XI. கட்டு’மரக்’ கதைகள் | அலைகள் பாறைகள் மணல்மேடுகள்
XI. கட்டு’மரக்’ கதைகள்

கட்டுக்கதைகள், நம் கிராமங்களின் பொழுது போக்கு. இவற்றில் பேய்க்கதைகளே அதிகம்.

முட்டத்திலும் பனைமரம் நடந்த கதைகளும், பேயடித்து இரத்தம் கக்கி இறந்தவர் கதைகளும் ஏராளம். இரவு பயத்தில், நிழல்களின் அசைவையும், விலங்குகளின், மனிதர்களின் நடமாட்டத்தையும் சிலர் பேயின் ஆரவாரமென எண்ணுகின்றனர். எருக்கம் செடியின் மணம் வருகிறது என்றும் சலங்கை சத்தம் கேட்கிறது என்றும் இந்தக்கதைகளில் சுவாரஸ்யமான மேம்படுத்தல்கள்.

இந்தக் கதைகள் சில எளிய பொருள்விளக்கங்கள்தாம் (simple interpretations). வாழ்க்கையின் குழப்பமான பல கேள்விகளுக்கு மதங்கள் அளிக்கும் சில எளிய விடைகளைப்போல, இருட்டில் விளங்காத காட்சிகளுக்கு இவர்கள் அளிக்கும் விளக்கங்கள் அவரவரின் நம்பிக்கைகளுக்கேற்ப பாதிப்பை ஏற்படுத்தும்.

பேய் பிடித்து பைத்தியமாகத் திரிபவர்களும், தீவிர மனநோயாளிகளே என்பதில் எனக்கு சந்தேகமில்லை. கடவுளை நம்பவே கடினமாக இருக்கும்போது பேய்களை நம்புவது எனக்குச் சாத்தியமாகவில்லை.

முட்டத்தில் ‘லேனம்மாள்’ என்றழைக்கப்படுகிற புனித ஹெலன் (St. Helen) பேரில் ஒரு குருசடி உள்ளது. இங்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு ‘கல்’ சிலுவை, கடலில் மித்ந்து வந்ததாகச் சொல்வார்கள். புனித ஹெலன், கான்ஸ்டாண்டி நோபிள் அரசரின் தாயார். இயேசு மரித்த சிலுவை மற்றும் பல புனித பொருட்களாக நம்பப்படுபவைகளை கண்டெடுத்தவர். இந்த சிலுவைக்கு கொப்பரத்தேங்காயில் எண்ணையூற்றி விளக்கேற்றுவது வழக்கம்.

இதேபோல சில பாறைகளில் காணப்படும் கால்தடம்போன்ற பதிவுகள் புனித சவேரியாரின் கால்தடங்கள் எனக் கூறுவதும் உண்டு.

முட்டத்தின் கிழக்கே, பிள்ளைத்தோப்பு. இந்த ஊர் தாண்டிய பிறகு ஒரு குறிப்பிட்ட கடற்கரை பகுதியில் நாய்கள் இருப்பதில்லை எனக் கேள்விபட்டிருக்கிறேன். அவ்வழியாக மதம் பரப்பிக்கொண்டு சென்ற புனித சவேரியாரைக் குரைத்த நாய்களை அவர் சபித்ததாகவும் அதனால் அந்தப்பகுதியில் இன்றுவரை நாய்களே இல்லை என்பதும் நம்பிக்கை.

புனித சவேரியார் (St. Francis Xavier) பற்றி இந்தப்பகுதிகளில் நிலவும் கதைகள் இன்னும் பல.

சவேரியார், ஒரு கிறித்துவ கோவில் கட்டும் பொருட்டு, அப்போது நாகர்கோவில் பகுதியை ஆண்டுவந்த மன்னரிடம் நிலம் கேட்கிறார். மன்னன் மறுக்கவே ஆட்டின் தோல் ஒன்றைக் காட்டி, “இந்தத் தோலை எவ்வளவு தூரம் என்னால் பரப்பமுடிகிறதோ அவ்வளவு இடம் தந்தால் போதும்”, எனக் கேட்கிறர், மன்னன் சம்மதிக்கிறார். சவேரியார் அந்தத்தோலை கொஞ்சம் கொஞ்சமாக இழுத்துப் பெரிதாக்குகிறார். அரச மாளிகையைத்தாண்டி, கோட்டையைத்தாண்டி, தலைநகரைத்தாண்டி அந்த அரசனின் ராஜ்யம் முழுவதையும் அந்த ஆட்டுத்தோலால் மறைக்கிறார். மனம் வருந்திய மன்னன் சவேரியார் கேட்ட அளவு நிலத்தை அவருக்கு வழங்குகிறர். இவர் கட்டிய அந்தக்கோவில் மீது கட்டப்பட்டுள்ளது கோட்டாறு கோவில், இன்றும் அந்த குட்டிக்கோவிலைக் கோட்டாற்றில் காணலாம்.

முட்டத்திலிருந்து கடலுக்குள், சற்று தூரத்திலிருக்கும் இரண்டு பாறைகளைப் பார்க்கலாம். சுவாசிக்க மேல்வரும் இரு பெரும் திமிங்கலங்கள்போலக் காட்சிதரும் இவை. மேற்கிலிருக்கும் கல் ‘மேக்கால்’ (மேற்கு+கல்) என்றும் கிழக்கிலிருப்பது ‘கீக்காலென்றும்’ அழக்கப்படுகின்றன. முன்பு கடல் அந்தக் கற்களிருக்கும் தூரம் வரைதான் இருநதாம். மீனவர்களால் அவ்வளவுதூரம் சென்று தொழில் செய்ய முடியாமல் போனதை அறிந்த மன்னன் அந்தப் பாறையிலிருந்து தன் கட்டை விரலைக்கடித்து இரத்தம் தரையில் சிந்த நடந்து வந்தானாம். அவன் பின்னே கடலும் வந்ததாம். இதன்பேரில் வந்ததுதான் ‘கடியப்பட்டினம்’ எனும் கதையும் கேட்டிருக்கிறேன். அரசன் கையைக் கடித்த ‘கை கடிப்’ பட்டினம்தான் மறுவி கடியப்பட்டினமாயிற்றாம்.

இந்தப் பாறைகளில் முன்பெல்லாம் ஆடுமேய்ப்பவர்கள் ஆடுகளைப் புல்மேய்க்க அழைத்துச்சென்றிருப்பதால் இவை ‘ஆடுமேய்ச்சான் பாறை’ எனவும் வழங்கப்படுகின்றன.

கடல்வழியே போர்புரிய வந்த எதிரிப்படைகளை மிரட்ட கடற்கரையில் பனைமரங்களை வெட்டி பீரங்கிகள் போலவும், மீனவர்களின் மூங்கில் துடுப்புகளை துப்பாக்கிகளைப்போலவும் பிடித்து நின்றதாகவும், அதை பார்த்த எதிரி பயந்து ஓடியதாகவும் ஒரு தந்திரக் கதை.

கடியபட்டினம் கடற்கரையில் ஒரு பாறை. கதவுபோல ஒரு வடிவம் இதில் செதுக்கப்பட்டிருக்கிறது. ‘கதவடச்சான் பாறை’ என இதற்குப்பெயர். ஆபத்திற்குப் பயந்த ஒரு குடும்பம் இந்தப்பாறைக்குள் போய் ‘கதவை’ மூடிக்கொண்டதாக ஒரு கதை கேட்டிருக்கிறேன். மூடிய கதவு இன்றும் திறக்கவேயில்லை.

ஊரில் அம்மன்(அம்மை) நோய் பரவுகிறது. ஊரே அல்லோலப்படுகிறது. இதிலிருந்து தப்பிக்க ஒரு பெண் ஊரிலுருந்து ஓடிப்போகிறாள். காட்டுவழியே போகும்போது ஒரு தனிக்குடில். இளைப்பார அமர்கிறாள்.

குடிலிலிருந்து ஒரு பெண் வருகிறாள். இவளை உபசரிக்கிறாள். உபசாரங்கள் முடிந்தபின், குடில்காரி, வந்தவளை தந்தலைக்குப் பேன் பார்கச்சொல்லுகிறாள். வந்த்தவளும் பேன் பார்க்கர்த்துவங்குகிறாள். குடில்காரியின் தலைமுடியை விலக்கிப்பார்கும்போது அந்தத் தலைமுழுவதும் கண்கள் . அலறித்துடிக்கிறாள் வந்தவள். அம்மன் தன் முழு உருவத்தையும் காட்டி அவளுக்குச்சொல்கிறாள், “நாந்தாண்டி அம்மன்… ஊரிலிருந்து ஓடினா ஒன்ன பார்க்கமுடியாதா? எனக்கு ஆயிரம் கண்ணுடீ…. ஊருக்குத் திரும்பிப்போ” என்று.

இந்தக்கதையில் வரும் ஆயிரம் கண்ணுள்ள தலையை மனதில் உருவப்படுத்திப்பாருங்கள்.

இன்றும் சில பெரியவர்களைக் கேட்டல் இந்தக்கதைகளும் இன்னும் கதைகளும், பல்வேறு கோணங்களில் சொல்லக் கேட்கலாம். கதை கேட்க நேரமிருக்கிறதா நமக்கு?

Print This Post Print This Post Email This Post Email This Post

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading ... Loading ...


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....2 மறுமொழிகள் to “XI. கட்டு’மரக்’ கதைகள்”

  1. Anonymous சொல்கிறார்:

    நல்ல தகவல்கள். தொடர்ந்து படிக்கிறேன்.

  2. ஜோ / Joe சொல்கிறார்:

    சிறில்,
    சுவாரஸ்யமான தகவல்கள்.அருமையான நடை.

    எங்கள் ஊரிலும்(பள்ளம்) இப்படி நிறைய கதைகள் உண்டு .நேரமிருக்கும் போது பதிக்கிறேன்.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்