VI. யுத்த காண்டம் | அலைகள் பாறைகள் மணல்மேடுகள்
VI. யுத்த காண்டம்

‘மானம்’, ‘தன் மானம்’ தமிழில் அதிகமாக துஷ்பிரயோகப் படுத்தப்படுகிற வார்த்தைகள். இவற்றின் அர்த்தமும் உபயோகமும் முழுமையக பலருக்கும் தெரிந்திருக்கவில்லையாகிலும், இவற்றின் பேரில் நடக்கும் யுத்தங்களும் உயிர்த்தியாகங்களும்(பலிகள் என்றும் கொள்ளலாம்), அதைப் புகழ்ந்தெழும் இலக்கியங்களும் படைப்புகளும் வியப்பூட்டுகின்றன. ‘ஒழுக்கம்’ போன்ற படிப்பினைகள்போலவே இவையும் தனி மனித ஆய்வுக்கும், பொருளாக்கத்திற்கும் உட்பட்டன என்பதில் சந்தேகமில்லை.

ஒருவரது அடையாளங்களையும், நம்பிக்கைகளையும் இழுக்கு வராமல் காத்துக்கொள்வது மானமாய் வாழ்வது என்ற அர்த்தத்தில், மீனவர்கள் மானம் மிகுந்தவர்களாகத் தோன்றுகிறார்கள். சாதாரணமாகச் சொன்னால், சுரணை மிக்கவர்கள், பலர் முன்கோபிகளும் கூட, ஆனால் மூர்க்கமானவர்கள் அல்ல.

பரவலாக நம்பப்படுவதுபோலல்லாமல், கடற்கரை கிராமங்களில் அவ்வப்போதுதான் ஊர்க்கலவரங்கள் உருவாகின்றன, முட்டத்திலும்.

சில குழாயடிச் சண்டைகள் எப்போதும் நடக்கும், எந்த கிராமமும் அதற்கு விலக்கல்ல. உப்பு போட்டு உண்பதற்கும் உணர்ச்சிகளுக்கும் தொடர்புள்ளதென்றால், உப்புக்காற்றையே சுவாசிக்கும் இவர்கள் எளிதில் உணர்ச்சிமயமாகக்கூடியவர்கள்.

ஜாதிக்கலவரங்கள், தெருவுக்கும் தெருவுக்கும் சண்டை என ஊர்க்கலவரங்களுக்குப் பல முகங்கள். எந்தப்பெரிய கலவரங்களுக்கும், சில போர்களுக்கும்கூட, மூலமாக ஓரிருவரின் செயல்/எண்ணங்களே உள்ளன, சூர்ப்பநகையும், சகுனியும் போல.

முட்டத்தின் கலவரங்களில் பொதுவாக கைகலப்புகளே நடைபெற்றன. மீன்பிடிக்கும் உபகரணங்களைக் கொண்டு தாக்குவதும் உண்டு. கலவரம் தீவிரமாகப் போகும்போது ஊரிலிருந்து ஆண்கள் வெளியேறி உறவினர் ஊர்களுக்குச் சென்றுவிடுவார்கள், கைதாவதைத் தவிர்க்க. ஊர்க்கோவில் பூட்டப்பட்டு பூசைகள் நிறுத்தப்படும். பஸ் போக்குவரத்து நிறுத்திவைக்கப்படும். இந்த நேரங்களில் ஊருக்குள் நான் உலவியிருக்கவில்லை, அந்த வெறுமையும் அமைதியும் கல்லறைத் தோட்டங்களையே ஞாபகப்படுத்தும் என அனுமானிக்கிறேன்.

சிலமாதங்களாய் நடந்த ஊர்க்கலவரங்களும் உண்டு. ஜாதி தவிர பிற பிரிவினைகளும் இருந்தன. ஒரே மதம், ஒரே கோவில் ஒரே கடவுள், ஊர்க்காரர், உறவினர் என்ற பொது எண்ணங்கள் ‘நான்’ என்ற மாயைக்குள் மறைந்து போகின்றன.

ஊரைக்கூட்ட கோவிலில் மணியடிப்பது வழக்கம். மணிக்கூண்டில் இருக்கும் அத்தனை மணிகளையும் ஒன்றாய் அடிப்பார்கள். ‘கூட்டமணி’ என்று இதற்குப்பெயர். பொதுவாக இரண்டு அல்லது மூன்று பெரிய வெண்கல மணிகள் கூண்டில் இருந்தன. இவை ஒன்றாக ஒலிப்பது கல்லறை உறக்கத்தையும் கலைக்கும். கடலோரக்கவிதைகளின் கதையில் இந்த மணியடிக்கும் பழக்கம் கையாளப்பட்டுள்ளது ஞபகமிருக்கலாம்.

மண்டைக்காட்டு கலவரத்தை பலர் மறந்திருப்பார்கள். அது நல்லதே. குமரி மாவட்டத்தின் வரலாற்றில் ஒரு வெட்டுக்காயம். மற்றசில இடங்களை ஒப்பிடும்போது, இந்தக் காயம் மிக விரைவிலேயே ஆறிப்போனது.

‘வரலாறு’, பாடம் படிப்பதற்கு நல்லது, அன்று நடந்தவைகள இன்று பின்பற்ற முயல்வதோ அல்லது பரிகாரங்கள் தேடுவதோ, பகுத்தறிவு (பரவலான பொருள்கொள்ளவும்) வழிகாட்டும் இந்த நாட்களில் ஒத்துவராது என எண்ணுகிறேன்.

மண்டைக்காடு ஒரு மதக்கலவரம். குமரியின் கிறித்துவர்களும் இந்துக்களும் போட்டுக்கொண்ட ஒரு குடும்ப சண்டை. தீவிர குடும்ப சண்டை. இந்தக் கலவரத்தின்போது கடற்கரை கிராமக்கள் மற்ற ஊர்களிலிருந்து துண்டிக்கப்பட்டன. ஊருக்குள் வரும் சாலைகளில் அகளிபோல பள்ளங்கள் வெட்டப்பட்டன. பெண்கள் கோவிலில் இடைவிடாது ஜெபம் செய்தனர். அத்தியாவசியமான பொருட்கள் கடல்மூலம் வந்துசேர்ந்தன. இரவுகளில் வெடிகுண்டு சப்தம் எப்போதாவது கேட்டுக்கொண்டிருந்தது.

ஒரு நள்ளிரவில், சிறுநீர் கழிக்க விழித்துக்கொண்டேன்(அப்போது சிறுவன்), பயம் காரணமாய் கூடவே அம்மாவும். கோவில் மணிச்சத்தம் இரவுப்பூச்சிகளை மெளனித்தது. என் அம்மாவிடம் ஒரு டவலை (துவாலி?) வாங்கிவிட்டு, அப்பா கட்டிய வேட்டியுடன், வேறெதுவும் சொல்லாமல், மணி சத்தம் நோக்கி ஒடினார். இன்று நினத்தாலும் உடல் சிலிர்க்கும்.

மூன்று நாட்கள் கழிந்து அப்பா வீடு திரும்பினார், யாருடைய சட்டையையோ பொட்டுக்கொண்டு. என் தந்தை ஒரு ஆசிரியர் என்பதை கருத்தில் கொள்ளவும்.

இதுபோன்ற பல தந்தைகளும், அண்ணன்களும், சில பெண்களும் கூட ஊரைக்காக்க புறப்பட்டதுண்டு. இந்தக் கலவரத்தின்போது இரகசியமாக ஊரைக்கூட்ட ‘இறைவன் நமது வானகத் தந்தை’ என்ற பாடல் கோவிலின் ஒலிபெருக்கியில் ஒலிக்கப்பட்டது. கடற்கரை வழியே பல மைல்தூரம் கால்நடையாக நடந்து வெளியூர்களில் உள்ளவர்கள் ஊர்திரும்பக் கண்டிருக்கிறேன்.

மண்டைக்காடு போன்ற மதக்கலவரங்களும்கூட, சுமூகமாக பேசி முடிக்கக் கூடிய, முடிக்க வேண்டிய சிறிய நிகழ்சிகளை மையமாகக் கொள்கின்றன என்பதை ஆய்தல் வேண்டும். உணர்ச்சிகளை மட்டும் முன்வைத்து பிரச்சனைகளை ஆரய்வது இழிபலன்களயே தரும் என்பதில் இன்னொரு கருத்து இருக்கமுடியாது.

கருத்துக்களுக்கும், இலக்கியங்களுக்கும் எழும் எதிர்வினைகளைப் பார்க்கும்போதும், மொழி, இனம் தொடர்பான உணர்ச்சிகள் அரசியல்படுத்தப்படுவதை எண்ணும்போதும், அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலெல்லாம் நம்மில் பலருக்குப் பொறுமையில்லை எனத் தோன்றுகிறது. இதற்கு மீனவர் என்றோ, விவசாயி என்றோ, இலக்கியவாதி என்றோ அரசியல்வாதி என்றோ, கலைஞன் என்றோ, வலைஞன் என்றோ எந்த விதிவிலக்கும் இல்லை.

Print This Post Print This Post Email This Post Email This Post

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading ... Loading ...


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....உங்கள் கருத்தை தெரிவிக்கவும்