலாறு எப்படி எளிதில் மறக்கப்படுகிறது என்பதை குறித்து எழுதியிருந்தீர்கள். அப்படி பெரிய வேலி, பெரும்பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்கையை மாற்றியமைத்த வேலியின் வரலாறு மறக்கப்படுமானால் ஒரு வேளை நாங்கள் அணுக் கழிவுகளை போட்ட இடங்களையும் மறந்துவிட்டால்? எனவே வரலாறு எப்படி எளிதில் மறக்கப்படுகிறது என்பதை குறித்து நீங்கள் உரையாற்றவேண்டும்’. ராய் அந்த அழைப்பை ஏற்று பிரான்ஸ் சென்று அந்த அகில உலக மாநாட்டில் உரையாற்றுகிறார்.

காலனியாதிக்கத்தின் பல்வேறு பரிமாணங்களை, மானுட வரலாற்றின் பல்வேறு அடுக்குகளை உப்பின் கதை வழியாகச் சொல்கிறார் ராய் மாக்சம். வரலாற்றின் முக்கியத்துவத்தை அதைத் தேடித் தேடி தெரிந்துகொண்ட ஒருவரின் அனுபவக் குறிப்புகள் வழியாக நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. ராய் நமது அன்பிற்கும் நன்றிக்கும் உரியவர்.

Popularity: 1% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....உங்கள் கருத்தை தெரிவிக்கவும்