ஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு!

வாஸ்கோட காமா 1498ல் இந்தியாவுக்கும் பொர்துகீசியத்துக்குமான கடல்வழியை கண்டடைந்தது முதல் 1757ல் இராபர்ட் கிளைவ் தலைமையில் ஆங்கிலேயர்கள் வங்காளத்தை கைப்பற்றியதுவரையிலான வரலாற்றைக் கூறும் ‘The Theft of India’ எனும் புத்தகத்தை ராய் மாக்சம் எழுதியுள்ளார். இந்தியாவை இரண்டாகப் பிளக்கும்படி ஆங்கிலேயர் உருவாக்கிய உயிர்வேலியை கண்டுபிடித்து ‘The Great Hedge of India’ (தமிழில் ‘உப்பு வேலி’ – 2015)எனும் புத்தகமாக வெளியிட்டவர் ராய் மாக்ஸம். அவரை முன்னர் சொல்வனம் பேட்டி கண்டிருந்ததை வாசகர்கள் நினைவு கூறலாம்.
இந்தியாவில் ஹாப்பர் காலின்ஸ் பதிப்பகம் கடந்த நவம்பர் 5ஆம் தேதி இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வியாபரத்திற்காக பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு வந்து சேர்ந்த வரலாற்றையும் பின்னர் இந்தியாவின் பல பகுதிகளை காலனியகளாக்கியதையும் தொழில் மீதான பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து இந்தியாவை மெல்ல மெல்ல கொள்ளையடித்த வரலாற்றையும் பாரபட்சமின்றி ராய் மாக்சம் பதிக்கிறார். இதுவரை நாம் அறிந்த ஐரோப்பிய ஆதிக்கத்தின் தேன் தடவிய வரலாற்றை கலைத்துவிட்டு அதன் கொடூர முகத்தை வெளிக்காட்டுவதாக இப்புத்தகம் அமைந்துள்ளது.
போர்த்துகீசியர்களின் பயங்கரத்தையும் அவர்களின் இன்குயிசிஷனின் கொடுரத்தையும் சொல்லி இப்புத்தகம் துவங்குகிறது. டச்சுக்காரர்களும் பிரித்தான்யர்களும் நவீன, திறம் வாய்ந்த போர்க்கப்பல்களுடன் வந்திறங்கியபோது போர்த்துகீசியர்களின் இந்திய ஆதிக்கம் வீழ்ந்தது. அவர்கள் கோவாவிற்கும் சில சிறு பகுதிகளுக்கும் துரத்தப்பட்டனர். போர்த்துக்கீசியர்களின் காலனிகளை ஆட்கொண்ட டச்சுக்காரர்களும் மிதவாதிகளாயில்லை. இருவரும் இந்தியாவின் ஏற்றுமதி மீது, குறிப்பாக மசாலா பொருட்களின் ஏற்றுமதி மீது தனியாதிக்கம் செலுத்தினர். இந்திய விவசாயிகளை, வியாபாரிகளை மிகக் குறைந்த விலைக்கு விற்கும்படி கட்டாயப்படுத்தினர். பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில், தென்னிந்தியாவில் பெரும் போரில் நஷ்டமடைந்த டச்சுக்காரர்கள் இந்தியாவை விட்டுவிட்டு கிழக்காசியாவிற்குச் சென்றனர்.
‘Theft of India’ இந்தியா ஐரோப்பியர்கள் இந்தியாவில் மேற்கொண்ட போர்களையும் அடக்குமுறைகளையும் நேரில் கண்ட, அனுபவித்த சாட்சியங்களின் பதிவுகளை உள்ளடக்கியது. இதுவரை பெரிதும் அறிந்திடப்படாத நிகழ்வான இந்திய மக்கள் அடிமைகளக கிழக்காசியாவிலிருந்த பல்வேறு ஐரோப்பிய ஆதிக்க சக்திகளுக்கும் விற்கப்பட்ட வரலாற்றையும் அது குறிப்பிடுகிறது. இதே காலகட்டத்தில் முகலாயர் ஆட்சிக்குட்பட்ட இந்தியாவில் இருந்த அடக்குமுறைகளையும் ராய் பதிவுசெய்துள்ளார்.
ஆங்கிலேயர் 1613ல் இந்தியாவிற்கு வியாபாரம் செய்யும் ஒரே நோக்கோடு வந்து சேர்ந்தனர். இந்திய ஆட்சியாளர்கள் அவர்களை சிறிய தொழிற்பேட்டைகளை அமைக்க அனுமதித்தனர். டென்மார்க்கிலிருந்து 1620ல் வந்த வியாபாரிகளுக்கும் இதே அனுமதி வழங்கப்பட்டது. பிரெஞ்சுக்காரர்கள் 1666வரைக்கும் இந்தியாவிற்கு வரவில்லை. வந்ததும் இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் பல பகுதிகளை அவர்கள் கைப்பற்றி கோட்டைகளைக் கட்டி குடியிருப்புகளை அமைத்த்னர். பின்னர் நடந்த போர்களில் சிறிய பிரெஞ்ச் படை பெரிய இந்தியப் படைகளையும் எளிதில் வீழ்த்தியது. இந்த வெற்றிகள் தந்த தன்நம்பிக்கையில் பிரெஞ் ஆட்சியாளர்கள் பல்வேறு இந்திய சிற்றரசர்களுடன் உடன்படிக்கைகளை செய்துகொண்டனர். பிரெஞ்சுக்காரர்களின் வளர்ச்சியைக் கண்டு ஆங்கிலேயர் அதிர்ச்சியுற்றனர். ஏற்கனவே ஐரோப்பாவில் இரு நாடுகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டிருந்தன. இந்தியாவில் போர்ப்படைகளை அதுவரை அதிகமாக பயன்படுத்தாத ஆங்கிலேயர் முதன்முறையாக படையை வலுப்படுத்த ஆரம்பித்தனர். இராபர்ட் கிளைவின் தலைமையில் ஆங்கிலேயப்படை பிரெஞ்சு கூட்டுப்படையை வீழ்த்தியது. அதுவே இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கத்தின் வீழ்ச்சியையும் உறுதிசெய்தது.

ஆங்கிலேயர் வங்கத்தில் தங்கள் வியாபார மையத்தை நாளுக்கு நாள் வலுப்படுத்திவந்ததைக்கண்டு நவாப் எச்சரிக்கயடைந்து அதை கைப்பற்றினார். அதை அவரிடமிருந்து மீட்குமாறு கிளைவுக்கு கட்டளையிடப்பட்டது. வெறும் 2000 போர்வீரர்களைக் கொண்டு சண்டையிட்ட கிளைவ் நவாபின் படையை பெருநாசம் செய்தார். சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது. கிளைவுக்கு உடன்படிக்கை நிலைக்குமென்ற நம்பிக்கையில்லை. தனக்கு சாதகமான நவாபின் உறவினரும் தளபதியுமான மிர் ஜாபாவை அவர் நவாபாக நியமிக்க விரும்பினார். மிர் ஜாபா பிரதிகாரமாக கிளைவுக்கு பெரும் செல்வம் தருவதாக வாக்களித்தார். மீண்டும் போர் சூழ்ந்தது. பிளாசியில் நடந்த போரில் நவாபின் தளபதிகள் வீழ்ந்தனர். மிர் ஜாபாவின் துரோகத்தாலும் ஆங்கிலேய படைபலத்தாலும் கிளைவ் வென்றார்.
பின்னர் ஒரு புதிய நவாப் பல முகலாய அரசர்களையும் ஆங்கிலேயருக்கு எதிராக ஒன்று திரட்டினார். 1764ல் அந்த கூட்டுப்படையை கிளைவ் முறியடித்தார். அதின் பின்னர் முகலாய மன்னர்களுடன் உடன்படிக்கியை உருவாக்கி வங்கம் மற்றும் பிகார் திவான்களை’ப்பெற்றார். அவற்றிலிருந்து பெற்ற வருவாய் ஆங்கிலாயர்களை நிகர் ஆட்சியாளர்களாக்கியது. பெருஞ்செல்வம் இங்கிலாந்துக்கு ஏற்றுமதியானது. உள்நாட்டுப் பொருளாதாரம் நலிந்தது. 1769-70களில் பஞ்சம் ஏற்பட்டபோது இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து உணவை வாங்கக்கூட காசில்லாமல் போனது. கிழக்கிந்திய கம்பெனி உதவ மறுத்தது. 3கோடிபேரில் ஒரு கோடி மக்கள் செத்து மடிந்தனர்.
‘Theft of India’ ஐரோப்பிய அரசுகளின் முன்நூற்றாண்டுகால இந்திய ஆதிக்கத்தை மறுபரிசீலனை செய்கிறது. பல நேரடி சாட்சியங்களின் உதவிகளுடன் வழக்கமாக நாம் அறிந்திருக்கும் மென்மையாக மொழியப்படும் வரலாற்றை புரட்டிப்போடுகிறது.
தற்போது அமேசானிலும் புத்தக நிலையங்களிலும் கிடைக்கிறது.

Popularity: 1% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....உங்கள் கருத்தை தெரிவிக்கவும்