ஒரு கட்டுக்கதை

இது ஒரு கட்டுக்கதை. கட்டுரையும் கதையும் சேர்ந்தது கட்டுக்கதைதானே? ஒரு கதையின் வழியே நம் எண்ணங்கள் முழுமையையும் வாசகருக்கு தெரிவிக்க திறனுள்ளவர்கள் மிகச்சிலரே. அவர்களே சிறந்த புனைவெழுத்தாளர்களாய் அறியப்படுகிறார்கள். ஒரு கட்டுரையை கதையைப்போல எழுத முடிந்தவர்கள் சிறந்த கட்டுரை ஆசிரியர்கள் என்றும் சொல்லலாம். இவை இரண்டும் சாத்தியப்படாதவர்கள் எழுதுபவைதான் கட்டுக்கதைகள். இது கதை எழுதுவதைப்பற்றிய கட்டுரை என்பதாலும் இதை கட்டுக்கதை என்று கொள்ளலாம்.

இந்தக் கதை லண்டனுக்கு புதிதாய் வந்திறங்கியிருக்கும் ஒரு மென்பொருள் வித்தகரைக் குறித்தது. அவர் லண்டனின் உலகப் புகழ் பெற்ற சிவப்பு நிற பேருந்துகளில் பயணித்து அலுவலகம் செல்கிறார். லண்டன் பேருந்துகள் எல்லா நிறுத்தங்களிலும் நின்று நிதானித்து செல்லும் ஜனநாயகப் பண்புள்ளவை. இந்த கட்டுக்கதையும் அதைப்போலவே.

‘மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல கடவுளின் வார்த்தையினாலும் உயிர்வாழ்கிறான்’ என்று பைபிளில் ஒரு வசனம் வருகிறது. பைபிளில் அது ஒரு முக்கிய தருணம். இயேசு நாற்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்தபின் சாத்தான் அவரை சோதிக்க வருகிறான். ‘நீ கடவுளின் மகனானால் இந்த கற்களை அப்பமாக்கி சாப்பிடேன்’ என்று சோதிக்கிறான். அப்போது இயேசு இந்த பதிலை சொல்கிறார். அது பழைய ஏற்பாட்டின் உபாகமத்திலிருந்து(Deutronomy) எடுக்கப்பட்ட ஒரு சொற்றொடர். இதில் கடவுளை நீக்கிவிட்டு, சாத்தானையும் விரட்டிவிட்டு ‘மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல வார்த்தையினாலும் வாழ்கிறான் என எடுத்துக்கொண்டால் ஒரு அற்புதமான திறப்பு கிடைக்கிறது.

மனிதன் அப்பத்திலாலான ஒரு உலகில் வாழ்கிறான். வார்த்தைகளிலான ஒரு உலகில் வாழ்கிறான். அப்பம் உடல் வாழ்தலோடு தொடர்புடையது வார்த்தையின் வழியே கருத்துக்களிலாலான ஒரு உலகத்தில் மனித மனம் வாழ்கிறது என்று கொள்ளலாம். சாதி, மதம், இனம், நல்லது, கெட்டது, அறம், தத்துவம், அன்பு, பாசம், பக்தி, மேலானது, கீழானது என வார்த்தைகளிலான உலகம் அப்பத்திலாலான உலகத்தை வகுத்துக்கொள்கிறது. அப்பத்தில் காமம் வார்த்தையில் காதல். அப்பத்தில் வன்முறை வார்த்தையில் வீரம். அப்பத்தில் மரணம் வார்த்தையில் தியாகம். அப்பத்தில் மனிதன் வார்த்தையில் என்னென்னவோ. அப்பத்திலாலான உலகில் எல்லா மனிதர்களும் ஓரளவுக்கு ஒப்பிடத்தகுந்த வகையிலேயே இருக்கிறார்கள். பசி, காமம், வலி, நோய் என எல்லா மனிதனுக்கும் அப்பத்தின் உலகம் ஒருபோல வகுக்கப்பட்டுள்ளது.

வார்த்தைகளிலான உலகம் முற்றிலும் வேறானது. அது உருவற்றது, வடிவற்றது, மணமற்றது நிறமற்றது. வெறும் கருத்துக்களாலானது. நாடு என்பது ஒரு ‘வார்த்தை’. அதற்கு ஒரு புவியியல் மதிப்பு இருந்தாலும் அது உண்மையில் ஒரு தீர்க்கமான அர்த்தமில்லாத ஒரு கருத்தேயாகும். கசக்ஸ்தான் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்தபோது இரு நாடுகளின் எல்லைக்கோடும் ஒரு குடியானவனின் வீட்டின் குறுக்காக சென்றதாம். எந்த நாடுடன் சேரவேண்டும் என்கிற தேர்வு அவனுக்கே விடப்பட்டது. அவன் எதை தேர்ந்தெடுக்கிறானோ அந்த நாட்டின் எல்லை அவன் வீட்டை சுற்றி செல்ல வேண்டும். அவன் ‘நான் கசக்ஸ்தானை தேர்ந்தெடுக்கிறேன்’ என்று சொன்னான். ‘ஏன் நீங்கள் கசக்ஸ்தானை தேர்ந்தெடுத்தீர்கள்?’ எனக் கேட்ட நிருபரிடம் அவன் சொன்னான் ‘ரஷ்யாவில் குளிர் அதிகம்’.

லண்டன் பேருந்தில் முதன்முறை ஏறும்போது ஒரு பதற்றம் இருக்கும். நேர்வழிகள் பல இருந்தாலும் அவை வளைந்து நெளிந்த தெருக்கள் வழியே செல்லும். ஒடுங்கிய சாலைகளில் பயணிக்கையில் மேலிருந்து பார்த்தால் பேருந்து நடைமேடையில் ஓடிக்கொண்டிருப்பதைப்போலத் தோன்றும். சிறிய கார்களேகூட நுழைய திணறும் சாலைகளில் திரும்பிச்செல்லும். அங்கே இங்கே என்று சுத்தினாலும் இறுதியில் சேரிடம் போய்ச்சேரும்.

ஆதியில் அப்பம் இருந்தது. பின்னர் வார்த்தை வந்தது. அதன் பின்னரே வார்த்தையில் அப்பம் சுடுவது துவங்கியது. (இதுவே பின்னர் வாயிலேயே வடை சுடுவது என்றானது). உதாரணமாய் ஆதியில் மனிதன் என்றால் ஒரே இனம் மட்டுமே இருந்தான். பின்னர் உயிரியல் ரீதியாக மனிதரில் மூன்று அடிப்படை இனங்களாக பிரிந்தான். ஆனால் அப்பத்தைப் போல மாவைப் பிசைந்து சுட்டெடுப்பதல்ல வார்த்தை. அது கற்பனையில் விரிந்து தத்துவத்தில் தோய்ந்து தர்கத்தில் நனைந்து பாரம்பரியத்தை சுமந்து கனம் பொருந்தியது. நாம் இன்று காணும் பிரிவினைகளும் அவற்றைக் கொண்டு நாம் உருவாக்கிக்கொள்ளும் சிந்தனைகளும் செயல்பாடுகளும் வெறும் வார்த்தையினால் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தில் பழுதடைந்த பஸ்ஸிலிருந்து இறக்கிவிடப்படுபவர்களைப்போல உங்களை இறக்கிவிடப்போகிறேன். எரிச்சலுக்கு வருந்துகிறேன். நம் கதைக்குத் திரும்பும் நேரம் இது.

லண்டன் பேருந்தில் தினசரி பயணிக்கும் நம் நண்பர் ஒரு சவாலை சந்திக்கிறார். மிக எளிதாகத் தோன்றினலும் அது அவரை மிக ஆழமாக காயப்படுத்துகிறது. அது என்னவென்றால் யாருமே அவருக்கு அருகில் அமர்வதில்லை. பேருந்தில் ஏறும் எல்லோரும் ஒரு எந்திரத்தின் செயல்திறனோடு மின்னல் நேரத்தில் அங்கிருப்பவர்களை நோட்டமிடுகிறார்கள். ஒரு புகைப்படக் கருவி சிறு நொடி திறப்பிற்குள் தான் காணும் காட்சியை படம்பிடிப்பதைப்போல மூளை காலி இருக்கைகளை கணக்கிடுகிறது. காலி இருக்கைகள் இல்லாதபோது அது மேலும் சில தர்கங்களை உள்ளிழுத்துக்கொண்டு பல சிக்கலான ஆலோசனைகளை ஒளியின் வேகத்தில் செய்துமுடிக்கிறது. அந்த கணிப்புகளின் இறுதியில் தான் எப்போதும் நிராகரிக்கப்படுவதாக எண்ணும் நம் கதாநாயகன் அதை நினைத்து கொஞ்சம் தாழ்வுணர்ச்சி கொள்வதுமுண்டு. தான் ஆகக் கடைசியாக தேர்ந்தெடுக்கப்படுவதை நினைத்தால் யாருக்குத்தான் தாழ்வுணர்ச்சியில்லை? ஒரு முறை மதுவின் புளித்த வாடை வீசிக்கொண்டிருந்த வெள்ளைக் கிழவனுக்கருகில் ஒரு இளம் பெண் சென்றமர்ந்தபோது சுருக்கென்று தைத்தது.

பேருந்தில் தனித்திருந்தே பழகிக்கொண்ட நம் நண்பர் ஒரு விளையாட்டை விளையாட ஆரம்பித்தார். அந்த விளையாட்டின் பெயர் ‘உலகின் கடைசி பேருந்து’. யார் வேண்டுமானாலும் அந்த விளையாட்டை எளிதில் விளையாட முடியும். நண்பர் ஒவ்வொரு நாளும் பேருந்தில் ஏறி அமர்ந்ததும் அதுவே உலகின் கடைசி பேருந்து என கற்பனை செய்துகொள்வார். உலகம் ஏதோவொரு பேரழிவில் சிக்கிக்கொள்ளப்போகிறது. பேரழிவுகளுக்கா பஞ்சம்? வைரஸ், விண்கற்கள், ஆழிப்பேரலை, அணுவிபத்து ஒரு மனப்பகடையை சுழற்றிவிட்டு வேண்டியதை தேர்ந்தெடுத்துக்கொள்வார். நல்லவேளையாக அந்தப் பேருந்தில் இருப்பவர்கள் மட்டுமே உயிர்பிழைக்கிறார்கள். மீண்டும் இந்த பூமியில் அப்பத்தையும் வார்த்தையையும் உருவாக்கும் பெரும்பணி அவர்களிடம் வந்து சேர்கிறது. ஒருநாள் உலகின் கடைசிப் பேருந்தில் பெண்களே இல்லை என்பதைக் கண்டு திடுக்கிட்டார். நல்ல வேளையாக பின்னால் இன்னொரு பேருந்து வந்துகொண்டிருந்தது கண்டு ஆசுவாசமடைந்தார்.

Popularity: 11% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....உங்கள் கருத்தை தெரிவிக்கவும்